Friday, April 29, 2016

கல்குடா நேசன் நேர்காணலோடு கண்டி கவிஞர் V.M. ரமேஷ்

கல்குடா நேசன் இணையத்தினூடாக வாராவாரம் கலைஞர்கள் படைப்பாளிகளை சந்தித்து அவர்களுடனான கலந்துரையாடலை நேர்காணலாக தந்துகொண்டிருக்கின்றோம். பலரது ஆதரவையும் எதிர்பார்ப்பையும் சுமந்த இப்பகுதியானது வாசகர்கள் அனைவரினது ஆசியோடு வெற்றிநடை போடுகின்றது. இலைமறை காய்களாக இருக்கும் படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதிலும் வளர்ந்த கலைஞர்களின் கருத்துக்களை திறமைகளை உங்களோடு பகிர்ந்துகொள்வதினாலும் மகிழ்ச்சியடைகின்றோம்.

இதன் தொடரில்  வரும் வெள்ளி அன்று 29.04.2016   35வது படைப்பாளியாக எம்மோடு இணையவிருக்கின்றார் கண்டி மாவட்டத்தின் பன்விலயை பிறப்பிடமாக கொண்ட இளைய, வளர்ந்துவரும் கவிஞர்  V.M. ரமேஷ் அவர்கள்.


வாசிப்பின் மணத்தை நுகர்ந்திடாது வெறுமனே வாய்க்கு வந்ததை எழுதும், விமர்சனங்களை விரோதியாய் பார்க்கும் வளரும் இளையவர்கள் மத்தியில்  //வாசிப்பே என்னை எழுதத்தூண்டியது தரம்7 ல் ஈசாப் கதைகளை வாசிக்கதொடங்கியதன் பின்னர் ஏராளமான நூல்களை வாசித்து முடித்தேன் அத்துடன் இயற்கை மீதான காதலும் என் எழுத்துத்துறையை விரிவுபடுத்தியது// என மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழும் இவர் தன் எழுத்துக்களால் புரட்சிமிக்க சிந்தனைகளை விதைக்க பாடுபடும் ஒருவராக வெளிப்படுகின்றார். மலையக சமூகத்தை மேம்படுத்த வேண்டும், மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கோடு செயற்படும்  இவர் அரசியல், இலக்கியம், சமூகம் சம்பந்தமாக பல்வேறுபட்ட கருத்துக்களை வெளிப்படையாக நேர்மையாக தன் மன உணர்வுகளை ஐய‌மின்றி தெரிவித்துள்ளார். இக்கவிஞரின் காத்திரமான பல கருத்துக்களை வாசிக்க நேர்காணலோடு இணைந்துகொள்வோம்.


01 கேள்வி: தங்களைப் பற்றி?

பதில்: மலையக மண்ணின் மைந்தன். கண்டி மாவட்டத்தின் பன்வில பிரதேச பிரிவுக்குட்ட கோமறை கீழ்ப்பிரிவு தோட்டத்தை வசிப்பிடமாக கொண்டவன். 
ஆரம்பக் கல்வியை கோமறை தமிழ் வித்தியாலயத்திலும் சாதாரண தரத்தினை கந்தஹெட்டிய தமிழ் வித்தியாலயத்திலும், உயர் தர கல்வியை அபிராமி தமிழ் மகா வித்தியாலயத்திலும் கற்றேன். இளங்கலைமானி பட்டத்தினை பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்றேன். அத்துடன் தற்போது நான் ஆரம்ப கல்வியை கற்ற பாடசாலையில் ஆசிரியராக கடமை புரிகின்றேன்.
இலக்கியத்தின் காதலன், தமிழின் காதலன் எனக்கூறலாம். அத்துடன் கவிதைகள், கட்டுரைகள் என்பவற்றை எழுதி வருவதுடன்  பத்திரிகை, சஞ்சிகைகள் வழியே அவற்றை வெளியிட்டு வருகின்றேன். வட்டார, பிரதேச செய்திகளை அவ்வப்போது ஊடகங்களுக்கு அனுப்பி வருகின்றேன். எழுத்துக்களால் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வளர்ந்து வரும் ஓர் இளம் எழுத்தாளனாக இருக்கின்றேன்.






  02 கேள்வி: கவிதை மீது எப்படி ஆர்வம் ஏற்பட்டது?


பதில்: வாசிப்புத்துறையே என் கவிதை ஆர்வத்திற்கு இட்டுச் சென்றது எனலாம். இவ்வாசிப்பு ஆர்வத்தை எனக்குள் விதைத்தவர் என் குரு திரு தியாகநாதன் அவர்கள். தரம் 7இல் ஈசாப் கதைகளை முதல் முதலில் வாசிக்க தொடங்கினேன். இன்று எண்ணிலடங்காக நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகளை வாசித்துள்ளேன். இவ்வாசிப்பில் இருந்தே என் கவியூற்று ஊற்ற காரணமாய் இருந்தது என்றால் மிகையாகாது. இவ்வாசிப்போடு இயற்கையின் மீதான  காதலும் கவிதையை எழுத அதிக ஆர்வத்தை தூண்டியது.  


03 கேள்வி: உங்கள் திறமையை வெளிப்படுத்திய முதல் அனுபவம்?

பதில்: என் திறமைக்கு களம் அமைத்த முதல் சந்தர்ப்பமாக நோர்வேக்கும் இலங்கைக்கும் இடையிலான சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்ற காலத்தில்  பத்திரிகையில் சமாதானம் எனும் தலைப்பில் கவிதை எழுதும் போட்டியொன்றில் கவிதை எழுதி பரிசு பெற்றேன். இதுவே என் கவிதைக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் எனலாம்.


04 கேள்வி: உங்களது படைப்புக்களுக்கு கிடைத்த களங்கள் பற்றி?


பதில்: மலையகத்தை பொறுத்தவரை தட்டிகொடுப்பவர்களை விட தட்டிவிடுபவர்களே அதிகம். இது மனவேதனையை தரும் விடயமாகும். ஆரம்ப காலத்தில்  என் கவிதைகளுக்கு களம் அமைத்து கொடுத்தவை. பாடசாலை மண்டபங்களே. பின்னர் கண்டித்தமிழ் சங்கம், முத்தமிழ் சங்கம் என்பனவற்றில் என் கவிதைகள் துளிர் விடத் தொடங்கின.  இன்று சமூக வலைத்தளங்களில் என் கவிதைகள் தொழில்நுட்ப ரத்தம் பாய்ச்சப்பட்டு வெளிவருகின்றன. இதனால் பிரதேச எல்லை தாண்டி சர்வதேச வளம் வரும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது எனலாம். அத்துடன் என் கவிதைகளுக்கான கருத்துக்களை படைப்பாளிகள் சொல்லும்; போது என் படைப்புக்களை மேலும் கூர்மையாக்கும் சந்தர்ப்பம் உருவாகிவிடுகின்றது. இது என் படைப்புக்கு கிடைத்த வரபிரசாதமாகவே கருதுகிறேன்.





05 கேள்வி: வளரும் படைப்பாளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினையாக நீங்கள் காண்பது?


பதில்: பிரச்சினைகள் என்னவென்று தெளிவாக கூறமுடியாது. வளரும் படைப்பாளிகளின் சூழ்நிலைக்கேற்ப அவர்களின் பிரச்சினை வேறுபடுகின்றது. 
குறிப்பாக மலையக பகுதிகளில் வாழும் படைப்பாளிகளுக்கு அவர்களின் படைப்புக்களை வெளியிட பொருளாதார சிக்கல் முக்கிய தடையாக உள்ளது.  
அத்துடன் இலக்கிய வட்டத்தில் போட்டிகள் அதிகரித்து வருகின்றது. இளம் தரப்பினரிடையே புதுவகையான, புதுநடைகளை தழுவிய, புது கருபொருள் பொதிந்துள்ள கவிதைகள் வெளிவர தொடங்கியுள்ளன. 
எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்களா என்ற வினாவும் எழுந்துள்ளது. சமகாலத்தில் கவிதைகளை தரம் பிரிப்பத்தில் சிக்கல்கள் காணப்படுகின்றது. அத்துடன் சிறப்பாக எழுதுபவர்களுக்கான களம் சில இடங்களில் காணப்படாமை கவலைக்குரிய விடயமாகும். 


06 கேள்வி: நீங்கள் பங்குபற்றிய போட்டிகள் நிகழ்ச்சிகள் கவியரங்குகள் பற்றியும் பெற்றுக்கொண்ட பாராட்டுக்கள் பற்றியும் எங்களோடு பகிர்ந்து கொள்ள முடியுமா?

பதில்: நான் பாடாசாலை மட்டங்களிலும் பிரதேச மட்டங்களிலும் கவியரங்குகளில் பங்கு பற்றிகொண்டிருக்கின்றேன். வெடிப்பொலி கவிஞன் என்று தான் என்னை பொதுவாக அழைப்பார்கள். என்னுடைய கவிதைகளில் கவியரங்க கவிதைகளே அதிகமான பாராட்டுக்களையும் பெருமைகளையும் தேடிக் கொடுத்தன. 
அத்துடன் மலையகம், வடக்கு கிழக்கு உட்பட இந்தியா மற்றும் புலம் பெயர் நாடுகளில் என் கவிதைகள் பேசப்பட முக்கிய காரணம் கவியரங்க மேடைகளில் நான் முழங்கிய கவிதைகளே.





07 கேள்வி: உங்களுக்கு கிடைத்த விமர்சனங்களில் நீங்கள் நெகிழ்ந்த சந்தர்ப்பம்?

பதில்: எனக்கு கிடைத்த விமர்சனங்களை எடுத்து நோக்கினால் பாராட்டுகளே அதிகம். மலையக கவிஞனுக்கான அங்கீகாரத்தினை என் கவிதைகளை நேசிப்பவர்கள் கொடுத்துள்ளதாக உணர்கின்றேன். என் கவிதைகளை நேசிப்பவர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். என் கவிதைகளில் காணப்படும் குறைபாடுகளை நீங்கள் சுட்டிக்காட்டும் பட்சத்திலே இனி வரும் காலங்களில் என் படைப்புக்கள் உரம் பெற வழிசமைக்கும். எனவே என் படைப்புக்களில் உங்களில் விமர்சனம் எனக்கு கட்டாயம் தேவை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.


08 கேள்வி: ஏனைய இலக்கிய வடிவங்களை விட இளைஞர்களுக்கு கவிதைமீது அதிக நாட்டம் காணப்படுகின்றது. இது ஏனென நினைக்கிறீர்கள்?


பதில் இது உண்மையானதொரு விடயம் தான். பேராதனை பல்கலைக்கழக்கத்தின் தமிழ்த்துறை போராசிரியரும் தலைவருமான மகேஸ்வரன் கூட இது பற்றி கூறியுள்ளார். இன்றைய இளைய தலைமுறைகள் கவிதைகளில் அதிகம் ஆர்வம் காட்டுவதற்கு காரணம் இது ஒரு இலகுவான நடையாக உள்ளதால் அதிகமாக இளைய தலைமுறை கவிதைகளை எழுதத்தொடங்குகின்றனார். 
ஒரு நாவலிலோ சிறுகதையிலோ சொல்ல முடியாத விடயத்தை நான்கு வரி கவிதை நறுக்கென்று சொல்லிவிடும். இதுவே கவிதையின் சிறப்பு. இதனால் தான் கவிதையை அதிகம் நேசிக்கிறார்கள் என கருதுகின்றேன்.




09 கேள்வி: மரபின் மீது வாசகர்களோ படைப்பாளிகளோ அதிக ஈடுபாடு காட்டாமைக்கு காரணம் எதுவென எண்ணுகிறீர்கள்?

பதில்: மரபுக்கவிதையின் பொருள் விளங்கிக் கொள்வது கடினமாகும். பண்டிதர்களுக்கு மட்டும் புரியும் மொழிநடையில்  இன்றைய இளைஞர்கள் நாட்டம் இல்லை. இருப்பினும் முற்றாக மரபு கவிதைகளை இன்றைய இளையவர்கள் தவிர்க்கவில்லை


10. சமவுரிமை பேசும் இக்காலத்திலும் பெண்களை இரண்டாம் நிலையாக தமக்கு கீழாக நினைக்கும் ஆண்கள் பற்றி?


அவ்வாறானதொரு நிலை நடைமுறையில் இருக்கின்றதா என்பது என் கேள்வி. காரணம் ஆரம்ப காலங்களோடு ஒப்பிடும் போது இன்று பெண்களுக்கு சமவாய்ப்புக்கள் அதிகமாக வழங்கப்படுவதாக உணர்கின்றேன். பெண்களின் பாதுகாப்பு கருதி சில விடயங்களை பெற்றோர், பாதுகாவலர் மேற்கொள்கின்றனர். இது இரண்டாம் நிலை என்பதை விட அவர்களின் பாதுகாப்புக்காகவே என்று எடுத்துக்கொள்ளலாம். பெண்களை இரண்டாம் நிலையாக பார்க்கும் வழக்கம் எமது பண்பாட்டில் குறிப்பாக மலையக மக்களின் பண்பாட்டில் இல்லை என்று கூறலாம்.






11. பெண்களின் வளர்ச்சிப்போக்கு பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?


என்னைப் பொறுத்தவரையில் பெண்களின் வளர்ச்சிப்போக்கு சிறப்பாக இருக்கின்றது.  விளையாட்டு, கல்வி, பொருளாதாரம் என்பவற்றில் பெண்களின் பங்களிப்பு வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றது என்றுதான் கூற வேண்டும். குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத்தில் மலையக பெண்களின் வகிபங்கு அதிகளவில் காணப்படுகின்றது. 
அரசியலை பொறுத்தவரையில் பெண்களின் பங்களிப்பு குறைந்த வகையில் காணப்படுகின்றது. குறிப்பாக இலங்கையின் பாராளுமன்றத்தில் ஐந்து சதவீதமளவு பெண் பிரதிநிதித்துவம் காணப்படுவது கவலைக்குரிய விடயமாகும். அத்துடன் உள்ளுராட்சி, மாகாண சபைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்து காணப்படுகின்றது. சமகாலத்தில் 25 சதவீதமாக பெண்களின் பிரதிநிதித்தவத்தை அரசியலில் அதிகரிப்பதற்கான யோசனை அமுலுக்கு வந்துள்ளது. இதன் நடைமுறைத்தன்மையை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும் கல்வித்துறையில் பெண்களின் வளர்ச்சி சிறப்படைந்து வருவதாக நான் அறிகின்றேன்.

12. மேலோட்டப்பார்வையில் சம உரிமை வழங்கப்பட்டிருந்தாலும் முழுமையான அங்கீகாரம், பாதுகாப்பு, உரிமை வழங்கப்படவில்லை என்ற கருத்துக்களே மேலோங்கியுள்ள நிலையில் ' அரசியலில் பெண்களின் பங்களிப்பு மிகக்குறைவே' என்ற தங்களின் கருத்தும் ஒரு காரணமாக கொள்ளலாமா? 


பெண்களில் அரசியல் பிரதிநிதித்துவம் மிகவும் பின்தங்கிய நிலையிலே காணப்படுகின்றது. பாராளுமன்றமாகாக இருக்கட்டும், மாகாண சபைகளாக இருக்கட்டும் உள்ளுராட்சி மன்றமாக இருக்கட்டும். பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைவாகவே காணப்படுகின்றது. அரசியலில் நுழையும் பெண்களின் நிலையினை எடுத்துநோக்கினாலும் கூட அவர்கள் உயர் வர்க்க அரசியல் பின்புலத்தினை கொண்ட பெண்களே அதிகமாக காணப்படுகின்றனர். மத்திய, கீழ் மட்ட பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே காணப்படுகின்றது என்பது வெளிப்படையான உண்மையாகும். இவ்வாறு பெண்களின் பங்களிப்பு குறைவாக காணப்பட குடும்ப சூழல், மகற்பேறு, பால்நிலை சமத்துவமின்மை போன்ற பல காரணங்கள் உள்ளன. 
பிரான்ஸ் போன்ற நாடுகளில் பெண்கள் அரசியலில் நுழைந்தால் அவர்களுக்கு பரிசு வழங்கி உற்சாகப்படுத்துகின்ற ஒரு நடைமுறை காணப்படுகின்றது. அவ்வாறான நடைமுறையினை எமது நாட்டிலும் ஏற்படுத்த வேண்டும். அத்துடன் பெண்களின் வாழ்வியல் கட்டமைப்பு, சமூக கட்டமைப்பு என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தும் போதே அரசியலில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும். 




13. நீங்கள் ஓர் ஆசிரியர் என்ற வகையில் தமிழ் மொழியினை கற்பதில் இன்றைய மாணவர்கள் பெற்றார்களிடையே எவ்வாறான ஆர்வம் காணப்படுகின்றது? 


நான் மலையகத்தினை அடிப்படையாக வைத்து இக்கேள்விக்கு பதில் கூற நினைக்கின்றேன். தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளை பொறுத்தவரையில் அவர்கள் தமிழ் மொழியில் கற்க வைப்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆங்கில மொழியூடாக கல்வி கற்க வைக்கக்கூடிய பணபலம் அவர்களிடம் காணப்படாததால் தமிழ் மொழி மூலம் தன்னுடைய பிள்ளைகளை படிக்க வைக்கின்றார்கள். வசதி படைத்த அல்லது உயர்தொழில் புரியக்கூடிய விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே ஆங்கிலமொழியினூடாக தங்களில் பிள்ளைகளை படிக்கவைக்க எண்ணுகின்றனர்.


14. மலையக படைப்பாளிகளுக்கிடையில் காணப்படும் தொடர்புகள் ஆரோக்கியமாக இருக்கின்றதா?


மலையக படைப்பாளிகளுடனான தொடர்பினை நோக்கும் போது மூத்த படைப்பாளிகளிடையே முறுகல் நிலை காணப்படுவதாக நான் உணர்கின்றேன். அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகமாக காணப்படுகின்றது. அத்துடன் தனக்கு மிஞ்சிவர்கள் யாரும் இல்லை என்ற தலைக்கணம் இருப்பதாக அறிகிறேன். இளைய படைப்பாளிகளை உருவாக்குவதில் அவர்களின் பங்களிப்பு மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. சிரேஷ்ட படைப்பாளிகள் இளையவர்களை தட்டிக்கொடுக்க விரும்பவில்லை என்றே நான் உணர்கின்றேன்.
இன்று வடக்கு, கிழக்கு உட்பட இந்தியா, புலம்பெயர் நாடுகளில் படைப்பாளிகள் இளையவர்களை தட்டிக்கொடுப்பதை போன்று மலையக படைப்பாளிகள் தட்டிக்கொடுக்க விரும்பவில்லை. இது கவலைதரும் விடயமாகும்.
இருப்பினும் எனக்கும் மலையக படைப்பாளிகளுக்குமுடனான உறவு சிறப்பாக காணப்படுகின்றது. அத்துடன் சர்வதேச படைப்பாளிகளுடனான தொடர்புகளும் அதிகரித்துவருகின்றது. நான் ஒரு கவிஞன் எனும் வகையில் என்னை தட்டிக்கொடுக்கும் படைப்பாளிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.


15. மலையகத்தை பொறுத்தவரை எந்தெந்த விடயங்களில் மாற்றங்கள் ஏற்படவேண்டும் என நினைக்கின்றீர்களா?


மலையக மாற்றம் என்பது இன்று எதிர்மறையான மாற்றமாக இருப்பதாக நான் உணர்கின்றேன். குறிப்பாக இன்று தொலைக்காட்சி பாவணையில் டிஸ்க் டீவியின் பாவணை அதிகரித்து வருகின்றது. இது அழிவின் விளிம்புக்கு மலையகத்தை இட்டுச் செல்கின்றது. அத்துடன் மதுபாவணையின் தீவிரம், பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் என்பன இன்று மலையகத்தில் துரித கதியில் அதிகரித்து வருகின்றது. இது கண்டிக்கத்தக்க விடயமாகும்.  மாற்றம் என்பது புரட்சிகர மாற்றமாக இருக்க வேண்டும். கல்வி, வீட்டு வசதிகள், ஆரோக்கியமான சுகாதாரம் என்பவற்றில் நேர்நிலையான மாற்றங்கள் இடம்பெற வேண்டும். இதுவே சிறந்த மாற்றமாகும். புரட்சிகர சிவில் சமூக அமைப்புக்கள் மலையக மாற்றத்திற்கு வித்திட வழிசமைக்கும். எனவே கோவில் கமிடிகள், இளைஞர் அமைப்புக்கள் என்பதிற்கும் மேலாக கல்வி, சமூக துறைகளில் மாற்றம் கொண்டு வரும் சிவில் சமூக அமைப்புக்கள் உருவாக வேண்டியது மிக அவசியமாகும்.





16. உங்கள் வயதையொத்த மாற்றங்களை ஏற்படுத்த நினைக்கும் இளையவர்களோடு எந்தெந்த விடயங்களில் கைகோர்க்க வேண்டும் என நினைக்கின்றீர்கள்? 


என்னை பொறுத்தவரையில் எழுத்துக்களே சிறந்த ஆயுதம். இலக்கிய படைப்புக்களை அதிகளவு உருவாக்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் இலக்கியத்தில் ஆர்வம் காட்ட வேண்டும். 
சமூக பற்றுணர்வு ஏற்பட வேண்டும். தான் உண்டு. தன் வேலையுண்டு என்று வாழ்ந்தால் மாற்றம் கொண்ட மலையகம் என்பதை ஏடுகளில் மாத்திரமே காணமுடியும். குறிப்பாக கல்வி கற்ற சமூகம் எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். சிறந்த சமூக சேவைகளை புரிய வேண்டும். நான் என்னால் முடிந்தவரையான சமூக சேவைகளை ஆற்றிக்கொண்டு வருவதோடு சமூக சிந்தனை கொண்டவர்களை ஊக்குவித்து கொண்டும் இருக்கின்றேன்.


17. நீங்கள் முன்னெடுக்கும் இலக்கியம் தவிர்ந்த ஏனைய செயற்பாடுகனை நாம் தெரிந்துக்கொள்ளலாமா?


கல்வி சார்ந்த சேவைகளை அதிகம் மேற்கொள்கின்றேன். சமூக முன்னேற்றம் சார் செயற்பாடுகளை அதிகம் மேற்கொள்கின்றேன். பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டங்களை நடாத்தி வருகின்றேன். வட்டார செய்திகளை ஊடகங்களுக்கு அவ்வப்போது வழங்கி வருகின்றேன்.


18. மலையக கல்விச்சமூகத்தை உருவாக்க ஆசிரியச்சமூகத்தின் சேவை எவ்வாறு காண‌ப்படுகின்றது?

மலையக கல்விச் சேவையின் மிக முக்கிய பங்குதாரர்களாக ஆசிரியர்கள் காணப்படுகின்றனர். இவ்வாறான ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். ஆசிரியர்கள் கற்பித்தலோடு சேர்த்து தனது சுயக்கல்வியை மேம்படுத்திக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும். அப்போதே அவர்களால் மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்க முடியும். அத்துடன் மலையகத்தில் பட்டதாரி ஆசிரியர்களை விட உயர்தரம் கற்ற பின் ஆசிரியர் சேவையில் நுழைந்தவர்கள் அதிகம். இவர்கள் தன்னை வளர்த்துக்கொள்ள அதிகம் முயற்சி எடுக்க வேண்டும். கல்வி என்பது எதிர்கால மலையத்தின் சொத்து. அதனை முழுமையாக வழங்க ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதே.


19.மலையகத்தை பொறுத்தவரையில் அரசியல் உரிமை முழுமையாக பயன்படுத்தப்படுகின்றதா?


அரசியல் உரிமை என்பதை இரண்டாக நோக்க முடியும். மக்களுக்கான அரசியல் உரிமை, ஆட்சியாளர்களுக்கான அரசியல் உரிமை. 
இதில் ஆட்சியாளர்களுக்கான அரசியல் உரிமை தான் சிறப்பாக இருக்கின்றது என நான் கருதுகின்றேன். சுயலாப அரசியல் தலைவர்களே மலையத்தில் அதிகமாக உள்ளனர். அத்தடன் கட்சி தாவல், அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்றல் என்பவற்றில் அதிக அக்கறை கொண்டுள்ள தலைவர்கள் மக்களின் வாழ்வியலில் எவ்வகையில் அபிவிருத்தி ஏற்படுத்த வேண்டும் என்பதில் மிகக்குறைவான பங்களிப்பினை மேற்கொள்வது வருத்தத்திற்குரியது. மக்களின் அரசியல் உரிமைகள் தேர்தல் காலங்களோடு முடங்கி விடுகின்றது. அத்துடன் சமூக சேவை கொண்ட கல்வி கற்ற தலைவர்கள் அரசியலுக்கு வரமுற்பட்டாலும் தொழிற்சங்க வாதத்திற்கு பழக்கப்பட்ட மக்கள் அவர்களின் வரவேற்பை விரும்பாதளவு செயற்படுகின்றனர். இன்று வடக்கு, கிழக்கு பகுதிகளை எடுத்தக்கொண்டால் கல்விகற்றவர்களே அதிகளவு அரசியலில் ஈடுபடுகின்றனர். அவ்வாறான நிலையினை மலையகத்தில் ஏற்படுத்த தொழிற்சங்கம் தடையாக காணப்படுவதுடன் மக்களுக்கும் போதிய விழிப்புணர்வு இல்லாதிருப்பதாகவே நான் உணர்கின்றேன்




20. எமது வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புவது?


வாசிப்பு பழக்கத்தை அதிகமாக்கி கொள்ள வேண்டும். வாசிப்பு மனிதனை பூரணமாக்கும். தமிழ் மொழி மாத்திரமின்றி பல்வேறு வகையான மொழிகளில் வெளியான படைப்புக்களை வாசிக்க வேண்டும். இதிலும் ஈழத்து இலக்கியங்கள், இந்திய இலக்கியங்கள், புலம் பெயர் படைப்புக்கள், ஆங்கில, கிரேக்க இலக்கியங்கள் என பல்வேறு பட்ட இலக்கியங்களை தேடி வாசிக்க வேண்டும். அவ்வாறான வாசிப்பே புதிய படைப்புக்களை படைக்க வழிசமைத்து தருகின்றது......

Thursday, April 28, 2016

உனக்குத்தெரியாது

உனக்குத்தெரியாது -என்
வானத்தின் ஓட்டைகளை...

மழைக்காலங்களில்
பட்டினியை மறைக்கவும்
ஓட்டையை மறைக்கவும் -நான்
திராணியற்று விழுகையில்
உதவிக்கு ஓடிவருவது
நித்திரையொன்றுதான்....

வந்தாலும்
ஈரமான பாயினைகண்டு அதுவும்
ஒதுங்கிக்கொள்ள‌

கருமையான இரவு
பகல்களாகி விடுகின்றன‌
விடியல் மட்டும் தென்படுவதேயில்லை....!!



சேவல்கள்

சேவல்கள் நினைத்துக்கொள்கின்றன தாம் கூவித்தான் பொழுது விடிகின்றதென்று

கல்குடா நேசன் 34வது படைப்பாளியாக கவிஞர் MU.அப்துல் பாஸித் அல் அர்ஷத் அவர்கள்

http://kalkudahnation.com/#!/tcmbck




கல்குடா நேசன் இணையத்தினூடாக வாராவாரம் கலைஞர்கள் படைப்பாளிகளைச் சந்தித்து, அவர்களுடனான கலந்துரையாடலை நேர்காணலாக தந்து கொண்டிருக்கின்றோம். பலரது ஆதரவையும் எதிர்பார்ப்பையும் சுமந்த இப்பகுதியானது வாசகர்கள் அனைவரினது ஆசியோடு வெற்றிநடை போடுகின்றது. இலைமறை காய்களாக இருக்கும் படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதிலும், வளர்ந்த கலைஞர்களின் கருத்துக்களை, திறமைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதினாலும் மகிழ்ச்சியடைகின்றோம். 

இதன் தொடரில் 22.04.2016ம் திகதி வெள்ளிக்கிழமை இன்று 34வது படைப்பாளியாக எம்மோடு இணைகின்றார் மருதமுனையைப் பிறப்பிடமாக கொண்ட இளைய, வளர்ந்து வரும் கவிஞர் MU.அப்துல் பாஸித் அல் அர்ஷத் அவர்கள். “சக கலைஞர்களின் படைப்புக்களை நோக்குவதன் மூலமும், போட்டிகளில் பங்கு கொள்வதனாலும் எமது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள முடியும்” என்று இன்றைய இளம் படைப்பாளிகளின் தேவைக்கேற்ப கருத்துரைக்கும் இவரின் விறுவிறுப்பான பதில்களுடன் இதோ முழுமையான நேர்காணல்








01. தங்களைப்பற்றிய அறிமுகத்தோடு இணையலாமா?

M.U.அப்துல் பாஸித் அல் அர்ஷத் ஆகிய நான் மருதமுனையை பிறப்பிடமாக கொண்டவன். உயர்தரம் வரை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் கற்று பின்னர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் BSc in Management and Information Technology என்ற பட்டப்படிப்பை 2012ல் பூர்த்தி செய்தேன். தற்போது கல்முனை பிரதேச செயலகத்தில் பணி புரிகின்றேன். கட்டாரிலும் சுமார் மூன்று வருடங்கள் பணியாற்றியிருக்கின்றேன். 'பாஸித் மருதான்' எனும் புனைப் பெயரில் கவிதைகள் புனைந்து வருகிறேன்.



02. கவிதை எழுதுவதில் எவ்வாறு நாட்டம் ஏற்பட்டது?


என்றன் அன்பு தந்தை M.M.M.உவைஸ் அவர்கள் அல்ஹஸனாத் போன்ற மாதந்த சஞ்சிகைளுக்கு கடந்த காலங்களில் கவிதைகள் எழுதி சிறு பரிசுகளும் பெற்றிருக்கின்றார். அப்போதிருந்தே என்றன் மனதிலும் கவியெழுத வேண்டும் என்ற அவா இருந்தது. அந்த வகையில் என் தந்தைதான் என்னுடைய இந்த கவிப்பயணத்திற்கு வித்திட்டவர்.
ஆயினும் நான் கட்டாரில் சுமார் மூன்று வருடங்கள் தொழில் நிமிர்த்தம் இருந்த காலகட்டங்களில் தனிமை என்னை அதிகம் கவியெழுதத் தூண்டியது....



03. எவ்வகையில் உங்களது படைப்புக்களை வெளியிடுகின்றீர்கள்?


என்னுடைய கவிதைகளை சோனகர், சிறீலங்கா முஸ்லிம்ஸ், மருதமுனை ஒன்லைன், மேகம் நியூஸ், கற்பிட்டியின் குரல், ஜப்னா முஸ்லிம்ஸ் என பல வலைத்தளங்களுக்கும் மற்றும் பத்திரிகைகள் சஞ்சிகைகளுக்கும் அனுப்பி வருகிறேன். முகநூலிலும் "கவித்தூறல்கள்" என்ற எனது பக்கத்தில் (Public Profile ல்) பதிவேற்றம் செய்து வருகிறேன்.




04. உங்களைத் தட்டிக்கொடுத்து வளர்த்துவிடுவதில் பங்களிப்பு செய்பவர்கள்?



என்னுடைய மனைவியும் கவியெழுதுவதில் ஆர்வமுள்ளவர், அதே போன்று சில சமயங்களில் குறிப்பிட்ட தலைப்புக்களில் கவியெழுதுமாறு என்னை ஊக்கப்படுத்துவார். அத்தோடு தடாகம் கலை இலக்கிய வட்டம் மாதா மாதம் நடாத்துகின்ற சர்வதேச ரீதியிலான கவிதைப் போட்டிகளும் கவிப பயணத்தை ஊக்குவித்து வளர்த்து விடுவதில் முக்கிய பங்களிப்புச் செய்கின்றது.



05. நீங்கள் விரும்பி வாசிக்கும் நூல்கள் பற்றியும் உங்களது வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள முடியுமா?


என்னைப் பொறுத்தவரை நூல்கள் எதனையும் முழுவதுமாக வாசித்தது கிடையாது. இப்போது அனைவரும் தங்களது முகநூல் பக்கங்களில் தமது ஆக்கங்களை பதிவிடுவதனால், முகநூலிலேயே அதிகமாக கவிதைகள் மற்றும் ஏனைய ஆக்கங்களை வாசிக்கக் கிடைக்கின்றது.



06.  நூல்களை வாசிக்காமையும் எமது பெருங்குறையே இதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா?


'வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணமாக்கும்' என்பதற்கமைய வாசிப்பு எமது திறமைகளை வளர்க்கப் பெரிதுமுதவும். நூல்களை வாசிக்காமை ஒரு குறையே. ஆயினும் அதனைப் பெரும் குறை என்று சொல்ல முடியாது. ஏனெனில் பத்திரிகை, சஞ்சிகைகள், இணையங்கள், சமூக வலைத்தளங்களென இன்றையவுலகில் வாசிப்பதற்கான தளங்கள் விரிந்து கொண்டு செல்வதைக் காணலாம்.
நூலொன்றை செல்லுமிடங்களுக்கெல்லாம் எடுத்துச் செல்வது என்பது சிரமமே. ஆனால் இன்றைய நவீன உலகில் அனைவருமே ஸ்மார்ட் மொபைல்களின் மூலம் செல்லுமிடமெல்லாம் கிடைக்கின்ற இடைவெளிகளில் இன்டநெட் வசதியினூடாக இணைய முகவரிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் வாசிப்பதனைக் காண முடியும்.




07. இன்றைய சமூக வலைத்தளங்களின் பயனால் சிரமமில்லாது படைப்பாளிகள் தங்களை வெளிப்படுத்திக்கொள்கின்றார்கள். இந்த வசதி பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

உண்மையிலேயே சமூக வலைத்தளங்கள் இன்றைய நவீன உலகில் ஏனைய ஊடகங்களிலும் பார்க்க விரைவாகவும் இலகுவாகவும் செய்திகளைக் கொண்டு செல்வதில் பாரிய பங்களிப்புச் செய்கின்றது. அதிலும் குறிப்பாக பேஸ்புக்கின் பங்களிப்பு இன்றியமையாதது.
இன்று ஒவ்வொருவரும் தங்கள் சொந்தப் படைப்புக்களை பத்திரிகை சஞ்சிகைகளில் வெளியிடுவதிலும் பார்க்க முகநூலில் பதிவிடுவதனையே அதிகம் விரும்புகின்றனர். அத்தோடு பத்திரிகையில் வந்த படைப்பையும் கூட முகநூலிலே பகிர்வதைக் காண முடிகின்றது. ஏனெனில் அதில் கிடைக்கப் பெறுகின்ற லைக்குகளும் பின்னூட்டங்களும் படைப்பாளிகளை ஊக்குவிப்பதோடு, படைப்பாளிகள் தாங்கள் விடும் தவறுகளை உடனுக்குடன் கழைந்து தங்களை வளர்த்துக் கொள்ளவும் ஏதுவாக அமைகின்றது.
நானும் கூட எனது கவிதைகளை முழுவதுமாக  முகநூலில் "கவித்தூறல்கள்" என்ற எனது பக்கத்தில் (Public Profile ல்) பதிவேற்றம் செய்து வருகிறேன்.

08.நீங்கள் கூறியதுபோல முகநூலில் உடனுக்குடன் கருத்துக்கள் பரிமாறப்படுவது உண்மைதான் ஆனால் அவை ஒரு படைப்பாளியை வளர்த்துவிடுகின்றதா அல்லது வெறுமனே போலியான பகட்டாக காணாப்படுகின்றதா?


ஆம். முகநூலைப் பொறுத்தவரை உதாரணமாக எடுத்துக் கொண்டால் சில பிரபல்யங்களுக்கும் பெண் அடையாளத்துடன் காணப்படுவர்களுக்கும் அதிகமான விருப்புக்குகளும் பின்னூட்டங்களும் இடப்படுவதைக் காணலாம். உண்மையிலே இவ்வாறு இடப்படும் கருத்துக்களில் பெரும்பாலானவை போலியாக இருக்கலாம். ஆயினும் ஒரு படைப்பாளியைப் பொறுத்தமட்டில் அவை போலிகளல்ல. அவரது படைப்புக்களை வளர்த்துவிடும் ஒன்றாகவே காணப்படுகிறது. 



09.சமூக வலைத்தளங்களில் பெண்களின் தலைகாட்டல் இன்றுகளில் அதிகமாகவே இருக்கின்றது இதனை சிலர் குறையாக பார்க்கின்றார்கள். இதில் உங்கள் கருத்து?

சமூக வலைத்தளங்களை சிறந்த (நன்மையான) விடயங்களுக்கும் அதே போன்று தீய விடயங்களுக்கும் பயன்படுத்த முடியும்.  அது பாவனையாளர்களின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது. 
என்னைப் பொறுத்தவரை அநேகமாக தற்போது பெண்களும் சமூக வலைத்தளங்களைப் பாவிப்பதென்பது அவர்களின் சமத்துவத் தன்மையையே எடுத்துக் காட்டுகின்றது. சமூக வலைத்தளங்களைப் பாவிக்கின்ற ஒரு சில பெண்கள் செய்கின்ற தவறுகளை வைத்து ஏனையவர்களையும் தப்பாக நாம் எடை போடுவது தவறு.
ஆயினும் பெண்கள் போலி ஐடிகளை நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்தல்,  தப்பான அல்லது குழப்பம் விளைவிக்கக் கூடிய பதிவுகளை தவிர்த்தல், தங்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதையும் தவிர்த்துக் கொள்ளல் சிறந்தது, ஏனெனில் அதனை தப்பான வழிமுறையில் அடுத்தவர்கள் பாவனைக்குட்படுத்த முடியும். எனவே பெண்கள் தத்தமது மத விழுமியங்களை மீறாதவாறும் தங்களுக்கென ஒரு கட்டுக் கோப்புடனும், ஒழுங்குமுறையில் தங்களது பாவனைகளை அமைத்துக் கொள்வதும் சாலச்சிறந்தது. 

10 .பெண்களின் சுதந்திரம் எதுவரை இருக்கவேண்டும், அவர்களின் திறமைகள் எவ்வாறு வெளிப்படுத்தப்பட வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

பெண்கள் சுதந்திரமென்பது அவர்களின் உரிமை. ஆகவேதான் ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் சம அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும். ஆயினும் ஒருவரது உரிமை அடுத்தவரின் உரிமைக்கு இடையூறு விளைவிப்பதாய் அமையக்கூடாது. 
எனவே பெண்கள்அவர்களது திறமைகளை உரிய முறையில் அடுத்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.


11. நீங்களும் வெளிநாட்டில் தொழில் புரிந்தவர் என்ற வகையில், தொழில் நிமித்தம் அங்குள்ள எம்மவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி?

குடும்ப உறவுகளைப் பிரிந்து, சுக துக்கங்களில் பங்கு பற்றவும் முடியாமல் தங்கள் மனக் கவலைகளை வெளிக்காட்டிக் கொள்ளவும் முடியாமல் பணத்துக்காய் பாசாங்கு செய்கின்ற (மாரடிக்கின்ற) ஒரு வாழ்க்கையே வெளிநாட்டு வாழ்க்கை.
உண்மையில் வெளிநாட்டில் தொழில் புரிகின்ற அனைவருக்குமே சந்தோசங்களைவிடக் கவலைகள்தான் அதிகமென்றே கூற வேண்டும். நான் கட்டாரில் பணி புரிந்த காலகட்டங்களில் கல்பு லைபு (Gulf Life) எனும் கவித் தொடரில் எம்மவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி அதிகம் எழுதியிருக்கின்றேன்.


12. தொழில் கிடைக்காத இளைஞர்களுக்கு நீங்கள் தரும் நம்பிக்கை அல்லது ஆலோசனைகளை கூற முடியுமா?

ஒவ்வொருவரும் தாம் விரும்பும் (தனது திறமைக்கும் தகமைக்கும் ஏற்ற) தொழிலைச் செய்வதற்கு எதிர்பார்த்து காத்திருக்கின்ற தருணமே 'தொழிலின்மை' ஆகும். தனது திறமைக்கேற்ற அல்லது தனக்குப் பிடித்த தொழில் கிடைக்கும் வரை தன்னால் முடியுமான வேறு ஏதேனுமொரு தொழிலினை செய்து சிறு வருமானத்தையேனும் ஈட்டுவாராயின் தொழிலின்மை என்ற பிரம்மையினை ஒழிக்க முடியும். அத்தோடு கையேந்துதல்களின்றி தனது சிறு தேவைகளையேனும் தானே பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய நிலையும் ஏற்படும்.
தண்டச்சோறாய் இருந்துகொண்டு தனது திறமைக்கேற்ற தொழிலை தேடுவதிலும் பார்க்க சுயதேவைப் பூர்த்திக்காவேனும் சிறு தொழிலைச் செய்து கொண்டு, முன்னேற்றத்துக்கான அடுத்த இலக்கை தேடுவதே சிறந்தது. ஆகவே என்னைப் பொறுத்தமட்டில் தான் செய்வதற்கு எந்த தொழிலும் இல்லையென யாரும் கூற முடியாது.


13. எவ்வகையான கவிதைகளை படைக்க விரும்புகின்றீர்கள்?

சமூகக் கவிதைகளை எழுதுவதிலேயே எனக்கு அதீத ஈடுபாடு இருக்கின்றது. ஏனெனில் அவை சமூகத்திற்கு ஒரு செய்தியை எடுத்துச் சொல்வதாகவும் கருத்தாழமிக்கதாகவும் அமைந்துவிடுகின்றது.



14. உங்கள் கவிதைகள் பாராட்டுப்பெற்ற சந்தர்ப்பம்? அப்போது உங்களுடைய மனநிலை?


என்னுடைய கவிதைகளில் ஆழமான கருத்தும் படிப்பினையும் இருப்பதாக என்னுடைய கவிதைகளை படித்தவர்களில் பெரும்பாலானோர் என்னிடம் நேரடியாகவும் முகநூலிலும் கூறியிருக்கின்றார்கள். அந்த வகையில் நான் இறைவனுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன். அடுத்தவர்களின் வாழ்த்துக்களும் பின்னூட்டங்களும் எப்போதுமே மனதை மகிழ்வித்து ஊக்கப்படுத்தும் தருணங்கள்தான்.


15. நீங்கள் ஆத்திரப்பட்ட, வேதனைப்பட்ட ஏதேனும் ஓர் சமூக அவலம் உள்ளதா? அதைப்பற்றிய எழுதிய அநுபவம்?


இன வெறியர்களால் பர்மாவிலும் அதே போன்று நம் நாட்டிலும் அநியாயமாக அப்பாவிகள் கொல்லப்பட்ட, சித்திரவதைப்படுத்தப்பட்ட தருணங்களில் நான் எழுதிய கவிதைகளின் இணையத்தள முகவரிகளிவை...
http://www.sonakar.com/?p=54054
http://srilankamuslims.lk/இலங்கையர்-என்ற-நாமம்-கொள-2/



16. கவிதை நூலினை வெளியிடும் உத்தேசம் உள்ளதா?

இன்ஷா அல்லாஹ் விரைவில் நூல் ஒன்றை வெளியிடுவதற்காக என்னுடைய கவிதைகளை தொகுத்துக் கொண்டிருக்கின்றேன். தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அனுசரணையில் 'சிந்தையில் சிக்கிய சுவடுகள்' எனும் கவித் தொகுப்பை வெளியிடலாமென உத்தேசித்திருக்கிறேன்.

17. நீங்கள் பங்கெடுத்துள்ள இலக்கிய நிகழ்வுகள் பற்றி?


இலக்கிய நிகழ்வுகளில் பங்கு கொள்வதற்கான விருப்பமும் சந்தர்ப்பங்களும் இருந்த போதும், என்னுடைய தனிப்பட்ட வேலைகள் காரணமாக பங்குபற்ற முடியாமல் போனது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் கலை இலக்கிய நிகழ்வுகளில் தவறாமல் பங்கு கொள்ள எண்ணியிருக்கின்றேன்.
18. வலைத்தளங்களில் உலவும் கவிதைகள், அத்தளங்களின் போட்டிகளில் வெற்றிபெறும் கவிதைகளின் தரம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?


என்னைப் பொறுத்த வரையில் வலைத்தளங்களில் சில பிரபல்யமான அமைப்புக்கள் போட்டிகளை நடத்தி முறையான தெரிவுகளை மேற்கொண்டு பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்குவது வரவேற்கத்தக்கது.  
ஆயினும் அதே போன்று தனிப்பட்டவர்கள் பலர் தானும் போட்டி நடத்த வேண்டுமென எண்ணி போட்டிகளை நடத்துவது, கவிதைப் போட்டியின் மகத்துவத்தை குறைப்பதொன்றாகவே அமைகின்றது.

19. இலங்கை படைப்பாளிகள், இந்திய படைப்பாளிகள் உங்களின் பார்வையில்?

இந்தியப் படைப்பாளிகளுக்கு சமமான, அவர்களுக்கு எந்த வகையிலும் குறையாத படைப்பாளிகள் இலங்கையிலும் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கான தளங்கள் கிடைக்கப் பெறாமையினால் அவர்களது திறமைகளும் படைப்புக்களும் மேடையேறாத இலைமறை காய்களாகவே இன்னும் பலர் இருக்கின்றனர்.
இந்தியப் படைப்பாளிகளுக்கான தளங்கள் தாராளமென்பதால் அவர்களின் திறமைகளும் படைப்புக்களும் வெகு சீக்கிரமாக வெளிக்கொணரப் படுகின்றது.
எனவே இலங்கை இந்தியப் படைப்பாளிகள் இரண்டறக் கலக்கும் இலக்கிய விழாக்களை நடத்தும் சர்வதேச அமைப்புக்கள் இது குறித்து  அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் படைப்பாளிகள் தங்களது படைப்புக்களை பகிர்ந்து கொள்ளவும் ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளவும் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
20. இலக்கியம் தவிர்ந்த உங்களது ஏனைய திறமைகள்?

சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை எழுதிவிட்டு விடுமுறையில் இருந்த காலகட்டங்களில் அதிகமாக ஓவியம் வரைவதை பொழுது போக்காக கொண்டிருந்தேன். அத்தோடு சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் கவிதையினால் எடுத்துச் சொல்ல முடியாத செய்திகளை கட்டுரை செய்தியாகவும் இணையத்தளங்களுக்கு அனுப்புகிறேன்.


21. வளரும் கலைஞர்களோடு பகிர்ந்துகொள்ள நினைப்பதும், இணைய வாசகர்களோடு மனம் திறக்க நினைப்பது?

உலகில் பிறந்த யாவருமே அறிந்தும் அறியாமலும் ஒவ்வொரு துறையிலும் திறமைசாலிகளே. திறமைகள் இறைவனின் அருட்கொடைகளென்றே சொல்ல வேண்டும். சக கலைஞர்களோடு எமது படைப்புக்களை பகிர்ந்து கொள்வதன் மூலமும் சக கலைஞர்களின் படைப்புக்களையும் நாம் நோக்குவதன் மூலமும் மற்றும் போட்டிகளில் பங்குகொள்வதனாலும் எமது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள முடியுமென்பதில் ஐயமில்லை.