Saturday, October 15, 2011

பட்டாம்பூச்சி கவிதை

01.சோறுபோடாத்தொழிலென்றலும்
சோர்ந்திடா எழிலிதில்
மூளை மட்டுமேயிதில்
மூதனத்தின் முதலாக‌
மொழிவளம் மட்டுமேயிதில்
பணபலமாக...
உழைப்பை உறிஞ்சிக்கொள்ளு முலக மேனோ
உழைப்பாளியை கண்டுகொள்வதேயில்லை[ எழுத்தாள‌ன்]

02.முடிந்தவரை நல்லவளாயிருக்கவே
முயற்சிக்கி றேனெனினும்
முடியாமற் போகுமத் தருணத்தில்தான்
முரண்டுபிடிக்கிறே னெனை
முதிர்க்கன்னியென உச்சரிக்கையில்...

03.என் வேர்களறுபடு மோசை கேட்டும்
வேடிக்கை பார்த்துகொண்டு தானிருக்கிறேன்
போ ரொன்று புரிந்தெழும்பிடாது
போதாத காலமென்றிருந்திட்டேன்
வாய்மையே வெல்லுமென்று...

ஓங்கி ஒலிக்கப்போகிறோம்.....



காயங்கள் காய்ந்தாலும்
வடுக்களென்றும்
வலியினை பரிந்துரைத்திக்கொண்டேயிருக்கிறது...

வெற்றிக்களிப்பில்
வீரமெனப்படுவது
மூழ்கிக்கிடப்பினும்
முறித்துப்போட்ட எம்
முழு நிலவுகளை எந்த வானம்
முழுமையாக தந்திடும்...

இருகிய இதயத்தினை
இறைவழியின் துணைகொண்டு
சுமைக‌ளின் வ‌ழித‌னை
சுத்த‌மாய் ம‌ற‌க்க‌த்தான்
நித்த‌மும் ம‌கிழ‌த்தான்
நிக‌ழ்கால‌ந்த‌னை தேடுகிறோம்...

உற‌வுக‌ளை இழ‌ந்து
உரிமைக‌ளை துற‌ந்து
ஊன‌ப்ப‌ட்ட‌போதும்
உள்ள‌த்தால் எழுந்திட‌வே -ந‌ம்பிக்கையில்
ஊன்றி நிற்கின்றோம்...

விழுந்த‌வை விதைக‌ள‌ல்ல‌ எங்க‌ள்
விடிய‌ல்க‌ள்
வான‌ம் தொலைத்த‌ நில‌வாய்
வாழ்வுத‌னை தொலைத்த‌ எம‌க்கு
முகாம்க‌ளே முகாந்த‌ர‌மான‌து
அக‌தி இல‌ச்சினையே
அந்த‌ஸ்தான‌து...

போதும் போதுமிறைவா
போகும் வ‌ழித‌னை த‌ந்திடு
புதிய‌ பாதை க‌ண்டிட‌
புத்துண‌ர்ச்சி த‌ந்திடு
புய‌ல்க‌ளை நாமும் எதிர்த்திட‌...

விடைக‌ளுக்குள்ளே
வினாவெழுப்பும் விள‌ங்காத‌வ‌ர்க‌ளாய்
விழித்த‌தெல்லாம் போதும்
ஒளிப‌றித்த‌ த‌ழைக‌ளை
ஒதுக்கிவிட்டு
ஒற்றுமை குர‌லோடு
ஓங்கியொலிக்க‌ப் போகிறோம் -சுமைக‌ளையும்
ஒழிக்க‌ப்போகிறோம்...


ஐப்பசி மாத [AUGUST] ஞானம் இலக்கிய சஞ்சிகையில் பிரசுரமான எனது கவிதை.

Saturday, October 8, 2011

மனக்கிடக்கைகள்.....

01.பழகிய இடமும்
புழங்கிய பொருளும்
கைமாறினால் மனம்
கலங்கியே போகுது!!

02.பொய்யுரைப்பினும்
மெய் யென்றெண்ணிடும்
என்னிடத்திலா -நீ
மெய்யாகவே
பொய்யுரைக்கின்றாய்...

03.ஒன்று மட்டும்
ஒருபோதும் உருவாவதில்லை
ஒன்றிலிருந்தே
ஒன்று உருவாகிறது!!

04.உணர்வுகளை யூற்றி வார்க்கையில் யாப்பும்
புணர்ந் தொழுகிட கூடுமோ-கனன்று
எரிந்திடும் வார்த்தை கோர்க்கையில்-மரபும்
எளிதி லொழுகிட கூடுமோ...

05.நீயில்லா ஓர்போழ்தும்
தீப்பிழம்புக்குள் மரணதண்டனை...
நீரில்லா தாமரையாய்
நிமிடத்திற்குள் வாழ்விழப்பு...
விழிக்கனல்கள் வாழ்வை
விரயமாகிடுமுன் விரைந்திடு-வசந்தத்தை
விடியச்செய்திடு....

எல்லாம் ஓர் கணக்கு

உண்மைதான் எல்லா மோர்
உண்மையேதான்...

புன்னகை செய்வது முதல்
புண்ணாக்குவது வரையில் எல்லாமே
கணக்குத்தான்...

வட்டமான வாழ்வுக்குள்ளே
எட்ட நிற்கும் அத்தனையும்
கணக்கேதான்
வ‌ரவுக்குள் மட்டுமல்ல‌
உறவுகளுக்குள்ளும் கணக்குதான்...

பணத்தை பறிமாறிக்கொள்வது முதல்
மனங்களை பறிமாறிக்கொள்வது வரையில்
கணக்குதான்...

இதயங்களும் இயற்கையும் அரித்தரித்து
இயல்புகளை இழந்துபோகையில்
மரித்துப்போகும் பண்புகளால்
கணக்கும்கூட கனத்து
கணக்காகிப்போனது உண்மைதான்
எல்லாம் ஓர் உண்மையேதான்...!!!

06.10.2011 அன்று லண்டன் தமிழ் வானொலியின் "கவிதை நேரம்" நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய எனது கவிதை.
-நன்றி லண்டன் தமிழ் வானொலி-

விடைகாணா ஒளிதனிலே...


இலங்கையின்
இதயமாம் மலையகம்
வியர்வை சிந்தி வருந்துவோரில்
ஒருவராம் எம்மினம்...

அதிகாலைச் சேவ‌லோடு
அந்த‌ர‌ப்ப‌ட்டு எழும்பிடு
அவ‌ச‌ர‌த்தொழிலாளிக‌ளாம்
சூரியோத‌ய‌ம் அஸ்த‌மிக்கும்வ‌ரை
சுழ‌ன்றிடும் இய‌ந்திர‌ங்க‌ளாம்...

சுழ‌ற்றிய‌டிக்கும் காற்றான‌லும்
சுடுகின்ற‌ வெயிலானாலும்
சுறுசுறுப்பாயிய‌ங்கிட‌னும் இல்லையேல்
சுடுசொல் கேட்டிட‌னும்...

ம‌ழையும் வெயிலும்
மாறி மாறி பொழிந்தாலும்
ம‌றைவிட‌மிலாது மாண்டிட‌னும்
ம‌லைக‌ளிலே
ம‌ர‌ங்க‌ளாய் நாமும் நின்றிட‌னும்...

கூடை மட்டும் நிர‌ம்பிட‌னும் அவ‌ர்க‌ளுக்கெம்
குறைக‌ள் ஒன்றும் கேட்டிடாது
பாத‌ம் க‌டுக‌டுக்க‌ பார‌மாயினும் அவ‌ர்க‌ளையெம்
ப‌ட்டினி ஒன்றும் பாதித்திடாது...

தேச‌ம் வ‌ள‌ர‌வே எம்
தேக‌ம் வ‌ருத்தினோம்
வைய‌ம் செழிக்க‌வே எம்
விய‌ர்வையினை ஊற்றினோம்...

வ‌றுமையை ம‌ட்டும் ப‌ல‌னாய்க்கொண்டோம்
வ‌ச‌ந்த‌த்தை நாமும் வாழ்வில் தொலைத்தோம்
விடிய‌லின் வ‌ழித‌னை தேயிலைய‌டித‌னில் தேடுகிறோம்
விடைகாணா ஒளித‌னில் தொட‌ர்ந்து(ம்)
தொலைந்தே போகிறோம்...

29.09.2011 அன்று லண்டன் தமிழ் வானொலியின் "கவிதை நேரம்" நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய எனது கவிதை.
-நன்றி லண்டன் தமிழ் வானொலி-

Saturday, October 1, 2011

சொந்தமென்று..

எத்தனைபேர் சொந்தமென்று
எவருமில்லை எனக்காக...

ஊர்ப்போய்ச் சேரத்தான்
உவகையோடு பயணித்தேன்
உயிருக்குள் உயிரையூற்றி
உள்ளன்புக்குள் உணர்வுகளை பொத்தி
உலகை வெல்லத்தான் காத்திருந்தேன்...

கண்கொண்டு திரைவிலக்கி
கனவுகளை அரங்கேற்றி
காதல் நான் வளர்த்திருந்தும்
கண்ணீர் குடத்துக்குள்ளேதான்
கண்ணயர முடிந்திருந்தது...‌

நேச‌ங்க‌ளை தேக்கிவைத்து குள‌த்து நீராய‌து
பாச‌ங்க‌ளை ப‌துக்கிவைத்து விழ‌ல் நீராய‌து...

வாலிப‌ வேட்கைக்குள்
வ‌ள‌ர்ந்த‌து சோக‌ங்க‌ள் ம‌ட்டும்
இள‌மையின் தோட்ட‌த்துக்குள்
பிற‌ந்த‌து ஏமாற்ற‌ங்க‌ள் ம‌ட்டும்...

பிற‌ப்பில் குற்ற‌ம் காண‌வே விழைந்தேன்
இறப்பில் தேற்ற‌ம் தேட‌வே முனைந்தேன்
சுற்றமெங்கும் சூனிய‌ங்க‌ளாய் உண‌ர்ந்தேன்
ம‌ற்றதெல்லாம் சூறாவ‌ளியால் சிதைந்தேன்...

எத்த‌னை பேர் சொந்த‌மென்று
எவ‌ருமில்லை என‌க்காக‌
எதைக்கொண்டு தேற்றுவ‌து
என் ம‌ன‌தின் சுக‌ம் காக்க‌...

தொட‌ர‌ட்டும்



உனக்கு மெனக்கும்
உறவுப்பாலம் ஒன்றில‌
உதவிப்பயணம் மட்டுமே
உணர்வலைகளில் ஒன்றின‌...

உதட்டோடு சிரித்தும்
உணர்வோடு பிரிந்தும்
உள்ளத்தால் துரத்தும் ஓர்
உறவறியா நிறுத்தம்...

உரிமைக‌ள் தொட‌ர்ந்தும்
ஊமைநில‌வ‌ர‌ங்க‌ள் தொட‌ரும்
உண்மைக‌ளை தொட‌
உன் நாவுமென் நாவும்
உள்ளுக்குள்ளே உறையும்...

தொட‌ர‌ட்டும்
தொட‌ரும் நில‌வ‌ர‌ங்க‌ள்
தொட‌ர்பு இல்லாத‌வையும் ம‌ன‌த்
தொடுகையில் உண‌ர‌ப்ப‌டு மென்ப‌தால்...