Tuesday, August 30, 2011

"மீண்டு வந்த நாட்கள்" கவிதை தொகுப்பு மீதான இரசனைக்குறிப்பு

றாக்கை
நூல் : மீண்டு வந்த நாட்கள்
ஆசிரியர்: வதிரி.சி.ரவீந்திரன்
வெளியீடு : எஸ்.கொடகே சகோதரர்கள்
விலை: 250/=

 சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர் வதிரி.சி.ரவீந்திரன் அவர்கள், பாடசாலை பருவத்திலிருந்தே கவிதைமீது ஆர்வம் கொண்டிருந்தார். அதன் விளைவாக  1971ம் ஆண்டு 'ஈழநாடு' பத்திரிகையிலும் அதேயாண்டில் 'பூம்பொழில்' இலக்கிய சஞ்சிகையில் பிர‌சர‌மான‌ "எங்க‌ள் எதிர்கால‌ம்" என்ற‌ க‌விதையூடாக‌ இல‌க்கிய‌ உல‌கிற்குள் பிர‌வேசித்தார்.
 நாற்ப‌து வ‌ருட‌ங்க‌ளுக்கும் மேலாக‌ இல‌க்கிய‌ உல‌கில் இவ‌ர‌து ப‌ங்க‌ளிப்பு இருந்தாலும் இந்த‌ "மீண்டு வ‌ந்த‌ நாட்க‌ள்" தொகுப்பே முத‌ற் தொகுதியாக‌ வெளிவ‌ந்துள்ள‌து.க‌விஞ‌ரின் வெளிநாட்டுப்ப‌ய‌ண‌ம், அர‌ச‌த்துறையில் தொழில் போன்ற‌ கார‌ண‌ங்க‌ளினால் கால‌ம் தாழ்ந்த‌மையான‌து வேத‌னைக்குறிய‌ விட‌ய‌மே.
 "மீண்டு வ‌ந்த‌ நாட்க‌ள்" க‌விதை தொகுப்பான‌து, புதுக்க‌விதை க‌விதைத்துளிக‌ள், மெல்லிசைப்பாட‌ல‌க‌ள் என‌ மூன்று ப‌குதிக‌ளாக‌ பிரிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து.க‌ட‌ந்த‌ கால‌த்தினை அப்ப‌டியே ப‌திய‌ம் போட்ட‌ க‌ருக்க‌ளை தாங்கிவ‌ந்துள்ள‌ க‌விதைக‌ள் மிக‌ எளிய‌ ந‌டையோட்ட‌த்தில் வாச‌க‌னை ம‌கிழ்வித்துள்ள‌து.சிர‌ம‌ங்க‌ளின்றி வாசிக்க‌க்கூடிய‌ இக்க‌விதைக‌ள் ச‌மூக‌த்தின் எல்லா த‌ள‌ங்க‌ளையும் எல்லா த‌ர‌ப்பின‌ரையும் தொட்டுக்காட்டியுள்ள‌ வித‌ம் சிற‌ப்ப‌ம்ச‌மாக‌ காண‌ப்ப‌டுகின்ற‌து.
அன்றாட‌ வாழ்வினில் அவ‌திறுயும் நில‌மைக‌ளை வெளிப்ப‌டுத்தியிருக்கும் க‌விஞ‌ர், த‌ன‌து "புதிய‌ க‌தை பிற‌க்கிற‌து" என்ற‌ க‌விதையில்,
" அடிமை குடிமைக‌ள் என்ற‌ நினைப்போ?
நாமும் ம‌னித‌ர்க‌ள் தாம்
ப‌ழைய‌ ந‌யினார் கால‌ம்
பாறி விழுந்த்திட்டுது
எங்க‌ள் உழைப்பை இன்னும் உறிஞ்ச‌வா
எண்ணுகிறீர்?
வையும் ப‌ண‌த்தை விரும்பினால்
தூக்கும் முட்டியை கையில்
ந‌யினார் பார்க்கிறார்
புதுமையாக‌ அவ‌னை"
         என்று ஒரு அடிமைத்த‌ன‌ எதிர்ப்பு ப‌ற்றியும் விடுத‌லை ப‌ற்றியும் ஆவேச‌மாக‌ பேசியிருக்கும் இக்க‌விதை போல‌ "புதிய‌ன‌ புகுத‌ல்" க‌விதையும் ப‌ழைய‌ன‌ க‌ழிந்து புதிய‌ வ‌ர‌லாற்றை உருவாக்கிடுமோர் உத்வேக‌த்தூண்ட‌ல்க‌ளாய் அமைந்திருப்ப‌து பாராட்ட‌ச்செய்கின்ற‌து. அதும‌ட்டும‌ன்றி ந‌ம‌து ச‌மூக‌த்தில் புரையோடிப்போயிருக்கும் மூட‌ந‌ம்பிக்கைக‌ள், சாதிப்பிர‌ச்ச‌னை, சுர‌ண்டும் வ‌ர்க்க‌த்தின் இய‌ல்புக‌ள், போலி கெள‌ர‌வ‌ம் போன்ற‌ குறைபாடுக‌ளை 'பாதை' 'உள்ள‌க்குமுற‌ல்' 'எழுத்து' 'அடிமைக்க‌ர‌ங்க‌ள்' 'நினைவை மீட்டிப்பார்', பாம்பு சாக‌வில்லை' என்ற‌ த‌லைப்பின் கீழ் திரைவில‌க்கி காண்பித்துள்ளார் க‌விஞ‌ர்.
ந‌ம‌து ச‌மூக‌த்தில் தொட‌ர்ந்து வ‌ந்த‌ பிர‌ச்ச‌னைக‌ளையும் தொட‌ர்ந்து கொண்டிருக்கும் அவ‌ல‌ங்க‌ளையும் வெளிப்ப‌டுத்தியுள்ள‌ இத்தொகுப்பான‌து எக்கால‌த்திற்கும் பொருந்த‌க்கூடிய‌ வெளிப்பாடாக‌வே காண‌ப்ப‌டுகின்ற‌து.த‌ன‌து ம‌ன‌ ஆத‌ங்க‌ங்க‌ளை வ‌ரிக‌ளாக்கியிருக்கும் க‌விஞ‌ரின் ச‌மூக‌த்தின் மீதான‌ பார்வையை மிக‌ இல‌குவாக்கி இல‌க்கிய‌ உல‌கிற்கு த‌ந்துள்ளார்.
 "மீண்டு வ‌ந்த‌ நாட்க‌ள்" உண்மையில் இவ‌ர‌து க‌விதைக‌ள் மீள‌ வ‌ந்த‌ நாட்க‌ளாக‌வும் வாச‌க‌ர்க‌ளுக்கு உற்சாக‌த்தை த‌ர‌க்கூடிய‌ மீட்சியாக‌வும் ந‌ல்ல‌ க‌விதைக‌ளை வாசித்த‌ திருப்தியையும் ஏற்ப‌டுத்தும் என்ப‌தில் எவ்வித‌ ஐய‌முமில்லை.
 ஆரோக்கிய‌மான‌ க‌விதைக‌ளை ப‌டைத்த‌ க‌விஞருக்கு ம‌ன‌ப்பூர்வ‌மான‌ வாழ்த்துக்க‌ளை தெரிவிப்ப‌தோடு இல‌க்கிய‌ உல‌கு வ‌ள‌ர்த்த‌ இவ‌ர‌து க‌விதைக‌ள் உங்க‌ள் க‌ருத்துக்க‌ளையும் க‌வ‌ரும் என்ப‌து திண்ண‌ம். என‌வே தொகுப்பினை வாசித்து உங்க‌ள் வாழ்த்துக்க‌ளையும் தெரிவித்திடுங்க‌ள்.

Saturday, August 27, 2011

"மீண்டு வந்த நாட்கள்" வெளியீட்டு விழாவும் எனது அநுபவமும்....

மீண்டு வந்த நாட்களின் வெளியீட்டு விழாவும் எனது அநுபவமும்....

 21.08.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணியளவில் வெள்ளவத்தை தமிழ்ச்சங்க மண்டப அரங்கில் இனிதான ஒரு மாலை வேளையில் மங்கள விளக்கேற்றும் நிகழ்வுடன் கவிஞர் வதிரி சி.ரவீந்திரன் அவர்களுடைய "மீண்டு வந்த நாட்கள்"  கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா சிறப்பான ஓர் ஆரம்ப விழாவாக தொடங்கியது.
நிகழ்வுக்காக எனக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தாலும் இன்னுமொரு சிறப்பு விருந்தினருடன் செல்லும்சந்தர்ப்பம் கிடைத்ததால் இரு அழைப்பாக அவ்விடம் சென்றேன்.தமிழ்ச்சங்க விழாவில் கலந்துகொள்ளும் முதல் சந்தர்ப்பம் மகிழ்ச்சியோடும் ஒருவித படபடப்போடும் தான் சென்றேன்.அலங்கரிக்கப்பட்ட அரங்கத்தில் அதிகம் பேர் அமர்ந்திருக்கவில்லை அதனால் கொஞ்சம் பின்னால் இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டேன் படபடப்பும் காணாமல் போயேவிட்டது. முன் வரிசையில் சில பெண்கள் அமர்ந்திருந்தார்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என எவரும் தென்படவில்லை,ஆனால் நான் அறிந்த சில முகங்களை நேரடியாக கண்டதில் மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தது. சிலரை இவர்களாக இருக்கவேண்டுமென ஊகித்தேன் அநுமானம் சரியாகத்தான் இருந்தது. ஒவ்வொருவராக வந்து அமர்ந்ததும் சபையும் நிறைந்துவிட்டது.
கொழும்பு பல்கலைக்கழக கல்வியற்துறை பேராசிரியர் மா.கருணாநிதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் முதல் கட்டமாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்து வரவேற்புரை,நூல் அறிமுகம், வாழ்த்துரை, கருத்துரை என நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு வருகைதந்த பேராசிரியர்கள்,எழுத்தாளர்கள், சிறப்புவிருந்தினர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என அரங்கம் ஓர் அறிவியற்கூடமாக எனக்கு காட்சிதந்தது.
கவிஞர் திரு.மேமன்கவி அவர்கள் அங்குமிங்கும் ஓடியாடி ஓர் இளைஞனைப்போல இயங்கிக்கொண்டிருந்தார்.சகல வேலைகளிலும் மும்முரமாக சிரித்த முகத்துடனும்,ஓர் வேகத்துடனும் நிகழ்ச்சியை சிறப்பித்துகொண்டிருந்தார்.
மேடையில் பேசிய அனைவரின் பேச்சுக்களும் கவிஞஎ வதிரி சி.ரவீந்திரன் அவர்களைப்பற்றியதாகவும் அவரின் கவிதைகள், மற்றும் இலக்கியம் சார்ந்த விடயங்களாகவே இருந்தது அதனால் கருப்பொருள் பிரள்வடையாமல் எமது கருத்துக்களும் சிந்தனைகளும் நிகழ்வுக்குள்ளே சுவாரஸ்யமாய் சுற்றிவந்து கொண்டிருந்தது.பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளில் வேறு துறை சார்ந்த முக்கியஸ்தர்களின் பங்களிப்பு இருக்கும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் குறிக்கப்பட்ட விடயம் குறிதவறி விழுந்துகொண்டிருக்கும் அத்தகைய சம்பவங்களில் துளியேனும் இங்கு நடைபெறாதது மகிழ்வைத்தந்தது.
அடுத்ததாக மூத்த இலக்கியவாதியும் மல்லிகை ஆசிரியருமான ஜீவா அவர்களின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது அநுபவமும் முதிர்ச்சியும் அவருடைய பேச்சின் பெறுமதியை இன்னும் கூட்டியிருந்தது. அவர் குறிப்பிட்ட ஒருவிடயம், இன்றைய இளம் படைப்பாளர்களை பற்றியது அதாவது ஒரு தொகுப்பை வெளியிட்டதும் தங்களை பற்றிய பெறுமிதத்தில் இருப்பதாக சொன்னார் உண்மையில் அப்படி இருப்பதாக ஒத்துக்கொண்டாலும் இவர்களைப்போன்றவர்களை ஊக்கப்படுத்த வேண்டியதும் பொறுத்துக்கொள்ள‌வேண்டியதும் உங்களைப்போன்றவர்களின் கடமையல்லவா? இளம் இரத்தம் சில விடயங்களில் வேகம், சில விடயங்களின் ஆவல் நிமித்தமாகவும் பிழைகள் நடப்பது இயற்கையே. இளம் படைப்பாளிகளை வளர்த்துவிடுங்கள் ஐயா என என் மனம் கேட்டுக்கொண்டது.

நிகழ்ச்சிகளை அமைதியாக ர‌சித்துக்கொண்டிருந்தேன் நேரம் மிக மிக வேகமாக சுழன்றுகொண்டிருந்தது வந்திருந்த எவரும் என்னை அடையாளம் கண்டுகொள்ள‌வில்லை  ஏனென்றால் என்னைதான்  யாருக்கும் தெரியாதே.
இவ்விழாவினை முழுமையாக இருந்து பங்குகொள்ளவேண்டும் என்ற ஆவலிலே வந்தேன் ஆனால் போக்குவரத்து பிரச்சனை காரணமாகவும் ந‌டைமுறையிலுள்ள சில நிகழ்வுகளின் பயம் காரணமாகவும் பாதி நிகழ்வுடன் எழுந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமர்ந்துகொண்டிருந்தேன் நேரத்தை பார்த்தவண்ணம். மாலை மயங்கிவிழும் நேரம் இருள் மெதுவாக தன் கரம் கொண்டு ஏந்த ஆயத்தமாகிக்கொண்டிருக்கையில் நானும் எனது சகோதரியுமாக இருக்கையைவிட்டு எழுந்தோம். மனம் வேண்டாம் என சொல்லியும் காலம் போ என கட்டளையிட்டுக்கொண்டிருந்தது வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்ட திருப்தியுடன் இனிய நினைவுகளை சுமந்தவண்ணம் பாதையை நோக்கிநடந்தேன்.
    


















Monday, August 22, 2011

துளிக்க‌விதைக‌ள்

01.உன் நினைவுக ளென்(ன)னை
நிழலா(?)கத் தொடர்கின்றது
வெயிலில்லாத போதும்...!!

02.தேனுக்காவே வண்டுகள்
பூவுக்காக வருந்தியதில்லை
வானுக்காகவே யந்த நிலவு
விலகிச் சென்றதில்லை...!!

03.வளமில்லை பொருளில்
பலமில்லை யதனால்
நிலமில்லை எம்விதைகளுக்கிங்கு
களமில்லை யென்பேன்...!!

04.கவியூற்றுக்கள் உடைபடுகையில்
எரிம‌லையாக‌ குமுறுகின்ற‌ன‌
ஊற்றுக்களாக‌ கொப்ப‌ளிக்கின்ற‌ன‌
பாசிக‌ளாய் ம‌ட்டும்
ப‌டிந்துபோவ‌தில்லை!!

05.உன் வாயென்ன தேங்காய்த்துருவியா
தவறாய் நினைக்காதே
வார்த்தைகளெல்லம்
பூவாய் வந்து விழுகின்றது

06.உன்னையன்றி ஓர் மொழியும் தெரியாதெனக்கு-தமிழே
குற்றமின்றி கவிபுனையும் வழியை நீ விளக்கு

07.அன்னம் போல நம் செய்கைகள் இருக்கட்டும்
ஆறு போல் எம் வழிகள் தொடரட்டும்...

Tuesday, August 16, 2011

துலங்கிடுமோ மாயமான மாயமிது !!

 

 

 


வீடுகள் தோறும் வீதி வரையினில்
காடுகள் போலொரு கருமை படர்ந்தே
பாடுகள் தொடரும் பாதையெங்கிலும்
பாவம் எம்மக்காள் பயத்தினிலே...

வன்மம் நெஞ்சிலே வளர்த்த மிருகங்கள்
ஜென்மம் காத்திட வரைந்த உருவங்கள்
பெண்கள் மத்தியில் பீதியும் கிளம்பிட‌
பெலனில்லா மனங்களாய் புவியினிலே...

கல்லோடும் வாளோடும் காளையர்க ளிரவில்
பொல்லோடுந் தடியோடும் புலரும்வரை இருட்டில்
வல்லோர்கள் கூடிட்ட வேளையிலும் மாயனாய்
வந்ததும் பறந்தானாம் சிக்காமலே...

வாய்வழியாய் வந்திட்ட வதந்தியு மிங்கே
வானளவே விரிந்து வியாபித்தும் நின்றது
நோய் போலெமை பீடித்து மனதில்
நோக்க‌மெல்லாம் சிதறிட்டு பித்தானது...

காவலோனே காவலோனே காத்திரமாய் நீரும்
பாவப்பட்ட மக்களினை காத்திடுவீர் பாரும்
ஏவலோனாய் வந்துபோகும் மாயந்தனை தீரும்
ஏளனமேசெய்யாமல் வேகமாய்நீவீர் வாரும்...



இக்கவிதை 22.08.2011 அன்றைய இருக்கிறம் சஞ்சிகையில் பிரசுரமானது.

ஐப்பசி மாத [AUGUST.2011] மல்லிகை இலக்கிய சஞ்சிகையில் பிரசுரமானது

Friday, August 12, 2011

வேகமாய் நீள்கின்றது!!

சோகந்தனை சொல்லிடவும்
சொந்தமென்று எவருமில்லை
சோதனையை சுமந்திடவும்
இதயத்தினில் வலிமையில்லை...

ஆழ்ந்து அழத்தோன்றுகிறது
அடிமனதேனோ கனத்திடுகிறது
ஆனந்தங்கொண்ட நெஞ்சமின்று
ஆறுதலின்றியே அடங்கியிருக்கிறது...

தோல்வியினால் வீழ்ந்திடவே
கோழையல்ல என்நெஞ்சம்
வேள்வியினால் ஏழ்ந்திடவே
வாழ்வினிலே என்தஞ்சம்...

எண்ணை தீர்ந்த விளக்கிது
என்னை தீயாய் வளர்த்திட்டேன்
மண்ணைபோல விளைந்திட‌
கல்லையும் காலமாய்கொண்டிட்டேன்...

பாதை வேகமாய் நீள்கின்றது
பயண‌ம் எனையும் சூழ்கின்றது
வழியை எங்கோ தொலைத்திட்டேன்
விழியை ஒளியாய் தொடர்ந்திட்டேன்...








லண்டன் தமிழ் வானொலிக்கு என்றன் நன்றிகளுடன் சில வார்த்தைகள்

  தேசம் கடந்துவாழும் நேசங்களுடன் கிட்டிய ஓர் உறவுப்பாலந்தனை வழங்கிய லண்டன் தமிழ் வானொலி பொறுப்பாளர் திரு நடாமோகன் அவர்களுக்கும் "கீதாஞ்சலி" நிகழ்ச்சியின் அறிவிப்பாளினி திருமதி ஷயிப் மலிக் அவர்களுக்கும் வானொலியின் சகல அங்கத்தவர்களுக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

  31.07.2011 அன்றைய கீதாஞ்சலி நிக‌ழ்ச்சியில் எனது நேர்காணலை ஒலிபரப்பி புதிய படைப்பாளியாக தமிழ் நெஞ்சங்களுக்கு மத்தியில் என்னை அடையாளப்படுத்தியதில் மகிழ்வடைகின்றேன்.இந்நேர்காணலை மீண்டும் ஒலிபரப்பி நேயர்களின் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் இணைத்து எனது கவிதைகளை உங்கள் பார்வையில் ஆராய்ந்து நல்ல பகர்ந்துகொண்டபோது உண்மையில் எனது கவிதைகளுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைத்திருப்பாதாக உணர்ந்துகொண்டேன்.அந்த அனுபவத்தினை பெற்றுத்தந்த உங்களுக்கு எனது நன்றிகள்.நிறந்த நேசத்தோடு வளமான வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் பகர்ந்துகொண்ட தமிழ் உறவுகளுக்கு எனது நன்றியினை மனப்பூர்வமாக தெரிவித்துக்கொள்கின்றேன்.

  திரு நடாமோகன் அண்ணா அவர்களுக்கும் எனது நன்றியினை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். உங்களது கவி விமர்சனம் உண்மையில் என் மனதை நெகிழவைத்தது. அத்தோடு எனது குறைகளையும் உணரமுடிந்தது.நீங்கள் தந்த ஆதரவும் ஊக்குவிப்பும் எனது உற்சாகத்தை இன்னும்ம் அதிகப்படுத்தியிருக்கிறது என்பதே உண்மை. இன்னும் உங்களின் ஆதரவுகளையும் ஆலோசனைகளையும் எதிர்ப்பார்த்திருகின்றேன்.

  நான்குவரிக் கவிதைகளுக்கு கிடைத்த வாழ்த்துக்கள் என் கவிகளுக்கு உரமூட்டியிருக்கிறது ஆனாலும் ஷயிப் மலிக் அக்கா அவர்கள் ஒரு வளர்ந்த கவிஞருக்கு தரக்கூடிய  வாழ்த்துக்களை அல்லது மகுடத்தினை பகர்ந்தது அதிகப்படியென்றாலும் உங்களின் பரந்த மனதிற்கும் ஊடகத்திற்கே இருக்கக்கூடிய சமநிலைப்பார்வைக்கும் என் சிரந்தாழ்த்துகின்றேன்.

  திரு நடா அண்ணா சொன்ன‌துபோல குழந்தையென்றால் அதை குழந்தையாத்தான் பார்க்கவேண்டும் வெள்ளைக்குழந்தை, கருப்புக்குழந்தை குண்டு குழந்தை, மெல்லிய குழந்தையென்ற பாகுபாடிருக்கக்கூடாது. இக்கொள்கையினை உங்களின் நிகழ்ச்சியினூடாக அறிய முடிந்தது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இன்னும் உங்கள் நிகழ்ச்சிகள் வளரவேண்டும் சிறப்படைய வேண்டும் என பிரார்த்திக்கின்றேன்.

  சந்தர்ப்பம் கிடைத்தால் மீண்டும் உங்களுடன் இணைந்துகொள்கின்றேன்.

நன்றி!
-த.எலிசபெத்-












ஓருயிர்

நீயும்
நானும்
ஒன்று
இரண்டு
நூறு
ஆயிரமென
எண்ணிக்கை
கடந்தின்று
ஓருயிர்
ஓரித‌ய‌மானோம் ந‌ம்
ம‌ண‌(ன‌)நாளில்

சின்னச் சின்ன சிந்தனைகள்

01.உனக்கு எதிரி நீயேதான்!!

உன்னை வென்றுபார்-இதோ
உலகையும் வென்றிட்டாய்...

உள்ளந்தனை உற்றுப்பார்-இதோ
உண்மைகளை கண்டிட்டாய்...

உபாதைகளை தாண்டிப்பார்-இதோ
உயரங்களை அடைந்திட்டாய்...

உனக்கு எதிரி நீயேதான்
உன்னை வென்று பார்!!


02.வாலிபத் திரை கிழிகையிலேதான்
வாழ்க்கையை நீயும‌றிகிறாய்
வ‌ச‌ந்த‌ங்க‌ளிருக்கும் போதோ
விழி மூடியே துயில்கிறாய்!!

03.நீதியின் பாதைக‌ள்
நீண்டு சென்றாலும்
வ‌ழிய‌தின் ந‌டுவிலே
வ‌லித்து நிறுத்திடுகிற‌து
பாத‌ங்க‌ள்!!

04.நெருக்க‌ப்ப‌டும் போதெல்லாம்
நொருங்கி விடாதே
வ‌ருத்தப்பட்டுன் ம‌ன‌மெல்லாம்
திருத்த‌ப் ப‌டுவ‌தைய‌றிந்திடு!!

05.பொருந்தாக் காத‌லினால்
பொல்ல‌டி ப‌டுவ‌திலும்
பொசுக்கும் காத‌லையே
பொறுமையோடே க‌ழித்திட‌லாம்!!











Monday, August 8, 2011

ம‌ன‌தில் நின்ற‌வை வ‌ரிக‌ளாய்...

01.என் கனவுகளெலாம்
உனதான தென்பதற்காய்
என் விடியல்களையும்
இருட்டடிப்புசெய்ய விரும்பவில்லை!!


02.ஆழ்ந்த உறக்கத்தினில்
ஆலமரத்தினின் றேதோ
ஆத்மாவின் சலசலப்பு
மரத் தடிச்சூழவுள்ள மனங்களுக்கு
மர்மப் பீதி இரண்டுநாட்களாய்
மந்திரஞ் சொன்னபிறகே
மாயமாய் போனதெலாம்
இரண்டுநாள் வேலைநிறுத்தத்தில்
இன்று காலைதான் வந்ததுபோனது
குப்பை வண்டி!!


03.ச‌ட்ட‌த்தினை ம‌திக்க‌ச்சொல்கின்றோம்
ச‌ட்ட‌மெம் கையிலிருக்கும்போது
ச‌ட்ட‌த்தினை குத்த‌கைக் கெடுக்கிறோம்
ச‌ட்ட‌த்தின் கையில் நா மிரு(று)க்கும்போது!!


04.ம‌ன‌ம் முழுக்க‌
வ‌லியின் விம்ப‌ங்க‌ள்
வ‌ழிந்து கிட‌ந்தாலும்
ந‌ம்பிக்கை மின்மினிக‌ள்
சிற‌க‌டிக்க‌ த‌வ‌றுவ‌தில்லை!!


05.நீ சிவ‌னே என்ற‌தை
நான் இயேசுவே என்கின்றேன்
நீ அல்லா என்ப‌தை
நான் புத்தாவென்கின்றென்
அழைப்புக்க‌ள் வேறுப‌ட்டாலும்
மூல‌ மொன்றுதான்
முளைக‌ளும் கிளைக‌ளுந்தானிங்கே
முட்டுக்க‌ளை ப‌ர‌ப்பின‌!!






Thursday, August 4, 2011

மனிதனாய் வாழ்ந்திடலாம்!!

நோன்புதனை நோற்பதினால்
மாண்புதனை பெற்றிடலாம்
அன்புதனை கொண் டதனால்
அண்ண‌லினை கண்டிடலாம்...

நபி வழியில் நடப்பதனால்
நல் லொளியை பெற்றிடலாம்
தூஆக்கள் கேட்பதனால்
தூய வழி கொண்டிடலாம்...

உயிருள்ள நாட்க‌ளெலாம்
உண்மையாக‌ இருந்திடுவோம்
தீங்கு செய்யும் க‌ய‌வ‌ருக்கும்
ந‌ன்மைத‌னை செய்திடுவோம்...

தூற்றுத‌லை தூஷன‌த்தை
தூர‌த்திலே த‌ள்ளிடுவோம்
தூய‌வ‌ரின் வ‌ழிந‌ட‌ந்து
மாய‌ லோகை வெறுத்திடுவோம்...

குர் ஆனை ஓதுவதால்
குற்றங்களை உணர்ந்திடலாம்
மற்றவரை மன்னிப்பதால்
மனிதனாய் வாழ்ந்திடலாம்...

[ரமழான் பெருநாளை கொண்டாடவிருக்கும் அனைத்து இஸ்லாம் நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்]

சாதிநெறி சாகட்டும்


சாதிகளில்லையடி பாப்பா
சாதனைத்தலைவன்
சரித்திரம் படைத்திட்டா னேயவன் பாவிலே...

சதையை யறுத்திடும்போது
சாதியை யெதிலே தேடுவாயோ
சிவந்த குருதிக்கடலிலே எந்த‌
சா(ந)திமூலத்தை அறிவாயோ??

ஊற்றுக்கள் உறவாய் உதிக்கையில்
உனக்கு மெனக்குமேனடா
உரிமைச்சண்டைகள்...

தேசம் வேறில்லை
தேக‌ம் வேறில்லை
தோற்ற‌மும் வேறில்லை
வில‌ங்கென்றும் ம‌னித‌ரென்றும்
வித்தியாச‌ம் அறியாயோ...

ம‌னித‌க் க‌ழிவாய்
ம‌ன‌தின் வ‌ழியாய் உன்
சாதிச் ச‌ரித்திர‌த்தை
சாக்க‌டை யிலிட்டெரித்திடு
ச‌ந்தோச‌க்குலைச்ச‌ல்க‌ள் சாக‌ட்டும்...

ஊரெங்கும் உற‌வுச்சூரிய‌ன் உதிக்க‌ட்டும்
உல‌கெங்கும் உன்ன‌த‌வொளி ப‌ர‌வ‌ட்டும்...



[முகப்புத்தகச்சொந்தங்களின் கருத்துக்களையும் இணைத்துள்ளேன் மனப்பூர்வமான வாழ்த்துக்களை பகர்ந்து கொண்ட சகோதர சொந்தங்களுக்கு மகிழ்வுடன் நன்றியினை சமர்ப்பிக்கின்றேன்.]

· · Share · Delete




ப‌ற‌வையாய் பிரிந்த‌ பா‌வை...

ஆம்ப லழகினை ஆதாரமாய் கொண்டே
ஆண்டவன் வடித்திட்டயென் பொன் வண்டே
ஆருயிர் வாங்கிடுமுன் வதனச் சொண்டே
ஆட்டிப் படைக்குதென் நெஞ்சமதை பெண்டே...

இடைக்குக் கீழே இலாவகமாய் விழுந்திருக்கும்
இளையநதி போலது சுண்டியே யெனையிழுக்கும்
கருங்கூந்தல் நெட்டாற்றில் மனம் தொலைந்திருக்கும்
காளையிவன் நெஞ்சமதும் கலங்கியிருக்கும்...

மேவிவந்த எண்ணமதை மெளனமுமே தட்டிவிட‌
மோக‌ன‌ச் சின்ன‌ம‌தை மொழியாலே திட்டிவிட‌
உன‌தி மைய‌சைவுக‌ள் என்னித‌ய‌ம்வ‌ரை எட்டிவிட‌
உன‌க்கில்லையி தென‌ உள்ள‌மெனை குட்டிவிட‌...

ஆடிய‌சைந்த‌ பேரூந்தும் அடைக்க‌ல‌ம‌தை க‌ண்டு
ஆர‌ ம‌ர‌ அனைவ‌ரும் இற‌ங்கும்வ‌ரை நின்று
ஆழ்ம‌ன‌தில் உருண்டோடிய‌ ஆம்ப‌லே நீயும்
அறியா திற‌ங்கிபோகையிலே ப‌ற்றிய‌து தீயும்...

என் காதல்!!

  என் காதல்

கை கோர்த்து பூங்காக்கள் தோறும்
பூரித்திட்டதில்லை...

கடற்கரை மணலில்
கால்கள் பதித்ததில்லை
காற்றுவாங்கி
காலாற காதல் வளர்த்ததில்லை...

காதலர்தின கொண்டாட்டங்களில்
களித்ததில்லை
பரிசுகளால்
பட்டைதீட்டப்பட்டதில்லை....

ச‌ந்துக்க‌ள் தோறும் ச‌ந்தித்து
ச‌மூக‌க் க‌ண்க‌ளால்
ச‌வுக்க‌டிவாங்கிய‌தில்லை
ஊர்வாய்க‌ள்
உமிழ்ந்து தூற்றிய‌தில்லை...

உயிருக்குள் சும‌ந்து
உண‌ர்வுக‌ளை நேசித்து
உள்ள‌த்தால் வ‌ள‌ர்த்த‌
உண்மைக்காத‌லிது...

இர‌வுக‌ளின் துணையோடு
இத‌ய‌த்தின் நாத‌ங்களை
க‌வியாய் மொழிபெய‌ர்த்த‌
காவிய‌க்காத‌லிது...

வீணென்று சொல்வ‌த‌ற்கும்
வீண்வார்த்த‌க‌ளிதிலில்லை
விளையாட்டாய் கோபித்து
செல்லமாய் ச‌ண்டையிட்டு
ச‌ம‌ர‌ச‌மான‌ சாதார‌ண‌க்காத‌லில்லை...

பொத்தி பொத்தி ப‌துக்கிவைத்தும்
பொசுக்கென்று முளைவிட்டு விருட்ச‌மாயிடா
க‌ண்ணீர் குவ‌ளைக்குள்ளே
நினைவுக‌ளால் நீந்திவ‌ரும்
நிறைவேறாக்காத‌லிது -‍என்
நிர்க‌தியான‌ காத‌லிது...



[வெற்றிFM ன்(30.05.2011) "காற்றின் சிறகுகள்" நிகழ்ச்சியில் ஒலிபரப்பான எனது கவிதை]

ஏது செய்வது??

தமிழ் காற்றை
தரணியெங்கும் சுவாசித்து-நல்ல
தலைமைகள் உருவாகிட
தலைவிதிகள் செய்திடலாம்...

பூமியெங்கும்
பூத்துக்கிடக்கும்
பூரிப்புக்களெல்லா மொன்றாக்கி-புது
பூலோகம் செய்திடலாம்...

கண்மணிக்குள் கலந்திருக்கும்
கனவுகளையும்
கல்லுக்குள் ஒளிந்திருக்கும்
கலைகளையும் புனரமைத்து
கலியுகம் செய்திடலாம்...

விண்ணுக்குள் புகுந்திடும்
விஞ்ஞானம் போல
விளைநிலங்களில்-வறுமையகற்றும்
வித்தைகள் செய்திடலாம்...

காலங்காலமாய்
காதல் வளர்த்து
கல்லறைகளமைத்திட்ட நாம்
கல்யாணங்களை முறித்திடும்-காதலுக்கு
கல்லறை செய்திடலாம்...

எதுவுமற்ற மடமைகளகற்றி
எண்ணற்ற எண்ணங்கள் சூழ
ஏதேனும் செய்திடலாம்-மனிதத்தை
எய்திடலாம்..!!!


(இக்கவிதை 'மித்திரன்' வார இதழிலும், தினகரன் வாரமஞ்சரி , ' வார்ப்பு', 'தமிழ் ஓதர்ஸ்' 'LANKA SRI'  ஆகிய தமிழ் இணைய இதழ்களிலும் வெளியானது.)

என் சொர்க்கங்கள் சொற்பமாகின

.
அழுதழுது போகும்
ஆரம்ப வகுப்புக்கு
அடுத்த வீட்டு விமலா அக்கா
விரல் பிடித்து கூட்டிச்சென்ற
பயணங்களின்றும்
பசுமையாகவே....

செருப்பில்லாமல்
நடைபழக்கிய-அந்த
செம்மண் பாதை...
சாமி வைத்து விளையாடிய
கற்கள் நிறைந்த ஆற்றங்கரை
பூஜைக்கு பூப்பறித்த
காட்டுச்செடிகள்....

நான் டீச்சராகி அடிவாங்கிய-அந்த
பாவப்பட்ட வேலிச்செடிகள்-இப்போ
நான் பெரியவளாகியதைப் போலவே
மாற்றங்கள் கண்டிருந்தது...

விதியின் வேகத்தில்
விபத்துக்கள் அடைந்திருந்தது-என்
வியத்தகு கிராமம்
விழிகளுக்குள் சிக்கிக்கொண்ட
தேயிலை விரிப்பு-பசுமையின்
புதுமையினை ருசித்துக்கொண்டது!

மண் பாதைகள்  மறுரூபமடைந்து
'தார்' சேலையை தமதாக்கியிருந்தது
சிக்கனமாய் கட்டியிருந்த
சின்னச்சின்ன வீடுகள்
சிங்கார மாளிகையாயிருந்தது
சின்னதாய் வருத்தம்தான்
எளிமையும் இயற்கையும்
வாடியிருந்ததால்...

நாங்கள் கூட்டாஞ்சோறாக்கி
கூடிவிளையாடிய-அந்த
மண்திட்டை
நீண்ட தேடலின் பின்
அடையாளங்கண்டேனது
பொது மலசலகூடமாய்...

வேறுபடுகள் ஒவ்வொன்றிலும்
வேதனை தெறிக்கிறது-என்
பள்ளிக்கால பசுமை
பறிபோயிருந்தது...
சிங்கார பருவத்தின்
சில்மிஷங்கள்  சிதைந்திருந்தது...

சிறு வயது சினேகிதராரும்
சிக்கவில்லை-மாங்கல்யம் பெற்று
மாமியார் வீட்டிலாம்...
வறுமைச் சொரூபங்களின்
வடிவம்-வடுக்களாய்
விலகியிருந்தது...

நிமிர்ந்து நின்ற தோட்டத்தின்
தோரணை கண்டு
வியந்த விழிகளுக்கு
பழமையின் பசுமை
பாழாகியது வேதனைதான்...!!!


(இக்கவிதை 29.09.2009 அன்று"மித்திரன் வாரமலர்" சஞ்சிகையிலும், 04.04.2011 அன்று 'வசந்தம்' தொலைக்காட்சியின் "தூவானம்" நிகழ்ச்சியில் "காணாமல் போன கவிதைகள்" எனும் தலைப்பில் ஒளிபரப்பானது)