Monday, September 30, 2013

அம்மா எங்கள் அம்மா

அம்மா எங்கள் அம்மா
அன்பான அம்மா
ஆசையோடு அணைத்து
அள்ளிக்கொள்ளும் அம்மா

காலை மாலை உணவை
கண்டிப்பாக தருவாள்
சோலைபோல என்னை
அலங்கரித்துச் செல்வாள்

பள்ளி செல்லும் என்னை
பத்திரமாக அனுப்பி
வாசல் வந்து நின்று
வரவேற்கும் அம்மா

எந்தன் கண்ணில் தூசு
கண்டாலே துடிப்பாள்
சொந்தம் எந்தன் சொந்தமென்று
சொல்லி நிதம் மகிழ்வாள்

கெட்டப்பழக்கம் என்னில்
கண்டாலே அதட்டி
நல்ல பண்பை ஊட்டி
நல்வழிப்படுத்தும் அம்மா

அம்மா சொல்லைக் கேட்பேன்
அறிவை நாளும் வளர்ப்பேன்
உயர்ந்த நிலைக்கு செல்வேன்
உயிராய் அவளை காப்பேன்




'கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை' நூலுக்கான கருத்துரை



வாசிப்பின் அநுபவங்கள் ஒவ்வொருவருக்கிடையிலும் வேறு வேறு 
திர்வுகளை தந்துவிடுகின்றது.சிலருக்கு நுனிப்புல் மேய்வதும் சிலருக்கு ஆழமாக வாசித்து உள்வாங்கிக்கொள்வதும் சிலருக்கு தமது வாசிப்பநுபவத்தை வரிகளாக்குவதும் விபரிப்பதுமென்று இன்னும் பலவாறு வேறுபடலாம். வாசிப்பின்பால் கொண்ட  ஈர்ப்பினாலும் எழுத்துக்களின் மீதான ஈடுபாடுகளினாலும் தாம் சுவைத்த நூல்கள் பற்றிய ரசனைக்குறிப்புக்களோடு நல்ல வாசகியாக அறிமுகமான ரிம்ஸா முகமட் அவர்கள் அக்குறிப்புக்களை தொகுத்து நூலுருவாக்கி நம் மத்தியில் ஒரு விமர்சகராக அறிமுகமாகின்றார்.

2004ம் ஆண்டு 'நிர்மூலம்' என்ற கவிதையோடு அறிமுகமான கவிதாயினி ரிம்ஸா அவர்கள் இலங்கையின் சகல பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வலைதளங்களிலும் தனது படைப்புக்களை வெளியிட்டு வருகின்றார். கவிதை சிறுகதைஇலக்கியம், விமர்சனம் எனும் இலக்கிய தளங்களில் கால்பதித்துள்ள இவர் கணக்கீட்டுத்துறையில் பல பட்டங்களைப்பெற்ற பன்முகத்திறமை கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழத்து இலக்கிய பரப்பில் தனியொரு முத்திரையோடு வலம்வரும், வளர்ந்துவரும் இளம்படைப்பாளியான இவரின் நூலுக்கு அணிந்துரையினை திறனாய்வாளர் திரு கே.எஸ். சிவக்குமாரன் அவர்கள் எழுதியிருப்பது சிறப்பாகும் நூலாசிரியரின் முழுவிபரங்களோடும் பின்னட்டைக்குறிப்பை கவிஞர் நஜ்முல் ஹுசைன் அவர்களும் எளிமையான அழகுடனும் நயத்துடனும் முன்னட்டையினை அலங்கரித்திருக்கின்றார் கவிதாயினி ரிஸ்னா அவர்கள்.

கவிதை சிறுகதை நூல்களை மட்டுமன்றி சஞ்சிகை,நினைவுமலர், பாடல்தொகுப்பு, குறுங்காவியத்தொகுதி என ஏனைய நூல்களினையும் விமர்சனரீதியாக இத்தொகுப்பில் காணமுடிகின்றது. ஆழமான வாசிப்பினையும் விரிவான ரசனையுணர்வும் பரந்த தேடலும்கொண்ட நூலாசிரியர் இலங்கையின் சகல பகுதிகளிலுமுள்ள எழுத்தாளர்களின் நூல்களை படித்து விமர்சித்திருப்பது நூலுக்கு மேலும் வலுசேர்த்துள்ளதோடு வாசகர்களாகிய எமக்கும் ஈழத்து எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகத்தினையும் அவர்களின் எழுத்துக்களை படிக்கும் வாய்ப்பினையும் ஆர்வத்தைனையும் பெற்றுத்தந்துள்ளது. ஆவணப்படுத்தப்படவேண்டிய இந்நூலானது ஆய்வுகளுக்கும் ஆர்வமுள்ள வாசகர்களின் நூல் தெரிவுகளுக்கும் சிறந்த வழிகோலாகவும் காணப்படுகின்றது ஆனாலும் ஒவ்வொரு நூல்விமர்சனத்தின்போதும் அந்நூல் வெளிவந்த காலப்பகுதியினை குறிப்பிட்டிருப்பின் பிற்காலத்தில் மேற்குறிப்பிட்டவர்களுக்கு உபயோகமாயிருந்திருக்கும் என்பது முக்கியமானதாகும்.

விமர்சனம்/ திறனாய்வு போன்ற எண்ணக்கருக்களுக்கு வித்திட்டிருக்கும் இவ் ரசனைக்குறிப்புக்களோடு மேலும் பல புதிய புதுமையான எழுத்துக்களோடு எம்மை சந்திக்கும் ஆற்றலுள்ள நூலாசிரியர் ரிம்ஸா முகமட் அவர்களை வாழ்த்துவதோடு இலங்கையின் எழுத்தாளர்கள் பற்றிய தேவையுடையோர் ஐயமற இந்நூலினை பெற்று பயன்பெறலாம் என்ற உறுதிமொழியுடன் விடைபெறுகின்றேன்.



நூல்: 'கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை' விமர்சனநூல்
ஆசிரியர்: ரிம்ஸா முகமட்
வெளியீடு: எஸ். கொடகே நிறுவனம்
வெளியிட்ட தினம்:07.07.2013
விலை:500/=





Friday, September 27, 2013

இனியெதுவும் வேண்டாம்

வந்துவந்து போகின்றாய்
வஞ்சியிவள் அறியாமல்
நொந்தழிந்து போய்விடுகின்றேன்
நேசமில்லா அந்நிமிடங்களையெண்ணி

காதலில் தொடங்கியது
கானலாய் முடிந்தது
மோதலில் முடிந்தது
மீண்டுமாய் தொட‌ருமா???

இடைவெளிகள் நமக்குள்
இம்மியளவும் இல்லையென்றே
இதயத்தை தேற்றியவேளை
இன்னொரு உறவுக்குள்
இணைந்துபோன உன்னை
இதயத்தால் வாழ்த்துவதன்றி
வழிவேறு அறியாமல்
வாய்விழுங்கிய வார்த்தைகளை
கண்ணீரால் சரிசெய்துகொள்கின்றேன்...

புல்லரித்துப்போகும் நம்
புன்னகைசுமந்த நாட்களின்று
செல்லரித்துப்போன கவிதையானது
செல்லாக்காசானது நேசம்மட்டுமல்ல‌
உண்மைகளுந்தான்

இன்னொரு ஜென்மம் வேண்டாம்
இனியொரு பிறவியும் வேண்டாம்
பெண்ணாய் பிறக்கும் அவலம் வேண்டாம்
பொருளில்லா வாழ்வெனக்கு வேண்டாம்
பகட்டான நேசங்கள் வேண்டாம்
பாதியில் முடியும் உறவுகளும் வேண்டாம்
பெறுமை தேடும் வேஷங்கள் வேண்டாம்
பொறுப்பில்லாத பாசங்களும் வேண்டாம்
போலியான உலகிலே
பெறுமதியென்று எதுவும் வேண்டாம்
இனியெதுவும் வேண்டாம்
இன்னொரு ஜென்மமும் வேண்டாம்





கணனிக்குமுன் சிறுவர்கள்!!

மாலை முழுதும் விளையாட்டு
மைதானம் வெறிச்சோடிக்கிடக்கின்றது
கணனிக்குமுன் சிறுவர்கள்



கடனும் இரவலும்

கடனும் இரவலும் நம்மை இன்னொருவரிடம் தாழ்ந்துபோகச்செய்திடும் திறவுகோல்கள்.




Saturday, September 21, 2013

கண்ணாம்பூச்சி

கண்ணாம்பூச்சியென்றுதான் இதுவரை
கண்திறவாதிருந்தேன்
கண்விழித்த‌போதுதான் புரிந்தது நீ
காணாமல் போயிருந்ததை...




Friday, September 20, 2013

அட்டையைப்போல‌

எத்தனையோ பேருடைய‌
நிம்மதிகளை உறிஞ்சிய உனக்கு
நிம்மதிக்கு பஞ்சமில்லைதான்
அட்டையைப்போல‌

உனக்கென

உறவுகள் கோடி
உலகினில் உண்டு
உனக்கென ஒன்றை
உயிரென கொள்ளு!!



காற்றுவெளி இணைய இதழில்

http://issuu.com/kaatruveli/docs/______________________________?e=1847692/4818419#search


வருடங்கள் இரண்டைக்கடந்து
வாழ்ந்துவிட்டேனுன்னோடு நான்
கற்பிழந்தவள்தான்
இப்போது
இன்னெருவனோடு என்னை
வாழச்சொன்னால்???

அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
சாஸ்திர சம்பிரதாயத்தில்
இணைக்கப்படாவிட்டாலும்
உன்னோடு வாழ்ந்துவிட்டேன் நான்
கற்பிழந்தவள் தான்

இதயங்கள் பரிமாரப்பட்டு
இன்பங்களையும் துன்பங்களோடு
இரண்டற பகிர்ந்துகொண்ட நம்
இனிமையான நாட்களில்
உன்னோடுதான் வாழ்ந்திருந்தேன் நான்
கற்பிழந்தவள்தான்

இரவுதோறுமுன்
கனவுகளைத்தழுவியே
இதயத்திலெப்போதுமுன்
நினைவுகளில் திளைத்தே
வாழ்ந்திருக்கும் நான்
கற்பிழந்தவள்தான்

தம்பத்தியத்தில் இணைவது மட்டுமல்ல‌
இதயத்தால் இணைந்துவிடுவதும்
உயிருள்ள திருமணந்தான்
அப்படியென்றால் நான்
கற்பிழந்தவள்தான்

உன் விரல்கள் பிடித்த‌
என் பயணங்கள்
நீ மீதம்வைத்து
நான் பருகிடும் தேநீர்
ஒற்றைப்பொதியில்
இருகைகள் இணைந்துண்ணிய‌
பொழுதுகள் எல்லாமே
தாம்பத்தியமாதலால் நான்
கற்பிழந்தவள்தான்

காதல்
அப்படியொன்றும் அற்பமில்லை
மனதால் இணைவதே
மாறாத மாங்கல்யந்தான்

நினைத்து நினைத்து மறப்பதற்கு
உள்ளமொன்றும் உம்வீட்டு
ஊத்தைக்கூடையில்லை
உயிருக்குள் எப்போதும்
உறுத்திக்கொண்டிருக்கு மூசி...

உறவால் தைத்துவிட்டதை
பிரித்தெடுப்பதும்
பிரிந்திடாமலிருப்பதும்
உம் கைகளில்தான் அதனால்
நான் கற்பிழந்தவள்தான்
என்னை வற்புறுத்தாதீர்
மறுமணம் செய்யச்சொல்லி
என்னை வதைக்காதீர் காதலை
மறக்கச்சொல்லி நான்
கற்பிழந்தவள்!!



Wednesday, September 18, 2013

பெற்றபிள்ளை

பெற்றபிள்ளை தூரமாகும்
வேளை இங்கு வந்தது அவன்
உற்றவேலை துறந்தபோது
சோதனையாய் வந்தது

அவலங்கள்??

உதிர்ந்துவீழும் இலைகள்கூட‌
உரமாகுது மரத்துக்கு
உன்னை பெற்ற அவர்களுக்கேன்
உள்ளம் நோகும் அவலங்கள்??




Tuesday, September 17, 2013

தனிமை

சந்தோஷந் தந்தாய் தனிமை
சங்கடங்களையும் தந்தாய்
பிரியத்தை விதைத்தாய் நெஞ்சில்
பிரிவின் வேதனையையும் விதிர்த்தாய்
அன்பினால் கூடினாய் அடிக்கடி
அமைதியின்மையையும் கூட்டினாய்
புன்னகையை மலர்வித்தாய் சட்டென்று
புண்களையும் மலர்வளையமாக்கினாய் இன்றோ
தனிமை சாம்ராஜ்யத்தில்
தலைமைப்பதவியை எனக்களித்து
தள்ளிநின்று ர‌சிக்கின்றாய்!!




Sunday, September 15, 2013

இடிதந்தாய்??

என்னை வடிவமைத்தாய்
என்னில் வடிவமைத்தாய்
எல்லாவற்றையும்
கண்ணீர் வடிப்பதற்காகவென்று
சொல்லாமலேன் இடிதந்தாய்??



நாளை என் மரணமென்றால்??


தீயென்பதால் நா சுடுவதில்லை
நாளையென் மரணத்தை இன்றே
உணர்வதில் தவறுமில்லை

இந்நொடி இல்லையென்றாலும்
காலந்தாழ்த்திய ஓர் நொடியில்
இது நிகழ்ந்தேயாக வேண்டும்
கண்மூடி அத்தருணத்தில் என்
நினைவுகளை சங்கமிக்கின்றேன்

அலறல்களும் அழுகுரல்களுமாய்
எனதில்லம் ஓலமிடும்
அற்பாயுளில் போய்விட்டதாய்
ஆதங்கப்படும் அனைவரிலும் என
தன்னையின் கதறல்களென்
நெஞ்சத்தைப் பிழிகின்ற்து
இத்தனை வருடங்களில்
எனைதாங்கிய தந்தை
வேதனையை விழுங்கமுடியாதவராய்
விம்மியழும் காட்சி ஐயகோ...

சங்கறுந்துவிழு மளவுக்கென்
சகோதரர்களின் வீறிட்ட அழுகை
அன்பென்ற ஆச்சரியத்தை
ஆழமாய் பிரதிபலித்துக்கொண்டிருந்தது
ஊரிலுள்ளவர் குழுமியிருக்க‌
உறவினர்கள் கலங்கிநிற்க‌
எனை பிடிக்காத சிலர்கூட‌
கன்னத்தில் கரம்வைத்ததும்
இப்போதுதான்
'பாவம் நல்ல பிள்ளை'
இறுதியில் எல்லாருக்குமான‌
மரண சான்றிதழ் எனக்கும்
கிடைக்கலாம்...

பழகிய உறவுகள்
நெருங்கிய சொந்தங்கள்
அறிந்த பந்தங்கள்
தெரிந்த நட்புக்களென‌
எல்லாரும் கலந்துகொள்ளலாம்
இறுதுயூர்வலத்தில்

வாய்வழிச் செய்தியறிந்து
அநுதாபங்கள் சில‌
வந்துவிழலாம்
ஆச்சரிய செய்தியாய் முகநூலில்
நட்புக்களின் கண்ணீர்துளிகள்
கவிதை வடிக்கலாம்
இதயம் நெகிழும் இறுதியூர்வலத்தில்
இளகாத நெஞ்சம் ஒன்றில்லாதிருக்கலாம்  ஆனால்
எனதிதயமறியா ஓர்நெஞ்சம் மட்டும்
இச்செய்தியறியாமலிருக்கலாம்

கதறல்களோடு கல்லறையாக்கப்பட்ட‌
எனதுடலம்
மலர் வளையங்களினால்
அலங்கரிக்கப்படும்
சாஸ்திர சம்பிரதாயங்கள்
சமய வழிபாடுகளுடன் என்
பூலோக வாழ்வின் பூரணமும்
ஆறடி நிலத்துக்குள் நிரப்பப்படும்
ஆறாத சோகங்களுடன்
நிறைவேறிய என்
வாழ்வியல் யாத்திரையுள்
முடிந்துபோனது எல்லாமே
நினைவுகளோடூ திரும்பிப்பாராமல்
திரும்பி போகுமுறவுகள்
நாற்பதாவது நாளை நினைவுகொள்வார்கள்
நிஜங்களுக்குள் தொலைந்துபோகும்
நிமிடங்கள்  நிஜமாயென்
ஞாபக சுவடுகளை தொலைத்துக்கொண்டிருக்கும்



பூ



பூமரத்துப் பூக்களும்
பூத்திருந்த பூ(பா)வை பார்த்து -வேரிலே
பூவொன்று பூத்திருக்கிறதென்று
கிளை பிரிந்தது உதிர்கின்ற‌தே!!







Saturday, September 14, 2013

இங்கில்லை!!

இழப்புகள் கொஞ்சமல்ல‌
இழப்பீடுகள் எதுமில்லை -க(த)ண்ணீரால்
உழைக்கும் விழிகளுக்கு
ஓய்வும் இங்கில்லை!!




இழப்பீடுகளுக்கான சரியான நிவாரணி காலத்தை தவிர வேறு பெரிய அருமருந்து ஏதுமில்லை... 

பொய்கள் களைதல்

போரும் பொறுப்பும் எமக்காம் -நல்
பேறு பெறுதல் வழக்காம்
தூறும் பொய்கள் களைதல்
தூவும் இனிமைக் கிலகாம்!!

Friday, September 13, 2013

மழலைப் புன்னகை

எதையோ இழந்துவிட்டதைப்போல‌
சிலவேளைகளில்,
எல்லாவற்றையும் இழந்துவிட்டதைப்போல‌
இதயம் துடிக்க 
மறுக்கின்ற போதெல்லாம்
மறு பிறப்பெடுப்பது உன்
மழலைப் புன்னகையில்தான்!!




இறவாமலிருக்கின்றேன்!!

நீ அருகில் இருக்கும்போது
இயங்காமலிருக்கின்றேன்
நீயென் உயிரிலிருப்பதால்தான் -இன்னும்
இறவாமலிருக்கின்றேன்!!



Thursday, September 5, 2013

இவள்தான் வேண்டுமென்று!!

இல்லத்தைப்பார்க்க தெரிந்த அவர்களுக்கு 
உள்ளத்தைப்பார்க்க முடிந்திருந்தால் 
ஒருவேளை அவளை பிடித்திருக்கும்
இவள்தான் வேண்டுமென்று!!




Wednesday, September 4, 2013

வாழபுறப்பட்டுவிட்டேன்...

(கல்முனை தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் 2013 ஜூலை மாதம் நடத்தப்பட்ட கவிதைப்போட்டியில் சான்றிதழ் பெற்ற கவிதை)





பெண்மையின் மேன்மையெல்லாம்
தென்றல் கலைத்த மேகம்போல‌
அநாயசமாய் அழிந்துபோகின்றது

தீக்கொண்டு சாம்பல்கண்டிடும்
தீவிரம் நெஞ்சுக்குள் பற்றியெறிகின்றது
எத்தனை காலத்துக்குத்தான்
புத்தகத்தில் மூடிய மயிலிறகாய்
பத்தினிக்கிரீடத்தை பாதுகாப்பது...

முப்பத்தைந்தை தாண்டிய -என்
முதிர்க்கன்னித்திரை கிழித்து
முழுமையாய் மூச்சுவிட்டது பிழையென்றால்
என்னைக் கிழித்த உம்
வார்த்தைக் கணைகளுக்கு
விஷந்தடவி எய்துகொண்டிருந்ததேன்...

இத்தனை வருட மிருந்தவள் -இப்போ
இஸ்டத்துக்கா செல்ல வேண்டும்
சாதிவிட்டு சாதிசென்றதற்கு
சாக்கடையில் வீழ்ந்து செத்திருக்கலாமென்ற‌
உங்கள் அற்பங்கள் என்னையொன்றும்
அழித்துவிடுவதில்லை...

மதம்மீறியது பிழையென்றால் -நீங்கள்
மருமகளுக்கு பதிலாக
மனையுடன் சேர்ந்த லட்சங்களை கேட்டதேன்??
சாதிக்கலந்தது சாபமென்றால்
சீதனத்தை மட்டுமே நீவீர்
தேடியதும் தீண்டாமைதான்

காதல் பாவமென்றுதானே
இத்தனை வருட காத்திருப்பு
அதற்கு உங்களால்
முதிர்க்கன்னியென்ற
முக்காட்டை மட்டுமல்லவா போர்த்தி
மூழ்கடிக்க முடிந்திருந்தது
வேர்கள் வெளிக்கிளம்பிய பின்னுங்கள்
வேலிகளுக்கிங்கு வேலையில்லை

மனம் பொறுக்குமளவுக்குங்கள்
சுடுசொற்கள் இருந்ததில்லையே அதனால்தான்
மனச்சிறைக்குள் மாண்டுபோயிருந்த‌
மாங்கல்யத்தை மருந்தாயிட்டுக்கொண்டேன்


வாலிபவேட்கையில் நானின்று
வர‌ம்புமீறி காதல்செய்யவில்லை
காலத்திடம் சிக்கிக்கிடந்த சில‌
முடிச்சுக்களை அவிழ்த்துவிட்டிருக்கின்றேன்
அவ்வளவுதான் ஆனந்தப்பட்டுக்கொள்ளுங்கள்

காலம்முழுக்க கன்னியாகவே
வாழவிட்டிருப்பீர்களா
மூச்சுக்கு மூச்சு
முடிந்திடா கேள்விகளால் என்னை
மூர்க்கத்தனமாயல்லவா கொன்றிருப்பீர்கள்

இரண்டில் ஒன்று
எடுக்கும் நேரத்தில்தான்
இதயமறிந்த இவன்வந்தான்
வாழ்வோடு போராடி சாவதிலும்
சாவோடு போராடு வாழ்வதென்ற முடிவோடே
சாதியினை கடந்து
மதத்தினை மறந்து
மனிதத்தோடு மட்டுமே
வாழபுறப்பட்டுவிட்டேன்...

எப்போது கல்யாணம்
ஏனின்னும் கல்யாணம்
சரிவரவில்லை என்ற‌
ஏளனங்களை தவிர்க்க‌
உங்களிடமிருந்து உத்தரவாதம்
வழங்கப்பட்டிருந்தால்
என்னாலும் வாழ்ந்திருக்கமுடியும்
காலமெல்லாம்
முதிர்க்கன்னியாகவல்ல‌
முழுக்கன்னியாக....

வேண்டும் வேண்டும்!!

அதிகம் படித்தவனும் வேண்டாம்
அரைப்படித்தவனும் வேண்டாம்
அகம்புரிந்திடுமறிவோடு
அன்பு சொரிந்திடுமொருவன் 
அமைந்திட்டாலே போதும்


அளவுக்கதிகமா யுழித்து
அலுவலகமே கதியென்று
அலட்டுமொருவன் வேண்டாம்
அளவோடு எல்லாமெதிலும்
அநுசரிப்பவனே போதும்


பணத்துக்கு பின்னால்
பாகயுருகு மொருவன் வேண்டாம்
பண்பில்லாப்பார் வையுடன்
பாவையர் பின்னலையும்
பங்காளனும் வேண்டாம்
பத்தோடு பத்துபேரை பார்ப்பினும்
பாதை தவறாதவன் வேண்டும்


காதலியென்ற கனவுக்கும்
மனைவியென்ற மகுடத்துக்கும் 
என்னுடன் மட்டும்வேலியிட்ட
அவன்மட்டும் வேண்டும்
வேறு எல்லா உறவுகளையும்
எல்லாரோடும் பகிர்ந்துகொள்ளும்
பரந்த மனமுள்ளவன்
வேண்டும் வேண்டும்



உன்னை மட்டுமே!!

புதிய இடம்
புதிய மனிதர்கள்
புதிய சூழலென்று
மாற்றங்கள் செய்துதந்தபோதும்
இதயம்
புதிது புதிதாய்
நினைத்துக்கொண்டிருக்கின்றது
மறந்துவிடச்சொன்ன‌
உன்னை மட்டுமே!!



ஏழை



பெரிய மனிதர்களின் 
ஆடைகள் எப்போதும்
வெள்ளையாகத்தான் இருக்கிறது
ஏழைகளின் 
உள்ளத்தைப்போல‌...!!!!!!!!1!!22!...........!!






Tuesday, September 3, 2013

வாழ்க்கையை

நீ விளையாட்டுப்பிள்ளைதான்
உன் குறும்புகளின்
ர‌சிகையும் நானேதான்
சற்றேனும்
எதிர்பார்க்கவில்லை -என்
வாழ்க்கையை
விளையாட்டுப்பொருளாய்
எடுத்துக்கொள்வாயென்று....




படிப்பினை!!

பாடங்களை விட‌
பாடுகள் சொல்லித்தருகின்றது
படிப்பினைகளை!!




Monday, September 2, 2013

உனக்குள்ளே...

உயிருள்ள விதையென்றால்
உள்ளிருந்து எழும்பும்
உனக்குள்ளே திறமையிருந்தால்
உலகுக்கே விளங்கும்!!



Sunday, September 1, 2013

வலிகள் மட்டும்

நம் பிரிவுகள்
உனக்கான
தண்டனையென்றே வழங்குகின்றேன்
ஏனோ
வலிகள் மட்டும்
எனக்கே வந்துவிடுகின்றது!!