Sunday, January 31, 2016

திருகோணமலையில்


தடாகம் கலை இலக்கிய வட்டமும் கனடா படைப்பாளிகள் உலகமும் இணைந்து  இலங்கை மலேசிய படைப்பாளிகளை பாராட்டி விருது வழங்கும் வைபவம் 15.12.2015 அன்று திருகோண்மலை சன் ஷைன் ஹோட்டலில் நடைபெற்றது அந்நிகழ்வில் கலைஞர்களுடன்













                கவிதாயினி சிவரமணி அக்கா, தோழி சில்மியா மற்றும் மலேசிய                                                                   கலைஞர்களுடன்



படைப்பாளிகள் உலக ஸ்தாபகர் திரு. ஐங்கரன் அவர்களுடன்



Friday, January 29, 2016

என்னூரில் கள்ளன்


கள்ளன் வந்தான் என்னூரில்
கையை வைத்தான் பலநூறில்
மெல்லெம் வீட்டை உடைத்திட்டே
மெதுவாய் பையை நிரப்பிட்டான்...


இரவுச்சத்தம் கூவவில்லை
இரட்டை நாயும் குறைக்கவில்லை
அரவம் ஒன்றும் இல்லாமலே
அனைத்தையும் கொண்டே ஓடிட்டான்...


மர்ம மனிதன் நினைவாலே
மனிதர் உறக்கம் தொலைவாலே
மறைந்து பிடிக்க பார்த்துமே
விரைந்து போறான் சிக்காமலே..


ஆட்கள் இல்லா வீடுகளையே
ஆண்களில்லா கதவுகளையே
நோட்டம் விட்டே தட்டினானாம்
நோவாய் பயத்தை தந்தானாம்...


கண்ணி வைத்துப் பிடித்திடவே
கண்முன் கள்வனை கொணர்ந்திடவே
எண்ணி இரவில் விழித்தாரே
என்றன் ஊரின் சிங்கங்கள்....


வீசிய வலையில் வசமாக
வீழ்ந்துபோனான் நிஜமாக
தேடியவன் வேறு எவருமல்லன்
கூடவே இருந்த குடிகாரனே....


ஐந்துக்கும் பத்துக்கும் அல்லாடிய
ஜந்து வான அவனுக்கு
எந்த தொழிலும் கையிலில்லை
எடுத்தான் களவை தைரியமாக....


திருடன் சிக்கிய மகிழ்விலே
தினமும் நொந்த வெறியிலே
கருடன் போலே காளையர்கள்
கம்பால் தாக்கி வீசினாரே....


உழைத்து வாழா கள்ளனுக்கு
உள்ளமுடலும் காயந்தான் -தீங்கில்
தழைத்து ஓங்கி வளர்ந்தாலும்

தப்பு என்றும் தப்புத்தான்!!

ஒருமுறை நினைத்திடுவாயா

அருவெறுப்பாகத்தான் இருக்கின்றது
அகத்தழகை நீ அழகாய்க்காட்டியபின்

வெட்கங்களை செதுக்கி செதுக்கி
வெண்மையாய் பேணி பசப்புகின்றாய்

பாவம் அவர்கள் உனதான மாயையில்
பார்வையிழந்து போயினர்

பாவத்தின் சம்பளம் மரணம்
பரிதாபப்படுகின்றேன் உனக்காக‌

கேடுகளை கெட்டித்தனமா யாக்கியதை
கேட்டுவிட்டார்களென கொக்கரிக்கிறாய்..

கேவலம் நீயொரு கழிவு என்பதை
கேட்டுணர மறுக்கின்றாய்

ஒரே வாழ்க்கை ஒரே மனதென்பதை
ஒருமுறை நினைத்திடுவாயா

பிழைகள் மனித இயல்பு -அதையே
பிடித்துயர்ந்தால் உனக்கில்லை விடிவு













கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் (29.01.2016) வேலணையூர் தாஸ்

பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. 

வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது. 

இதன் தொடரில், இன்று 29.01.2016 வெள்ளிக்கிழமை எம்மோடு 25வது படைப்பாளியாக இணைந்து கொள்கின்றார்  இலங்கை, யாழ்ப்பாணம் கொழும்புத்துறையை சேர்ந்த  சித்த மருத்துவரும் எழுத்தாளருமான திரு. கந்தையா சோதிதாசன்அவர்கள். 

வேலணையூர் தாஸ்  என்ற பெயரில் எழுதி வரும் இவர், இலக்கியச் செயற்பாடுகளில் தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டு, வளரும் படைப்பாளிகளையும் ஊக்குவிக்கும் ஓர் வழிகாட்டியாகத் திகழ்கின்றார் “வாசகர்களின் பாராட்டே சிறந்த விருதென்பதே எனது நிலைப்பாடு. பொதுவாக பாராட்டு, பட்டங்கள் பெறுவதை நான் விரும்புவதில்லை. தீவிர செயற்பாடே ஒருவரை முதன்மைப்படுத்தும் என நம்புகிறேன்” என்று பண்பட்ட எழுத்தாளருக்கே உரிய பண்புகளோடு இணைகின்றார். இவரின் முழுமையான நேர்காணலைக்காணலோடு இணைந்து கொள்வோமா...



http://kalkudahnation.com/







01. தங்களைப்பற்றி…

நான் கந்தையா சோதிதாசன். வேலணையூர் தாஸ்  என்ற பெயரில் எழுதி வருகிறேன்.  சித்த மருத்துவராகத் தொழில் செய்கிறேன். வேலணையைப் பிறப்பிடமாகக் கொண்ட நான். தற்போது யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் வசித்து வருகிறேன்.  சிறு வயது முதல் கவிதைகள் எழுதி வருகிறேன். எனது கவிதைகள் தினக்குரல், உதயன், வலம்புரி போன்ற பத்திரிகைகளிலும் ஞானம், ஜீவநதி, கலைமுகம் போன்ற இதழ்களிலும் வார்ப்பு, யாழ் ஓசை, உயிர் மெய் ஆகிய இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ளது. எனது கவிதைத்தொகுதி மழைக்கால குறிப்புக்கள் 2014ல் வெளி வந்தது. 


ராஜ் சுகா:  உங்களது எழுத்துத்துறைப் பிரவேசம் பற்றி? 


வேலணையூர் தாஸ்: சிறு  வயதிலிருந்தே எனக்கு இலக்கியத்தில் ஈடுபாடு அதிகம். நிறைய சஞ்சிகைகள், புத்தகங்கள் வாசிப்பேன். இந்த வாசனைத்தேடல் தான் என்னை எழுதத் துாண்டியதெனலாம். பாடசாலையில் உயர் தர மாணவனாய் இருக்கிற காலத்தில், கையெழுத்துப் பிரதியொன்றில் எனது முதற்கவிதையை எழுதினேன். பின்பு பல்கலைக்கழகத்திலிருக்கின்ற காலத்தில் முரசொலிப் பத்திரிகையில் அதிகமான கவிதைகளை எழுதினேன். இப்படி என் எழுத்துப்பிரவேசம் ஆரம்பமாகியது.


 ராஜ் சுகா:  ‘யாழ் இலக்கிய குவியம்’ அமைப்பின் நிறுவுனராகச் செயற்படுகின்றீர்கள். இதன் ஆரம்பம், வளர்ச்சி, நோக்கங்கள் பற்றி எம்மோடு பகிர்ந்து கொள்ள முடியுமா? 


வேலணையூர் தாஸ்:  தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக செயற்பாடுகளை முன்னெடுத்தலே இலக்கியக் குவியத்தின் பிரதான நோக்கம். அந்த வகையில், யாழ்  இலக்கியக்குவியம் ஆரம்பத்தில் முகநுாலிலே தான் ஆரம்பிக்கப்பட்டது. பின் இதன் செயற்பாட்டு விரிவாக்கத்தின் தேவை கருதி ஓர் அமைப்பாக  30-07-2011ல் உருவாக்கப்பட்டது. இடையிலே சில நிர்வாக மாற்றங்களுடன், இன்று வரை இயங்கி வருகின்றது. தற்போது அமைப்பின் செயலாளராக ஜெ.வினோத், பொருளாளராக நெடுந்தீவு யோகேஸ் ஆகியோர் செயற்படுகிறார்கள். பல இளந்தலைமுறையினரும் மூத்த கலைஞர்களும் எம்மோடு இணைந்து செயற்படுகிறார்கள். இளம் கலைஞர்களை அறிமுகம் செய்தல், மூத்த எழுத்தாளரோடு இணைந்து தமிழ்ப்படைப்பாற்றலை விருத்தி செய்தல், இலக்கியக் கருத்தரங்குகள், நுால் வெளியீடுகள் மற்றும் கலை நிகழ்வுகளை நடாத்துதல். இதோடு, இணையத்தமிழ் வளர்த்தல் என்பன இலக்கியக்குவியத்தின் செயற்பாடுகளாகும். 



ராஜ் சுகா இவ்வமைப்பினூடாக நீங்கள் முன்னெடுத்த செயற்பாடுகள் குறித்து விவரிக்க முடியுமா? 


வேலணையூர் தாஸ் : நான் முதற்ச்சொன்னது போல் பல இலக்கியக் கருத்தரங்குகளை நடாத்தியுள்ளோம். பல நுால் வெளியீட்டுவிழாக்களை நடத்தியுள்ளோம். மேலும், புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் தாயகத்திற்கு வரும் போது, அவர்களைச் சந்தித்து உரையாடுகிற களமாகவும் இலக்கியகுவியம் செயற்படுகிறது. நாம் என்கிற கவிதை இதழை நடாத்தினோம். பொருளாதாரக் காரணங்களால் தற்போது நிறுத்தப்பட்டிருகிறது. தொடர்ச்சியாக வெளியிட முயற்சிகள் எடுக்கிறோம் 


ராஜ் சுகா: இளம் எழுத்தாளர்களின் படைப்புக்கள் பற்றி?


 வேலணையூர் தாஸ்:  இளந்தலைமுறையினா் கூடுதலாக எழுதத் தொடங்கியுள்ளார்கள். இது வரவேற்க வேண்டிய ஒரு விடயம். ஆனாலும், பலா் கூடுதலாக கவிதையே எழுதுகின்றார்கள். இதில் தரமானவையாக சிலருடைய கவிதைகளையே கவனம் கொள்ள முடிகிறது. கவிதை, சிறுகதை, கட்டுரை, இலக்கியமென பல துறைகளில் எழுதுகின்ற இளந்தலைமுறையினரில் கிரிஷாந், அனோஜன், ஆதிபார்த்தீபன், யாதார்த்தன், யோகேஸ், நெதா, மதுசாமாதங்கி, பிரியாந்தி, பிறை நிலா, கெளதமி போன்ற இளம் படைப்பாளிகள் யாழப்பாணத்தில் கவனத்துக்குரிய படைப்புக்களைத் தருகின்றனர். இதை விட, கொழும்பு, மன்னார், மட்டக்களப்பு மாவட்டங்களில் பலர் சிறப்பாக எழுதுகின்றனர். 


ராஜ் சுகா ஒரு படைப்பாளியின் ஆரம்பத்தைச் சரியாக அடித்தளமிடுவது ஏதோ ஒரு ஊடகமாகத்தான் இருக்கும். அந்த வகையில், இன்றைய ஊடகங்கள் பற்றி? 


வேலணையூர் தாஸ்:  உண்மை தான். ஒரு படைப்பாளியின் வளர்ச்சியில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. தினசரிகள், வார இதழ்கள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள் என்பன படைப்பாளிகளுக்கு களமமைத்துக் கொடுக்கிறது. வார இதழ்கள் இலக்கியப் பக்கங்களைத் தயாரிக்கும் போது, இடம் நிரம்பினால் காணுமென பொறுப்பில்லாமல் செயற்படுகின்றன என்ற குற்றச்சாட்டு பரவலாகவே முன் வைக்கப்படுகிறது. இதுவும் ஒரு வகையிலே உண்மை தான். ஊடகங்கள்  தரமான படைப்புக்களை வெளிக்கொணருவதில் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். தங்களது கல்குடா நேசன் இணையத்தளம் போல, ஏனைய இணையத்தளங்களும் இலக்கியத்தை ஊக்குவிக்குமுகமாக தீவிரமாகச் செயற்பட வேண்டும். 




ராஜ் சுகா: தமிழரின் கலை, கலாசார பண்பாடுகளைப் பாதுகாப்பதில், இன்றைய நவீன நாகரிக வளர்ச்சி எவ்வகையான ஆதிக்கத்தினைச் செலுத்துகின்றது.?


 நாகரீக வளர்ச்சியென்பது தவிர்க்க முடியாத நிகழ்வாகும். தமிழரின் கலை, கலாசாரப் பண்பாடுகளை சில நாகரீக உள்ளீடுகள் சிதைக்க முயன்றாலும் உதாரணம் புதிய இசைவடிவம் நாகரீகவளர்ச்சியோடு சேர்ந்து கலை, கலாசார அம்சங்களும் பேணப்படுகின்றன என்பது தான் உண்மை. 


ராஜ் சுகா:  நூலுருவில் வரும் எல்லாப் படைப்புக்களும் தரமானதாக இருக்கின்றதா? அல்லது ஓர் நல்ல வழிகாட்டலினூடாக, பட்டைதீட்டப்பட்டு தரமானதா இருக்கின்றதா? 


வேலணையூர் தாஸ் எந்தவொரு மொழியிலும் அச்சாகும் படைப்புக்கள் எல்லாம் தரமாய் அமைவதில்லை. ஆளுமையுள்ளவர்களால் படைக்கப்படுகின்ற படைப்புக்கள் கவனத்துக்குரியனவாகின்றன. 


ராஜ் சுகா:  மூத்த, இளைய படைப்பாளிகளுக்கிடையிலான உறவு, வழிகாட்டல்கள் தட்டிக்கொடுப்புக்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? 


வேலணையூர் தாஸ் எந்தவொருகாலத்திலும் இது அவசியமென உணருகின்றேன். மூத்தபடைப்பாளிகளே, இளையவர்களுக்கு வழிகாட்டியாகவும் மாதிரியாகவும் இருக்கிறார்கள். இளமைக்கே உரிய வேகமாகச் செயற்படுகின்ற எதையும் கேள்விக்குட்படுத்துகின்ற குணாம்சம் சில மூத்தபடைப்பாளிகளால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம். இருப்பினும், ஈழத்தைப் பொறுத்த வரை பல மூத்த படைப்பாளிகள் இளையவர்களுக்கு வழிகாட்டியாகச் செயற்படுகின்றார்கள். இலக்கியக்குவியத்தால் நடாத்தப்படும் அனேக கருத்தரங்குகளில் இடம்பெறும் கருத்தாடலில் மூத்த படைப்பாளிகளோடு சேர்ந்த இளையவர்களும் பங்கெடுக்கிறார்கள்.


ராஜ் சுகா:  உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் விருதுகள் ?


வேலணையூர் தாஸ்:  வாசகர்களின் பாராட்டே சிறந்த விருதென்பதே எனது நிலைப்பாடு. பொதுவாக பாராட்டு, பட்டங்கள் பெறுவதை நான் விரும்புவதில்லை. தீவிர செயற்பாடே ஒருவரை முதன்மைப்படுத்தும் என நம்புகிறேன். 2015ஆம் ஆண்டு தேசிய விருதிற்காக சிறந்த கவிதை நுாலுக்காக  தெரிவு செய்யப்பட்ட  மூன்று நுால்களில் ஒன்றாக எனது மழைக்கால குறிப்புக்களும் தெரிவு செய்யப்பட்டது.


 ராஜ் சுகா உங்களை சீர்தூக்கிப்பார்க்கக்கூடிய அல்லது உங்கள் வளர்ச்சிக்கு உதவியது என நீங்கள் நினைக்கும் விமர்சனங்கள்? 


வேலணையூர் தாஸ் ஆரம்பத்தில் எனது கவிதைகள் மரபுத்தளத்தில் அமைந்தன. சு.வி என அழைக்கப்படும் கவிஞர் சு.வி. வில்வரத்தினம் அவர்களுடைய வழிகாட்டலும் விமர்சனமுமே எனது கவிதைகள் புதிய தளத்தில் செல்லக் காரணமாய் அமைந்தது. 



ராஜ் சுகா தாங்கள் எழுதிய கவிதைகளில் தங்களை அதிகம் கவர்ந்த கவிதை எது? 


வேலணையூர் தாஸ்:  தழிழ்க் கவிதையின் அழகு காதல் கவிதைகளில் தான் அதிகமெனக் கருதுகிறேன். அதனால், காதல் கவிதைகளை அதிகம் எழுதினேன். “மழைக்காலக் குறிப்புக்கள்” தொகுதியில் இடம் பெற்ற இந்தக் காதல் கவிதை எனக்கு மிகவும் பிடித்தது. 


உன்னைபற்றிய கவிதைகள்.
 எங்காவது ஒளித்து வைக்க வேண்டும்
 உன்னைப்பற்றிய கவிதைகளை. 
உன்னைப் பற்றிய கவிதைகளை
 எங்கு ஒளித்து வைத்தாலும்
 காணாமல் போய் விடுகிறது. 
மேற்கு வானத்தின் கடை கோடியில்
 சொருகி வைத்திருந்தேன் 
காற்று எடுத்து சென்று விட்டது 
அந்த அழகிய சொற்கள்
 காலையின் மலர்களிலும் 
பனித்துளி முகங்களிலும் படிந்திருந்தது. 
வண்ணத்து பூச்சிகளும் சூரியனும் 
அதை வாசித்துக் கொண்டிருந்தது. 
ஒளிர்ந்து கொண்டிருந்த வானவில்லிலும்
 கவிதையின் இறுதிபகுதியிருந்தது. 
எங்கு வைக்கலாம் இசையில்
 இணைத்து வைத்தேன் அது 
சிறகு முளைத்து பறக்கிறது 
எண்ணற்ற வயலின் நரம்புகளாகி 
அதிர்ந்த காதல் மொழி 
காற்றில் பரவி 
உலகின் அழகான இடங்களில் 
தங்கி விடுகிறது.
 நதிகளில் கரைந்த சொற்களை 
மீன்களும் பாடுவதாக சொல்கிறார்கள்.
 இறுதியாக உனது பாடல்களை 
கனவுகளில் சேமித்தேன் 
இதை கனவும் களவவாடி சென்றிருக்கிறது 
அதிகாலை துாக்கத்தில் இருந்தவர்களுக்கு 
அன்பளிப்பாக கொடுத்திருக்கிறது. 
தேவ அமிர்ததத்தை உண்டவர்களாய் 
அதை கண்ட்வர்கள் மாறிப்போனார்கள்.
 கூடுகளில் ஒளித்தேன்
 பறவைகளின்  பாடலாயிற்று 
நிலத்தில் மறைத்தேன் 
சோலையாயிற்று 
நிலவில் ஒளிக்கலாம் 
மேகங்கள் விடப்போவதில்லை. 
இப்பொழுது உன்னைப்பற்றிய கவிதைகளை 
நெருப்பில் ஒளித்தேன் 
இளைஞர்கள் நெருப்பில் இறங்க ஆரம்பித்திருக்கிறார்கள்.



ராஜ் சுகா நீங்கள் வாசித்து மகிழ்ந்த படைப்பு பற்றி? 

வேலணையூர் தாஸ்: அண்மையில் வந்த நிலாந்தனுடைய யுகபுராணம் என்னை மிகவும் பாதித்த கவிதைத்தொகுதி தமிழருடைய போர்க்கால வாழ்வின் அக விமர்சனமாய் அமைந்த நல்லதொரு படைப்பு. 


ராஜ் சுகா வளரும் படைப்பாளிகளுக்கு நீங்கள் தரும் ஆலோசனைகள்? 


வேலணையூர் தாஸ் இத்தகைய கேள்விகளை தவிர்க்கிறேன் ஏனைய படைப்பாளிகளை போலவே தான் நானும் இதற்கு மேல் அவர்களுக்குச் சொல்ல என்ன இருக்கிறது. எழுத்தை நேசியுங்கள். கூடுதலாக வாசியுங்கள். 

ராஜ் சுகா வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புவது? 



வேலணையூர் தாஸ்: என்றும் உங்கள் ஆதரவே என் போன்ற படைப்பாளிகளைத் தொடர்ந்து எழுத வைக்கிறது. உங்கள் பாரட்டும் விமர்சனமும் தான் நல்ல படைப்பாளிகளைக் கட்டமைக்கிறது என நம்புகிறேன். இயந்திரமயமாய் ஆகிவிட்ட வாழ்க்கைக்குள்ளும் தமிழ் இலக்கியம் வளரப் பணி புரிகின்ற உங்களுக்கும் உங்கள் இணையத்தளத்திற்கும் எனது  நன்றிகள்.

Monday, January 25, 2016

‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் வெளியீட்டில்...... (24.01.2016)

கவிஞர் ஜனுஸ் அவர்களின்   ‘மூசாப்பும் ஒரு முழ வெயிலும்’ கவிதை நூல் வெளியீட்டில்......






01. நூலினை பெற்றுக்கொள்ளும்போது...















Friday, January 22, 2016

கொ(ள்)ல்வோம்

நல்ல தருணங்களை மனதில் கொள்வோம்
தந்த காயங்களை மனதால் கொல்வோம்.

வெள்ளி "தினகரன்" பத்திரிகையில் வெளிவந்தது (22.01.2016)



இன்றைய வெள்ளிக்கிழமை 'தினகரன்' பத்திரிகையில் வெளியான எனது ரசனைக்குறிப்பு (கவிஞர் நுஸ்ரி அவர்களின் 'கடல் தேடும் நதி' கவிதை நூலுக்கானது)











“கல்குடா நேசனின் 24வது இலக்கிய நேர்காணலில்” (22.01.2016) கவிஞர் யோ.புரட்சி

“கல்குடா நேசனின் 24வது இலக்கிய நேர்காணலில்” இணைந்துள்ளார் கவிஞர், எழுத்தாளர், வெளியீட்டாளர் யோ.புரட்சி அவர்கள்
***********************************    ********************************       ************************************************







http://kalkudahnation.com/?p=31568

பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது. 

இதன் தொடரில் இன்று 22.01.2016ம் திகதி வெள்ளிக்கிழமை எம்மோடு 24வது படைப்பாளியாக இணைந்து கொள்கின்றார் இலங்கை வள்ளுவர் புரத்தைச்சேர்ந்த கவிஞரும் எழுத்தாளரும் செல்லமுத்து வெளியீட்டு ஸ்தாபகருமான யோ.புரட்சி அவர்கள். கடலிலும் காட்டிலும் கல்வேலிக்குள்ளும் தனது நூல்களை வெளியிட்டு வித்தியாசமான அநுபவங்களை வாசகர்களுக்குத் தந்த கவிஞர் யோ.புரட்சி அவர்கள் “சமூகத்தில் வெளிவரும் குற்றச்செயல்களில் படைப்பாளர்களும் தானே அடக்கம். எனது பார்வையில் தற்போதைய காலத்தில் மிகக்குறைந்தளவான சமூவியல் மாற்றங்களினையே படைப்புக்கள் செய்கின்றன” என்று தனது கருத்தினை ஆதங்கமாகவும் ஆலோசனையாகவும் தொடர்கின்றார் யோ.புரட்சி அவர்கள். 


ஏன் இப்படிக்கூறுகின்றார் என்ற பதில் இதோ அவரது நேர்காணலில்…..


 ராஜ் சுகா:  கல்குடா நேசன் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. தங்களைப்பற்றிய அறிமுகம்? 

கவிஞர் யோ.புரட்சி: ஈழத்தின் முக்கிய தீவு முல்லைத்தீவு. அங்கே வள்ளுவர்புரம் எனும் திறம்மிகு ஊர் எனதூர். அம்மா செல்லமுத்து. அப்பா யோகநாதன். படைப்புலகோடு என்னையும் இணைத்துப் பயணிக்கும் சிறு பறவையாய் நான். பாரதி மகா வித்தியாலயம் கவி தந்த அன்னை. இரு சோதரிகளும், சோதரரும். வாழ்வின் நெருக்கடிமிக்க சூழலொன்றினால் பதினாறு வயதிலேயே நான் குடும்பத்தினரை விட்டுப்பிரிந்தேன். 


ராஜ் சுகா இலக்கியத்தில் காலடி வைத்த அநுபவம்? 


கவிஞர் யோ.புரட்சி: பதினாறு வயதிலே காதலுக்குப் பதிலாக கவிதையே வந்தது. அதுவே, காதலியுமானது. கல்விச்சாலையில் எழுதிய கதை நினைவில் நின்றாலும், கானகத்திலே எழுதிய முதற்கவியே இலக்கியத்தின் முதற்படி.. அதுவே முதல் அடி.


 ராஜ் சுகா எவ்விலக்கியத்தில் அதிக ஈடுபாடுள்ளது? 


கவிஞர் யோ.புரட்சி: ஒரு தாய் எல்லாப் பிள்ளைகளையும் சமமாய் நேசிப்பது போல, எல்லா வகை இலக்கியங்களையும் செய்கிறேன் நேசிப்பு. ஆனாலும், கடைசிப் பிள்ளையின் மீது அதிகம் செல்லம் பொழியும் சில தாய்மாரைப் போலவே, கவிதைக்கு அதிகம் செல்லம் கொடுக்கின்றேன். அதையே அதிகமாய் அணைக்கின்றேன். அவை அல்லாதவற்றையும் நித்தம் நினைக்கிறேன். 


ராஜ் சுகா உங்களது ஏனைய செயற்பாடுகள் குறித்து? 


கவிஞர் யோ.புரட்சி: என்னை உயர்த்துவதோடு இன்னொருவரையும் உயர்த்திவிட இதயம் விரும்புவதே பெரிய செயல்தான். என்னால் இயன்றதை சேர்த்தும்இ இதயமுள்ளோருடன் கை கோர்த்தும் சமூகப் பணிகளினை தயையுன் செய்கிறோம். இது மட்டுமே இதயத்தின் நிறைவு. அதில்தான் அன்பின் கரைவு. 


ராஜ் சுகா “செல்லமுத்து வெளியீட்டகம்” அதன் வளர்ச்சி, செயற்பாடுகள் குறித்து? 



கவிஞர் யோ.புரட்சி: படைப்பினை வெளியிட துணையற்ற சொந்தங்களுக்கு தோள் கொடுப்பதே செல்லமுத்து வெளியீட்டகம். ஆனாலும், அதையும் அமைதியாகவே நகர்த்துகிறோம். இது விதை போடப்பட்டு முளைத்து விட்டது. இப்போது இலைகள் மட்டுமே. கிளைகள் தோன்றவில்லை. ஆனாலும், அந்த இலைகள் பலருக்கு மருந்தாகின்றது மகிழ்ச்சியே. இயன்றதை ஏற்ற‌ வழிகளூடாகச் செய்து கொடுக்கின்றோம். எம்மிடம் ஒப்படைக்கப்படும் நூல்களையும், பிற படைப்புக்களையும் நேர்த்தியாக முடித்துக் கொடுத்து, வெளியீட்டு நிகழ்வுகளையும் அதிக சிரத்தையும் நிறைவாக்கி கொடுக்கிறோம். இன்னும் மமுன்னேறுவோம். முன்னேறுவோம். 


ராஜ் சுகா படைப்பாளிகள் உலகம் அமைப்பின் இலங்கை செயற்பாட்டாளராய் செயற்படுகின்றீர்கள் அதனுடைய வேலைத்திட்டங்களையும் இலங்கை படைப்பாளிகள் பெற்றுக்கொண்ட நன்மைகளையும் எதிர்கால நோக்கங்களையும் விவரிக்க முடியுமா? 


கவிஞர் யோ.புரட்சி: ‘படைப்பாளிகள் உலகம்’ என்பது ஒரு சுமை தாங்கி. ஈழத்தவர் படைப்புக்களை தாங்கும் ஓர் தூண். எவ்வித வர்த்தக நோக்கமுமின்றி, எம்மவர் படைப்புக்களை உலகமெலாம் கொண்டு சென்று எல்லோருக்கும் இறக்கி வைக்கும் விமானமே ‘படைப்பாளிகள் உலகம்’. ஆரம்பித்த சில நாட்களிலேயே அழகாய் நடையிடும் குழந்தையாய் ‘படைப்பாளிகள் உலகம்’. அதிகமானோர்க்கு தோள் கொடுக்கின்றது. இங்குள்ள படைப்புக்களை புலம்பெயர் தேசத்திற்கும், புலம்பெயர் தேசங்களிலுள்ள படைப்புக்களை ஈழத்திற்கும் சேர்ப்பித்து படைப்பாளிகளை ஊக்குவித்த‌தோடு, பலரின் படைப்புக்களை வெளியீடாக்கி ஒளி கொடுத்திருக்கின்றது. திரு ஐங்கரன் கதிர்காமநாதன் அவர்கள் இதன் நிறுவுனராக தன் பணியை நேர்த்தியாய் பூர்த்தி செய்கிறார். சங்கீதா இலங்கையின் செயலாளர். ஈழத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் பணிகளை விரிவாக்கி, படைப்புக்களை பொழிவாக்கி எல்லோரையும் இணைத்து, இதயத்துடன் அணைத்துப் பயணிக்கிறோம்.


 ராஜ் சுகா சிறுகதைஇ கவிதை இரண்டில் எதனை நீங்கள் உங்களை ஒரு நல்ல படைப்பாளியாக காண்கின்றீர்கள் அல்லது காண விழைகின்றீர்கள்? 

கவிஞர் யோ.புரட்சி: இரு சாலைகளிலும் சமமாய் நடையிடுவதாய் உணர்கிறேன். கவி, கதை இரண்டும் குறித்து எந்தனுக்கு வந்த கருத்துக்கள் இதைச் செப்பிற்று. நாமே நம்மைப் பற்றி நினைக்க ஏதுண்டு. வானவில்லின் அழகை வானவில் சொல்லுமா? வர்ணிப்பவன் தானே சொல்ல வேண்டும்.


 ராஜ் சுகா உங்கள் படைப்புக்களுக்கு கிடைத்த விருதுகள்? 


கவிஞர் யோ.புரட்சி மேடையில் கிடைத்தவை சில. மன மேடையில் நிலைத்தவை பல. ‘உங்கள் கவிதைகளும், கதைகளும் மெனிக்பாம் முகாமில் எங்களுக்கு ஆறுதலாய் இருந்தன’ என்று மக்களும், ‘உங்கள் கவிதைகள் நாங்கள் எல்லாரும் வாசிச்சம்’ என்று ஐந்து வயது மழலைகளும் சொன்னவை பெரிய விருதுகள். எங்கோ ஒரு மூலையில் பிறந்த எந்தன் பாடலொன்றினை உலக் சாதனைப் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடியதை மறக்க முடியாது. 






ராஜ் சுகா விமர்சனங்கள் பற்றி உங்கள் அபிப்பிராயம்? தங்களுக்கு வந்த விமர்சனங்கள் எப்படிப்பட்டவை? 


கவிஞர் யோ.புரட்சி: விமர்சனம் என்பது யுத்த களத்தில் ஏவப்படும் அம்பு. சுத்த வீரன் அதை நேரே நின்று எய்கிறான். கோழை மறைந்திருந்து எய்கிறான். இரண்டு அம்புகளும் என்னைத் தாக்கின. ஆனாலும், உயிர் போகுமளவிற்கு தாக்கவில்லை. தாயாக ஆசைப்பட்டால் பிரசவ வேதனையைத் தாங்கவும் தயாராய் இருக்க வேண்டும். படைப்பாளனாக ஆசைப்பட்டால் விமர்சனத்தை தாங்க தயாராய் இருக்க வேண்டும். மாங்காயை வீழ்த்தும் கல் மலையை விழுத்தாது. தைரியமற்ற படைப்பாளன் கல் பட்டதும் விழும் மாங்காய் போல விழுகிறான். நெஞ்சுரம் கொண்ட படைப்பாளன் மலை போல அசையாமலிருக்கிறான். எவருமே எப்படியும், எத்தனையும் முகநூல் உருவாக்கலாம் எனும் அனுமதியிருப்பதால் முகநூல் பழிவாங்கல்களை தமிழ்ச்சமூகம் கையிலெடுத்திருக்கிறது. இப்படியானவையும் எம்மைத்த தாக்கிய போது, கேடு செய்வோரை மன்னிக்கவும், அவர்களுக்காக  வேண்டுதல் செய்யவும் இயேசு கிறிஸ்து மொழிந்த வார்த்தைகள் எம்மைப் பலப்படுத்தி அமைதியாக்கின. படைப்புக்கள் தொடர்பாக வந்த நேரான, மறையான் விமர்சனப்பூக்களை எமது மன மாலையில் கோர்த்துக்கொள்வேன்.


 ராஜ் சுகா: நூல் வெளியீடுகளில் ஏன் புதுமையை விரும்பிச் செய்கிறீர்கள்?


 கவிஞர் யோ.புரட்சி: நாம் பயணிக்கும் பாதை சரியாக இருப்பது மட்டுமல்ல. தனித்துவமானதாகவும் இருப்பது நல்லது தானே. எல்லாவற்றிலும் புதுமை புகுத்தப்படும் போது வெளியீட்டில் மாத்திரம் விலக்கு எதற்கு? காடு, கடல், புல்வெளி, பூங்கா, மரச்சோலை, கல்வேலி, குள‌க்கரை, குடிமனை என்றெல்லாம் நாம் வெளியீடுகளை நடாத்திய போது வந்தோர்க்கும், கேள்விப்பட்டோர்க்கு நிறைவு கிடைத்தமை எமக்கும் நிறைவே. 


ராஜ் சுகா “புரட்சி” இப்புனைப்பெயர் வருவதற்கான விஷேட காரணம் என்ன? 


கவிஞர் யோ.புரட்சி காலம் என் மீது கோலம் போட்டது. அந்தக் கோலத்தின் பெயரே ‘புரட்சி’ என்றானது. வாழ்க்கையில் மாற்றம் தந்த பெயர்.  வாழ்க்கையை மாற்றிய பெயர். என்னை ஏற்றிய பெயர். எல்லோருக்கும் போலவே எனக்கும் பிடித்த பெயர். இந்தப்பெயருள் ஏதோவோர் சக்தி, ஒரு வித யுக்தி, இலக்கிய முக்தி இருப்பதாய் நினைக்கிறேன். அதனால் அப்பெயரை ஆசையோடு அணைக்கிறேன். 


ராஜ் சுகா இன்றுகளில் கவிஞர்களின் வளர்ச்சி கணிசமாகவுள்ளது. இது இலக்கியத்தில் எவ்வாறான மாற்றத்தைத் தருகின்றது என நினைக்கின்றீர்கள்? 


கவிஞர் யோ.புரட்சி உயர்தல் என்பது வளர்ச்சி ஆகிடுமோ. உயரம் குறைந்த சில தென்னைகள் காய்த்துக் குலுங்குவது போல, உயரம் கூடிய தென்னைகள் காய்ப்பதில்லை. கவிஞர்களின் எண்ணிக்கை வள‌ர்ச்சி கண்டிருப்பது நிறைவே. ஆனாலும், கவிதைத் தரம் குறித்த கேள்விகள் எழுந்திருப்பது ஒரு குறைவே. ஒரு காலத்திலே கவிஞனும், எழுத்தாளனும் கதாநாயகர்களுக்கு ஒப்பாக மக்களால் பார்க்கப்பட்டனர். அந்த நிலை இப்போதுள்ளதா? என்பது குறித்து பரிசீலிக்க வேண்டியுள்ளது. ஒரு வீட்டில் பலமான இரும்புப் பெட்டியுண்டு. ஆனால், அதற்குள்ளே எதுவுமே இல்லை என்றால் அந்தப்பெட்டி எதற்கு? நூல்களும் ஒரு பலமான பெட்டியே. அதற்குள் ஏதாவது இருக்க வேண்டுமென மக்கள் விரும்புகிறர்கள். அப்படியிருந்தால் அதை அவர்கள் சுமப்பார்கள். இல்லாவிட்டால், ஒதுக்குவார்கள். வாசனை இல்லா வாசனைத் திரவியங்களினை யாரும் விரும்பமாட்டார்களே. 





ராஜ் சுகா யுத்தத்துக்குப் பின்னரான நம் மக்களின் மனநிலை பற்றி? 


கவிஞர் யோ.புரட்சி : வர்த்தகப் பொருட்களின் வருகை வாடிய உள்ளங்கள் சிலரை மாற்றி விட்டதோ எனும் பார்வை இருந்தாலும், இடிந்து போன இதயங்களுக்கு ஏதுமே கிடைக்காத மாதிரி தான். தலைமயிர் சிதைக்கப்பட்டால் மீண்டும் வளரும். தலையே சிதைக்கப்பட்டால் வளருமோ. இந்த இரு சாராரும் இப்போதும் எம்மண்ணிலிருப்பதை மறுக்க முடியாது.


 ராஜ் சுகா மூத்த, இளைய படைப்பாளிகளுக்கு மத்தியிலிருக்கும் தொடர்பு பற்றி? 


கவிஞர் யோ.புரட்சி கைபேசியின் வருகை நிலையான தொலைபேசிகளுக்கான முக்கியத்துவத்தை குறைத்து விடவில்லை. ஆனாலும், கைபேசிகளே அதிகம் பாவிக்கப்படுகின்றது. மூத்த படைப்பாளர்கள் நிலையான தொலைபேசி போலவே வலுவானவர்கள். அவர்கள் ஆலமரம் போன்றவர்கள். ஆனாலும், நிழல் கொடுக்கா ஆலமரங்கள் நின்றென்ன இலாபம் என்பதால், இவ்விதமான சிலரை நோக்கி இள‌ம் படைப்பாளர்கள் செல்வது குறைவு. நாம் அறிந்த வரையில் ஈழத்தின் அதிகமான மூத்த படைப்பாளர்கள் இளையவர்களோடு இனிய தொடர்பில் உள்ளன‌ர். அவர்கள் ஊக்குவிக்கின்றனர். நானே அதற்கு நல்லதோர் உதாரணம். மூத்த படைப்பாளர்கள் எமக்கு உரமிட்டு ஊக்குவிப்பதை உண்மையாய் காண்கிறேன். 


ராஜ் சுகா இலக்கியத்தால் எவ்வகையான சமூக மாற்றத்தினைச் செய்ய முடியுமென நினைக்கின்றீர்கள்? 

கவிஞர் யோ.புரட்சி நித்தம் மருத்துவமனைகளும், மருத்துவர்களும் தோன்றியும், நோயினை இல்லாமலாக்க முடியவில்லையே. படைப்பினால் ஏற்படுத்தப்படும் சமூக மாற்றமும் இவ்விதமானதே. ஒரு புறம் மாற்றங்களை ஏற்படுத்த படைப்புக்கள் உருவாகினாலும் அந்தப் படைப்பு உரியவர்க்குப் போகா நிலையே காணப்படுகிறது. விபச்சாரி ஒருத்தி தன் தொழிலை விட்டு, தன் மனோநிலையை மாற்றி நல்வழிக்குத் திரும்பும் வகையில் ஒருவர் தரமான படைப்பொன்றை உருவாக்குகிறார். அதை விபச்சாரி படிக்க வேண்டுமே. உரியோர்க்கு படைப்புக்கள் சேராமல் சமூக மாற்றம் எப்படி? இன்னுமொன்று சமூகத்தில் வெளி வரும் குற்றச்செயல்களில் படைப்பாளர்களும் தானே அடக்கம். எனது பார்வையில் தற்போதைய காலத்தில் மிகக் குறைந்தளவான சமூவியல் மாற்றங்களினையே படைப்புக்கள் செய்கின்றன. அதை மாற்றுமளவிற்கு நாம் முன்னேற வேண்டும்.


 ராஜ் சுகா இதுவரை எழுதிய நூல்கள், எழுதவிருக்கும் நூல்கள் எதிர்கால இலக்கு? 


கவிஞர் யோ.புரட்சி: போருக்கு முன் படைத்தவை பொசுங்கிப் போயின. போருக்குப் பின்னர், ‘இடம்பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய்'(மரச்சோலையில் வெளியிட்ட கவிதை நூல்) ‘எதிர் வீட்டு நாயும் என் ஏழை நாயும்'(கடலில் வெளியிட்ட கவிதை நூல்) ‘ஆஷா நாயும் அவளும்’ (காட்டிலே வெளியிட்ட சிறுகதை நூல்) ஒவ்வொரு வருடமும் ஒரு நூல் வெளியிட விருப்பு. ‘வள்ளுவர்புரம் முதல் முல்ளிவாய்க்கால் வரை’ வரலாற்றுக்கதை. செல்லமுத்து’ கிராமிய நாவல் என்பன வெளிவரவுள்ள‌ன


. ராஜ் சுகா பொதுவாக எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள நினைப்பது? 


கவிஞர் யோ.புரட்சி இயேசு கிறிஸ்து கூறிய வார்த்தைகள் ‘உங்கள் பகைவர்களை அன்பு செய்யுங்கள். உங்களை சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுகு நன்மை செய்யுங்கள். உங்களை அவமானப்படுத்துகிறவர்களுக்காகவும், துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் வேண்டுதல் செய்யுங்கள்.