Sunday, October 26, 2014

வாழத்தான் வேண்டும் (26.10.2014 தினகரன் வாரமஞ்சரி )

வாழ்க்கை முடியுமட்டும்
வாழத்தான் வேண்டும்

தாழ்வு வந்திடினும்
எழத்தான் வேண்டும்

ஊமை நாவுகள்
இசையை கேட்கக்கூடாதா

ஏழ்மையுருக்குவதால் எல்லாம்
இழந்திடல் வேண்டுமோ
உள்ளவனுக்கு ஒன்றென்றால்
இல்லாதவனுக்கு ஆயிரமாமே
இறைவனிருக்கும் இந்த‌
இல்லாதவனிடத்தில்
ஆயிரங்கள் உருவாவதிலொன்றும்
அதிசயமே இல்லை...

வாழத்தான் வேண்டும் ஏதோவோர்
எளிய வழியில் -நல்ல‌
தெளிந்த வழியில் -தீமை
அறுந்த வழியில் -மனம்
மகிழும் வழியில் -பலர்
நெகிழும் வழியில் -குணம்
நிலைக்கும் வழியில் -நாம்
வாழத்தான் வேண்டும்...

ஏழ்மை தழைத்தோங்கி   நிற்பினும்
வாழத்தான் வேண்டும்!!

நிம்மதி

நிம்மதி,
கிடைக்கும் வரமல்ல
பெற்றுக்கொள்ளும் புத்திசாலித்தனம்....

Friday, October 24, 2014

தோள்கொடுத்த வீழ்ச்சியில்தான்... (02.11.2014 தினக்குரலில்)

அன்றொருநாள் நிலாவை
அழகென்றே மகிழ்ந்தேன்
என்னவென்று அறியேன்
எல்லாவற்றிலும் குறைதான்...

கோலமயிலும் கொண்டைச்சேவலும்
கோவில்மாடும் ரசனையென்றுதான்
காலமெல்லாம் நினைத்திருத்தேன்
காலமனைத்தையும் மாற்றியதேனோ...

பூக்கும் பூவும்
புன்னகைக்கும் முயலும்
தாக்கிடும் என்பதனை
தாமதித்தே அறிந்துகொண்டேன்...

சிறகுவிரித்து பறந்தாலும்
மனதுவிரிக்கா கிளிபோல‌
சிறையிருந்த நாளெல்லாம்
சிந்தையிலே நிறைந்ததுவே...

காலம் கவலையினையீன எனை
கல்வியொன்றே கரைசேர்க்க‌
மாய்ந்த காலமெல்லாம்
மனதைவிட்டு அகன்றதுவே...

நிகழ்காலமென்னில் நிஜங்களை
நிறைத்துவிட்டுச் செல்ல‌
இகழ்கால நினைவெல்லாம்
இல்லாமல்தான் போனது....

தோல்வியெல்லாம் படிகளென்று
தோன்றியது இன்றுதானே
தோள்கொடுத்த வீழ்ச்சியில்தான்
தோன்றினேன் நான் சுடராக‌

Sunday, October 5, 2014

மறக்கத்தான் நினைப்பேனோ


என்னை உனக்கு மறந்துபோயிருக்கலாம்
எதுவும் நினைவில் இல்லாமலிருக்கலாம்
விண்ணை நோக்கி உயர்ந்த நிலையில் +என்னிடம்
விடுதலையை நீயும் உணர்ந்திருக்கலாம்

காலங்கள் மட்டும்தான் கடந்திருக்கின்றது -என்னில்
காட்சிக ளெதுவும் கலைந்திடவில்லை
பாலமாய் நமைவளர்த்த கவிதையும் -இன்று
மாயமாய் எங்கேயோ மறைந்துவிட்டது...

அன்றொருநாளின் ஆனந்தப்பொழுதுகளும்
அழுகையோடு தொடர்ந்த இன்பமுடிவுகளும்
கன்னத்தில் வழிந்த நீரும் இறுதியில்
கண்ணீராய்த்தான் முடிந்துபோனது...

விதியை ஒருபோதும் நம்பியதில்லை
விழிநீரில் ஓய்வு கொஞ்சமுமில்லை
கதியின்றி நிற்குமிந்த அபலைக்கு
கைகொடுக்க கடவுளின்றி  யாருமில்லை...

பலிவாங்கும் எண்ணமெனக்கில்லை -உன்னையினி
பார்க்கும் வலிமையும் மனதிலில்லை
களிப்புடன் என்றென்றும் நீர்வாழ -கடவுளிடம்
கையெந்துவதை தவிர வேறுவேலையில்லை...

















காற்றின் கண்ணீர்

மரத்தை வெட்டி
வீட்டை உருவாக்கினோம்
வீட்டை கட்டி ஏன்
மரத்தை உருவாக்க
மறந்துபோகின்றோம்!!