Friday, August 30, 2013

ஏமாற்றுக்காரி!!

அன்பை கொண்டுவந்தேன்
ஆஸ்தியைத் தேடினாய்

பாசத்தோ டோடிவந்தேன்
ப‌ணமா வென்று பார்த்தாய்

பரிவுடன் பக்கத்திலிருந்தேன்
பதவியெங்கே யென்றாய்

பிரியத்தோடு நெருங்குகையில்
பட்டத்தினையும் பெற்றுக்கொள்ளென்றாய்

காதலோடு வந்தபோதெல்லாம்
குடும்பத்தை தாண்டமாட்டேனென்றாய்

ஏழைக்காதலியாய்
ஓடிவரும்போதெல்லாம்
ஏளனமா யொதுங்கிப்போனாய்

சமூகக்கேள்விக்கு
சர்வாங்கப்பலியாகாமல்
சம்சாரமாகிவிட்ட எனைபார்த்திப்போ
என்ன சொல்லப்போகின்றாய்
ஏமாற்றுக்காரியென்பதைத் தவிர????



அநியாயமென்றபோதும்!!

நெஞ்சுக்குள் நீதான்
நெஞ்சுக்குள் நீதானென்று
நெஞ்சத்துள் வஞ்சம் வைத்து
நஞ்சை பருக்கியபோதெல்லாம்
கொஞ்சமும் ஐயமின்றிதானே
வஞ்சிமனமத்தனையும்
அமுதென்று பருகிற்று அதை
அன்பென்பதை தவிர வேறே
அடையாளமிட முடியவில்லை
அப்பட்டமான அநியாயமென்றபோதும்!!




Thursday, August 29, 2013

மாலையில் விளையாட்டு
மைதானம் வெறிச்சோடிக்கிடக்கின்றது
கணனிக்குமுன் சிறுவர்கள்
எவருமவள் முகத்தில் விழிப்பதில்லை
அதிஸ்டலாபச்சீட்டு விற்கின்றாள்
விதவைப்பெண்


காணத்துடிக்கின்றேன்!!

உன்னையும் என்னையும்
மண்ணையும் விண்ணையும்போலல்ல‌
கண்ணையும் மணியையும் போலவே
காணத்துடிக்கின்றேன்!!




Wednesday, August 28, 2013

வெளிப்படைத்தன்மை அற்றுப்போகும்போதுதான்
சந்தேக‌க்குணம் உயிர்பெற்றுவிடுகின்றது


Tuesday, August 27, 2013

என் அன்னை

அலங்காரமில்லா -என்
அன்னையின் 
அழகான அன்பைவிட‌
ஆயிரம் அழகிகளின்
அழகெல்லாம் வெறும்
அல(க)ங்காரங்களே!!



Thursday, August 15, 2013

பிரிவு

பிரிவு என்பதை
உச்சரிக்கும்போதே
வரிந்துகட்டிக்கொண்டு வருகின்றது
கண்ணீர்துளிகள்



Tuesday, August 13, 2013

வெறுத்துவிடுங்கள் !!

மனதை எரித்த அதனை
மறக்கமுடியவில்லையா
வெறுத்துவிடுங்கள் அத்துரோகத்தை
மறக்க நினைத்தது தானாய்
மறந்துபோய்விடும்!!
 

பாசந்தான்

பிரிவுக்குள் ஒளிந்திருக்கும்
பாசந்தான் ஒவ்வொருமுறையும்
பரிந்துபேசிக்கொண்டிருக்கின்றது -நாம்
பிரிந்துபோய்விடாமல்!!




நினைத்திருக்கலாம் !!

நீயெனை பிரியுமுன்பதாக‌
ஒற்றை நொடியேனும்
நினைத்திருக்கலாம்
நம் புன்னகைசுமந்த அந்த‌
நிமிடந்தனை....!!



Monday, August 12, 2013

ஆண்களின் இதய அகராதியில் பெண்களின் அர்த்தம் இதுவா? (பகுதி 2)




ஏற்கனவே இதே தலைப்புடன் இதுபோன்ற மூன்று சம்பவத்தினூடாக உங்களை சந்தித்திருந்தேன் மறுபடியும் இடியிறங்கியதுபோல ஒரு நிகழ்வு அதனை கட்டாயம் எழுதிவிடவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கும் போதே இதயத்தில் ஆணியடித்தது இவ்விடயம். இவ்வலியினை உங்களோடும் பகிர்ந்துகொள்வதோடு இது,  தவறு செய்தவர்களை திருத்துவதோ அல்லது அவர்களை மற்றவர்கள் முன் அவமானப்படுத்துவதற்கோ அல்ல மாறாக இப்படியொரு அநுபவம் இனி ஒருவ‌க்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே. ஏமாற்றுபவர்களை குறை சொல்வதாலோ அல்லது அவர்களை திருத்தசெல்வதோ இப்போதைக்கு ஒரு முட்டாள்தனமாகவே தோன்றுகின்றது. நாம் காப்பாற்றப்பட வேண்டுமாயின் நம்மை முதலில் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்ற படிப்பினையை மட்டும் பெற்றுக்கொண்டேன்.


இன்றைய காலகட்டத்தில்  சமூக வலைத்தளங்களுக்குள் சிக்கிக்கொண்டுள்ள நம் இளைய சமூகம் தம்மை அதற்குள்ளேயே தொலைத்துக் கொண்டிருக்கின்றது என்ற உண்மையினை யாரும் மறுத்துவிடமுடியாது இதற்குள் எத்தனையோ முகமூடி கொள்ளையர்கள் உலவிக்கொண்டிருப்பதும் நாம் அறியாமலில்லை. முகமும் முகவரியுமில்லாது பல முகமூடிகள் வெறும் ஏமாற்றுதலுக்காகவே உலவிக்கொண்டிருக்கின்றது என்பதனை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும் இவ்வாறு சிக்கிக்கொண்டபின் உணர்ந்துகொண்ட‌ ஒரு பெண்ணால் கூறப்பட்ட‌ சம்பவத்தைனையே நான் சொல்லவிழைகின்றேன்.






மூன்று வருடங்களுக்கு முன்பு நண்பர்களாக அறிமுகமான இவர்கள் முகநூலில் பரிமாறக்கூடிய அத்தனை விடயங்களையும் நண்பர்களாகவே பகிர்ந்துகொண்டார்கள் விருப்பங்கள்(Like), கருத்துக்கள் (Comment) என அடிக்கடி ஒன்றுவிடாமல் தெரிவித்துக்கொண்டார்கள். மனதளவில் புரிதலுள்ள நண்பர்களான இவர்களின், 'இவர் அவர் என சொல்ல கஷ்டமாக இருக்கின்றது இவர்களுக்கு பெயரொன்று வைத்துவிடுவோம் ம்ம்ம்ம்ம்... நிஷா, சுகுமார்)


வருடமொன்றைத்தாண்டிய அவர்களுறவில் காதல் முளைத்துவிட்டிருந்தது பெரிய அதிசயமேயில்லை. முதலில் சுகுமார்தான் காதலை சொல்லியிருக்கின்றான். சுகுமார் முகநூலில் இடும் அனைத்து இடுகைகளுக்கும் தவறாமல் நிஷா கருத்திடுவாள் இது அவனது நண்பர்களுக்கு சந்தேகத்தை உண்டுபண்ண நிஷாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர் (ஆண் நண்பர்கள் என்று தவறாக நினைக்காதீர்கள் பெண் நண்பிகள் ஹி ஹி) இதனை அவனிடம் தெரிவிக்க " இதெல்லாம் அவர்கள் பொறாமையில் சொல்லுகின்றார்கள் தங்கம், நீ என்னை சந்தேகப்படாத நான் உன்னை மட்டும்தான் விரும்புறன். என்னை நிறையபேர் விரும்புவதாக சொன்னார்கள் ஆனால் எனக்கு உன்னை மட்டுந்தான் பிடிக்கும்" என்றாராம் சுகுமார். இதனை உண்மை என்று நம்பிய இந்த அப்பாவி நிஷா பெரிதாக இதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. உண்மையில் நிஷாவை விட சுகுமாருக்கு கிட்டத்தட்ட பதினைந்து வயது வித்தியாசம் இருந்தது அதனை தெரிந்தேதான் அவள் விரும்பியிருக்கிறாள்     (காதலுக்கு கண் இல்லை என்று சொல்வது இதற்குதான் என்பது இப்போதான் புரிகின்றது)





சுகுமாரின் முகச்சாயம் அதிகநாட்களுக்கு தாக்குப்பிடிக்கவில்லை சாயம்வெளுக்கும்போதுதான் தெரிந்தது அவன் ஏற்கனவே திருமணம் முடித்த குழந்தைகளின் தந்தை என்று.  (எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நீர் என்னை விரும்புவீரா விட்டிட்டு போகமாட்டீரே.. என்று சுகுமார் கேட்க 'இல்லை' என்று சொன்னபிறகே தான் திருமணமான விடயத்தினை ஒத்துக்கொண்டிருக்கின்றான்) . உன்னோடு கதைப்பதால்தான் நான் எனது பிரச்சனைகளிலிருந்து கொஞ்சம் நிம்மதியாக இருக்கின்றேன் என்றானாம் அதற்காகவே நிஷா அவனை காட்டிக்கொடுக்கவோ பழிவாங்கவோ அவனை தவிர்க்கவோ முடியாமல் தவித்ததாக கூறினாள். இப்போதும் இந்த அப்பாவிப்பெண் அவனுக்கெதிராக ஒரு வார்த்தைகூட பேசாமல் இருப்பது அவளின் தூய அன்பினையும் அப்பாவித்தனத்தையுமே வெளிக்காட்டிநிற்கின்றது.





தனது முதல் காதல் இப்படி சீரழிந்துவிட்டது, நான் ஏமாந்துவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சியில் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிஷா வழமைக்கு திரும்பமுடியால் தவித்துக்கொண்டிருக்கின்றாள். தான் இப்போதும் அவனை மறக்கமுடியாமலும் எந்த விடயத்திலும் ஈடுபடமுடியாமலும் இருப்பதாக தெரிவிக்கும் அவள், " அவன் என்னோடு பேசிய அன்பான பேச்சுதான் இதற்கு காரணம். அம்மா, செல்லம், தங்கம் என்றெல்லாம் என்னை அழைக்கும்போது நான் அதற்குள் தொலைந்துவிடுவேன்"என்கின்றாள். தாங்கள் ஒரு கணவன் மனைவியாகத்தான் பேசிக்கொண்டோம் என்று விம்முமவளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் தேடி அலைகின்றேன். சில ஆலோசனைகளோடு மன ஆறுதல் சொல்லமுடிந்த எனக்கு இதே நிலைக்கு இன்னும் ஒருவர் ஆளாகக்கூடாது என்பது மட்டுந்தான் இப்போதைய ஆதங்கம்.   இப்போது சுகுமார் தன்னை முகநூலில் தடைசெய்துவிட்டதாக (Block) கூறும் நிஷா அவனை தொடர்புகொள்ள வேறுவழிகளில் முயற்சித்தும் பலனில்லை என கூறுகின்றாள். இன்னும் சில நாட்களில் வெளிநாட்டுக்கு போகநினைக்கும் அவளின் வாழ்க்கைக்கு  நல்ல வெளிச்சமான எதிர்காலம் அமைய வேண்டுமென்று பிரார்த்திக்கின்றேன்.







இன்னொரு விடயத்தையும் கண்டிப்பாக கூறியே ஆகவேண்டும் இதுபோன்ற கயவர்களால் காதல் என்ற புனிதத்தின் பெயரால் நடத்தப்படும் நாடகத்திற்காக உங்களின் வாழ்க்கையை அழித்துக்கொள்வதோ அல்லது உங்களின் உண்மைக்காதலை நிரூபிப்பதற்காக எதிர்க்காலத்தினை தீர்மானிக்காமல் குடும்பத்திற்கு உங்களை சுமையாக்கிக்கொள்வதாலோ எந்த ந‌ன்மையும் கிட்டிவிடப்போவதில்லை. மாறாக ஏதோ வரப்போகும் ஒரு விபரீதத்திலிருந்து நீங்கள் தப்பிவிட்டீர்கள் என்ற பாதுகாப்பு உணர்வுமட்டும் உங்களுக்கு இருந்தால் போதும். உண்மையில் மனதளவில் இதனை இலகுவாக ஏற்றுக்கொள்வது கடினமானதே ஆனால் அவ்விடயங்களை தவிர்த்து நடப்பதனால் நாளடைவில் இதயம் இயல்பாகிவிடக்கூடிய சாத்தியங்கள் அதிகமாகவே இருக்கின்றது. உங்களது வாழ்க்கையினை துரோகத்துக்கு பலியாக்கிவிடாதீர்கள்



சில சுயநலங்களுக்காகவும் சுவாரஸ்யங்களுக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் பெண்களின் வாழ்க்கையினை கையிலெடுக்கும் இவ்வாறான மிலேச்சத்தனமானவர்கள் நம்மத்தியில் இருக்கின்றார்கள். இங்கு நான் அனைத்து ஆண்களையும் சாட வரவில்லை (தொப்பி சரியாக இருந்தால் போட்டுக்கொள்ளுங்கள் இல்லாவிட்டால் உண்மையில் இவ்வாறானவர்கள் இருக்கின்றார்கள் அவர்களிடமிருந்து உங்கள் சகோதரிகள் நண்பிகளை காப்பாற்ற உதவிசெய்யுங்கள்)





வெறும் 'நம்பிக்கை' 'அன்பு' என்ற பலவீனத்தை பகடைக்காயாக வைத்து பாசங்களை இப்படி பைத்தியக்காரத்தனமாய் மாற்றிவிடும் இந்த மானங்கெட்ட உறவுகளால் எத்தனை மனங்கள் ஊமைக்காயங்களோடு உலவித்திரிகின்றது என்பதனை இவர்கள் புரிந்துகொள்ள வாய்ப்பில்லைதான். வீட்டாரிடம் ஏன் நண்பர்களிடம் கூட இதனை தெரிவிக்கமுடியாமல் இவர்கள் படும்பாடு மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. எப்படி இவர்கள் துணிகரமாக துரோகிகளாக வாழ்கின்றார்கள் என்பது ஆச்சரியமடைய  வைக்கின்றது. மிகச்சுருங்கிப்போன இன்றைய நவீன உலகில் அவர்களது முகவரியினை கிழித்துக்காட்டமுடியாதென்று எவ்வாறு நினைக்கின்றார்கள்? எந்த மூலையில் முக்காடு போட்டு ஒளிந்துகொண்டாலும் முகத்திரையை உரித்துக்காட்டமுடியுமென்பதனை  ஏன் இவர்களால் உணரமுடியவில்லை? ஒரே ஒரு காரணம்தான் பெண் என்பவள் தன் குடும்ப கெளரவத்துக்காகவும் சமூகத்துக்கு பயந்தும் வெளியில் வரமாட்டாள் என்ற தைரியம் தான். உண்மையில் இவ்வாறு பல உண்மைகள் மறைந்துகிடப்பதும் அதனால்தான்.


முகநூலில் நண்பர்களாக அறிமுகமாகிக்கொண்டிருக்கும் அல்லது ஏற்கனவே அறிமுகமாகி நல்ல நண்பர்கள் என்ற போர்வைக்குள்ளிருக்கும் அல்லது அது காதலாக மாறிவிட்டிருக்கும் நண்பிகளே, ஒரு சகோதரியாக என்னால் சொல்லக்கூடிய ஒரே ஒரு விடயம், எடுத்த எடுப்பிலேயே நம்பிக்கைக்குள் தொலைந்து உங்களை தேடவேண்டிய சூழ்நிலைக்குள் சென்றுவிடாதீர்கள். எப்போது உங்களது உறவை மற்றவர்கள் முன் சொல்லத்தயங்குகின்றார்களோ,  தவிர்க்கின்றார்களோ அப்போதே உஷாரடைந்துவிடுங்கள்.  ஏமாற்றுபவர்களை தேடி அவர்களை திருத்துவதோ தண்டனைகள் பெற்றுக்கொடுப்ப‌தனைவிட எம்மை நாம் காப்பாற்றிக்கொள்வதே புத்திசாலித்தனமானது. மணிக்கணக்கான நேரங்களை செலவிட்டு மனதை கெடுத்துக்கொள்ளவேண்டாம்.



இது இப்படியிருக்க இக்கதையில் வரும் நாயகன்  சும்மா சாதாரண ஒரு ஜொல்லுப்பாட்டி இல்லைங்க‌ அதுதான் கவலை. இவர் ரொம்ப கெளரவமானவர் அதாங்க இவர் ஒரு ஊடகத்துறையைச்சேர்ந்தவர். சமூசத்தின் அவலங்களை கண்டு ஆதங்கப்படும், சீரழிவுகளை தடுக்கநினைக்கும் அல்லது உலகுக்கு வெளிச்சம்போட்டுக்காட்டி எச்சரிக்கும் மிகப்பொறுப்புவாய்ந்தவர் சொல்லவே வெட்கக்கேடு. இப்படியானவர்கள்தான் இன்றைய நாயகர்கள் தம்மை வெளியில் நல்லவர்களாக காட்டிக்கொண்டு நரித்தனமான காரியங்களை செய்யுமிவர்களை நாக்கைப்பிடிங்கிக்கொண்டு சாகுமளவுக்கு நாலுவார்த்தை கேட்கவேண்டும் போலத்தான் இருக்கு ஆனால் என்ன செய்ய அந்த நாலுவார்த்தையினால் உடைந்துபோன, காயப்பட்டுப்போன மனங்களுக்கு மருந்திடமுடியாமலுள்ளதே. அதானால்தான் இந்த எச்சரிக்கை. கவனம் கவனம் பெண்களே கவனம் எந்த முகமாவது அறிமுகமாகும்போதே முகத்திரைகளையும் சற்று அவதானித்துப்பாருங்கள். அவை போலியாகவும் இருக்கலாம் உங்கள் அதிஷ்டமென்றால் பொன்னாகவும் இருக்கலாம்.









முன்னைய கட்டுரையை படிக்க இங்கே அழுத்தவும்.

http://suga-elizabeth.blogspot.com/2013/04/blog-post_27.html


மனவெளியின் பிரதி கவிதைத்தொகுப்புக்கான ரசனைக் குறிப்புக்கள்


ஈழத்து இலக்கிய பரப்பில் 'புதுக்கவிதை' என்ற மகுடத்தோடு களமிறங்கியிருக்கின்றது 'மனவெளியின் பிரதி'. அநுராதபுர மாவட்டத்தைச்சேர்ந்த நாச்சியாதீவு பர்வீன் அவர்களின் 2வது தொகுதியாக வெளிவந்திருக்கும் இக்கவிதை தொகுதியானது வாசித்தலுக்கும் யோசித்தலுக்கும் உகந்த மிகச்சிறந்த நூலெனலாம். முற்றிய கரும்பை நுனியிலிருந்து அடிவரை சுவைக்கும் அநுபவத்தை பெற்றுத்தரும் மனவெளியின் பிரதியானது மொழியைவிட்டு புரிதலைவிட்டு இலகுவைவிட்டு சிதறிவிடாமல் பக்குவமான தண்டவாளப்பயணமாய் இருப்பது வாசகனுக்கு அவனது வாசிப்புப்பயணத்தை இலகுவாக்கிவிட்டிருக்கின்றது.

39கவிதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பில் இயற்கையோடும் இதயங்களோடும் சந்திக்கின்ற உணர்வுகளை மிக அழகான கவித்துவத்துடன் வெளிப்படுத்தியுள்ள கவிஞரை நிச்சயமாக தொகுப்பை வாசித்துக் கொண்டிருக்கும்போதே வாழ்த்தத்தோன்றும். அத்தோடு மனித‌ மனவோட்டங்களை அப்படியே பிரதியிட்டிருக்கும் இத்தொகுதிக்கு, 'மனவெளியின் பிரதி' எனும் நாமம் மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது.


அட்டைப்படத்துடன் நூலுக்கான முன்னுரையினை கவிஞரும் எழுத்தாளருமான மேமன்கவி தந்துள்ளார். சற்று வித்தியாசமாக 'பின்னுரை' என்ற பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது அதனையும் மேமன்கவி அவர்களே வழங்கியுள்ளார். கவிஞரின் கவிதையினை பரிந்துரை செய்ததுடன் அவரின் வளர்ச்சியில் பங்குகொண்டுள்ளவர்கள் குறிப்பாக மூத்த படைப்பாளி ஷம்ஸ் அவர்களைப்பற்றியும், நாச்சியாதீவு பர்வீன் அவர்களுக்கு நடைபெற்ற சுவாரஸ்யமான ஒரு விடயத்தினையும் நயம்பட குறிப்பிட்டிருப்பது விஷேடமாக காணப்படுகின்றது. இதனை நீங்களே வாசித்து அந்த சிறந்த அநுபவத்தினை பெற்றுக்கொள்ளுங்கள்.


'நாளை' என்ற  ஆரம்பத்தோடு தொடங்கும்  இத்தொகுப்பின் முதற்கவிதை, நாளைகாலப்புத்தகத்தின்ஒரு புதிய பக்கம்... என தொடங்கி

நாளைக்கே தெரியாதுநாளை என்ன‌நடக்குமென்று" என முடிகின்றது. நாளைய நாளைப்பற்றிய அழகான கனவை கொண்டிருக்கும் இக்கவியானது 'நாளை; என்பதனை நம்பிக்கையின் நதிமூலம் என குறிப்பிட்டிருப்பது மாசுப்படாத அந்நாளைப்பற்றி எங்கள் மனமும்கூட ஒரு நீண்ட எதிர்பார்ப்பினை பெறுகின்றது. அதுபோல‌ இயற்கையை தொட்டுப்பேசாத கவிஞர்கள் இல்லையெனலாம் அந்த வகையில் கவிஞர் பர்வீன் அவர்களும் இதில் விதிவிலக்கல்ல ஆனால் இவரின் இயற்கை கவிதைகளில் ஒரு விஷேடத்தன்மை காணப்படுவதை அவதானிக்கலாம். வெறும் இயற்கை ரசிப்போடு நின்றுவிடாமல் அதற்குள் சமூகத்தை பிரதிபலித்திருப்பதே அவ்விடயமாகும். இதனை 'நிலவு இராட்சியம்', 'இரவுத்திருடன்', 'பட்டாம்பூச்சியின் பறத்தல்பற்றி','மழைகொறித்த பூமி' போன்ற கவிதைகளினூடாக காணலாம்.


'எதிர்த்த சில நட்சத்திரங்கள்
எரி நட்சத்திரமாய்
உருமாறிப்போக‌ 
ஏக்கம் நிறைந்த மனதுடன்
சில நட்சத்திரங்கள்
பேசிக்கொண்டன‌
இன்னொருநிலவின் வருகைபற்றி..... என்ற வரிகளில் அரசியல்பற்றிய ஆதங்கங்களை இயற்கை ஆதாரத்தோடு வெளிப்படுத்தியிருப்பது கவிஞரின் கவித்துவத்தை ஆழம்பார்த்திருக்கின்றது எனலாம்.

காதலை விடுத்து கவிஞர்களின் பேனை,கவிவடித்துவிடுவது என்பது அரிதிலும் அரிது ஏன் இல்லையென்றே சொல்லலாம் அந்தளவுக்கு உலகத்தை சூழ்ந்திருக்கும் இக்காதல் இன்பமாகவோ துன்பமாகவோ எவ்வகையிலேனும் இணைந்தே இருக்கின்றது அந்த மனவுணர்வுகளை மிகப்பக்குவமாக செதுக்கிவிட்டிருக்கின்றார் கவிஞர்.

எல்லை கடந்த‌எனது ஞானவெளியில்நீ இல்லாத‌இந்தப்பொழுதுகள்மிக மிக இனிமையானவை ...

                                               என்ற வரிகள் 'எல்லை கடந்த ஞானம்' எனும் கவிதையில் இடம்பெற்றுள்ளது. காதலை கடந்துவரும் எமது வாழ்க்கை அத்தியாயத்தில் அதன் வடுக்களும் வலிகளும் மட்டும் எம்மோடு ஒட்டிக்கொண்டே வந்துவிடுகின்றது. ஞாபகங்களை விளக்கிவைக்க எத்தனித்தாலும் அதிலிருந்து விலகிடமுடியாத நிர்ப்பந்தத்தில் ஒவ்வொரு மனங்களும் தவிப்பதை இக்கவிதையில் துல்லியமாக வரிகளாக்கியுள்ளார். அதனை,

நமக்கான‌இடைவெளிகள் என்னமோஅதிகம்தான் இருந்தும்இன்னும் துரத்துகின்றதுஉனது ஞாபகம்...'  என்ற வரிகளில் அவதானிக்கலாம்.

இதுபோன்று 'நீ பற்றிய நினைவுகள்', கனவுக்கோடுகள், ரயில் சிநேகம், பழைய டயரி, இந்த நாள் எப்பவரும், நீ இல்லாத சாயங்காலம், போன்ற கவிதைகளையும் சுட்டிக்காட்டலாம். குறிப்பாக 'சம்மதமில்லாத மெளனங்கள்' என்ற தலைப்பில்,

எனதான விட்டுக்கொடுப்புக்களைஉன் பிழையான மொழிபெயர்ப்புக்கள்எத்தனை நாட்கள்என் தூக்கத்தை விழுங்கிஉள்ளது தெரியுமா?

      என்ற வரிகள் புரிதல் இல்லாத பிரிவுகளின் வேதனைகளோடும் ஏனைய கவிதைகளில் அன்பும் நேசமும் ஆறாய்ப்பெருகும் அழகிய காதல் வரிகளையும் படைத்திருப்பது வாசிப்பார்வத்தை இன்னும் அதிகப்படுத்துகின்றது.

உண்மையில் கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டிருப்பதைப்போல இவரின் கவிதைகளை வாசிக்கும்போது கவிஞர் வைரமுத்துவின் தாக்கம் மிகத்தெளிவாகத்தெரிகின்றது. வாசகர்களுக்கு சிரமமில்லாத மொழிநடை, நூலுக்கு வலுசேர்த்திருப்பதோடு கவிதைகளையும் வளப்படுத்தியுள்ளது

முன்பு கூறியதுபோல சமூகத்தின் பல தளங்களில்நின்று பாடியுள்ள இவரது கவிதைகளில் அழுத்தமான வரிகளை கொண்டு ஆற்றாமைகளையும் ஆளுமைகளையும் விதைத்திருப்பது வேலைக்காக வெளிநாடு செல்பவர்களின் மனநிலை, தேசத்தில் நிகழ்ந்த காயங்கள் கண்ணீராறுகள் அதன் வலிகள் வடுக்கள், முட்டுக்கட்டைபோடும் மூடநம்பிக்கைகள்,நட்பு, பிரிவு ஒரு தந்தையின் மனநிலை என நீள்கின்றது இதனை தொட்டுக்காட்டி செல்வதற்கும் தொடுத்துவிட்டு செல்வதற்கும் இந்நூலில் ஒருசிலவற்றை பொறுக்கியெடுக்க முடியாமல் திகைக்கின்றது என் ரசனைக்கண்கள் ஏனெனில் அத்தனை கவிதைகளும் அத்தனை சுவைமிகுந்தவை.

வாசகனை சந்தத்தோடும் சந்திக்கின்றது 'பாவியாகிக்கிடக்கின்றேன்' 'அழுது வடிக்கிறோம்' போன்ற கவிதைகள். என்னதான் ஒரு விடயம் பிறரிடமிருந்து எம்மை பாதித்திருந்தாலும் அவ்விடயம் எம்மை பாதிக்கும்போதுதான் அதன் உண்மையான வலியையும் அந்த உணர்வினையும் எம்மால் விளங்கிக்கொள்ளமுடியும் அதனை கவிஞரின் 'மரியம் என்ற என் மகளுக்கு' என்ற கவிதையில் இனங்காணலாம்.


'மரியம் என் உயிரே
உனக்கு நன்றியம்மா
பெற்றோரின் பெறுமதியை
உணர்த்தியமைக்கு....

                          என்ற வரிகள் தான் தந்தையாகிய பிறகுதான் தன்னுடைய பெற்றாரின் மகத்துவத்தை தன்னால் நன்றாக உணரமுடிகின்றது என்பதனை தெளிவுபடுத்துகின்றார் இது எல்லாவிதமான அநுபவங்களுக்கும் பொருத்தமான உதாரணமாக கொள்ளலாம்.


இத்தொகுப்பின் சில கவிதைகளில் 'நிர்வாணம் கலைந்த இரவு', 'எனது நிர்வாண மனத்தின்', இந்த நிர்வாண வெளியில்' என 'நிர்வாணம்' என்ற வார்த்தையை அடிக்கடி பிரயோகித்திருப்பது கவிஞர், சில உண்மைகளை உயிரோட்டமாக காட்டுவதற்கும் வெளிப்படையாக தெரிவிப்பதற்கும் முயற்சித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் ஒரே வார்த்தையை வாசிப்பது சுவாரஸ்யத்தை குறைத்துவிடுகின்றது.

நாம் சந்திக்கின்ற மனிதர்களின் குணவியல்புகள் எம் வாழ்வியலிலும் பலவிதமான தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கும் இதனை எம்மால் தவிர்த்திடவும் முடிவதில்லை அது நல்ல விளைவாகவும் இருக்கலாம் தீய விளைவாகவும் இருக்கலாம் அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தினை கவிஞரின் 'வாழ்க்கைக்குறிப்புக்கள்' எனும் கவிதையில் துரோகம்,வஞ்சனை, ஏமாற்றங்களுக்கெதிரான குரலாகவும் வேதனை ஒலியாகவும் வெளிப்பட்டிருப்பது எமது வாழ்வில் சந்தித்த ஒர் அநுபவமாக எல்லோராலும் உணரமுடியும்.

இவ்வாறு எல்லா கவிதைகளையும் வாழ்வியல் அநுபவத்தினூடாக சமூக அவலங்களோடு அரசியலையும் மூடத்தனங்களையும் வெளிப்படுத்தியுள்ள கவிஞர்  மிகத்தரமான ஒரு கவிதைத்தொகுப்பினை தமிழுலகிற்கு தந்திருப்பது வரவேற்கக்கூடிய விடயமாகும். கவியார்வம் சமூக ஆர்வமுள்ளவர்கள் மட்டுமன்றி வாசிப்பு பிரியர்கள்  அனைவரிற்கும் மிகப்பெறுமதியான கவிதைகளடங்கிய 'மனவெளியின் பிரதி'யை தந்திருக்கும் கவிஞர் நாச்சியா தீவு பர்வீன் அவர்களை வாழ்த்துவதோடு ஒரு நல்ல நூலை வாசிக்கவேண்டும் என நினைக்கும் உங்களுக்கும் மனவெளியின் பிரதியை பரிந்துரை செய்து கவிஞருக்கு மனப்பூர்வமான வாழ்த்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். இதுபோல நல்ல விளைவினை ஏற்படுத்தக்கூடிய இன்னும் பல தொகுப்புக்களை கவிஞரிடமிருந்து எதிர்ப்பார்க்கின்றேன்.



 நூல்: 'மனவெளியின் பிரதி' கவிதை தொகுப்பு
 ஆசிரியர்: நாச்சியாதீவு பர்வீன்
 விலை: 350/=



Friday, August 9, 2013

தோல்வியில் முடிந்த தொடக்கம்!

ஓ..தோழனே//...என் தோழனே தோழியே வேதனை தீயதை கொன்றிடவே....ஓ.....
சொந்தமாய் பந்தமாய் சொல்லிடு சொல்லிடு சோகமே தொலைக்கவே என்னிடம் சொல்லிடு...
வானமே எல்லையே வந்திடு முல்லையே வறுமைதான் தொல்லையோ-இன்ப வாழ்விலினி இல்லையே.....
தோழனே என் தோழனே சொந்தமாய் பந்தமாய் சொல்லிடு சொல்லிடு -சோகமே என்னிடம் நீயும் சொல்லிடு....
1. வேருக்குள் வீசிடும் பூக்களின் வாசமும் உயிருக்குள் வலித்திடும் -உந்தன் நேசத்தின் ஏக்கமு.....ம்..ஆ....ஆ
ஊமையாய் காரிருள் என்னிடம் உன்னிடம் உயிரதை உருக்கிடும்-எந்தன் கரமதை வாங்கிடு... தூங்கிடும் இரவினில் துக்கம் தரும் தொல்லைகள் தொலைத்திட்டு சுவாசிக்க அருகினிலிங்கே வசந்தம்...
பூகம்பம் வரட்டுமே புயலாகிப்போகட்டும் புன்னகை சூடிக்கொள்ள புண்களும் ஆறுமே //
தோழனே/// என் தோழியே சொந்தமாய் பந்தமாய் சொல்லிடு சொல்லிடு என்னிடம் நீயும்... சொல்லிடு சோகமே... என்னிடம் சொல்லிடு
தோழனே...என் ...தோழியே...



Sunday, August 4, 2013

நம் காதலைசொல்வதே....




நமதுறவை மற்றவரிடம்
நட்பென்றுகூறுவதிலே
நாட்டம் கொள்கின்றாய்
நானோ
நம் காதலைசொல்வதே
நல்லதென்கின்றேன்!!





Saturday, August 3, 2013

அடையாளமிருக்குமா?

பணத்துக்கு விலைபோன‌
பாசங்கள்
குணத்துக்கு மதிப்பில்லா
வேஷங்கள்
மனிதம் தொலைந்த‌
மாநிட‌ங்கள்
நாளைய விடியலில்
அன்பு என்ற அடையாளமிருக்குமா?

எதிர்பார்க்கவில்லை

விரல் பிடித்து நடக்கும்
பயணங்கள்
விழிகள் சந்திக்கும்
அந்திநேரப் பொழுதுகள்
ஒற்றைக்கோப்பைத் தேநீர்
ஓயாத உரையாடல்கள்
ஒளித்திடாத ரகசியங்கள்
ஓராயிரம் புன்னகைகளென்று
இப்போதெல்லாம் நானெதையும்
உன்னிடம் எதிர்பார்க்கவில்லை
உடைந்து போய் துடிப்பது
அதிகமாக வலிக்கிறது!!




என் காதலில்தான்

சாயமில்லாத முத்தமும்
காயமில்லாத ரத்தமும்
கண்ட என் காதலில்தான்
மாயமில்லாத காதலுமிருந்தது!!

Friday, August 2, 2013

பரந்த மனமுள்ளவன் வேண்டும்

அதிகம் படித்தவனும் வேண்டாம்
அரைப்படித்தவனும் வேண்டாம்
அகம்புரிந்திடுமறிவோடு
அன்பு சொரிந்திடுமொருவன் 
அமைந்திட்டாலே போதும்


அளவுக்கதிகமா யுழித்து
அலுவலகமே கதியென்று
அலட்டுமொருவன் வேண்டாம்
அளவோடு எல்லாமெதிலும்
அநுசரிப்பவனே போதும்


பணத்துக்கு பின்னால்
பாகயுருகு மொருவன் வேண்டாம்
பண்பில்லாப்பார் வையுடன்
பாவையர் பின்னலையும்
பங்காளனும் வேண்டாம்
பத்தோடு பத்துபேரை பார்ப்பினும்
பாதை தவறாதவன் வேண்டும்


காதலியென்ற கனவுக்கும்
மனைவியென்ற மகுடத்துக்கும் 
என்னுடன் மட்டும்வேலியிட்ட
அவன்மட்டும் வேண்டும்
வேறு எல்லா உறவுகளையும்
எல்லாரோடும் பகிர்ந்துகொள்ளும்
பரந்த மனமுள்ளவன்
வேண்டும் வேண்டும்!!



நீ

நீ அள்ளி பிடிப்பதும்
நான் துள்ளித்துடிப்பதும்
தென்றலென உன் கரங்கள்
ஆவதும்
மலரென என்வெட்கம்
மணப்பதும்தான் என்
இன்றைய நினைவுவெளியின்
புதுமைத்தகவல்கள்!!




யோசிக்கின்றேன்!!

காமம் கலைந்து
காதல் கலந்து
உன் தோள்களில்சாயும்
அக்கணங்களை மட்டும்
எப்போதும் யாசிக்கின்றேன்
கண்ணீர் படிந்த என்
கவலைகளை படிக்குமுன்
கண்களைத்தான்
இப்போதும் யோசிக்கின்றேன்!!




தண்டனை

தண்டனை ஒருவனை
திருத்திவிடுவதுமுண்டு
திசைமாற்றிவிடுவதுமுண்டு

வரமென்கும்!!

சேலைக் கட்டியவள்
சாலையோரம் நடக்கையில்
சோலைப்பூக்களு திர்ந்துவிழும்
ஏனென்று அதைக்கேட்க அவள்
பாதம் தொடுவது வரமென்கும்!!




Thursday, August 1, 2013

வாழ்க்கையோ???

இன்பங்கள் எப்போதும்
தவழ்தே வருகின்றது
துன்பங்களோ வேகமாக‌
ஓடி வந்திடுகின்றது
இதுதான் வாழ்க்கையோ???




தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் சான்றிதழ் பெற்ற கவிதை


(தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் 2013 ஜூலை மாதம் நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் சான்றிதழ் பெற்ற கவிதை)


தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால் சர்வதேச மட்டத்தில் ஜூலை மாதம் நடாத்திய கவிதைப்
போட்டியில் "கவீத் தீபம்" சான்றிதழ் பெரும் சிறப்புக் கவிதையாக எனது கவிதையை தெரிவுசெய்து சான்றிதழ் வழங்கிய‌ தடாகம் கலை இலக்கிய அமைப்புக்கும் பொறுப்பாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.......


கவினுறு கலைகள் வளர்ப்போம் 

தடாகம் குடும்பத்தினரின் நல் வாழ்த்துக்கள் 

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால்
சர்வதேச மட்டத்தில் ஜூலை மாதம் நடாத்திய கவிதைப் 

போட்டியில் "கவீத் தீபம்" சான்றிதழ் பெரும் சிறப்புக் கவிதை


வாழப்புறப்பட்டுவிட்டேன்...

பெண்மையின் மேன்மையெல்லாம்
தென்றல் கலைத்த மேகம்போல‌
அநாயசமாய் அழிந்துபோகின்றது

தீக்கொண்டு சாம்பல்கண்டிடும்
தீவிரம் நெஞ்சுக்குள் பற்றியெறிகின்றது
எத்தனை காலத்துக்குத்தான்
புத்தகத்தில் மூடிய மயிலிறகாய்
பத்தினிக்கிரீடத்தை பாதுகாப்பது...

முப்பத்தைந்தை தாண்டிய -என்
முதிர்க்கன்னித்திரை கிழித்து
முழுமையாய் மூச்சுவிட்டது பிழையென்றால்
என்னைக் கிழித்த உம்
வார்த்தைக் கணைகளுக்கு
விஷந்தடவி எய்துகொண்டிருந்ததேன்...

இத்தனை வருட மிருந்தவள் -இப்போ
இஸ்டத்துக்கா செல்ல வேண்டும்
சாதிவிட்டு சாதிசென்றதற்கு
சாக்கடையில் வீழ்ந்து செத்திருக்கலாமென்ற‌
உங்கள் அற்பங்கள் என்னையொன்றும்
அழித்துவிடுவதில்லை...

மதம்மீறியது பிழையென்றால் -நீங்கள்
மருமகளுக்கு பதிலாக
மனையுடன் சேர்ந்த லட்சங்களை கேட்டதேன்??
சாதிக்கலந்தது சாபமென்றால்
சீதனத்தை மட்டுமே நீவீர்
தேடியதும் தீண்டாமைதான்

காதல் பாவமென்றுதானே
இத்தனை வருட காத்திருப்பு
அதற்கு உங்களால்
முதிர்க்கன்னியென்ற
முக்காட்டை மட்டுமல்லவா போர்த்தி
மூழ்கடிக்க முடிந்திருந்தது
வேர்கள் வெளிக்கிளம்பிய பின்னுங்கள்
வேலிகளுக்கிங்கு வேலையில்லை

மனம் பொறுக்குமளவுக்குங்கள்
சுடுசொற்கள் இருந்ததில்லையே அதனால்தான்
மனச்சிறைக்குள் மாண்டுபோயிருந்த‌
மாங்கல்யத்தை மருந்தாயிட்டுக்கொண்டேன்


வாலிபவேட்கையில் நானின்று
வர‌ம்புமீறி காதல்செய்யவில்லை
காலத்திடம் சிக்கிக்கிடந்த சில‌
முடிச்சுக்களை அவிழ்த்துவிட்டிருக்கின்றேன்
அவ்வளவுதான் ஆனந்தப்பட்டுக்கொள்ளுங்கள்

காலம்முழுக்க கன்னியாகவே
வாழவிட்டிருப்பீர்களா
மூச்சுக்கு மூச்சு
முடிந்திடா கேள்விகளால் என்னை
மூர்க்கத்தனமாயல்லவா கொன்றிருப்பீர்கள்

இரண்டில் ஒன்று
எடுக்கும் நேரத்தில்தான்
இதயமறிந்த இவன்வந்தான்
வாழ்வோடு போராடி சாவதிலும்
சாவோடு போராடு வாழ்வதென்ற முடிவோடே
சாதியினை கடந்து
மதத்தினை மறந்து
மனிதத்தோடு மட்டுமே
வாழபுறப்பட்டுவிட்டேன்...


த. ராஜ்சுகா
இலங்கை








அல்கா



களைத்துப்போன அல்கா தனது எல்லா பொருட்கள் முதல் தேவையான ஆடைகள்வரை அனைத்தையும் பொதி செய்வதை ஓரளவு நிறைவுசெய்திருந்தாள் இன்னும் ஒரு வாரத்தில் தனது அமெரிக்கப்பயணத்தை எதிர்கொள்ள இருக்கும் அவளுக்கு இதயம் கனதியால் அழுத்திக்கொண்டிருந்தது.

தனது தாயின் மறைவுக்குப்பின் விடுதிவாழ்க்கைக்குள் தற்காலிகமாக தன்னை பழக்கப்படுத்திக்கொண்டவளுக்கு இப்போது அதுவே தொடரப்போகின்றது என்பதை நினைக்க அழுகை விம்மி வெடித்தது. எல்லாமாக இருந்த தன் தாயின் மறைவு அவளை உருக்குலைத்துப்போட்டிருந்தது அம்மாவின் நினைவு வாட்டியெடுக்க செய்த வேலையை அப்படியே வைத்துவிட்டு தன் தாயின் புகைப்படத்திக்கு முன்னின்று தேம்பித்தேம்பியழுதாள் வேதனை தீரும்வரை.

எல்லா  பொதிகளையும் தயார்செய்து முடித்தவளுக்கு தாயின் பழைய புத்தகப்பெட்டி நினைவுக்குவர அம்மாவின் நினைவாக சிலவற்றை எடுத்துக்கொள்ள நினைத்து அந்தப்பெட்டியையும் இறக்கி எல்லா புத்தகங்களையும் வெளியே கொட்டினாள்.

அல்காவின் பாடசாலைக்காலங்களிலேயே அவளது தாய் தனது வாசிப்பு எழுத்து வேலைகள் அத்தனையும் நிறுத்தி தனது ஒருசில புத்தகங்களையும் தான் எழுதிய கையெழுத்துப்பிரதிகளையும் தவிர எல்லா புத்தகங்களையும் நூலகத்திற்கும் நண்பர்க‌ளின் பிள்ளைகளுக்கும் கொடுத்துவிட்டிருந்தாள். அந்த நாட்களில் அல்காவின் அம்மா நித்தியாகூட நல்ல எழுத்தாளராக பலராலும் அறியப்பட்டிருந்தாள் அவளுடைய கவிதைகள் போன்ற ஆக்கங்களை வாசிப்பது அல்காவுக்கும் அதிக ஈடுபாடு காணப்பட்டது. பெட்டியில் கிடந்த சில நாவல்களும் கவிதை மனோதத்துவ நூல்களையும் பொதுநூலகத்துக்கு கொடுத்துவிட வேண்டும் என ஒதுக்கிவிட்டு தாயின் கையெழுத்து பொதிந்த மூன்று கவிதை  கொப்பிகளைமாத்திரம் தனக்கென   வைத்துக்கொண்டவளின் கைகளுக்குள் அடியில் வைக்கப்பட்டிருந்த அந்த தடித்த சிவப்புநிற நாட்குறிப்பேடு கிடைத்தது.

முதற்பக்கத்தை திறந்தவுடன் அநிமுகமில்லாத ஒரு பெயர். (க்கு) TO: நிசாந்தி (இடமிருந்து) FROM : சுகந்தன் என்றிருந்தது.  நாட்குறிப்பெழுதும் பழக்கமில்லாத தன் தாய்க்கு சொந்தமான டயறி அல்காவின் இதயத்தில் ஆயிரம் கேள்விகளை நிறைத்துவிட்டது யார் இந்த சுகந்தன்' இத்தனை வருடங்களில் தன் தாய்க்கும் தனக்குமிடையிலான காலங்களில் இந்த பெயர் அடிபடவே இல்லையே அதுவும் எனக்கும் அம்மாவுக்கும் இடையில் சிறு ஒளிவுமறைவு கூட இருந்ததில்லையே என்றவளுக்கு அந்த டயரியின் மீதான ஆர்வம் அதிகரிக்கவே பக்கங்களை புரட்டத்தொடங்கினாள். ஜனவரி பெப்ரவரி என முதல் இரண்டு மாதப்பக்கங்களிலும் எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை. 1988 மார்ச் 5ல் தான் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

"இன்று மாலை 6மணிக்கு சுகந்தன் என்னை சந்திக்கவந்தார் கிட்டத்தட்ட இரண்டுமணிநேரம் கதைத்துவிட்டு, போகும்போது இந்த டயரியை என்னிடம் தந்துவிட்டேச்சென்றார்" என ஆரம்பித்த குறிப்பு, முக்கியமான விடயங்கள் மட்டும் சுருக்கமாக எழுதப்பட்டைருந்ததே தவிர அதிகம் நிரப்பப்படாத பக்கங்களையே வினாக்களாக விட்டுச்சென்றிருந்தது. இதில் நிசாந்தியின் வாழ்க்கையில் முதற்பக்கத்தை மட்டுமல்ல முக்கியமான பாதையினையும் அல்காவுக்கு வெளிச்சம் போட்டுக்காட்டியது.


ஆசிரியையான நிசாந்தி குடும்பத்தில் கடைசிப்பிள்ளை இரண்டு அண்ணாவும் ஒரு அக்காவுடன்  பிறந்த அவளுக்கு வீட்டில் அன்புக்கும் அரவணைப்புக்கும் பஞ்சமிருக்கவில்லை. காலவேகம் பிள்ளைகளை வேகமாக வளர்த்துவிட்டு நிசாந்தியின் அக்காவை மணம்முடித்து வெளிநாட்டுக்கும் இரண்டு அண்ணாமாரும் தமது விருப்பப்படி மணம்முடித்துக்கொள்ளவும் வழிசமைத்திருந்தது. உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த நிசாந்தி மட்டும் பெற்றோருடன் மிஞ்சினாள் தம் வயோதிபகாலத்தில் தம் செல்லமகளுக்கு தம் விருப்பப்படி ஏதாவது நல்லகாரியம் செய்துவைத்துவிட வேண்டும் என விரும்பினார்கள் ஆனால், தான் படிப்பை முடித்து ஒரு தொழிலுக்கு செல்லவேண்டும் அதனால் இப்போது எனக்கு எதுவும் வேண்டாம் என நிசாந்தி கூறவும் பெற்றோரும் தற்காலிகமாக அந்த விடயத்தை ஒத்திவைத்தனர். அவள் எண்ணியபடியே படிப்புமுடிய ஆசிரியத்தொழிலும் கிடைத்தது அந்த நேரத்தில் அவளது அப்பா இயற்கை எய்திவிட அம்மாவும் மகளும் தனித்து தவித்துப்போயினர்.

அந்த நாட்களில் அவளது பாடசாலைக்கு புதிதாக இணைந்துகொண்ட கணித ஆசிரியர் சுகந்தன் கலகலப்பானவனும் எதையும் சமயோசிதமாக செய்துமுடிக்கும் ஆற்றலினால் சக ஆசிரியர்கள் மனங்களில் குறுகிய காலத்திலேயே இடம்பிடித்துக்கொண்டான். எல்லோரிடமும் அளந்துபேசும் சுபாவம் கொண்ட நிசாந்திமட்டும் இவற்றிலிருந்து விலகியே இருந்தாள் இருந்தாலும் அடிக்கடி வந்து தன்னுடன் பேசும் சுகந்தனை அவளால் நிராகரிக்கமுடியவில்லை சிலநேரங்களில் எரிச்சலாக இருந்தாலும் மரியாதைக்காக பதில்சொல்லிவிட்டு செல்வாள் இருவருக்குமிடையிலான இந்த இடைவெளியே காலப்போக்கில் காதல் தீயை பற்றவைக்கவும் வழியமைத்துக்கொடுத்தது.

 அவர்கள் காதல் வருடங்கள் இரண்டை தொடவும் மீண்டும் நிசாந்தியின் வீட்டில் அவளுக்கு வேகமாக வரன் பார்க்கவும் சரியாக இருந்தது. வீட்டில்வந்து தன்னை பெண்கேட்கும்படி அவளை தன் மேற்படிப்பின் நிமித்தம் கொஞ்சம் பொறுமையாக இருக்கும்படி சமாதானப்படுத்திக்கொண்டிருந்தான். அவனுக்காக அவனது விருப்பத்துக்கு பதில்பேசாத அவள், பொறுமையாக காத்திருந்ததோடு தன் தாயிடமும் சாக்குப்போக்குச்சொல்லி தப்பித்துக்கொண்டிருந்தாள். ஆனாலும் தன் வயோதிப தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாத வேதனையில் சுகந்தனை அதிகமாக தொந்தரவு படுத்திக்கொண்டிருக்க இருவருக்குமிடையில் அடிக்கடி சிறுசிறு சண்டைகள் எட்டிப்பார்த்த‌து ஆனால் அவை சிறிய இடைவெளியில் முடிந்துவிடும் அழகான கோபங்களாகவே இருக்கும் இருந்தாலும் இம்முறை ஆறுமாத பிரிவை தரக்கூடியதாக காலம் அவர்களை பிரித்துப்போட்டிருந்தது.


தனது வாழ்க்கையே சுகந்தந்தான் அவனைத்தவிர வேறு எவருக்கும் இடமில்லை என வாழ்ந்துகொண்டிருக்கும் அவள் அவனை தன் கணவனாகவே நினைத்து வாழ்ந்துகொண்டாள் ஆனால் அவளது நினைப்பில் குறுகிய காலத்திலேயே பேரிடி வந்திறங்கியது உண்மைதான், இயற்கைக்கு முர‌ணானதுதான் ஆனால் விதியை எவரால் மிஞ்சிவிட முடியும் ஆமாம் சுகந்தனுக்கு அவர்கள‌து வீட்டில் வரன்பார்த்து நிச்சயித்தும்விட்டிருந்தார்கள் உண்மையில் சுகந்தனுக்கு விருப்பமில்லைதான் ஆனால் அவனின் குடும்ப நிர்ப்பந்தத்தினாலும் அவர்களுக்கு ஏற்ற எல்லாவகையிலும் பொறுத்தமான வசதியான வரன் என்பதால்மாட்டுமே அவனது மனம் மாறியிருந்தது விடயம் அறிந்த நிசாந்தி துவண்டு போனாள் மீளுவதற்கு வழிதெரியாதவளாய் அங்கலாய்த்துக்கொண்டிருந்தவளுக்கு ஆறுதலுக்கென்று எதுவுமே இருந்திருக்கவில்லை. காலம் அவளது அம்மாவை அவளிடமிருந்து பிரித்து அவளை தனித்துவிட்டிருந்ததே தவிர நிசாந்தியின் மனதை மாற்றியிருக்கவில்லை.

 தனது அழகான காதல், நினைவுகள், சுகந்தனை கணவனாக நினைத்து வாழ்ந்த நாட்கள் அவர்களது இன்பமயமான எதிர்கால கனவுகள், தமது மூத்த பிள்ளைக்கு வைக்கநினைத்திருந்த 'அல்கா' என்ற பெயர், என்று எதனையும் ஒதுக்கிவிடமுடியாதவளாய் தன் ஆசிரியத்தொழிலுக்குள் மட்டும் மூழ்கியிருந்தவளுக்கு ஆறுதலும் வாழ்க்கைக்கு ஒரு பிடிப்பும் துணையும்  தேவைப்பட்டது ஆண்களைப்பற்றிய கரும்புள்ளி விழுந்த அவளது இதயத்தில் வேறு ஒருவருக்கு இடமும் இருக்கவில்லை அதனால் அவள் அடிக்கடிசென்றுவரும் மனதுக்கு நிம்மதியை நிரப்பிக்கொள்ளும் இடமான 'சாந்தி அநாதை இல்லத்திலிருந்து' ஆறுமாதமே நிரம்பியிருந்த அந்த பச்சிளங்குழந்தையை தத்தெடுத்து அவளுடைய இலட்சிய நாமமான 'அல்கா'வை அவளுக்கு சூட்டி அழகுபார்த்ததோடு தன் காதலை உயிரூட்டிய நிறைவோடு அல்காவே வாழ்வென அவளை கண்ணும்மணியுமாக காப்பதில் காலத்தை அமைதியாக கடத்திக்கொண்டிருந்தாள்.


நிசாந்தியின் வாழ்வுக்கு புதிய உதயமாக அல்கா விளங்கினாலும் காலத்திடம் சிக்கிக்கொண்ட பல கேள்விகளுக்கு, பிரச்சனைகளுக்கு அவள் முகங்கொடுக்கவேண்டியிருந்தது ஆனால் தெய்வநம்பிக்கையும் மழலையின்  மகிழ்ச்சியுமே அவளை தைரியப்படுத்திக்கொண்டிருந்தது எனலாம். இப்படி முழுமையாக நிரப்பப்படாத அந்த நாட்குறிப்பில் முக்கியமான விடயங்களான சுகந்தனை சந்தித்தது, அவர்கள் பிரிந்தது அவர்களுடை காதல், அல்காவை சந்தித்தது என விரிவுபடுத்தாத நிசாந்தியின் வாழ்க்கையைப்போல சிறுசிறு அத்தியாயமாக எழுதிவைக்கப்பட்டிருந்தது. வாசித்து முடித்தவளுக்கு உலகம் உருண்டு தன் தலைமீது விழுந்துகிடப்பதைப்போல மனம் பாரத்தால் அழுத்ததொடங்கியது.

'ஐயோ அம்மா, இவ்வளவு பெரிய உண்மைகளையெல்லாம் என்னிடம் மறைத்துவிட்டா என்னை ஆளாக்கினீர்கள் ஏன் அம்மா உங்களைப்பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை எப்படியம்மா இத்தனை வேதனைகளயும் சுமந்துகொண்டு வாழ்ந்தீர்கள்.... கடவுளே ஏன் என் அம்மாவை என்னிடமிருந்து பிரித்தாய்...' என ஆயிரம் கேள்விகளோடு அம்மாவையும் ஆண்டவனையும் நோக்கியவளுக்கு இதயஓலம் மட்டுமே எஞ்சியிருந்தது.

குறிப்பு: நீங்கள் நினைப்பதைப்போல  உலகத்துக்காகவோ உறவுகளுக்கு மத்தியில் அல்லது ஊரார் தன்னை ஒரு தியாகியாக பார்க்கவேண்டும் என்பதற்காகவோ வாழாமல் அவளுக்காக, அவள் நிம்மதிக்காகஅவள் காதலுக்காக‌ மட்டும் வாழ்ந்து அல்காவின் மனதில் மட்டும் மறையாமல் நிலையாக வாழும் ஒரு சாதாரணப்பெண்தான் நிசாந்தி.






உன்னை மறக்கவா

நான்
உயிரோடிருக்கவேண்டுமென்றால்
உன்னை மறக்கவேண்டும்
உன்னை மறக்கவேண்டுமென்றால்
என்னுயிர் மரிக்கவேண்டும்
இப்போது சொல்
நான் என்ன செய்ய‌
உன்னை மறக்கவா
மரிக்கவா????




நேசித்துப்பார்!!

ஒருவரை
உண்மையாக நேசித்துப்பார்
பார்வையால்கூட‌
இன்னொரு உறவை
நெருங்கிடமுடியாது