Sunday, October 28, 2012


"தாக்கத்தி" கவிதை நூலின் மீதான ரசனைவெளிப்பாடு!!


அலையோசை அலவலாவும் அம்பாறை மாவட்டத்து சாய்ந்தமருதின் மைந்தன் கவிஞர் சம்சுதீன் ஜனூஸ் அவர்களின் கன்னிப்படைபாக கைகளில் தவழ்ந்துகொண்டிருக்கின்றது "தாக்கத்தி" எனும் நாமம் சூட்டப்பட்ட கவிதைத்தொகுப்பு.தலைப்பிலேயே தன் உண்ர்வுகளுக்கு உயிரூட்டி சாதாரண மக்களின் வாழ்வியலோடும் இயல்பான இயற்கையான மனவுணர்வுகளோடும் கோர்க்கப்பட்ட இத்தொகுப்பை கல்முனை தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் முதல் வெளியீடாக பிரசவமாக்கி பெருமைகொள்கின்றது.

  ஆரம்பத்திலேயே ஆசிரியர் ஜனூஸ் அவர்கள் தனது கவிதையின் மீதும் அது உருவாக்கப்பட்ட விதம் குறித்தும் மிக அழகாக ஆணித்தரமாக ஒருவிடயத்தை குறிப்பிடுகின்றார். "உண்மைக்கு விலங்கிட்டும் பொய்மையை பூசி மினுக்கியும் யதார்த்தத்தை விழுங்கிவிட்டும் பொய்மைக்கால் குதிரையோடும் ஒடு 'எளவும்' விளங்காத ஒப்பனைகளோடும் பொம்மலாட்டமாட விருப்பமில்லை . எனது துயரங்களுக்கு துணைந்ன்ற நிதர்சனமான மொழியையே எனதான கவிதைகளுக்கு வரிகளாக்கியுள்ளேன். மேல்மிச்சமாய் கூட்டவும் இல்லை குறைக்கவும் இல்லை" என்ற அவரது மனவுணர்வை தொகுப்பின் எல்லா பக்கங்களிலும் உணரமுடிகின்றது. புதுக்கவிதையாக பூத்துநிற்கும் அத்தனை கவிதைகளும் வாசிப்பிற்கும் கவிதை நேசிப்பிற்கும் ஏற்றதாக யாத்திருப்பதை வாசித்தபின் நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள்.

 ஒரு தந்தையின் எண்ணவோட்டத்தை தன் பிள்ளையின் மீதுள்ள ஆச்சரியங்களையும் எதிர்பார்ப்புக்களையும் "முத்தல்" என்ற தனது முதல் கவிதையிலேயே மொட்டவிழ்த்திருக்கின்றார்.
    'எனதான பச்சிளம் பருவத்திற்கு
   எதிமறையாக இருக்கின்றான் மகன்
   யாம் சொல்வதை பார்க்கிலும்
   அவனிடமிருந்து
   உதிர்க்கின்ற ஒவ்வொரு வார்த்தையிலும்
   உயிர் தெரிக்கின்றது'

      'முத்தியது என்னால்
    எனைவிடவும் முத்தலாய் இருக்கின்றான்
    எனதான மகன்'

      என்ற வரிகளில் இக்காலத்து பிள்ளைகளின் வயதுக்கு மீறிய சிந்தனை வளர்ச்சியையும் தேடலின் விளைவுகளையும் ஒரு தந்தையாக இருந்து விளக்கியிருக்கும் கவிஞரின் நிதர்சனமான பார்வையினை  பாராட்டச்செய்கின்றது.  
"அழகான பிச்சைக்காரி" என்ற தலைப்பில் நம் சமூகத்தில் காணப்படும் மிகக் கேவலமான மனித(மிருக) வக்கிரங்களை படம்பிடித்து காட்டியுள்ளார் கவிஞர். சவுக்கடியாய் வீசப்பட்டுள்ள வரிகள் உணர்வுள்ள மனங்களை தொட்டு அவர்கள் வெட்கப்படுவார்கள் என்றால் அது இக்கவிதையின் வெற்றியென்றே வாகை சூடலாம்.
    "விரல் உரசி
    ஒன்றுக்கு பத்து ரூபாய்
    கொடுக்கும் சில விழிகளின்
   விரசமான மோகவிண்ணப்பங்களில்
   அந்த அழகான பிச்சைக்காரி
  கூனிக்குறுகிப் போகின்றாள்"
என்ற வரிகளில் அடிமட்ட எண்ணங்கொண்ட காமப்பிசாசுகளை சுட்டிக்காட்டியுள்ளார் உணரப்படவேண்டிய வரிகள்.

    இத்தொகுப்பின் பெயரிலே அதாவது "தாக்கத்தி" எனும் தலைப்பில் ஏழை விவசாயிகளின் தாக்கத்தி பற்றி கூறும் வரிகளில் நவீனத்தின் பாதிப்பையும் பழமையின் முறிவையும் அதனாலுண்டாகும் மனச்சோர்வுகளையும் வெளிப்படுத்தி வாசகனையும் வருந்தச்செய்திருக்கின்றார் கவிஞர்.இவ்வாறு ஒவ்வொரு தலைப்பின் கீழும் வாழ்வியல் யதார்த்தங்களை வரிகளாக்கி வாசகனை கவிதையின்பால் யாசகனாக்கிவிட்டிருப்பது தொகுப்பின் பெருமையே.

  காதலை தொடாத கவிஞர்களில்லை எனும்போது கவிஞர் ஜனூஸ் அவர்கள் மட்டுமென்ன விதிவிலக்கா? "எனக்குள் பேசப்படுகின்ற தேவதை" "காதல் சருகுகள்" "மரணம்+அவள்" "காதல் சுனாமி" "ஈர்ப்புவிதி" போன்ற தலைப்புக்களில் காதல் பற்றிய அலசல்களையும் காதல் வலிகளையும் வரிகளாக்கி கவிதையின்பால் ஈர்ப்பை இழையோடவிட்டிருப்பது சிறப்பு. அதேவேளை 'பெண்களை புரியவில்லை'என்ற கவிதையில் கவிஞரின் வித்தியாசமான பார்வை வியக்கவைக்கின்றது
     "எனக்கு ஏதுமென்றால் ஏங்கித்தவிக்கும்
     என் அமாவின் அன்புக்கு அர்த்தம்
     என்னவென்று புரியவில்லை" என்றும்,

     "இறுதியில்
     நான் நேசித்த காதலிக்கு
    நேற்று திருமணமாம் என்று
    யாரோ சொல்லிச் சென்றபோது
    எனக்கு என்ன செய்வதென்றே
    புரியவில்லை"
          என்றும் பெண்களை பற்றியதான சந்தேகங்களை சீராய் கோர்த்துவிட்டிருப்பது பெண்கள் பற்றியதான புரிதலில் கவிஞர் இன்னும் சந்தேக உணர்வில் இருப்பது புரிகின்றது.

  எந்தக்கவிதையை மேற்கோள்காட்டி விளக்கம் கொடுப்பதென்றே புரியவில்லை அத்தனை கவிதைகளிலும் நிதர்சனங்களை திரைவிலக்கி காட்டியிருப்பது வாசிப்பிற்கும் வாசகப்பார்வைக்கும் இதமாக இருக்கின்றது. இவ்வாறு புரட்டிய பக்கங்களில் புண்பட்ட நெஞ்சமாய் "அறிவிப்பாளனுக்கொரு அஞ்சலி" என்ற த‌லைப்பில் மனம் கலங்கியே நின்றதை மறுப்பதற்கில்லை. பலவருட நினைவுகளை முன்னிழுத்துச்சென்று வானொலி நிகழ்ச்சிகளுக்குள் ஊறிப்போன அந்த நாட்களையும் அறிப்பாளர் கனேஷ்வரன் ஐயா அவர்களின் நிகழ்ச்சியின் நினைவுகளையும் மீட்டுப்பார்த்ததில் மகிழ்ச்சியென்றாலும் அவரின் மரணசெய்தி ஏனோ மனதை நிதானமிழ‌க்கச் செய்தது.

"இறந்தும் இறவாத
உனது நினைவலைகள்
தமிழ்கூறும் இதயமெங்கும்
இரு வரிக்கவிதைகளாய்
இனியெல்லாம் நிலைத்திருக்கும்" என்ற கவிஞரின் வரிகளோடு எனது அஞ்சலியையும் ஆத்மார்த்தமாய் தெரிவித்துக்கொள்கின்றேன் மெளனமாக.

 சமூக அவலங்களில் ஒன்றான "கடன்" என்ற பிரச்சனை 'வட்டிக்காரி' என்ற கவிதையில் தலைநீட்டியுள்ளது. வெளிநாட்டு பயணத்தின் மோகம் வயதுபேதமின்றி ஆட்கொள்ளப்படுதலையும் அதனாலுண்டாகும் விளைவுகளையும் அநுபவித்தவர்களிடம் கேட்டால் புரியும். அதனை
 'பாழாய்ப்போன
வெளிநாட்டாசை படுத்தியபாடு
வட்டியினால் வந்தது
என் வாழ்க்கைக்கு
நல்ல கேடு' என்று விளக்கியுள்ளார் கவிஞர்.

  பொதுவாக சாதாரண ஒருவரின் கற்பனைக்கும் ஒரு கவிஞனின் கற்பனைக்கும் நிறைய வேறுபாடு காணப்படுகின்றது. கல்லையும் கலையாகக்காட்டும் வித்தை, கண்ணுக்கு தெரியாத விடயத்தையும் காட்சிப்படுத்தக்கூடிய வல்லமை ஒரு கலைஞனில் ஆயுதத்திற்கு உண்டு. அதனை கவிஞரின் பல கவிதைகளில் ரசிக்கமுடிந்தது. "இயற்கையின் பிரகடனம்" ஷாத்தான் குடிகொள்ளும் கன்னக்குழிகள்" போன்ற தலைப்புக்களில் கவிஞரின் கற்பனை அநுபவம் கவிதையை மெறுகேற்றியுள்ளது.

 அதிகமாக ஊர்வழக்கில் கிராமத்து சாயலில் பல கவிதைகள் படைக்கப்பட்டிருப்பது நூலின் கனதியை அதிகப்படுத்தியிருக்கின்றது. அன்னையின் அன்பு, தந்தையின் அரவணைப்பு,கல்லூரி நினைவுகள், காதலின் ஸ்பரிசங்கள், வாலிபவிளையாட்டுக்கள்,கிராமத்தின் பசுமையான‌ நினைவுகள் நிகழ்வுகள்,சமூகத்தின் மீதான கரிசனைகள், யுத்தத்தின் வடுக்கள் என்று ஏராளமான மனவுணர்வுகளில் படைத்திருக்கும் கவிஞர், கவிதைகளில் ஆங்காங்கே ஆங்கில சொற்பிரயோகத்தை பயன்படுத்தியிருப்பது வாசிப்பின்போது சிறிய இடறலை உணர்ந்தேன். பல இடங்களில் நகைச்சுவை உணர்வுகளை இழையோடவிட்டிருப்பது சிறப்பாக அமைந்திருக்கின்றது.

  நான்கூறிய ஆங்கில சொற்பிரயோகமும் நகைச்சுவை உணர்வுகளுடன் சேர்ந்து இன்றைய விடலைப்பருவத்தின் 'காதல்' தரும் விளைவுகளையும்
    "சாரதா இன்டைக்கு
   'சைன்ஸ் படிக்குது
   என்ட நண்பன் நல்லதம்பியோ
  'சைக்கோ எபெக்டாகி'
 அங்கொடைக்கு நன்கொடையாய் போயிட்டான்'
                     என்ற கவிதையில் மேற்கோள்காட்டலாம். ஆனாலும் இதற்கு பதில் தருவதைப்போல  "வை திஸ் கொல வெறி" என்ற கவிதையில் ஒரு நிதர்சனமான உண்மையினை கண்டபோது வாயடைத்துப்போனேன். இங்கேதான் கவிஞர் வெற்றிபெற்று நிற்கின்றார். என்னதான் பேச்சுக்களிலும் எழுத்துக்களிலும் கொள்கைகள் கோட்பாடுகள் என கடைபிடித்தாலும் நிஜ வாழ்க்கையில் சில நெகிழ்வுகளையும் தளர்வுகளையும் சந்திக்கவேண்டியவர்களாகவே எமது சூழ்நிலைகள் பின்னப்பட்டுள்ளது.

   இவ்வாறு சிறந்த அநுபவ நூலாக காணப்படும் கவிஞர் ஜனூஸ் அவர்களின் தாக்கத்தி கவிதையை நேசிக்கும் வாசிக்கும் யாசிக்கும் ஒவ்வொருவருக்கும் சிறந்த அநுபவத்தையும் திருப்தியையும் வழங்கும் என்பதில் சந்தேகமேயில்லை. வாழ்வியலையும் கலையையும் போலிகள் அகற்றப்பட்ட நிஜங்களையும் கவிதையாக்கி தந்த கவிஞரை மனப்பூர்வமாக வாழ்த்துவதோடு இன்னும் பல படைப்புக்களை அவரிடமிருந்து எதிர்பார்த்து விடைபெறுகின்றேன்

  ந‌ன்றி
 த.எலிசபெத் (ராஜ்சுகா)

Saturday, October 6, 2012


கன்னித்தமிழாகவே...


என்னைத்தோற்றுத்தான்
உன்னை வெல்லமுடிந்தது
நான் நானாக இருப்பதை விட‌
நான் நீயாக இருப்பதை விரும்பும்
நியாயவாதி நீ...

எழுத்துக்கள் எப்படியோ-உன்
எண்ணங்கள் மட்டும்
எனக்கு முரணானவை
இதயத்துக்கு வலிக்கும்-ஆனாலுன்
இதழ்கள் அப்பாவியாயிருக்கும்
மனம் புண்படும்-ஆனாலுன்
முகம் பால் வடிக்கும்...

பெண் விடுத‌லை சுத‌ந்திர‌ம் ப‌ற்றி
உன் எழுத்துக்க‌ள் உக்கிர‌மாய்
குர‌ல் கொடுத்திருந்த‌து -உன்னுட‌ன்
சேர்ந்து உண்ணாத‌
ப‌ல‌ நேர‌ங்க‌ள் என‌க்கு
ப‌ட்டினியாய் க‌ழிந்திருந்த‌து...

ம‌ன‌ம் விட்டு பேசிய‌து ந‌ம்
ம‌ண‌நாளில் ம‌ட்டுமாக‌க்கூட‌
இருந்திருக்க‌லாம்
ம‌ன‌ம் திற‌க்கும் போதெலாம்-நீ
புத்த‌க‌ம் திற‌ந்துவைத்திருப்பாய்
இர‌வுக‌ள் ப‌க‌லாக‌வும்
ப‌க‌ல்க‌ள் இர‌வாக‌வும்
வேற்றுக் கிர‌க‌வாசிபோல‌
வீட்டுக்குள் நீ...

நான் உன் அடிமையென்ப‌தை
தெளித‌மிழில் "இவ‌ள் மெள‌னி"யென்று
ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்காய் ப‌ட்ட‌ம் கொடுத்திருக்கிறாய்...

கடைத்தெரு முத‌ல்
க‌ல்யாண‌ வீடுவ‌ரை என் ப‌ய‌ண‌ங்க‌ள்
பாதை வெறுக்கும்
பாத‌ங்க‌ளாக‌த்தானிருந்தது-என்
புடவை விண்ணப்பங்கள் கூட சில நேரங்களில்
புத்தகமாகத்தான் வீட்டுக்கு வந்திருக்கின்றன...

உன்னையே சுற்றும்
உள்ள‌ம‌றியாது -நீ
உல‌கையே சுற்றிவ‌ந்தாய்
அர‌ங்க‌ம் காணா ஊமைக‌விக‌ளாய்
அந்த‌ர‌ங்க‌மாயெனை புதைத்துக்கொண்டிருக்கிறேன்...

த‌னிமை சாம்ராஜ்ய‌த்தில் நான்
தலை‌மை ‌வ‌கித்தாலும்-நீ
மேற்பார்வைக்கேனும் வ‌ருவ‌தில்லை
நான் உண்ப‌தில் உற‌ங்குவ‌தில் உடுத்துவ‌தில்
உன் விம‌ர்ச‌ன‌ம் ஆம் இல்லை ம‌ட்டுமே...

த‌மிழை சுவாசிக்கிறாய்
த‌லைவ‌ண‌ங்குகிறேன்
தார‌த்தின் சுவாச‌த்தையேன்
த‌ண்டிக்கிறாய்
ப‌ரிசுக‌ளும் ப‌த‌க்க‌ங்க‌ளும் நீ வென்ற‌தாய்
ப‌டுக்கைய‌றை முத‌ல் ப‌ளிச்சிடுகிற‌து
ப‌ட்ட‌ம் கொடுத்த‌வ‌ர் எவ‌ரோ...

என‌க்கான‌ உன் விட்டுக்கொடுப்புக‌ள் இல்லை
நான் பெற்றுக்கொண்ட‌ உரிமை நீ
மீத‌ம் வைக்கும் தேநீரொன்றுதான்...

உல‌குக்கெலாம் த‌மிழூற்றிக்கொடுத்தாய்
நானின்றும் க‌ன்னித்த‌மிழாக‌வே...