Wednesday, April 30, 2014

வலிகள்கூட வழிகள்தான்

வாழப்பழகிக்கொண்டால்
வலிகள்கூட வழிகள்தான்
காலத்தைப்பழிசொன்னால்
கதவுகள்கூட தடைகள்தான்



Tuesday, April 29, 2014

கவிதைகள்

பற்றியது கண்ணீர்
பிரகாசித்தது கவிதைகள் -அது
ஒற்றியது கன்னத்தை
ஒளிர்ந்தது எதிர்காலம்



Monday, April 28, 2014

அட கட்டையில போக‌...

இரவு 7மணிக்குப்பின் வெளியில் சென்றுவரும், முகநூலில் இருக்கும், தொலைபேசியில் பேசும் போன்ற இதர வேலைகளில் ஈடுபடும் பெண்கள் பற்றி நாகரிக வளர்ச்சியடைந்த சமூகத்தின் பார்வையில் ஆரோக்கியம் இல்லை. கோணலும் மாணலுமாய் கொள்ளிக்கட்டைவைக்குமளவுக்கு கொடுரமாய் இருக்கிறது அதற்கு ஒரு சிறிய உதாரணம்.

சுவாரஸ்யமான ஒரு கவிதை நூலினை வாசித்த களைப்போடு அதன் விமர்சனத்தையும் எழுதவேண்டுமென நினைத்து அதனையும் நிறைவேற்றிவிட்டு நிமிர்கையில் நேரம் இரவு பத்துமணியை தாண்டிவிட்டது. அப்போதுதான் தெரியும் நூலின் முகப்பட்டை என்னிடம் இருக்கவில்லை எப்படி இதனை பிரசுரிப்பது என எண்ணியவாறு நூலாசிரியருக்கு குறுஞ்செய்தியனுப்பினேன் மின்னஞ்சலில் முகப்பட்டையை அனுப்புமாறு. குறுஞ்செய்தி 'நான் போய்விட்டேன்' என்று சைகை காட்டியபின்னர்தான் என் மண்டைக்கு ஒரு விடயம் உறைத்தது. இத்தனை மணிக்கு ஒரு ஆண் நண்பருக்கு அதுவும் முதன்முதலில் குறுஞ்செய்தி அனுப்புகின்றோமே அவர் என்னைபற்றி என்ன நினைப்பார் ஏதாவது தவறாக நினைக்கக்கூடுமோ என அங்கலாக்கத்தொடங்கினேன். "அட இந்த பொண்ணு என்னடா, ஏன் அப்படி யோசிக்கிறீங்க உங்கள யார் தப்பா நினைக்கபோறாங்க அல்லது தப்பா நினைக்க இதில் என்ன இருக்கின்றது?" என்று நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் அப்படி ஒரு எண்ணம் எனக்கு முதன்முதலாய் வருவதற்கு ஒரு பெரிய காரணம் இதுதான்.

அந்த பெண்மணி சமூசத்தில் மிக உயர்ந்த‌ பதவியில் இருக்கும் ஒருவர் சமூகத்திற்கு பிரயோசனமான பல தளங்களில் செயலாற்றும் ஒருவர். அதிகாலைமுதல் வீடுவேலைகளோடு போராடி பின்னர் தொழில், பொறுப்புக்கள், கடமை, குழந்தை என இயங்கிவிட்டு இரவு வேளைகளிலே தனது இதர விடயங்களைக்கவனிப்பார் பத்திரிகை, முகநூல், எழுத்து போன்றன அப்படி ஒருநாள் இரவு முகநூலினை பயன்படுத்தும்போது (அவர் நேரத்தை கவனிக்கவில்லை) ஒரு ஆண் அவருக்கு ல் செய்தியனுப்பிக்கொண்டிருந்தார் தனது தந்தை வயதிலிருக்கும் ஒருவர் என்ற ரீதியில் அவரும் பதிலளித்திருக்கின்றார் சில கேள்வி பரிமாற்றத்தின் பின்னர் அவர் தவறான எண்ணங்களுடன் வார்த்தைகளை பிரயோகித்திருக்கின்றார் அதற்கு நல்ல பதிலடியினை கொடுத்துவிட்டு நேரத்தைப்பார்க்கையில் நேரமோ பன்னிரெண்டை தாண்டிக்கொண்டிருக்கின்றது இந்த நேரத்தில் ஒரு பெண் முகநூலில் இருப்பதுகூட தவறான சிந்தனையை ஏற்படுத்துமா? இரவு 7 மணிக்குப்பின்னர் பெண்களின் தரம் கணிக்கப்படும் விதங்கள் சரியானதா? இதற்கான விடை கிடைக்கப்போவதில்லை இப்படிப்பட்ட பார்வைகள் மாறுவதற்கு இந்த கருத்துமட்டும் போதுமானதில்லை என்பதும் எனக்கு தெரியும் ஆனாலும் ஆதங்கத்தை கொட்டிக்கொள்வதற்காக மட்டுமே இந்தப்பதிவு, திருத்துவதற்காக அல்ல......





Sunday, April 27, 2014

'யசோதரா வித்தியாலய' த்தின் நம்பிக்கை நாயகி....

       



நாளைய தலைவர்களென நாம் நாளாந்தம் பிரயத்தனம் கொள்வதும், அவர்களை சமூகத்திற்கு சிறந்தவர்களாக கொண்டுசேர்ப்பதும் இன்றைய தலைவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது என்பதனை எத்தனைபேர் உணர்ந்திருக்கின்றோம்? குடும்பத்திலிருந்து ஆரம்பித்து சமூகத்தின் பல கட்டங்களிலும் இப்பொறுப்பினை உடையோர் பலர். இதில் மிக முக்கியமாக 'பாடசாலை' எனும் கட்டமைப்பே ஒரு நல்ல பிரஜையின் வாழ்க்கைக்களமாக அங்கம் வகிக்கின்றது.

எத்தனை பாடசாலைகளில் இதனை காணமுடிகின்றது எத்தனை அதிபர், ஆசிரியர்கள் இவ்விடயத்தில் உதாரணமாக திகழ்கின்றார்கள் என்பதனை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதுபோல அத்தொகையினரை கண்டுகொள்வதும் எமது கடமையே ஏனெனில், அவர்களின் சேவையினையும் கடமைகளையும், உழைப்பு தியாகங்களையும் உலகறியச்செய்யவேண்டும் இது அவர்களின் முகஸ்துதிக்காக அல்ல, இவர்களை மற்றவர்களுக்கு உதாரணக்கர்த்தாக்களாக படிப்பினையாக பறைசாற்றவேண்டும்.

இப்படியான பொறுப்புவாய்ந்த இன்றைய தலைவர்கள் நம்மத்தியில் அநேகர் இருந்தாலும் இங்கு நான் குறிப்பிட்டுச்சொல்ல வருவது, இவரைத்தான் இலங்கையின் தலைநகரில் பிரசித்திபெற்ற பெண்கள் பாடசாலையான (சகோதரமொழி) 'யசோதரா வித்தியாலயம்'. இது சுமார் 168 வருட பழமைவாய்ந்த தற்போது அபரிதமான வளர்ச்சிகண்டுள்ள பாடசாலையின் அதிபர், கேர்னல் திருமதி அஜந்தா குமாரி பகாத்கும்புர அவர்களே.

சட்டம், நீதி, நேர்மை, கடமை பொறுப்பு என்பவற்றிற்கு ஒரு உருவத்தை காட்டவேண்டுமென்றால் இவ்வதிபரை முன்னிறுத்துவது பொறுத்தமாக இருக்கும். பாடசாலை என்பது என்ன? மாணவர்கள் என்பவர் யாவர்? ஆசிரியர்களின் கடமை என்ன? மாண‌வர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான தொடர்பு என்ன? என்பதனை ஒவ்வொரு செயற்பாடுகளிலும் உணர்த்துபவராக வலியுறுத்துபவராகவே அதிபர் அவர்கள் செயற்படுகின்றார். ஊழல்கள் குற்றங்கள் நடைபெறுகின்ற அதியுன்னத பதவிகளில் இப்பாடசாலை அதிபர் விதிவிலக்கானவர்.

பாடசாலை வளாகம், வகுப்பறைகள், நூலகம் மற்றும் இதர வசதிகளை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் முனைப்பாக இருக்குமிவர், ஒவ்வொரு பாடவேளைகளும் எவ்வளவு முக்கியம், அதில் மாணவர்களின் வாழ்க்கை, எதிர்காலம்  தங்கியுள்ள விதங்களை புகுத்திக் கொண்டேயிருப்பதால்  சில ஆசிரியர்கள் இவரோடு முரண்பட்டு கோபப்பட்டாலும் தக்க சமயங்களில் அதிபரின் கருத்துக்கள் செயற்பாடுகளில் இருக்கும் உண்மையினை ஏற்றுக்கொண்டதும் இல்லாமலில்லை. அடிக்கடி கூட்டப்படும் ஆசிரிய ஊழியர்களின் பொதுக்கூட்டத்தில் மாணவர்களின் நலனைப்பற்றிய கருத்துக்களையே அதிகமாக சுட்டிக்காட்டி ஆசிரியர்களை எச்சரிப்பவராகவே தெரிகின்றார். பொதுவாகவே இவரின் தொழில் தர்மத்தின் பரந்துபட்ட கோர்வைகளை புள்ளியிடல் மூலம் தெரிவிப்பது பலருக்கு படிப்பினையாகவும் சுருக்கமாகவும் இருக்குமென நினைக்கின்றேன்.

01. நீங்கள் வாங்கும் சம்பளத்திற்கும் மனசாட்சிக்கும் உண்மையாக உழைக்கின்றீர்களா?

02. மாணவர்களின் பள்ளிக்காலத்தின் முக்கியத்தைக்கூறி, எந்த ஒரு மாணவியையும் எந்த செயற்பாட்டிலிருந்தும் ஒதுக்காமல் ஏதாவதொரு நிகழ்வில் புகுத்தியே ஆகவேண்டுமென்பது இவரின் கொள்கை. படிக்கமுடியாத ஒரு மாணவி வேறு துறைகளில் ஆர்வமுள்ளவளாக திறமையுள்ளவளாக இருக்கலாம் அதனை கண்டறிவது ஒவ்வொரு ஆசிரியரினதும் கடமை.

03. வகுப்பில் மாணவர்கள் அடங்காமல் குரலெழுப்பிக்கொண்டிருப்பது ஆசிரியர்களின் பெருங்குறையே அவர்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது எவ்வாறு என்பதனை அறிந்துவைத்திருக்கவேண்டும். (வன்மையாக தண்டிப்பதும், அடிப்பதும் கட்டாயமாக விலக்கப்பட்டுள்ளது)

04. எல்லா மாணவருக்கும் சந்தர்ப்பம் வழங்கவேண்டும்

05. மாதாமாதம் செய்யவேண்டிய ஒப்படைகள், கணிப்பீடுகள் என்பன காலக்கிரமத்தில் செய்துமுடித்திருக்கவேண்டும்.

06. எந்த ஒரு விடயத்திலும் 100% நேர்த்தியையும், காலத்திற்கு செய்துமுடித்திருக்கவும் வேண்டும்

07. வகுப்பறையில் ஆசிரியர் உட்கார்ந்துகொண்டு கற்பிக்கக்கூடாது நின்றுகொண்டு சகலரையும் தம் பார்வையில் கணித்துக்கொண்டேயிருக்கவேண்டும்.

08. ஒழுக்கமும் ஒழுங்குவிதிகளும் சற்றேனும் பிரளாமல் நடக்கவேண்டும்.

09. ஆசிரியர்கள் மாணவர்களிடம் நண்பர்களாக அல்ல நல்ல ஆசானாகவே பழகவேண்டும்.

10. பாடசாலையே அனைத்திற்குமான களம் இக்காலகட்டத்தில் மாணவர்களுக்குள்ள திறமைகள் அத்தனையும் வெளிக்கொணரப்பட்டு பயிற்றப்படவேண்டுமென்ற‌ தாரகமந்திரம் மெய்ப்படவேண்டும்.



