Saturday, July 23, 2016

கல்குடா நேசனின் 40வது படைப்பாளியாக கவிஞர் கஜன் சச்சிதானந்தன்

http://kalkudahnation.com/45485









வாராவாரம் கல்குடாநேசன்  இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள் கலைஞர்கள் கவிஞர்களை  சந்தித்துவருகின்றோம். அவர்களின்  திறமை ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு படைப்பாளிகளின் பல்வேறுபட்ட  கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வதில்  நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம்.

அந்தவகையில் இவ்வாரமும் ஓர்  இளைய  படைப்பாளியை அறிமுகம் செய்வதில் பெருமிதமடைகின்றோம். கல்குடா  நேசனின் 40வது படைப்பாளியாக அறிமுகமாகின்றவர் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த கவிஞர்  கஜன் சச்சிதானந்தன் அவர்கள்  வளர்ந்துவரும் படைப்பாளிகளுள் குறிப்பிட்டு  சொல்லக்கூடியவர். கவிதை  சிறுகதை பேச்சு  போன்ற  இலக்கிய  துறைகளில் அதீத  ஈடுபாடு  கொண்ட  இவர் கவியரங்குகளில் சிறப்பாக  கவிபாடக்கூடிய திறமைகொண்டவ‌ர்.

தகவல்  தொழினுட்பத்துறையில்  உயர்கல்வியை  நிறைவுசெய்துவிட்டு  அதே துறையில்  தொழில்புரியும் கஜன்  அவர்கள் //கவியரங்க மேடையில் யாப்பு  முறையில் எழுதப்பட்டவற்றை வாசித்துகொண்டிருப்பதில் பயன்கிடையாது  என்பது  என்னுடைய  திண்ணம்// என  காத்திரமான  காரசாரமான கருத்துக்களோடு  மனந்திறக்கின்றார்.

மிக இளையவராக இருப்பினும்  மிக நல்ல குணங்களையும் பொறுமையுடன்  நிதானமுள்ளவராகவும் தனது  வார்த்தைகள் திறமைகளை முன்னெடுக்கும் இவர்  சிறப்பான  விடயங்களை எங்களோடு  பகிர்ந்துகொண்டார்.  அவரின் முழுமையான  நேர்காணலை வாசித்து எமது  வாழ்த்துக்களையும் நல் ஆலோசனைகளையும் வழங்கி இவ் இளைய  கவிஞருக்கு கைகொடுப்போம்



01. எழுத்தின்மீது எவ்வாறு ஈடுபாடு ஏற்பட்டது?

வாசிப்பும் நேசிப்பும்தான் எழுத்தின் மீதான ஈடுபாடு ஏற்பட காரணமாக இருக்க முடியும். சிறுவயதிலிருந்தான வாசிப்பு பழக்கமும், பாடசாலைகளில் கட்டுரைகள் எழுதுவதில் காட்டிய ஆர்வமும்தான் ஒரு கட்டத்தில் பத்திரிகைகளுக்கு ஆக்கங்களை எழுதுவதற்கான உந்துசக்தியை எனக்கு தந்நது. அதனுடைய வெளிப்பாடாக பாடசாலையில் படிக்கின்ற காலத்திலேயே பத்திரிகைளுக்கு எழுத ஆரம்பித்த விட்டேன். நான் பத்திரிகைக்கு எழுதி அனுப்பிய முதல் கட்டுரைக்கு பத்திரிகை கொடுத்த அங்கீகாரம் தொடர்ச்சியாக சிறுகதை, கவிதை போன்றவற்றையும் பத்திரிகைகளுக்கு எழுதுவதற்கான ஆர்வத்தை ஏற்படுத்தியது.


02. எவ்வகையான இலக்கிய படைப்புக்களில் ஆர்வம்காட்டி வருகின்றீகள்?

சமூகம், சினிமா மற்றும் இலக்கியம் சார்ந்த கட்டுரைகள், விமர்சனங்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்ற துறைசார் படைப்புகளை உருவாக்குதிலும், மேடைப் பேச்சுக்கள், பட்டிமன்றங்கள்; மற்றும் கவியரங்களிலும் பங்குபற்றுவதிலும் ஆர்வமுடையவனாக இருக்கிறேன்.


03. உங்கள் தொழிற்துறை பற்றி?

எனது தொழில்துறை இலக்கிய துறையிலிருந்து முற்றாக மாறுபட்ட, தகவல் தொழில்நுட்பதுறையில் உயர்கல்வியை மேற்கொண்டு தற்போது அத்துறையில் கடமையாற்றிவருகிறேன்.


04. நீங்கள் கலந்துகொண்ட போட்டிகள் பெற்றுக்கொண்ட வெற்றிகள் பற்றி?


கடந்த வருடம் யாழ்ப்பாணத்தில் ஓர் இணையத்தளம் நடத்திய கவிதைப்போட்டியில் எனது “சுமை தாஙகி” எனும் கவிதை சிறந்த கவிதையாக தெரிவு செய்யப்பட்டமையும், இவ்வருடம் இலங்கை கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் கலாசார திணைக்களத்தினால், உலக கவிதைத் தினம் 2016 ஐ முன்னிட்டு; வெளியிடப்பட்ட "மானுடம் பாடும் கவிதைகள்" எனும் தமிழ் கவிதைத் தொகுப்பில் எனது “கருகும் மொட்டுக்கள்” எனும் கவிதை இடம் பிடிந்திருந்தமையும், கடந்த வருடம் தேசிய வாசிப்பு மாதம் 2015ஐ முன்னிட்டு, வவுனியா பொதுசன நூலகம் நடத்திய சிறுகதைப் போட்டியில், எனது “வாழ்க்கையின் அர்த்தம் தேடி” என்ற சிறுகதைக்கு இரண்டாம் இடம் கிடைத்தமையும், திருவள்ளுவர் விழாவை முன்னிட்டு பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் சர்வதேச அளவில் நடாத்திய திருக்குறள் சிறுகதைப் போட்டியில், எனது “கனவின் நிஜம்” எனும் சிறுகதை இரண்டாம் இடம் பெற்றமையும், கடந்த வருடம் எனது கனவு மேடையான கம்பன் மேடையில் பேசுகின்ற வாய்ப்புக் கிடைத்தமையும், கவிதை, சிறுகதை மற்றும் பேச்சு துறைசார்ந்த அண்மைய வெற்றிகள் என்பதை விட அங்கீகாரங்களாக கருதுகிறேன்.

;
05. உங்களது கவியரங்க அநுபவங்கள் பற்றி?

கவிதைகளை நிறைய எழுதியிருந்தாலும் கூட, ஆரம்ப காலங்களில் கவியரங்களிலே பங்கு பற்றியது கிடையாது. அதற்கான முதல் வாய்ப்பு, நான் பாடசாலைக் காலத்தின் பின்னர் இலக்கிய துறைக்குள் மீண்டும் பிரவேசிப்பதற்கு அடித்தளத்தாக இருந்த தமிழ் மாமன்றத்தினுடைய நிகழ்வு ஒன்றில்தான் கிடைத்தது. நிறைய கவியரங்களை பார்த்து சுவைத்ததனாலும், கவியரங்களில் பங்கு பற்றுவர்களினுடைய நெருங்கிய நட்பினாலும் கவியரங்கம் மீதான ஆர்வம் மிக அதிகமாகவே இருந்தது. கவிதைகளே ஓரளவுக்கேனும் எழுதத் தெரிந்த எனக்கு, என் கூட இருந்தவர்களுடைய உந்துசக்தி கவியரங்களில் பங்கு பற்றுக்கின்ற ஆர்வத்ததை மேலும் தூண்டியது. அதன் காரணமாக தொடாச்சியாக ஆலயங்களின் திருவிழாக்கள் நூல் வெளீயீடு மற்றும் பொது நிகழ்வுகளில் இடம் பெறுகின்ற கவியரங்களில் பங்கு பற்றி வருகிறேன். கவியரங்களில் கிடைக்கின்ற கைத்தட்டல்கள்தான் அதற்கான வெற்றி. அந்த வகையில் கவியரங்கம் சார்ந்த ஓர் திருப்திகராமான நிலை எனக்கு இருந்தாலும், இன்னும் அத்துறை சார்ந்து என்னை வளப்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். மேலும் முல்லைதீபன் அண்ணாவின் தலைமையில் அதிகளவான கவியரங்களில் பங்கேற்றுகிருக்கின்றமையால், அவர் போன்று, சந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கவிதைகளை எழுத வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டுள்ளது.

 
06. கவியரங்க கவிதைகள் எவ்வாறு அமையவேண்டும்? இதில் உங்களது முன்னோடி வழிகாட்டிகள் பற்றி?


கவியரங்க கவிதைகளென்று தனிச்சிறப்புண்டு. கவியரங்க மேடையிலே யாப்பு முறையில் எழுதப்படடவற்றை வாசித்து கொண்டிருப்பதில் பயன் கிடையாது என்பது என்னுடைய எண்ணம்.  காரணம் அரங்கத்தில் இருப்பவர்களுக்கு நாங்கள் என்ன சொல்லுகின்றோம் என்பது உடனடியாக புரிய வேண்டும். கவிதையினுடைய முதல் வரியிலியே அவை கவரப்பட்டு எமது கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். கவியரங்க தலைப்பிற்கும், கவியரங்கு நடக்கும் இடத்திற்கும், காலத்திற்கும் பொருத்தமாக கவிதை இருத்தல் வேண்டும். தலைப்பை பல்வேறு கோணங்களில் அணுகும் வகையிலும் அதே வேளை கேட்பவர் சலிக்காத வகையிலும், உடன் விளங்கிக் கொள்ளும் விதத்திலும், சுவைபட கவிதை அமைதல் முக்கியமானது. சந்தங்களிற்கும், நகைச்சுவையான வரிகளுக்கும் அதே வேளை சமூகம் சார்ந்த விடயங்களிற்கும் முக்கியத்துவம் கொடுத்து கவியரங்க கவிதைகள் அமைந்தால் நிச்சயமாக அனைவராலும் ரசிக்கப்படும்.
கவியரங்களிலே எனது முன்னோடி என்று பார்த்தால், மானசீகமாக எப்போதுமே கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்கள்தான். அவரை விட நேரடியாக நான் கவியரங்கத்தில் நுழைவதற்கு காரணமாகவும் எனக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் இருப்பவர் என்றால் தமிழ் மாமன்றத்தைச் சேர்ந்த மதுரகன் அண்ணாவைத்தான் குறிப்பிட முடியம். மேலும் தமிழ் மாமன்றத்தை சேர்ந்த சகோதர சகோதரிகளுனுடைய வழிகாட்டுதல்கள் என்றும் எனக்கு உந்துசக்தியாக இருக்கின்றது.


07. இலக்கியத்தில் நீங்கள் சாதிக்க நினைக்கும் விடயங்கள்?


இலக்கியத் துறைசார்ந்;த நிறைய கனவுகள் என்னிடத்தில் உண்டு. கவிதைகள் பற்றிய சரியான தெளிவோடு, கவிதை துறையில் ஓர் மைல்கல்லாக அமைகின்ற கவிதைத்  தொகுதியை வெளியிட வேண்டும். அத்துடன் சிறுகதைத் தொகுதியையும் வெளியிட வேண்டும். மற்றும் பேச்சுத் துறை சார்ந்த ரீதியில் மேலும் என்னை வளப்படுத்தி, சிறந்த ஓர் பேச்சாளாராக வர வேண்டும். இது போன்று இலக்கிய துறைசார் கனவுகளுக்கும் தேடலுக்கும் எனக்கு என்றுமே எல்லை கிடையாது.


08. உங்கள் குடும்பம் பற்றி?


என்னுடைய தந்தை கமநல சேவைகள் திணைக்களத்தில் கடமையாற்றி, தற்போது ஓய்வு பெற்றுள்ளார். அவர்தான் என்னுடைய இலக்கிய துறைசார்நத முதலாவது குரு ஆவார். எனது தாய், எப்போதும் என்னுடைய வழிகாட்டி. அவர்களை விட எனக்கு உந்து சக்தியாக இருக்கும் சகோதரி மற்றும் சகோதரன் ஆகியோர் கொண்ட குடும்பத்தில் கடைசிப்பிள்ளை நான்.


09. இன்றைய இளையவர்களின் படைப்புக்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?


இன்றைய இளையவர்களின் படைப்புக்கள் பற்றி சற்று எனக்கு முரண் கருத்தே உண்டு. ஆங்காங்கே சரியான வழிகாட்டுதல்களோடு, தரமான படைப்புக்களை இளம் படைப்பாளிகள் தந்தாலும் கூட, அதிகமான படைப்புக்கள், சரியான வழிகாட்டுதலின்றி பத்தோடு பதினொன்றான வருகின்ற படைப்புக்காளகவே இருக்கின்றது. சரியான வழிகாட்டுதலும் ஆலோசனைகளும், நேர்மையான விமர்சனங்களும் அவர்களுக்கு கிடைக்குமாக இருந்தால் தரமான படைப்புகளை அவர்களாலும் வெளியிட முடியம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.


10. "இப்போதெல்லாம் கணிசமான கவிதைகள், இலக்கிய வகையறாக்களுக்குள் உள்வாங்கப்படுகின்றது. சில படைப்புக்கள் எவ்வித திருத்தங்களோ ஆலோசனைகளோ இன்றி நூலாக்கம் பெறுகின்றது இது இலக்கிய தொய்வாக காணப்படுகின்றது" என பல மூத்தவர்களின் கருத்துகளாக இருக்கின்றது இது உங்களின் பார்வையில் எவ்வாறாகின்றது?


நிச்சமாக அவர்களுடைய கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். இன்று நூலக்கம் பெறுகின்ற சில படைப்புகளை எந்த வகைக்குள் அடக்குவது என்று தெரியவில்லை. இவ்வாறு நூலக்கம் பெறுகின்ற சில தரமற்ற படைப்புக்கள் இரண்டு விதமான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. ஒன்று அப் படைப்பை படைக்கின்ற படைப்பாளி, தான் படைக்கின்ற படைப்பு சரியானது என்ற ஓர் எடுகோளிற்கு வருகின்றார். அப் படைப்பின் பின்னால் அவருக்கு கிடைக்கின்ற பட்டங்களும், வாழ்த்துக்களும், கௌரவிப்புக்களும் அவரை ஓர் குறுகிய வட்டத்திற்குள் நிறுத்தி விடுகின்றது. அவருடைய தொடர்ச்சியான படைப்புக்களும் அந்த குறுகிய வட்டத்திற்குள்ளேயே வெளிவரப்போகின்றது. இது படைப்பாளி சார்ந்த பாதிப்பு. அடுத்தது சமூகம் சார்ந்த பாதிப்பு, அப்படைப்பு இலக்கிய துறையிலே வலம் வரப்போகிறது. எங்களுடைய அடுத்த அடுத்த தலைமுறை அந்த படைப்பை, அத்துறை சார்ந்த உதாராணமாக எடுத்துக்கொள்ளப் போகிறது. இதன் காரணமாக அவர்களும் அதே போன்ற படைப்பை வெளியிட சந்தர்பங்கள் உண்டு. நாம் அதன் காரணமாக எமது அடுத்த தலைமுறையும் பாதிப்பை எதிர்கொள்ளப்போகிறது. ‘நாம் செய்கின்ற ஒவ்வொரு தவறான செயற்பாட்டிற்கும் பின்னாலும் ஒரு தலைமுறையே தவறாக வழிநடத்தப்படுகிறது’ என்பதை படைப்பாளிகள் கவனத்தில் கொண்டால் தரமான படைப்புக்கள் வெளிவரும்.


11. விமர்சனங்கள், ஆலோசனைகள் எப்படியாக அமைய வேண்டுமென எதிர்பார்க்கின்றீர்கள்?


நேரடியாகவும் நேர்மையாகவும் விமர்ச‌னங்கள் அமைய வேண்டும். நிறைகளை மட்டும் குறிப்பிடாமல் குறைகளையும் சுட்டிக்காட்டுதோடு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகளை உள்ளடக்கிய வகையில் அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதே நேரம் நேர்மையான நடுநிலையான விமர்சனங்களையும், தரமான படைப்புகளை நோக்கி நகர்த்துகின்ற ஆலோசனைகளையும், பாரபட்சமின்றி ஏற்றுக்கொள்கின்ற மனநிலை படைப்பாளர்கிடையே உருவாக வேண்டும் அல்லது இன்னும் செம்மைப்பட வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறேன்.


12. மூத்த இலக்கியவாதிகளின் கருத்துக்களோடு இளையவர்களின் கருத்து எப்போதும் முரண்பட்டுக்கொண்டே இருப்பதனை அவதானிக்கமுடிகின்றது, இது எல்லா சந்தர்ப்பத்திலும் பொருத்தமாகுமா?


எல்லா சந்தர்ப்பங்களிலும் பொருந்தாது. ஆனால் அதிகமான சந்தர்ப்பங்களில் பொருந்தும். காரணம் தலைமுறைக்கிடையிலான கால இடைவெளியின் வித்தியாசம் சில மாற்றங்களை மன ரீதியிலே ஏற்றுக்கொள்ள முடியாமலிருப்பதே. மாற்றங்களை விரும்புகிறவர்கள் இளையவர்கள். மாற்றங்களை விரும்பாதவ‌ர்கள் மூத்தவர்கள். இருவரும் இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு புள்ளியில் இணைந்து பயணித்தால் முரண்பாடுகளைத் தடுத்து. இலக்கியம் எனும் வண்டி சீராக பயணிக்க வழிசமைக்கும்.


13. உங்களது அநுபவத்தின்படி மூத்தவர்களின் ஊக்கப்படுத்தல்கள் பற்றி?

நிச்சயமாக அவர்களுடைய ஊக்கபடுத்தல்களோ ஆலோசனைகளோ இன்றி இத்துறை சார்ந்த வெற்றிகரமாக எம்மால் பயணிக்க முடியாது. அந்த வகையில் மூத்தவர்களின் ஊக்கப்படுத்ததல்கள் எனக்கு கிடைத்திருக்கிறது கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதேநேரம், இளையவர்களை அரவணைத்து இலக்கியத் துறைக்குள்ளே அழைத்து செல்கின்ற, வளர்ச்சிகளைக் கண்டு பூரிப்படைகின்ற, இளையவர்களின் பயணத்திற்கு வழிவிட்டு, வழிபடுத்துகின்ற மனப்பக்குவம் இன்னும் ஏற்பட வேண்டுமோ என அவ்வப்போது தோன்றுவதும் தவிர்க்கமுடியாததே.


14. இலகுவாக கிடைக்கும் இணைய விருதுகள் பாராட்டுக்கள்  பட்டங்கள் பற்றி?


எதுவமே மலிவாக, இலகுவாக கிடைத்துவிட்டால் அதனுடைய மதிப்பு குறைவென்பது யாதார்த்தம். விருதுகள், பட்டங்கள் என்பவைகளை வாங்குவதற்கும் கொடுப்பதற்கும் தகுதி இருக்க வேண்டும். தகுதியற்ற கிடைக்கின்ற எதுவும் நிச்சமாக வெற்றியை நோக்கி நகர்த்தாது. 


15. இவ்வாரான விருதுகள் பல படைப்பாளிகளுக்கு ஊக்கப்படுத்தலாக அமைகின்றது என்ற கருத்தும் காணப்படுகின்றது உண்மையில் இது ஆரோக்கியமான ஒன்றா?

ஆரோக்கியமானது அல்ல. அதற்கு ஒரு வகையில் அவற்றை எந்த வகையில் படைப்பாளிகள் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதுதான் காரணமாக இருக்கிறது. இணைய விருதுகள், பட்டங்கள், பாரட்டுக்கள் படைப்பாளிகளிற்கு ஊக்கத்தைக் கொடுத்தாலும் கூட, அவர்களை ஓர் குறுகிய வட்டத்திற்குள் முடக்கி விடுவதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம். அவற்றை வெறும் அங்கீகாரங்களாக் கொண்டு அடுத்த அடுத்த படிநிலைகளில் பயணிக்க படைப்பாளிகள் தயாராக இருக்க வேண்டும்.


16. கவிதையுடன் ஒப்பிடுகையில் சிறுகதை இலக்கியத்தின் வருகை மிகக்குறைவே, இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள்? இதற்கான காரணம் என்ன?


சிறுகதை இலக்கியத்தின் வருகை குறைவு என்பதை விட கவிதையின் வருகை அதிகமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.
இதற்கான காரணம் படைப்பை நுகர்பவர்களே. கவிதையை விரும்பி வாசிப்பதைப் போல சிறுகதை இலக்கியத்தை விரும்பி வாசிப்பவர்கள் ஓப்பீட்டளவில் குறைவு. ஒரிரு வரிகளில் கருத்தை சொல்வதாக கவிதை அமைந்து விடுகிறது. குறுகிய நேரத்திற்கும் அதை அவர்களால் நுகர முடிகிறது. ஆதாலல் அதை நோக்கியே படைப்பாளிகளும் சரி வாசகர்களும் சரி நகர்த்தப்படுகிறார்கள். இன்னொரு காரணம் புதுக்கவிதையின் வரவிற்கு பின்பு, கவிதை எவரும் எழுதிவிடாலம் என்ற ஓர் துர்ப்பாக்கிய நிலைமையும்தான்.


17. பேசப்படக்கூடிய, காலத்தால் அழியா இலக்கியத்திற்குரிய பண்புகளாக இன்றைய இளையவர்களுக்கு கூற நினைக்கும் பண்புகள் பற்றி?

எங்களுடைய இலக்கியம் என்பது எங்களுடைய வாழ்க்கையை எங்களுக்கு சொல்வது. இலக்கியத்திற்கென்று ஒரு பார்வை, ஒரு நோக்கு, வரையறை, உத்தி முதலிய எல்லாம் இருக்கின்றன. தொன்மை வாய்ந்த இலக்கியங்களை தாங்கி வந்த நாம், அவற்றை சிதைக்காது, அப் பாதையை விட்டு விலாகது, இந்த காலத்தினுடைய அம்சங்களையும் அத்துடன் ஆரேக்கியமான முறையில் இணைத்து பயணிப்பாதாக அமைய வேண்டும் என கருதுகிறேன்.
கவிக்கோ சொன்னது போல 
“கவிஞன்
காலத்தால் செய்யப்பட்டவன் அல்லன்
காலத்தைச் செய்பவன்”
இது கவிஞனுக்கு மட்டுமல்ல எந்த ஒரு படைப்பாளிக்கும் பொருந்தும். காலத்தை அழிக்காத காலத்தைச் செய்கின்ற பண்புகளைக் கொண்டமைந்தால்  போதுமானது.


18. ஈழத்து இலக்கிய படைப்பாளிகளில் உங்களை கவர்ந்தவர்கள்?

எஸ்.பொ, சிற்பி, செங்கை ஆழியன், கவிஞர் முருகையன், கவிஞர் நீலாவணன், கம்பவாரிதி இ.ஜெயராஜ், ஷோபா சக்தி, ஜே.கே



19. எவ்வகையான  விடயங்களை உங்களது  படைப்புக்களில் முன்னிறுத்த  நினைக்கின்றீர்கள்? நீங்கள் விரும்பும்  சமூக மாற்றங்கள்?


படைப்பாளியினுடைய படைப்புக்கள் ஒன்று அனுபவங்களினூடக பிறக்கின்றது. இன்னொன்று கற்பனையினூடு பிறக்கின்றது. இந்த இரண்டு விதங்களிலும் என்னுடைய படைப்புக்கள் உருவாக வேண்டும் என நினைக்கிறேன். எங்களுடைய சமூகம் சார்ந்து ஏற்பட வேண்டிய நல்ல மாற்றங்களை வாசகர்களிடத்தே கொண்டு செல்ல வேண்டும். நாங்கள் கடந்த வந்த பாதைகளைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டு அதற்குள் வாசகர்களை நிறுத்திவிடாமல், அடுத்த படிநிலைகளில் அவர்களை அழைத்துச் செல்லுகின்ற விதத்திலே எனது படைப்புக்கள் அமைய வேண்டும் என கருதுகிறேன். அத்துடன் வாசகன் நினைத்துப் பார்க்க முடியாத, அனுபவித்திராத கற்பனை உலகத்திற்கும் அவனை அழைத்து செல்லுகின்ற படைப்புக்களையும் உருவாக்க வேண்டும் என நினைக்கிறேன்.
சமூகம் சார்ந்து இன்றைய உலகிற்கேற்ப, அதே நேரம் எங்களுடைய வழிமுறைகளிலிருந்து விலகாத மாற்றங்களை நான் விரும்புகிறேன். தீய பழக்கங்களிலிருந்து விடுபட்டு, பெண்களுக்கெதிரான வன்முறைகள் அற்ற, சமூக அக்கறை கொண்ட, தன் சார்ந்த மட்டுமல்லாமல் இந்த சமூகம் சார்ந்து சிந்திக்கின்ற, மனிதநேயம் மிக்க மனிதர்களை முற்றுமுழுதாக கொண்டதான ஓர் நல்ல மாற்றத்ததை நான் விரும்புகிறேன்.


20. பெண்களுக்கெதிரான  வன்முறைகள்  பற்றி சொல்ல விரும்புவது?


“மொட்டுக்கள் விரியும் முன்பே – சில
மூடர்கள் கையில் சிக்கி
பழி தீர்ப்பிற்காய் அற்ப ஆசைக்காய்
பலியாகும் செய்தி வெறும் செய்தியாகவே தொடர்கிறது…!” 

இது என்னுடைய ‘கருகும் மொட்டுக்கள்’ என்ற கவிதையில் இடம்பிடித்த வரிகள்.
பெண் என்பவள் இந்த உலகத்திலே மதிக்கப்பட வேண்டியவள். அவர்களை வெறும் போகப் பொருள்களாகவோ, உடலங்களாகவோ பார்க்கின்ற பார்வை மாற வேண்டும். இன்றைய காலகட்டத்தில், பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகமாகவே இருக்கின்றன. அவைகளை தண்டனைகளினால் மட்டுமே தவிர்க்க முடியுமா எனத் தெரியவில்லை. வன்முறைக்கான அடிப்படை காரணங்கள் கண்டறியப்பட்டு, அடிப்படையிருந்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

“மலராகும் மொட்டுகள்
மனிதாபமின்றி மண்ணோடு  போகுதே
மனிதமே நீயிருந்தால் கருக்காமல் விடு
மலராகத் துடிக்கும் நம் மொட்டுகளை…!”


21. இன்றைய  பெண்களின் எல்லா துறைகளிலுமான வளர்ச்சி  பற்றியும் அவர்களின் நாகரிக போக்குகள் பற்றி நீங்கள்  சொல்லவிழைவதும்?


