Saturday, April 27, 2013

ஆண்களின் இதய அகராதியில் பெண்களின் அர்த்தம் இதுவா?


?????????????????????????????????????????????????????????????????????????????????????????????




இதயத்தில் நீண்ட நாட்களாக கனன்று கொண்டிருந்த ஒரு விடயம். இதனை மூன்று சம்பவங்களினூடாக சந்தித்தேன் அவை எரிந்த சுவாலைக்குள் எண்ணையை வார்த்துவிட்டுக்கொண்டிருந்தாலும் எப்படி ஆரம்பிப்பதென்று வார்த்தைகளை தேடிக்கொண்டிருந்தேன். ஆனால் அதன் அவசியம் இன்றென்னை பலவந்தப்படுத்தியது எப்படியும் இதனை எழுதவே வேண்டுமென்று. விடயத்தை சொல்லி ஒவ்வொன்றையும் என் அறிவுக்கெட்டியவரை விபரிக்கின்றேன் சாதக பாதக, உடன்பாட்டு எதிர்வினைக்கருத்துக்களோடு நீங்களும் இதில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.


சமூகத்தை அலைக்கழித்துக்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சனையும் முற்போக்கு சிந்தனையின் உச்சகட்ட வளர்ச்சியினாலும் தொழிநுட்ப நாகரிக வளர்ச்சியின் மிதமிஞ்சிய அபகரிப்பினாலும் தண்டவாளம் விட்டு தாண்டவமாடுகின்ற ஓர் அவலத்தையே இங்கு பதிய விளைகின்றேன்.ஆண் பெண் உறவுமுறையின் அநிச்சையான போக்கு வழிசமைத்துத்தந்த விபரீதத்தை விலாசமிட நினைக்கின்றேன்.

நான் குறிப்பிட நினைக்கும் விடயத்தின் மூலங்கள் மூன்றும் இவைதான்,



01.எனது அலுவலகத்தின் சக பெண் உத்தியோகத்தரின் தோழிக்கு நடந்த சம்பவம்

02. எனது குடியிருப்புக்கு அருகில் தற்காலிகமாக வந்து குடியேறிய ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு நடந்த சம்பவம்

03. ஓர் ஆண் பத்திரிகையொன்றுக்கு எழுதியிருந்த கேள்வி

                 இவை மூன்றும்தான் இன்றெந்தன் அவஸ்தையை அதிகப்படுத்தியது.






ஆண் பெண் நட்பு, காதல் போன்ற விடயங்களில் இன்று எத்தனை வீதமான உண்மை இருக்கின்றது என நிச்சயித்துக்கூறமுடியாது ஏனெனில் 90% மான இணைப்புக்கள் வெறுமையான போலிகளை மட்டுமே சுமந்துகொண்டிருக்கின்றன என்பதனை ஆயிரம் உதாரணங்கள் கூறி நிரூபித்திடமுடியும் ஆனால் நானிந்த மூன்று விடயங்களை மாத்திரமே கையிலெடுக்கின்றேன்.

என் சக அலுவலக உத்தியோகத்தர் பானு அவரது பால்ய சிநேகிதிகள் நிலுகா(சகோதர மொழி பேசுபவர்), ரேணு. இவ்விருவரும் ஆடைவிரும்பிகள் இவர்கள் இருவரும் பிரபலமான நகரத்தில் குறிப்பிட்ட அந்தக்கடைக்கு செல்வது வழக்கம். கடை உரிமையாளரோ(தமிழர்) ரேணுவுக்கு தெரிந்த நண்பர் என்பதால் நிலுகாவும் அவனுடன் நட்பானாள் நாளடைவில் அதுவே காதலாக உருமாறியது. முழுமையான அன்புடனும் நம்பிக்கையுடனும் (அப்படி அவள் நினைத்துக்கொண்டாள்)தொடர்ந்த அவர்களது காதல் விவகாரம் ரேணுவுக்கு தெரியாது. நிலுகாவை அவன் மணம் செய்துகொள்வதாகவும் தனக்கு ஒரு வாழ்வென்றால் அது உன்னோடுதான் என்றும் அவளை சந்தித்தது தான் செய்த புண்ணியம் என்றும் பல்வேறு வார்த்தைக்களினூடாக அவளது நம்பிக்கைக்கு பாத்திரமானான். தன்னை உயிராக நேசிக்கும் அவனை தன் உலகென வலம்வந்தாள் எல்லாமே அவன் மட்டும்தான் என்ற முழுமையான நிலையில் அவனிடம் தன்னையே இழக்கநேரிட்டுள்ளது. அந்நிலையில் ஒருநாள் அலுவலகம் வந்தவேளையில்தான் நிலுகாவின் உலகம் அவள்தலைமீதே வந்துவிழுந்தது ஆமாம் ரேணுவின் கையில் அவளது தோழன் அந்த கடை உரிமையாளனது திருமணப்பத்திரிகை. தன்னை சுதாகரிக்கத்தெரியாதவளாய் பானுவை குளியலறைப்பக்கம் அழைத்தாள் விபரமொன்றுமறியாத பானு அவள்பின்னே ஓடினாள்  பானுவிடம் எல்லா விடயங்களையும் சொல்லி கதறியழுத நிலுகாவை தேற்றினாள் அவனுக்கு திருமணமும் நடந்தேறியது. சமூகத்துக்கும் குடும்பத்தின் கெளரவத்துக்கும் பயந்து அவள் தனது கர்ப்பத்தை கலைத்தாள் தன் காதலோடு சேர்த்து ஆனாலும் தன்னால் எதனையும் மறக்கமுடியவில்லையென்று இன்று தன 40வது வயதிலும் தனிமரமாக அதுவும் பட்டமரமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றாள். இது என் கற்பனையோ அல்லது இவ்விடயத்தை உணர்த்துவதற்காக நான் புனைந்த உருவகக்தையோ அல்ல 100% உண்மைக்கதை.






அடுத்தவிடயம் அந்த கர்ப்பிணிப்பெண். முதல் கதைபோலவே இவளும் அவனது நம்பிக்கை வார்த்தைகாளால் தன் பெண்மையை இழந்தவள் ஆனால் இப்பெண்ணுக்கு பெற்றார் இல்லை உறவினர்களின் பராமரிப்பில் வளர்ந்தவளுக்கு அவனது நட்பு/ காதல் ஆலையில்லா ஊருக்கு இழுப்பம்பூவைப்போல இருந்தது. கர்ப்பத்துக்குப்பின்னர் அவனுக்கு காதல் கசக்க அவளை அநாதரவாக விட்டுவிட்டு ஊரைவிட்டு சென்றுவிட்டான் இந்த விவகாரம் காரணமாக நீதிகிடைப்பதற்காகவே அவள் அவனைதேடி வந்திருக்கின்றாள் (அவளது உறவினர்களும் அவளை ஏற்கமுடியாதென்று கூறிவிட்டனர்) அக்கம்பக்கத்து மக்களின் உதவியுடன் காவற்துறையில் முறையீடு செய்து அவளது குழந்தைக்கு தந்தை அவன் தான் என்று உலகத்துக்கு கூறுவதற்காக மட்டும் அவனுடன் பதிவுத்திருமணம் செய்துகொண்டாள்.









மூன்றாவது விடயம், அண்மையில் ஒரு பத்திரிகையில் பிரசுரமான ஓர் ஆணின் கேள்வி. அது இதுதான், " நான் பெருமைக்காக சொல்லவில்லை எனக்கு பலபெண்களுடன் தொடர்பு இருக்கின்றது ( அடி செருப்பால நாயே இது உனக்கு பெருமையா??? மனதுக்குள் கச‌ந்துகொண்டேன்) ஏன் பெண்கள் மிக இலகுவாக தங்கள் உடலை கொடுக்க முன்வந்துவிடுகின்றார்கள்? " என்பதுதான். இந்த ராமனில் கேள்வியில் பதில் சொன்னவர் ஒரு பெண்ணாயிருந்தால் ஆடிப்போயிருக்கவேண்டும் அவர் நிதானமாக ஒரு பதிலை முன்வைத்திருந்தார் " பெண்களுக்கு முழுமையான நம்பிக்கை கிடைத்தபின் அதற்கு பிரதியுபகாரமாக தன்னிடம் உள்ள மேன்மையானதை கொடுக்கவிரும்புவாள் தன்னைவிட அவளிடன் வேறெதுவும் பெரிதாக தெரிவதில்லை எனவேதான் தன் அன்பை காதலை வெளிப்படுத்த நம்பிக்கையின் உச்சகட்ட வெளிப்பாடாக இவ்வாறு நடந்துவிடுகின்றது" என தனது பதிலை தந்திருந்தார்.




ஆக காதல் (நாம் மிகப்புனிதம் என நினைத்துக்கொண்டிருந்தது) என்பது தனது உடல் தேவையை பூர்த்திசெய்து கொள்ளும் ஓர் வழிமுறையாக கையாளப்படுவதையே இன்றை காதல்விவகாரங்கள் உணர்த்திநிற்கின்றது. ஆனால் நான் காதலைப்பற்றி பேசவரவில்லை உண்மையான காதல்களும் இங்கு இல்லாமலில்லை (பொறுக்கியெடுத்தால் ஒரு 20%).



ஒரு ஆண் தன் காதலியுடன் பழகும்போது எவ்வாறான மனநிலையுடன் நெருங்குகின்றான் பெண்ணை வெறும் உடல்தேவைக்காக மட்டும் பயன்படுத்தும் பொருளாகவே அவனது பார்வையை மதிப்பிடலாமா? இங்கு நான் குறிப்பிட்ட விடயங்களின் மூன்று ஆண்களுமே ஒரேவிதமான மன இயல்பை கொண்டவர்களாகவே என்னால் பார்க்கமுடிகின்றது. உண்மையில் ஒரு பெண் தனக்கு நம்பிக்கையானவன் தன் எதிர்காலத்தில் இவன்தான் என ஒருவனை முழுமையாக நம்புமிடத்து தன்னை எல்லா வகையிலும் அர்ப்பணிக்க தயாராகவே இருக்கின்றாள் இதனாலேயே பல நம்பிக்கை துரோகங்கள் மிக இயல்பாக நடந்தேறிவிடுகின்றது.(இதில் 'நீ என்னை நம்பவில்லையா என்ன இது தொடுவதற்குகூட எனக்கு உரிமையில்லையா?' என்ற பாசாங்கோடு நாடகத்தில் உணர்ச்சிமிக்க வரிகளையும் போட்டுக்கொ(ல்)ள்வார்கள்)  இங்கு அந்த மூன்றாவது சம்பவத்து ராமனின் எண்ணவோட்டத்தைப்பார்த்தால் பெண்கள் எல்லோரும் கொஞ்சம் பழகியவுடன் படுக்கையை பகர்ந்துகொள்வார்கள் என்ற கீழ்த்தரமான சிந்தனையுடனேயே பெண்களை பார்க்கின்றார் அவரது பார்வையில் பெண்கள் வெறும் தீனிப்பொருள் அவ்வளவுதான். ஆனால் அந்தப்பெண் இவ்வாறானதொரு நிலமைக்கு வருவதற்கு தன்னுடைய பிழையினை அவனால் உணர்ந்துகொள்ளமுடியவில்லை. அவனால் எவ்வாறான வார்த்தைகள் வழங்கப்பட்டிருக்கும் அவளின் எதிர்காலத்துக்கான வாக்குறுதிகள் எத்தனை உறுதியாக சொல்லப்பட்டிருக்கும் என உங்களாலும் என்னாலும் புரிந்துகொள்ளமுடியும்  என நினைக்கின்றேன்.











பெண்ணானவள் அவளது காதலைத் தன் வாழ்க்கையாக நினைப்பவள் இவன்தான் தன் எதிர்காலம் என அவளுக்கான நம்பிக்கைவருமிடத்து எதனையும் செய்ய துணிபவளாகவே தன்னை இனங்காட்டுகின்றாள் இதுவே ஆண்களுக்கு இலகுவாகிப்போய்விடுகின்றது. உண்மையில் இங்கு நம்பிக்கை என்பது பிழையா அல்லது காதல் என்பது பிழையா? ஆண்கள் பெண்களை வெறும் படுக்கைக்கு பயன்படுத்தப்படும் பொருளாக அல்லது தேவையாக மட்டுமா பெண்களைப்பார்க்கின்றார்கள்? அவர்களது இதய அகராதியில் பெண்கள் என்பவர்கள் இத்தனை மலிவான அர்த்தத்திலா மதிக்கப்படுகின்றார்கள் என்ற என் வினாக்கள் நீள்கின்றது விடையில்லாமல். இவ்விடயம் படித்த படிக்காத பெரிய உத்தியோகம் கூலித்தொழில் என்பவையான எந்த பாகுபாடுமின்றித்தான் பார்க்கவேண்டும் ஏனெனில் எந்தத்தரத்தில் இருந்தாலும் இவர்களுக்குள் இவ்விடயத்தில் ஒரேவிதமான பார்வை இருப்பதாகத்தான் என்னால் அவதானிக்கமுடிந்தது.


இங்கு காதலிக்கும்போது உடல்ரீதியான தொடர்பு சரியென்று  நான் வாதிடவர‌வில்லை அதற்கு தூண்டுதலாயிருக்கின்ற காரணியை வெளிப்படுத்தியுள்ளேன் அவ்வளவுதான். இந்த நம்பிக்கை துரோகங்களை எப்படி நியாயப்படுத்துகின்றார்கள், பெண்கள் மீதான பலியாக சுமத்தப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நம்பிக்கை என்ற ஒரே ஒருவிடயம்தானா ஏமாற்றத்தின் திறவுகோலாக காணப்படுகின்றது?



இதற்கெல்லாம் ஒரே தீர்வாக பெண்கள் மீதான பார்வை மாறவேண்டும் அவர்களை உணர்வுள்ள இதயமுள்ளவர்களாக பார்க்கவேண்டும். தாங்கள் வழங்குகின்ற நம்பிக்கை வார்த்தைகளுக்கு உண்மையாக இருக்கவேண்டுமென்று மனதளவிலாவது நினைக்கவேண்டும். காதல் ஓர் அழகான விடயம் பல நல்ல சமூக மாற்றங்களை நிகழ்த்தக்கூடிய அருமையான விடயம் அதனை இதுபோல கீழ்த்தரமான காரியங்களால் நாம் மாசுபடுத்திவிட்டோம் அத்துடன்  பெண்கள் மிக நிதானமாக கவனமாக ஆண்களுடன் பழகவேண்டும் எடுத்த எடுப்பிலேயே அவர்களின் அத்தனை வார்த்தைகளுக்கும் ஆமாசாமி போடக்கூடாது என்பதுதான் என்னால் இதிலிருந்து உணரமுடிந்தது.





இதெல்லாம் பார்க்கும்போது காதலிக்காமல் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை கட்டிக்கொண்டு செல்வது எல்லாவற்றிற்கும் சிறந்ததுபோல் விளங்கிகின்றது அப்பாகிட்ட உடனே சொல்லனும் நீங்க பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே என்று.







Saturday, April 20, 2013

அறிவிப்பாளினி நாகபூசனி. (20.04.13)


http://ta.indli.com/v/1096485



வெற்றிக்கு காரணம் அவையடக்கமும் தலைக்கனமின்மையுமே: நாகபூசனி


ஆன்மீகம் தொலைத்து அனாச்சாரங்களை கட்டிக்காக்கும் கலியுகத்தில் ஒருவரையொருவர் குற்றவாளியாக்கி குதறுகின்ற நிலை. யார் யாரை திருத்துவது யார் யாருக்கு புத்தி புகட்டுவது என சமூகநிலை குறித்து வெதும்புகின்றார் இலங்கையின் ஒலி, ஒளிபரப்புத்துறையில் பிரபல மூத்த பெண் அறிவிப்பாளினியான நாகபூசனி.


வசந்தம் தொலைக்காட்சியின் 'தூவானம்' நிகழ்ச்சி தொகுப்பாளினியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் அறிவிப்பாளருமான இவர் பெயர்சூட்டக்கூடிய ஒருவராக இத்துறையில் தடம் பதித்துள்ளார். அறிவிப்பாளர், கவிஞர், எழுத்தாளர், விரிவுரையாளர் என்ற பன்முகங்களைக்கொண்ட இவர் சிறந்த நடிகையாகவும் பல விளம்பரங்களில் தோன்றியுள்ளார். அண்மையில் அவரை சந்தித்தபோது எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்களை துருவம் வாசகர்களுக்காக‌  தருகின்றோம்.

கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகத்தினை எமது துருவத்தின் வாசகர்களுக்கு கூறுங்களேன்? 

பதில்: நான் நாவல்நகர் கதிரேஷன் கல்லூரியில் உயர்தரம்வரை கற்று யாழ். ப்பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்புக் கலைமாணி பட்டம் பெற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமாவையும் பூர்த்துசெய்துவிட்டு தற்போது  நீங்கள் நன்கறிந்த இலங்கை வானொலி தென்றலின் நிரந்தர அறிவிப்பாளராகவும் வசந்தம் தொலைக்காட்சியின் 'தூவானம்' நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றேன்.

கேள்வி: அறிவிப்புத்துறையில் பெற்றுக்கொண்ட‌ அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்?

பதில்: அனுபவம் நமக்கு சிறந்த ஆசான். உலகம் என்கின்ற கல்விக்கூடத்தில் மரணம்வரை கற்கவேண்டியவை. கற்கவேண்டிய மனித மனங்கள் ஏராளம். அறிவிப்புத்துறை என்கின்ற சாகரத்தில் நீந்திக் கால்பதித்த பின்னும் இந்த கலைக்கூடத்தினை கற்பதே ஒரு புதிய அநுபவமாகத்தான் இருக்கின்றது. மிகத்தொலைவிலிருந்து நான் நேசித்த வானொலி, நான் ரசித்த குரல்கள் அருகே நெருங்கியதும் ஏற்பட்ட பிரமிப்பு, உலக அறிவிப்பாளர்களுக்கே அன்னையாய் திகழும் தாய் வானொலியின் துறைசார் ஜாம்பவான்களிடம் பயிற்சி பெறும் வாய்ப்பு, செய்தி என்பது எப்படி, அறிவிப்பு விளம்பரம் என்பன பற்றியெல்லாம் பயிற்றுவிக்கப்பட்டு பட்டைதீட்டப்பட்டு ஒவ்வொரு படியாக முன்னேறும்போது வரவேற்பும் உண்டு எதிர்ப்பும் உண்டு. இவையெல்லாமே இன்றுவரை தொடரும் எனதான அற்புதமான அனுபவங்களே.


கேள்வி: உங்களுடைய அறிவிப்புத்துறை சார்ந்த பணிகள் பற்றி கூறமுடியுமா?

பதில்: இலங்கை வானொலி கண்டிச் சேவையில் அறிவிப்பாளராகவும் கல்விச் சேவையில் தயாரிப்பாளராகவும் அதேவேளை சுயாதீன தொலைக்காட்சி மற்றும் ரூபவாஹினியின் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியிருக்கின்றேன். பல விளம்பரங்களில் தோன்றியுள்ள நான் மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகின்றேன். ஊடகம் சம்பந்தமான கற்கை நெறிகளுக்கு அவ்வப்போது விரிவுரையாற்றச் செல்வதுமுண்டு. கையடக்கத்தொலைபேசி இணைப்பில் (டயலொக்) உங்களுக்கு செய்தியும் கூறியிருக்கின்றேன்.

கேள்வி: இன்றுவரை இத்துறையில் நிலைத்து நிற்கும் வெற்றியின் ர‌கசியம் பற்றி?

பதில்: இந்த இரகசியம் வெற்றியாளராய் என்னை நீங்கள் குறிப்பிடக் காரணமான ரசிகர்களிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டியது. வெற்றி என்பது முதலிடமென்பதும் நிரந்தரமானதல்ல என்று கூறப்பட்டாலும் சில மனிதர்கள் எப்போதும் வெற்றியாளராக முதலிடத்தில் திகழக்காரணம் அவர்களின் அவையடக்கமும் தலைக்கனமின்மையுமே என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

கேள்வி: நீங்கள் கடந்துவந்த துறைசார்ந்த பாதையில் கசப்பான அல்லது மறக்கமுடியாத சம்பவங்கள் ஏதேனும் இருக்கின்றதா?

பதில்: கசப்பான மருந்துகள்தானே கடுமையான நோய்களை குணப்படுத்தும். இனிப்பை பகிர்ந்தளித்தால் மகிழ்ச்சி. எனவே, இனிமைதராத கசப்பை பகிர்ந்துகொள்ள வேண்டாமே.


கேள்வி: சினிமா தவிர்ந்த கலை, இலக்கியம் சார்ந்த நம்நாட்டு படைப்புக்களுடன் கூடிய நிகழ்ச்சிகளுக்கு நேயர்களிடையே எப்படியான வரவேற்பும் பங்களிப்பும் காணப்படுகின்றது?

பதில்: இப்போதெல்லாம் பொழுதுபோக்கு அம்சங்களே அதிகம் வரவேற்கப்படுகின்றன என்ற கூற்றை பொய்ப்பிக்கும்படி நேயர்களின் பங்களிப்பு நல்ல பல நிகழ்ச்சிக்கு கிடைக்காமலில்லை. உதாரணமாக 'அந்திநேரச் சிந்துகள்' என பல வருடங்களுக்கு முதல் நான் படைத்த இலக்கிய நிகழ்ச்சிக்கு இன்று தமிழமுதம் என்ற பெயரில் நேயர்களின் பங்களிப்போடு ஒலிபரப்பாகின்றது. இதன்மூலம் இலக்கியதேடல்களில் ஈடுபடுகின்றார்கள் என் அன்பு நேயர்கள் என கூறமுடியும்.

தேடித்தேடி வாசிக்க வேண்டும் அதிலே சிறந்தவற்றை பொறுக்கியெடுத்து தமிழன்னைக்கு சூட்டவேண்டுமென்று இலக்கிய உலகுக்கு தம் பங்களிப்பை வழங்குகின்றார்கள். செவிமடுத்தல், கற்றல், படைத்தல், தேடல் என நேயர்களது பயணம் ஆரோக்கியமானதாய் அமைகின்றது. உலகம் இயந்திரமயமானாலும் மேலைத்தேய நாகரிகம் குழிபறித்துக் கொண்டிருந்தாலும் இதயத்தின் ஈரமும் பண்பாட்டின் பக்குவமும் விழுமியத்தினை விழுந்துவிடாமல் காக்கின்றன என்றுதான் சொல்லவேண்டும். அதனால்தான் கலை இலக்கியம் சார்ந்த படைப்புக்கள் இன்றும் கரகோஷத்தைப் பெறுகின்றன.

கேள்வி: அறிவிப்புடன் எழுத்துத்துறையிலும் உங்களுடைய திறமை பதிக்கப்பட்டுள்ளது. அந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்?

பதில்: சின்னஞ்சிறு வயதுமுதல் வாசிப்பில் நிறைந்த ஆர்வம். அம்புலிமாமாவில் தொடங்கியது விபரம் புரிந்த வயதில் அதுவே கவிதை கதை எழுத அடித்தளமிட்டிருக்கலாம். பாடசாலைக் காலத்தில் நானே எழுதி நான் மட்டும் சுவைத்து யார் கண்ணிலும் பட்டுவிடாமல் அழித்தொழித்தது பசுமையாய் இன்னும் நினைவில் நிற்கின்றது. பாடசாலைக்காலம் முடிய எழுத்தில் திரும்பிய கவனம் பத்திரிகை, சஞ்சிகை, வானொலி என்பவற்றுக்கு கவிதை, கதை, நாடகம், கட்டுரை என்ற இலக்கியநயமாக வலம்வந்தது. அதன் தொகுப்பாக 'நெற்றிக்கண்' என்ற எனது கவிதைத்தொகுப்பு பிரசவமானது.


கேள்வி: வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் இளையவர்களின் வருகையும் வேகமும் துரிதமாக காணப்படும் அதேவேளை குறுகிய காலத்திலேயே அவர்கள் பின்வாங்கிப்போகும் நிலை காணப்படுகின்றது. இதற்கான காரணம் என்ன?

பதில்: இளையவரோ, மூத்தவரோ எவராயிருப்பினும் தான்சார்ந்த துறையில் தம்மை வளர்த்துக்கொள்ள தவறிவிட்டால் காணாமல்போய்விட வேண்டியதுதான். நேயர்களால் சிறப்பான ஒருவராக இனம்காணப்படும் பட்சத்தில் ஒரு அறிவிப்பாளனுக்கு நிச்சயமாய் நிரந்தர இடங்கிடைக்கும். வருடக்கணக்கில் துறைசார்ந்திருந்தும் இடம்பிடிக்காதவர்களும் உண்டு வந்தவுடன் தமக்கென தனிமுத்திரை பதித்தவர்களும் உண்டு. பலாத்காரமாய் பாராட்டினை பெற்றுவிட முடியாது. தகைமை திறமை மொழியாற்றல் இருந்தால் வெற்றிநிச்சயம்.

கேள்வி: பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு தூண்டுகோலாக, பெண்களிடமும் குறைபாடுகள் இருக்கிறதா அல்லது இதற்கான முழுப்பொறுப்பும் சமூகத்திடம்தான் காணப்படுகின்றதா? இதில் உங்களது நிலைப்பாடு எப்படியாக இருக்கின்றது?

பதில்: ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப்போல இதற்கும் நாம் இருபக்கங்களுமே காரணம் என்றுதான் கூறவேண்டும். தீ நம்மை தீண்டும்வரை கண்டும் காணாதிருந்துவிட்டு சுட்டவுடன் அலறித்துடிக்கும் நிலையே இயல்பாகிவிட்டது. ஆன்மீகம் தொலைத்து அனாச்சாரங்களை கட்டிக்காக்கும் கலியுகத்தில் ஒருவரையொருவர் குற்றவாளியாக்கி குதறுகின்ற நிலை. யார் யாரை திருத்துவது யார் யாருக்கு புத்தி புகட்டுவது?

கேள்வி: எதிர்காலத்தில் உங்களுடைய இலட்சியமும் உங்களுக்கு கிடைத்த வெற்றியின் மகுடங்கள் பற்றியும் கூறுங்கள்? 

பதில்: ஒரு இலக்கைவைத்து நான் பயணிக்கவில்லை. இட்டாருக்கு இட்டபடி ஈசன் செயலே என்பது என் நம்பிக்கை. நிறைய கற்கவேண்டும் நான் சார்ந்த துறையில் என்சேவை ஒப்பற்றதாயிருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். வெற்றியின் மகுடம் என்பது விருதெனக்கருதினால்,

கலாசார அமைச்சினால் சிறந்த செய்திவாசிப்பாளருக்கான விருது, கலாசார அமைச்சினால் சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான விருது, மத்திய மாகாணசபை சாகித்திய விருது, கிருஷ்ண கலாலயா விருது அத்துடன் இன்னும் சில பட்டங்களையும் சொல்லலாம். வெற்றியின் மகுடமென்பது தகைமை என்றும் கருதலாம் என்பதால்,

தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு அறிவிப்பாளராய் அழைக்கப்பட்டமை, சார்க் மாநாட்டுக்கு ஆரம்ப அறிவிப்பாளராக பங்குகொண்டமை, அணிசேரா நாடுகளின் மாநாட்டு அறிவிப்பாளராக பங்குகொண்டமை, மலேசிய சர்வதேச பாடலாசிரியருக்கான போட்டியில் எனக்கு 2ஆம் இடம் கிடைத்ததனையும் குறிப்பிடலாம். இது வெளிநாடொன்றில் கிடைத்த மகுடமென்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

கேள்வி: வளர்ந்து வருகின்ற இளைய அறிவிப்பாளர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் நீங்கள் வழங்கும் ஆலோசனைகள்?

பதில்: தளம்பாத நிறைகுடமாய் திகழ உங்கள் துறையில் உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். எத்துணை உயர்ந்தாலும் தற்பெருமையை துணைக்கு அழைக்காதீர்கள். அவரவர் எண்ணப்படியே அவரவர் ஆகின்றார். எனவே, எண்ணங்கள் உயர்ந்தவையாகட்டும்.

(நேர்காணல்: ராஜ் சுகா)

நீ நம்புவதைப்போல‌




குளியலறைச் சுவர்களுக்கு மட்டுமெ
முழுமையாய்த் தெரிந்த -என்
துக்கங்கள்...

தண்ணீர்க் கரங்கொண்டு
கண்ணீர்க் கழுவிடும் -அந்த‌
நீர்க் குழாய் இவை
நீயறிந்திடாத என் மறுபக்கம்....

தீனி கண்ட காகம்போல‌
கூவி அறிவிக்காத என்
ரணங்கள்

இப்போதும் நீ நம்புவதைப்போல‌
வெறும் புன்னகை மட்டுந்தான்...

ஆறுதலுக்காக
அடுத்தவரிலென் சுமையிறக்க‌
விரும்பாதவள் நானென்பதை
நீயறிந்திட வாய்ப்பில்லைதான்...

மகிழ்வுகளை மட்டுமே -நீ
விரும்பிடுவதால்!!

Friday, April 19, 2013

பதாதையிடுங்கள்!!



திருமணங்கள் புரிந்திட‌
இருமணங்கள் வேண்டியதில்லை
பெரும்பணங்கள் பொழிந்திடும்
வரும்படிக ளுண்டென்றால்
மட்டும் போதும் -இதுவும்
வாழ்க்கைதந்த பிரம்படிதான் -நல்ல‌
படிப்பினைதான்...

காதலின் எல்லைகளை
கல்யாணத்தில் முடிச்சிட‌
காலம் பார்த்திருந்த தருணங்களவை...

விருப்பங்களை பொறுப்பெடுத்தவர்களின்
பொறுப்பான நெருப்புக்களிவை
ஒவ்வொன்றாய் கேட்கப்பட்டது காதல்
ஒன்றுக்கும் பதிலில்லாது தீட்டுப்பட்டது...

பட்டங்கள் ஏதேனும் பெயருக்கு
பக்கத்திலுண்டா?

அரசாங்க அதிகாரியா -உமக்கு
வரும்படி வசதியாயிருக்கின்றதா?

சீர் சினத்திக்கொன்றும் குறையில்லையே?

தாம்பூலம் மாற்ற தடையில்லையே?

ஆங்கிலமெல்லாம் அசாத்தியமாய்
வந்துவிழ வேண்டும் என்ற‌
வரிசைக்கசையடியை
விழாத குறையாய் காதில்
வாங்கி பத்திரப்படுத்தப்பட்டது...

இல்லாத ஒவ்வொன்றுக்குமாய்
இருக்கு மந்த அழகிய ஒன்று
இருந்த இடமே இல்லாதழிந்திடுமா
இறைவா இதுதான் நியதியா??

ஏனோ
அநியாயமாய் ஓருன்னதம்
புதைத்தொழிக்கப்படுகின்றது
புனிதமென்று பேசப்பட்ட காதலுக்கு
புதைகுழி தோண்டப்படுகின்றது
நேசத்தில் பிணைக்கப்பட்ட ஓர் உயரிதம்
கொஞ்சங்கொஞ்சமாய் உருக்குலைக்கப்படுகின்றது...

இனியெவரும் உரைக்காதீர்
காதல் வெறும் அன்பென்று..

தகுதி
தராதரம்
அந்தஸ்து
பட்டம்
பதவியென்று
பகடைகளால் கோர்க்கப்பட்ட‌
பகட்டு என்று பதாதையிடுங்கள்!!




Thursday, April 18, 2013

நானும் வாழ்கின்றேன்



உங்கள் நியாயங்கள்

உங்களுக்கு நீங்களே
கொடுத்துக்கொண்ட கெளரவங்கள்

தகுதிக்கேற்ப உறவுதேடும்
குணங்கள்

அப்பட்டமாய் செய்திடும்
நம்பிக்கை துரோகங்கள்

நயமாய்ப்பேசி
நியாயங்களை கொன்றிடும்
சந்தர்ப்பவாதங்கள்

இவைதான் உலகில்
நடுநிலைவாதமென்றால்,

என் இதயத்தை அறுத்தெறிந்துவிட்டு
நானும் வாழ்கின்றேன்
உங்களைப்போல மனிதனாக!!

கல்லறை கட்டிவிடு



 # காலமாய்ப்போன நம்
காதலுக்கு
கல்லறை கட்டிவிடு
பாரதிபோ லுன்
விரல்கள் பேசினாலும்
இயேசுவைப்போல உன்னால்
உயிர்ப்பிக்கமுடியாது!!








@ மானசீக தொடுகைகூட‌
மணமான அநுபவந்தான்
நான்
மறுமணம் புரிந்திட‌
விரும்பவில்லை



Wednesday, April 17, 2013

கவிஞர் முஸ்டீன் அவர்களின் 'ஹராங்குட்டி' சிறுகதை நூல் வெளியீட்டின்போது 31.03.2013




'ஹராங்குட்டி' சிறுகதை நூல் வெளியீட்டின்போது 
















கவிஞர் அஷ்ரப் சிஹாப்த்தீன் அவர்களின் சிறுகதைத்தொகுதி வெளியீட்டின்போது 03.03.2013


'விரல்களற்றவனின் பிரார்த்தனை'  வெளியீட்டின்போது






அன்பு' என்றால்


வெறும் இதயங்களாலும்
பெறுமதியான நேசத்தாலும்
இணைந்துகொண்ட காதல்
தரம்பார்த்து பிரித்துவைக்கப்பட்டது

படிப்போ பதவியோ
பணமோ அந்தஸ்தோ
தரமோ தராதரமோ பாராது
தானாய் -எமக்குள் தேனாய்
ஊறிய காதலைத்தான்
தகுதிகாண் தேர்வு நடத்தி
தள்ளிவைத்தனர்

காதல்,
கையாலாகாத்தனமா இதற்கு
தன்மானமில்லையா
ஊடறுத்த கேள்விகளால்
உடைந்துபோகின்றேன்

எதிர்த்துகொண்டு எமதுறவை
எழுப்பிவைத்திட துணிந்தாலும்
குடும்பத்தின் பாசக்கயிற்றால்
தூக்குக்கைதியாகின்றோம்

எம்மை உணர்ந்துகொள்ளாத‌
அவர்களுக்காய்
உயிருக்குள் ஊறிப்போன‌
எமதுறவை
இரத்தஞ்சொட்டச் சொட்ட அறுத்து
காணிக்கையாக்கப் போகின்றோம்

'அன்பு' என்றால்
என்னவென்று விளங்காதவர்களாய்??



துரோகம்







யதார்த்தங்களால்
அநாதரவாக்கப்பட்டுப்போன‌
எனது அந்தரங்கள்
துரோகங்களால்
                                       அலங்கரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன‌

தார்மீகமெனக்கு புரியவேயில்லை


ஆழ்ந்த உறக்கத்தில்
அலறித்துடித்த பேய்க்கனவு போல‌
அந்த வலி...

எத்தனை அநுபவக்கோடுகளின்
எல்லைகளை சந்தித்தும்
எனதான கோலத்தினை
பூரணப்படுத்த முடியவில்லை...

நம்பிக்கை என்பது
என தகராதியில் மட்டும்
தோல்வியென்றே பொருள்படுகின்றது...

உங்கள் கணக்குகளில்
வரவுகள் மட்டும்
பெறுமதியாய்த் தெரிய‌
உறவுகளை கழித்தல்புள்ளியில்
கலையப்பட்டுக்கொண்டிருப்பதின்
தார்மீகமெனக்கு புரியவேயில்லை...

எதனை அடைந்துகொள்வதற்கு
இத்தனை வேகம்?

அன்பை தள்ளிவைத்து
அத்தனையும் ஈட்டிக்கொண்டபின்
இழந்ததை எப்படிச் சம்பாதிப்பீர்?

நிம்மதியை அடகுவைத்து
நீவீர்பெற்ற இன்பங்களை
எக் கண்ணாடிக்குவளையிலிட்டு
அழகு பார்ப்பீர்?

உங்கள் அடிமட்டத்து
அறிவு கண்டு என்னால்
அழமட்டுமே முடிகின்றது?!!

சுடுகாட்டுச் சாம்பலில் கலந்துவிடுங்கள்!




ஆயிரக்கணக்கில்
ஆழமாய் சேமித்த கனவுகள்
ஆழப்புதையுண்டு போனாலும்
ஆராத ரணந்தான் மனதுக்கு...

அண்டிவந்த சொந்தங்களில்
அன்பே இல்லாமல்
துண்டித்துக்கொண்டு போனதில்
தீராத காயந்தான் இதயத்துக்கு ஆனாலும்

எத்தனை உதடுகள்
போலியாய் விரிந்தன‌
எத்தனை புன்னகைகள்
வெறுமையாய் தெறித்தன‌
எத்தனை வார்த்தைகள்
அப்பட்டமாய் முகமூடி காட்டின‌
என்பதெல்லாம் பற்றி
தேர்ந்திட ஓர் களங்கிடைத்ததில்
வெற்றிதா னெனக்கு...

வியாபாரமாய்ப் போன‌
மனித உறவுகளுக்குள்
உண்மைக்கு வேலையில்லை
அன்புக்கு பெறுமதியில்லை
காதலுக்கு மதிப்பேயில்லை...

தகுதிக்கு ஏற்ப‌
ம(ண)னங்களை தேடிடும்
மாய உலகில்
நேசத்தை சுடுகாட்டுச் சாம்பலில்
கலந்துவிடுங்கள்
நேர்மைக்கு கொள்ளிவைத்து
கல்லறை நெற்றியில் பூசிவிடுங்கள்
இனியொரு ஜனனம் எழும்போது
தோல்வியை அறியாது
தோன்றட்டும்
வேதனையை உணராமல்
வெளிப்படட்டும்
ஏமாற்றங்களை அடையாமல்
எழும்பட்டும்...

உண்மைகளுக்கு
இத்தனை வலியென்றால்
போலிகள் மட்டும் உயிர்த்து
வாழ்ந்து மடியட்டும்
எவருக்கும் காயமுமில்லை
எதிலும் இரத்தக்கறைகளுமில்லை...!!