என்று சீரான திட்டங்களும் வரைமுறைகளையும் கொண்டுள்ள இவ்வதிபர், பல ஊடக அச்சுறுத்தல்களுக்கும், மொட்டைக்கடதாசிகளுக்கும் உட்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'காய்க்கின்ற மரத்துக்குத்தான் கல்லடி' என்பதற்கிணங்க அவர் இதற்கெல்லாம் சளைத்து ஒதுங்கிவிடவுமில்லை, விலகி வழிவிடவுமில்லை. நேர்பட்ட வழிகளில் இடறல்களுக்கும் குறுக்கீடுகளுக்கும் வலிமையில்லை என்பதனை ஆணித்தரமாக நிரூபித்து தனது செவ்வையான வழியில் நாட்டுக்கும் நாளைய தலைமையுருவாக்கத்திற்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கின்றார். ஒரு பெண்ணாக சாதித்துக்கொண்டிருக்கும் இத்தலைவியானவர் சரித்திரத்தின் நாயகியே

இவரின் கொள்கைகள் நம்நாட்டில் பல பாடசாலைகளுக்கு படிப்பினையாகட்டும், ஆசிரிய சேவையின் மகத்துவங்கள் அறியப்படட்டும். 'ஆசிரியத்துவம்' என்பது வெறும் பணமீட்டும் தொழில் மட்டுமல்ல, அது தியாகம், கடமை, பொறுப்பு, அர்ப்பணிப்பு, தாய்மை இப்படித்தான் இத்தொழில்புரிவோர் யாவரும் உணரவேண்டும். அதனை சரியாக உணர்ந்து செயற்படும் அதிபர் அஜந்தா குமாரி பகத்கும்புர அவர்களைப்போல‌    சகல பாடசாலைகளிலும் தலமைத்துவம் இருக்குமாயின் குறைபாடுள்ள ஆசிரிய, மாணவ சமூகங்கள் தழைத்தோங்கும். இதுவெறும் அதிபருக்கான பாராட்டல்ல சகலருக்குமான பாடம் இதைப்போன்று இலைமறைகாயாக இருக்கும் ஏனைய தலைமைத்துவங்களையும் கண்டறிவோம் அந்த விளக்குகளை மலையுச்சியில் ஏற்றிவைப்போம் பல இரு(ளு)ளில்லங்கள் பிரகாசிக்கட்டும்

இனம் மதம் மொழி கடந்து மனிதர்களைத்தேடி மகத்துவங்களை மட்டுமே நாடிக்கொண்வோம் நாளைய எதிர்காலம் நமதாகட்டும்.



நன்றி
த.ராஜ்சுகா



Friday, April 25, 2014

காதலுக்கு கண்ணில்லையென்று??

காதலிக்கவென்றால் ஒரு
பொண்ணுமட்டும் தேவை -அவளை
கல்யாணம் கட்டவேண்டுமென்றாலோ,

அழகிருக்கனும் கொஞ்சம்
அந்தஸ்துமிருக்கனும்

படித்திருக்கனும் லேசாய்
பளபளப்புமிருக்கனும்

தொழிலிருக்கனும் அதிலும்
கொழுத்த வரவிருக்கனும்

மெலிவாயிருக்கனும் மேனி
பொழிவாயுமிருக்கனுமாம்

ம்ம்ம்ம்
இதுக்குத்தான் சொன்னார்களோ

காதலுக்கு கண்ணில்லையென்று??

அப்போ
கண்ணை மூடிக்கொண்டா காதலிக்கின்றார்கள்

அப்படியென்றால்
எதனை காதலிக்கின்றார்கள்??

தாக்கங்களும் பூக்களாகும்!!

உருண்டுவிழும் ஆலங்கட்டியாய்
திரண்டு உதிர்ந்த அத்துளிகள்
உருண்டை விழிகளை நிறைத்து
உள்ளக்காயத்தை ரணப்படுத்திக்கொண்டிருந்தது


இயலாமைகளை சுட்டிக்காட்ட‌
இமையிதழ்களில் கதறுவதே
இவளின்  வழமையாகிப் போனதில்
இப்போதெல்லாம் உடன்பாடேயில்லை


வெறும் ஏமாற்றங்களிலும்
வெறுமையான உறவுகளினாலும்
வெளிரிப்போன அவளுணர்வுகளில்
வெளித்தள்ளிக்கொண்டிருந்தது ஒருதுளிர்


அன்பெனும் முகமூடிதரித்த‌
அத்தனை திரைகளும் விலகியபின்
அவளுக்கென்ற ஒற்றைநாதம்
அசரீரியாய் ஒலித்தது
'நம்பிக்கை'யென்று


பயணங்களுக்கு மட்டுமுதவும் பாதணியாய்‍ அவளை
பயன்படுத்திக்கொண்ட சில பாதைகள்
படிவாசலில் கழற்றிவிட்டு சென்றதைக்கூட‌
பாடங்களுக்கான விளக்கங்களாவே ஏற்றுக்கொண்டாள்


இனியவள் வாசலுக்குள்
கோலங்களின் அலங்கரிப்பில்லை
இனியொரு வார்த்தையிலேனும்
காயங்களின் பரிசீலிப்பில்லை
தனியொரு சாம்ராஜ்யமுருவாக்கி
தரணிக்கெலாம் சொல்லிடுவாள்
தன்னம்பிக்கை உண்டெனில்
தாக்கமெல்லாம் பூக்களென்று!!

இலவசமாகவே

இயல்பாக
சுரக்கப்படுவதாலோ என்னவோ
இலவசமாகவே வழங்கப்படுகின்றது


Wednesday, April 23, 2014

கல்லறைகூட‌

என்
கல்லறைகூட‌
அழகாகத்தான் இருக்கின்றது -அது
கவிதைகளின்
கல்வெட்டாய் மாறிக்கொண்டிருப்பதால்!!
 



கடவுளிடம் சில கேள்விகள் கவிதை நூலுக்கான ரசனைக்குறிப்பு


   முல்லை மண்ணிலிருந்து நல்ல கவிதை நூலொன்றினை தழுவும் சந்தர்ப்பம் நம் ரசனைக்கண்களுக்கு கிடைத்துள்ளது. தீபன் என்ற கவிஞர் தன் மண்ணின்மீதுள்ள பற்று அன்பின் காரணமாக 'முல்லைத்தீபன்' என்ற பெயருடன் இலக்கியத்தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றார். கல்விச்சூழலில் வளர்ந்த கவிஞர் முல்லைத்தீபன் கலைச்சுவாசத்தில் வாழ்பவராகவும் இலக்கியத்தை நேசிப்பவராகவும் காணப்படுகின்றார்.

'கடவுளிடம் சில  கேள்விகள்' எனும் தனது முதலாவது நூலினை வெளியிட்டுள்ள கவிஞர் சாதாரண மனிதனாக நியாயமான கேள்விகளோடு கவிதைகளில் வெளிப்பட்டு நம்மையும் அடையாளப்படுத்துகின்றார். பிரச்சனை தோல்வி கண்ணீர் இழப்பு போன்ற வலிகளை கடக்கின்றபோது கடவுளை நொந்துகொண்டு அவரை கேள்விகேட்கின்ற இயல்பினை இயல்பாக வெளிப்படுத்துகின்றார். விடையினை வைத்துக்கொண்டு சில சந்தர்ப்பங்களில் கேள்விகளை உருவாக்குபவர்களாக நாம் இருக்கின்றோம் என்பதற்கும் இவரின் சில கவிதைகள் எடுகோலாக காணப்படுகின்றது

'வாழ்க்கை' எனும் ஆரம்ப கவிதையில் வாழ்க்கை பற்றிய சரியான புரிதலை தெளிவுபடுத்துகின்றார் கவிஞர்

வாழ்க்கை என்றால்
என்னவென்று
தெரிந்து கொள்ளவே
வாழ்வு முடிந்துபோகின்றது
இப்படியிருக்கையில்
எப்படித்தான்
வாழ்க்கை முழுமையாவது

 மனிதமனம் கற்றலை மறுதலிப்பதே இதற்கான ஒரு காரணம் எனலாம் எத்தனையோ வாழ்க்கை அநுபவங்களை பெற்ற அநுபவசாலிகளின் வழிகாட்டலை மதிக்க தவறிவிடுகின்றோம் இதில் சில படிமுறைகளை கடைபிடித்தாலே தவறுகளை களைந்து தகுதியானவற்றில் நாம் நுழைந்திடலாம் வாழ்வினையும் அநுபவித்திடலாம் என்பதே இக்கவிதையின் ஒரு படிப்பினை.


25 கவிதைகளடங்கிய இந்நூலில் கேள்விகளோடு புறப்பட்டுள்ள வேதனை விரக்தி என்பன வாசக உள்ளங்களோடு சமரிடுமென்பதில் ஐயமில்லை சொர்க்கம் நரகம் என்பது என்னவென வினவும் கவிஞர் அதனை இப்பூமியிலே இருப்பதாய் 'சொர்க்கமும் நரகமும்' என்ற கவிதையில் நிருவுகின்றார். 'மனிதம்' எனும் கவிதையில் மரித்துப்போகும் நிலையிலிருக்கும் மனிதத்தை பிரதிபலிக்கும் வரிகள் மனிதத்தை இறைவனாக பார்க்கும்விதம் பாராட்டச்செய்கின்றது.

'இறவாத வரங்கொண்ட‌
உனக்குத்தான்
இறைவன் என்றுபெயர்
ஒவ்வொன்றுக்குள்ளும் 
ஒவ்வொன்றாயிராதே
ஓராயிரமாயிரு
உதிக்கும் நன்னுலகம்
மதிக்கும் உன் புகழை

விடைகாணமுடியாத மனதை அரிக்கும் பல கண்ணீர்த்துளிகளை இறைவனிடமே கேள்வியாக வீசுகின்ற மனநிலை மனிதமனங்களுக்கு இயல்பாகவே  இருக்கின்றதுபோலும் 'தனிமை, விடியலைத்தேடி, குருட்டுக்கடவுள்கள்' போன்ற கவிதைகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. 

ஒவ்வொரு கவிதைகளுக்கும் நூலின் தலைப்புக்கேற்றாற்போல 'கேள்விக்குறியிலான' படங்கள் அழகாகவும் அதிகம் சிந்திக்கவும் வைக்கின்றது. வித்தியாசமான ரசனை பார்ப்பதற்கும் படிப்பதற்கும் ஒருவித உற்சாகத்தையே தருகின்றது எனலாம் அதிலும் ஒவ்வொரு கேள்விக்குறியும் ஒவ்வொரு உணர்வின் வெளிப்பாடாக கவிதைகளுக்கு பொருத்தமாக இருப்பது ரசனை.

காதல் கவிதைகள் வாசிக்கும்போது ஓர் வீரத்தனமான உண்மையான ஆத்மார்த்தமான மனஉணர்வினை வெளிப்படுத்துகின்றது போருடன் கலந்த காதலாக தெரியப்படுத்தியிருப்பதால் இன்னும் அவை வலிமைபெற்றதாக காணப்படுகின்றது. 'நீ எங்கே' என்ற கவிதையில் இவ்வுறுதியினை காணலாம்

இடப்பெயர்வினூடே நான்
இடிந்துடைந்து போனவேளை
இறுமாப்பு தந்தவள் நீ... 
                                                             என்ற இடைவரிகளோடு தொடர்ந்து

என்
இன்பத்துலும் துன்பத்திலும்
பங்கெடுத்துக்கொண்டவளே
நான் இங்கே
நீ எங்கே.....                                  என நிறைவுபெறுகின்றது.


நட்பு எனும் விடயத்தினை கடந்துவராதவர் எவரும் இருக்கமுடியாது அந்தளவிற்கு எல்லோரது வாழ்விலும் ஒரு தாக்கத்தை சாதகமாகவோ பாதகமாகவோ ஏற்படுத்தியிருக்கும் அதிலும் ஒற்றுமையான் மனமொத்த நட்பு கிடைப்பதென்பது பெரும் வரமே. இங்கும் கவிஞர் நண்பன் ஒருவனின் இதயத்தை எழுதிக்காட்டியுள்ளார் 'பிரிவு' எனும் கவியில் அறிமுகப்படுத்தியுள்ளார். 

அடையாளமிடப்ப‌ட்ட‌
அப்போதிலிருந்து எமக்குள்
இடைவெளியென்பது
என்றும் இருப்பதில்லையே
                                                                       என நட்பின் வலிமையை சொல்லி

சோதரா
நாமிருவரும் 
ஒன்றாகவே இருந்திருந்தால்
பிரிவு எனும் இவ்வலி
இடைவெளி தந்திராதே....      
                                                                   என முடித்திருக்கின்றார். நட்பின் ஆயுளுக்கு உண்மையும் ஒற்றுமையுமே அடிப்படையென்ற உண்மையினை எத்தனை அழகாக எடுத்துக்காட்டியுள்ளார் கவிஞர்.

இவ்வாறு ஒவ்வொரு கவிதைகளும் சமுதாய உணர்வுகளை மனித இதயங்களின் ஓசைகளை மொழிபெயர்ப்பவையாக அமைந்துள்ளது இறுதியாக 'கடவுளிடம் சில கேள்விகள்' கவிதை நூலுக்கு கனதியை சேர்த்துள்ளது அனைத்தும் ஆத்திரமான வரிகள். எங்கள் இயலாமைகள் தோல்விகள் கோபங்கள் துன்பங்களை இறைவனிடம் கொட்டித்தீர்த்து அநேக சந்தர்ப்பங்களில் நாம் தப்பித்துக்கொள்கின்றோம் அந்த ஆதங்கத்திலும் ஓர் அமைதி கிடைத்தேவிடுகின்றது

ஆயிரமாயிரம் மலர்களெடுத்து
ஆறுகாலப்பூசை செய்தோமே
இரத்த ஆற்றில்நாம்
வெற்றுடலாய் கிடந்தவேளை
ஒரு தடவையாவது
ஓடிவந்தாயா...?

                    வலிகள் நிரம்பி வலியும் வரிகள்.

கவிஞர் முல்லைத்தீபனின் 'கடவுளிடம் சில கேள்விகள்' கவிதை தொகுப்பானது அடர்த்தியான வரிகள், ஆழமான புரிதல்கள், இயல்பான நடையோட்டம், ஈர்த்துவிடும் உணர்வுமிக்க கவிதைகளாய் அழகுபெறுகின்றது
வாழ்வியலோடு தொடர்புபட்டு காணப்படுவதால் கற்பனைகளோ என வேறுபடுத்திபார்க்கமுடியாதளவிற்கு  யதார்த்தமாகவே படைக்கப்பட்டிருக்கின்றது. இந்நூலில் இன்னுமொரு சிறப்பம்சம்  கவிஞர் இத்தொகுப்பை சமாதானத்திற்கு சமர்ப்பித்திருப்பதே அதற்காக எழுதப்பட்ட வரிகளும் ஒருகணம் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றது. நூல் முழுவதிலும் ஓர் சோகம் வலுக்கட்டாயமாக வந்தமர்ந்திருப்பது கவலையளிக்கின்றது மீள வழி காணவேண்டும் இன்னும் கவிஞரின் வரிகள் சமூகத்தை உயிர்ப்பிக்கவேண்டும்.யதார்த்தத்தோடு இலகுவாக கவிதைகளை கையாளும் திறமைகொண்ட கவிஞரிடமிருந்து பல நூல்களை எதிர்பார்த்தவண்ணம் அவரின் எழுத்துப்பணிகளுக்கும் முயற்சிகளுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.



நூல்: கடவுளிடம் சில கேள்வவிகள்' கவிதை தொகுப்பு

ஆசிரியர்: முல்லைத்தீபன்

தொடர்புகளுக்கு:  Email- tholainokki@hotmail.com

                                      0771265859
விலை: 240/=









Sunday, April 20, 2014

எதிர்வீட்டு நாயும் என் ஏழை நாயும்' கவிதை நூலுக்கான ரசனைக்குறிப்பு



கவிதை இலக்கியம் புதிய புதிய எழுச்சியோடும் புதுக்கவிதையெனும் மிரட்சியோடும் தற்கால எழுத்துலகை சந்தித்துக்கொண்டிருக்கின்றது. பெறும்பாலும் இன்றைய இளம் படைப்பாளர்களை வெறும் காதல் கட்டியத்தை கூறுபவர்களாகவே நம் சமூகத்தின் மத்தியில் ஓர் விம்பம் உலவிக்கொண்டிருக்கின்றது. அதனை தகர்த்தெறியும் விதமாக அண்மையில் ஓர் கவிதைநூல் வெளியீடு. 

கடலைக்கண்டாலே காததூரமோடிய எம‌க்கு, பெரும் வலிகளையும் வடுக்களையும் தந்து நம்ம‌க்களை சுக்குநூறாக்கிப்போட்ட அதே நினைவுச்சின்னமதில் 16.03.2014 அன்று முல்லைத்தீவு கடற்கரையினில் இயற்கையோடும் எழிலோடும் ஒரு நூல்வெளியீடு. எத்தனை காலத்துக்குத்தான் ஒரு சில எழுதப்படாத விதிமுறைகளுக்குள் அடைபட்டுக்கிடப்பதென்ற விடுதலை நோக்குடன் இம்முறையினை கவிஞர் தேர்ந்தெடுத்தார்போலும், நூலின் பெயருக்கேற்றாற் போல.

'இடம் பெயர்ந்த ஊரில் இடம்பெயரா நாய்' என்ற கன்னிக் கவித்தொகுப்போடு எழுத்துலகில் பாதம் பதித்த கவிஞர் யோ. புரட்சி அவர்கள் 'எதிர்வீட்டு நாயும் என் ஏழை நாயும்' என்ற இர‌ண்டாவது தொகுப்போடு இலக்கியத்திற்கு தன் பங்களிப்பினை வழங்கியுள்ளார். இரு நூல்களிலும் தலையங்க நாயகனாக நாயை முதன்மைபடுத்தியுள்ளார். ஆனால் கவிதைகளோ ஒன்றையொன்று முந்தவிடாது அதிக கனதியோடு படைக்கப்பட்டிருப்பதை வாசித்தலின்பின் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமொரு உண்மையாகும். கவிஞர் யோ. புரட்சி அவரது படைப்புக்களில் ஏதொவொரு புரட்சியினை புரிபவராகவே நம்மத்தியில் பிரகாசிக்கின்றார்.

இத்தொகுப்பிற்கு அணிந்துரையினை கவியரசர் கண்ணதாசனின் புதல்வர் காந்தி கண்ணதாசன் அவர்களும் வாழ்த்துரைகளினை வவுனியூர் இரா.உதயணன் அவர்களும் எழுத்தாளர் தம்பு சிவா அவர்களும், பின்னட்டைக்குறிப்பை ஜேர்மனியைச்சேர்ந்த திருமதி சாந்தி அவர்களும் வழங்கியமை நூலின் கனதியை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. ஐம்பது கவிதைகளுடன் அடக்கமான இத்தொகுப்பு சமூகத்தை அப்பட்டமாய் வெளிப்படுத்துவதாகவும் மனித இயல்புகளையும் இதயங்களையும் திரைவிலக்கி காட்டுவதாகவும் அமைந்துள்ளது. 

'அவைக்கு அப்படி' என்ற ஆரம்பக்கவிதையானது, அழகான உண்மையினை ஆர்ப்பாட்டமில்லாமல் கூறிச்சென்றாலும் வாசித்தலின்பின் நம்மை அதிகமாகவே சிந்திக்கவைக்குமென்பதில் ஐயமில்லை.

நீயோ 
உன் வயிறு என்கின்றாய்
உன்னிடம் கேட்காமலே
ஓராயிரம் கிருமிகள் அங்கு
குடும்பம் நடத்துகின்றன‌

எத்தனை யதார்த்தமான விடயமிது. உயிரின‌ங்களில் உயர்ந்தது மனிதப்பிறவியென்கின்றோம் ஆனால் இதுபோன்ற சின்ன சின்ன விடயங்களில் இயற்கையின் எச்சசொச்சங்களிலும் எச்சில்களிலும் தங்கிவாழும் எத்தனையோ இக்கவிவரிகள் நிரூபிக்கின்றன.

ஒத்த கருத்துக்கள் அல்லது ஒரேவிதமான சாயலோடு கவிதைகள் காணப்படாமல் ஒவ்வொருவிதமான உண்ர்வுகளை அநுபவங்களை தந்திருப்பது வரிகள் அனைத்திலும் உயிர்ப்புத்தன்மை காணப்படுவது கவிஞரின் தனித்துவம். 'ஒரு சாரம் ஓடுகின்றது' எனும் தலைப்பில் நீள்கின்ற வரிகளில் சாரத்திற்கும் தனக்குமான தொடர்பினை கவியாக்கியிருப்பது வியக்கச்செய்கின்றது. யுத்தகாலத்தில் உதவிக்கரமாக துணைக்குவந்த அந்த சாரத்தின் உபகாரங்களை சொல்லியிருப்பதுகூட கவிதைக்குரிய மகத்துவத்தினை நிரூபிக்கின்றது ஏன் இந்த தலைப்பு கூட பல‌விதமான கருத்துக்களை சுருக்கிக்கூறுவதாகவே தோன்றுகின்றது. 

காலவோட்டத்தில் நம் இயல்புகள் குணங்கள் மாறினாலும் இதயத்தின் ஆழத்தில் தேங்கிவிடும் நினைவுகள் மட்டும் அழிந்துபோவதில்லை அதற்கு கட்டியம்கூறும் வகையில் 'காணாமல் போய்விட்ட கண்ணான தங்கைக்காய்" எனும் கவிதை

ஒருவ‌யிற்றில் உதித்த‌
உயிர்த்தங்கையே....
                                                        என ஆரம்பித்து 
மணமேடையிலே
மணமகளாய் உன்னை
கண்டுவிட நினைத்தேன் இன்று
மலக்குழி தன்னில்
பொலித்தீன் சுற்றப்பட்ட
புழுக்க நிறைந்த உடலாய்
புன்னகை அழகியுனை
கண்களாள் கண்டுசெத்தேன்'

                                   எனும் ஓலக்குரலோடு ஓங்கிநிற்கின்றது. இவ்வாறான அநுபவத்துளிகளில் தேங்கியிருக்கும் வேதனை கண்ணீர் நிஜம் வலிகள் என்பவற்றினை வாசகர்களுக்கும் கடத்திவிடுவதில் கவிஞர் வெற்றிபெறுகின்றார்.


எப்படித்தான் நாம் பல மீள் எழுச்சிகளோடு வாழ்ந்தாலும் எம்மை ரணமாக்கிச்சென்ற அந்த கோர நினைவுகள் நிகழ்வுகளிலிருந்து மீளமுடியாதவர்களாய் இருக்கின்றோம் என்பதனை சமகாலத்தில் எழுதும் எழுத்தாளர்களின் படைப்புக்கள் சாட்சி கொடுக்கின்றன. எத்தனை துரித வளர்ச்சி, எப்படிப்பட்ட எழுச்சி ஏற்பட்ட போதிலும் வலிகளுக்கு விலைகளில்லை என்பதனை இந்நூலிலும் பல கவிதைகளில் காணமுடிகின்றது. "செஞ்சோற்றுக்கடன், இரண்டாம் உயிர்தந்தவள், அவள் செத்துவிட்டாள்" போன்ற கவிதைகளை கூறலாம்.

அதுபோலவே சமூகத்தில் எத்தனை பெரிய படிப்புக்களோடும் பட்டங்களோடும் இருந்தாலும் சில மூடநம்பிக்கைகளுக்கு நாம் முகங்கொடுத்துக்கொண்டேதான் இருக்கின்றோம். தெரிந்தா அல்லது தெரியாமலா இப்படி ந‌டக்கின்றது? எதிலும் பொறுமையில்லா வேகம், விதையிட்டதும் விருட்சத்தினை தேடும் அசுரத்தனமான தேடல், இறைச்சட்டங்களை உடைக்கநினைக்கும் மெத்தப்போக்கு, என்பனவே இவற்றுக்கு காரணமெனலாம். இதுபோன்ற நம் மூடநம்பிக்கைகளில் ஒன்றுதான் சாமியாரிடம் குறி கேட்டல். இவ்விடயத்தில் காணப்படும் முட்டாள்தனங்களை ப‌கிரங்கமாகவும் பதட்டமில்லாமலும் 'சாமியாரிடம் கேட்காத கேள்வி' என்ற கவிதையில் காணலாம்.

இதுபோன்றதான இன்னொரு விடயம்கூட 'இருந்தும் இல்லாமல்' என்ற கவிதையில் அழகுபெறுகின்றது இதற்கு அவலம் அல்லது கொடுமை என்றுதான் வரைவிலக்கணம் கூறலாம். விதவை என்று மகுடமணிந்த ஒரு பெண் பற்றியதான வரிகள். இவ்வரிகளைவிட இன்னும் அழகாக இவ்விடயத்தினை எப்படிக்கூறிவிட முடியும் அத்தனை அழகாக அர்த்தம் பொதுத்து கூறியுள்ளார் கவிஞர் சுவைகெடாமல் அதனை வாசித்தே தெரிந்துகொள்ளுங்கள்.

நான் ஏலவே கூறியதுபோலவே ஒவ்வொரு தலைப்பிலும் ஒவ்வொரு தனித்துவம், வித்தியாசமான உணர்வுகள் பாமரனுக்கும் பரீட்சயமான வார்த்தைகள் என்று வித்தியாசப்படும் இந்நூலின் தலைப்பிலான கவிதைகூடன்வித்தியாசம். நூலினை கையிலெடுத்ததும் தலைப்பையும் நூலாசிரியரையும் பார்க்கும்போது நிச்சயம் இதுஒரு காதல் விடயமே மறைந்திருக்கும் என்ற எதிர்வுகூறல் 5ம் பக்கத்தினை கடக்கின்றபோதே சுக்குநூறாய்ப்போய்விட்டது அந்த இரண்டு நாய்களுக்கிடையிலான வேறுபாடு கூட ஒரு பாடமாகவே நம்க்கு போதிக்கின்றது இடையிடையே சிறுகவிதைகளும் ஹைக்கூக்களும் படங்களும் அர்த்தப்புஷ்டியாய் காட்சிதருகின்றது.


'வறுமை' என்ற அநுபவத்தினை கடந்த எத்தனையோ பாக்கியசாலிகள் நம்மத்தியில் இருக்கின்றோம் உண்மையில் வறுமை ஒரு வரம். அடையமுடியாத அறிவினையும் படிக்கமுடியாத படிப்பினைகளையும் இலவசமாய் கற்றுத்தரக்கூடிய வல்லமை வறுமையிடம் மிக வசதியாகவே வாழ்கின்றது அதனை மிக ஆழமான அநுபவத்தினூடாக வரிகளாக்கியுள்ள கவிஞரை பாராட்டாமல் இருக்கமுடியாது. 'அற்புத அநுபவங்கள், ஏழையெந்தன் கைகள்" போன்ற தலைப்புக்களே அவை. அந்த அநுபங்களில் ஒன்று இதோ,

'பாதத்திலே செருப்பின்றி
பலமைல்கள் நடந்தே
பள்ளி சென்று 
படித்துவந்த அநுபவம்.... என இன்னும் பல அநுபங்களை பகிர்ந்து இறுதியில் இவ்வநுபவங்கள் தந்த கனமான அநுபவமொன்றை கவிஞர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்

வறுமை தந்த‌
அநுபவப்பூக்கள்
வாடியே போவதில்லை
எளிமை என்ற‌
எழில்மிகு பூவும்
ஏழையைவிட்டு அகழ்வதில்லை


'மோசடிப்பேர்வழிகள்' என்ற கவிதையில் நேர்முகத்தேர்வில் நடக்கும் அநியாயங்களில் ஆத்திரப்படுகின்றார் கவிஞர். ஊர்களில் வேறுபட்டாலும் உணர்வுகளினால் மனிதனை மனிதன் நெருங்களாம் என்பதற்கு உதாரணமாய் 'ஒரு லயன் அழுகின்றது' என்ற கவிதை மலையக மாந்தர்களின் பிரச்சனைகளில் ஒன்றான வதிவிடப்பிரச்சனை பல மாற்றங்களை கண்டபோதிலும் இன்னும் மாறாப்பிரச்சனையாக இருக்கும் ஆரோக்கியமில்லா வீட்டுச்சூழலினை இவ்வரிகள் தாங்கிநிற்கின்றது.

காதல் பற்றி அதிகம் பேசாத இந்நூலில் திருஷ்டிப்பொட்டாக ஒரேயொரு கவிதை 'காதல் தேர்தல்' வாக்குப்போதாமையாலும் நிராகரிக்கப்பட்ட வாக்குகளாலும் செல்லாக்காசாய்ப்போய் சொல்லொணாத்துயரில் வாடும் எத்தனையோ காதலர்களின் உணர்வுகளைப்போல சாதாரணக்காதலாக அல்லாமல் சபதக்காதலாக  இப்படிப்பேசுகின்றது

எம்மை எதிர்ப்போரை
நிராகரிக்கப்பட்ட‌
வாக்குகளாய் ஆக்கி
நிச்சயம் வெல்வோம்
காதல் தேர்தலில்
அடிக்கடி இடம்பெறும்
ஆட்சிக்கான தேர்தலா இது
ஆயுளில் ஒருமுறைவரும்
காதல் தேர்தல்'

இதுபோன்ற காதல்களை இந்தக்காலங்களில் வெகுச்சுலபமாக பொறுக்கியெடுத்துவிடலாம். அத்தனைக்கு வஞ்சகமும் விளையாட்டும் கேலிக்கூத்தாகவும் நம் இளையவர்கள் வழிநடத்திச்செல்கின்றார்கள் இதற்குப் பொருந்துமாப்போல இன்னொரு தலைப்பு "ஆண் விபச்சாரன்" 
விபச்சாரி என ஒரு பெண்ணை விழிக்கும் சமூகம் அவளோடு/அதனோடு தொடர்புபட்ட ஆணைமட்டும் விட்டுவிடுவது ஒரு புரியாத வழக்கமே 'விபச்சாரி' என்றால் அதனை ஒரு பெண்சமூகத்தை குறிக்கும் சொல்லாக மிளிரும் சமூகக்கண்களுக்கு 'விபச்சாரன்' என்ற சொல் புதிதாக இருக்கும் அல்லது 'ஆமாம் அப்படியென்றால் என்ன? ' என கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் "ஆண் விபச்சாரன்" என்று அழுத்தம் திருத்தமாக முன்வைக்கின்றார் கவிஞர்.

திருமணமான ஒரு ஆணோ பெண்ணோ இன்னொரு நபருடன் வைத்திருக்கும் தொடர்பு விபச்சாரமே ஆனால் ஒரு திருமண முறிவுக்குப்பின் ஏற்படும் தொடர்புகூட விபச்சாரமே என்ற உண்மையினை கவிஞராக அல்லாமல் ஒரு மனிதனாக இருந்துசொல்வதில் கவிஞர் நல்வழிகாட்டியாக பிரதிபலிக்கின்றார். தந்தை சொல்லுக்கு தாய் சொல்லுக்கு உறவுகளின் சொல்லுக்கு என்று ஒன்று தவர இன்னொரு பெண்ணுக்கு சீதன சீர்வரிசைகளோடு தாலியிடும் ஓர் ஆணின் சுயமதிப்பீடாக இக்கவிதை. கடைசி வரிகளில் ஆணியடித்தாற்போல சொல்கின்றதி இப்படி,

'நாளை வரும்
காலை திருமணம் இன்று
மாலையென் மனது
மெளனமாய் சொல்கின்றது
வாழ்க்கை இழந்தவுனக்கு
வாழ்க்கை தருவோருக்கு
வாரி வழங்கவேண்டிய நீ
வாரி வாங்கிடும்ம்
காரியம் செய்கின்றாயே
அடே போடா

ஆண் விபச்சாரா..."

   
'தங்கமான புருஷன்' என்றொரு கவிதை தாய் மனைவி தந்தை என்ற உற‌வுகளின் மத்தியில் 'தங்கமான புருஷனாய் எப்போது தெரிவேன் என்ற ஆதங்கமாய் வரிகள் ஒவ்வொருவருக்கும் ஏற்றாற்போல சிந்தையிலும் எதிர்பார்ப்பிலும் வேறுபட்ட அவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப வாழ சிரமப்படும் ஓர் ஆணின் அவஸ்தை இக்கவிதையில். இதேபோல பெண்களின் உள்ளத்து உணர்வுகளையும் அவர்களது பிரச்சனைகளையும் அவர்களுக்கான பாராட்டுக்களையும்கூட இந்நூலின் பல கவிதைகள் சுமந்துவந்துள்ளது. 

நிஜங்களை வெளிப்படையாக சொல்லிக்காட்டிய வரிகள் போலித்தனங்களில்லாத உணர்வுகள் நகரத்து புகையில் மாசுபடாத இயற்கையான காற்று குற்றங்களை மூடிமறைக்காத வெகுளித்தனமான போக்கு என ஆரோக்கியமான நூலாக யோ.புரட்சி அவர்களின் 'எதிர்வீட்டு நாயும் என் ஏழை நாயும்' கவிதை நூலினை கூறலாம் ஒரு சில விடயங்கள் அவரது கன்னித்தொகுதியினைப்போலவே காணப்பட்டாலும் கவிதைகளில்  மிகப்பெரிய மாறுதலும் மகத்துவமும் காணப்படுகின்றது. கவிதை எழுதப்பட்ட நேரவிடயங்கள் வாசகர்களின் கருத்துப்பதிவுகள் ஒரு ரசிகரின் கடிதம் நன்றிக்கூறல் போன்றன பரீட்சயமான விடயங்களாக இந்நூலிலும் இடம்பெற்றிருப்பது இத்தொகுப்பின்மீதான எதிர்பார்ப்பில் ஓர் ஏமாற்றத்தினை தருகின்றது

பெயருக்கேற்றாற்போல பசுமையான அட்டைப்படத்தினை தாங்கிய இந்நூலினை கவிஞர் தன் தங்கைக்கு சமர்ப்பித்திருக்கின்றார் இத்தங்கையே 6ம் கவிதையில் தலைப்பாகி நம் கண்களையும் ஈரப்படுத்தியவர் என்பது வாசிப்பவர்களுக்கு புரியும். 

சமகாலத்தில் வெளிவந்த நூல்களில் இந்நூல் வித்தியாசத்தை உணர்த்துகின்றது வாசித்தலுக்கு ஏற்றதாகவும் ஆவணப்படுத்தக்கூடிய தகுதியினையும் பெற்று தற்போது புத்தகசாலைகளில் காத்துநிற்கின்றது உங்களின் வரவுக்காய். தரமான ஓர் வாசிப்பனுபவத்தினை எதிர்பார்க்கும் வாசகர்களுக்கு உன்னதமான படைப்பே இக்கவிதை நூல் என முன்மொழிகின்றேன். இன்னும் பல புதிய முயற்சிகளோடும் வேறுபாடுகளோடும் இதுபோன்று நிதர்சனங்களை சுமந்த படைப்பாகளை ஈழத்து இலக்கிய வரலாற்றுக்கு வரப்பிரசாதமாய் பிரசவிக்கவேண்டுமென கவிஞர் யோ.புரட்சி அவர்களுக்கு வாழ்த்துக்களை சமர்ப்பிக்கின்றேன்.

நன்றி.


நூல்:                                              எதிர்வீட்டு நாயும் என் ஏழை நாயும்' கவிதை நூல்
ஆசிரியர்:                                     யோ.புரட்சி
நூல் வெளியீட்டு தினம்:    16.03.2014
விலாசம்:                                     வள்ளுவர் புரம்
                                                            விசுவமடு
                                                            முல்லைத்தீவு
தொடர்புகளுக்கு:                    0775892351
விலை:                                           200/= 

Tuesday, April 8, 2014

கவிதையல்ல‌!!

தீக்கூட அழகானது நீ
நாவினால் சுட்டப் பிறகு

வடுக்கள்கூட விதையாகிற‌து -நீ
வலிதந்தபோதும் நினைவுகள்
முளைத்துவிடுவதால்!!


Wednesday, April 2, 2014

சிலநேரம்

பிரிவுகள் சிலநேரம்
வரமாகலாம் -நம்
சரிவுகளென‌ அதனைத்தான்
பரிந்துரைக்கலாம்!!




இலகுவான ஆயுதம்

ஒரு பெண்ணிடம் ஏற்படும் கோபம் வெறுப்பு எரிச்சல், கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்துவதற்கும் தங்களை நியாயப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் ஒரே ஒரு இலகுவான ஆயுதம் "அவள் நடத்தை கெட்டவள்"