Friday, January 31, 2014

வெறுமை

வெறுமையின் பக்கங்களை -உன்
நினைவுகள் நிரப்பிவிட்டாலும்
தொடரும் வெறுமையிடம் -என்
பொறுமை தோற்றுவிடுகின்றது!!



Wednesday, January 29, 2014

கண்ணாடி...

அட எத்தனை அழகு
பார்த்த ஒருகணம் நானே
அசந்துவிட்டேன் என்றால் பாருங்களேன்
எதிரே நிலைக்குத்து கண்ணாடி!!

(சரி சரி புரியுது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு என்னபண்ண யாரும் சொல்லாட்டி நாங்களாத்தான் சொல்லிக்கணும்)



வலியின்றிய ஓர்பாதை

விழிதேடும் தூரத்தில் நீயில்லை -நமக்கு
வலியின்றிய ஓர்பாதை நியமிக்கவில்லை!!



Monday, January 27, 2014

வென்றுவிடுகின்றேன்

வேதனைகளிடம் நான்
வென்றுவிடுகின்றேன்
இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமென -என்
நண்பர்கள் கேட்கும்போது...



நாள்தோறும்

ஒருவேளை என்
இதயமுனக்கு பழையதாக
இருக்கலா மானால்
அன்புமட்டும் நாள்தோறும்
புதிதாகின்றதே
அதனாலோ என்னவோ
உன் திருமணமும்
என் திருமணமும்
வேறு வேறா(ரா)னது!!


ஏழைகளின் வாழ்க்கை?

வறுமையின்
விளையாட்டு மைதானமோ
ஏழைகளின் வாழ்க்கை?



Sunday, January 26, 2014

ஊடறு இணைய இதழில் வெளியானது (19.01.2014)


http://www.oodaru.com/?p=6880

வாழவேண்டும் நம்
வாழ்க்கையை நாமே
வாழ்ந்துவிடவேண்டும்
வலிகளும் வதைகளும்
வழிநெடுகில் வரட்டும்
புலிகளும் கரடியும்
புயலென பாயட்டும்
முன்வைத்த பாதம்
முன்னோக்கியே நகரட்டும்
பின்னிட்டு ஓடுவது நம்
பிழைகளும் தவறுகளுமாகட்டும்
இன்னுங்கொஞ்சம் கடந்தால்
இளமையுமோடிவிடும்
கண்ணுக்குள் வைரம்கொண்டால்
கனவுகளும் கரங்களுக்குள்ளாகும்
வாழவேண்டும்  உயிர்
வானம்தாண்டி போயிடுமுன்
வாழவேண்டும் வாலிபம்
உடலைவிட்டு ஓய்ந்திடுமுன்…

தமிழ் ஆதர்ஸ் இல் (26.01.2014)


http://tamilauthors.com/04/230.html

இடம் பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய்' கவிதை தொகுப்புக்கான ரசனைக்குறிப்பு

தமிழிலக்கிய உலகில், தளராமல் நடைபோற்றுக்கொண்டிருக்கும் பாதங்களோடு இன்னுமிரு கால்கள் சேர்ந்துகொள்கின்றது. வள்ளுவர்புரம் முல்லைத்தீவிலிருந்தே இப்பயணம் புறப்பட்டுள்ளது. இலங்கையில் அதிகமான வாசகர்கள், எழுத்தாளர்களால் அறியப்பட்ட இளம் எழுத்தாளர் யோ.புரட்சி அவர்களுடையதே அக்கவிப்பாதங்கள். பெயருக்கேற்றாற்போலவே அவரது படைப்புக்களும் புரட்சியினை செய்வதற்காய் புறப்பட்டுள்ளது என்பதனை இந்நூலை வாசித்து முடித்த அனைவரும் சொல்லிடுவார்கள் என்பது நிச்சயம்.


ஐம்பது கவிதைகளுடன் அடக்கமான இக்கவிதை நூல் யதார்த்தமான போலியில்லாத முக அட்டையை பெயருக்கு ஏற்றாற்போல தாங்கிவந்திருப்பதும் பின்னட்டையில் நூலாசிரியரின் படமும் அற்புதமாக அமைந்திருக்கின்றது. இதுபோல இன்னும் பலபுதுமையான வித்தியாசமான விடயங்கள் இந்நூலில் இடம்பெற்றிருப்பதை தெரிவித்தேயாகவேண்டும். நூலில் மட்டுமல்ல வெளியீட்டு நிகழ்வுகூட வேறுபட்ட முறைமையிலேயே இடம்பெற்றது அதாவது வழமையான மண்டபத்தினுள் சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல், மரத்தடி நிழலில் நூலின் முகப்புக்கும் தலைப்புக்குமேற்றாற்போலவே நிகழ்ந்துமுடிந்தது. ஆசிரியர் வித்தியாசத்தை விரும்புபவராகவும் தனித்துவத்தை நீரூபித்துக்காட்ட முனைபவராகவும் இத்தொகுப்பினூடாக அறிமுகமாகின்றார்.


ஆசியுரையை யோ.புரட்சி அவர்களின் தாயார் தன் கையெழுத்திலேயே வழங்கியிருப்பது நூலின் கனதியை அதிகப்படுத்தியுள்ளதோடு அணிந்துரையை வழங்கியுள்ள இந்திய எழுத்தாளரான அறிவுமதி அவர்களின் கையெழுத்தோடு பதிவாகியிருப்பது சிறப்புபெறுகின்றது. அதுபோல அந்தனி ஜீவா ஐயா அவர்கள் கவியையும் ஆசிரியரையும் வியந்து வாழ்த்திய வாழ்த்தும் இடம்பெற்றிருக்கின்றது.


மலையக வெளியீட்டகத்தால் 30.05.2013 அன்று வள்ளுவர்புரத்தில் வெளியிடப்பட்ட 'இடம்பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய்' நூலில், முதலாவது தலைப்பாக 'விளக்குமாறு' என்ற கவிதை வரவேற்கின்றது. ஒதுக்கிவைக்கும் விளக்குமாற்றினால் முதற்கவிதையினை அழகுபடுத்தியிருப்பது ரசனை.

'தன்னையே அசுத்தமாக்கி
பிறர்மனையை அழகு ஆக்கிடும்
அற்புத மனசு அதற்கு'

என்று கவிஞருக்கே உரித்தான கல்லைக்கூட கதாநாயகனாக்கும் திறமை ஆங்காங்கே சில தலைப்புக்களில் மிளிர்ந்தாலும் பெறும்பாலான எல்லா கவிதைகளும் நிஜங்களையும் வலிகளையும் இயல்புமாறாமல் அப்படியே ஒப்பித்திருப்பது வாசிப்பு ரசனையை மெறுகேற்றுகின்றது அதுபோல‌, உங்களையும் என்னையும் ஒருகவிதையிலேனும் காண்டுகொள்ளக்கூடியதாய் அமைந்திருப்பதானது கவிஞர் சகலதளங்களிலும் நின்று உணர்ந்திருப்பதில் வெற்றிபெறுகின்றார்.

'குடையின் அழுகை' என்ற தலைப்பில் குடைபற்றி பேசுகின்ற கவிஞர், வெயில் மழைக்காலங்களில் அதனுழைப்பை கூறிபடி நாம் சிலநேரங்களில் முகஞ்சுழிக்கும் விடயத்தினையும் இப்படிக்கூறுகின்றார். உண்மையில் நாணக்கூடிய விடயமொன்று

'இப்போ
மாலைப்பொழுதுகளிலும்
வேலைசெய்கின்றோம்
காதல் லீலைசெய்யும்
காதலர்க்கு
மறைவிடமாக'

இதுபோன்று சமூகத்தில் காணுகின்ற பல்வேறுபட்ட செயற்பாடுகளையும் மனித உணர்வுகளையும் கவிஞர் தொட்டுக்காட்டியுள்ளார்.

நான் ஏலவே கூறியதுபோல ஏனைய நூல்களிலிருந்து இப்புத்தகம் வேறுபட்டிருப்பதற்கு உதாரணமாக இவற்றைக்கூறலாம், அதாவது தான் எந்தக்காலப்பகுதியில், எச்சந்தர்ப்பத்தில் கவிதைகளை எழுதினேன் என்றும் கவியை வியந்து விமர்சித்துள்ள வாசக எழுத்தாளர்களின் கருத்துக்களையும் கவிதை உருவான நிலையினையும் கவிதை வெளிவந்த ஊடகங்களின் பெயர்களையும் கூறியிருப்பது உண்மையில் வித்தியாசமான பாணியே. அதையும் விட முக்கியமாக சுட்டிக்காட்டவேண்டியது, 'நன்றி மறப்பது நன்ற‌ன்று' என்பதற்கிணங்க தன்னுடைய‌ கல்வி மற்றும் இலக்கிய தேவைகளில் உதவிய அனைத்து ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் பெயர் பெயராக நாமமிட்டு நன்றியினை பதிந்திருப்பதும் பாராட்டப்படவேண்டியது



கடந்த காலங்களில் தமிழர்களின் மனதில் வடுக்களாய் பதிந்த காயங்களின் பிரதியும் பல்வேறுவித பாதிப்புக்களையும் ஒவ்வொரு கவிதைகளிலும் தொட்டிருக்கின்றார் கவிஞர். இதனை 'சேருமா? சேராதா?' மரண வேலிக்குள் மாட்டிவிட்ட தோழிக்காய், ஏழ்மையின் வீடு, காணாமல் போனவன், உயிரற்ற உயிரின் உருகல், அன்னை ஒருத்தியின் அந்தநாள் தாலாட்டு, போன்ற தலைப்புக்களில் காணலாம். 'சேருமா சேராதா' என்ற கவிதையில், காணாமல்போன மகளின் ஏக்கமாக வெளிப்பட்டுள்ள‌து

"இருப்பாயா
இல்லாமல் இருப்பாயா
ஏதுமே தெரியாதபோதும்
இருக்கின்றாய் என்று
சொல்லுகின்றோம் வாழ்த்து
இறைவா எம்மக‌ளை
வைப்பாயா சேர்த்து... '

என ஒருதாயின் ஏக்கத்தை, கண்ணீர்ப்புலம்பலை வலிகள் சொட்ட வடித்திருப்பது மனதிற்குள் சோகமொன்று ஊடுருவுவதை தவிர்க்கமுடிவதில்லை. 'காணாமல் போனவன்' என்ற கவிதையும் காணாமல்போன மகனின் ஏக்கமாக வேதனையாகவே சொல்லப்பட்டிருப்பது ஒரேவிதமான உணர்வினையே ஏற்படுத்துகின்றது.



ஒரு படைப்பாளியை இணங்காண்பதும் அவனை படைப்பாளியாக வெளிக்கொணர்வதும் வாசகனுடைய கைகளிலில்லை அது ஊடகங்களினுடைய கைகளிலேயே இருக்கின்றது என்பதனை எவரும் மறுக்கமுடியாது. அந்தளவுக்கு சாதாரண ஒருமுயற்சியாளனை 'படைப்பாளி' என்ற அந்தஸ்தினை வழங்கக்கூடிய தகுதி ஊடகத்திடமே காணப்படுகின்றது அதனை இந்நூலில் தெளிவாக காணமுடிகின்றது எப்படியெனில், தனது ஒவ்வொரு கவிதையும் வெளிவந்த ஊடகத்தைனை குறிப்பிட்டதுபோல அதனை ஊக்கப்படுத்திய வரிகளை குறிப்பிட்டதுவே அதுவாகும்.

கலைஞர்களிடம் இருக்கவேண்டிய அடிப்படைத்தகைமைகளில் ஒன்றான பரந்துபட்ட சமூகப்பார்வை, சிந்தனை கவிஞர் யோ.புரட்சி அவர்களிடம் அதிகமாகவே காணப்படுகின்றது. 'கொழுந்துகூடை பேசுகின்றேன்' எனும் கவிதையில் கொழுந்துபறிக்கும் ஒரு பெண்தொழிலாளியை கதாநாயகியாக்கி கொழுந்துகூடை பேசுவதாய் புனைந்த வரிகளில் அவளின் அன்றாட பிரச்சனைகள் முதல் அழியாத வேதனைகள் என அத்தனையும் வெளிப்படுத்தி இவ்வாறு துன்ப‌ப்படுகின்றார் கவிஞர்.

"பித்தளை தோடுதானும்
சுமக்காத காது
எத்தனை சுமைதாங்குகிறாள்
இந்த மலைமாது"


காதல் பாடா கவிஞனுமில்லை கவியில் வரா காதலுமில்லை எனுமளவுக்கு கவியோடு காதலும் காதலோடு கவியும் பிணைக்கப்பட்டிருப்பதை இன்னுமெவரும் பிரித்தெறிந்திடவில்லை. கவிஞர் யோ.புரட்சியும் காதல் வரிகளை வனைந்திருக்கின்றார் ஆனாலும் அவை வெறும் பெண்ணழகை வர்ணிக்கும் உருகுதலாக இல்லாமல் நேசத்தை வெளிப்படுத்தும் நிஜங்களை பிரதிபலிக்கும், யதார்த்தத்தை மொழிபெயர்க்கும் விதமாக அமைந்திருப்பது ரசிக்கச்செய்கின்றது.

கைபேசி மட்டுமே எம்
காதல்கதை அறியும்..... என தொடர்ந்து

'யாரோ ஒருத்திக்கு
தாலி கொடுத்தாய் நீ
அன்னை காட்டியவனுக்கு
கழுத்து நீட்டினேன் நான்
இப்போது பேசுகின்றோம்
இந்த உறவுக்கு நாமிட்ட பெயர்
நட்பு'

என்று உண்மைபேசுகின்றார் கவிஞர். எத்தனையோ பேர்களுக்கு வாய்வரை வராத சேதி மனதோடு தம்மை கண்டுகொள்வதற்காய்.

இதேபோல பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் பெண்களின் உணர்வுகளை உணர்ந்து பேசுகின்றார். எந்த ஒரு பெண்ணும் உலகமே இழ‌ந்துபோனாலும் வாழ்க்கையாக ஏற்றுக்கொண்டவனை மட்டும் பங்குபோட்டுக்கொள்ளவோ இழக்கவோ எச்சந்தர்ப்பத்திலும் இணங்கமாட்டாள் அவன் ஒன்றுக்கும் உதவாதவனாக இருந்தாலும். அதனை வரிகளில் இப்படி அழகாக்குகின்றார்,

'உன்னிடம் தங்கத்தாலி
கேட்கவில்லை
கூந்தலுக்கிட‌
மல்லிகைப்பூ கேட்கவில்லை.... என்று

காதல்பாவம்
கன்னியிவள் செய்தேன்
கல்யாணபாவத்தையும்
தொடர்ந்துசெய்தேன்...

என கணவனின் துரோகத்தை தாளாத ஒருத்தியின் குரலாக ஒலிக்கின்றது. இதுபோன்ற காதல்கவிதைகளில் பெண்வாசகர்களின் ஆதரவை பெறுவது நிச்சயம் ஏனெனில் பெண்களின் ஆழ்மனது நினைப்புக்களை படித்திருப்பதேயாகும். 'கானல் மனைவி' என்ற கவிதையும் தாலிகட்டிய மனைவியிருந்தும் தவறான உறவை நாடிச்செல்லும் கணவனை நினைத்து வடிக்கும் கண்ணீராக, அவனது மனதில் இன்னொருத்தியின் நினைவு இருக்கிறதென்று தெரிந்தும்,

மனைவியாய் வேண்டாம் உன்
கண்ணீரைத்துடைக்கும்
கைக்குட்டையாய் தானும்
இவளை வைத்துக்கொள்வாயா'

என்று கேட்கும்போது கணவன்மீது கொண்டுள்ள அன்பும் தாலியின்மீது வைத்திருக்கும் மதிப்பும் திருமணச்சிறையின் இயலாமையையும் காணமுடிகின்றது. எத்தனையோ பெண்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை பலதலைப்புக்களில் பொதிந்துகிடக்கின்றது.
இத்தனையும் சொல்லும் கவிஞர் 'ஒரு சடலம் அழுகின்றது' எனும் தலைப்பில், உடலைப் பிரிந்த உயிரொன்று பேசுவதாய் வரிகள் சமைத்திருப்பதோ சற்று முரணானதும் சாதாரணமாக ஒரு பெண்ணால் இச்சந்தர்ப்பத்தில் நினைக்கக்கூடாததுமான ஒரு விடயமாக காணப்படுகின்றது.

"மனைவியின்
பாதிமனம் அழுகின்றது
இத்தனைநாள் வாழ்ந்து
இருபிள்ளை தந்தவர்
இவரல்லவா என்று
பாதிமனமோ சிரிக்கின்றது
அயல்வீட்டான் ஒருவனோடிருந்த‌
அந்தரங்கத்தொடர்புகளுக்கு
சுதந்திரம் கிடைத்தது என்று"

'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்' என வாழும் நம் பெண்ணினம் நினைக்கவிரும்பாத விடயமே இது. சிறிய வயதிலேயே கைம்பெண்ணாகி சமூகத்தோடு போராடி தன்னை பவித்திரமானவளாக பாதுகாக்கும் எத்தனையோ பெண்கள் நம்மத்தியிலிருக்க இக்கவி சற்று வேதனையளிக்கச்செய்கின்றது. இன்றைய கலியுகத்தில் அசாத்தியமாக செயற்படும் ஓரிருவர் இருக்கலாம் ஆனாலும் இக்கவி தமிழர்களாகிய எமக்கு மிகத்தூரமே.


தாய்மை போற்றும் கவிஞர், அவரின் தாயாரையே நாயகியாக்கி அவரின் புகைப்படத்துடன் பெயரையே தலைப்பாக்கி கவிபுனைந்த கவிஞரை பாராட்டாமல் இருக்கமுடிவதில்லை. எல்லா பிள்ளைகளும் தம் பெற்றோரை இப்படி நினைத்து மதித்தால் இவ்வுலகில் முதியோரில்லங்களேது வீதிகளில் மனநோயாளிகளாய், யாசகர்களாய் மனிதர்களேது? நிச்சயம் இதனை வாசிக்கும் ஒவ்வொரு பெற்றாரும் தம்பிள்ளைகள் இப்படியிருக்கவே வேண்டுவர் என்பதில் ஐயமில்லை. ஏழைத்தாயின் உழைப்பை பாசத்தை தியாகத்தை நெகிழும் வரிகளை குறிப்பிட்டுச்சொல்லமுடியவில்லை ஒவ்வொரு வரிகளுமே அற்புதம்.

ஏலவே கூறியதுபோல பலருடைய வாசக கருத்துக்களிலிருந்து பதமான ஒரு கருத்தை கூறிடலாம் சந்தக்கவி கிண்ணியா அமீர அலி அவர்கள் 'வள்ளுவர் தந்த திருக்குறளே பெரும்புரட்சி இங்கே வள்ளுவர்புரத்திலே ஒரு புரட்சி' என்று அர்த்தம் பொதிந்த வாழ்த்துக்களை மிகைத்து மகிழ்கின்றார். இதனை வாசகர்கள் நாமும் பகிர்ந்து பங்குதாரராகிடலாம். அற்புதம் எல்லா கவிதைகளும் ஆழம் அதுபோல தன்னிடைய வாசகி ஒருவரின் கடிதத்தையும் பிரசுரித்திருப்பதும் குறிபிடத்தக்கது. இதுபோல இன்னும் பல சுவாரஸ்யங்கள்.



இக்கவிநூலில் 'ஒரு பாடற்பூ மலர்கின்றக்து' எனும் தலைப்பில் பாடலொன்றும் மணம்வீசுகின்றது. காதல்கொண்ட ஓர் ஆணின் கண்ணீர் வரிகளாக கடைசிப்பக்கத்தினை நனைத்திருக்கின்றது. அத்துடன் பட்டாம்பூச்சியாய் ஆங்காங்கே பொதிந்த அத்தனை கவிதைகளும் அற்புதமானவை.

'முக்காற்பகுதி தண்ணீரால்
மூடியிருக்கின்ற பூமி
நாங்களோ குடங்களோடு
வரிசையில்'

எனும் ஹைக்கூ நிறைவு பெறாத எத்தனையோ விடயங்களை தாங்கிநிற்கின்றது. நாம் காணுகின்ற கேட்கின்ற அநுபவிக்கின்ற எத்தனையோ விடயங்களை உணர்ந்து உருவாக்கியிருப்பதில் கவிஞர் வெற்றிபெற்றிருக்கின்றார். வாசிப்புத்தேடலோடு வருகின்ற எந்த ஒரு வாசகனையும் ஏமாற்றாமல் ஒவ்வொரு பக்கத்திலும் சுவைகளையும் தேடல்களையும் பிணைத்து கவியோடு மனதை இணைத்துவிட்டிருக்கின்றார் கவிஞர். வசையாய் வந்துபோகும் இக்கால கவிதைகளின் வரிசையில் மனதை அசைக்கும் கவிகளைக்கொடுத்து வாசக உள்ளங்களில் பசையாய் ஒட்டிக்கொள்ளும் நூலாக ' இடம்பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய்' கவிதைத்தொகுப்பு வெளிவந்திருப்பது பாராட்டக்கூடியது.


இதுபோல நல்லாக்கத்துடனும் பலபுதிய திறவுகோலுடனும் இலக்கிய வானில் கவிஞர் யோ.புரட்சி சிறகடிப்பார் என்ற நம்பிக்கையில் மனப்பூர்வமான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் பகர்ந்தவண்ணம் விடைபெறுகின்றேன்

நன்றி!




நூல்: 'இடம்பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய்' கவிதை நூல்

ஆசிரியர்: யோ.புரட்சி

விலை: 240/=

தொடர்புகளுக்கு: வள்ளுவர்புரம்
விசுவமடு
முல்லைத்தீவு.

Friday, January 24, 2014

கண்ணயர்வதெப்போது ???

பசிக்கிறது வயிறு
உண்ணமறுக்கிறது மனம்
சிரிக்கின்றது உதடுகள்
உணரமறுக்கின்றது உள்ளம்

வந்துதான் போனாய் ஏனென்
வசந்தத்தையும் கொண்டுபோனாய்
அ(று)ந்துவிழும் நிம்மதிச்சாலையில்
அழகாய் நடந்துபோகின்றாய்

அவஸ்தைகள் ஆழமாகின்றது
அலறல்கள் அடக்கமா யார்ப் பரிக்கின்றது
அழுகைகள் விழிகளில் தேங்கிவிடுகின்றது
ஆறுதலின்றியே அல்லல்படுகின்றது

ஆனந்தம் தந்த அந்தநொடி
இன்னொருமுறை வந்திடுமா
ஈயாடா என்நெஞ்சை மீண்டும்
உயிர்ப்பித்திடுமா
ஊனமான சந்தோஷகவிதனை
எழும்பிடச்செய்திடுமா -இல்லை
ஏள‌னத்தால் இதயமதை
கொன்றுதூர வீசிடுமா??

காயங்களும் மாயங்களும்
கலையவில்லை
போராட்டமும் நீரோட்டமும்
ஓயவில்லை

அன்றாடங்களில் அவசரம்
திண்டாட்டமா யென்பொழுதுகள்
நிஜங்களை பிய்த்தெறிந்திவ்ட்டு
நிழல்களை மட்டும் விட்டுச்சென்றாய் நான்
நிம்மதியாய் கண்ணயர்வதெப்போது ???






இன்னும் எத்தனை ????

இன்னும் எத்தனை ஏமாற்றங்கள்
இன்னும் எத்தனை வலிகளை
எனக்கென தரப்போகின்றாய்
முடிந்தவரை சுமப்பேன்
முடியவில்லையென்றால்
முடிந்துவிடுவேன்!!

முறையோ????

இதயம் வரண்ட உனக்குள்
இரக்கமிருப்பது உண்மையாகுமா
ஈரமில்லா அம்மனதில்
ஈவினை தேடுவதுதான் முறையோ!!



Thursday, January 23, 2014

இனியும் வேண்டாம்..

வாழ்வின் பாதியும் நீதான் என்
இதயத்தின் பகுதியும் நீதான்
தாழ்வின் கோரம்வரும்போதும்
தாங்கிடுவேன் உன்னைதா ந்னென்று
தாராளமாயுரைத்த கண்மணியே
தாங்காச்சோகந்தனை தந்து
தாலிபெற்று சென்றதென்ன?

நோயாய் நீகொளுத்திய தீதா னின்றும்
நொடியிடை வெளியின்றி
பொடிப்பொடியாக்கிப்ப் போட்டது
தத்தளிக்கும் தளிராய்
தனித்துவிடப்பட்டிருக்கின்றேன்
நினைவுகளை கொன்றழித்திடமுடியாது
செத்துபிழைக்கின்றேன் எப்படியடி
சேர்த்தெல்லாவற்றையும் புதைத்திட்டு
செந்தாமரையாய் புன்னகைக்கின்றாய்?

நிமிடத்துக்கொருமுறை சொல்வாயே என்
நிம்மதியெல்லாம் நாந்தானென்று
அடிக்கடியணைப் பாயே கண்ணாளனே
அழிவொன்றில்லாது நமைபிரிப்ப
தரிதென்று
என்னவென்றடி எல்லாவற்றையும்
புதைத்திட முடிந்தது

மணிமணியாய் செதுக்கி
மாளிகையா யெழுப்பிய‌
காதலிதயத்தை கலைத்தெறிவதெப்படி
நிறைந்திருக்கும் உன்
நினைவுகளை நீக்கிடும் வழியறியாது
உறைந்திருக்கின்றேன்

ஒற்றைநொடி திரும்பிப்பார்த்திருக்கலாம்
ஓராயிரம் ஆழம்பொதிந்த நம்
காதல் நினைவுகளை
ஆனந்துத்துக்கும் அன்புக்கும் குறைவிலா
அந்த நிமிடந்தனையொரு நொடி
மீட்டியிருக்கலாம் என்னிடம்
ஓடிவந்திருப்பாய்....

இனியும் வேண்டாம்
இரவான எனதுகளில்
ஒளிநிரப்ப வேண்டாம்
நிம்மதி தேடும் வழிகளெனதில்லை
நிகழ்ச்சிகளை நிரப்புவதில் உடன்பாடில்லை
உன்பாதை வேறு
எனது பயணம் வேறு
பிரிவோம் செல்வோம் இனியொருமுறை
சந்திக்காதபடி...



Wednesday, January 22, 2014

மீண்டும் வராதா???

மீண்டும் வராதா
மாண்டுபோன நம்
மகிழ்வுகள்
தீராத வார்த்தைகள்
தித்திப்பான நிமிடங்கள்
ஓயாத புன்னகை
ஒன்றிப்போன கருத்துக்கள்
எல்லாம் எல்லாம்
இறந்தா போனது
மீண்டும் வாராதா?


அண்ணனோடு தங்கை சென்றாலும்...

அண்ணனோடு 
தங்கை சென்றாலும் அதனை
உறவாய்ப்பார்ப்பதில்லை
தவறாய்த்தான் பார்க்கப்படுகின்றது
சமூகக்கண்களை நாம்தானே
சீரழிர்த்தோம்????



Tuesday, January 21, 2014

https://www.facebook.com/ammu.kuddy.94


சகோதரி அம்முக்குட்டியின் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்தவண்ணம்..... ஏன் பெண்ணே????? சோகத்தீயினை பற்றவைத்துவிட்டு பதறாமல் படுத்துறங்குகின்றாயே???


தண்டிப்பதாய் நினைத்தாயா இல்லை
உன்னை விடுவிப்பதாய் நினைத்தாயா
பலியெடுப்பதிப்படி உனதுயிரிலா
பழிவாங்குதலென்பது வாழ்தலன்றோ...

எத்தனைச் சிறப்புகளுனக்குள்
எட்டச்செல்லும்வரை நானுந் தானறியவில்லை
மொத்தச் சந்தோஷங்களையும்
மெத்தச்செருக்காய் தூக்கிச்சென்றாயே...

ஆளப்பிறந்தவள் நீ
ஆட்டிப்படைக்கவேண்டியவள் நீ
அற்பாயுசை வலுக்கட்டாயமாக்கினாயே நன‌டி
அன்புள்ளக் க‌தறல்கேளாயோ...

உனக்குள்ளெரிந்த சோகத்தீயினை நாமறியோம்
உனைச் சிதைத்தக் காயங்களினையு மறியோம்
பரிகாரமறியாமல் நீயும்
பறந்து போனதென்ன தளிரே??

நினைக்க நினைக்க வேதனைக்கனலை
அள்ளித்திணிக்கின்றாயடி பேதையே
அணைக்க முடியா ஆற்றாமைகளை
அணைத்திடவா அணைந்துபோனாய்

உனக்கான பாதைகள் வெறுமையாய் இதோ
உன் பாதங்களுக்காய் வெற்றுப்பயணங்கள்
கனத்துப்போன இதயத்துக்கு
காலனிடமா ஆறுதல் வேண்டினாய்???

இறைவா இவளுக்கு
ஆத்ம‌சாந்தி கொடுத்திடு
பிரிவில் தள்ளாடு மிதயங்களுக்கு
ஆறுதலையளித்திடு....





Sunday, January 19, 2014

காலம் வழிசொல்ல தவறியதென்ன??

ஒத்தையில போகுங்காத்து
ஒன்ன மறந்துபோற‌தென்ன‌
மூச்சுக்காத்து நின்னதில‌
முழுசா தொலைஞ்சிபோறதென்ன‌

பாத்தும் பாக்காம நீயிருக்க‌
பாவியிவ தன்னந் தனியிருக்க‌
ஆவி எனக்கு வெறுத்துப்போக
யாருமில்லாமல் தொலைஞ்சுபோறேன்

தூரத்தில ஒரு நெலவு
துன்பத்த ஒளித்திருக்க‌
பாரத்தில எம்மன‌மோ
பாதாளத்த தேடுவதென்ன

அன்பென்று ஒன்ன நினைக்க‌
வம்பென்று நீயும் புகட்ட‌
தப்பென்று நானுணர -காலம்
வழிசொல்ல தவறியதென்ன??



Thursday, January 16, 2014

நீயாகிப்போன என்னை....

மறந்துபோன உன்னில்
நினைவுபடுத்தல்களை
நிரந்தமாக்க முயலவில்லை
நீயாகிப்போன என்னை
நியாயப்படுத்தவே முனைகின்றேன்
நீளுந்தோல்விகளென் றறிந்தும்!!



Wednesday, January 15, 2014

காயங்களாறவில்லை

காலங்கள் கரைந்துபோகலாம்
காட்சிகள் மறைந்துபோகலாம்
கோலங்கள் புகுந்துகொள்ளலாம்
கொண்ட நேசமோ அழிந்துபோவதில்லை

சாட்சிகளிங்கில்லை
சாயங்களும் வெளுக்கவில்லை
பாட்டாகிபோனப் பாசமோ
பாசாங்காய்ப் போயிடவில்லை

கல்லாக்கிடினும் மனதில்
காயங்களாறவில்லை
சொல்லாகிப்போனதேனோ
செயலாகிப்போகவில்லை


விதிமீது பலிசொல்ல மனமில்லை
விளையாடிட்ட வழிமீதும் கோபமில்லை
மதியிழந்த செயலென புரிந்த
மனதை வலுவாக்க வழியறிவேன்!!




Monday, January 13, 2014

மறை(ற)க்கக்கூடுமோ?

பயணங்கள் உருவானபின்
பாதையை மறை(ற)க்கக்கூடுமோ?
பருவத்துள் விளைந்த பயிரை
பாதாளத்துள் ஒளிக்கமுடியுமா??


Sunday, January 12, 2014

மெளனம் சிறந்தது!!

இறுகி இறுகி என்
இதய மிரும்பானது
உருகி உருகி வழிந்தகாதல்
உதிர்ந்து மண்ணானது

காரணம் சொன்னால்
காதகி என்றிடும் -உலகமென்னை
ஏமாற்றுக்காரி என்றாலு மென்றிடும்

மெளனம் சிறந்தது
மொழிகளின் அடர்த்தியைவிட‌

வார்த்தைகள் அடங்கிப்போகின்றது!!




Saturday, January 11, 2014

ஆச்சரியந்தான்

இறந்துபோனதாய் நினைத்த என்
இறந்தகால மது
உயிர்பெறுகின்றது
நிகழ்வதெல்லாம் அதிசயந்தான் -இன்று
மகிழ்வதெல்லாம் ஆச்சரியந்தான்!!


Friday, January 10, 2014

தமிழ் லீடர் இணைய இதழில் எனது கவிதை (09.01.2014)

http://tamilleader.com/?p=25636



தோல்வியை தூக்கி
தோளில் போடாதே
துரோகியை நெஞ்சில்
தொங்கப் போடாதே
வலிதான் வலிதான்
வாழ்வெல்லாம் வழிதான்
துக்கத்தை துடைத்து
தூரப்போட்டுவிடு
ஒளிதான் ஒளிதான் -உன்
நிமிடங்களில் ஒளிதான்
ஒழித்தால் பாரத்தை -உன்
நிழல்கூட ஒளிதான்
நேசிப்பும் சிலநேரம்
வியாதியாகும் நிஜம்தான்
யோசித்து நடந்திடால்
விலகியோடும் பனியாய்
கண்ணீரை கருத்தினில்
எடுப்பதை நிறுத்து
பொன்நேரம் உனதாகும்
இந்நாளை உயர்த்து
பின்னிட்டு நடந்திட்டால்
பூச்சிகூட விரட்டும்
புறமுதுகை திருப்பிவிட்டால்
புயல்கூட ஒதுங்கும்
வேங்கையென வெற்றியை
வெறியோடு யாசி
தீங்குவரும் நாளில்கூட‌
தீராது யோசி
நெஞ்சத்து கண்ணீரை
நொடிதனில் மாற்று
அஞ்சாமை வாழ்வதனை
தீராது போற்று
கொஞ்சமாய் முயன்றாலே
கொடிபறக்கும் முன்னாலே
வஞ்சனை கொன்றாலே
வழிபிறக்கும் தன்னாலே
உறவுதரும் காயந்தான்
உள்ளஞ்சிதைக்கும் உண்மைதான்
வரவிலதனை சேர்க்காவிட்டால்
வசந்தம் தந்திடும் நன்மைதான்
தோல்வியை தூக்கி
தோளில் போடாதே!!

த.எலிசபெத் (ராஜ்சுகா)
இலங்கை

Wednesday, January 8, 2014

நம் இறந்தகாலத்தை

எப்படி மறந்துபோனாய்
இறவாநம் இறந்தகாலத்தை
செப்படிவித்தையல்லவே -காதல்
சொல்லாமல் ஒதுங்கிவிட‌

Tuesday, January 7, 2014

கற்றுத்தாருங்கள்

மறந்துவிடும் வித்தையை
எனக்கும் கற்றுத்தாருங்கள் -அவனை
துறந்துவிட்டு நிம்மதியை
துணையாக்கிக்கொள்கின்றேன்!!



Sunday, January 5, 2014

இந்தச் சுனாமி ஓயவில்லை!!

இமைகடந்து
இதயம் நனைத்தும்
இந்தச் சுனாமி ஓயவில்லை
எதனைச் சுத்திகரிக்க‌
இத்தனைப் போராட்டங்களோ -என்
விழிநீருக்கு???



விழித்துளிகள்

விழித்துளிகள்
வழிந்துபோனபின்பும்
ஒளிந்து தங்கிவிடுகின்றது
வலிகளி நெனெச்சங்கள்!!



வரங்களுக்காக‌!!

விழிகள் தொலைத்த‌
இமையாய்
வழிகள் தொலைந்த‌
பாதங்களிங்கே
வரங்களுக்காக‌!!


Friday, January 3, 2014

கேள்விகள் மாயுமா???

இதயம் மகிழுமா
இமைகள் தெளியுமா
உதயம் பிறக்குமா
உள்ளம் துளிர்க்குமா

தோல்வி ஜெயிக்குமா
தோழமை தளைக்குமா
வீழ்ச்சி உயருமா
விபத்துதான் குறையுமா

இரவுகள் விடியுமா
இளமை மகிழுமா
உறவுகள் வரவா(மா)குமா
உலகமே நெகிழுமா

பாதைகள் விரியுமா
பாதகங்கள் குறையுமா
வாதைகள் உறையுமா
வாழ்க்கைப்பூ மலருமா

கேள்விகள் மாயுமா
கேவலங்கள் ஓயுமா
தாழ்வுகள் காயுமா
தாராளங்கள் வாய்க்குமா??







வித்தை

கண்ணீரை மறைக்கும் வித்தையை இந்த புன்னகைமட்டுமே கற்றுவைத்திருக்கின்றது.


வலிக்கின்றது!

காயங்கள் வலிக்கவில்லை
வடுக்களை சோதிக்காதீர்
வலிக்கின்றது!!