Saturday, April 13, 2013

துருவ நட்சத்திரம் பாரதிபித்தன் (12.04.2013)


மரபு இலக்கியங்களால்தான் தமிழ்மொழி வாழ்கிறது: தமிழகத்திலிருந்து பாரதிப்பித்தன்


சாதிப்பதற்கு கல்வி ஒரு தடைக்கல்லல்ல. மனத்திடமும் முயற்சியும் எமக்குள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பின் நமக்கான இருப்பை சாதனையாக மாற்றிவிடமுடியும். எத்தனையோ சாதனையாளர்கள் அதற்கான சான்றாக நம்மத்தியில் வாழ்ந்திருக்கின்றார்கள் ஏன் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு இலைமறை காயாக இருக்கின்ற ஓர் சாதனையாளரை எமக்கு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.


இன்று தமிழை வளமாகக்கொண்ட தேர்ச்சிமிக்க எத்தனையோ படைப்பாளர்கள் புதுக்கவிதையில் காலூன்றி நிற்கையில் தமிழ்மீது கொண்ட தீராத பற்றின் காரணமாகவும் பாரதியின் கவிதைகள்மீது ஏற்பட்ட காதலாலுமே மரபுக் கவிதையினை புனைவதில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றார். தமிழகம் சிவகாசியைச் சேர்ந்த வளர்ந்துவரும் கவிஞர் பாரதிப்பித்தன். அவரது திறமை தமிழ்ப்புலமையினை அடையாளம்கண்டு துருவ நட்சத்திரத்தினூடாக அவரை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. 

கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகத்துடன் துருவ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்?

இந்தியாவில் தமிழகத்தில் உள்ள மதுரை மாநகர் எனது சொந்த ஊர். ஆனால், இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே, மதுரைக்கு தெற்கே உள்ள தொழில் நகரமான சிவகாசிக்கு குடிபெயர்ந்து வசித்து வருகிறேன். ஏழாம் வகுப்பு வரை படித்த நான், கனரக சரக்கு வண்டி ஓட்டுநராக பணிபுரிகிறேன். பாண்டிமீனா என்பாள் என் மனைவி. எனக்கு பாரதிக் கண்ணன், பாலபாரதி என்ற இரு மகன்கள் இருக்கின்றார்கள். பாரதியின் மேல் கொண்ட அளவுகடந்த பற்றின் காரணத்தால், பாரதிப்பித்தன் என்ற புனைப்பெயரில் கவிதைகள் புனைந்துவருகின்றேன்.

கேள்வி: கவிதை எழுதுவதில் உங்களுக்கு எவ்வாறு நாட்டம் ஏற்பட்டது?

பதில்: உண்மையைக் கூறவேண்டுமானல் பள்ளிப் படிப்பை கைவிட்ட பிறகுதான் எனக்கு, புத்தக வாசிப்பில் அதிக நாட்டம் ஏற்பட்டது. அப்படி வாசிக்கக் கிடைத்தது திருகுறள். அதன் பொருள் புரியாமல் தவிக்கும்போது என் கையில் கிடைத்தது மணிமேகலை. பிரசுரத்தாரின் "எளிமை தமிழ் இலக்கணம்" என்ற நூல். அதன் எளிமையான இலக்கணப் பாடங்கள் என்னை படிக்கவும் எழுதவும் தூண்டியது.


கேள்வி: எவ்வாறான கவிதைகள்மிது ஆர்வம் காட்டுகிறீர்கள்?

பதில்: மரபு இலக்கியங்களின் மீது தீராத காதல் உண்டு. தமிழர்களின் பண்டைய வாழ்வியல் முறைகளை எடுத்துக்கூறும் இலக்கியங்களான அக, புறப் பாடல்களை வாசிப்பதிலும், அவைகளைப் போன்று கவி சமைப்பதிலும் ஆர்வமுண்டு. இடையிடையே சிந்து நடையிலும் பாடல் இயற்றுகிறேன். ஒருசில் புதுக்கவிதைகளும் உண்டு.

கேள்வி: உங்களுடைய எழுத்துக்களை சமூகத்தின் மத்தியில் எவ்வாறு கொண்டுசெல்லுகின்றீர்கள்?

பதில்: தமிழகத்தில் பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் எழுத்திற்கு சிறப்பானதொரு இடம்கொடுத்தாலும், நான் அதற்கான எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. இணையத்தில், "முகநூல்" ஒன்றையே என் எழுத்திற்கான தளமாக பயன்படுத்துகிறேன்.

கேள்வி: புதுக்கவிதை, மரபுக்கவிதை பற்றிய உங்களது பார்வையும் இன்றைய அவசர யுகத்திக்கு ஏற்றவாறு வாசகர்களின் கவனமும் ஆர்வமும் எவ்வாறான கவிதைகளில் இருப்பதாக நினைக்கிறீர்களா?

பதில்: இன்றைய காலகட்டத்தில் புதுக்கவிதைகள் எல்லோருடைய மனதையும் ஆக்கிரமித்திருப்பது கண்கூடு. காரணம், எளிமையான அதன் நடையும், அதிக கட்டுபாடற்ற அதன் விதியும். சொல்லாட்சியும், பொருளாட்சியும் கொண்ட புதுக்கவிதைகள் எல்லோர் மனத்தையும் ஈர்த்துவிடுவது உண்மை. இருப்பினும், மரபுக் கவிதைகள் பலமான வேலிக்குட்பட்ட பூந்தோட்டம் போன்றது. தோட்டத்திற்கு பாதுகாப்பும் அழியாத் தன்மையும் கொடுக்கவல்ல அந்த வேலிதான், மரபிலக்கியத்தின் இலக்கணங்கள்.

அவ்விலக்கணங்களுக்கு உட்பட்டு எழுதப்பட்ட இலக்கியங்களாலேதான் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயணப்பட்டு வந்திருக்கிறது தமிழ். ஆனால், இன்றைய காலகட்டத்தில் வாசகர்களின் ஆர்வமும், இரசனையும் புதுக்கவிதையின் மேலேயே வியாப்பித்திருக்கிறது. காரணம், மரபிலக்கியத்தின் கடுமையும், அதைப் பற்றிய அறியாமையும்தான்.


கேள்வி: மரபின் மீதான ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?

பதில்: பழமையைப் போற்றும் பாங்கு இயல்பிலேயே எனக்குண்டு. அந்த வகையில் பண்டைய இலக்கியங்களின் மேல் தீராப் பற்றாளன் ஆனேன். மரபிலக்கியங்களால்தான் தமிழ்மொழி, பன்நெடுங்காலமாய் வாழ்கிறது என்ற கொள்கையுடையவன் நான்.

கேள்வி: ஒருவரின் தனிப்பட்ட திறமையால் கல்விப் பலத்தையும் தாண்டி ஜெயிக்கமுடியும் என்பதனை பல சாதனையாளர்கள் நிரூபித்துள்ளார்கள். அந்தவரிசையில் வளர்ந்துவரும் உங்களின் எதிர்கால எழுத்துத்துறை சார்ந்த திட்டங்கள் பற்றி?

பதில்: உண்மைதான். படிப்பிற்கும், அறிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே என் கருத்து. அந்தவகையில் எனக்கு கிடைத்த இந்த வரத்தால், தமிழ்மொழியின் இறவா வளங்கொண்ட மரபு நடையில் பல கவிதைகளை இயற்ற வேண்டும்.
அதிலும், பாரதியைப் பற்றிய பாடல்கள் நிறைய இயற்ற வேண்டும். அதன் முதல் கட்டமாக, பாரதிக்கு "நான்மணி மாலை" ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் நிறைய எழுதுவேன்.

கேள்வி: சினிமாச்சாயலை அதிகமாக ஊடுருவிக்கொள்ளும் இளம்சமூகத்தில் குறிப்பாக சினிமாக்காரர்களை கடவுளாக அல்லது பக்தியாக கொண்டிருக்கும் மனப்போக்கானது சமூகத்துக்கு ஆரோக்கியமானதொன்றா?

பதில்: சினிமாவில் ஆரோக்கியமான விசயங்கள் பல இருக்கிறது. அதற்காக சினிமாவே ஆரோக்கியமான விடயமென்று கூற முடியாது. இளைஞர்கள், சினிமாவையும் சினிமாச் சாயலையும் பெரிதாக விரும்புவதால் வீணான கவர்ச்சிக்கு ஆட்படுகின்றனர். அது இளமையில், தான் கொண்ட பொறுப்பான பல விடயங்களைச் சிதறடிக்கிறது என்பதே உண்மை!
அதே சமயம், பண்பட்ட இளைஞர்கள் அதை, நற்பணி பொதுச்சேவை போன்ற சமுதாய வளர்ச்சிப் பணிகளுக்காக பயன்படுத்துவது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

கேள்வி: உங்களின் புனைப்பெயருக்கான விசேட காரணங்கள் ஏதேனும் உண்டா?

பதில்: விசேடமான காரணங்கள் என்று எதுவுமில்லை. ஒரு படைப்பாளனுக்கு, முந்தைய படைப்பாளர் எவரேனும் ஒருவரின் தாக்கம் கொஞ்சமேனும் இருக்கும். அப்படித்தான் நானும், பாரதியின் மேல் அளவு கடந்த பற்று கொண்டுள்ளேன். பாரதியின் மலைக்க வைக்கும் கவித்திறன். அவரின் கவிநடை. எதைப் பற்றியும் கவலைப்படாமல் மரபை உடைத்த பாங்கு. இவற்றுக்கெல்லாம் நான் அடிமை. இவையே நான் புனைந்து கொண்ட பெயருக்கான காரணம்.


கேள்வி: உங்களுடைய கவிதைகளை நூலுருவில் கொண்டுவருவதற்கு எடுத்துள்ள முயற்சிகள் பற்றி?

பதில்: இன்னும் ஓராண்டு காலத்திற்குள் சிறப்பான மரபிலக்கிய நூல் ஒன்றைச் செய்யவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. அதற்காவே எழுதிக் கொண்டிருக்கிறேன். அதில், பாரதியின் புகழ் பாடவேண்டும் என்பதே என் விருப்பம்.
தமிழுலகில் வாசகர்கள் அதிகரிக்க வேண்டும். எக்காலமும் அழியாத இலக்கியங்கள் தற்காலத்தில் உருவாக வேண்டும் என்ற பாரதியின் ஆசையே என் ஆசையும். அதில், நானும் ஒரு துளியெனில், அது தமிழ்த்தாய் எனக்களித்த வரம்.

கேள்வி: இறுதியாக உங்களுடைய கவிதையொன்றை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்?

பதில்: இது ஆனந்தக் களிப்பு என்ற தலைப்பிலான கவிதை.

ஆணுக்குப் பெண்ணேயா தாரம்- அதை
...அறியாத பெண்ணுக்கிங் காண்களே பாரம்
தூணுக்கு மண்ணேயா தாரம்- ஒரு
...துயரெனி லாணுக்குப் பெண்ணேயா தாரம்
பூவையென் றோர்சொல்லைச் சொல்லி- பெண்ணை
...பூசைப் பொருளாக்கி பூட்டியே வைத்தார்
பாவையென் றும்பெண்ணைச் சொல்லி- அந்தப்
...பாவைபோல் தன்னிச்சைக் காட்டவேசெய்தார்
பெண்ணென்றும் பின்னென்ற கொள்கை-கொண்ட
...பேடிகள் வாழ்வதா லென்றென்றுந்தொல்லை
பெண்ணுக்கிங் குண்டென்று கண்டோம்- தம்மைப்
...பேணாத பெண்மையா லஃதுண்டா மென்போம்!
ஆண்டுக் கொருநாளைத் தந்து- உன்னை
...ஆட்டிப் படைத்திடு மாண்களை முந்து
வேண்டுந் தனித்திறங் கொண்டு- அந்த
...வேலியை வெட்ட விடுதலை யுண்டு!
சுற்றும் புவியிதன் மேலே- சிறு
...சுண்டை யளவுடை மானிட ராலே
முற்றுஞ் செயலிசை வாகும்- பெண்ணை
...முடமாய் முடக்கிட அத்திறஞ் சாகும்!
பெண்ணேநீ வாழிய வென்றும்- ஒரு
...பெருமை யதிலுண்டா மாடவர்க் கென்றும்!
மண்மீது மக்குத லின்றி- புவியில்
...மானுடஞ் செழித்திடும் பெண்ணாலே ஒன்றி!


(நேர்காணல்: ராஜ் சுகா)

Sunday, April 7, 2013

நடிகர் ஜெறாட் நிரோஷன். 06.04.2013 (துருவம் இணையத்தளம் & கல்குடா நேசன்)

http://www.thuruvam.com/2013/04/php_6.html



பாடலும் நடிப்பும் எனக்கு இரு கண்களைப் போன்றது: ஜெறாட் நிரோஷன்

Print Friendly and PDF

மன்னார் மாவட்டத்து இளம் படைப்பாளிகளின் புரட்சியாக அண்மையில் திரையிடப்பட்ட '1023 வருடங்கள்' குறுந்திரைப்படம் அனைவராலும் பேசப்பட்டது. முற்றிலும் வித்தியாசமான இலங்கையின் திரைப்படச்சூழலை வெளிப்படுத்தி இந்திய சினிமாவுக்கு இணையாக‌ தத்ரூப அமசங்கள் அத்த‌னையும் கொண்டு திரையிலே காட்சிப்படுத்தப்பட்டது. அந்த பரபரப்பான சூழலில் திரைப்படத்தின் கதாநாயகனை துருவ நட்சத்திரத்துக்காக சந்தித்தோம்.


இளமையும் துடிப்புமிக்க இக்கலைஞர் சாதிக்கத்துடிக்கும் வேகத்தோடே எமது கேள்விகளுடன் இணைந்துகொண்டார். பாடகராக நடிகராக நடனக்கலைஞராக இயங்கும் இவரின் திறமைகள் வெற்றியை நோக்கியதாகவும் முன்னேற்றத்தை நோக்கியதாகவும் அமைய வேண்டுமென்ற பிரார்த்தனைகளுடனும் வாழ்த்துக்களுடனும் அவரது நேர்காணலில் இணைந்துகொள்வோம்.

கேள்வி: கலைத்துறையில் துடிப்புள்ள இளைஞராக வலம்வரும் உங்களைப்பற்றி?

பதில்: யாழ்ப்பாணத்தை சேர்ந்த நான் ஜெறாட் நிரோஷன். அம்மா அப்பா இரண்டு தம்பிமார் இரண்டு தங்கைமார் கொண்ட அழகிய கலகலப்பான எனது குடும்பத்தில் நானே மூத்தபிள்ளை. நான் கடந்த 10 வருட காலத்திற்கும் மேலாக யாழ். தூய மரியன்னை பேராலய பாடகர் குழாமில் பாடி வருகின்றேன். இரு இறுவெட்டுகளிலும் பாடியுள்ளேன். அதைவிட வானொலி ஒன்றுக்கும் நானும் நண்பன் தர்சனும் பாடியள்ளோம்.

இப்பயணத்தில் பல இடர்களைத் தாண்டித்தான் இன்று ஒரு பாடகராக சமூகத்தின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளேன். எனது நடிப்பும் அப்படித்தான். அதைவிட நான் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி கற்கை நெறியினை கற்று வருகின்றேன். பட்டதாரி ஆக வேண்டும் என்பது அம்மாவின் கனவும் கூட. என்னுடைய கனவு எல்லாம் சிறந்த நடிகனாகவும் நல்ல பாடகனாகவும் வரவேண்டும் என்பதே.

கேள்வி: உங்களுக்கு கலையுலகப் பிரவேசம் எவ்வாறு ஏற்பட்டது?

பதில்: எந்தவொரு மனிதனுடைய வாழ்க்கையைப் பார்த்தாலும் அவனுடைய வாழ்க்கைக்கு முன் எப்படியும் பல கஸ்டங்களை எதிர்கொண்டே அவன் வளர்ந்திருப்பான். அதுபோலவே என்னுடைய வாழ்க்கையில் அதைவிட கூடுதல் என்றே கூற வேண்டும் அவ்வளவு தூரம் நான் கஸ்டப்பட்டே இன்று ஒரு நடிகனும் பாடகனும் ஆகியுள்ளேன்.

சிலநேரங்களில் என்னோடு கூட இருந்து நெருங்கிப் பழகிய நண்பர்கள் கூட என்னை வீழ்த்தினார்கள். சிலர் என்னை விட்டும் விலகிவிட்டனர். அதற்காக மனம் வருந்தவும் இல்லை. அத்தோடு பொருளாதாரம் கூட என்ன எமனாக இருந்தது.  ஆனாலும் நான் மனம் சோர்ந்து போகவில்லை. அந்நேரம் எனக்குள் இருந்த ஆர்வம் விடாமுயற்சி, வெறி, இறை நம்பிக்கை எல்லாம் ஒன்றுசேர்ந்துதான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டுவந்துள்ளது.


இந்த 3, 4 வருடங்களுக்கள் 3 குறும்படங்கள், 2 முழுநீள திரைப்படங்கள், 2 விளம்பரங்கள் மற்றும் நேத்ரா தொலைக்காட்சியின் சித்திரம் நாடகத் தொடரிலும் நடித்துள்ளேன். மேலும் 2 இறுவெட்டுக்களிலும் பாடியுள்ளேன். சுவிஸ் இணையத்தளம் ஒன்றிற்காகவும் பாடல் ஒன்றையும் பாடியுள்ளேன். இதளை விட Dan TV, Shakthi TV, TCNL TV, Vetti TV போன்ற தொலைக்காட்சிகளிலும் பாடியுள்ளேன். தற்போது 2 பாடல்கள் மற்றும் 2 குறும்படங்களில் நடிக்கவும் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடனம் வழங்குவதற்கும் என்னை ஒப்பந்தம் செய்துள்ளனர். 


கேள்வி: நீங்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டுவரும் துறைகள் பற்றியும் அதில் சாதிக்கதுடிக்கும் துறை பற்றியும் கூறுங்கள்?


பதில்: துறைகள் என்கின்ற போது பாடல் ஆடல் நடிப்பு என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்த முன்றையுமே நான் அதிகமாக நேசிக்கின்றேன். இதில் பாடலும் நடிப்பும் சிறப்பானவை இந்த இரண்டும் என்னுடைய இரண்டு கண்களைப் போன்றவை.
நான் சாதிக்கத் துடிப்பது நல்லதோர் பாடகனாகவும் நடிகனாகவும் வரவேண்டும் என்பதே இவை தான் என்னுடைய ஆசை விருப்பம் கனவு எல்லாமே.

இத்தனை வருடங்களாக யாழ். மண்ணிலே யுத்தம் இடம்பெற்றதன் காரணத்தால் என்னால் எதுவுமே செய்ய முடியாத நிலை காணப்பட்டது. ஆனால், தற்போது யுத்தம் முடிவுறற்றதன் பின் 2010ஆம் ஆண்டுகளின் பின்பு தான் என்னுடைய நடிப்பும் ஆரம்பமானது. அதுவரைக்கும் மேடை நாடகங்களிலேயே நடித்து வந்தேன்.

யாழ்ப்பாணத்திலே முதன்முதலாக செய்யப்பட்ட திருமண மடல் விளம்பரம்தான் என்னுடைய நடிப்பின் தன்மையை எனக்கும் வெளியுலகிற்கும் காட்டியது. இந்த விளம்பரம் யாழ். மண்ணிலே மிகப்பெரிய பாராட்டுக்களையும் வெகுமதிகளையும் பெற்றுக் கொடுத்து என் வாழ்வில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அதன்பிறகு தொலைக்காட்சிகளில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் அதிகம் அதிகமாய் எழத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திரைப்பட, குறுந்திரைப்பட விளம்பர வாய்ப்புக்கள் தேடிவந்தன. இப்படித்தான் மெது மெதுவாக வளர்ச்சியடைந்தேன். இன்று என்னுடைய முழுக் கவனத்தையும் இந்தக் கலைத் திறன்களிலேயே செலவழித்தும் வருகின்றேன்.


கேள்வி: உங்களுடைய முயற்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் மற்றும் உங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் பற்றியும் கூறமுடியுமா?

பதில்: பலர் என்னுடைய முயற்சிக்கு உறுதுனையாக இருந்திருக்கின்றனர், இருக்கின்றார்கள். அதில் சிறப்பான முதன்மையான இடம் என்னைப் பெற்றெடுத்த அன்பு தெய்வங்களையே சேரும். பெற்றோர்கள் இருவருமே நன்றாக பாடவும் ஆடவும் கூடியவர்கள். அவர்கள் வறுமையின் பிடியில் வளர்ந்ததால்தான் தங்களுக்கு மேடை அரங்கேற்றம் செய்வதற்கு சந்தர்ப்பம் இல்லாது போனதாகவும், ஆனால், அவர்களுக்கு கிடைக்காத சந்தர்ப்பங்கள் எனக்கு கிடைத்ததாகவும் அடிக்கடி என்னுடன் பகிர்ந்து கொள்வார்கள். நான் பாடடுவதற்கு எனது அண்ணாவும் ஆசிரியருமான டீ.து.நிரேஷனும் ஒரு காரணம். அவர் மட்டும் இல்லையென்றால் எனக்கு பாடல் என்றால் என்னவென்று தெரிந்திருக்காது. அத்துடன் அதற்கான களமும் சரியாக அமைந்திருக்காது. 

அடுத்ததாக 2008ஆம் ஆண்டு இசை இளவரசன் விருதை வென்றெடுத்த இசையமைப்பாளர் ஊ. சுதர்சன் அண்ணாவுக்கும்  நான் நன்றி கூறவேண்டும். “மன்னியும்” என்ற கிறீஸ்தவ பாடல் இறுவெட்டிலே தென்னிந்திய பாடகர்களுடன் (கிருஸ்ணராஜ், சத்தியபிரகாஸ், பூஜா) சேர்ந்து பாடுவதற்குரிய  சந்தர்ப்பத்தையும்  எனக்கு ஏற்படுத்தி தந்தார். அத்தோடு இந்த இறுவெட்டை தயாரித்த அருட்தந்தை ஜெயபாலன் அவர்களுக்கும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன்.

“இளப்பினும் சக்தியுண்டு” இறுவெட்டை தயாரித்து அதிலே 2 பாடல்களை பாடுவதற்கு பிரியன், பிரசாத் இருவருக்கும் சந்தர்ப்பம் அமைத்து தந்தார்கள். நடிப்பதற்கு நாடகக்கலை ஊடாக களம் அமைத்து தந்தார் யாழ். திருமறைக் கலாமன்றம் இயக்குநர் அருட்தந்தை நீ.சே.மரியசேவியர் அடிகளார். அதன் பிரதி இயக்குநர்களான ஜோன்சன் ராஜ்குமார், விஜயன்  ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

யாழ். மாவட்டத்திலே முதன் முதலாக உருவான விளம்பரத்தில் முதன்முதலாக நடித்தபோது, கொஞ்சம் பயமாகவும் பதட்டமாகவும் இருந்தது. பல தேர்வுகளின் மத்தியிலேயே நான் தெரிவு செய்யப்பட்டேன். அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனம் இயக்கிய “பனைமரக் காடு” திரைப்படத்தில் கதாநாயகனின் நெருங்கிய நண்பனாக நடிக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது.

இந்த திரைப்பட விளம்பர வரிசையிலே நண்பன் சமித்தனின் அறிமுகம் எனக்கு எற்பட்டது. இதனைத் தொடர்தே “1023 வருடங்கள்” திரைப்படத்திலும் நடிக்கும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தது. இந்தத் திரைப்படம் உன்னுடைய வாழ்விலே ஒரு மைல்கல் என்றே கூற வேண்டும். அதனைத் தொடர்ந்து நெல்லி சோடா கம்பனி ஒன்றின் விளம்பரம் ஒன்றிலும் நடித்திருக்கின்றேன். அடுத்ததாக நாடகம், நடிப்பு இதில் எனக்கு ஏதேனும் சந்தேககங்கள் வந்தால் அதனை தீர்த்து வைப்பவர் தர்மா அண்ணா. அவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

எனக்கு ஏற்படும் தடங்கல்கள் கஸ்டங்களிலும் நான் தொலைபேசி எடுக்கும் நேரங்களில் அன்பான பேச்சினால் சரியான ஆலோசனைகளை வழங்கி வழிநடாத்தி வரும் உடன் பிறவாத சகோதரன் அண்ணா ஜானூஸ் மற்றும் என்னை தற்போது செவ்வி காணும் அன்பு அக்கா ராஜ் சுகாவுக்கும் மனமார்ந்த நன்றிகள்.


கேள்வி: பாடகராக ஒரு நடனக் கலைஞராக வெளிப்பட்ட சந்தர்ப்பங்கள் பற்றி கூறுங்கள்?

பதில்: 2003ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை யாழ். தூய மரியன்னை பேராலயத்தில் பாடகராக இருக்கின்றேன். 2007ஆம் ஆண்டு ஒரு பாடல் போட்டியிலே எங்களுடைய பாடகர் குழாம் போட்டியிட்டு 1ஆம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது.
அதிலே எல்லோருக்கும் விருது கிடைத்தது. அதுதான் என்னுடைய வளர்ச்சியும் ஆரம்பமும்.

அதனைத் தொடர்ந்து வடகில் அரசாங்கத்தினால் நடைபெற்ற “வடக்கின் நட்சத்திரம்” பாடல் போட்டியில் பங்குபற்றி இறுதி 5 சுற்று மட்டும் வந்தமை ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இசைக்குழுக்களில் பாடும் வாய்ப்பும் அதிகரித்தது. முதலில் இணைந்த இசைக்குழு “ஜங்கரன்” இசைக்குழு. அங்கு என்னை அறிமுகப்படுத்தியவர் தருமராஜ் அண்ணா. அவர்களே அவருக்கும் அதன் இருக்குநர்களான இந்திரன் சஞ்சய் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

நான் தற்போது ஜங்கரன் இசைக்குழு, ஜேம்ஸ் இசைக்குழு, து.சுசுகுமார் இசைக்குழு, கண்ணன் இசைக்குழு, றெய்ன்போ இசைக்குழு, விடியல் இசைக்குழு (கத்தோலிக்க இசைக்குழு) போன்றவற்றில் பாடிவருகிறேன். அதுமட்டுமல்லாது ஆலய வழிபாடுகள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் போன்றவற்றிலும் பாடி வருகின்றேன்.

நாடக் கலைஞராக என்றால், ஆரம்பம் திருமறைக்கலா மன்றம் ஊடாக கிடைத்தது. பின் நண்பன் து.வாகீசனின் “மூன்று நட்சத்திரம் நடனக்குழு” ஊடாகவே பல மேடைகளில் மேலைத்தேய கீழைத்தேய நடனம் என்று தொடர்கின்றது. 2010ஆம் ஆண்டு (பனைமரக் காடு) படத்தின் ஓடியோ வெளியீடு வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. அதிலே 3 நடனங்களை மேடையேற்றினோம். அதில் நான் எனது சகோதரியுடன் தனியாக நடனமாடினேன். அது எனக்கு பலரின் பாராட்டுக்களை பெற்றுக் கொடுத்தது. என்னுடைய சகோதரியும் என்னைப் போலவே எந்தக் கலைகளையும் விட்டு வைக்கவில்லை. அவள் ஒரு சகலாகலா வல்லி.

அதனைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு கத்தோலிக்க தொலைக்காட்சியான ரீ.சீ.என்.எல். தொலைக்காட்சிக்கு என்னை ஒரு நடனம் உடனடியாக தரும்படி கேட்டனர். நான் அதனை இருநாட்களில் செய்து கொடுத்திருந்தேன். இதனை வெளிநாட்டில் பார்த்த பலர் எமது குழுவை வாழ்த்தினர். இன்னும் எனக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் வெளியிடங்களிலும் பழக்கியும் வருகின்றேன்.

கேள்வி: இலங்கையில் நீங்கள் நடித்த குறும்படங்கள் மற்றும் உங்களது கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் பற்றியும் கூறுங்கள்?

பதில்: கெட்டவன் (குறும்படம்), தேடல் ஆரம்பம் (குறும்படம்), என்னுள் என்ன மாற்றமோ (முழுநீளத் திரைப்படம்), 1023 வருடங்கள் (குறும்படம்), பனைமரக் காடு (முழுநீளத் திரைப்படம்), சித்திரம் - நேத்ரா ரி.வி (நெடுந்தொடர் நாடகம்) போன்றவற்றில் இதுவரை நடித்துள்ளேன்.

கெட்டவன் குறும்படத்திலே 5 கதாநாயகர்கள். அதிலே நான் பிரதான கதாநாயகனாக நடித்திருக்கின்றேன். அது இன்னும் வெளிவரவில்லை. அடுத்து தேடல் ஆரம்பம். இதிலே எனக்கும் நண்பர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினையை தீர்த்து வைக்கும் கதாபாத்திரம். இந்தத் திரைப்படமும் இந்த வருடம் வெளிவர இருக்கின்றது. என்னுள் என்ன மாற்றமோ முழு நீளத்திரைப்படத்தில் நாயகனின் நெருங்கிய நண்பனா நடித்துள்ளேன். இதுவும் இந்த வருடம் வெளிவரும். பனைமரக் காடு முழு நீளத்திரைப்படம் தென்னிந்திய இயக்குநர் க.செவ்வேளின் தயாரிப்பில் நாயகனின் நெருங்கிய நண்பனாக நடித்துள்ளேன். 

இந்த திரைப்பட விளம்பரங்களின் வரிசையிலே தான் 1023 வருடங்கள் குறும்படத்துக்கு கிடைத்தது. இந்தத் திரைப்படம் என்னுடைய வாழ்க்கையிலே ஒரு மைல்கல். இதுதான் நான் கதாநாயகனாக அறிமுகமாகின்ற முதல் குறும்படம் தற்போது பாரிய வரவேற்பைப் பெற்று திரையரங்ஙகில் ஓடியது.


கேள்வி: இலங்கையில் திரைப்படத்திற்கான வாய்ப்புக்கள் எவ்வாறு கிடைத்தது?


பதில்: இலங்கையைப் பொறுத்த வரையில் திரைப்பட வாய்ப்புகள் தென்பகுதியிலேயே மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. வடபகுதிகளில் அது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இப்படியிருக்கையில் 2009ஆம் ஆண்டின் இறுதிக் காலப்பகுதியில் AAA Movies International திரைப்பட நிறுவனம் நடிக்க ஆர்வமுள்ளவர்ளுள் தேவையென்று விளம்பரப்படுத்தி இருந்தது.

சாதிக்க வேண்டுமென்ற எனது வெறி நண்பன் திலீபனூடாகவே என்னை அங்கு சேர்த்தது. 350க்கும் மேற்பட்டோருடனான நேர்முகத் தேர்வில் எனக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. முதன்முதலாக தொலைக்காட்சியில் என்னை வெளியுலகிற்கு அடையாளம் காட்டியது ANDRA Weeding Card விளம்பரம். தொடர்ந்து நெல்லி சோடா விளம்பரத்தில் நடித்தேன். 


கேள்வி: 1023 வருடங்கள் குறும்படத்தின் சிறப்புகள் பற்றி கூறுங்கள்?


பதில்: 1023 வருடங்கள் திரைப்படத்திலே பலர் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதியில் நான் தெரிவுசெய்யப்பட்டேன். இது எனக்கு மறக்க முடியாத ஒரு திரைப்படம். பல குறும்படங்களில் நடித்திருந்தாலும் பார்வையாளர்களிடமிருந்து அதிகளவான பாராட்டுகளை பெற்றுத்தந்தத இக்குறும்படமே.

இந்த திரைப்படத்திலே இடம்பெற்ற ஒரு காட்சியை எப்போதும் மறக்கவே முடியாது. இக்காட்சியினால்தான் படம் வெற்றிபெற்றது. அது ஒரு விபத்துக் காட்சி. வீதியால் சென்றவருடன் வேகமாக சென்ற வாகனம் மோதியதில் அவர் இறந்து விடுகிறார். காட்சி நகர்ந்த கொண்டிருக்கும்போது தூர இடத்தில் கமெரா இருப்பதனை யாரும் அவதானிக்கவில்லை. அப்போது வழியில் சென்ற பேரூந்தும் அவ்விடத்தில் நின்று விட்டது. பலர் ஏங்கி அழத்தொடங்கி விட்டனர். பெரும்பாலானோர் எமது வாகன ஓட்டுனரைப் பார்த்து கண்டபடி திட்டித் தீர்த்தனர். நங்கள் படம்தான் எடுக்கிறோம் என்பதை அவர்கள் நம்பவில்லை. அப்படி எடுக்கப்பட்ட ஒரு காட்சி மிகப் பிரமாண்டமாக வந்துள்ளது.

அரைமணி நேரமாவதற்குள் மன்னார் முழவதும் சூடு பிடித்துவிட்டது. இந்த விபத்து பிறகு பொலிஸார் எங்களை கூட்டிச் சென்றனர். அன்றைய நாள் படப்பிடிப்பு அந்த விபத்துடனேயே முடிந்தது. அந்த நிமிடம் நாங்கள் எல்லோரும் படத்தின் வெற்றியை உணர்ந்தோம். படம் எடுக்கவில்லையே என்று குழம்பியிருந்தாலும் மறுபுறம் மகிழ்ச்சி தாண்டவமாடியது.  


கேள்வி: இப்படத்துக்கான வரவேற்பும், ஆதரவும் எவ்வாறுள்ளது?


பதில்: இப்படத் தயாரிப்பில் பல பிரச்சினைகளையும் கஸ்டங்களையும் எதிர்கொண்டோம். இருப்பினும் எங்களது விடாமுயற்சியினால் இப்படம் மக்களிடையே பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பேஸ்புக் மற்றும் தொலைபேசி மூலமாக முகம்தெரிந்த, தெரியாத பல நண்பர்கள் உள்நாட்டிலிந்தும் வெளிநாட்டிலிருந்தும் வாழ்த்துக்கூறி ஆதரவளித்தினர். அத்துடன்

1023 வருடங்கள் திரைப்படம் மன்னார் அயன் திரையரங்கிலே வெளியிடப்பட்டபோது, நாங்கள் யாருமே எதிர் பார்க்காத அளவிற்கு முதல் 3 காட்சிக்கும் அதிகளவான மக்கள் திரண்டுவந்தனர். பெரும்பாலானவர்கள் படம் சூப்ரா பண்ணியிருக்காங்க என்று என் காதுகுளிரும்படி சொல்லிக் கொண்டே போனார்கள். அந்த தருணங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வீதியால் செல்லும்போது எப்போ படம் ரிலீஸ் என்று கேட்டவங்க எல்லாம் படத்தைப் பார்த்துவிட்டு மெய்ச்சிலிர்த்து நின்றதையும் கண்ணுற்றேன். இப்போது கூட நண்பர்கள் காணும் இடங்களில் வாழ்த்துகின்றனர்.



கேள்வி: திறமைமிக்க நம்நாட்டு கலைஞர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் என்று எதை கருதுகிறீகள்?


பதில்: இந்தியக் கலைஞர்களுக்கு நிகராக நம்மவர்களும் இலங்கையில் இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்குரிய சந்தர்ப்பங்களும் வழிகாட்டல்கள் மற்றும் ஒத்துழைப்புக்கள் முழுமையாக கிடைப்பதில்லை. இவர்கள் மனங்களில் இந்திய சினிமாதான் அதிக செல்வாக்குச் செலுத்துகின்றது. 

இந்திய சினிமாக்களை மட்டும் பார்ப்பதை விட்டுவிட்டு நம்மவர் படைப்புகளையும் பார்க்கும் மனப்பாங்கு எல்லோரிடத்திலுள் வரவேண்டும். எமது படைப்புக்கள் வெளிநாடுகளுக்கும் போகவேண்டும். அப்போதுதான் திறமைமிக்க கலைஞர்கள் தடைகளின்றி வளர்ச்சிபெற முடியும்.

கேள்வி: உங்களை அடையாளப்படுத்திய ஊடகங்கள் பற்றி குறிப்பிடமுடியுமா?

பதில்: என்னை அடையாளப்படுத்திய ஊடகங்களாக TCNL TV, துருவம் இணையத்தளம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அதைவிட சக்தி ரீ.வி., டான் ரீ.வி, வெற்றி ரீ.வி. ஆகியவற்றையும் குறிப்பிட்டாகவேண்டும்


கேள்வி: உங்களது எதிர்கால திட்டங்கள் என்ன?

பதில்: எனது எதிர்காலத்திட்டம், கனவு எல்லாமே சிறந்த பாடகனாகவும் நடிகனாகவும் வரவேண்டும் என்பதே. அதற்காகவே என்னை அர்ப்பணித்தும் வாழ்கின்றேன். பாடலும் நடிப்பும் என்னுடைய இரு கண்களைப் போன்றதே. இனிவரும் காலங்களில் இரு இறுவெட்டுகளை என்னுடைய சொந்த தயாரிப்பிலே வெளியிடுவதற்கு எண்ணியுள்ளேன். அதிலே ஒன்று “அழைப்பின் குரல்” என்ற கிறிஸ்தவ பாடல். மற்றது “நினைவே நீயடி” என்ற பாடல் தொகுப்பு. இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

கேள்வி: உங்களைப் போன்ற இளம் கலைஞர்களுக்கு கூறவிரும்புவது என்ன?

பதில்: முதலில் நாங்கள் எந்த கலைத்துறையில் இருந்தாலும் அத்துறையிலே சாதிக்க வேண்டும் என்ற எண்ணமும் விடா முயற்சியும் இருக்க வேண்டும். அடுத்தது எம்மை அதற்கென அர்ப்பணிக்க வேண்டும். அப்போதுதான் அந்த துறையிலே மிளிர முடியும். அத்தோடு எமக்கு மற்றவர்கள் செய்த மிகச்சிறிய உதவிகளில் கூட நாங்கள் நன்றி உள்ளவராய் இருக்க வேண்டும். பலர் அதை மறந்தே விடுகின்றோம்.

இவற்றோடு சேர்த்து கடவுள் நம்பிக்கையும் கட்டாயம் வேண்டும். இறைவன் இல்லையென்றால் எதுவும் இல்லை. இந்த விடயங்கள் எம்மிடம் காணப்படுமாயின் மனம் நோகாமல் ஏதெனுமொரு ஏணிப்படியிலே ஏறிச் செல்லலாம்.



(நேர்காணல்: ராஜ் சுகா)


இந்த நேர்காணல் 23.10.2015 கல்குடா நேசன் இணையத்திலும் பிரசுரமானது

http://kalkudahnation.com/






Wednesday, April 3, 2013

துருவ நட்சத்திரம் ஷாமிலா முஸ்டீன் (28.03.2013)

http://www.thuruvam.com/2013/03/php_28.html




பெண்ணியம் என்பது முரண்பட்ட கூறுகளுடன் பயணிக்கிறது: ஷாமிலா முஸ்டீன்

Print Friendly and PDF

பல விருதுகள் ஏன் கொடுக்கப்படுகின்றது என கொடுப்பவர்களுக்கும் தெரியாது பெறுபவர்களுக்கும் தெரியாது என்ற தனது தனிப்பட்ட கருத்தோடு துருவம் இணையத்தில் மனம்திறக்கிறார் ஷாமிலா முஸ்டின். கவிஞராக, அறிவிப்பாளராக ஒரு தமிழ் ஆசிரியையாக தன் தனித்திறமைகளினால் சமூகத்தில் அடையளமிட்டுக் காட்டக்கூடிய ஷாமிலா முஸ்டீனை துருவ நட்சத்திரம் பகுதிக்காக சந்தித்தோம். அவர் தன்னுடைய வெளிப்படையான கருத்துக்களோடும் நியாயமான எண்ணங்களோடும் எம்மோடு இணைந்து கொள்கின்றார்.

கேள்வி: இளம் படைப்பாளியாக பலதுறைகளில் வலம்வரும் உங்களது அறிமுகம் பற்றி எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?

துருவ நட்சத்திரத்தின் நேர்காணல் ஊடாக வாசகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இளம் படைப்பாளி என்பதனை விட வளர்ந்து வரும் படைப்பாளி எனலாம். நான் மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனைப் பிரதேச செம்மண்னோடை எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவள். தந்தை ஷெரீப் தாய் ருசூதா, ஆரம்பக் கல்வியை மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலத்திலும் உயர்தரத்தினை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகளிர் கல்லூரியிலும் பயின்றேன்.

பின்னர், தர்காநகர் தேசிய கல்வியல் கல்லூரியில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவினைத் தமிழ்மொழி பாடத்தில் பயின்றேன் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமானிப் பட்டத்தினைப் பெற்றேன். தற்போது கொழும்பு ஹமீத் அல் ஹூஸைனி கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றி வருகிறேன். அதேநேரம் திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவினைப் பயின்று கொண்டிருக்கிறேன்.

கேள்வி: நீங்கள் ஈடுபட்டுவரும் துறைகளையும் அதிக விருப்பத்துக்குரிய துறை எது?

பதில்: நான் அறிவிப்பாளராக 2006 - 2006 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குத் தெரிவானேன். அறிவிப்பு என்னைக் கவர்ந்த துறை. அதேநேரம் பத்திரிகைத் துறையும் மிகவும் கவர்ந்தது. இரண்டிலுமே ஈடுபாடு காட்டிய போதிலும் நான் ஒர் ஆசிரியையாக இருப்பதனாலும் உயர் கல்வியைத் தொடர்வதனாலும் முழுமையாக அறிவிப்புத் துறையிலும் பத்திரிகைத் துறையிலும் தடம்பதிக்க முடியாது போனது வேதனைக்குரியதாகும்.

இருந்தபோதிலும் பாடசாலை நேரம் தவிர்ந்த நேரங்களில் அறிவிப்பில் ஈடுபாடு காட்டி வருகிறேன். ஆசிரியத் தொழிலினை நான் விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை. சட்டபீடத்திற்கான வெட்டுப்புள்ளி போதாமையே நான் கல்வியியல் கல்லூரி செல்ல வேண்டிய தேவையினை ஏற்படுத்தியது. ஆனாலும் சளைக்காமல் இரண்டு முறை சட்டக்கல்லூரி நுழைவுப் பரீ்ட்சையினை எழுதியிருக்கிறேன். விரும்பியது கிடைக்காவிட்டாலும் கிடைத்ததை விரும்பி மிக நேர்த்தியாகச் செய்கிறேன். அதனால்தான் அதிக வருமானத்தை ஈட்டித்தரும் பல சந்தர்ப்பங்களை இழந்துமிருக்கிறேன். 

பாடசாலை நேரம் என்பது எனக்கு மிகவும் முக்கியமானது. ஆயினும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுயாதீன ஊடகவிலாளராகவும் அறிவிப்பாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன். கற்கும் காலத்திலிருந்தே கவிதை, கட்டுரை சிறுகதை விவாதம் போன்ற துறைகளில் ஈடுபாடு காட்டி வந்தேன், இப்போது வானொலி நாடங்களில் விருப்பத்துடன் நடித்து வருகின்றேன். இஸ்லாமியக் கலாசார உடையில் தொலைக்காட்சி செய்தியளிக்க வேண்டுமென்பது எனது அவா.

கேள்வி: பல திறமைகளையும், ஆற்றல்களையும் தன்னகத்தே கொண்டுள்ள பெண்சமூகம் திருமணத்தின் பின்னர், அத்துறைகளில் இருந்து ஒதுங்கிக்கொள்கின்றார்கள். இதற்கான காரணம் என்ன?

பதில்: இந்த விடயம் என்னைப் பாதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். திருமணம் என்பது வேறு, திறமைகள் ஆற்றல்கள் என்பது வேறு. திருமணத்திற்கு முன்னராயினும் சரி, பின்னராயினும் சரி பெண் பெண்ணாகவே இருக்கிறாள். அவளின் வகிபங்குதான் மாறுகின்றது. தன்னுடைய திறமைகளையும் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு தன் துணையினை அமைத்துக்கொள்கின்ற போது இத்தகைய கேள்விகளுக்கு இடமிருக்காது.

ஆக பெண்ணானவள் தனது திறமைகளுக்கும் ஆற்றல்களுக்கும் திருமணத்தினை முட்டுக்கட்டையாகக் கருதுகிறாள், அடுத்தது வேலைப்பலு குடும்பச் சுமை குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய தேவைகள் அதிகரிக்கின்றபோது அவள் ஒதுங்கிக் கொள்வதையே தெரிவு செய்கிறாள். திருமணத்தின் பின்னர் இலக்கியச் செயற்பாடுகள் தேவைதானா என்று கேட்கும் சமுதாயத்தில் அவள் சிறைப்படுகின்ற போதும் ஒதுங்கிக் கொள்கின்றாள். இவை எல்லாவற்றையும் தாண்டித்தான் மற்ற பெண்கள் தம்மை சவாலுடன் சமுதாயத்தில் அடையாளப்படுத்துகின்றார்கள்.

கேள்வி: ஆசிரியையான நீங்கள் மாணவர்களின் உளப்பாங்ககை நன்கு அறிந்து வைத்திருப்பீர்கள். தற்கால கல்வி நடவடிக்கைகள் மாணவர்களுக்கு சுமையாக இருப்பதாக பெற்றோர் சார்பில் அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது. இது எந்தளவு தூரம் உண்மை?

பதில்: நான் இடை நிலை வகுப்பு ஆசிரியையாக இருப்பதால் ஆரம்ப வகுப்பு மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பெற்றோரின் குறைபாடுகள் பற்றி அனுபவரீதியாகக் கூற முடியாது. பொதுவாகப் பார்க்குமிடத்து இன்றைய கல்வி முறைமையின் கற்றல் கற்பித்தலில் ஆசிரியரின் வகிபங்கு உருமாற்றப் பங்களிப்பு ஆகும். ஆக ஆசிரியர் கற்பதற்கும் கற்பதைத் தூண்டுவதற்குமான வழிகாட்டியாக உள்ளார். மாணவர்கள் தேடிக்கற்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலையினை புதிய கல்விச் சீர்திருத்தம் ஏற்படுத்தியுள்ளது. இதைனையே பெற்றோர் சுமையெனக் குறை கூறுகின்றனர். தேடிக் கற்பதன் மூலமே தலைசிறந்த மாணர்கள் உருவாக முடியும்.

ஆகவே பயிற்சிகளையும் செயற்றிட்டங்களயும் சுமையாகக் கருதாது மாணவர்கள் ஈடுபடுவதுடன் பெற்றோரும் அதற்குத் துணை செய்ய வேண்டும். அத்துடன் ஆசிரியர்கள் மாணவர்களுடன் கழிக்கும் நேரம் மிகவும் சொற்பமானது, ஒரு நாளில் கிட்டத்தட்ட 7 மணித்தியாலங்களேயாகும். அந்தக் குறித்த நேரத்திற்குள் ஆசிரியர் வழிகாட்டியாகவும் மாணவர் தேடிக் கற்பவராகவுமே செயற்பட வேண்டும்.ஆனால் இங்கு மாணவர்கள் அனைத்தையும் ஆசிரியரிடமிருந்தே எதிர்பார்ப்பதும் அது நிறைவேறாது விடுமிடத்து சுமையாகவும் அவர்கள் கருதிக்கொள்கின்றார்கள்.

கேள்வி: நீங்கள் தடம்பதித்தமைக்காக பெற்றுக்கொண்ட விருதுகள் மற்றும் சாதனைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்?

பதில்: கொழும்பு பல்கலைக்கழத்தில் 2006ஆம் ஆண்டு இதழியல் டிப்ளோமாவினைப் பயின்ற நான் திறமைச்சித்தி பெற்றதுடன் ஊடகத்தில் ஆக்க எழுத்து எனும் பாடத்திற்கு பேராசிரியர் ஹிடியோ சுமிசி நம்பிக்கை நிதியவிருதினையும் வென்றேன்.

தேசிய கவிஞர்கள் சம்மேளனம் “காவ்யஸ்ரீ“ என்ற கௌரவ நாமத்தினை வழங்கிக் கௌரவித்துள்ளது. இந்தியாவில் ஷர்மா நகர்வியாசர்பாடியில் நடைபெற்ற இலக்கியக் கூட்டத்தில் அறிவிப்புத் திறனைப் பாராட்டி தமிழ்நாட்டு இலக்கியவாதிகளால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டேன். பல விருதுகள் ஏன் கொடுக்கப்படுகின்றது என கொடுப்பவர்களுக்கும் தெரியாது பெறுபவர்களுக்கும் தெரியாது அதனால் பல விருதுகளை மறுதலிக்க வேண்டியேற்பட்டது. விருது பெறுமளவிற்கு இன்னும் நான் சாதிக்கவில்லை என்று கருதுகிறேன், சாதிப்பதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. கலாநிதிப்பட்டப்படிப்பை புர்த்தி செய்வதுதான் எனக்கான உயரிய பெறுமானமாகக் கருதுகின்றேன். 

கேள்வி :ஊடகத்துறையில் பெண்களின் ஆர்வமும் ஆதிக்கமும் எவ்வாறு காணப்படுகின்றது?

பதில்: என்னைக் கவர்ந்த துறைகளில் ஊடகத்துறையும் ஒன்று. ஆங்கிலத் திரைப்படங்களில் புலனாய்து ஊடகவியலாளர் பாத்திரங்களைப் பார்க்கின்றபோது என்னை நான் அப்பாத்திரமாகக் கற்பனை செய்துகொள்வேன். அவ்வாறு வரவேண்டும் என்ற அவா என்னுள் சுடர்விட்டுக் கொண்டிருந்தாலும் இங்குள்ள சூழலில் ஒரு சிறுபான்மையினப் பெண் அதில் சாதித்தல் என்பது குதிரைக் கொம்புதான்.

ஊடகத்துறையில் தற்காலத்தில் பெண்களின் ஆதிக்கமும் ஆர்வமும் அதிகரித்திருக்கின்றதென்றே சொல்லலாம். ஊடக உயர்கற்கைகளுக்கான வாயில்கள் நம் நாட்டில் திறக்கப்படாதிருப்பதும் அதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படாதிருப்பதும் துரதிஸ்டமானது. இருக்கும் வளங்களைக் கொண்டு இலத்திரணியல் மற்றும் அச்சு ஊடகங்களில் பெண்கள் மிளிர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கல்வித் தகைமையும், வாசிப்பும் தேடலும் ஆய்வும் இல்லாமலும் கூட இங்கு பல பெண்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

கேள்வி: பெண்ணியம் என்ற கோட்பாட்டை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்? ஆண்களுக்கு நிகராக தமது திறமைகளை வெளிக்கொணரவும் சாதித்திடவும் பெண்களால் முடிகின்றதா?

பதில்: பெண்ணியம் என்ற கோட்பாடு மிகச் சமீபத்தில் தோற்றம் பெற்றது, இப்படிப்பட்ட கோசங்கள் தோற்றம்பெற மனிதர்களின் செயற்பாடுகளே காரணம். பெண்ணியம் என்ற கோட்பாட்டைப் பேச எனக்கு எந்த தேவையுமில்லை. அனைத்தும் எனக்கு சமமாகக் கிடைக்கின்றன. ஒரு முஸ்லிம் பெண் என்ற அடிப்படையில் கருத்து தெரிவிக்கின்ற போது பெண்ணுக்கு இயல்பாகக் கிடைக்கப்பெற்ற குணாம்சங்களோடு இஸ்லாமிய வரையறைக்குள் நான் மிகவும் பாதுகாப்பாகவும் தெளிவாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறேன்.

ஆண்களுக்கு நிகராக என்னாலும் செயற்படவும் திறமைகளை வெளிக்காட்டவும் முடிகின்றது. இஸ்லாம் அதில் எந்தத் தடங்களையும் ஏற்படுத்தவில்லை. அதனால் பெரிதாக இங்கு எந்தத் தடங்களையும் எதிர்நோக்கவில்லை. இருப்பினும் திறமைகளை வெளிக்கொணரும் போது காழ்புணர்ச்சியின் காரணமாக வீழ்த்த முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள் அது பெண்கள் ஆண்கள் என்ற வேறுபாடு இல்லையே. இங்கு எந்த ஆதிக்க கோட்பாட்டை முன்னிறுத்துவது?

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தில் “பெண்ணுலகம்” நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய காலங்களில் பலநூறு பெண்களைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது பெற்றுக் கொண்ட அனுபவங்களில் இருந்து ஒன்றைச் சொல்ல முடியும். இப்போது பெண்ணியம் பேசுகின்றவர்களின் அனுபவங்களல்ல அவர்கள் எதிர்கொண்டது. அவர்கள் சவால்ளை எதிர்கொள்ளத் தெரிந்தவா்களாய் இருந்தார்கள். ஆனால் தன்னைத் தனித்துவ அடையாளச் சின்னமாகக் காட்டப்போய் எல்லை கடந்து சிந்திக்கிறார்கள். சமய வரையறைகளைத் தகர்த்தெறிந்துவிட்டுச் செல்ல முயல்கின்றனர். அத்துடன் பெண்ணியம் என்பது பல முரண்பட்ட கூறுகளுடன் பயணிப்பதையும் அவதானிக்கிறேன். முரண்பாடு இருக்குமிடத்தில் பிரச்சினை எழுவதும் எதிர்கொள்ள நேர்வதும் இயல்பானது. இருப்பினும் பெண் சாதிக்க முயலும் போது ஆண்களின் தலையீடும் முறையற்ற விமர்சனங்களும் பெண்ணியம் பேசுவதற்கு வாய்ப்பாக அமைகின்றது.

கேள்வி: எழுத்தாளரான நீங்கள் எவ்வகையான நோக்கங்களோடும் எத்தளங்களில் நின்றுகொண்டும் உங்கள் படைப்புக்களை சமூகத்திடம் எடுத்துச் செல்கின்றீர்கள்?

பதில்: படைப்புத்திறன் அனுபவங்களால் ஆளப்படுவது. அனுபத்தின் திரட்சியும் வீச்சும் படைப்புக்களில் எதிரொலிக்கும். ஒருவரின் படைப்பாற்றலும் படைப்பின் கனதியும் அனுபவத்தின் கனதியைக் கொண்டே வெளிப்படும். அது வெளிப்படுத்தப்படும் தளங்கள் பல்வேறு தரப்பினரால் தமக்கேற்ற தளங்களுக்குள் வகைப்படுத்தப்படும். என்னைப் பொறுத்தவரைக்கும் நான் இஸ்லாமிய வரையறைகளுக்குள் நின்று சுதந்திரமாகப் படைப்புத் தளத்தினைத் தீர்மானித்துக் கொள்ள முடியும்.

வாசிக்க கூசும் படைப்புலகத்திலிருந்து விடுபட்டு சமுதாய மாற்றத்தினை நோக்காக் கொண்டு எனது படைப்புக்களை நிறுவ முயல்கிறேன். எனது படைப்புக்கள் சமூகத்தில் சிறிதாய் ஒரு சீர்திருத்தத்தினை ஏற்படுத்தினாலும் போதும். அந்த அடிப்படையிலேயே நிலவின் கீறல்கள் எனும் கவிதைத் தெகுதியையும் அதன் ஒலிப்புத்தகத்தையும் வெளியிட்டேன்,

கேள்வி: மேலைத்தேய கலாசாரத்தின் ஊடறுப்பினால் எமது கலை, கலாசார பண்பாட்டுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: மேலைத்தேய கலாசாரம் முற்றுமுழுதாகக் கீழைத்தேய கலாசாரத்துடன் மாறுபடுகின்றது, கீழைத்தேயக் கலாசாரம் சமயக் கோட்பாடுகளாலும் கூறுகளாலும் கட்டியாளப்படுகின்றது, இதன் காரணமாக சிதைவுகளை அவ்வளவு எளிதில் மேலைத்தேயக் கலாசாரத்தால் ஏற்படுத்த முடியாது. மேலைத்தேயக் கலாசாரத்தை நவீன நாகரீகமாகக் கருதுகின்ற போக்கு துரதிஸ்டமானது. உலகமயாக்கலின் நேரடிவிளைவுகள்தாம் அவை.

ஆடைக்குறைப்பு மேற்கின் மேம்பட்ட அம்சமாகக் கருதப்படுகிறது. நமக்கு அது ஒவ்வாது. அங்கு நிர்வாணமாகத் திரிதலும் யாரும் யாரோடும் எத்தனை முறையும் எப்படியும் எங்கும் இருக்கலாம் என்பது மேற்கிற்கு சர்வசாதாரணமானது. இங்கு அது தரம்கெட்ட சமாச்சாரம் கற்பு சார்ந்தது. வாழ்க்கைக்கென்றுள்ள ஒழுங்குகளை மேற்கு மறுதலிக்கிறது. ஆனால், கிழக்கு அந்தக் ஒழுங்கினுள் தன்னைப் பத்திரப்படுத்திக் கொள்கின்றது.

சமய மறுப்பும் கூட தம்மை நவீனவாதிகளாகப் பலர் அடையாளப்படுத்தப் பயன்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டது. புதிய உலக ஒழுங்கினுள் மொழிகளை நோக்கிய ஆங்கிலத்தின் பாய்ச்சல் அபரிமிதமானது, சுகர் போடவா? பாத் பண்ணிங்களா? ரைஸ் சாப்பிட்டிங்களா? சிலீப் பண்ணுங்க, அவுட் போகனும் இப்படி ஆங்கிலத்தின் அரிப்பு நமக்குள்ளும் தொற்றிக் கொண்டுள்ளது, அதன் விளைவு சில விடயங்களை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரியும் என்ற நிலையும் தோற்றம் பெற்றுவிட்டது, ஆங்கிலம் மொழி என்பதிலிருந்து நவீனநாகரிகத்தின் தவிர்க்கமுடியாத கூறாகிவிட்டது. 

அத்துடன் கலையினுள் மேற்கின் வடிவங்களை வைத்தே நமது கலைக்கூறுகளை மட்டிடும் அபாயம் தோன்றிப் பல காலமாகிறது. மேற்கின் கலைவடிவங்களை, அது எத்தகைய குப்பையாக இருப்பினும் நவீனமாகப் பார்க்கும் நமது ஆய்வாளர்களிற் பலர் நமக்குள்ளிலிருந்து வெளிப்படும் புதுமைகளை மறுதலிக்கும் போக்கினைக் கொண்டுள்ளனர், மேற்கில் கிடைக்கும் அங்கீகாரம் உலக அங்கீகாரம் என்ற நிலைக்குப் போய்விட்டது, இது காத்திரமானதல்ல அபாயமிக்கது நம்மையெல்லாம் புச்சியத்தில் நிறுத்தி மேற்கிடம் எதிர்பார்த்து நிற்கும் பொம்மைகளாக்கும் போக்காகும். எனவே, விழித்துக் கொள்வது அவசியம் இப்போதுள்ள உலக யுத்தம் கலாசாரங்களுக்கிடையேயானது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

கேள்வி: மேடையில் அறிவிப்பாளக இருந்த அனுபவங்கள் பற்றி?

பதில்: மேடை அனுபவங்கள் சுவாரஷ்யமிக்கவை. பாடசாலைக் காலத்திலிருந்தே நான் மேடைகளுக்குப் பரிட்சயமாகிவிட்டேன். கல்லூரிப் படிப்பின்போது அதில் இன்னும் செம்மைப்பட முடிந்தது. அத்துடன் வானொலி அறிவிப்பாளரான பின்னர் பல புதிய அனுபவங்களால் புடம்போடப்பட்டேன். பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறேன். அதிலும் விருது வழங்கும் மேடைகளில் அறிவிப்புச் செய்வது தனிக்கலை. சகோதர மொழியும் தமிழும் கலந்த விழாக்களே நகைச்சுவைமிகுந்தவை.

எந்தவிதத் தயார்படுத்தலும் முன்னேற்பாடுகளுமின்றி அந்த இடத்திலேயே நம்மைத் தயார்படுத்திக் கொண்டு தொகுத்து வழங்க வேண்டும்.அது சவாலானதும் கூட. அதே நேரம் பல முரண்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். விழா ஏற்பாட்டுக்குழு விடுகின்ற எல்லாத் தவறுகளையும் அறிவிப்பாளர்களே சுமக்கவேண்டியும் ஏற்படும். இவ்வாறான பொழுதுகளில் பார்வையாளர்கள் குற்றம்குறைகளை அறிவிப்பாளர்கள் மீதே சுமத்திச் செல்வர் அது ரொம்பக் கஷ்டமானது. எவ்வளவு பெரிய அனுபசாலியையும் அது கொஞ்சம் ஆட்டிப்போட்டு விடும்.

பல சந்தர்ப்பங்களில் அவசர அவசரமாகவே அறிப்பாளர் தேடுவர். அங்குதான் தயார்படுத்தல் புரணமாகியிருக்காது, சிலர் மிக நேர்த்தியாகத் தி்டடமிட்டு அறிவிப்புச் செய்ய வேண்டியதை தட்டச்சு செய்து தருவர் இது நிகழ்வைத் தொய்வின்றிக் கொண்டு செல்ல பெரிதும் துணைபுரியும். 

கேள்வி: உங்களது வளர்ச்சியில் குடும்பத்தின் ஆதரவு பற்றி...?

பதில்: இதனைத் திருமணத்திற்கு முன் திருமணத்திற்குப்பின் எனப் பிரித்துப் பார்க்கவேண்டும். எனது மூத்த சகோதரிதான்என்னைப் பாடசாலைக் காலங்களில் கட்டியாண்டவர். அவர் சகல துறைகளிலும் என்னை புடம்போட்டார். ஊக்கப்படுத்தும் பொறுப்பைத் தாயும் நெறிப்படுத்தும் பொறுப்பை மூத்த சகோதரியும் சுமந்திருந்தனர்.

திருமணத்தின் பின்னர் கணவர் முஸ்டீன் என்னை புடம்போட்டவர். நீ முன்னேற வேண்டும் கல்வியில் இலக்கியத்தில் எந்த உச்சம்வரைச் செல்ல முடியுமோ அதுவரைச் செல்ல வேண்டுமென்பார். அவரது உபதேசங்கள் என்னை நிலைகுலைந்து போகாமல் நிலைநிறுத்தின.

கவிதாயினி ஷாமிலா அவர்களின் அண்மைய கவிதைகளில் ஒன்று துருவம் வாசகர்களுக்காக‌

தலைப்பிடப்படாதது..
உன் வாய்ப்பட்ட சேதியெல்லாம் 
தாவம் போற் பரவிற்று 
இளிவரல் பட்டு உன் 
இழுக்கம் மிக்கதான செயல் 
இன்னும் தான் உனக்குப்புரியவில்லைபோ 

குளநெல் போல் தலைப்படும் திறன் 
இறையளித்த கொடையாய் நிலைப்பட்டது 
குழகுதற் பாங்கும் குறுநகையும் 
குலிலி போலொலித்திடும் 
கருமை படிந்த உள நஞ்சு ஆகாதடா 

சரண் புத்தி ஒவ்வா நிலைக்கிட 
சரணம் ஒரு வழி தான் 
பதங்கள் ஒளி பட்ட பனித்துளி போல 
பண்டம் குறிக்கும் ஆறில் ஐந்தழியும்
பதனமில்லா நாவுக்கு நீயே பொறுப்பு

(நேர்காணல்: ராஜ் சுகா)