Friday, December 28, 2012

எனது காதலனும் அவனது காதலியும் ????


   தலைப்பைப்பார்த்து தப்பாய் நினைத்துவிடாதீர்கள் நான் அந்தளவுக்கு ஒன்றும் கசமுசா காரியமெல்லாம் சொல்லவரவில்லை. இந்த காலத்தோடு சம்பந்தப்பட்ட சமூக கருத்தொன்றுதான்

  இந்த உலகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோ ஒரு காரணத்துக்காக ஒருவர் மற்றவரை பார்த்து 'அட அவர் எத்தனை அதிஸ்டசாலி' என்று மகுடம் சூட்டி புகழுவார்கள். அத்தோடு பொறாமையும் கொள்வார்கள் அது இரண்டாவது விடயம். ஆனால் இந்த அதிஸ்டசாலி என்ற பதம் தமக்கு கிடைக்காத அல்லது இல்லாத அல்லது நாம் விரும்புகின்ற ஒரு விடயம் மற்றவரிடம் இருக்கும்போது அதனையே அதிஸ்டமாக எம் மனம் காணவிழைகின்றது . இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை தமது அதிஸ்டமாக நினைக்கையில் இவ்வகிலத்தில் மிக மிக அதிஸ்டமாக என்னால் பார்க்கப்படுவது ஒரே ஒரு விடயம்தான். அதாவது கணவன் மனைவி குடும்ப உறவில், கணவனுக்கு மட்டும் அவள் மனைவியாக காதலியாகவும் அந்த மனைவிக்கு மட்டும் அவன் கணவனாக காதலனாகவும் இருப்பதையே நான் முன்மொழிய விரும்புகின்றேன்.



 ஏனெனில் இன்றைய அவசரமான வேகமான உலகில் எதனையும் இலகுவாக பெற்றுக்கொள்ளும் வழிகள் அதிகமாக காணப்படுவதால் நாம் எந்த ஒன்றையும் முக்கியமாகவும் மதித்து பாதுகாத்திடும் இயல்பினையும் இழந்து நிற்கின்றோம் இதில் குடும்ப உறவுகள் மட்டுமென்ன விதிவிலக்கா? வேகமான தொழிநுட்ப தொடர்பாடலுலகில் உறவுகளுக்குள் பேணப்படும் தகைமைகளை மறந்து தான் தோன்றித்தனமான நிலமைக்குள் நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதே நிஜம். விவாகரத்தில் ,முற்றுப்பெறும் எத்தனையோ திருமண உறவுகள் ஆழமான காதலில் ஆரம்பித்தவைகள்தான். தங்களுக்குள் இருக்கின்ற புரிந்துணர்வு விட்டுக்கொடுப்பு, ஒருவரின் குறை நிறைகளை தாங்கக்கூடிய பொறுமை,ஒருவரில் ஒருவர் தங்கியிருக்கும் தன்மை காணப்படாமை போன்ற அசாதாரண குறைபாடுகளாலேயே குடும்ப உறவுகள் ஊனமடைந்து உருவழிந்துபோகின்றது.

குறிப்பாக தீவிரமான தொடர்பாடல் காரணமாக மேற்கூறிய அச‌மந்தபோக்குகள் வலுவடைய ஏதுவாய் அமைந்துவிடுகின்றது. ஏனெனில் எண்ணிக்கையில்லா நண்பர்கள்தொகை அவர்களுடன் அதிகமாக நேரம் கழிக்ககூடிய வசதி, வாய்ப்புக்கள் போன்றன  தங்களது துணைக்கு கொடுக்கும் நேரத்தையும் முன்னுரிமையையும்  விழுங்கிவிடுகின்றன இதனால் ஏற்படும் சிறிய சிறிய சண்டைகள் சந்தேகங்கள் முறுகி முற்றி இறுதியாக வெடித்து  சின்னாபின்னமாகிவிடுகின்றது. ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இவ்வாறு பிரிந்துவிடும் உறவுகளோடு சேரவேண்டும் அவர்களோடுதான் வாழவேண்டும் என்ற அந்த ஆத்மார்த்தம் இல்லாமல் போவதுதான் வேதனை. 


மனித உறவுகள் அன்பு, காதல், விட்டுக்கொடுப்பு, சகோதரத்துவம், தியாகம் போன்ற நற்பண்புகளுக்குள் அடைக்கப்பட்டிருப்பதால்தான் நாம் விலங்குகளிலிருந்து பிரிக்கப்பட்டிருக்கின்றோம். ஆனால் இன்றைய உறவுமுறைகளை எடுத்துக்கொண்டால் 'போலி' என்ற வரையரைக்குள் உலவும் முகமூடி உறவுகளையே காணமுடிகின்றது. மிதமிஞ்சிய நவீன தொடர்பு சாதனங்களின் பாவனை எந்தளவிற்கு நன்மை பயக்கின்றதோ  அதேயளவுக்கு உறவுகளின் ஸ்திரத்தன்மையை அழித்துக்கொண்டிருக்கின்றது என்பதை உறுதிபடக்கூறலாம். அண்மைய ஆய்வொன்று இவ்வாறு கூறுகின்றது " செக்ஸ், மது இவற்றைவிட முகப்புத்தகம் (FB) மிக மோசமானது".






இந்த தீவிர நட்பு வட்டத்தில் சில சில சின்ன விடயங்களில் எம்மோடு ஒருவர் ஒத்துப்போகும்தன்மை காணப்பட்டால் அந்தப்பக்கமாக ஓர் ஈர்ப்பு ஏற்பட்டுவிடுகின்றது. தமது துணையை விட கவர்ச்சியான பேச்சு, கலகலப்பான தன்மை, வெளிப்படையான இயல்புகள் போன்ற அற்ப விடயங்களுக்காக மனந்தாவுதல் ஏற்பட்டுவிடுகின்றது. இதுபோன்ற காரணங்களினால் விவாகரத்து, தற்கொலை, கொலை, பழிவாங்கல்கள், மனரீதியான பாதிப்புக்கள், போன்ற எத்தனையோ சமூக சீர்கேடுகள் வெகு இலகுவாக அரங்கேறிவருகின்றன.

மிக இலகுவாக கிடைக்கும் உறவுமுறைகளால் ஒருவர் குறைகளை மற்றவர் தாங்குவது ஒருவருக்காக காத்திருப்பது போன்ற உயரிய பண்புகள் மெதுமெதுவாய் அழிந்து இல்லாதொழியும் நிலமை எட்டிவிடுமோ என்ற ஐயம் மனதுக்குள் மெதுவாய் முளைவிடுகின்றது

எனவே எம்மைப்பொருத்த வரையில் எமக்கென்று ஒரு சுயக்கட்டுப்பாடு, தெளிவான பரந்த சிந்தனை, சீராக முடிவெடுக்கும் தன்மை, இவற்றோடு முக்கியமாக தமது உறவு/துணையிடன் உண்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் அன்பாகவும் இருக்கக்கூடிய பண்பினை வளர்த்துக்கொண்டால் அல்லது இருக்கும் அந்தப்பண்பினை காத்துக்கொண்டாலே இவ்வாறான பிரச்சனைகளிலிருந்து எம்மை நாம் பாதுக்காத்துக்கொள்ளலாம்.



No comments: