Saturday, July 23, 2016

தினக்குரல் வாரமலரில் கவிஞர் முல்லைத்தீபன் வே அவர்களின் நேர்காணல்.. 17.07.2016






  • முப்பது வருடத்திற்கு மேற்பட்ட ஆயுதப் போராட்டத்தின் முடிவை பெரும் அழிவுகளின் மத்தியில் சந்தித்த முல்லை மாவட்டத்தை பிறப்பிடமாகவும் தனது கலை இலக்கிய செயற்தளமாகவும் கொண்டு இயங்கி வருகிறார் திரு.முல்லைத்தீபன். ஈழத்து இலக்கியத் தடத்தில், போருக்குப் பிந்தைய காலத்தில், குறிப்பிட்டு சொல்லக்கூடிய பல இளயவர்களுக்கு மத்தியில் இவரது பங்களிப்புக்கள் காத்திரமாக அமைந்து வருகிறன. பிரதேச பண்பாட்டுப் பேரவை உறுப்பினராக இருக்கும் இவர் பேராதெனியவில் இளங்கலைமானி முடித்தவர் பொது நிர்வாகத் துறையில் முதுகலைமானியைத் தொடர்கிறார். கடந்த பதினைந்து வருடங்களுக்கு மேலாக தேசிய பத்திரிகைகள், வானொலிகள் மற்றும் இலக்கிய நிகழ்வுகளில் தனது ஆக்கங்களை வெளிப்படுத்தியும், நூல் வெளியீடுகளை நடாத்தியும் வருகிறார். சமூக சேவைகள் அமைச்சின் கீழ் உளவியல் உளவளத்துணை பாடநெறியையும் பயின்றவராவார். அண்மைக்கால பல இலக்கிய நிகழ்வுகள், நூல் வெளியீடுகள், கவியரங்கங்கள், பட்டிமண்டபங்களில் இளவல்கள் பலரை அடையாளப்படுத்தி வெளிக்காட்டி வரும் ஓர் தமிழாசிரியர். ஆதலால்.. இவரை இவ்வார தினக்குரலின் 'மஞ்சரி' நேர்காணலுக்காய் சந்தித்தோம்...


  • 01. தங்களைப் பற்றி?

  • * ஈழத்திருநாட்டின் வடதிசையில் நானிலங்கள் ஒருங்கேயமைந்த காடும் காடு சார்ந்த இடமுமாகிய அடங்காப்பற்றாம் வன்னிப் பெருநிலப்பரப்பின் முல்லை மாவட்டமே எனது பிறப்பிடமும் வளர்ப்பிடமுமாகும். சிறுவயதிலிருந்தே பேச்சு, கவிதை, தாலலையம், வில்லுப்பாட்டு, நாடகங்கள் மற்றும் கூத்துக்கள் என பல்வேறு பாத்திரங்களை ஏற்றுள்ளேன். அம்மாவும், அம்மம்மாவுமே எனது குடும்பமாகும். தாயார் ஒரு பாடசாலை அதிபர் என்பதை விடவும் சிறந்த விளையாட்டு வீராங்கனை மற்றும் கலை இலக்கிய ஆர்வம் நிரம்பப்பெற்றவர். அதனால்தான் கலை இலக்கிய ஈடுபாடுமிக்க ஓர் தமிழாசிரியராக என்னால் கடமையாற்ற முடிகிறது. கரடுமுரடான கிரவல்ப் பாதையின் காலச்சக்கரத்தில் நான் வேகமாக இலக்கை அடைய வேண்டும் எனும் அவாவுடன் எம்மிளைய பிள்ளைகளையும் கொண்டு நகர்த்த வேண்டும் எனும் பேரவாவும் அதனோடிணைந்த மிடுக்கும் என்னிடம் இருக்கிறது என்பதில் பெருமைப்படுவேன்.
  • 02. உங்கள் நூலுருவாக்கங்கள் பற்றி..?
  • * கடந்த 2009 ல் செட்டிகுளம் இடைத்தங்கல் முகாமில் வைத்து 'நம்பி(க்)கை வை' எனும் கவிதை தொகுப்பை வெளியிட்டேன். அச்சந்தர்ப்பத்தில்.. அவ்விடத்தில் இப்பேற்பட்ட படைப்பொன்றின் தேவையை கருத்திற்கொண்டு இத் தொகுப்பு வெளியிடப்பட்டது. நொந்து நூலாகியிருந்த எம்மவரை ஆற்றுப்படுத்தக் கூடியதாய் அக் கவிதைகள் அமைய வேண்டும் என்பதில் கவனமாகவும் நிதானமாகவும் இருந்தேன். தொடர்ந்து.. கடந்த 2014 ல் வவுனியாவில் 'கடவுளிடம் சில கேள்விகள்' எனும் இரண்டாவது கவிதை தொகுப்பு கலாநிதி தமிழ்மணி அகளங்கன் தலைமையில் வெளியிடப்பட்டது. "யாருக்காகவும் யாரவது இருக்கிறார்களா என்றால்.. எவருக்காகவும் எவருமே இல்லை என்பதே விடையாகும்" இதனால் படைத்தவனிடமே பல்வேறு கேள்விகளை உரிமையுடன் கேட்டிருந்தேன். மேலும்.. 2015 ல் முல்லை மாவட்ட கவிதை எழுதும் 72 ஆர்வலர்களை இணைத்து 'முல்லைக் க(வி)தைகள்' எனும் மாவட்ட ரீதியான முதலாவது கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டேன். இதனை மூத்தவர்கள், இளையவர்கள், மாணவர்கள் என பலதரப்பட்டவர்களையும் இணைத்து முல்லை மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனின் வாழ்த்துரையுடன் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் வெளியிட்டிருந்தேன். அத்துடன் இவ்வருடத்திற்கான மூன்று நூல்கள் பதிப்பிலுள்ளன. காலம் கனிந்தால் அதன் தடம் பற்றி வடம் பிடிக்க ஆவலோடுள்ளேன்.

  • 03. படைப்பாளி ஒருவரின் எதிர்பார்ப்பு எவ்வாறிருக்கிறது..?
  • அவர்தம் நிலைக்கேற்ப எதிர்பார்ப்புக்கள் வேறுபடலாம். இருப்பினும் சமூகப் பற்றுடன் ஆத்மார்த்தமாக ஒரு படைப்பை வெளியிடுபவர் அது தொடர்பான ஆரோக்கியமான விமர்சனத்தையும் அதற்கான அங்கீகாரத்தையுமே பிரதானமாக எதிர்பார்க்கிறார். அனைத்திற்கும் பின்புதான் வருமானம். ஆனால்.. படைப்புருவாக்கத்தின் மூலம் படைப்பாளியின் முழுமையான எதிர்பார்ப்புக்களும் பூர்த்தியாகிறதா என்றால் ஒப்பீட்டளவில் குறைவென்றே கூறலாம்.

  • 04. சமகாலத்தில் வழங்கப்படும் பட்டங்கள், விருதுகள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
  • மலிவாகவே வழங்கப்படுகிறது. அதைவிட கொடுமை தமக்குத் தாமே வைத்துக்கொள்ளும் தான்தோன்றிப் பெயர்கள். இதனால் காத்திரமான ஆழுமைகளும் கனதியான படைப்புக்களும் காலாவதியாக்கப்படுமா எனும் கேள்வி எழுகிறது. சில இடங்களில் பட்டங்களும் பொன்னாடைகளும் சில்லறைத்தனமாக விளங்கினாலும்.. எந்த ஒரு சமூகப்பற்றுடைய சிறந்த சிந்தனாவாதியும் இப்பேற்பட்ட பட்டங்களையும் விருதுகளையும் எதிர்பார்ப்பதே இல்லை என்பதற்கு எமக்குள்ளேயே வாழ்ந்து வழிகாட்டிக்கொண்டிருக்கும் பலரை நாம் அடையாளப்படுத்தலாம். 05. காலம் தாண்டி பேசப்படக்கூடிய இலக்கியம் எப்படி இருக்கவேண்டும் என கருதுகிறீர்கள்..?
  • உண்மையாக இருக்க வேண்டும். பக்கச்சார்போடு போற்றுதல், புளுகுதல் அல்லது தூற்றுதல், தூக்கியெறிதல் இன்றி சொல்லவேண்டியதை தற் துணிவுடன் எழுத வேண்டும். எழுதுகோலை கால மாற்றம் தடம் புரள வைக்குமானால்.. அதற்கேற்ப அமைதி காத்தலே பொருத்தமாகும். இதற்கு எடுத்துக்காட்டாக.. போருக்கு முந்திய-பிந்திய எழுத்தாக்கத்தின் முரண்நிலையைக் கூறலாம். ஆகவே.. காலத்தின் கண்ணாடி உண்மையாகும் தெளிவாகவும் இருந்தாலே காலம் தாண்டி பேசப்படும்.

  • 06. 'ஒரு படைப்பின் மீதான விமர்சனம்' என்பதை எவ்வாறு நீங்கள் நோக்குகிறீர்கள்..?
  • * உண்மையில் படைப்பின் மீதான ஆராய்வு, திறன் ஆய்வு, விமர்சனம் என்பவற்றிற்கிடையே சின்னச் சின்ன வேறுபாடிருப்பதாகவே உணர்கிறேன். ஆனால் பொதுவாக பார்த்தால் போற்றிப் புகழ் மொழியாகவோ.. அன்றில், பிய்த்து எடுத்து சப்பிக் குப்பைத் தொட்டியில் கணக்கெடுக்கப்படாமல் போட முற்படுவதாகவேதான் இருக்கிறது. ஆனாலும்.. பட்டதை சட்டென சுட்டும் குணமும், தட்டிக்கொடுக்கும் தார்மீக பொறுப்பும், படைப்பை வாசகனுக்கு கொண்டு சேர்க்கும் பாலமாகவும் இருக்க.. பல திறன் மிகு விமர்சகர்கள் இன்னும் பொது வெளிகளுக்கு தேவைப்படுகிறார்கள். மலிந்த சந்தையில் குவிந்து கிடக்கும் விமர்சகர்கள் மத்தியில் நடுநிலை சிந்தராவாதிகளின் வரவும் அவசியமமானதாக இருக்கிறது.
  • 07. எழுத்தாக்கத்துறையிலும் 'பிரபலமேனியா' எனக் கூறப்படுவது பற்றி..?
  • * என்னிடம் இவ்வாறான திறமைகள் இருப்பதாக நானே கூறிக்கொள்ளல் தம்பட்டம் அடித்தல் அல்லது தற்பெருமை பேசல் எனப்படலாம். ஆயினும்.. நான் இவற்றை செய்தேன் அல்லது செய்கிறேன் எனப் பொது வெளியில் கூறும் போதுதானே தெரியாதவர்கள் தெரிந்து கொள்வார்கள் எனும் வாதமும் உண்டு. எது எப்படி இருப்பினும்.. அளவுக்கு அதிகமாகே தம்மைத்தான் கவிஞர் என்றும் படைப்பாளி என்றும் எழுத்தாளர் என்றும் இலக்கிய மகா அரசர்கள் எனவும் பெயர் வைத்துக்கொண்டலைவது ஒரு வகையில் 'பிரபலமேனியா' தான். பல்வேறு விதமான மனநோய்களில் இதுவுமொன்றெனக் கருதுகிறேன். 08. பெண்படைப்பாளிகளின் வளர்ச்சிகுறித்து உங்கள் கருத்து? பொதுவாகவே இதர பல துறைகளைப்போல் பெண் படைப்பாளிகளின் வரவு குறைவுதான். ஆனாலும் சமகாலத்தில் குறிப்பிடக்கூடிய பல பெண்களிடமுள்ள அசாத்தியமான பெருந்தற்துணிவான படைப்புக்கள் வியக்க வைக்கின்றன. அரசியல், பாலியல் என்று ஒருகாலத்தில் அச்சப்பட விடையங்களை ஓர்மத்துடன் ஆணித்தரமாக வெளிப்படுத்துகின்றனர். சமகால நம் 'ஆண்டாள்கள்' இவர்கள். இலை மறையாக இருக்கும் இன்னும் பலர் தம்மைத்தாமோ அல்லது பிறராலோ அடையாளப்படுத்தப்படல் வேண்டும்.
  • 09. அண்மைக்காலமாக கவியுலகில் அடிக்கடி ஏகப்பட்ட கவிஞர்கள் உருவாகி வருகிறார்களே..?
