Saturday, August 27, 2011

"மீண்டு வந்த நாட்கள்" வெளியீட்டு விழாவும் எனது அநுபவமும்....

மீண்டு வந்த நாட்களின் வெளியீட்டு விழாவும் எனது அநுபவமும்....

 21.08.2011 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணியளவில் வெள்ளவத்தை தமிழ்ச்சங்க மண்டப அரங்கில் இனிதான ஒரு மாலை வேளையில் மங்கள விளக்கேற்றும் நிகழ்வுடன் கவிஞர் வதிரி சி.ரவீந்திரன் அவர்களுடைய "மீண்டு வந்த நாட்கள்"  கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா சிறப்பான ஓர் ஆரம்ப விழாவாக தொடங்கியது.
நிகழ்வுக்காக எனக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்தாலும் இன்னுமொரு சிறப்பு விருந்தினருடன் செல்லும்சந்தர்ப்பம் கிடைத்ததால் இரு அழைப்பாக அவ்விடம் சென்றேன்.தமிழ்ச்சங்க விழாவில் கலந்துகொள்ளும் முதல் சந்தர்ப்பம் மகிழ்ச்சியோடும் ஒருவித படபடப்போடும் தான் சென்றேன்.அலங்கரிக்கப்பட்ட அரங்கத்தில் அதிகம் பேர் அமர்ந்திருக்கவில்லை அதனால் கொஞ்சம் பின்னால் இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டேன் படபடப்பும் காணாமல் போயேவிட்டது. முன் வரிசையில் சில பெண்கள் அமர்ந்திருந்தார்கள் எனக்கு அறிமுகமானவர்கள் என எவரும் தென்படவில்லை,ஆனால் நான் அறிந்த சில முகங்களை நேரடியாக கண்டதில் மிகுந்த மகிழ்ச்சியாயிருந்தது. சிலரை இவர்களாக இருக்கவேண்டுமென ஊகித்தேன் அநுமானம் சரியாகத்தான் இருந்தது. ஒவ்வொருவராக வந்து அமர்ந்ததும் சபையும் நிறைந்துவிட்டது.
கொழும்பு பல்கலைக்கழக கல்வியற்துறை பேராசிரியர் மா.கருணாநிதி அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் முதல் கட்டமாக தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்து வரவேற்புரை,நூல் அறிமுகம், வாழ்த்துரை, கருத்துரை என நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக வழங்கப்பட்டது. நிகழ்வுக்கு வருகைதந்த பேராசிரியர்கள்,எழுத்தாளர்கள், சிறப்புவிருந்தினர்கள், இலக்கிய ஆர்வலர்கள் என அரங்கம் ஓர் அறிவியற்கூடமாக எனக்கு காட்சிதந்தது.
கவிஞர் திரு.மேமன்கவி அவர்கள் அங்குமிங்கும் ஓடியாடி ஓர் இளைஞனைப்போல இயங்கிக்கொண்டிருந்தார்.சகல வேலைகளிலும் மும்முரமாக சிரித்த முகத்துடனும்,ஓர் வேகத்துடனும் நிகழ்ச்சியை சிறப்பித்துகொண்டிருந்தார்.
மேடையில் பேசிய அனைவரின் பேச்சுக்களும் கவிஞஎ வதிரி சி.ரவீந்திரன் அவர்களைப்பற்றியதாகவும் அவரின் கவிதைகள், மற்றும் இலக்கியம் சார்ந்த விடயங்களாகவே இருந்தது அதனால் கருப்பொருள் பிரள்வடையாமல் எமது கருத்துக்களும் சிந்தனைகளும் நிகழ்வுக்குள்ளே சுவாரஸ்யமாய் சுற்றிவந்து கொண்டிருந்தது.பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளில் வேறு துறை சார்ந்த முக்கியஸ்தர்களின் பங்களிப்பு இருக்கும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் குறிக்கப்பட்ட விடயம் குறிதவறி விழுந்துகொண்டிருக்கும் அத்தகைய சம்பவங்களில் துளியேனும் இங்கு நடைபெறாதது மகிழ்வைத்தந்தது.
அடுத்ததாக மூத்த இலக்கியவாதியும் மல்லிகை ஆசிரியருமான ஜீவா அவர்களின் பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது அநுபவமும் முதிர்ச்சியும் அவருடைய பேச்சின் பெறுமதியை இன்னும் கூட்டியிருந்தது. அவர் குறிப்பிட்ட ஒருவிடயம், இன்றைய இளம் படைப்பாளர்களை பற்றியது அதாவது ஒரு தொகுப்பை வெளியிட்டதும் தங்களை பற்றிய பெறுமிதத்தில் இருப்பதாக சொன்னார் உண்மையில் அப்படி இருப்பதாக ஒத்துக்கொண்டாலும் இவர்களைப்போன்றவர்களை ஊக்கப்படுத்த வேண்டியதும் பொறுத்துக்கொள்ள‌வேண்டியதும் உங்களைப்போன்றவர்களின் கடமையல்லவா? இளம் இரத்தம் சில விடயங்களில் வேகம், சில விடயங்களின் ஆவல் நிமித்தமாகவும் பிழைகள் நடப்பது இயற்கையே. இளம் படைப்பாளிகளை வளர்த்துவிடுங்கள் ஐயா என என் மனம் கேட்டுக்கொண்டது.

நிகழ்ச்சிகளை அமைதியாக ர‌சித்துக்கொண்டிருந்தேன் நேரம் மிக மிக வேகமாக சுழன்றுகொண்டிருந்தது வந்திருந்த எவரும் என்னை அடையாளம் கண்டுகொள்ள‌வில்லை  ஏனென்றால் என்னைதான்  யாருக்கும் தெரியாதே.
இவ்விழாவினை முழுமையாக இருந்து பங்குகொள்ளவேண்டும் என்ற ஆவலிலே வந்தேன் ஆனால் போக்குவரத்து பிரச்சனை காரணமாகவும் ந‌டைமுறையிலுள்ள சில நிகழ்வுகளின் பயம் காரணமாகவும் பாதி நிகழ்வுடன் எழுந்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் அமர்ந்துகொண்டிருந்தேன் நேரத்தை பார்த்தவண்ணம். மாலை மயங்கிவிழும் நேரம் இருள் மெதுவாக தன் கரம் கொண்டு ஏந்த ஆயத்தமாகிக்கொண்டிருக்கையில் நானும் எனது சகோதரியுமாக இருக்கையைவிட்டு எழுந்தோம். மனம் வேண்டாம் என சொல்லியும் காலம் போ என கட்டளையிட்டுக்கொண்டிருந்தது வெளியீட்டுவிழாவில் கலந்துகொண்ட திருப்தியுடன் இனிய நினைவுகளை சுமந்தவண்ணம் பாதையை நோக்கிநடந்தேன்.
    


















2 comments:

sinnathambi raveendran said...

சுகா,
உங்கள் விமர்சனப் பார்வை வித்தியாசமாகவே உள்ளது.விமர்சித்தவர்கள் சொல்லாத
கவிதைகளை எடுத்து விமர்சித்துள்ளீர்கள்.இவற்றை நீங்கள் பத்திரிகைகட்கும்
எழுதலாம்.நீங்கள் பத்திரிகைகட்கு எழுதவேண்டும்.
வாழ்த்துகள்.

அன்புடன்

வதிரி.சி.ரவீந்திரன்.

sinnathambi raveendran said...

சுகா,
உங்கள் விமர்சனப் பார்வை வித்தியாசமாகவே உள்ளது.விமர்சித்தவர்கள் சொல்லாத
கவிதைகளை எடுத்து விமர்சித்துள்ளீர்கள்.இவற்றை நீங்கள் பத்திரிகைகட்கும்
எழுதலாம்.நீங்கள் பத்திரிகைகட்கு எழுதவேண்டும்.
வாழ்த்துகள்.

அன்புடன்

வதிரி.சி.ரவீந்திரன்.