Friday, September 14, 2012

பகிர்வு கட்டுரை தொகுதி மீதான ரசனை வெளிப்பாடு

  வல்வெட்டித்துறையைச்சேர்ந்த கணித ஆசிரியரும் எழுத்தாளருமான சீனா.உதயகுமார் அவர்களின் அண்மைய வெளியீடாக 'பகிர்வு'கட்டுரைத்தொகுதிஇலக்கியத்துள் கால்பதித்துள்ளது.முழுமையாக இந்நூலில் ஆசிரியர் உதயகுமார் அவர்கள் ஒரு சிறந்த வாசகனாய் நல்ல விமர்சகனாய் வெளிப்பட்டுள்ளார். தான் வாசித்த நேசித்த விடயங்களை மற்றவர்களோடு பகர்ந்துகொள்ளும்போது அது மற்றவர்களின் வாசிப்புத்திறனையும் வளர்த்துவிடுகின்றது அநத விடயத்தினை இக்கட்டுரை தொகுதியானது முழுமையாக மேற்கொண்டுள்ளது எனலாம்.

பகிர்வு எனும் பொருத்தமான தலைப்பும் அட்டைப்படமும் சிறப்பாக அமைந்துள்ளதுடன் நூலுக்கு அருட்திரு தமிழ்நேசன் அடிகளார் அவர்களின் கனதிமிக்க அணிந்துரை ம்க்கிய இடத்தினை பெறுகின்றது.புரிதலின் முழுமையினை இவ்வணிந்துரை மூலம் விளங்கிக்கொள்ளலாம்.அந்தவகையில் இத்தொகுப்பினை 4 பகுதிகளாக வகுத்து தனது கருத்தை கச்சிதமாக வழங்கியுள்ள தமிழ்நேசன் அடிகளாரின் பாணி நூலின் விளக்கங்களை இன்னும் இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியதாக அமைந்துள்ளமையை முக்கியமாக குறிப்பிடலாம்.

பரந்துபட்ட வாசிப்புத்தேடலுனூடாக தான் அநுபவித்த விடயங்களை வித்தியாசமான கோணத்தில் சுவாரஸ்யமாக பகர்ந்துள்ளவிதம் நூலின் மீதான ஆர்வத்தினை அதிகரிக்கின்றது எனலாம். 20 தலைப்புக்களில் அமைந்த கட்டுரை தொகுதியானது, "தங்கத்தமிழ் மலையின் பரகசியம்" எனு முதலாவது தலைப்பில் பேராசிரியர் கார்த்திக்கேசு சிவத்தம்பி அவர்களின் இலக்கியப்பணியின் விரிவினையும் பேராசிரியரின் ஆளுமையினையும் திறமைகளையும் சிறப்பாக எடுத்தியம்பி அவருக்கு 'தங்கத்தமிழ் மலை' என்ற மகுடத்தினையும் கொடுத்திருப்பது மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது.

'சிரிப்பில் தோன்றிய சிந்தனை சிற்பி' என கலைவாணர் என்.எஸ். கிருஸ்ணன் பற்றியும் அவரின் திறமைகள் சாதுரியங்கள் பற்றியும் தெளிவுபடுத்தி சிரிப்பின் மகத்துவத்தை தனது இரண்டாவது கட்டிரையுல் குறிப்பிட்டுள்ள ஆசிரியர் ஆறுதிருமுருகன் அவர்களையும் அவருடன் தான் பெற்ற நட்பினையும் நெகிழ்ந்து போற்றியுள்ளார்.அதேவேளை கவிஞர் மூ.மேத்தா அவர்களின் எழுச்சிமிக்க கவிதைகளை அடையாளப்படுத்தி விபரித்துள்ளமையும் பாடலாசிரியர் பா.விஜய் அவர்களின் பாடல்வரிகளை மேற்கோலிட்டு தனது ரசனை வெளிப்பாட்டை தந்துள்ள விதமும் லயிக்கச்செய்கின்றது. அதேவேளை ஈழத்து கவிஞர்கள் பற்றியும் அவர்களின் கவிதைகள் பற்றிய தேடலும் முக்கிய இடத்தினை பெறுகின்றது.

 'சிந்தனை செய்! சிரி மனமே' எனும் தலைப்பில் ஆங்கில ஆசிரியரான ஷெரிடன் ,ஆபிரகாம் லிங்கன் ஆகியோரின் வாழ்க்கையினூடாக சிந்திக்கவும் சிரிக்கவும் கூடிய சம்பவத்தினை விபரித்துள்ளார். சாதியம் பற்றிய விடயத்தினை தொட்டு மிக நேர்த்தியான, சமூகம் சிந்திக்கக்கூடிய வகையில் ஆராய்ந்திருப்பது வரவேற்கக்கூடியது. சாதி ஒழிப்புபற்றிய பாடங்களும் ஆக்கங்களும் இலக்கியங்களும் அதாவது அதனை வகைப்படுத்தி தெளிவுபடுத்தும் விடங்களினால் உண்மையில் சாதியம் ஒழிந்துவிடப்போவதில்லை என்பதனை ஆழமாக சொல்லியுள்ள விதம் நிச்சயமாக சிந்திக்கச்செய்கின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது.

இவ்வாறு கல்வி, விளயாட்டு, சமூகம்சார்ந்த விடயங்கள், இலக்கிய கர்த்தாக்கள் என பல்வேறு  தளங்களில் தனது கருத்துக்களை கட்டுரையாக்கியுள்ள ஆசிரியர் ஓர் சிறந்த விமர்சகராக வெளிப்பட்டுள்ளார்.வாசகர்களை நகரவிடாது பற்றிக்கொள்ளும்படியான இவரது எழுத்து உண்மையில்  வாசிப்புக்கு ஏற்ற சிற‌ந்த ஒரு தொகுதி என்பதில் ஐயமில்லை. அதேவேளை அணிந்துரையில் குறிப்பிட்டதுபோல 'ஒரு தொகுப்பிற்குள் பலவகையான கட்டுரைகளை கொண்டுவர முயற்சித்திருக்காமல் ஒரே வகையான கட்டுரைகளை மட்டும் கொண்டுவந்திருந்தால் நூலின் கனதி இன்னும் அதிகரித்திருக்கும்'  என்ற கருத்தினை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

புதியதேடல், வித்தியாசமான பார்வை, சுவாரஸ்யமான ரசனை வெளிப்பாடு, இலகுவான மொழிநடை என்ற பல்வேறு அம்சங்களை தாங்கி வந்துள்ள 'பகிர்வு' கட்டுரை தொகுதியானது இலக்கியத்தில் முக்கிய இடத்தினை வகிக்கக்கூடிய தரத்துடன் பிரசவமாகியுள்ளது. செம்மையாக அதனை தந்த ஆசிரியர் சீனா.உதயகுமார் அவர்களுக்கு வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இன்னும் பல சமூகத்துக்கு வரமாகக்கூடிய நூலகளை வழங்கவேண்டுமென்ற பிரார்த்தனைகளையும் சமர்ப்பிக்கின்றேன்.


நூல்: பகிர்வு கட்டுரை தொகுதி
ஆசிரியர்: சீனா.உதயகுமார்
தொடர்புகளுக்கு:0783015144



நன்றி!

Thursday, September 6, 2012

ஓர் ஆணின் வெற்றி தோல்விக்கு பின்னால்........ 29.06.2016 கல்குடா நேசன் இணையத்தில்

ஓர் ஆணின் வெற்றி தோல்விக்கு பின்னால்...


'ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே' என்று ஆடவர்களின் வாழ்வியலை, அவர்களின் வெற்றி தோல்விகளை பெண்களின் தலையில் திணித்துவிட்டு/ பழி சொல்லிவிட்டு தப்பித்துக்கொள்வது இந்த ஆண்களின் வேலையாகிவிட்டது. ஒருவர‌து திறமை, நற்பண்புகள், அறிவாற்றல், அநுபவம் என பல்வேறு காரணிகளால்தான் ஒவ்வொருவரினதும் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால் ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என சொல்லும்போது அதனை ஏற்றுக்கொள்ளமுடியாதுள்ளது.


பெண்களால் அழிந்தவர்கள் என பார்க்கும்போது,அது ஆண்களின் பழக்கவழக்கங்கள், 'பெண்மோகம்' எனும் பற்பலான அம்சங்களால் தாங்களாகவே தேடிக்கொள்ளும் விபரீதமே தவிர இது பெண்களால் ஆனது என சொல்லமுடியாது. இதற்கு உதாரணமாக சில ஆண்களின் அந்தரங்க வாழ்க்கை அநுபவங்களை கிளறிப்பார்த்தால் நன்றாக புரியும்.

இங்கேயும் இவ்வெற்றி தோல்விகளை அண்மையில் நான் வாசித்து என்னை சிந்திக்க வைத்த  இரண்டு ஆண்களின் வாழ்க்கையினை வைத்து நம் வாதத்தினை இலகுவாக விளங்கலாம்.இவர்களின் வாழ்க்கையில் 'பெண்கள்' எனும் அம்சம் எவ்வாறு பங்குவகிக்கின்றது,உண்மையான வெற்றி தோல்வி என்பது என்ன என்பதுபற்றி அறியலாம்.


ஆண் பெண்(கணவன் மனைவி)உறவென்பது ஒருவர் பாவிக்கும் பற்தூரிகை போன்றது. இதற்குமேல் ஒரு விளக்கம் தேவையில்லை என எண்ணுகின்றேன். ஆனால் அதற்காக குறிப்பிட்ட காலம் பாவித்துவிட்டு புதிய பற்தூரிகை ஒன்றை வாங்கவேண்டுமே என்றெல்லாம் கேட்கக்கூடாது.
தெளிவுபடுத்துவதற்காக அல்லது வலியுறுத்திக்கூறுவதற்காகத்தான் அந்த உதாரணம். சரி விடயத்துக்கு வருவோம்.

நெப்போலியனிம் குதிரைப்படை வீரனுக்கும் படைத்தலைவனின் பெண் ஒருத்திக்கும் 1802ல் பிறந்த அலெக்ஸாண்டர் டுமாஸ் ஓர் சிறந்த எழுத்தாளர். தான் வாழ்ந்த 60 ஆண்டு காலப்பகுதியில் 1200 புத்தகங்களை எழுதி சாதனைப்படைத்த இவரே உலகிலேயே அதிக நூல்களை எழுதிய எழுத்தாளன் என்றும் உலகில் எந்த எழுத்தாள‌னும் சம்பாதிக்காத அளவுக்கு எழுத்தின்மூலம் சம்பாதித்தவர் என்றும் அழைக்கப்படுகின்றார். 1823ல் பாரிஸுக்கு சென்ற இவர் எழுடுமாஸ் எழுதிய 'மூன்றாம் ஹென்றி' என்ற நாடகம் பெருமையை தேடித்தந்ததோடு மக்கள் மத்தியில் வரவேற்பையும் புகழையும் பணத்தையும் அள்ளிவழங்கியது.

இவ்வாறு தனது திறமையினால் உயர்நிலைக்கு வந்த டுமாஸ் பெண்மோகத்தினால் உயரம், குள்ளம், சிவப்பு, கருப்பு என பல வண்ணப்பெண்களின் அழகு அவரை ஆட்டிப்படைத்ததாக சொல்லபடுகின்றது. அதனால் அவரது மனைவி தனது குழந்தையுடன் அவரைவிட்டுப்பிரிந்து சென்றார் இப்பிரிவு அவரது காதல் லீலைகளுக்கு வசதியாகாப்போக எப்போதும் பெண்களின் மத்தியிலேயே காலங்கடத்தத்தொடங்கிய டுமாஸ் இப்பழக்கத்தினால் தனது அத்தனை சொத்துக்களையும் இழக்கத்தொடங்கினார். இறுதியில் குடியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்கமுடியாது  தனது ஆடைகளை விற்றே வாழ்ந்தார்.

'கலையின் சிகரம்' என பெர்னாட்ஷாவினால் அழைக்கப்பட்ட எழுத்தாளர் அலெக்சாண்டர் டுமாஸ் தனது முறைகேடான பழக்கத்தினாலும் கண்ணியமில்லாத பண்பினாலும் சம்பாதித்த அனைத்தையும் இழந்து கடைசியாக 1870ம் ஆண்டு இவ்வுலகைவிட்டு மறைந்தார்.


இதனை அழிவதும் பெண்ணாலே என சொல்லமுடியாது ஒருவனின் தனிப்பட்ட விடயங்களே ஆதிக்கம் செலுத்துகின்றது என அதிக விளக்கம் சொல்லாமலே விளங்கிக்கொள்ளமுடியும். அதுபோலவே இன்னுமொரு பிரபலமான ஒருவரின் வாழ்க்கை முறையை பார்ப்பதினால் அறியலாம். அவர்தான் உலகில் முதலாவது பணக்காரரான 'மைக்ரோ சொப்ட்' நிறுவ‌னத்தின் உரிமையாளர் பில்கேட்ஸ். இவர் பல வெற்றி தோல்விகளை சந்தித்தே இப்பெரிய நிலமைக்குள் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார்.



பில்கேட்ஸை பற்றி நாம் அதிகம் அறிந்திருப்பதால் அதுபற்றி பேசத்தேவையில்லை ஆனால் அவர்பற்றி கவிஞர் பா.விஜய் அவர்கள் தனது கவிதையில் சொல்லியிருக்கும் ஒரு விடயத்தினை நோக்குவதன் மூலம் நமது தலைப்பிற்கு தேவையான விடயத்தினை பெற்றுக்கொள்ளலாம்.

"கேட்ஸின் வெற்றிக்கு
ஒரு அந்தரங்க காரணம் அவர்
அறையில் வீசியதே இல்லை
அழகிகளின் வாசனை"

எத்தனை அழகான வரிகளில் எத்தனை ஆழமான, ஓர் பெரிய விடயத்தினை தெளிவாக எடுத்தியம்பியுள்ளார். இக்கவிதையில், 'அவர் அறைகளில் வீசியதே இல்லை ஒரு பெண்ணின் வாசனை' என குறிப்பிடவில்லை மாறாக 'அழகிகளின் வாசனை' என்றே குறிப்பிட்டுக்காட்டுகின்றார்.

இதன்மூலம் நாம் மிக தெளிவாக ஒரு விடயத்தினை விளங்கிக்கொள்ளலாம். ஓர் ஆணின் வெற்றி தோல்விக்கு பின்னால் 'ஒரு பெண்' என்று சொல்வதைவிட அவனின் திறமையும் சிறந்த பண்புகளுமே என்று கூறுவதுதான் சாலச்சிறந்தது என்பதனை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். நீண்ட நாட்களாக மனதில் ஓடிக்கொண்டிருந்த விடயம் இந்த இருவரின் வாழ்க்கை முறைமை அதற்கு கைகொடுத்துவிட்டது. ஏதோ நான் சொல்லவந்ததை சொல்லிவிட்டேன் மிக்க மகிழ்ச்சி.

நன்றி!

த.எலிசபெத்