வளர்ச்சி நாகரீகப்போக்கு இரண்டும் இரு திசைகளில் பயணிப்பதாக நினைக்கிறேன். பெண்களினுடைய எல்லாத் துறைகளிலுமான வளர்ச்சி உண்மையாக மேம்பட்டு இருக்கின்றது. எந்த துறையை எடுத்துக்கொண்டாலும் அங்கு பெண்களின் விகிதாசாரம் அதிகமாகவே இருக்கின்றது. சமூகம் சார்ந்து பெண் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை கடந்து அவளால், ஆண்;களுக்கு நிகராக எல்லாத் துறைகளிலும் பிரகாசிக்க முடிகின்றது என்றால் அது நிச்சயம் பெருமைப்படக்கூடிய விடயம்.
வளர்ச்சி இப்படி ஒருபுறம் சிறப்பாக இருந்தாலும், நாகரீகப் போக்குகள் தொடர்பாக பெண்கள் சற்று நல்  மாற்றங்களை நோக்கி நகர வேண்டுமோ எனத் தோன்றுகிறது. இன்றைய நாகரீக உலகம் பெண்களை மட்டுமல்லாமல், ஆண்களையும் தவறான பாதைகளுக்குள் இட்டுச்செல்வதற்கான வழிவகைகளே அதிகம். துறை சார்ந்து வளர்ச்சியடையக்கூடிய தன்னம்பிக்கையும், சமூக சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடிய மனப்பக்குவமுடைய இன்றைய பெண்களால், நாகரீக மாற்றத்தின் சில தவறான விடயங்களிலிந்து நிச்சயமாக விடுபட முடியும். ஒவ்வொரு பொண்ணும், தன் சர்ந்த வரையறைகளோடும், சுய கட்டுப்பாடுகளோடும் பயணிக்க நினைத்தால், நாகரீக மாற்றங்களை எதிர்கொண்டு பயணிக்க முடியும் என கருதுகிறேன்.


22. எமது  வாசகர்களோடு  பகிர்ந்துகொள்ள  நினைப்பது?


என்னுடைய கவிதைகளின் சில வரிகளினுடாக சில விடயங்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.

“எழுத்தை எழுதி நூலாய்க் கோர்த்து
எண்ணிய இடம் செல்ல
எடுத்த காலம் கடந்து
எண்ணிய நொடியில் எழுத்தை
எண்ணியபடி எழுதிக் கொள்ள கிடைத்த
ஏடு இணையம்…!”

இன்றைய எழுத்துக்களுக்கான களத்தினை இணையம் தந்திருக்கின்றது.
இன்றைய இணைய உலகிலே எழுத்தாளர்களுக்கும் இணைய வாசகர்களுக்கும் சமூகம் தொடர்பான மிகப்பெரிய பொறுப்பு உண்டு. எழுத்ததாயும் மட்டுமே நம்மிடம் எஞ்சியுள்ளது. இணைய மற்றும் சமூக வலைத்தள வரவிற்கு பின்னர் எவரும் எழுதாலாம் என்ற நிலைமை  ஏற்பட்டுவிட்டது. இதற்கு வாசகர்களும் ஒருவித காரணம் என நினைக்கிறேன். ஆகவே தரமான எழுத்துக்களுக்கான ஊக்குவிப்புகளையும், தரமற்ற எழுத்துக்களை செம்மைப்படுத்துகின்ற கருத்துக்களையும் வாசகர்கள் தருவதற்கு தயாராக இருக்க வேண்டும். வாசகர்காள்தான் எப்போதும் படைப்பாளியினுடைய வழிகாட்டிகள்.

“அழியாத எழுத்துக்களை
அழகழகாய் செதுக்கிடுவோம்
அடுத்த அடுத்த தலைமுறையும்
நம் எழுத்தின் சுவட்டை பின் தொடரட்டும்”

No comments: