Saturday, December 28, 2013

உனது வானம்

ஆகா தென்றுதானே
அவசரமா யொதுங்கினாய்
போகா தென்றுநான்
போர்க்கொடிதுக்கவில்லையே
உனது வானம்
உனது எல்லைகள்
உனது சிறகுகள்
தடுக்கும் கரங்கள் எனதில்லை
கெடுக்கும் மனதென தில்லை

வேர்கள் பூப்பதில்லையென்பது
ஊரறிந்த கதையாயிற்றே!!









Friday, December 27, 2013

கலையாமலென் காதல்

தொலைதூரம் நீ
கலையாமலென் காதல்
அலைமோதும் நினைவிலே
அசையாமலுன் கனவு!!



இயற்கையின்க (ன)தி

செயற்கையி னதி
மெத்தச் செருக் கால்
இயற்கையின்க னதி
இளகியோடுமோ??

Thursday, December 26, 2013

இதயமானவன் நீ

முதலும்
முடிவானவனும் நீ
இதழும்
இதயமானவன் நீ
இன்றேன்
கண்ணீர் தேசத்திற்கு
காதலியாக்கிப்போனாய்??



கலைந்துபோனேன்

தொலைந்துபோனாய் -என்னை
தொலைத்துவிட்டு
கலைந்துபோனேன் -வாழ்வின்
கலைகளைவிட்டு!!



சந்தர்ப்பங்கள்

சந்தர்ப்பங்கள்
சந்தோஷங்களை தரும்
சாதகமாக்கிக்கொள்வதும்
சாதித்துக்கொள்வது நம்
சாமர்த்தியமே!!

கா(த)லனா??

நினைத்துப்பார்த்திடா நம்
நினைவுகளை என்
கல்லறை வாசலில்தான்
காண்பாயென்றால் 
காதலென்ன உயிர்வாங்கும் 
கா(த)லனா??


Friday, December 20, 2013

அழகோ!!

வலிகள் நிறைந்தாலும்
வசந்தம் குறையாததுதான்
மொழியில்லா -இக்
காதலுக்கு அழகோ!!

விலகிநடக்க ஆரம்பிக்கின்றேன்

நெடிய முள்ளொன்று வழி
நெடுகிலும் வந்தது
கொடிய வலிதந்த போதும்
தொலைத்தொதுக்கவில்லை

விலகிநடக்க ஆரம்பிக்கின்றேன்
விடுதலையில்லாவிட்டாலும்
அழவைத்த முள்ளினால் -மீண்டும்
அழுத்தங்கள்தர முடியவில்லை!!



இயல்பாயல்ல‌

கிழித்துப்போட்டாய்
காகிதத்தையல்ல -என்
காதலை
வலித்தது
இயல்பாயல்ல‌
இதயமியங் காவண்ணம்!!


Tuesday, December 17, 2013

எனது கவிதை அறிவிப்பாளர் சிறோவின் குரலில்

http://www.youtube.com/watch?v=B3C5i8pPnMA&feature=youtu.be


தோற்றுப்போனது
வாழ்க்கையில்தான்
துவண்டுபோனது
துடிப்புள்ள இதயமல்ல!

அடிவீழ்ந்தது
உயிரில்தான்
அணைந்து போனது
ஆழ்மனதல்ல!

காயம் கண்டது
கனிவான காதல்தான்
நோயாகிப்போனது
கண்ணியங்கொண்ட கடமைகளல்ல!

இன்னும் ஆணிகளும்
இரக்கமில்லா வஞ்சனைகளும்
என்னைச்சுற்றி சூழட்டும்

எரிந்துகொண்டிருப்பது மனமாயிருந்தாலும்
எழுந்து புன்னகைப்பேன் மலராகவே!!!

தளிரோ நான்?

வெறும் கானலில்
விதி செய்து
வருகின்ற‌ கண்ணீரை
வாழ்வில் குவித்து
தரணியில் வீசிவிட்ட‌
தளிரோ நான்???!!



Monday, December 16, 2013

இன்னு மினிக்கின்றது



இமைகள் நிறைத்த‌
இதழ் சேமித்த நினைவுகள்
இன்னு மினிக்கின்றது -நீ
இதயம் கொன்றுபோனபிறகும்!!



நிஜமா????

நிஜமா அவையெல்லாம்
நிஜமாகவே நிஜமா
நம்பவேமுடியவில்லை
நீயும் நானும் வேறுவேறென்று!!



Sunday, December 15, 2013

Friday, December 13, 2013

எழுந்து புன்னகைப்பேன்

தோற்றுப்போனது
வாழ்க்கையில்தான்
துவண்டுபோனது
துடிப்புள்ள இதயமல்ல!

அடிவீழ்ந்தது
உயிரில்தான்
அணைந்து போனது
ஆழ்மனதல்ல!

காயம் கண்டது
கனிவான காதல்தான்
நோயாகிப்போனது
கண்ணியங்கொண்ட கடமைகளல்ல!

இன்னும் ஆணிகளும்
இரக்கமில்லா வஞ்சனைகளும்
என்னைச்சுற்றி சூழட்டும்

எரிந்துகொண்டிருப்பது மனமாயிருந்தாலும்
எழுந்து புன்னகைப்பேன் மலராகவே!!!




ஊடறு இணைய இதழில் (Wednesday, December 11, 2013 @ 7:55 PM)

வாழபுறப்பட்டுவிட்டேன்…



http://www.oodaru.com/?p=6827

வாழபுறப்பட்டுவிட்டேன்…

   

த.எலிசபெத் (இலங்கை)
 
பெண்மையின் மேன்மையெல்லாம்
தென்றல் கலைத்த மேகம்போல‌
அநாயசமாய் அழிந்துபோகின்றது
 
தீக்கொண்டு சாம்பல்கண்டிடும்
தீவிரம் நெஞ்சுக்குள் பற்றியெறிகின்றது
எத்தனை காலத்துக்குத்தான்
புத்தகத்தில் மூடிய மயிலிறகாய்
பத்தினிக்கிரீடத்தை பாதுகாப்பது…
 
முப்பத்தைந்தை தாண்டிய -என்
முதிர்க்கன்னித்திரை கிழித்து
முழுமையாய் மூச்சுவிட்டது பிழையென்றால்
என்னைக் கிழித்த உம்
வார்த்தைக் கணைகளுக்கு
விஷந்தடவி எய்துகொண்டிருந்ததேன்…
 
இத்தனை வருட மிருந்தவள் -இப்போ
இஸ்டத்துக்கா செல்ல வேண்டும்
சாதிவிட்டு சாதிசென்றதற்கு
சாக்கடையில் வீழ்ந்து செத்திருக்கலாமென்ற‌
உங்கள் அற்பங்கள் என்னையொன்றும்
அழித்துவிடுவதில்லை…
 
மதம்மீறியது பிழையென்றால் -நீங்கள்
மருமகளுக்கு பதிலாக
மனையுடன் சேர்ந்த லட்சங்களை கேட்டதேன்??
சாதிக்கலந்தது சாபமென்றால்
சீதனத்தை மட்டுமே நீவீர்
தேடியதும் தீண்டாமைதான்
 
காதல் பாவமென்றுதானே
இத்தனை வருட காத்திருப்பு
அதற்கு உங்களால்
முதிர்க்கன்னியென்ற
முக்காட்டை மட்டுமல்லவா போர்த்தி
மூழ்கடிக்க முடிந்திருந்தது
வேர்கள் வெளிக்கிளம்பிய பின்னுங்கள்
வேலிகளுக்கிங்கு வேலையில்லை
 
மனம் பொறுக்குமளவுக்குங்கள்
சுடுசொற்கள் இருந்ததில்லையே அதனால்தான்
மனச்சிறைக்குள் மாண்டுபோயிருந்த‌
மாங்கல்யத்தை மருந்தாயிட்டுக்கொண்டேன்
 
 
வாலிபவேட்கையில் நானின்று
வர‌ம்புமீறி காதல்செய்யவில்லை
காலத்திடம் சிக்கிக்கிடந்த சில‌
முடிச்சுக்களை அவிழ்த்துவிட்டிருக்கின்றேன்
அவ்வளவுதான் ஆனந்தப்பட்டுக்கொள்ளுங்கள்
 
காலம்முழுக்க கன்னியாகவே
வாழவிட்டிருப்பீர்களா
மூச்சுக்கு மூச்சு
முடிந்திடா கேள்விகளால் என்னை
மூர்க்கத்தனமாயல்லவா கொன்றிருப்பீர்கள்
 
இரண்டில் ஒன்று
எடுக்கும் நேரத்தில்தான்
இதயமறிந்த இவன்வந்தான்
வாழ்வோடு போராடி சாவதிலும்
சாவோடு போராடு வாழ்வதென்ற முடிவோடே
சாதியினை கடந்து
மதத்தினை மறந்து
மனிதத்தோடு மட்டுமே
வாழபுறப்பட்டுவிட்டேன்…
 
எப்போது கல்யாணம்
ஏனின்னும் கல்யாணம்
சரிவரவில்லை என்ற‌
ஏளனங்களை தவிர்க்க‌
உங்களிடமிருந்து உத்தரவாதம்
வழங்கப்பட்டிருந்தால்
என்னாலும் வாழ்ந்திருக்கமுடியும்
காலமெல்லாம்
முதிர்க்கன்னியாகவல்ல‌
முழுக்கன்னியாக….
 
 

மலர்களை கொய்யவேண்டும்

காயங்களை
பரிசோதிக்காதீர்கள்

வடுக்களானதை மீண்டும்
வலிக்கச்செய்யாதீர்கள்

இன்னு மெத்தனை காலத்துக்கு
இரத்தத்துளிகளையே துடைப்பது

இரண்டு கரங்களும்
மலர்களை கொய்யவேண்டும்

வேலிகளை போட்டுவிடாதீர்கள்!!



Thursday, December 12, 2013

தப்பு

தனித்துவமாய் இருப்பது சிறப் பது
தனித்துவாழ்வதோ தப்பு

ஈரடிக்கவிதை

ஒற்றையடிப்பாதையில்
ஈரடிக்கவிதை



Wednesday, December 11, 2013

நம் நா

விஷந்தடவிய‌
வினோதமான கத்தி
வளைந்திடும் நம் நா
காயங்கள் அத்தனைசுலபத்தில்
காய்ந்துவிடுவதில்லை
கவனாமாக உபயோகிக்கவேண்டும்!!



Tuesday, December 10, 2013

வலிகளோடே

ஆழ்மனதுக்குள்
ஒளிந்துகொண்டிருந்தாலும் இப்போதும்
ஒளிர்ந்துகொண்டுதானிருக்கின்றாய்
வழிந்துபோயிடா -அவ்
வசந்தங்கள் நிதம்
வலிகளோடே கடந்துசெல்கின்றது -என்னை
வாழவைத்துக்கொண்டே..!!



இ(அ)ந்த பேனைக்குத்தான்

தாய்மை பேசும் விரல்கள்
தாராளமாய் பெண்மைகூறும் கவிகள்
தாளாத வலிகளையும்
தயவாய் போக்கும் சொற்கள்
இத்தனை வரங்கள்பெற்ற‌
இ(அ)ந்த பேனைக்குத்தான்
இதயமும் சிலநேரங்களில்
இயங்காமல் போயிருக்கும்??


துடிக்கின்றது எனதிதயம்!!

துரோகங்களை
தூக்கிவைத்துக்கொள்ளாததால்தான் -இன்னும்
துடிக்கின்றது எனதிதயம்!!



Monday, December 9, 2013

கலவரம் செய்பவளே..

கனவில்வந்து
கலவரம் செய்பவளே
காலையில் ஒருதடவை
கண்முன்னே வாராயோ ???



Saturday, December 7, 2013

அந்தப்பாதையில்

ஏமாற்றத்தின்
எல்லையினையும்
வேதனைகளின்
வேர்வரையிலும்
சென்றுவந்ததால்தான்
இத்தனை அவதானம்
அந்தப்பாதையில் எவரும்
சென்றுவிடக்கூடாதென்று....

Friday, December 6, 2013

நேர்மையில்லா

வீரர்கள் அதிகளவு -போரிலே
வீழ்ந்துபோனது
நேரிடையான மோதலிலல்ல‌
நேர்மையில்லா தாக்குதலில்!!
 

நானுமொருநாள்

வீசியெறிந்திடும்
விதைகள்கூட எதிர்காலத்தில்
விருட்சமாவதுண்டு
விதிவசத்தால் நானுமொருநாள்
விழுதுகளைச்சுமக்கலாம்!!



பயங்கரம்

மனங்களை புரிந்துகொள்ளாதவரை -எல்லா
மனிதர்களும் நல்லவர்களாகவே....

Thursday, December 5, 2013

தயங்காமல் நீமுயன்றால்...

இழந்துபோனதற்காய்
இடிந்து போகாதே
விழுந்து போனதற்காய்
விரக்தி கொள்ளாதே

காலம் பதில்சொல்லுமென்றும்
காத்திருக்காதே
கோலமாய் போகுமட்டும்
பொறுமை கொள்ளாதே

சிரித்தாலும்
பழிசொல்லும் நீ
முறைத்தாலும்
பலிசொல்லும்
தலைகீழாய் மாற்றிவைக்கும்
தடுக்காமல் நீயிருந்தால் உலகம்
வலைவிரித்து காத்திருக்கும்
விழிக்காமல் நீயிருந்தால்

கையில் எடுத்துக்கொள்
உன்னுடைய காலந்தனை
கால்களுக்கு சொல்லிக்கொடு
உனதான பாதைகளை
தடைகளை கடந்துபோ
தடுப்புக்களை உடைத்தெறி
தன்மானக்கவசமணிந்து
தனித்துவமான பயணத்தைக்கொள்

கண்ணீர் வழிகளை
கண்காணித் தறி
கண்களை கசக்குமுன்
கனவுகளை பகுத்தறி

ஏணிகளை கண்டவுடன்
ஏறிட துணியாதே
ஏற்றது உனக்கென்றால்
எள்ளளவும் தயங்காதே

ஏனிந்த நிந்தையென்று
எப்போதும் நினையாதே
தானாயழிந்த சிந்தைதனை
வீணாய்ப்போக விடாதே

உனக்குள்ளே எப்போதும்
உயிருள்ள கலையுண்டு
தயங்காமல் நீமுயன்றால்
தரணியிலில்லை உனைவெல்ல‌
இழ‌ந்து போனதற்காய்
இடிந்து போகாதே!!

Wednesday, December 4, 2013

நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் தொகுதிக்காக தெரிவு செய்யப்பட்ட எனது கவிதை

தடாகம் கலை இலக்கிய குடும்பத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

கவினுறு கலைகள் வளர்ப்போம்
....................................................

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால்
சர்வதேச மட்டத்தில்நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் தொகுதிக்காக தெரிவு செய்யப்பட்ட எனது கவிதை 

தோல்வியை தூக்கி
தோளில் போடாதே!

தோல்வியை தூக்கி
தோளில் போடாதே
துரோகியை நெஞ்சில்
தொங்கப் போடாதே
வலிதான் வலிதான்
வாழ்வெல்லாம் வழிதான்
துக்கத்தை துடைத்து
தூரப்போட்டுவிடு
ஒளிதான் ஒளிதான் -உன்
நிமிடங்களில் ஒளிதான்
ஒழித்தால் பாரத்தை -உன்
நிழல்கூட ஒளிதான்
நேசிப்பும் சிலநேரம்
வியாதியாகும் நிஜம்தான்
யோசித்து நடந்திடால்
விலகியோடும் பனியாய்
கண்ணீரை கருத்தினில்
எடுப்பதை நிறுத்து
பொன்நேரம் உனதாகும்
இந்நாளை உயர்த்து
பின்னிட்டு நடந்திட்டால்
பூச்சிகூட விரட்டும்
புறமுதுகை திருப்பிவிட்டால்
புயல்கூட ஒதுங்கும்
வேங்கையென வெற்றியை
வெறியோடு யாசி
தீங்குவரும் நாளில்கூட‌
தீராது யோசி
நெஞ்சத்து கண்ணீரை
நொடிதனில் மாற்று
அஞ்சாமை வாழ்வதனை
தீராது போற்று
கொஞ்சமாய் முயன்றாலே
கொடிபறக்கும் முன்னாலே
வஞ்சனை கொன்றாலே
வழிபிறக்கும் தன்னாலே
உறவுதரும் காயந்தான்
உள்ளஞ்சிதைக்கும் உண்மைதான்
வரவிலதனை சேர்க்காவிட்டால்
வசந்தம் தந்திடும் நன்மைதான்
தோல்வியை தூக்கி
தோளில் போடாதே!!

Tuesday, December 3, 2013

முயலாமை ஒன்றேதான்

இயலாமைகளை கொட்டுந் தளமாய்
இதயத்தை ஆக்காதே
முயலாமை ஒன்றேதான் உன்னை
மூழ்கடிக்கும் அறியாமை!!



முடியாதோ

இத்தனை வேகமாய்
சுற்றும் காலத்துக்கு
இதயக்காயங்களையும்
சுற்றிவீசிட முடியாதோ???






Monday, December 2, 2013

காதலிக்கின்றீர்களா? இப்படியா??


இதுதான் காதல்



உண்மையாய் காதலியுங்கள் நீங்கள்
உயிராய் காதலியுங்கள்
உறவை உங்கள் அவனை/ளை
உத்தமமாய் காதலியுங்கள்
குறைகளை ஒதுக்கி
குற்றங்களை மறந்து
உள்ளத்தில் சுமந்திடுங்கள்
நேரத்தை ஒதுக்கி
நேசத்தை வளர்த்து
நேர்மையாய் காதலித்து
பாசத்தால் கோர்த்துங்கள் உறவை
பாதுகாத்துக்கொள்ளுங்கள்


சின்ன சண்டைகளில் சிரித்து
சில்மிஷங்களில்  குழைந்து
சிறியதாயோர் சாம்ராஜ்யமுருவாக்குங்கள்
கைகோர்த்து நடங்கள் உங்கள்
பாதங்களுக்கு ஒரே பாதையாக்குங்கள்
இதுதான் வாழ்க்கை என‌கூறுங்கள்
இதுவே எனதுலகமென்று கூறுங்கள்
ஒரே வாழ்க்கைக்கு
ஒரே இதயமென்று சொல்லுங்கள்
ஒரே உயிருக்கு
ஒன்றே காதலென எண்ணுங்கள்


நாளை நீங்களுமோர்
மனநோயாளியாகவோ அல்லது
மரணத்தை வாஞ்சிக்கும் ஒருவராக‌
மாறவேண்டுமென்றால்???






முகமூடி வீழ்ந்திடுமா?

நேர்த்தியாக மிக‌
நேர்த்தியாக வலை
விரிக்கப்பட்டுள்ளது...

சிக்கித்தவிப்போரும்
சிக்கலில் தப்பியோரும்
இதுவரை வாய்மொழி
வலையையறுத்திடவில்லை -ஆதலால்
விரித்த கைகளுக்கு
விலங்கிடுவதாரோ??

அற்புதம் அபூர்வம்
ஆறாமறிவே அறியாவண்ணம்
அசத்தலான வலைதான்

உண்மைகளை
உதிர்த்திடும் நாவல்ல‌
உண்மைகள்
உதிர்ந்துபோன நா
அதனால்தானோ என்னவோ
நல்லோர் பட்டியலிலும்
நாயகத்தின் பதாதைகளிலும்
முதலிடம்!

முகத்தோலொட்டிய புதிய‌
நாடகமேடை!!

நேர்மைகள் தொலையுமுன்பே இம்
முகமூடி கன(ழ)ன்று வீழ்ந்திடுமா?

வலைமட்டும் அறுக்கப்பட்டு
வஞ்சகம் வெளிப்படுமாயின்
நானும் சொல்வேன்
நியாயங்கள் ம‌ரித்துப்போவதில்லையென்று!!




Sunday, December 1, 2013

புரியமுடியவில்லை

எவ்வளவோ படித்தும்
இன்னும் புரியமுடியவில்லை
உன்னை???



புண்ணாக்கு

புண்ணாக்கு புண்ணாக்கென்று
புண்ணாக்கினாய் உன்
புண்நாக்கினால் இன்னும்
கண்ணால் வலியுதிர்த்தும்
கண்ணாஎன்ற வார்த்தைக்கு
சொன்னாளா மறுவார்த்தை??