Sunday, April 27, 2014

'யசோதரா வித்தியாலய' த்தின் நம்பிக்கை நாயகி....

       



நாளைய தலைவர்களென நாம் நாளாந்தம் பிரயத்தனம் கொள்வதும், அவர்களை சமூகத்திற்கு சிறந்தவர்களாக கொண்டுசேர்ப்பதும் இன்றைய தலைவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது என்பதனை எத்தனைபேர் உணர்ந்திருக்கின்றோம்? குடும்பத்திலிருந்து ஆரம்பித்து சமூகத்தின் பல கட்டங்களிலும் இப்பொறுப்பினை உடையோர் பலர். இதில் மிக முக்கியமாக 'பாடசாலை' எனும் கட்டமைப்பே ஒரு நல்ல பிரஜையின் வாழ்க்கைக்களமாக அங்கம் வகிக்கின்றது.

எத்தனை பாடசாலைகளில் இதனை காணமுடிகின்றது எத்தனை அதிபர், ஆசிரியர்கள் இவ்விடயத்தில் உதாரணமாக திகழ்கின்றார்கள் என்பதனை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதுபோல அத்தொகையினரை கண்டுகொள்வதும் எமது கடமையே ஏனெனில், அவர்களின் சேவையினையும் கடமைகளையும், உழைப்பு தியாகங்களையும் உலகறியச்செய்யவேண்டும் இது அவர்களின் முகஸ்துதிக்காக அல்ல, இவர்களை மற்றவர்களுக்கு உதாரணக்கர்த்தாக்களாக படிப்பினையாக பறைசாற்றவேண்டும்.

இப்படியான பொறுப்புவாய்ந்த இன்றைய தலைவர்கள் நம்மத்தியில் அநேகர் இருந்தாலும் இங்கு நான் குறிப்பிட்டுச்சொல்ல வருவது, இவரைத்தான் இலங்கையின் தலைநகரில் பிரசித்திபெற்ற பெண்கள் பாடசாலையான (சகோதரமொழி) 'யசோதரா வித்தியாலயம்'. இது சுமார் 168 வருட பழமைவாய்ந்த தற்போது அபரிதமான வளர்ச்சிகண்டுள்ள பாடசாலையின் அதிபர், கேர்னல் திருமதி அஜந்தா குமாரி பகாத்கும்புர அவர்களே.

சட்டம், நீதி, நேர்மை, கடமை பொறுப்பு என்பவற்றிற்கு ஒரு உருவத்தை காட்டவேண்டுமென்றால் இவ்வதிபரை முன்னிறுத்துவது பொறுத்தமாக இருக்கும். பாடசாலை என்பது என்ன? மாணவர்கள் என்பவர் யாவர்? ஆசிரியர்களின் கடமை என்ன? மாண‌வர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான தொடர்பு என்ன? என்பதனை ஒவ்வொரு செயற்பாடுகளிலும் உணர்த்துபவராக வலியுறுத்துபவராகவே அதிபர் அவர்கள் செயற்படுகின்றார். ஊழல்கள் குற்றங்கள் நடைபெறுகின்ற அதியுன்னத பதவிகளில் இப்பாடசாலை அதிபர் விதிவிலக்கானவர்.

பாடசாலை வளாகம், வகுப்பறைகள், நூலகம் மற்றும் இதர வசதிகளை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் முனைப்பாக இருக்குமிவர், ஒவ்வொரு பாடவேளைகளும் எவ்வளவு முக்கியம், அதில் மாணவர்களின் வாழ்க்கை, எதிர்காலம்  தங்கியுள்ள விதங்களை புகுத்திக் கொண்டேயிருப்பதால்  சில ஆசிரியர்கள் இவரோடு முரண்பட்டு கோபப்பட்டாலும் தக்க சமயங்களில் அதிபரின் கருத்துக்கள் செயற்பாடுகளில் இருக்கும் உண்மையினை ஏற்றுக்கொண்டதும் இல்லாமலில்லை. அடிக்கடி கூட்டப்படும் ஆசிரிய ஊழியர்களின் பொதுக்கூட்டத்தில் மாணவர்களின் நலனைப்பற்றிய கருத்துக்களையே அதிகமாக சுட்டிக்காட்டி ஆசிரியர்களை எச்சரிப்பவராகவே தெரிகின்றார். பொதுவாகவே இவரின் தொழில் தர்மத்தின் பரந்துபட்ட கோர்வைகளை புள்ளியிடல் மூலம் தெரிவிப்பது பலருக்கு படிப்பினையாகவும் சுருக்கமாகவும் இருக்குமென நினைக்கின்றேன்.

01. நீங்கள் வாங்கும் சம்பளத்திற்கும் மனசாட்சிக்கும் உண்மையாக உழைக்கின்றீர்களா?

02. மாணவர்களின் பள்ளிக்காலத்தின் முக்கியத்தைக்கூறி, எந்த ஒரு மாணவியையும் எந்த செயற்பாட்டிலிருந்தும் ஒதுக்காமல் ஏதாவதொரு நிகழ்வில் புகுத்தியே ஆகவேண்டுமென்பது இவரின் கொள்கை. படிக்கமுடியாத ஒரு மாணவி வேறு துறைகளில் ஆர்வமுள்ளவளாக திறமையுள்ளவளாக இருக்கலாம் அதனை கண்டறிவது ஒவ்வொரு ஆசிரியரினதும் கடமை.

03. வகுப்பில் மாணவர்கள் அடங்காமல் குரலெழுப்பிக்கொண்டிருப்பது ஆசிரியர்களின் பெருங்குறையே அவர்களை தங்கள் கட்டுக்குள் வைத்திருப்பது எவ்வாறு என்பதனை அறிந்துவைத்திருக்கவேண்டும். (வன்மையாக தண்டிப்பதும், அடிப்பதும் கட்டாயமாக விலக்கப்பட்டுள்ளது)

04. எல்லா மாணவருக்கும் சந்தர்ப்பம் வழங்கவேண்டும்

05. மாதாமாதம் செய்யவேண்டிய ஒப்படைகள், கணிப்பீடுகள் என்பன காலக்கிரமத்தில் செய்துமுடித்திருக்கவேண்டும்.

06. எந்த ஒரு விடயத்திலும் 100% நேர்த்தியையும், காலத்திற்கு செய்துமுடித்திருக்கவும் வேண்டும்

07. வகுப்பறையில் ஆசிரியர் உட்கார்ந்துகொண்டு கற்பிக்கக்கூடாது நின்றுகொண்டு சகலரையும் தம் பார்வையில் கணித்துக்கொண்டேயிருக்கவேண்டும்.

08. ஒழுக்கமும் ஒழுங்குவிதிகளும் சற்றேனும் பிரளாமல் நடக்கவேண்டும்.

09. ஆசிரியர்கள் மாணவர்களிடம் நண்பர்களாக அல்ல நல்ல ஆசானாகவே பழகவேண்டும்.

10. பாடசாலையே அனைத்திற்குமான களம் இக்காலகட்டத்தில் மாணவர்களுக்குள்ள திறமைகள் அத்தனையும் வெளிக்கொணரப்பட்டு பயிற்றப்படவேண்டுமென்ற‌ தாரகமந்திரம் மெய்ப்படவேண்டும்.



என்று சீரான திட்டங்களும் வரைமுறைகளையும் கொண்டுள்ள இவ்வதிபர், பல ஊடக அச்சுறுத்தல்களுக்கும், மொட்டைக்கடதாசிகளுக்கும் உட்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 'காய்க்கின்ற மரத்துக்குத்தான் கல்லடி' என்பதற்கிணங்க அவர் இதற்கெல்லாம் சளைத்து ஒதுங்கிவிடவுமில்லை, விலகி வழிவிடவுமில்லை. நேர்பட்ட வழிகளில் இடறல்களுக்கும் குறுக்கீடுகளுக்கும் வலிமையில்லை என்பதனை ஆணித்தரமாக நிரூபித்து தனது செவ்வையான வழியில் நாட்டுக்கும் நாளைய தலைமையுருவாக்கத்திற்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டிருக்கின்றார். ஒரு பெண்ணாக சாதித்துக்கொண்டிருக்கும் இத்தலைவியானவர் சரித்திரத்தின் நாயகியே

இவரின் கொள்கைகள் நம்நாட்டில் பல பாடசாலைகளுக்கு படிப்பினையாகட்டும், ஆசிரிய சேவையின் மகத்துவங்கள் அறியப்படட்டும். 'ஆசிரியத்துவம்' என்பது வெறும் பணமீட்டும் தொழில் மட்டுமல்ல, அது தியாகம், கடமை, பொறுப்பு, அர்ப்பணிப்பு, தாய்மை இப்படித்தான் இத்தொழில்புரிவோர் யாவரும் உணரவேண்டும். அதனை சரியாக உணர்ந்து செயற்படும் அதிபர் அஜந்தா குமாரி பகத்கும்புர அவர்களைப்போல‌    சகல பாடசாலைகளிலும் தலமைத்துவம் இருக்குமாயின் குறைபாடுள்ள ஆசிரிய, மாணவ சமூகங்கள் தழைத்தோங்கும். இதுவெறும் அதிபருக்கான பாராட்டல்ல சகலருக்குமான பாடம் இதைப்போன்று இலைமறைகாயாக இருக்கும் ஏனைய தலைமைத்துவங்களையும் கண்டறிவோம் அந்த விளக்குகளை மலையுச்சியில் ஏற்றிவைப்போம் பல இரு(ளு)ளில்லங்கள் பிரகாசிக்கட்டும்

இனம் மதம் மொழி கடந்து மனிதர்களைத்தேடி மகத்துவங்களை மட்டுமே நாடிக்கொண்வோம் நாளைய எதிர்காலம் நமதாகட்டும்.



நன்றி
த.ராஜ்சுகா



No comments: