Saturday, September 24, 2011

உன் எதிர்காலத்துக்காய்

அழகென்று தானுனை யணைத்தேனென் ஆருயிராக‌
அடியெடுத்து வைத்திடுமெவ் வேளையிலும் அடியேனாக‌
அன்பினாலே நாள்தோறும் ஆண்டே னன்னையாக‌
ஆகாதென்றே தள்ளிவிட்டாய் நானும் பாவியாக...

புவிமீதின் பூவையரை பூவாய் நினைந்தேன்
புரியாவுன் பார்வையினில் தீயா யணைந்தேன்
விழிதேடிய வழியினில் நீயே ஒளியானாய்
விடைதந்த வாழ்வையேன் பிடுங்கியெறிந்தாய்...

காதலென்ன வெறும் காசென்றா யெண்ணினாய்
கானலெண்ணத்தினால் கடல் கடப்பதென்றா யெண்ணினாய்
உயிரை உயிராலுணர்ந்து உணர்வினை உள்வாங்கி
உடல்வேகுமத் தருணம்வரை உருகிடுதலே...

வேற்றுநாட்டு சொந்தத்தால் வேண்டாத வனானேனோ
வேலையொன் றில்லாததால் தீண்டாதவ னானேனோ
ஆண்பிள்ளையுன் அன்பினா லழிந்ததை யறிவாயா
வீண்பிள்ளையா னதுன் பழியாலதை புரிவாயா...

காட்டுக் கத்தலினா லென்காதல் உணர்த்தியிருப்பேன்
காவிச்சென்ற இதயமதை கூவி யழைத்திருப்பேன்
காதலர்நம் கடந்தகால முழுதும் சொல்லியிருப்பேன்
கன்னியுன் னெதிர்காலம் நினைந்து மெளன‌மாய் விம்மியிருந்தேன்

Sunday, September 11, 2011

வஞ்சந்தீர்க்கும் வசந்தங்கள்

நாட்களினி டைவெளி நம்மை பிரித்தது
நாளும் பொழுதும் நமதன்பை வளர்த்தது
காட்டி னிருள்போல் காயங்கள் தொடர்ந்தும்
காதலொன்றே நெஞ்சினில் மருந்தாகவே...

நெஞ்சத்தி னாழ‌த்தில் நெருப்பாய் கனன்றும்
நெடுநேர விழித்திருப்பில் நேசமும் எரியா
வஞ்சந் தீர்க்கும் வசந்தங்கள் கூடி
வஞ்சியின் வயதோடு போராடுதே...

பாதையோர பூக்களுமே பகிடியாயெனை பார்க்க‌
பாதம்வைத்து நடைபயில பெண்மையும் தயங்க‌
வாதையோடு வழிநெடுகிலும் வாரிவைத்த உன்நினைவில்
வானம்வரை யிடைவெளியாய் தெரிகின்றதே...

கடல்தாண்டி கனந்துய்க்க என்மன்ன வா
கனவுகளை மூட்டை கட்டினாய் என்மன்னவா
தடல்புடலான மணவாழ்க்கை என்மன்ன வா
தனிமையாய் போனதே என்மன்ன வா...

கருமுகிலே....கருமுகிலே

கவிமழை பொழிந்திட்டாய் கருமுகிலே
கலைந்தெங்கே போகிறாய் கருமுகிலே
பாக்களால் நனைத்திட்டாய் கருமுகிலே
பூத்த துமண் பூக்களாய் கருமுகிலே...

வெடித்திட்ட உதடுகளாய்
வெந்திட்ட மண்தரையை
மழைக் கரத்தீண்டலால்
மருந்திட்டாய் கருமுகிலே...

உறங்கிக்கிடந்த மரங்களும்
மடிந்தே கிடந்த புற்தரைகளும்
நீட்டியெழுந்து உன்னால்
நிமிர்ந்து நிற்கிற‌து க‌ருமுகிலே...

வெட்டிக்க‌தை பேசியே
விய‌ர்வை துடைக்கு மெங்க‌ள்
விட‌லைப்ப‌ருவ‌ம் ம‌ண்ணை
விடாப்பிடி யாய்க்கொத்தியே
விளைநில‌மாக்குது க‌ருமுகிலே...

ப‌துங்கியே யிருந்திட்ட‌
ப‌ள்ளிச்சிட்டுக்க‌ள்
ப‌ற‌ந்து ப‌ற‌ந்து பாதையிலே
க‌ள்ளக்குளிய‌லிடுகிற‌து க‌ருமுகிலே...

தூர்ந்துபோன குள‌க்க‌ரையும்
தூசு ப‌டிந்த‌ தெருக்க‌ளும்
காவிபிடித்த‌‌ சித்திர‌மாய்
அழுக்காடை மூட்டைக‌ளும்
ப‌ல்வ‌ரிசை காட்டியே
ப‌ளிச்சென‌ சிரிக்குது க‌ருமுகிலே...

வ‌ள்ள‌லாய் வ‌ந்திட்டாய் க‌ருமுகிலே
வ‌ள‌மாக்கி வ‌ழிந்திட்டாய் க‌ருமுகிலே
வாழ்வுக்கொளி யூட்டினாய் க‌ருமுகிலே
வைய‌முனை போற்றுது க‌ருமுகிலே...

இன்ப‌ மிது வன்றோ



ஐந் திரு மாத‌ங்க‌ளா யென்ம‌ணி வ‌யிற்றில்
நிந்த‌னை யோடே சும‌ந்தே னென் க‌ருவை -இந்
நாள் ம‌ட்டும‌தை என்குழ‌ந்தை யென்றுண‌ர‌வில்லை
நான் பெற்றுக் கொள்ள‌வும‌தை விரும்பிட‌வில்லை...

என் னைபுதைத்து முளைத்தெழுந்த‌  குழ‌ந்தாய்
நின் சோக‌க் க‌ருவாய் ஏனிங்கு ம‌ல‌ர்ந்தாய் -விண்
ம‌ழை போலொரு க‌ண்ணீர்க்க‌தை என‌க்குண்டு
ம‌ன‌ம் விட்டுசொல்லிட‌வே ம‌ன‌மொன் றிங்கில்லை...

ஊர்வாய் க‌ளையிழுத்து மூடிட‌வே என‌துற‌வுக‌ள்
பேர் காப்பாற்றிக் கொள்ள‌ ம‌ண்ணிலே -வேர்
விட்டு போன‌த‌ம் கெளர‌வ‌ம் காத்திட‌வேயென்
விட‌லை ப‌ருவ‌ம‌தை வீணாக்கிய‌ விரோத‌க்க‌ருவிது...

ம‌ண‌வாள‌ன‌து பேரும‌றியா முக‌ம‌றியா பேதையாய்
க‌ன‌வினில் ஜொலித்த‌ யென் க‌ற்ப‌னைக‌ள் -என‌
தாசையின் தாட்ப‌ரிய‌ங்க‌ளை ய‌ழித்து புகுத்திய‌
தாழாமையில் உருவான‌ தாய்மை யின்ப‌ம‌ல்ல...

மெய்தொட்டே யெழுதுகிறேன் ம‌ன‌தில் காய‌மே
தாய்மையில் வ‌யிற்றை நானும்த‌ட‌வி -சேய்
யென‌ நினைந்து ம‌ச‌க்கையில் ம‌கிழ்ந்த‌துமில‌
க‌ல்லைச் சும‌ப்ப‌தாய் கல்லாய்த்தான் விழித்திருந்தேன்...

ப‌த்துமாத‌த் தின்ப‌ல‌னாய் தாய்மையின் வ‌லியெனை
சித்த‌ங் க‌ல‌ங்க‌ச் செய்கையிலே சிசுவுனை -ப‌த்
திர‌மாயுல‌க‌ங்காண‌ச் செய‌வென‌ ப‌கைமையும் ம‌ற‌ந்தேன்
தாய்மையின் ம‌க‌த்துவ‌மிதோ த‌ர‌ணியில் ந‌ற்பேறிதோ...

பூரித்திட்ட‌ நெஞ்ச‌ம‌து பூமுக‌முனை க‌ண்ட‌தும்
வாரிய‌ணைத் திட்டெ  னைம‌ற‌ந்தே கொஞ்சிய‌தும் -பாரி
போலென‌து ம‌ன‌மும் பாலூட்டி துஞ்சிய‌தும்
போர்க்க‌ப்ப‌லென் குண‌மே மூழ்கிற்றே உன‌த‌ழுகையில்...

நினைவில் நின்றவை

01.சோ(so) சோவென ஆங்கில மழை அழகிய‌

தமிழ றிவிப்புக்களில்...


02.முயற்சியிலா பயிற்சியும்

சுழற்சியிலா முயற்சியு மென்றும்

சரித்திரம் படைப்பதில்லை...


03.அழ வேதோன்றிய தெனக்கு

அழ கில்லை யென்பதால்...


04.புன் சிரிப்பானது

பெண் சிறப்பானது...


05.கைப் பிடிப்பாயென காலமெலாம் கனாக்கண்டேன்

கைப் பிடியுடன் காலங்கரைந்துமுனை காணவில்லை...

Thursday, September 8, 2011

மனதில் தோன்றியது

1.எண்ணிலடங்கா ஆசைகளோடு
மண்ணிலடங்கிய ஆத்மாக்களின்
கண்ணீரடக்க வோயிந்த‌
புண்ணியதானம்!!

11.நட்பென்ற நாமகரணத்தில்
நமதுறவு நீண்டுகொண்டாலும்
நாமறியாத ஏதோவொன்று
நமக்குள் இழையோடுவதையறி கின்றாயா??

111.வாகன நெரிசலும்
வாழ்விட‌ நெரிசலும்
வாழ்க்கையை நெருக்கிவிடுகின்றது
தலைநகரில்!!

iv.நீர் மேல்
நிலா எழுதும்
நிச‌ப்த‌ம் இந்த
நிம்மதியான இர‌வில்
பெள‌ர்ண‌மி ஸ்ப‌ரிச‌மாக‌....

Saturday, September 3, 2011

எனது பார்வையும் கவிஞ‌ரின் பதிலும் (கவிஞர் பி.அமல்ராஜ் அவர்களின் "கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" கவிதைத்தொகுப்பு)


எனது 'கிறுக்கல்கள் சித்திரமாகின்றன' பற்றி மனம் திறக்கும் ஓர் இலங்கை இளம் பெண் எழுத்தாளர் த.எலிசபெத்...


வணக்கம், இறுதியான பல சர்ச்சைகளை உருவாக்கிய அந்த இலக்கியப் பதிவைத் தொடர்ந்து இப்பொழுது எனது மனம் பூரிக்கும் ஒரு சுகமான பதிவை கொண்டுவருகிறேன். எனது கவிதைப் படைப்பான 'கிறுக்கல்கள் சித்திரமாகின்றன' என்கின்ற நூலை ரசித்து வாசித்த வளர்ந்துவரும் இளம் பெண் எழுத்தாளர்களில் ஒருவரான ராஜ் சுகா (த.எலிசபெத்) எனக்கு மின்னஞ்சலிட்ட தனது ரசனைக் குறிப்பு இது. பல உண்மைகளை அப்படியே சொல்லியிருக்கிறார். பெண் என்கின்ற தளத்திலிருந்து பார்த்தபடியால் பல ஆண் வரிகள் அவருக்கு தெளிவாகவே தெரிந்திருக்கிறது. ஆனால் எதையும் தவாறாக சொல்லவில்லை. (என்று நினைக்கிறேன்). சரி அவருடைய அந்த மடலைப் படியுங்கள்.

உங்கள் கருத்திற்கும், ரசனைக்கும் மிக்க நன்றிகள் சுகா.. உங்கள் எழுத்துப் பயணமும் வெற்றிகராமனதாக தொடர வாழ்த்துக்கிறேன்.


கவிஞர் பி.அமல்ராஜ் அவர்களுக்கு வணக்கம்!


தங்களின் எழுத்துக்களை முதன்முதலில் முகப்புத்தகத்தின் வாயிலாகவே தரிசிக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.புதுக்கவிதைகளிலும் யதார்த்தபூர்வமான நகைச்சுவையுண‌ர்வுடன் கூடிய உங்களது எழுத்துக்களே என்னை ரசிக்கத்தூண்டியது.உண்மையில் இன்றைய இலக்கிய உலகில் மரபுக்கவிதையை தவிர்த்து புதுக்கவிதைகளுக்குள் ஓர் புரட்சியே நடந்துகொண்டிருக்கின்றது.எத்தனையோ மூத்த இலக்கியவாதிகளின் கடுப்புக்களுடனும் கண்டிப்புக்களுடனும் வளர்ந்துவரும் இப்புதுக்கவிதை சாம்ராஜ்யத்தில் உங்களுடைய கவிதைகளுக்கும் சிறந்த களம் உண்டு என்பதனை தொகுப்பை வாசிக்கும்போதே உண்ர்ந்துகொண்டேன்.
"கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" என்ற தொகுப்பின் கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் அதன் எதிரலைகள் எண்ணற்ற எண்ணங்களை உருவாகிவிடும் சிறந்த கருத்துக்களமாக காணப்படுகின்றது வாழ்த்துக்கள்.
"தியாகம் அவள் பெயர்" என்ற தாய்மைக் கவியூடே ஆரம்பித்து சிறப்பித்திருப்பது வ‌ரவேற்புக்குரியது.அதில்,


" ஊர் உறங்கியும்
உறங்காத‌
உன் தாலாட்டும்
இன்னும் என்
காதுகளில் கேட்கும்
ரகுமானின் 'ஜெய் கோ'தான்"...

என்று தாலாட்டையும் இளைஞர்களின் இரவுநேர இசை மயக்கத்தையும் வர்ணித்துள்ளவிதம் ரசனை.அதிகமாக காதல் கருக்களை சுமந்துவந்த கவிதைகள், பலவிதமாக காதலை நோக்கியிருக்கின்றது."நீதான் அவள்" கவிதையில் காதலை ஏக்கத்தோடு பார்க்கின்ற வரிகளாகவும் "நீ நட்பு காதல்" தலைப்பில்,புரியும்போது விளங்காத காதல் பிரியும்போது உணர்கையில், காதலுக்கேயுரிய தடுமாற்றங்களின் வரிகளாகவும்,"கல்லறைக்கனவு" கவிதையில் ஒருதலைக்காதலின் ஓரங்க வலிகளை உண‌ர்த்தும் விதமாகவும்,"ஒரு ரயில் பயணம்" "ஒரு காதல் காவியம்" "அடங்காத காதல்" "மொட்டை மாடிக்காதலும் முடிந்துபோன கற்பனையும்" "கடற்கரை காதல்" என பல்வேறு கோணங்களில் கவிஞரின் பார்வை இளையவர்களின் மனதை வருடும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

சின்ன சின்ன வரிகளோடு சித்திரம்போல் வரையப்பட்டுள்ள இத்தொகுப்பு பார்வைக்கும் வாசிப்புக்கும் புரிதலோடு நயந்துகொள்கின்றது.ஒவ்வொரு கவிதையும் சமூகத்தை வித்தியாசமான சிந்தனைகொண்டு தொட்டிருப்பதும் நிஜங்களின் பிரதியாக வெளிப்பட்டிருப்பதும் கவிதைகளுக்கு மேலும் கனத்தை சேர்த்திருக்கின்றது.இன்னும் கவிதையின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கலாம் என தோன்றுகின்றது.

"முதிர்க்கன்னி" என்ற கவிதையில் ஒரு பெண்ணின் உள்ளக்குமுறலை அணுகியிருப்பது கவிஞரை பாராட்டச்செய்கின்றது.இங்கு கவிஞர் இனியவன் இஸாருதீன் அவர்களுடைய கவிதையொன்று நினைவுக்கு வருகின்றது,


"கிழவனாக சிந்தித்து
குழந்தையாக வாழும்
வாலிப மனிதன்"

என அவர் குறிப்பிட்டது இங்கு நிஜமாகியிருப்பதில் மகிழ்ச்சியளிக்கின்றது.

அத்தோடு தேசத்தின் கடந்த கால வடுக்களின் வலிகளை கண்முன் காட்டியிருப்பது கண்ணீரை வரவழைக்கும் உருக்கமான வரிகள்."செத்தா போய்விட்டேன்" கவிதையில்,


" ஒற்றைக்காலும்
ஒற்றைக்கையும்
ஒற்றையாய் நிற்க என்
இதயம் மட்டும்
இரட்டையாய் அடிக்கிறது
இறந்துவிடுவதா
இல்லை மறந்து
வாழ்ந்து விடுவதா?"

என்ற வினாக்களுக்கு இதயம் ஓர் கணம் நின்றியங்குகின்றது.அதே உணர்வை "முள்ளிவாய்க்கால் முடிவுரை" "பயணங்கள் முடிவதில்லை" ஆகிய கவிதைகளிலும் உணர முடிந்தது.

பொதுவாக பெண்களை குறைகூறாத ஆண்கள் மிக அரிது கவிஞர் மட்டுமென்ன விதிவிலக்கா? தனது "புதுமை பெண்ணும் தோற்றுப்போன ஆணும்" என்ற கவிதையில் இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கின்றார்,


"மானத்திற்கும்
ஆடைக்கும்
சம்பந்தமேயில்லை இவள்
அகராதியில்
பாவம்,
வெளியில் தெரிபவை
அவள் அங்கங்கள் மட்டுமல்ல‌
வெளிறிப்போன நம் கலாச்சாரமும்தான்!"

என கலாச்சாரத்துக்காய் கவலைப்பட்டுள்ள கவிஞர், "நீதான் அவள்" என்ற கவிதையில்,


" என்
இளமையின் தாகம்
உன்னுடைய தேகம்
தீருமா என் சோகம்
இதுவா காதல் வேகம்?

என்பதனையும் அவரே உணர்த்தியிருக்கின்றார்.இதே விடயத்தினை " மொட்டை மாடிக்காதலும் முடிந்துபோன கற்பனையும்" கவிதையிலும் காணலாம்.இதிலிருந்து புரிந்துகொள்ள முடிவது என்னவென்றால்,எதிர்பார்ப்பதும் நீங்களே எதிர்ப்பதும் நீங்களே தான்.எதை வெறுப்பதாய், கண்டிப்பதாய் வெளியில் சொல்லுகின்றீர்களோ அதையே உள்வாங்கிக்கொள்ள முனைவது இந்த ஆண்களின் இயற்கையான இயல்பு என்பதை அழகாக கவிவரிகளில் தந்துள்ளார் வாழ்த்துக்கள்.

எவ்வளவுதான் நம்முடைய வளர்ச்சி உயரத்திலிருந்தாலும் எமது பழைய நினைவுகளை மீட்டிப்பார்ப்பதும் பழைய வாழ்வின் நிழல்களில் ஒதுங்கிப்பார்ப்பதும் மனதுக்கு இனிமையான ஒன்றே அவ்வுணர்வுகளை கவித்துவத்துடன் காணும்போது இரட்டிப்பு சந்தோஷத்தில் மனம் குதுகலிக்கின்றது.அந்த இதத்தினை " எனது ஆட்டோகிராப்" "ஊர்ப்பக்கம்" ஆகிய கவிதைகளில் காணலாம்.

உடைத்து வைக்கப்பட்ட மாதுளம்பழத்தினைப்போல கவிதைகள் அனைத்தும் கண்களையும் கருத்தினையும் கவர்ந்துள்ளது.ஓர் நல்ல புத்தகத்தினை வாசித்த திருப்தியும் பெறுமதியான சிந்தனை வெளிப்பாட்டினை ரசித்த நிறைவும் இத்தொகுப்பில் அடங்கியிருக்கின்றது.எத்தனை ஆர்வத்துடன் முதற்பக்கம் ஈர்த்ததோ அதே ஆவலோடு கடைசி ஏடுவரை தொடர்ந்தது இத்தொகுப்பினதும் கவிஞரினதும் வெற்றி எனலாம்.


இன்னும் பல்வேறு தளங்களுடன் சிறந்த களம் காணவும் இப்பெரிய இலக்கிய உலகில் உங்களுக்கென ஓர் சிறப்பான இடத்தினை தக்கவைத்துக்கொள்ளவும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.


நன்றி
த.எலிசபெத்