Friday, September 20, 2013

காற்றுவெளி இணைய இதழில்

http://issuu.com/kaatruveli/docs/______________________________?e=1847692/4818419#search


வருடங்கள் இரண்டைக்கடந்து
வாழ்ந்துவிட்டேனுன்னோடு நான்
கற்பிழந்தவள்தான்
இப்போது
இன்னெருவனோடு என்னை
வாழச்சொன்னால்???

அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
சாஸ்திர சம்பிரதாயத்தில்
இணைக்கப்படாவிட்டாலும்
உன்னோடு வாழ்ந்துவிட்டேன் நான்
கற்பிழந்தவள் தான்

இதயங்கள் பரிமாரப்பட்டு
இன்பங்களையும் துன்பங்களோடு
இரண்டற பகிர்ந்துகொண்ட நம்
இனிமையான நாட்களில்
உன்னோடுதான் வாழ்ந்திருந்தேன் நான்
கற்பிழந்தவள்தான்

இரவுதோறுமுன்
கனவுகளைத்தழுவியே
இதயத்திலெப்போதுமுன்
நினைவுகளில் திளைத்தே
வாழ்ந்திருக்கும் நான்
கற்பிழந்தவள்தான்

தம்பத்தியத்தில் இணைவது மட்டுமல்ல‌
இதயத்தால் இணைந்துவிடுவதும்
உயிருள்ள திருமணந்தான்
அப்படியென்றால் நான்
கற்பிழந்தவள்தான்

உன் விரல்கள் பிடித்த‌
என் பயணங்கள்
நீ மீதம்வைத்து
நான் பருகிடும் தேநீர்
ஒற்றைப்பொதியில்
இருகைகள் இணைந்துண்ணிய‌
பொழுதுகள் எல்லாமே
தாம்பத்தியமாதலால் நான்
கற்பிழந்தவள்தான்

காதல்
அப்படியொன்றும் அற்பமில்லை
மனதால் இணைவதே
மாறாத மாங்கல்யந்தான்

நினைத்து நினைத்து மறப்பதற்கு
உள்ளமொன்றும் உம்வீட்டு
ஊத்தைக்கூடையில்லை
உயிருக்குள் எப்போதும்
உறுத்திக்கொண்டிருக்கு மூசி...

உறவால் தைத்துவிட்டதை
பிரித்தெடுப்பதும்
பிரிந்திடாமலிருப்பதும்
உம் கைகளில்தான் அதனால்
நான் கற்பிழந்தவள்தான்
என்னை வற்புறுத்தாதீர்
மறுமணம் செய்யச்சொல்லி
என்னை வதைக்காதீர் காதலை
மறக்கச்சொல்லி நான்
கற்பிழந்தவள்!!



No comments: