யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச்சேர்ந்த கவிஞரும் எழுத்தாளரும் சிறந்த கணித ஆசிரியருமான சீனா உதயகுமார் அவர்கள் தனது பரந்த தேடலினால் இலக்கிய தளத்தில் தனக்கென ஓர் ஆழமான இடத்தினை கொண்டுள்ளார். வேறுபட்ட சுவாரஸ்யமான விமர்சனப்பார்வையும் தமிழாலுமையும் கொண்ட இவர்  தற்போது குறுந்திரைப்படம் எடுக்கும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார். பல்துறைக்கலைஞராக வலம்வந்துகொண்டிருக்கும் உதயகுமார் அவர்கள் பகிர்ந்துகொண்ட விட‌யங்கள் மித்திரன் வாசகர்களோடும்...





01.ஓர் கணித ஆசிரியரான நீங்கள் இலக்கியவாதியாகவும் பரிணமித்திருக்கின்றீர்கள் உங்களை பற்றிய அறிமுகத்தை எங்களோடுபகிர்ந்து கொள்ளுங்கள்..


சின்னராஜா உதயகுமார் ஆகிய நான் வல்வெட்டித்துறை, சமரபாகு எனும் பெரும் கிராமத்தில் பிறப்பில் இருந்து வசித்து வருகிறேன்.
“சமரபாகு சீனா உதயகுமார்“ எனும் புனை பெயரில் கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனங்கள் எழுதி வருகிறேன்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப் பட்டதாரியான நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைமானி (எம்.ஏ - தமிழ்) பட்டப் படிப்பினைக் கற்று வருகிறேன்.


02.எழுத்துத்துறைக்குள் தங்களது அறிமுகம் பற்றியும் அநுபவங்கள் பற்றியும் குறிப்பிடுங்கள்..


கணிதபாடம் கற்பித்தல் என்பது, எனக்கு இருபது வருட அனுபவமாகவே இருந்து வருகிறது. ஆனால், தமிழ் இலக்கியம் மீதான ஆர்வம் என்பது பாலர் வகுப்பு முதல் ஏற்பட்ட ஓர் அனுபவமாகவே நான் நினைக்கிறேன்.
பாலர் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரை கல்வி கற்ற காலங்களை மகிழ்வான ஒரு காலமாகவே இன்றும் கருதுகிறேன். அக்காலங்களில் வகுப்பு ஆசிரியையாகவும், தமிழ், சுற்றாடல் கல்வியினைக் கற்பித்த ஆசரியையாக எங்கள் ஊர் மலர் ரீச்சர் இருந்திருக்கிறார்.
      அவரின் கற்பித்தலின் ஆளுமை ரொம்பவே வித்தியாசமாகவும், அவரின் கற்பித்தலின் வீச்சுக்குள் எங்கள் எல்லோரையும் அகப்பட வைத்திருக்கும் மந்திர வித்தை ஒன்றைக் கையாண்டு கொள்வார்.
      கற்பித்தல் அதற்கு அப்புறம் பொருத்தமான ஒரு கதையினையும் சொல்லி எங்களை சிந்திக்கவும் வைப்பார். அந்தக் கற்பித்தல் முறையே நாலாம் ஐந்தாம் வகுப்புகளுக்கு வந்த பிறகு, “அம்புலிமாமா“, “கோகுலம்”, “ராணி கொமிக்கஸ்“ போன்ற சிறுவர் சஞ்சிகைகளை தேடி எடுத்து வாசிக்கத் தூண்டியதாக இன்றும் நான் நினைக்கின்றேன்..
அந்த ஆரம்ப வாசிப்புக்களின் பிரதிபலிப்புகளாக சின்னச்சின்னக் கவிதைகள் எழுதுவேன். குட்டிக் கட்டுரைகள் எழுதுவேன். அவை எல்லாம் என் பயிற்சிப் புத்தகத்தின் பின் பக்கங்களிலே பதிந்தும் வைப்பேன். காலம் செல்ல அவ தொலந்துவிடும்.
அப்பிடி எழுதிய ஒரு கவிதைதான் “கூண்டுக்கிளி“ என்கிற என் பிள்ளைக் கவிதை. அந்த நாளில் எங்கள் பாரதி இளஞர் மன்றத்தினர் “இதய ஒலி“ எனும் கையெழுத்துச் சஞ்சிகை ஒன்றினை ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் வெளியிட்டு வந்தனர். அதன் பிரதம ஆசிரியர் திருப்பதி சுபாகரன் (மலர் ரீச்சரின் மகன்). இவரின் அரவணைப்போடு தான் என் கவிதை முதன் முதலில் சஞ்சிகையில் பிரசுரம் பெறற்றிருக்கிறது. அப்ப எனக்கு வயது 11 ஆண்டுகள்தான்.


03. உங்களுடைய எழுத்துக்கள் சகல ஊடகங்களிலும் அதிகமாக காணமுடிகின்றதுஇதுவரையில் வெளிவந்தவெளிவரப்போகின்ற‌ தங்களுடைய வெளியீடுகள்கிடைத்த விருதுகள் பரிசுகள் பற்றி கூறுங்கள்.


      “புள்ளி விபரவியல்“ எனும் கணித நூல்தான் எனது முதல் வெளியீடாக வந்த புத்தகம் ஆகும்.
      மேலும், “வெற்றியுடன்“, “உடந்த நினைவுகள்“ எனும் இரண்டு கவிதை நூல்களையும், “செந்நீரும் கண்ணீரும்“ எனும் சிறுகதைத் தொகுதிகளையும், “பகிர்வு“ எனும் கட்டுரத் தொகுதியினையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறேன்.
      “அந்த நாள் ஞாபகங்கள்“, “ஒரு பலத்தின் இருப்பின் மௌனம் பற்றிப் பேசுதல்“ எனும் இரண்டு கவிதைத் தொகுதிகளும், “சமரபாகு சீனா உதயகுமாரின் சிறுகதைகள்“ எனும் சிறுகதைத் தொகுதியும் மிக விரைவாக வெளிவரவிருக்கின்றன.
      2006 ஆண்டு அரச அலுவலர்களுக்கான ஆக்கத்திறன் போட்டியில் “முன்மாதிரியாய்“ எனும் சிறுகதை மூன்றாம் இடத்தைப் பெற்றது.
      உதயன் பத்திரிகையின் வெள்ளி விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் “மழை“ எனம் சிறுகதை சிறப்புப் பரிசினைப் பெற்றிருந்தது.


04. உங்களுடைய எழுத்தாற்றலை இலகுவாகவும்வீச்சுடனும் எந்த இலக்கிய வகையினூடாக உங்களால் அதிகமாக வெளிப்படுத்த முடிவதாக நீங்கள்நினைக்கின்றீர்கள்?
            அதிகமானவை கவிதைகள் ஊடாகவே நான் வெளிக் கொணர்ந்திருக்கிறேன்.  அதற்காக வரிகளும், பக்கங்களும் குறைவானவை என்றதற்காக கவிதை எழுதுதல் என்பது இலகுவானது என்று சொல்லி விடவும் முடியாது. ஒவ்வொரு வகையும் ஒவ்வொரு கடினத்தைக் கொண்டிருக்கின்றன.
நாம் எடுத்துக் கொண்ட எந்தவொரு வடிவத்தின் ஊடாகவும் ஒரு விடயத்தைச் சொல்ல முற்படுகின்ற போது அதிக தேடலும், அதற்கேற்ப வாசிப்பும் தேவையாகின்றன.


05. இக்கால கட்டத்தில் சடுதியாக படைப்பாளிகளின் அறிமுகமும்மிக குறுகிய காலத்தினுள் ஒரு படைப்பாளி நூலொன்றினைவெளியிட்டு பிரபலமடையும் போக்கும் காணப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு பரவலாக காணப்படுகின்றது  இது பற்றி நீங்கள் என்னசொல்ல விரும்புகின்றீர்கள்?


            ஆரம்ப காலங்களில் ஒரு குழந்தை நடை பயில்வதற்கு வீட்டுச் சுவரைப் பிடித்துத்தான் நடந்து நடை பயின்றிருக்கிறது. அதற்கு பின்பு வந்த காலங்களில் மூன்று சில்லுகளைக் கொண்ட தள்ளுவண்டில் மூலம் குழந்தைகள் நடையினைப் பயின்று கொண்டார்கள்.
      காலத்தின் அதீத வளரச்சியினால் அவை நவீன மயப்படுத்தபட்டு பற்றரியில் இயங்கும் சிறு வாகனங்களைக் குழந்தைகள் கையாள்வதை நாம் எல்லோரும் காண்கிறோம்.
தொலைக்காட்சியை இயக்கவும், கைத்தொலைபேசியில் ஒருவருக்கு அழைப்பினை ஏற்படுத்தவும், கணினிகளை இயக்கவும் சிறு வயதினிலேயே கற்றுத் தேறுகிறார்கள். இச்சிறுவர்களைக் காணும் போது நாமெல்லாம் புருவங்களை உயர்த்தி ஆச்சரியப்படுவதில்லையா?
 இவை போன்றுதான்  இன்றைய படைப்பாளிகளும் தங்கள் படைப்பக்களை உடனடியாகவே அச்சில் கொண்டுவர ஆசைப்படுகிறார்கள். அதற்கான வசதிகளும் மலிந்து கிடக்கின்றன.
தங்கள் ஆக்கங்களை அச்சில் கொண்டுவந்து விடுகிறார்கள். இது பிரபல்யமடையும் போக்கு என்று சொல்ல முடியாது. காலங்கள் செல்லச் செல்ல அவர்கள் தங்களை் நிலைகளை உணர்ந்து கொள்வதற்கான அடையாளங்கள் அவை. பின் நாளில் வெளிவந்து சாதனை படைக்கக் காத்திருக்கும் நூல்களுக்கான வழிகாட்டியான வெளியீடுகள் அவை.
அவர்களில் குற்றம் சுமத்துவது என்பது அர்த்தம் அற்ற ஒரு செயல் என்றுதான் நான் சொல்லுவேன். உதவி செய்யா விட்டாலும் விமர்சனங்களால் உபத்திரவம் செய்யாது இருப்பதே வளர்ந்தவர்கள் வளர்பவர்களுக்கு செய்யும் பேருதவி என்று நினைப்பவன் நான்.

06. நீங்கள் ஒரு ஆசிரியர் என்ற வகையில்இன்றைய இளைய சமூகத்துக்கு இலக்கியத்தின் மீதான ஈடுபாடு எவ்வாறுகாணப்படுகின்றது?


            முன்பிருந்த ஆசிரியர்கள் போல் இன்றைய ஆசிரியர்கள் அனேகர் வாசிப்பு குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள். தேடல் என்பது துளியளவும் இல்லாமல் இருக்கிறார்கள். பத்தரிகைகளில் வரும் தடித்த எழுத்து தலைப்புகளை மட்டும் வாசித்து விட்டு பத்திரிகைகளை மூடிவிடும் ஒரு சமூகமாகவே இவர்கள் அதிகமாக இருந்து வருகிறார்கள்.
ஆனாலும், ஒரு சில மாணவர்கள் மட்டுமே சுயமாக தேடுகிறார்கள். புதுப்புது விடயங்களை கற்கிறார்கள். அவர்களுள் சிலர் இலக்கியத்தின்பால் இடுபாடு கொண்டு அதில் தங்களை வளர்த்து விட முற்படுகிறார்கள்.
      பட்டங்கள் எத்தனையும் பெற்று விடலாம். அவை ஒரு நேர்கோட்டு அறிவுத் தேடலாகவே இருந்து விடுகின்றன. பலவிடயங்களையும் தேடிக் கற்கின்ற போதுதான் நேரிய உயர்ந்த மரத்தின் பல கிளைகளில் தொங்கும் இனிய கனிகளை உள்ள தோப்பு மரமாக யாரும் திகழ முடியும்.


07. சமூக மாற்றத்திற்கும் விழிப்புணர்விற்கும் இலக்கியமே சிறந்த வழிகாட்டிஎனவே எவ்வகையான சிந்தனைப் போக்குடனும்ஆளுமையோடும் உங்களுடைய எழுத்தக்கள் சமூகத்தை சந்திக்கின்றன?


            சமூகத்தின் முதுகெலும்பாக விளங்கும் சன சமூக நிலையம், கோயில் நிறுவனங்களில் பதினாறு வயதிலேயே இணைந்து நிர்வாக ரீதியாக சமூகங்களை நிர்வகித்த வல்லமையும், அப்போது நான் சந்தித்தித்த பல்வகை மனிதர்களின் நடத்தைகளும் சமூகத்தை நன்கு உணர்ந்து கொள்ள சந்தர்ப்பங்களாக எனக்குக் கிடைத்தன.
      மேலும், ஊரின் ஒவ்வொருத்தர் வீடுகளிலும் நடைபெறுகின்ற நன்மை தீமை நிகழ்வுகளில் தவறாது கலந்து  கொள்ளுதல். மற்றவர்களோடு சேரந்து கொண்டு என்னால் முடிந்த உதவிகளை செய்து கொடுத்து உதவுதல்.
      இருபது வருடங்களாக கணித பாடத்தினை நான் கற்பித்து வருகின்றேன். இக்காலங்களில் நான் சந்தித்த மாணவர்களின் வித்தியாசமான மன நிலைகளும், அம்மாணவர்களின் பெற்றோர்கள் பலரின் நன்றி மறவாத மனவுணர்வுகளும், சந்தர்ப்பவாத ஒரு சில தனி மனித நடத்தைகளுமே சமூகத்தை இலகுவாக உணர்வதற்கு எனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்கள் என்பேன்.
      பொது நிறுவனங்களின் முக்கிய பதவிகளில் இருந்து கொண்டு அப்பாவி மக்களை ஏமாற்றி ஊழல் செய்து சம்பாத்தியம் தேடிய மனிதர்களையும், அரச உயர் பதவிகளில் இருந்து கொண்டு அரச பணத்தைச் சூறையாடிய படித்த கௌரவ திருடர்களையும், ஒரு விடுதலை இயக்கதின் பெயரைச் சொல்லி ஊரைக் கொள்ளை அடிக்க நினைத்த போலி நபர்களையும் கண்டு அவர்களோடு மல்லுக்கட்டி நின்று நியாயத்தை கேட்டவன் நான்.
நேருக்கு நேர்  எதையும் எவருடனும் கேட்டுவிடுகிற ஒரு தைரியும் இயல்பாகவே என்னிடம் இன்றும் இருக்கிறது. இது எனக்கான ஒரு தனித்துவம். என் தனித்துவத்தை மறைத்து செயற்கையாக நடந்துகொள்ள என்னால் முடியாததான்.
இவை எல்லாம் என் கதைகள், கவிதைகள், கட்டுரைகளில் கொண்டு வந்திருக்கிறேன்.

08. கலாசாரம் பண்பாடு கட்டுப்பாடுகள் என்பன இன்றைய நவீன நாகரிக காலகட்டத்தில் ஒரு பிற்போக்கான சிந்தனையாகஇளந்தலைமுறையினரால் நோக்கப்படுகின்றதுஇதுபற்றி உங்களின் பார்வையில்?


            இளந்தலைமுறையினை மட்டும் குற்றம் சாட்டி விட்டு மற்றவர்கள் தப்பித்து விட முடியாது.
 கலாசாரம், பண்பாடு, கட்டுப்பாடு இவை எல்லாம் ஒரு சமூகத்தின் எல்லா நபர்களுக்கும் உரித்தானவையே.
அவர் அவர்கள் அது அதனை சரியாகவும், நேர்த்தியாகவும் செய்தால் யாரும் யாரையும் குறை சொல்ல முடியாதுதானே!
      எவரும் தான் சரியாகவும், நேர்த்தியாகவும் நடந்து கொள்வதாக நினைக்கின்றார்களே தவிர தாங்கள் அப்பிடி வாழ்ந்து விட நினைக்கவில்லை. அதனால்தான் மற்றவர்களில் குறை இருப்பதாகக் கண்டு பிடிக்கிறார்கள்.

09. இந்தத் துறையில் தங்களது எதிர்கால திட்டம் அல்லது சாதிக்க நினைக்கும் விடயம் தொடர்பாக எவ்வாறான நோக்கங்களைகொண்டுள்ளீர்கள்?


             இரண்டு நாவல்கள் எழுதி வருகிறேன். அதில் ஒரு நாவலில் புதுவடிவம் ஒன்றினைக் கொண்டுவர நினைக்கிறேன். அது வெளி வந்த பிறகுதான் தெரியும், அந்த வடிவம் சரியானதா? இல்லை தேவையான ஒன்றுதான? என்பதை!
      மற்றது குறும்படங்கள் எடுக்கின்ற நீண்ட கால எனது விருப்பு மிக விரைவில் நிறைவேற இருப்பதை நினைத்தும் மகிவும் சந்தோசமாக இருக்கிறேன். குறும்பம் ஒன்றிற்காக நான் சொன்ன கதை கேட்டு, அப்படத்தை தயாரிக்க பலர் முன் வந்திருக்கிறார்கள்.
இலங்கையில் குறும்படங்களில் வருகை விரைவு பெற்றிருக்கின்றன. திறமையான பலர் இங்கே இருக்கிறார்கள். இது இப்படியே போகுமானால் உலகத்தரமான பிரமாண்டமான திரைப்படங்களையும் உருவாக்கலாம்.
யாழ்ப்பாணத்தில் இருந்து மிக விரைவில் வெளிவர இருக்கிற முழு நீளப்படம் ஒன்றில் எனது பங்கும் ஒரு முக்கியம் பெறுகிறது என்பதை மட்டுமே என்னால் இப்ப சொல்ல முடியும்.

10. வளரும் எழுத்தாளர்களுக்கு படிப்பினையாக தாங்கள் சொல்ல நினைக்கும் விடயங்கள்?


            நானும் வளர்ந்து வரும் ஒரு எழுத்தாளன்தான். நான் இன்னும் நிறைய விடயங்களைக் கற்கவேண்டி இருக்கின்றது. கற்றும் வருகிறேன். ஆனாலும், எனக்குக் கிடைத்த அனுபவங்கள் என்பது யாருக்குமே கிடைக்காத ஒன்றுதான். எனது தேடுதல்களுக்கு அவையும் பாரிய மாறுதல்களை உண்டு பண்ணுகின்றன.
                தங்கள் படைப்புகளை மட்டும் படித்து விட்டு இருந்து விடாமல், மற்றவர்களின் ஆக்கங்களையும் படிக்க முன்வர வேண்டும். அவ் ஆக்கங்களை எழுதியவர்கள் உங்களுக்குத் தெரிந்தவர்களாக இருந்தால், அவை பற்றிய விமர்சங்களை வெளிப்படையாகவே உரியவர்களோடு கலந்து ஆலோசியுங்கள். எதையும் பகட்டாகக் கதைக்காமல், வஞ்சகமாகப் பழகாமல் உண்மையாகப் பேசிப் பழகினால் நல்ல நட்புகளை யாரும் பெறலாம்.



 நேர்காணல் 
த.எலிசபெத்