Saturday, November 19, 2011

ஊரும் உலகமும்

கைகளால் பூச்செண்டுதரு வாரவரே
காலுக்கடியில்நமை வீசிவிட்டு செல்வார்
தூக்கிவைத்து கொண்டாடுவார்
தூரப்போனதும் பந்தாடுவார்...

அன்பொழு கப்பேசுவார் அடிமனதில்
அழிக்கவே திட்டம் தீட்டுவார்
உதவி யென்றதும் யோசிப்பார்
உதவ வில்லையென்றால் தூசிப்பார்...

சொத்திருந்தால் கூடவே சேர்ந்திருப்பார்
சோறில்லா திருந்தால் சேதிகேட்டிடார்
ஊர்ப்பிள்ளைக்கு ஜோடி தேடிவைப்பார்
தம்பிள்ளை புகழ் பாடியே வைப்பார்...


ஊரிலுள்ள ஓட்டைகளையெல்லாம் தேடுவார் தம்
ஓட்டைகளை உள்ளுக்குள் வைத்துமூடுவார்
பணம் எவ்வளவும் பத்தாதென்பார்
பணத்துக்காக எதையும் பத்தவைப்பார்...

நண்பனென்றே சேர்ந்திருப்பார்
சந்தர்ப்பம் வந்தால் சேருமடிப்பார்
முகஞ்சுழிக்க பேசமாட்டார் எம்மில்
முன்னேற்றங் கண்டால் பொறுக்கமாட்டார்...

புன்னகையில் பூக்கள் மலர்த்துவார்
புற்றுப்பாம்பாய் விஷத்தையும் தெளிப்பார்
நல்லவர்களென்றே தம்மை காட்டுவார்
நாகமாயாக கொஞ்சமும் தயங்கார்...

கைகளால் பூச்செண்டுதரு வாரவரே
காலுக்கடியில்நமை வீசிவிட்டு செல்வார்

Monday, November 14, 2011

புனிதங்களை கற்றுத்தேரு

ஏழைக் குடிலுக்கு போயிபாரு
அன்புஎலாம் கொட்டிக் கிடக்குது
வாழையடி வசதிமனை தேடிப்பாரு
அசிங்கமெலாம் முட்டிமோதுது...


தேகம் மினுமினுக்கும் திரும்பிப்பாரு
தேரோடும் வீதிவியக்கும் நின்றுபாரு
பாகம்பிரிக்கும் பாசம்பாரு இவர்
வேகமெலாம் பணந்தான்பாரு...


பசித்தவயிறு பாசத்தால் நிறைஞ்சிருக்கு
பாமர குடிலுக்கு போயிபாரு
பாசங்கூட பங்குக்காக பிரியும்
பணக்காரமனையில் நின்றுபாரு...


குடும்பக்கட்டு உடைந்து கிடக்கும்
குபேரன் தட்டு உணவைப்பாரு
கூழும் அமுதாய் உண்டுகளிக்கும்
குடிசைக்கதவை தட்டிப்பாரு...


கட்டுக் கட்டாய் காசிருக்கும்
கட்டிலுறக்கம் கனன்றெரியும் பாரு
கட்டாந் தரையில் சொர்க்கபூமி
தட்டிநிற்கும் எட்டிப்பாரு...


புன்னகையும் தன்னலமாய் விரியும்
புதுமையான மனிதவர்க்கம் பாரு ஒற்றை
புன்னகைக்காய் தன்னலமிழக்கும் புனித‌
உறவுகளைநீயும் கற்றுத்தேரு...

Sunday, November 13, 2011




02.சண்டித்தனத்தால் வந்ததல்ல‌
தண்டித்ததால் வந்த காதல்கணக்கு
பாண்டித்தியத்தை பறைசாற்றவல்ல இது
பாசங்களை சிதைத்த பழையபிணக்கு...


03.கண்மூடி சிந்தித்ததில்வந்த‌
கல்வியறிவில்லாக் காதல்
காலாகாலமாய் பேணுஞ்சாதிக்கு
கல்லடி தந்திடும் சொல்லடிமோதல்...



04.ஆயிரத்தில் ஒருத்தியென்றாய் என்னை
ஆயிரம் பேருக்குள் தொலைத்துவிட்டு
தொல்லையென்று தொலைத்தாயா இல்லை
தொலைவிலிருப்பதால்
தொலைத்தாயா?


05.அதிகஞ் செய் வதைவிட‌
ஆழமாய்ச் செய்வதே
இறவாம லிருக்குமாம்!!


06.நல்லதையே விதையுங்கள்
   அறுப்பது உங்கள்
   பிள்ளைகளாகக்கூட இருக்கலாம்


தீ நல்லதுதான் 

தீபமாய் எரிவதென்றால்-எழுதும்

மையெல்லாம் சிறந்ததுதான்-தீ

மையெல்லாம் அழிவதென்றால்...

Saturday, November 5, 2011

உயிரில் பூத்ததுங்க‌.....

அடியே கருவாச்சி
நாந்தூங்கி நாளாச்சி
உன்னநா சந்திச்சி
உள்மனசும் பித்தாச்சி...

வேல செய்யயில‌
வேல்விழி ஞாபகந்தான்
நாள கடத்துறேன்டி
நானுமுன கைப்பிடிக்க...

பக்கத்தில நீயும்வந்தா
பக்குனுதான் தீப்பிடிக்க‌
பார்வ ஒன்னவீசுறியே
பாவலனா நானுமானேன்...

கூலிவேல செஞ்சிடுவேன்
கூடைகூட தூக்கிடுவேன்
கூடவே நீயுமிருந்தா
குட்டி சொர்க்கம் தந்திடுவேன்...

கால நேரங்கூடிடுமா
காவல் தெய்வமேவிடுமா
சாதி ரெண்டுமட்டுமின்னு
சட்டம் இங்கவந்திடுமா...

அப்பனாத்தா சண்டையில‌
அஞ்சி நிக்குது பிஞ்சுமனம்
தப்புதான்னு புரிஞ்சாத்தா
நாம ஒன்னா சேர்ந்திடலாம்...

எட்டிநின்னு சொல்லிடுவோம்
தட்டி கேட்டு ஜெயிச்சிடுவோம்
க‌ட்டிவச்சு அடிக்கவந்தா
முட்டிதள்ளி முளைச்சிடுவோம்...

நிறத்தப்பார்த்து வந்ததில்ல‌
நிஜமாய் உயிரில் பூத்ததுங்க‌
மறக்க சொல்லி எந்திரிச்சா
மலையக்கூட சாச்சிடுவோங்க...



14.11.2011 அன்றைய "இருக்கிறம்"  சஞ்சிகையிலும்,



 தமிழ் ஓதர்ஸ் இலும் வெளியான எனது கவிதை


-நன்றி இருக்கிறம்-
-நன்றி தமிழ் ஓதர்ஸ்-

நடைமுறையிலில்லை

 தினகரன் பத்திரிகையில் பிரசுரமான எனது கவிதை [01.11.2011]


ஆதாயமே தேடலாகியதால்
அன்பென்பதற்கு மதிப்பேதுமில்லை
பணமே வாழ்வியலாகியதால்
பண்பிற்கும் பெறுமதியில்லை...

சுயநலமே சொந்தமாகியதால்
சுற்றமெல்லாம் நினைவிலில்லை
வன்மங்களே நிறைந்து போனதால்
வசந்தமெல்லாம் நடைமுறையிலில்லை...

மன்னிப்பென் பதை மறந்துபோனதால்
மனிதமென்பது மதிக்கப்படுவதில்லை
மனங்களெலாம் சுருங்கிப்போனதால்
மண்ணில் நன்மைகள் தொடரவில்லை...

இரக்கமென்பது மறைந்து போனதால்
இதயங்களை யெவரும் காண்பதில்லை
இயலாமைகளை தோள்களில் சுமப்பதால்
இன்பங்களெலாம் அருகில் வருவதில்லை...

நட்பென்பது  தூரப்போனதால்
நகைச்சுவைகளும் இருகிப்போனது
சிரிப்புக்களை சேர்க்க தவறியதால்‍ மனித‌
சிறப்புக்க ளெத்தனையோ இழந்துபோனது...