Thursday, February 28, 2013

அவனானான்






சமூக அக்கறை அவனுக்குத்தான்
சமூகத்தின் சக்கரை அவனேதான்
சாப்பிட வசதியில்லாமலும் அவனானான்

Thursday, February 21, 2013

மித்திரன் வாரமலர் (20.02.13) சீனா உதயகுமார் அவர்களின் நேர்காணல்


யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச்சேர்ந்த கவிஞரும் எழுத்தாளரும் சிறந்த கணித ஆசிரியருமான சீனா உதயகுமார் அவர்கள் தனது பரந்த தேடலினால் இலக்கிய தளத்தில் தனக்கென ஓர் ஆழமான இடத்தினை கொண்டுள்ளார். வேறுபட்ட சுவாரஸ்யமான விமர்சனப்பார்வையும் தமிழாலுமையும் கொண்ட இவர்  தற்போது குறுந்திரைப்படம் எடுக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார். பல்துறைக்கலைஞராக வலம்வந்துகொண்டிருக்கும் உதயகுமார் அவர்கள் பகிர்ந்துகொண்ட விட‌யங்கள் மித்திரன் வாசகர்களோடும்...





01.ஓர் கணித ஆசிரியரான நீங்கள் இலக்கியவாதியாகவும் பரிணமித்திருக்கின்றீர்கள் உங்களை பற்றிய அறிமுகத்தை எங்களோடுபகிர்ந்து கொள்ளுங்கள்..


சின்னராஜா உதயகுமார் ஆகிய நான் வல்வெட்டித்துறை, சமரபாகு எனும் பெரும் கிராமத்தில் பிறப்பில் இருந்து வசித்து வருகிறேன்.
“சமரபாகு சீனா உதயகுமார்“ எனும் புனை பெயரில் கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனங்கள் எழுதி வருகிறேன்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப் பட்டதாரியான நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைமானி (எம்.ஏ - தமிழ்) பட்டப் படிப்பினைக் கற்று வருகிறேன்.


02.எழுத்துத்துறைக்குள் தங்களது அறிமுகம் பற்றியும் அநுபவங்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்..


கணிதபாடம் கற்பித்தல் என்பது, எனக்கு இருபது வருட அனுபவமாகவே இருந்து வருகிறது. ஆனால், தமிழ் இலக்கியம் மீதான ஆர்வம் என்பது பாலர் வகுப்பு முதல் ஏற்பட்ட ஓர் அனுபவமாகவே நான் நினைக்கிறேன்.
பாலர் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரை கல்வி கற்ற காலங்களை மகிழ்வான ஒரு காலமாகவே இன்றும் கருதுகிறேன். அக்காலங்களில் வகுப்பு ஆசிரியையாகவும், தமிழ், சுற்றாடல் கல்வியினைக் கற்பித்த ஆசரியையாக எங்கள் ஊர் மலர் ரீச்சர் இருந்திருக்கிறார்.
      அவரின் கற்பித்தலின் ஆளுமை ரொம்பவே வித்தியாசமாகவும், அவரின் கற்பித்தலின் வீச்சுக்குள் எங்கள் எல்லோரையும் அகப்பட வைத்திருக்கும் மந்திர வித்தை ஒன்றைக் கையாண்டு கொள்வார்.
      கற்பித்தல் அதற்கு அப்புறம் பொருத்தமான ஒரு கதையினையும் சொல்லி எங்களை சிந்திக்கவும் வைப்பார். அந்தக் கற்பித்தல் முறையே நாலாம் ஐந்தாம் வகுப்புகளுக்கு வந்த பிறகு, “அம்புலிமாமா“, “கோகுலம்”, “ராணி கொமிக்கஸ்“ போன்ற சிறுவர் சஞ்சிகைகளை தேடி எடுத்து வாசிக்கத் தூண்டியதாக இன்றும் நான் நினைக்கின்றேன்..
அந்த ஆரம்ப வாசிப்புக்களின் பிரதிபலிப்புகளாக சின்னச்சின்னக் கவிதைகள் எழுதுவேன். குட்டிக் கட்டுரைகள் எழுதுவேன். அவை எல்லாம் என் பயிற்சிப் புத்தகத்தின் பின் பக்கங்களிலே பதிந்தும் வைப்பேன். காலம் செல்ல அவ தொலந்துவிடும்.
அப்பிடி எழுதிய ஒரு கவிதைதான் “கூண்டுக்கிளி“ என்கிற என் பிள்ளைக் கவிதை. அந்த நாளில் எங்கள் பாரதி இளஞர் மன்றத்தினர் “இதய ஒலி“ எனும் கையெழுத்துச் சஞ்சிகை ஒன்றினை ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் வெளியிட்டு வந்தனர். அதன் பிரதம ஆசிரியர் திருப்பதி சுபாகரன் (மலர் ரீச்சரின் மகன்). இவரின் அரவணைப்போடு தான் என் கவிதை முதன் முதலில் சஞ்சிகையில் பிரசுரம் பெறற்றிருக்கிறது. அப்ப எனக்கு வயது 11 ஆண்டுகள்தான்.


03. உங்களுடைய எழுத்துக்கள் சகல ஊடகங்களிலும் அதிகமாக காணமுடிகின்றதுஇதுவரையில் வெளிவந்தவெளிவரப்போகின்ற‌ தங்களுடைய வெளியீடுகள்கிடைத்த விருதுகள் பரிசுகள் பற்றி கூறுங்கள்.


      “புள்ளி விபரவியல்“ எனும் கணித நூல்தான் எனது முதல் வெளியீடாக வந்த புத்தகம் ஆகும்.
      மேலும், “வெற்றியுடன்“, “உடந்த நினைவுகள்“ எனும் இரண்டு கவிதை நூல்களையும், “செந்நீரும் கண்ணீரும்“ எனும் சிறுகதைத் தொகுதிகளையும், “பகிர்வு“ எனும் கட்டுரத் தொகுதியினையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறேன்.
      “அந்த நாள் ஞாபகங்கள்“, “ஒரு பலத்தின் இருப்பின் மௌனம் பற்றிப் பேசுதல்“ எனும் இரண்டு கவிதைத் தொகுதிகளும், “சமரபாகு சீனா உதயகுமாரின் சிறுகதைகள்“ எனும் சிறுகதைத் தொகுதியும் மிக விரைவாக வெளிவரவிருக்கின்றன.
      2006 ஆண்டு அரச அலுவலர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் “முன்மாதிரியாய்“ எனும் சிறுகதை மூன்றாம் இடத்தைப் பெற்றது.
      உதயன் பத்திரிகையின் வெள்ளி விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் “மழை“ எனம் சிறுகதை சிறப்புப் பரிசினைப் பெற்றிருந்தது.


04. உங்களுடைய எழுத்தாற்றலை இலகுவாகவும்வீச்சுடனும் எந்த இலக்கிய வகையினூடாக உங்களால் அதிகமாக வெளிப்படுத்த முடிவதாக நீங்கள்நினைக்கின்றீர்கள்?
            அதிகமானவை கவிதைகள் ஊடாகவே நான் வெளிக் கொணர்ந்திருக்கிறேன்.  அதற்காக வரிகளும், பக்கங்களும் குறைவானவை என்றதற்காக கவிதை எழுதுதல் என்பது இலகுவானது என்று சொல்லி விடவும் முடியாது. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு கடினத்தைக் கொண்டிருக்கின்றன.
நாம் எடுத்துக் கொண்ட எந்தவொரு வடிவத்தின் ஊடாகவும் ஒரு விடயத்தைச் சொல்ல முற்படுகின்ற போது அதிக தேடலும், அதற்கேற்ப வாசிப்பும் தேவையாகின்றன.


05. இக்கால கட்டத்தில் சடுதியாக படைப்பாளிகளின் அறிமுகமும்மிக குறுகிய காலத்தினுள் ஒரு படைப்பாளி நூலொன்றினைவெளியிட்டு பிரபலமடையும் போக்கும் காணப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகின்றது  இது பற்றி நீங்கள் என்னசொல்ல விரும்புகின்றீர்கள்?


            ஆரம்ப காலங்களில் ஒரு குழந்தை நடை பயில்வதற்கு வீட்டுச் சுவரைப் பிடித்துத்தான் நடந்து நடை பயின்றிருக்கிறது. அதற்கு பின்பு வந்த காலங்களில் மூன்று சில்லுகளைக் கொண்ட தள்ளுவண்டில் மூலம் குழந்தைகள் நடையினைப் பயின்று கொண்டார்கள்.
      காலத்தின் அதீத வளரச்சியினால் அவை நவீன மயப்படுத்தபட்டு பற்றரியில் இயங்கும் சிறு வாகனங்களைக் குழந்தைகள் கையாள்வதை நாம் எல்லோரும் காண்கிறோம்.
தொலைக்காட்சியை இயக்கவும், கைத்தொலைபேசியில் ஒருவருக்கு அழைப்பினை ஏற்படுத்தவும், கணினிகளை இயக்கவும் சிறு வயதினிலேயே கற்றுத் தேறுகிறார்கள். இச்சிறுவர்களைக் காணும் போது நாமெல்லாம் புருவங்களை உயர்த்தி ஆச்சரியப்படுவதில்லையா?
 இவை போன்றுதான்  இன்றைய படைப்பாளிகளும் தங்கள் படைப்பக்களை உடனடியாகவே அச்சில் கொண்டுவர ஆசைப்படுகிறார்கள். அதற்கான வசதிகளும் மலிந்து கிடக்கின்றன.
தங்கள் ஆக்கங்களை அச்சில் கொண்டுவந்து விடுகிறார்கள். இது பிரபல்யமடையும் போக்கு என்று சொல்ல முடியாது. காலங்கள் செல்லச் செல்ல அவர்கள் தங்களை் நிலைகளை உணர்ந்து கொள்வதற்கான அடையாளங்கள் அவை. பின் நாளில் வெளிவந்து சாதனை படைக்கக் காத்திருக்கும் நூல்களுக்கான வழிகாட்டியான வெளியீடுகள் அவை.
அவர்களில் குற்றம் சுமத்துவது என்பது அர்த்தம் அற்ற ஒரு செயல் என்றுதான் நான் சொல்லுவேன். உதவி செய்யா விட்டாலும் விமர்சனங்களால் உபத்திரவம் செய்யாது இருப்பதே வளர்ந்தவர்கள் வளர்பவர்களுக்கு செய்யும் பேருதவி என்று நினைப்பவன் நான்.

06. நீங்கள் ஒரு ஆசிரியர் என்ற வகையில்இன்றைய இளைய சமூகத்துக்கு இலக்கியத்தின் மீதான ஈடுபாடு எவ்வாறுகாணப்படுகின்றது?


            முன்பிருந்த ஆசிரியர்கள் போல் இன்றைய ஆசிரியர்கள் அனேகர் வாசிப்பு குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். தேடல் என்பது துளியளவும் இல்லாமல் இருக்கிறார்கள். பத்தரிகைகளில் வரும் தடித்த எழுத்து தலைப்புகளை மட்டும் வாசித்து விட்டு பத்திரிகைகளை மூடிவிடும் ஒரு சமூகமாகவே இவர்கள் அதிகமாக இருந்து வருகிறார்கள்.
ஆனாலும், ஒரு சில மாணவர்கள் மட்டுமே சுயமாக தேடுகிறார்கள். புதுப்புது விடயங்களை கற்கிறார்கள். அவர்களுள் சிலர் இலக்கியத்தின்பால் இடுபாடு கொண்டு அதில் தங்களை வளர்த்து விட முற்படுகிறார்கள்.
      பட்டங்கள் எத்தனையும் பெற்று விடலாம். அவை ஒரு நேர்கோட்டு அறிவுத் தேடலாகவே இருந்து விடுகின்றன. பலவிடயங்களையும் தேடிக் கற்கின்ற போதுதான் நேரிய உயர்ந்த மரத்தின் பல கிளைகளில் தொங்கும் இனிய கனிகளை உள்ள தோப்பு மரமாக யாரும் திகழ முடியும்.


07. சமூக மாற்றத்திற்கும் விழிப்புணர்விற்கும் இலக்கியமே சிறந்த வழிகாட்டிஎனவே எவ்வகையான சிந்தனைப் போக்குடனும்ஆளுமையோடும் உங்களுடைய எழுத்தக்கள் சமூகத்தை சந்திக்கின்றன?


            சமூகத்தின் முதுகெலும்பாக விளங்கும் சன சமூக நிலையம், கோயில் நிறுவனங்களில் பதினாறு வயதிலேயே இணைந்து நிர்வாக ரீதியாக சமூகங்களை நிர்வகித்த வல்லமையும், அப்போது நான் சந்தித்தித்த பல்வகை மனிதர்களின் நடத்தைகளும் சமூகத்தை நன்கு உணர்ந்து கொள்ள சந்தர்ப்பங்களாக எனக்குக் கிடைத்தன.
      மேலும், ஊரின் ஒவ்வொருத்தர் வீடுகளிலும் நடைபெறுகின்ற நன்மை தீமை நிகழ்வுகளில் தவறாது கலந்து  கொள்ளுதல். மற்றவர்களோடு சேரந்து கொண்டு என்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்து உதவுதல்.
      இருபது வருடங்களாக கணித பாடத்தினை நான் கற்பித்து வருகின்றேன். இக்காலங்களில் நான் சந்தித்த மாணவர்களின் வித்தியாசமான மன நிலைகளும், அம்மாணவர்களின் பெற்றோர்கள் பலரின் நன்றி மறவாத மனவுணர்வுகளும், சந்தர்ப்பவாத ஒரு சில தனி மனித நடத்தைகளுமே சமூகத்தை இலகுவாக உணர்வதற்கு எனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்கள் என்பேன்.
      பொது நிறுவனங்களின் முக்கிய பதவிகளில் இருந்து கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றி ஊழல் செய்து சம்பாத்தியம் தேடிய மனிதர்களையும், அரச உயர் பதவிகளில் இருந்து கொண்டு அரச பணத்தைச் சூறையாடிய படித்த கௌரவ திருடர்களையும், ஒரு விடுதலை இயக்கதின் பெயரைச் சொல்லி ஊரைக் கொள்ளை அடிக்க நினைத்த போலி நபர்களையும் கண்டு அவர்களோடு மல்லுக்கட்டி நின்று நியாயத்தை கேட்டவன் நான்.
நேருக்கு நேர்  எதையும் எவருடனும் கேட்டுவிடுகிற ஒரு தைரியும் இயல்பாகவே என்னிடம் இன்றும் இருக்கிறது. இது எனக்கான ஒரு தனித்துவம். என் தனித்துவத்தை மறைத்து செயற்கையாக நடந்துகொள்ள என்னால் முடியாததான்.
இவை எல்லாம் என் கதைகள், கவிதைகள், கட்டுரைகளில் கொண்டு வந்திருக்கிறேன்.

08. கலாசாரம் பண்பாடு கட்டுப்பாடுகள் என்பன இன்றைய நவீன நாகரிக காலகட்டத்தில் ஒரு பிற்போக்கான சிந்தனையாகஇளந்தலைமுறையினரால் நோக்கப்படுகின்றதுஇதுபற்றி உங்களின் பார்வையில்?


            இளந்தலைமுறையினை மட்டும் குற்றம் சாட்டி விட்டு மற்றவர்கள் தப்பித்து விட முடியாது.
 கலாசாரம், பண்பாடு, கட்டுப்பாடு இவை எல்லாம் ஒரு சமூகத்தின் எல்லா நபர்களுக்கும் உரித்தானவையே.
அவர் அவர்கள் அது அதனை சரியாகவும், நேர்த்தியாகவும் செய்தால் யாரும் யாரையும் குறை சொல்ல முடியாதுதானே!
      எவரும் தான் சரியாகவும், நேர்த்தியாகவும் நடந்து கொள்வதாக நினைக்கின்றார்களே தவிர தாங்கள் அப்பிடி வாழ்ந்து விட நினைக்கவில்லை. அதனால்தான் மற்றவர்களில் குறை இருப்பதாகக் கண்டு பிடிக்கிறார்கள்.

09. இந்தத் துறையில் தங்களது எதிர்கால திட்டம் அல்லது சாதிக்க நினைக்கும் விடயம் தொடர்பாக எவ்வாறான நோக்கங்களைகொண்டுள்ளீர்கள்?


             இரண்டு நாவல்கள் எழுதி வருகிறேன். அதில் ஒரு நாவலில் புதுவடிவம் ஒன்றினைக் கொண்டுவர நினைக்கிறேன். அது வெளி வந்த பிறகுதான் தெரியும், அந்த வடிவம் சரியானதா? இல்லை தேவையான ஒன்றுதான? என்பதை!
      மற்றது குறும்படங்கள் எடுக்கின்ற நீண்ட கால எனது விருப்பு மிக விரைவில் நிறைவேற இருப்பதை நினைத்தும் மகிவும் சந்தோசமாக இருக்கிறேன். குறும்பம் ஒன்றிற்காக நான் சொன்ன கதை கேட்டு, அப்படத்தை தயாரிக்க பலர் முன் வந்திருக்கிறார்கள்.
இலங்கையில் குறும்படங்களில் வருகை விரைவு பெற்றிருக்கின்றன. திறமையான பலர் இங்கே இருக்கிறார்கள். இது இப்படியே போகுமானால் உலகத்தரமான பிரமாண்டமான திரைப்படங்களையும் உருவாக்கலாம்.
யாழ்ப்பாணத்தில் இருந்து மிக விரைவில் வெளிவர இருக்கிற முழு நீளப்படம் ஒன்றில் எனது பங்கும் ஒரு முக்கியம் பெறுகிறது என்பதை மட்டுமே என்னால் இப்ப சொல்ல முடியும்.

10. வளரும் எழுத்தாளர்களுக்கு படிப்பினையாக தாங்கள் சொல்ல நினைக்கும் விடயங்கள்?


            நானும் வளர்ந்து வரும் ஒரு எழுத்தாளன்தான். நான் இன்னும் நிறைய விடயங்களைக் கற்கவேண்டி இருக்கின்றது. கற்றும் வருகிறேன். ஆனாலும், எனக்குக் கிடைத்த அனுபவங்கள் என்பது யாருக்குமே கிடைக்காத ஒன்றுதான். எனது தேடுதல்களுக்கு அவையும் பாரிய மாறுதல்களை உண்டு பண்ணுகின்றன.
                தங்கள் படைப்புகளை மட்டும் படித்து விட்டு இருந்து விடாமல், மற்றவர்களின் ஆக்கங்களையும் படிக்க முன்வர வேண்டும். அவ் ஆக்கங்களை எழுதியவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களாக இருந்தால், அவை பற்றிய விமர்சங்களை வெளிப்படையாகவே உரியவர்களோடு கலந்து ஆலோசியுங்கள். எதையும் பகட்டாகக் கதைக்காமல், வஞ்சகமாகப் பழகாமல் உண்மையாகப் பேசிப் பழகினால் நல்ல நட்புகளை யாரும் பெறலாம்.



 நேர்காணல் 
த.எலிசபெத்

Wednesday, February 20, 2013

இசையமைப்பாளர் டிரோன் பர்னான்டோ ( துருவம் )

http://www.thuruvam.com/2013/02/diron.html





இலங்கையின் முன்னனி இசைக்கலைஞராக வலம்வரும் டிரோன் பெர்னாண்டோ கீபோர்ட் வாத்தியக் கலைஞராக அறிமுகமாகி தனக்கென்று இசைத்துறையில் ஆழமான ஓர் இடத்தினை செதுக்கிக்கொண்டிருக்கும் ஓர் துடிப்புள்ள கலைஞர். சினிமா சாராத இசைப்பயணத்தில் தன்னை தனித்துவமாக அடையாளப்படுத்த துடிக்கும் இவர்  இசையமைப்பாளர், சவுன்ட் எஞ்சினியர், பாடலாசிரியர், பாடகர், வாத்தியக் கலைஞர், மொழிபெயர்ப்பாளர், குரல்பதிவுக் கலைஞர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என பல திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ளார். காலமாற்றத்துக்கும் ரசனை மாற்றத்துக்கும் ஏற்ப இலங்கையிலும் புரட்சிகளை செய்துகொண்டிருக்கும் டிரோனை துருவ நட்சத்திரம் பகுதிக்காக சந்தித்தபோது அவர் எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்கள் துருவம் வாசகர்களுக்காக...



கேள்வி: உங்களின் இசைப் பயணத்தின் ஆரம்பம் பற்றிக் கூறுங்கள்?


பதில்: பள்ளி நாட்களிலேயே ஆரம்பித்துவிட்ட இசைப்பயணம் உயர்தரப் பரீட்சையின் பின்னர் தொழில் ரீதியான பயணமானது. கீபோர்ட் வாத்தியக் கலைஞனாக இசைக்குழுக்களில் வாசிக்க ஆரம்பித்த நான் படிப்படியாக இசைத் தொழில்நுட்பம் மற்றும் தேவையான அளவு இசையையும் கற்றுக்கொண்ட பின்னர் படிப்படியாக இசை அமைத்தலில்  ஈடுபடத் தொடங்கினேன். இந்தப் பயணத்துக்கு இவ்வருடத்துடன் 15 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 


கேள்வி: நவீன இசையுலகில் பல புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுவரும் இச்சூழலில் உங்களது முயற்சிகளில் எவ்வகையான புதிய மாற்றங்களை புகுத்திக் கொண்டிருக்கின்றீர்கள்?


பதில்: புதிய மாற்றங்கள் என்பதை நான், ரசனையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் இசைத் தொழில்நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்கள் என இரு பிரிவுகளாகப் பார்க்கின்றேன். ரசனை மாற்றம் காலத்தின் கட்டாயம். வர்த்தக ரீதியான இசையில் ஈடுபடும் எம் போன்றவர்கள் அந்த ரசனை மாற்றத்தை அவதானித்து அதற்கு ஈடுகொடுத்து எமது படைப்புக்களை உருவாக்கும் கட்டாயத்தில் இருகின்றோம். அதேவேளை ரசனை மாற்றம் என்கிற பெயரில் வெளிவரும் குப்பைகளுக்குள் சிக்காவண்ண‌மும் எம் படைப்புக்களை பாதுகாப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கிறேன். 

தொழிநுட்ப ரீதியிலான மாற்றங்கள் தினம்தினம் அரங்கேறுகின்றன. அவற்றை கற்றறிந்து நான் உருவாக்கும் படைப்புகளில் அவற்றை முடிந்தவரை உபயோகித்து வருகிறேன். என்னுடைய ஆரம்பகால படைப்புகளினதும் அண்மைய படைப்புகளினதும் ஒலி துல்லியத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் அதில் ஒரு முன்னேற்றம் தென்படுவதை நிச்சயமாக உணரலாம். அதற்கு மிக முக்கிய காரணம் அண்மைகால தொழில்நுட்பங்களை உடனுக்குடன் உள்வாங்கி என் படைப்புகளில் வெளிப்படுத்துவதேயாகும்

கேள்வி: இன்று பல புதிய இசைக்கலைஞர்கள் உருவாகிக்கொண்டு வருகின்றார்கள். இசைத்துறையில் அவர்களின் வேகமும் தாக்கமும் எவ்வாறு காணப்படுகிறது?


பதில்: நான் இசைத்துறைக்குள் காலடி எடுத்து வைக்கையில் குறிப்பிட்டு சொல்லத்தக்க ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்களே ஈடுபட்டிருந்தனர். ஆனால், இன்று நிலைமை மாறி தொழில்நுட்பத்தில் இளையவர்களுக்குள்ள ஈடுபாடு மற்றும் இலகுவாக பாடலொன்றை உருவாக்கிக்கொள்ள தற்போதுள்ள வசதிகள் என்பவற்றால் ஏராளமானவர்கள் இத்துறைக்குள் காலடி எடுத்து வைக்கின்றனர்.

ஆயினும் நான் சந்திக்கும் பெரும்பாலான இளைஞர்கள் இசையை கற்பதை விட இசையை விற்பதில் மும்முரமாக இருப்பது கொஞ்சம் கவலைக்குரிய விடயம். சில கட்டுக்கோப்புகளுக்குள் கனணி மூலம் கிடைக்கும் சில வசதிகளினால் ஒரு குறுகிய  வட்டத்துக்குள்ளேயே தம் இசையமைப்பை செய்யும் இளையவர்கள் அடுத்த கட்டம்  நோக்கி நகர்வதில் மிக ஆறுதலாகவும்  கவனக்குறைவாகவும் இருப்பது ஏமாற்றத்தைத் தரும் விடயமாக இருக்கிறது.

தொழில்நுட்பம் என்பது எமது இசையறிவை ஒரு படைப்பாக மாற்ற உதவும் ஊடகமே அன்றி இல்லாமையில் இருந்து இசையை உருவாக்கத்தக்க அமுதசுரபி அல்ல என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். 


கேள்வி: அதிகமான கிறிஸ்தவப் பாடல்களை இசையமைத்து பாடியுள்ள உங்களது மற்றுமொரு படைப்பான "Dimensions" என்ற இசைத்தொகுப்பு பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. அதுபற்றிய உங்களது அனுபவ‌ங்கள்...?


பதில்: "Dimensions" என்பது முற்றுமுழுதாக எனது தயாரிப்பில் வெளியான எனது இசைத்தொகுப்பு. இலங்கை மற்றும் இந்தியக் கலைஞர்களின் பங்களிப்போடு உருவான இத்தொகுப்பு. இது எனக்கு ஒரு அடையாளமாக இன்று வரை இருந்து வருவதில் பூரண திருப்தி. சினிமா சாராத எம் போன்ற சுயாதீனமான கலைஞ‌ர்களுக்கு இதுபோன்ற இசைத்தொகுப்புகளே அடையாளங்கள் என்ற வரையில் "Dimensions" இசைத்தொகுப்பு என் இசை வாழ்கையின் மிக முக்கியமானதொரு வெளியீடாகும். 


கேள்வி: இந்தியக் கலைஞர்களோடு இணைந்து பணியாற்றிய அனுபவங்கள் பற்றி கூறுங்கள்?

பதில்: எனது சொந்த தயாரிப்புக்களுக்காக அடிக்கடி நான் இந்தியக் கலைஞ‌கர்களுடன் கடமையாற்றியிருக்கின்றேன். என் வியாபார‌ தேவைகளுக்காக அவர்கள் என் இசையில் பாடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் இலங்கை இந்தியக் கலைஞர்கள் என்ற பாகுபாடு என்னிடம் இல்லை. என் படைப்புக்கு தேவையான கலைஞ‌ர்கள் எவராக இருப்பினும் எந்த நாட்டவராக எந்த மொழி பேசுபவராக இருப்பினும் அது ஒரு பொருட்டல்ல. ஆயினும் நம் எலோருக்கும் தெரிந்த 'இக்கரைக்கு அக்கரை பச்சை' என்கிற மனப்பான்மையுடன் இயங்கும் எம்மவர்களிடையே எமது இசையை வியாபாரம் செய்ய இந்தியக் கலைஞ‌ர்களை அடிக்கடி நாடவேண்டியிருக்கிறது. 

இலங்கை கலைஞ‌ர்களைப் போலல்லாது அங்கே ஏறக்குறைய அனைத்து கலைஞ‌ர்களும் முழுநேரமாக இசைக்குள் மூழ்கியிருப்பதால் அனுபவமும் பாண்டித்தியமும் அவர்களிடையே சற்று தூக்கலாக இருப்பதொன்றும் ஆச்சரியமல்ல. தொழில்நுட்பம் சம்பந்தமான பல முக்கிய விடயங்களை அங்கு பணியாற்றும் போது கற்றுக்கொள்ள கிடைப்பதும் ஒரு குறிப்பிடத்தக்க விடயம். 


கேள்வி: துடிப்பும் தேடலுமுள்ள படைப்பாளியான உங்களுக்குள் இசை மட்டுமல்லாது இன்னும் பல திறமைகள் இருப்பதாக அறிந்தோம். அதுபற்றியும் கூறுங்களேன்?

பதில்: அடிப்படையில் இசைக்கலைஞ‌னாக என்னை நான் இனம்காட்டினாலும் ஊடகம் சம்பந்தமான பல துறைகளில் என் பங்களிப்பு இருக்கிறது. பத்திரிகைத்துறை, விளம்பரத்துறை, பின்னணிக் குரல்கொடுத்தல் என பல துறைகளில்  பங்களிப்புச் செலுத்தி வருகிறேன். 


கேள்வி: சகோதர மொழி படைப்புகளுக்கு கிடைக்கும் வாய்ப்பும் வரவேற்பும் ரசனையும் போல எமது படைப்புக்களுக்கு எம்மவர்களிடையே வரவேற்பு போதியளவில் இல்லை. இதற்கு காரணம் என்ன? இவ்விடயத்தில் ஊடகத்தின் பங்கு எவ்வாறு காணப்படுகின்றது?

பதில்: சகோதர மொழி இசைக்கான பிறப்பிடம் எங்கள் நாடு மட்டுமே. 99% வீதமான சிங்கள மொழிப்பாடல்கள் இலங்கையிலேயே உருவாகின்றன. வேறு எந்தத் தெரிவுகளும் அவர்களுக்கு இல்லை மற்றும் அவசியமும் இல்லை. சிங்கள மொழி பேசும் ஊடங்களுக்கும் அப்பாடல்கள் மட்டுமே பிரதானமானது. எனவே அவர்களின் பூரண பங்களிப்பு இருப்பதில் எந்தவித ஆச்சரியங்களும் இல்லை.

ஆனால் தமிழ் என்று பார்க்கும்போது, இந்தியத் திரையிசைப் பாடல்களுடன் சிக்கிக்கொண்டு எம் படைப்புகள் முட்டி மோதிக்கொண்டிருப்பது மிகப்பெரிய சவால். ஊடகங்கள் தங்களால் முடிந்தளவுக்கு பங்களிப்பு வழங்கி வந்தபோதும் எம் இசை ரசிகர்களின் மனப்பான்மையில் மாற்றங்கள் வரவேண்டும் என்பதே மிக முக்கியமான விடயம். 


கேள்வி: இந்திய இசையுடன் ஒப்பீட்டு ரீதியாக பார்க்கும்போது இலங்கையின் இசைத்துறையானது இன்னும் பல தூரம் பயணிக்கவேண்டியுள்ளதா?

பதில்: தென்னிந்திய சினிமா பாடல்களுக்கு கொட்டிகொடுக்கப்படும் நிதி மற்றும் அதிநவீன வசதிகள் என்பன இன்னும் எங்களிடம் இல்லை. இருப்பினும் முடிந்தளவுக்கு ஒலித்தரத்தை அவர்களுக்கு நிகராக கொண்டுவருவதில் எமது கலைஞர்கள் கணிசமானளவு வெற்றி கண்டுள்ளார்கள். தென்னிந்தியாவுடன் ஒப்பிடுகையில் சிறந்த பாடகர்கள் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், தொழிநுட்பவியலாளர்கள் இங்கும் இருக்கின்றனர். இவர்கள் சரியாக இனங்காணப்பட்டு, அடையாளப்படுத்தப்படாமைதான் இலங்கை தமிழ் இசைத்துறையின் வீழ்ச்சிக்கு காரணமாகும். 



கேள்வி: வளர்ந்துவரும் படைப்பாளிகள், கலைஞர்களுக்கு நீங்கள் வழங்கிவருகின்ற பயிற்சிகள், பங்களிப்புக்களை பற்றி...? 

பதில்: திறமையான இளையவர்களுக்கு என்னால் முடிந்தளவு பங்களிப்பை செய்து வருகிறேன். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியான பயிற்சிகள், ஊடகங்களில் அறிமுகம் செய்தல் போன்று பல விடயங்களை செய்து வருவதோடு இசைக் கலைஞர்களுக்கான ஒன்றியம் ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் நானும் சக கலைஞர்கள் சிலரும் தற்போது ஈடுபட்டு வருகின்றோம்.


கேள்வி: உங்களுடைய 'ஸ்ருதி' இணைய வானொலி பற்றிக் கூறுங்களேன்?

பதில்: இணைய வானொலிகள் எண்ணற்றவை இருந்த போதும், அவையும் சினிமா பாடல்களை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வருகின்றன‌. சினிமா சாராத சுயாதீனமான படைப்புகளுக்காக இந்த இணைய வானொலி உருவாக்கப்பட்டு தற்போது இயங்கி வருகின்றது.

சுயாதீனமான படைப்புகள் எனும்போது, இசை மட்டுமின்றி இலக்கியம் நாடகம் போன்ற‌ பல்வேறு வகையிலான படைப்புக்களும் இதில் அடங்குகின்றன. இது எப்படி இயங்கப் போகின்றது இவ்வானொலிக்கும் கலைஞர்க‌ளுக்கும் ரசிகர்களுக்குமிடயிலான நவீனமுறை தொடர்பாடல் முறைகள் மற்றும் படைப்புகளுக்கான விற்பனை உத்திகள் போன்றவை பற்றி வெகுவிரைவில் அறியத்தரவிருக்கின்றோம்.

கேள்வி: இறுதியாக, நீங்கள் சாதிக்க நினைக்கும் துறை எது? எவ்வகையான இலக்குடன் சாதிக்க நினைக்கின்றீர்கள்? இன்று வரையான சாதனைகளின் வெற்றிகள், விருதுகள் பற்றியும் கூறுங்கள்?

பதில்: இசைத்துறையிலே அதிகமான பங்களிப்பு இருப்பதால் சாதிக்க விரும்பும் துறையும் அதுவாகவே இருக்கிறது. என் படைப்பு அடங்கலாக சுயாதீனமான கலைஞர்களின் படைப்புகள் சினிமா என்னும் மாயையை தாண்டி தனித்துவமாக இயங்க வேண்டுமென்ற நோக்கில் நான் ஆரம்பித்திருக்கும் பல்துறை முயற்சிகளில் வெற்றியடைவதே இப்போதைய எனது இலக்கு. இந்த இலக்கை அடைவதன் மூலமாக எனது மற்றும் என் சக கலைஞர்களின் படைப்புகள் இலகுவில் மக்கள் மத்தியில் சென்று வெற்றி பெரும். 

சாதனைகள் என்று ஒரு பட்டியலிட இன்னும் நான் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. என் பாடலுக்குக் கிடைக்கும் விமர்சனங்கள் வரவேற்புக்களை வெற்றிகளாக கருதுகிறேன். எதிர்மறை விமர்சனங்களிலும் கூட சில வெற்றிகள் அடங்கியிருப்பதை நான் உணர்ந்திருக்கின்றேன். இலங்கையை பொறுத்தவரையில் தேடிவரும் விருதுகளை விட நாமாக தேடி போய் பெற்றுக்கொள்ளும் விருதுகளும் பட்டங்களும் பொன்னாடைகளுமே அதிகமாக இருப்பதால் விருதுகள் தான் ஒரு கலைஞ‌னுக்கு அங்கீகாரம் என்பதில் எனக்கு எப்பொழுதுமே உடன்பாடில்லை.

"உங்க பாட்டு கேட்டேன் ரொம்ப நல்ல இருந்துச்சு" என்று கிடைக்கும் பாராட்டுகளே மனதில் சுமக்கத்தக்க உண்மையான விருதுகள். அப்படியான விருதுகள் அடிக்கடி கிடைப்பதில் திருப்தி.


(நேர்காணல்: ராஜ் சுகா)

Sunday, February 17, 2013

சின்னஞ்சிறு விதைகள்






நந்தவனத்தில்
பனித்துளி யலங்காரத்தோடு பூத்த‌
சின்னஞ்சிறு மலர்கள் நாங்கள்...

பாடிக்களித்து
பள்ளிசென்று  பாரினில்
புதுமைகள் படைக்கப்பிறந்த‌
சாதனை சிங்கங்கள் நாங்கள்...

நாளைய விடியலின் உதயமாய்
சரித்திர பக்கங்களின்  சாதனைகளாய்
சுள்ளென்ற விடியலுக்கான‌
ஆலமர விதைகளாய் முளைத்த‌
வானக்குடை நாங்கள்...

எங்கள் சிறகுகளை முறித்திடாதீர்
எங்கள் பாதைகளை அடைத்திடாதீர்
எங்கள் வேர்களை கிள்ளிவிடாதீர்
எங்கள் சுவாசங்களை தடுத்திடாதீர்...

வறுமையென்ற பள்ளத்தைகாட்டி
பயப்படுகிறதெங்கள் பாலரிதயம்
சமுதாய சட்டத்துள்
சமரச அந்தஸ்தில்லா பணமெங்கள்
பாதையை முடக்கிவிடுவதேன்?

ஏழையென்ற ஏற்றத்தாழ்வுகள் -எம்
ஏக்கங்களை உதைத்து தள்ளுவதேன்
இன்றைய தலைவர்களே த‌ரணியின்
நாளைய தலைவர்களுக்கு
வழி விடுங்கள்
மூத்த குடிகளே இன்றெங்கள்
கிளைகளை பரப்பவிடுங்கள்
புதுயுகம் காண புதுவழிகாட்டுங்கள்!!

குட்டிக் கவிதைகள்




01.வந்தாரை வாழவைப்பது
வளம் கொழிக்குந் திருநாடு
நொந்தோரை தேற்றியணைப்பது
குணங் கொண்டிடும் நம்வீடு!!

02.அடுத்தவரின் வேருண்டு வாழ்வாருமுண்டு
அன்பினில் வேருண்டு வாழ்வாருமுண்டு
மற்றாரில் வேருண்டு வாழ்வாருமுண்டு
மறைவினில் வேருண்டு வாழ்வாருமுண்டு...

03.நடையுடை பாவனை மட்டுமல்ல‌
பேசும் வார்த்தையிலும்
நாகரிகம் நளினமடையட்டும்
கேட்கும் செவிகளுக்கு
தேனாக இல்லாவிட்டாலும்
தேவையான தாகவேனு மிருந்திடட்டும்!!

04.உற‌வுக‌ளை
வ‌ர‌வுக்குள் சேருங்க‌ள்
ப‌கைத‌னை
த‌ர‌வினின்று மீறுங்க‌ள்!!

05.மகா ல‌க்ஷ்மிக‌ளே
ம‌ரும‌க‌ளாக‌ வேண்டுமென்றால்
கோயில் குருக்க‌ளின் கைக‌ளே
உண்டிய‌லை துடைக்க‌லாம்!!

06.நல்லெண்ண‌முய‌ர‌ அன்புய‌ரும்
அன்புய‌ர‌ உற‌வுக‌ளுய‌ரும்
உற‌வுய‌ர‌ ச‌ம‌த்துவ‌முய‌ரும்
ச‌ம‌த்துவ‌முய‌ர‌ ச‌மாதான‌முய‌ரும்
ச‌மாதான‌முய‌ர‌ ம‌னித‌முய‌ரும்
ம‌னித‌முய‌ர‌ ம‌ண்ணிலே
ந‌ன்மைக‌ளே யுய‌ரும்
தீமைக‌ளெ லாமுதிரும்!!

07.இருதிவரை என்
இதயமிப்ப டியேயிருந்து
இறந்துவிடும்
இறவாத உன் நினைவுகளுடன்!!

08.காதல் காதல் காதல்
காதலில்லையேல் சாதலல்ல‌
சாதித்தல் சாதித்தலே
பாதித்தலில் பயனுமுண்டென்பதை
பரிசோதித்தலே...

09.என்னுடையதாக இருந்தும்
 என்னைபற்றி இல்லாமல்
உன்னையே நினைக்கு தெனுள்ளம் இது
ந‌ம்பிக்கை துரோக‌மா
காதலி ன‌கோர‌மா...

தேர்(தல்)காலம்!!


பூமி துடிக்கின்ற வானவெடிகள்
பூத்து நிற்குது கோஷக்கொடிகள்
சாமி போல வரங்களை வழங்கிட‌
சந்திக்குச்சந்தி மேடைக்கோயில்கள்
இங்கு தேர்(தல்)காலம்!!

பிடிக்கும்

காதுக்குள் கிசுகிசுக்குமுன் 
கானங்கள் பிடிக்கும்
சாதலுக்கு எனைதூண்டும்
கோபங்கள் மிகப்பிடிக்கும்!!



கடுஞ்சொற்களெனை காயப்படுத்தவில்லை
சுடும்பார்வையதும் கலங்கச்செய்யவில்லை -எங்கேனும்
நெஞ்சிலெட்டியுதைக்குங் குழந்தையை
நஞ்சூட்டிக்கொன்ற தாயுண்டா???


நீ அறிமுகப்படுத்திய நான்


முதல் தொடுகை
முழுமையான ஸ்பரிசங்கள்
தேகம் சிலிர்க்கும் புலர்வுகள்
தேனாய்ச் சுரக்கும் உணர்வுகள்

அறிவையிழக்கும் ஆனந்தப்பொழுதுகள்
ஆறாய்ப்பெருகும் களிப்புக்கள்
அத்தனையும் எனக்கு 
அறிமுகம் செய்தவன் நீ..


என‌து உலகை முதன்முதல்
சிருஷ்டித்த்வன் நீ
வெட்கத்தின் எல்லைகளை
வெட்ட வெளியாய் காட்டியவன் நீ

சமைந்த என் பெண்மையை
சங்கீதம் பாட வைத்தவன் நீ
தானாய்ப்பேசி தனியாய் சிரிக்க‌
திசை காட்டியவன் நீ

புள்ளி மானாய் ஓடிய என்னை
ஸ்தம்பிக்கச் செய்தவன் நீ
தென்றலின் ஸ்பரிசங்கள்
தீயின் வேட்கைகள்
புயலின் மோதல்கள் என்று
இன்பங்களை இனங்காட்டியவன் நீ


இத்தனையும் இயல்பாய் காட்டிய 
நீயாஇன்றெந்தன் 
கல்லறை வாசலுக்கு
வழிகாட்டியாச் செல்லுகின்றாய்???


பிர‌ஸ்தாப‌ங்கொண்டேன்...


ஆத்திர‌ப்ப‌டும் போதும்
ஆத‌ங்க‌ப்ப‌டும் போதும் என்னால்
அழ‌த்தான் முடிந்த‌து
ஆள‌த்தெரிய‌வில்லை -என்னை
பேனா உண‌ர்ந்துகொண்ட‌து போலும்...

அழுகை எழுகையாக‌ வேண்டுமெனில்
அழுகை ஆளுகையாக‌ வேண்டுமெனில்
எழுத்தாணியால் ச‌ல‌வை செய்ய‌வேண்டும்...

சிலுவையில‌றைய‌வும்
சிந்த‌னைக‌ள் கிள‌ர்ந்தெழ‌வும்
ச‌த்துவ‌க்க‌ர‌மொன்றை ச‌ம்ர்ப்பித்த‌து...

பேனைக்குள் ஒளிந்திருந்த‌
த‌ன்ன‌ம்பிக்கைத‌னை க‌ண்டுகொண்டேன்...

ச‌வுக்கெடுக்க‌வும்
சாம‌ர‌ம் வீச‌வும் க‌ற்றுக்கொண்டேன்...

ச‌வுக்க‌டியால் சாதிக்காவிட்டாலும்
பிர‌ம்ப‌டியாய் உண‌ர‌வைத்திடத்தான்
பிர‌ஸ்தாப‌ங்கொண்டேன்...




Saturday, February 16, 2013

நானிருந்தால்


&&&&&&&&&&&&&               &&&&&&&&&&&&&



ஆடைமுதல் ஆகாரம்வரை
அத்தனையிலுமுன் நினைவுகள்
பாதைமுதல் பயணங்கள்வரை
பளிச்சென்ற நம் தடயங்கள்
இத்துன்பங்கள் மறைய எனக்கு
இன்னொரு ஜென்மம் வேண்டும்
இறவாமல் நானிருந்தால்...!!

பனித்துளிகள்



உண்ணாமல் 
உறங்கா முடியாமல்
உன்நினைவில் இயலாமல்
நான்பட்ட துன்பங்கள் 
நாளானால் மறைந்திடுமோ
நான் மரித்தாலும் மணந்திடுமே!!


ஆசை முகம்




எத்தனை மலர்களின் மணங்கள்
எனை கடந்துபோயிருந்தன‌
என்னை சுவாசிக்கச்செய்தது
உந்தன் நினைவுகள் மட்டுந்தான்

இன்றுவரை இதயத்தை
இயங்கச்செய்வதும் அந்த‌
இறவாத இளஞ்சுவாலைதான்

தென்றலாய் நம் நாட்கள்
குளிர்ச்சி தந்திருந்தாலும்
சூறாவளியாய் இதயங்களை
சுழற்றிவீசிய கொடுமைகள்
இன்னும் ரணமாகவே

ஆயிரமாயிரம் அர்த்தங்களை
அழகாக்கிக்காட்டினும் -கண்களுக்குள்
எனதாசை முகமாய்
நிறைந்திருப்பது நீமட்டுந்தான்

காலங்கொன்ற காதலாய் -அது
கண்ணீர் வடிப்பினும் 
காயாத ஈரமாகவே கவிபாடிடும் 
காலகாலமாய்

நீங்கிச்சென்ற நிலவாக‌
நீ தூரமே இருந்தாலும்
நீள் நித்திரையென் மரணத்திலும்
நிம்மதிதரும் பூமுகம் -நீ
நீமட்டுந்தான்!!


 (14.02.2013  வழங்கப்பட்ட தலைப்புக்கு லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான கவிதை)