Saturday, December 28, 2013

உனது வானம்

ஆகா தென்றுதானே
அவசரமா யொதுங்கினாய்
போகா தென்றுநான்
போர்க்கொடிதுக்கவில்லையே
உனது வானம்
உனது எல்லைகள்
உனது சிறகுகள்
தடுக்கும் கரங்கள் எனதில்லை
கெடுக்கும் மனதென தில்லை

வேர்கள் பூப்பதில்லையென்பது
ஊரறிந்த கதையாயிற்றே!!









Friday, December 27, 2013

கலையாமலென் காதல்

தொலைதூரம் நீ
கலையாமலென் காதல்
அலைமோதும் நினைவிலே
அசையாமலுன் கனவு!!



இயற்கையின்க (ன)தி

செயற்கையி னதி
மெத்தச் செருக் கால்
இயற்கையின்க னதி
இளகியோடுமோ??

Thursday, December 26, 2013

இதயமானவன் நீ

முதலும்
முடிவானவனும் நீ
இதழும்
இதயமானவன் நீ
இன்றேன்
கண்ணீர் தேசத்திற்கு
காதலியாக்கிப்போனாய்??



கலைந்துபோனேன்

தொலைந்துபோனாய் -என்னை
தொலைத்துவிட்டு
கலைந்துபோனேன் -வாழ்வின்
கலைகளைவிட்டு!!



சந்தர்ப்பங்கள்

சந்தர்ப்பங்கள்
சந்தோஷங்களை தரும்
சாதகமாக்கிக்கொள்வதும்
சாதித்துக்கொள்வது நம்
சாமர்த்தியமே!!

கா(த)லனா??

நினைத்துப்பார்த்திடா நம்
நினைவுகளை என்
கல்லறை வாசலில்தான்
காண்பாயென்றால் 
காதலென்ன உயிர்வாங்கும் 
கா(த)லனா??


Friday, December 20, 2013

அழகோ!!

வலிகள் நிறைந்தாலும்
வசந்தம் குறையாததுதான்
மொழியில்லா -இக்
காதலுக்கு அழகோ!!

விலகிநடக்க ஆரம்பிக்கின்றேன்

நெடிய முள்ளொன்று வழி
நெடுகிலும் வந்தது
கொடிய வலிதந்த போதும்
தொலைத்தொதுக்கவில்லை

விலகிநடக்க ஆரம்பிக்கின்றேன்
விடுதலையில்லாவிட்டாலும்
அழவைத்த முள்ளினால் -மீண்டும்
அழுத்தங்கள்தர முடியவில்லை!!



இயல்பாயல்ல‌

கிழித்துப்போட்டாய்
காகிதத்தையல்ல -என்
காதலை
வலித்தது
இயல்பாயல்ல‌
இதயமியங் காவண்ணம்!!


Tuesday, December 17, 2013

எனது கவிதை அறிவிப்பாளர் சிறோவின் குரலில்

http://www.youtube.com/watch?v=B3C5i8pPnMA&feature=youtu.be


தோற்றுப்போனது
வாழ்க்கையில்தான்
துவண்டுபோனது
துடிப்புள்ள இதயமல்ல!

அடிவீழ்ந்தது
உயிரில்தான்
அணைந்து போனது
ஆழ்மனதல்ல!

காயம் கண்டது
கனிவான காதல்தான்
நோயாகிப்போனது
கண்ணியங்கொண்ட கடமைகளல்ல!

இன்னும் ஆணிகளும்
இரக்கமில்லா வஞ்சனைகளும்
என்னைச்சுற்றி சூழட்டும்

எரிந்துகொண்டிருப்பது மனமாயிருந்தாலும்
எழுந்து புன்னகைப்பேன் மலராகவே!!!

தளிரோ நான்?

வெறும் கானலில்
விதி செய்து
வருகின்ற‌ கண்ணீரை
வாழ்வில் குவித்து
தரணியில் வீசிவிட்ட‌
தளிரோ நான்???!!



Monday, December 16, 2013

இன்னு மினிக்கின்றது



இமைகள் நிறைத்த‌
இதழ் சேமித்த நினைவுகள்
இன்னு மினிக்கின்றது -நீ
இதயம் கொன்றுபோனபிறகும்!!



நிஜமா????

நிஜமா அவையெல்லாம்
நிஜமாகவே நிஜமா
நம்பவேமுடியவில்லை
நீயும் நானும் வேறுவேறென்று!!



Sunday, December 15, 2013

Friday, December 13, 2013

எழுந்து புன்னகைப்பேன்

தோற்றுப்போனது
வாழ்க்கையில்தான்
துவண்டுபோனது
துடிப்புள்ள இதயமல்ல!

அடிவீழ்ந்தது
உயிரில்தான்
அணைந்து போனது
ஆழ்மனதல்ல!

காயம் கண்டது
கனிவான காதல்தான்
நோயாகிப்போனது
கண்ணியங்கொண்ட கடமைகளல்ல!

இன்னும் ஆணிகளும்
இரக்கமில்லா வஞ்சனைகளும்
என்னைச்சுற்றி சூழட்டும்

எரிந்துகொண்டிருப்பது மனமாயிருந்தாலும்
எழுந்து புன்னகைப்பேன் மலராகவே!!!




ஊடறு இணைய இதழில் (Wednesday, December 11, 2013 @ 7:55 PM)

வாழபுறப்பட்டுவிட்டேன்…



http://www.oodaru.com/?p=6827

வாழபுறப்பட்டுவிட்டேன்…

   

த.எலிசபெத் (இலங்கை)
 
பெண்மையின் மேன்மையெல்லாம்
தென்றல் கலைத்த மேகம்போல‌
அநாயசமாய் அழிந்துபோகின்றது
 
தீக்கொண்டு சாம்பல்கண்டிடும்
தீவிரம் நெஞ்சுக்குள் பற்றியெறிகின்றது
எத்தனை காலத்துக்குத்தான்
புத்தகத்தில் மூடிய மயிலிறகாய்
பத்தினிக்கிரீடத்தை பாதுகாப்பது…
 
முப்பத்தைந்தை தாண்டிய -என்
முதிர்க்கன்னித்திரை கிழித்து
முழுமையாய் மூச்சுவிட்டது பிழையென்றால்
என்னைக் கிழித்த உம்
வார்த்தைக் கணைகளுக்கு
விஷந்தடவி எய்துகொண்டிருந்ததேன்…
 
இத்தனை வருட மிருந்தவள் -இப்போ
இஸ்டத்துக்கா செல்ல வேண்டும்
சாதிவிட்டு சாதிசென்றதற்கு
சாக்கடையில் வீழ்ந்து செத்திருக்கலாமென்ற‌
உங்கள் அற்பங்கள் என்னையொன்றும்
அழித்துவிடுவதில்லை…
 
மதம்மீறியது பிழையென்றால் -நீங்கள்
மருமகளுக்கு பதிலாக
மனையுடன் சேர்ந்த லட்சங்களை கேட்டதேன்??
சாதிக்கலந்தது சாபமென்றால்
சீதனத்தை மட்டுமே நீவீர்
தேடியதும் தீண்டாமைதான்
 
காதல் பாவமென்றுதானே
இத்தனை வருட காத்திருப்பு
அதற்கு உங்களால்
முதிர்க்கன்னியென்ற
முக்காட்டை மட்டுமல்லவா போர்த்தி
மூழ்கடிக்க முடிந்திருந்தது
வேர்கள் வெளிக்கிளம்பிய பின்னுங்கள்
வேலிகளுக்கிங்கு வேலையில்லை
 
மனம் பொறுக்குமளவுக்குங்கள்
சுடுசொற்கள் இருந்ததில்லையே அதனால்தான்
மனச்சிறைக்குள் மாண்டுபோயிருந்த‌
மாங்கல்யத்தை மருந்தாயிட்டுக்கொண்டேன்
 
 
வாலிபவேட்கையில் நானின்று
வர‌ம்புமீறி காதல்செய்யவில்லை
காலத்திடம் சிக்கிக்கிடந்த சில‌
முடிச்சுக்களை அவிழ்த்துவிட்டிருக்கின்றேன்
அவ்வளவுதான் ஆனந்தப்பட்டுக்கொள்ளுங்கள்
 
காலம்முழுக்க கன்னியாகவே
வாழவிட்டிருப்பீர்களா
மூச்சுக்கு மூச்சு
முடிந்திடா கேள்விகளால் என்னை
மூர்க்கத்தனமாயல்லவா கொன்றிருப்பீர்கள்
 
இரண்டில் ஒன்று
எடுக்கும் நேரத்தில்தான்
இதயமறிந்த இவன்வந்தான்
வாழ்வோடு போராடி சாவதிலும்
சாவோடு போராடு வாழ்வதென்ற முடிவோடே
சாதியினை கடந்து
மதத்தினை மறந்து
மனிதத்தோடு மட்டுமே
வாழபுறப்பட்டுவிட்டேன்…
 
எப்போது கல்யாணம்
ஏனின்னும் கல்யாணம்
சரிவரவில்லை என்ற‌
ஏளனங்களை தவிர்க்க‌
உங்களிடமிருந்து உத்தரவாதம்
வழங்கப்பட்டிருந்தால்
என்னாலும் வாழ்ந்திருக்கமுடியும்
காலமெல்லாம்
முதிர்க்கன்னியாகவல்ல‌
முழுக்கன்னியாக….
 
 

மலர்களை கொய்யவேண்டும்

காயங்களை
பரிசோதிக்காதீர்கள்

வடுக்களானதை மீண்டும்
வலிக்கச்செய்யாதீர்கள்

இன்னு மெத்தனை காலத்துக்கு
இரத்தத்துளிகளையே துடைப்பது

இரண்டு கரங்களும்
மலர்களை கொய்யவேண்டும்

வேலிகளை போட்டுவிடாதீர்கள்!!



Thursday, December 12, 2013

தப்பு

தனித்துவமாய் இருப்பது சிறப் பது
தனித்துவாழ்வதோ தப்பு

ஈரடிக்கவிதை

ஒற்றையடிப்பாதையில்
ஈரடிக்கவிதை



Wednesday, December 11, 2013

நம் நா

விஷந்தடவிய‌
வினோதமான கத்தி
வளைந்திடும் நம் நா
காயங்கள் அத்தனைசுலபத்தில்
காய்ந்துவிடுவதில்லை
கவனாமாக உபயோகிக்கவேண்டும்!!



Tuesday, December 10, 2013

வலிகளோடே

ஆழ்மனதுக்குள்
ஒளிந்துகொண்டிருந்தாலும் இப்போதும்
ஒளிர்ந்துகொண்டுதானிருக்கின்றாய்
வழிந்துபோயிடா -அவ்
வசந்தங்கள் நிதம்
வலிகளோடே கடந்துசெல்கின்றது -என்னை
வாழவைத்துக்கொண்டே..!!



இ(அ)ந்த பேனைக்குத்தான்

தாய்மை பேசும் விரல்கள்
தாராளமாய் பெண்மைகூறும் கவிகள்
தாளாத வலிகளையும்
தயவாய் போக்கும் சொற்கள்
இத்தனை வரங்கள்பெற்ற‌
இ(அ)ந்த பேனைக்குத்தான்
இதயமும் சிலநேரங்களில்
இயங்காமல் போயிருக்கும்??


துடிக்கின்றது எனதிதயம்!!

துரோகங்களை
தூக்கிவைத்துக்கொள்ளாததால்தான் -இன்னும்
துடிக்கின்றது எனதிதயம்!!



Monday, December 9, 2013

கலவரம் செய்பவளே..

கனவில்வந்து
கலவரம் செய்பவளே
காலையில் ஒருதடவை
கண்முன்னே வாராயோ ???



Saturday, December 7, 2013

அந்தப்பாதையில்

ஏமாற்றத்தின்
எல்லையினையும்
வேதனைகளின்
வேர்வரையிலும்
சென்றுவந்ததால்தான்
இத்தனை அவதானம்
அந்தப்பாதையில் எவரும்
சென்றுவிடக்கூடாதென்று....

Friday, December 6, 2013

நேர்மையில்லா

வீரர்கள் அதிகளவு -போரிலே
வீழ்ந்துபோனது
நேரிடையான மோதலிலல்ல‌
நேர்மையில்லா தாக்குதலில்!!
 

நானுமொருநாள்

வீசியெறிந்திடும்
விதைகள்கூட எதிர்காலத்தில்
விருட்சமாவதுண்டு
விதிவசத்தால் நானுமொருநாள்
விழுதுகளைச்சுமக்கலாம்!!



பயங்கரம்

மனங்களை புரிந்துகொள்ளாதவரை -எல்லா
மனிதர்களும் நல்லவர்களாகவே....

Thursday, December 5, 2013

தயங்காமல் நீமுயன்றால்...

இழந்துபோனதற்காய்
இடிந்து போகாதே
விழுந்து போனதற்காய்
விரக்தி கொள்ளாதே

காலம் பதில்சொல்லுமென்றும்
காத்திருக்காதே
கோலமாய் போகுமட்டும்
பொறுமை கொள்ளாதே

சிரித்தாலும்
பழிசொல்லும் நீ
முறைத்தாலும்
பலிசொல்லும்
தலைகீழாய் மாற்றிவைக்கும்
தடுக்காமல் நீயிருந்தால் உலகம்
வலைவிரித்து காத்திருக்கும்
விழிக்காமல் நீயிருந்தால்

கையில் எடுத்துக்கொள்
உன்னுடைய காலந்தனை
கால்களுக்கு சொல்லிக்கொடு
உனதான பாதைகளை
தடைகளை கடந்துபோ
தடுப்புக்களை உடைத்தெறி
தன்மானக்கவசமணிந்து
தனித்துவமான பயணத்தைக்கொள்

கண்ணீர் வழிகளை
கண்காணித் தறி
கண்களை கசக்குமுன்
கனவுகளை பகுத்தறி

ஏணிகளை கண்டவுடன்
ஏறிட துணியாதே
ஏற்றது உனக்கென்றால்
எள்ளளவும் தயங்காதே

ஏனிந்த நிந்தையென்று
எப்போதும் நினையாதே
தானாயழிந்த சிந்தைதனை
வீணாய்ப்போக விடாதே

உனக்குள்ளே எப்போதும்
உயிருள்ள கலையுண்டு
தயங்காமல் நீமுயன்றால்
தரணியிலில்லை உனைவெல்ல‌
இழ‌ந்து போனதற்காய்
இடிந்து போகாதே!!

Wednesday, December 4, 2013

நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் தொகுதிக்காக தெரிவு செய்யப்பட்ட எனது கவிதை

தடாகம் கலை இலக்கிய குடும்பத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்

கவினுறு கலைகள் வளர்ப்போம்
....................................................

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பினால்
சர்வதேச மட்டத்தில்நவம்பர் மாதம் நடாத்திய கவிதைப் போட்டியில் தொகுதிக்காக தெரிவு செய்யப்பட்ட எனது கவிதை 

தோல்வியை தூக்கி
தோளில் போடாதே!

தோல்வியை தூக்கி
தோளில் போடாதே
துரோகியை நெஞ்சில்
தொங்கப் போடாதே
வலிதான் வலிதான்
வாழ்வெல்லாம் வழிதான்
துக்கத்தை துடைத்து
தூரப்போட்டுவிடு
ஒளிதான் ஒளிதான் -உன்
நிமிடங்களில் ஒளிதான்
ஒழித்தால் பாரத்தை -உன்
நிழல்கூட ஒளிதான்
நேசிப்பும் சிலநேரம்
வியாதியாகும் நிஜம்தான்
யோசித்து நடந்திடால்
விலகியோடும் பனியாய்
கண்ணீரை கருத்தினில்
எடுப்பதை நிறுத்து
பொன்நேரம் உனதாகும்
இந்நாளை உயர்த்து
பின்னிட்டு நடந்திட்டால்
பூச்சிகூட விரட்டும்
புறமுதுகை திருப்பிவிட்டால்
புயல்கூட ஒதுங்கும்
வேங்கையென வெற்றியை
வெறியோடு யாசி
தீங்குவரும் நாளில்கூட‌
தீராது யோசி
நெஞ்சத்து கண்ணீரை
நொடிதனில் மாற்று
அஞ்சாமை வாழ்வதனை
தீராது போற்று
கொஞ்சமாய் முயன்றாலே
கொடிபறக்கும் முன்னாலே
வஞ்சனை கொன்றாலே
வழிபிறக்கும் தன்னாலே
உறவுதரும் காயந்தான்
உள்ளஞ்சிதைக்கும் உண்மைதான்
வரவிலதனை சேர்க்காவிட்டால்
வசந்தம் தந்திடும் நன்மைதான்
தோல்வியை தூக்கி
தோளில் போடாதே!!

Tuesday, December 3, 2013

முயலாமை ஒன்றேதான்

இயலாமைகளை கொட்டுந் தளமாய்
இதயத்தை ஆக்காதே
முயலாமை ஒன்றேதான் உன்னை
மூழ்கடிக்கும் அறியாமை!!



முடியாதோ

இத்தனை வேகமாய்
சுற்றும் காலத்துக்கு
இதயக்காயங்களையும்
சுற்றிவீசிட முடியாதோ???






Monday, December 2, 2013

காதலிக்கின்றீர்களா? இப்படியா??


இதுதான் காதல்



உண்மையாய் காதலியுங்கள் நீங்கள்
உயிராய் காதலியுங்கள்
உறவை உங்கள் அவனை/ளை
உத்தமமாய் காதலியுங்கள்
குறைகளை ஒதுக்கி
குற்றங்களை மறந்து
உள்ளத்தில் சுமந்திடுங்கள்
நேரத்தை ஒதுக்கி
நேசத்தை வளர்த்து
நேர்மையாய் காதலித்து
பாசத்தால் கோர்த்துங்கள் உறவை
பாதுகாத்துக்கொள்ளுங்கள்


சின்ன சண்டைகளில் சிரித்து
சில்மிஷங்களில்  குழைந்து
சிறியதாயோர் சாம்ராஜ்யமுருவாக்குங்கள்
கைகோர்த்து நடங்கள் உங்கள்
பாதங்களுக்கு ஒரே பாதையாக்குங்கள்
இதுதான் வாழ்க்கை என‌கூறுங்கள்
இதுவே எனதுலகமென்று கூறுங்கள்
ஒரே வாழ்க்கைக்கு
ஒரே இதயமென்று சொல்லுங்கள்
ஒரே உயிருக்கு
ஒன்றே காதலென எண்ணுங்கள்


நாளை நீங்களுமோர்
மனநோயாளியாகவோ அல்லது
மரணத்தை வாஞ்சிக்கும் ஒருவராக‌
மாறவேண்டுமென்றால்???






முகமூடி வீழ்ந்திடுமா?

நேர்த்தியாக மிக‌
நேர்த்தியாக வலை
விரிக்கப்பட்டுள்ளது...

சிக்கித்தவிப்போரும்
சிக்கலில் தப்பியோரும்
இதுவரை வாய்மொழி
வலையையறுத்திடவில்லை -ஆதலால்
விரித்த கைகளுக்கு
விலங்கிடுவதாரோ??

அற்புதம் அபூர்வம்
ஆறாமறிவே அறியாவண்ணம்
அசத்தலான வலைதான்

உண்மைகளை
உதிர்த்திடும் நாவல்ல‌
உண்மைகள்
உதிர்ந்துபோன நா
அதனால்தானோ என்னவோ
நல்லோர் பட்டியலிலும்
நாயகத்தின் பதாதைகளிலும்
முதலிடம்!

முகத்தோலொட்டிய புதிய‌
நாடகமேடை!!

நேர்மைகள் தொலையுமுன்பே இம்
முகமூடி கன(ழ)ன்று வீழ்ந்திடுமா?

வலைமட்டும் அறுக்கப்பட்டு
வஞ்சகம் வெளிப்படுமாயின்
நானும் சொல்வேன்
நியாயங்கள் ம‌ரித்துப்போவதில்லையென்று!!




Sunday, December 1, 2013

புரியமுடியவில்லை

எவ்வளவோ படித்தும்
இன்னும் புரியமுடியவில்லை
உன்னை???



புண்ணாக்கு

புண்ணாக்கு புண்ணாக்கென்று
புண்ணாக்கினாய் உன்
புண்நாக்கினால் இன்னும்
கண்ணால் வலியுதிர்த்தும்
கண்ணாஎன்ற வார்த்தைக்கு
சொன்னாளா மறுவார்த்தை??





Saturday, November 30, 2013

இறைத்தால்

கல்லை இணைத்தால்
கட்டிடம் எழும்பும்
சொல்லை இறைத்தால்
காயங்களுருவாகும்!!



Friday, November 29, 2013

அநுபவம்

"ஒவ்வொன்றையும் ஆராய்ந்து தெரிந்துகொள்ளும்போது வெறும் அநுபவம்மட்டுமே நமக்கு கிடைக்கின்றது அதை அநுபவிக்கும் பாக்கியமில்லாமல் காலம் கடந்துவிடுகின்றது"

 அதற்குத்தான் சொன்னாங்களோ, பெரியவங்க/அநுபவசாலிகள் சொல்றத கேக்கனும்னு... (ஆமாங்க உண்மைதான் அநுபவசாலிகள் சொல்றத கேட்டா அதைவைத்துகொண்டு நமக்கான சரியான விடயங்களை தெரிவுசெய்து நமது காலத்தையும் நேரத்தையும் சரியாக செலவுசெய்யலாம்)

இறைவன்!

எந்த இடத்தில் அல்லது எந்த விடயத்தில் அன்பு இருக்கின்றது அதுவே இறைவன்!

அந்த க(ன)ணங்கள்

மறக்கப்படாதவை
அந்த கணங்கள்
மனதைதாக்கிய‌வை
அந்த கனங்கள்

உன்னோடு மட்டுமென்றால்!!

ஆயுள் நீளவேண்டாம்
அரைநொடியே போதும்
உன்னோடு மட்டுமென்றால்!!



Wednesday, November 27, 2013

தமிழ்மொழியில் குறையா???

தமிழ்மொழியில் காணப்படும் குறையாக சில சப்தங்களுக்கான எழுத்துக்கள் இல்லாமை உறுத்தலாகவும் கடினமாகவும் இருக்கின்றது என்றே கூறவேண்டும். சில எழுத்துக்கள் வடமொழியிலிருந்து கடன்பெற்றாப்போல.... இன்று ஒரு மாணவி தன் பெயரெழுதுகையில் பார்த்த நான் ஒருகணம் குழம்பிப்போய்விட்டேன் காரணம்,  அவளுடைய உண்மையான் பெயர் Ganganiஅவள் எழுதியிருந்தது 'கங்காணி' என‌(கங்காணி என்பவர் கண்காணிப்பவ‌ர்) ப(Ba), க(Ga), த(Dha), ட(Da) போன்ற சப்தங்களுக்கான எழுத்துக்கள் சகோதரமொழியைப்போல தமிழ்மொழியில் காணப்படவில்லை இது பெருங்குறையே இதற்கான முயற்சிகளை எம் தமிழ்புலவர்கள்,தமிழ்பண்டிதர்கள்,பெரியவர்கள் கலந்தாலோசித்து ஆவன செய்தால் என்ன????? இது ஓரு குறையா அல்லது இவ்விடயம் அத்தனை பெரியபாதிப்ப‌ல்ல என்பதா என்பதை அறியத்தருவீர்களா?

Monday, November 25, 2013

நீயும் நானும் எங்கே எங்கே????

என் கண்ணீர்துடைத்த‌
உன் விரல்கள் எங்கே

என் கவலைகளை மறந்த‌
உன் புன்னகை எங்கே

என் பயணத்துக்கு துணையான‌
உன் பாதங்கள் எங்கே

என் கைகள் கோர்த்த‌
உன் கரங்கள் எங்கே

என் தலையைகோதும்
உன் தாய்மைவிரல்கள் எங்கே

என் கோபத்தை குறைக்கும்
உன் செல்லச் சிணுங்களெங்கே

என் அறியாமைகளை தகர்க்கும்
உன் ஆளுமைகுணமெங்கே

என் அன்பை யாசிக்கும்
உன் பாச இதயமெங்கே

என் கனவுகளை உயிர்ப்பித்த‌
உன் கனிவுகள் எங்கே

என் உள்ளத்தை மேயும்
உன் குறும்புகள் எங்கே

என் உளறல்களை அதிகரிக்கும்
உன் குழப்படிக்கள் எங்கே

என் நினைவுகளை தொலைக்கும்
உன் நாட்கள் எங்கே

என் வாழ்வுதனை அழகாக்கிய‌
நம் கடந்தகாலங்கள் எங்கே எங்கே???


நம் வாழ்க்கையை அர்த்தமாக்கிய‌
அந்த வசந்தங்கள் எங்கே

நம் ஆனந்தத்தை அதிகமாக்கிய‌
அந்த நிமிடங்கள் எங்கே

நம் எதிர்கால‌த்தை பறைசாற்றிய‌
அந்த நேரகாலங்கள் எங்கே

நீ எங்கே எங்கே
என் நெடிய இரவு அழைக்கின்றது

நீ எங்கே எங்கே
என் அஸ்தமித்த விடியலழைக்கின்றது

தொலைந்துபோகப்போகின்றேன்
சீக்கிரம் வந்துவிடு

தொலைதூரமிருப்பினும்
சீக்கிரமாக வந்துவிடு -சிலநேரம்
மூடியபெட்டியை திறப்பதற்கு
மூடக்கதைகள் சொல்லுவார்கள்!!




Sunday, November 24, 2013

வாழவையுங்கள்

புதிய உலகமொன்றை செய்து -அதில்
புனிதக்காதலை மட்டும்
வாழவையுங்கள்
இந்த போலித்தனங்கள்
இங்கேயே அழிந்து
பொழிவிழந்து போகட்டும்!!


Saturday, November 23, 2013

ஒரு மணமகளுக்கு என்ன தகுதி இருக்கவேண்டும் ஒரே கன்பியூசுங்க‌ யாராவது சொல்லுவிங்களா????




ஒருதடவை அழைப்பெடுத்து பதிலில்லாவிட்டால் பேசாமல் இருக்கும் எனது நண்பி இரண்டு தடவைக்கும் பதிலளிக்காத எனது கைப்பேசிக்கு தொடர்ந்து அழைப்பெடுத்துக்கொண்டேயிருந்தாள். நீண்ட நேரத்துக்குப்பின் அதனை செவிமடுத்த நான், வேகமாக காதில்பொருத்திக்கொண்டு நண்பியின் திட்டுக்களோடு தொடர்ந்த அவளது வினாக்களை செவிமடுத்தேன். 'ஏன்டி மாடு......(இன்னும் பல) ஏன்டி இவ்வளவு நேரம் இந்த போன எடுக்க அவ்வளவு வேலையா உனக்கு என்ற திட்டலோடு ஆரம்பித்தாள். (இன்று அவளை பெண்பார்க்கவருவதாக சொல்லியிருந்தாள் அதான் அவ ரொம்ப பிஸியா இருப்பாளே என்று நாளும் தொலைபேசியை கவனிக்கவில்லை (அவளை தவிர வேறு அழைப்புக்கள் எனக்கு வருவது குறைவு அதுதான் )






"ஏன்டி, இவனுங்க மனதில என்ன நினைச்சுக்கொண்டு வாரானுங்க??? ஒரு குடும்ப பொண்ணுக்கு என்ன இருக்கவேணும்னு இவனுங்க நினைக்கிறானுங்க?" ஏன்டி என்ன ஆச்சு என்ற எனது வினாவுக்கு அவள், வந்தவங்க சாப்பாட்டுக்குப்பிறகு பேச்சை ஆரம்பிச்சாங்க எல்லா கேள்விகளுக்கும் அம்மாவும் அப்பாவும் பதில்சொல்லிக்கொண்டிருந்தாங்க நான் ஒன்றுக்கும் வாய் திறக்கவில்லை ஏன்னா அவங்க பாதியிலயே எழும்பி ஓடிடுவாங்க என்றதால் என்றாள். சரிடி என்ன நடந்திச்சுன்னு சொல்லு என்றேன், இததான்டி கேட்டாங்க அரசாங்க வேலைதானே? மாதச்சம்பளம் எவ்வளவு? பட்டதாரிதானே? ஆங்கிலம் கதைப்பாள்தானே? என்று கேட்டவர்கள் கடைசியில கேட்டாங்க கொம்பியூட்டர் தெரியுமா? என்று... இவங்க பொண்ணு பார்க்கவந்தாங்களா என்னை வேலைக்கு இன்டவீவ் பண்ண வந்தாங்க ஏன்டி இப்படி இருக்கானுங்க??

"வந்த ஆத்திரத்தை வாய்க்குள்ளே அடக்கிக்கொண்டேன் இன்னும் கொஞ்சநேரம் அவங்க உட்கார்ந்திருந்தாங்கன்னா என்னநடந்திருக்குமோ தெரியாது" என்றாள். அவளது ஆதங்கம் எனக்கு நன்றாகவே புரிந்தது. இப்படி எத்தனையோ வரன்கள் வந்து ஒவ்வொரு காரணங்களுக்காக தட்டிக்கொண்டுபோனதில் அவளுக்கு மனதளவில் பாதிப்புதான் ஆண்களைக்கண்டாலே வெறுப்போடு பார்க்குமவள் ஆண்கள் எல்லாரையும் ஒருவித சந்தேகத்தோடு பார்க்கும் புதிய பார்வையையும் புதிதாக உருவாக்கிக்கொண்டிக்கின்றாள் என்பது இன்றுதான் புரிந்தது. அவளது ஆத்திரமாக கேள்விகளுக்கு பதிலளிக்கமுடியாது வாயடைத்து நின்றேன். அவள் குடும்ப பொறுப்புக்களும் குணசாலியுமான பெண்ணென்பது எங்கள் யாவருக்கும் தெரியும் அவர்களுக்கு தெரியவில்லை உண்மையில் அவளை தவறவிடும் எவருமே துரதிஸ்டசாலிகளே துரதிஸ்டசாலிகளே என்பது நிச்சயம்.




ஒரு ஆணும் பெண்ணும் இணைந்த குடும்ப வாழ்க்கைக்கு வெறும் தகுதிகளையும் தாள்கள் நிறைந்த தராதரங்களையும் மட்டும் கொண்டு இணைத்துவிட முடியுமா? மனம் சம்பந்தப்பட்ட எந்த விடயங்களும் தேவைப்படுவதில்லையா? அன்பு அரவணைப்பு பாசம் என்ற விடயங்களெல்லாம் பணத்தாலும் பட்டங்களால் மட்டுமே நிர்ணயிக்கப்படக்கூடுமோ ஒன்றுமே புரியலப்பா????

ஆக, திருமணம் என்பது மனம் சம்பந்தப்பட்ட ஒன்றல்ல பணம் சம்பந்தப்பட்டது, திருமணம் என்பது பாசம் சம்பந்தப்பட்டதல்ல பட்டம் பதவி சம்பந்தப்பட்டது, திருமணம் என்பது நேசம் சம்பந்தப்பட்டதல்ல கலப்படமற்ற வேஷம் சம்பந்தப்பட்டது என்பதாக உறுதிசெய்துகொள்ளலாமா????


எதிரி

நீ எதிரியாய் இருப்பது நலம்
துரோகியாய் இருப்பதைவிட‌..



Friday, November 22, 2013

வாழவேண்டும்!!

வாழவேண்டும் நம்
வாழ்க்கையை நாமே
வாழ்ந்துவிடவேண்டும்

வலிகளும் வதைகளும்
வழிநெடுகில் வரட்டும்
புலிகளும் கரடியும்
புயலென பாயட்டும்

முன்வைத்த பாதம்
முன்னோக்கியே நகரட்டும்
பின்னிட்டு ஓடுவது நம்
பிழைகளும் தவறுகளுமாகட்டும்

இன்னுங்கொஞ்சம் கடந்தால்
இளமையுமோடிவிடும்
கண்ணுக்குள் வைரம்கொண்டால்
கனவுகளும் கரங்களுக்குள்ளாகும்

வாழவேண்டும்  உயிர்
வானம்தாண்டி போயிடுமுன்
வாழவேண்டும் வாலிபம்
உடலைவிட்டு ஓய்ந்திடுமுன்...



காகம்

காகம்
தவறுதலாய்த்தான் எச்சமிட்டது
அதற்கு உன்
ஜாதகமும் தெரியாது
சாஸ்திரமும் புரியாது!!



இறைவா

வார்த்தைகள் வற்றிபோனது -எனக்குள்
வலிகள் தொற்றிக்கொண்டது
ஊர்பேரறியா இப்பிஞ்சுகள்
உலகத்துக்கு செய்த தீமைதானென்ன -இறைவா
உமக்கு செய்த துரோகம்தானென்ன???

இதயங்களெல்லாம் இரும்பாய்ப்போனதோ
இரக்கங்களெல்லாம் இயங்காமல்போனதோ
சதயமாய்ப்போன மனிதமனங்கள் மண்ணிலினி

உதயமாய் எழுந்து வருவதில்லையோ???