  • * சீரிய சிந்தையுடை நற் பேற்றுக் கவிஞர்கள் இன்றும் வறுமையில் வாட..! கூனிக்குறுகிச் சாக...! சில ஆயிரங்களும்.. நல்லாக்கதைக்க நாலு பேரும் கிடைத்தால் ஒரே இரவில் கவிஞராகலாம். அதற்குச் சில அழைப்பிதழ்ப் பெயர் விரும்பிகளும், ஒலிவாங்கிப் பிரியர்களும் ஆதரவாகவிருப்பதே மேலும் ஆதங்கத்தைத் தருகிறது. மூத்தோரால் தட்டிச் செதுக்கி சீர் செய்யப்பட்டு வரும் சந்தர்ப்பங்களை இளையோரும் நளுவ விடுகிறார்கள். அவசர இயங்கு தளத்தில் 'அவசர கவிஞர்கள்' ஆகிறார்கள். இதனால் வேகமாக இப்பாதையிலிருந்து இவர்கள் காணாணல்ப் போவதுடன் மூத்தவர்களின் விருப்பத்திற்குரிய தன்மையினையும் அதனூடாக அடுத்த படிக்கு முன்னேறும் வாய்ப்பினையும் தவற விடுகிறார்கள். பின்னர் தமக்கான ஆதரவு இல்லையென புலம்புகிறார்கள். ஆகவே பாதையோரக் கல் பல உளியடிகளைப் பெற்று சிலையாவது போல் கவிஞர்களை காலம்தான் தட்டிச் செதுக்க வேண்டும்.
  • 10. இறுதியாக.. வெளிவரும் படைப்புக்களுக்கான போதிய ஆதரவும் தட்டிக்கொடுப்பும் இருப்பதாக உணருகிறீர்களா..?
  • உண்மையில் தாராளமாகக் கிடைக்கிறது. இதனை எனது அனுபவத்தினூடாகக் கூறுகிறேன். வளர்ந்தவர்கள் பிறரை வளர்க்க விரும்புகிறார்கள். வளர வேண்டியவர்கள் வளரத் துடிக்கிறார்கள். ஆக.. ஆதரவில்லை என்பது, இவர்களுக்கான இடைத்தொடர்பிலேயே தங்கியுள்ளது. சமூகப் படைப்பாளியின் தொடர்பாடல்த் திறனில் விரிசல் ஏற்படும் போது அது படைப்பாக்கச் செயற்பாட்டின் ஆதரவுத் தன்மையை இழக்கிறதே தவிர வெளிமட்டத்தில் தட்டிக்கொடுத்தல் இல்லை எனும் பொருள் படாது. ஒரு படைப்பிற்கான அங்கீகாரம் என்பதை முழுமையாக வாசகரே தீர்மானித்தாலும் இலக்கிவாதிகள், சமூகமட்ட அதிகாரிகள் மற்றும் ஊடகங்களே வாசகரது தீர்மானத்திற்கான ஊக்கிகளாகும். அந்த வகையில் என்னைப்பொறுத்த வரை இம் முக்கூட்டுறவென்பது எனக்குக் கிடைத்த பெரும் வரப்பிரசாதமாகும். ஆதலால்.. என்றும் என்னோடிருக்கும் இவர்களையும், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடக நண்பர்களையும், எதையும் "கண்ட படி கதைக்கும்" என்னலனில் அக்கறை கொண்ட அன்பர்களையும், என் அடி மனதின் ஆழத்திலிருந்து பறிக்கும் நன்றிப் பூக்களோடு நெஞ்சம் நெகிழ்ந்து நினைவிற் கொள்கிறேன்.


No comments: