Friday, September 14, 2012

பகிர்வு கட்டுரை தொகுதி மீதான ரசனை வெளிப்பாடு

  வல்வெட்டித்துறையைச்சேர்ந்த கணித ஆசிரியரும் எழுத்தாளருமான சீனா.உதயகுமார் அவர்களின் அண்மைய வெளியீடாக 'பகிர்வு'கட்டுரைத்தொகுதிஇலக்கியத்துள் கால்பதித்துள்ளது.முழுமையாக இந்நூலில் ஆசிரியர் உதயகுமார் அவர்கள் ஒரு சிறந்த வாசகனாய் நல்ல விமர்சகனாய் வெளிப்பட்டுள்ளார். தான் வாசித்த நேசித்த விடயங்களை மற்றவர்களோடு பகர்ந்துகொள்ளும்போது அது மற்றவர்களின் வாசிப்புத்திறனையும் வளர்த்துவிடுகின்றது அநத விடயத்தினை இக்கட்டுரை தொகுதியானது முழுமையாக மேற்கொண்டுள்ளது எனலாம்.

பகிர்வு எனும் பொருத்தமான தலைப்பும் அட்டைப்படமும் சிறப்பாக அமைந்துள்ளதுடன் நூலுக்கு அருட்திரு தமிழ்நேசன் அடிகளார் அவர்களின் கனதிமிக்க அணிந்துரை ம்க்கிய இடத்தினை பெறுகின்றது.புரிதலின் முழுமையினை இவ்வணிந்துரை மூலம் விளங்கிக்கொள்ளலாம்.அந்தவகையில் இத்தொகுப்பினை 4 பகுதிகளாக வகுத்து தனது கருத்தை கச்சிதமாக வழங்கியுள்ள தமிழ்நேசன் அடிகளாரின் பாணி நூலின் விளக்கங்களை இன்னும் இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியதாக அமைந்துள்ளமையை முக்கியமாக குறிப்பிடலாம்.

பரந்துபட்ட வாசிப்புத்தேடலுனூடாக தான் அநுபவித்த விடயங்களை வித்தியாசமான கோணத்தில் சுவாரஸ்யமாக பகர்ந்துள்ளவிதம் நூலின் மீதான ஆர்வத்தினை அதிகரிக்கின்றது எனலாம். 20 தலைப்புக்களில் அமைந்த கட்டுரை தொகுதியானது, "தங்கத்தமிழ் மலையின் பரகசியம்" எனு முதலாவது தலைப்பில் பேராசிரியர் கார்த்திக்கேசு சிவத்தம்பி அவர்களின் இலக்கியப்பணியின் விரிவினையும் பேராசிரியரின் ஆளுமையினையும் திறமைகளையும் சிறப்பாக எடுத்தியம்பி அவருக்கு 'தங்கத்தமிழ் மலை' என்ற மகுடத்தினையும் கொடுத்திருப்பது மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது.

'சிரிப்பில் தோன்றிய சிந்தனை சிற்பி' என கலைவாணர் என்.எஸ். கிருஸ்ணன் பற்றியும் அவரின் திறமைகள் சாதுரியங்கள் பற்றியும் தெளிவுபடுத்தி சிரிப்பின் மகத்துவத்தை தனது இரண்டாவது கட்டிரையுல் குறிப்பிட்டுள்ள ஆசிரியர் ஆறுதிருமுருகன் அவர்களையும் அவருடன் தான் பெற்ற நட்பினையும் நெகிழ்ந்து போற்றியுள்ளார்.அதேவேளை கவிஞர் மூ.மேத்தா அவர்களின் எழுச்சிமிக்க கவிதைகளை அடையாளப்படுத்தி விபரித்துள்ளமையும் பாடலாசிரியர் பா.விஜய் அவர்களின் பாடல்வரிகளை மேற்கோலிட்டு தனது ரசனை வெளிப்பாட்டை தந்துள்ள விதமும் லயிக்கச்செய்கின்றது. அதேவேளை ஈழத்து கவிஞர்கள் பற்றியும் அவர்களின் கவிதைகள் பற்றிய தேடலும் முக்கிய இடத்தினை பெறுகின்றது.

 'சிந்தனை செய்! சிரி மனமே' எனும் தலைப்பில் ஆங்கில ஆசிரியரான ஷெரிடன் ,ஆபிரகாம் லிங்கன் ஆகியோரின் வாழ்க்கையினூடாக சிந்திக்கவும் சிரிக்கவும் கூடிய சம்பவத்தினை விபரித்துள்ளார். சாதியம் பற்றிய விடயத்தினை தொட்டு மிக நேர்த்தியான, சமூகம் சிந்திக்கக்கூடிய வகையில் ஆராய்ந்திருப்பது வரவேற்கக்கூடியது. சாதி ஒழிப்புபற்றிய பாடங்களும் ஆக்கங்களும் இலக்கியங்களும் அதாவது அதனை வகைப்படுத்தி தெளிவுபடுத்தும் விடங்களினால் உண்மையில் சாதியம் ஒழிந்துவிடப்போவதில்லை என்பதனை ஆழமாக சொல்லியுள்ள விதம் நிச்சயமாக சிந்திக்கச்செய்கின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது.

இவ்வாறு கல்வி, விளயாட்டு, சமூகம்சார்ந்த விடயங்கள், இலக்கிய கர்த்தாக்கள் என பல்வேறு  தளங்களில் தனது கருத்துக்களை கட்டுரையாக்கியுள்ள ஆசிரியர் ஓர் சிறந்த விமர்சகராக வெளிப்பட்டுள்ளார்.வாசகர்களை நகரவிடாது பற்றிக்கொள்ளும்படியான இவரது எழுத்து உண்மையில்  வாசிப்புக்கு ஏற்ற சிற‌ந்த ஒரு தொகுதி என்பதில் ஐயமில்லை. அதேவேளை அணிந்துரையில் குறிப்பிட்டதுபோல 'ஒரு தொகுப்பிற்குள் பலவகையான கட்டுரைகளை கொண்டுவர முயற்சித்திருக்காமல் ஒரே வகையான கட்டுரைகளை மட்டும் கொண்டுவந்திருந்தால் நூலின் கனதி இன்னும் அதிகரித்திருக்கும்'  என்ற கருத்தினை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

புதியதேடல், வித்தியாசமான பார்வை, சுவாரஸ்யமான ரசனை வெளிப்பாடு, இலகுவான மொழிநடை என்ற பல்வேறு அம்சங்களை தாங்கி வந்துள்ள 'பகிர்வு' கட்டுரை தொகுதியானது இலக்கியத்தில் முக்கிய இடத்தினை வகிக்கக்கூடிய தரத்துடன் பிரசவமாகியுள்ளது. செம்மையாக அதனை தந்த ஆசிரியர் சீனா.உதயகுமார் அவர்களுக்கு வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இன்னும் பல சமூகத்துக்கு வரமாகக்கூடிய நூலகளை வழங்கவேண்டுமென்ற பிரார்த்தனைகளையும் சமர்ப்பிக்கின்றேன்.


நூல்: பகிர்வு கட்டுரை தொகுதி
ஆசிரியர்: சீனா.உதயகுமார்
தொடர்புகளுக்கு:0783015144



நன்றி!

No comments: