Tuesday, November 29, 2016

என்மீதான

உன் கோபத்தில்
புதைந்து கிடக்கிறது
என்மீதான நேசம்...

Sunday, November 27, 2016

எதிர்ப்பின் அடையாளமாய்

சுத‌ந்திரத்தின் எல்லைகளுக்கு
சுறுக்கிடும் போதும் -என்
நியாயங்களின் கழுத்து
நெருக்கப்படும் போதும்

எதிர்ப்பின் அடையாளமாய்
வெறுப்பும்
மறுப்பின் சின்னமாய்
வார்த்தைகளும்
உக்கிரமாய் போரிடுகின்றது!!




Saturday, November 19, 2016

அக்கினிக்குஞ்சு இணையத்தில் (18.11.2016)

http://akkinikkunchu.com/2016/11/18/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B2/


காதலில் கரைகாணலாம் வா -அழகே
காத்திருந்து இன்பம் சேர்க்கலாம்
மோதலை தூரப்போடலாம் -உயிரே 
மோட்சத்தை நாம் பெறலாம்…

கல்லையும் கடலையும் ரசிக்கலாம் -இன்றே
கவிதைபாடி நம்மை ருசிக்கலாம்
இல்லாத மகிழ்வுகளையெல்லாம் தேடலாம் -நம்முள்
இலகுவாக காதலை வளர்க்கலாம்…

ஊரூராய் போய் வரலாம் -இருவரும்
ஊர்வாயை விரியச்செய்யலாம் 
பாரெல்லாம் சுற்றித் திரியலாம் -பறவைகளாய்
பார்ப்போரை வியக்கவைக்கலாம்…

கண்களுக்குள் கனவுகளை விதைக்கலாம் -வண்ண‌
கவிதைகளாயதை அறுவடை செய்யலாம்
எண்ணங்களில் புன்னகையை பூசலாம் -எல்லா
இடங்களிலும் நம்பெயர் பதிக்கலாம்…
 
ஈரிதழ்களின் மணத்தை பூக்களுக்கும் சொல்லலாம் -நம்
ஈரிதய பந்தத்தினை ஒற்றையாயாக்கலாம் 
பேரிரைச்சல் கொண்ட இவ்வுலகபோக்குகளை -நாம்
பேதமையென உரத்துச்சொல்லலாம்


த.எலிசபெத்
இலங்கை

Friday, November 18, 2016

#ஏணிகள்

முதலாம் வகுப்பிலிருந்து
பல்கலைக்கழகம் வரை வந்துவிட்டேன்
இன்னும் முதலாம் வகுப்பிலேயே
என் ஆசிரியர்!!

Monday, November 14, 2016

சத்தமில்லாமல் தொலைவோம்

முத்தத்தால் நனைவோம் -என்றும்
மொத்தமாய்  கரைவோம்
சத்தமில்லாமல் தொலைவோம் -நம்மை
நித்தமும் கரைப்போம்!!



Sunday, November 13, 2016

தினக்குரல் (ஞாயிறு) பத்திரிகையில் (13.11.2016)








01. உங்கள் பிறப்பிடம், கல்லூரி வாழ்க்கை, தொழில் அனுபவம் பற்றிக் குறிப்பிடுங்கள்?

நான் தலவாக்கலையை பிறப்பிடமாக கொண்டவள். எனது  கல்லூரி வாழ்க்கை கா.பொ.த சா/த வரை புனித பத்திரிசியார்  கல்லூரியிலும் க.பொ.த உ/த தலவாக்கலை தமிழ் மகாவித்தியாலயத்திலும் கழிந்தது. தற்போது கொழும்பு யசோதரா வித்தியாலயத்தில் ஆசிரியையாக கடமையாற்றிக்கொண்டிருக்கிறேன்.


தொழில் அனுபவம் எனும்போது தினம் தினம் பல  நல்ல அனுபவங்களினூடாக கடந்துசெல்ல முடிகின்றது. நான் இரண்டாம் மொழி தமிழ் கற்பிப்பவள் சகோதரமொழி பேசுபவர்களுடனேயே அதிகமான நேரத்தைக்கழிக்கின்றேன். இனம் மதம் மொழி ரீதியிலான வேறுபாடுகளை காணும்போதெல்லாம் எனக்குள் கோபமும் ஆத்திரமும் மேலெலும் ஏன் இவர்களுக்குள் இத்தனை பேதமை வேற்றுமை குரோதம் என மனங்கசந்துபோகும் உண்மையில் இதற்கொரு முக்கிய காரணியாக என்னால் காணமுடிந்தது  ஒருவர்  பேசும் மொழி மற்றவருக்கு புரிந்துகொள்ளாமுடியாத நிலையே. பல்லின சமூகம் வாழும் இத்தேசத்தில் பிரதான இரு  மொழிகளும் சரளமாக காணப்படுமிடத்து பல பிரச்சனைகள்  எமைவிட்டு கடந்துபோயிருக்கும், ஒருவரின்  மனம் உணர்வுகள் பிரச்சனைகள் மற்றவருக்கு புரியும்  அந்த  வகையில் இன்று  "இரண்டாம் மொழி" எனும் விடயம்   தமிழ் சிங்கள மொழிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் சிங்கள  சகோதரர்களிடம் தமிழ்மொழி ஆர்வமும் ஆசையும் அதிகரித்து காணப்படுகின்றது.  தமிழ் மொழியுடன் தமிழர்களின் கலை கலாச்சாரம் பண்பாடு பழக்கவழக்கங்கள் பிரச்சனைகளை  அவர்கள் ஏற்றுக்கொள்ளும் தன்மை பல புத்திஜீவிகள் மத்தியில் மாற்றங்களாக நிகழ்வது  மகிழ்ச்சியளிக்கின்றது. இதில் ஒரு சிறு பங்களிப்பை என்னாலும் வழங்கமுடிந்ததையிட்டு  பெருமிதமடைகின்றேன்.


02. உங்களது படைப்புலகப் பிரவேசம் குறித்து கூறுங்கள்?


படைப்புலக  பிரவேசத்திற்கு அடித்தளமிட்டது எனது  சிறுவயது வாசிப்பு பழக்கமே. வாசிப்பு  வாசிப்பு  என்று எனது எல்லா ஓய்வு நேரத்தையும் பத்திரிகை புத்தகங்களுக்குள் புதைத்துவிட்டிருப்பேன் பிற்பட்ட  காலங்களில் எனது அப்பப்பா தந்த ஊக்குவிப்பும் வழிகாட்டலையும் கூறலாம் அதாவது  வானொலியின் சிறுவர் நிகழ்ச்சி, தொடர்நாடகங்கள், போட்டி  நிகழ்ச்சிகள் செய்தி  என  எல்லாவற்றையும் நேரத்திற்கு  கூப்பிட்டு கேட்கச்செய்வார்  அவ்வாறு பத்திரிகை  வானொலி புத்தகங்களென பழக்கப்பட்ட  என் கண்களும் செவிகளும் எனது  விரல்களுக்கு வலிமை சேர்த்தது.

பள்ளிக்காலத்தில் பல வானொலி நிகழ்ச்சிகளுக்கு  ஆக்கங்களை  எழுதி அனுப்புவேன் 2003ல் அதே விதமாக  பத்திரிகைக்கும் எழுதினேன். ஆனால்  கவிதைப்பிரவேசமாக 2004ல் வீரகேசரி  வாரவெளியீட்டில் 'வரமாட்டாயா' என்ற கவிதையினூடாக உதயமானது




03. இலங்கிய உலகில் உங்களது பங்களிப்புக்கள் பற்றிக் கூற முடியுமா?
கவிதை கட்டுரை நூல்விமர்சனங்கள் சிறுகதை மற்றும் படைப்பாளிகளை இணங்கண்டு அவர்களின் நேர்காணலை கல்குடா  நேசன் இணையத்திலும் மித்திரன் வார இதழிலும் (ஏலவே துருவம் இணையத்திலும்) பிரசுரித்துவருகின்றேன்


04. சுமார் பத்து வருடங்களுக்கும் மேலாக எழுதிவரும் நீங்கள் உங்களது நூல்களை எப்போது வெளியிட உத்தேசித்திருக்கிறீர்கள்?

இறைவனுக்கு சித்தமென்றால் இவ்வருட இறுதிக்குள்



05. கவிதைத் துறையில் உங்களது பிரவேசம் நிகழ உந்து சக்தியாக எது இருந்தது?
தனிமை என்று சொல்லலாம். அதிகம் பேச பயப்படும் கூச்சப்படும் எனக்கு பேனை சிறந்த களமாக இருந்தது. என் நாவினால் பேசமுடியாததை பேனாவினால் பேசிக்கொண்டேன். எல்லா உணர்வுகள் சொந்த அனுபங்கள் சமூக அவலங்கள் பிரச்சனைகள் என எழுதிக்கொண்டேயிருப்பேன். இவ்வாறு  கிறுக்கத்தொடங்கியதே  நாளடைவில் கவிப்பிரவேசத்திற்கு உறுதுணையாக இருந்தது




06. ஒரு சிறந்த கவிதை எப்படி இருக்க வேண்டும்? கவிதையின் முக்கிய கூறுகள் பற்றிக் கூறுங்கள்?
கவிதை வாசகனுக்கு புரியவேண்டும் அத்துடன்  இரத்தினச்சுருக்கமாக கவித்துவத்துடன் இருப்பதே சிறப்பு வெறுமனே வார்த்தைகளை கோர்த்து கட்டுரைபோல நீளுமாயின் அது கவித்தன்மையை இழந்துவிடும் நீளும் கவியிலும் கவித்துவம் வேண்டும். இதுபோன்ற கவிதைகளை புதுக்கவிதையென வெற்றியடைகின்றது கவிதை, உடைத்து  சுவைக்கக்கூடியதாக  இருக்கவேண்டுமென்பதே  என்  அபிப்பிராயம் அழகும் சுவையும் மிக்க மாதுளையைப்போல‌


07. புதிதாக கவிதை எழுதுபவர்களுக்கு மரபுக் கவிதை குறித்த தேடல் அவசியமில்லை என்று நினைக்கின்றீர்களா?

நிச்சயமாக இல்லை கட்டாயமாக தேடல் வேண்டும் பொதுவாக கவிதையுலகில் பிரவேசிக்கும் பலர் தமிழ்ப்புலமையோடு உள்நுழைவதில்லை தமது தாய்மொழி பரீட்சயத்தையும் உணர்வுகளையும் கலந்து  படைப்பதே  கவிதையாகின்றது இவை பட்டைத்தீட்டப்பட்டு பல விமர்சனங்களுக்கு உட்பட்டு நல்ல படைப்பாக பிரவசமாகிறது ஆக எமது படைப்பின் முதிர்ச்சி  அழகு காத்திரம் மேலோங்க, வழிகாட்டியாக அமைய  வேண்டுமாயின் மரபுக்கவிதை குறித்த தேடலும் அவசியமாகின்றது




08. இதுவரை சுமார் எத்தனை சிறுகதைகளை எழுதியிருக்கிறீர்கள்? அக்கதைகளுக்கான கருப்பொருட்களை எப்படிப் பெற்றுக்கொள்கின்றீர்கள்?

சிறுகதைகள் எண்ணிக்கையில் மிகக்குறைவே.  20 சிறுகதைகளுக்குள் மட்டுப்பட்டே  காணப்படுகின்றது. கவிதைபோல சிறுகதையினை  தொடுவதில் சிறு அச்சம். எனது  கதையின் கருவை கருவை நான் அறிந்தவர்களின் அநுபவங்களை, சந்திக்கும் பல சம்பவங்களினூடாகவே  பெற்றுக்கொள்கின்றேன்





09. இன்றைய இலக்கிய உலகில் பெண்ணியம் பற்றிய உங்கள் பார்வை எப்படி இருக்கின்றது?

பெண்ணியக்கருத்துக்கள் மிக அதிகமாக பரவலாக பேசப்படுவது மகிழ்ச்சியளிக்கின்றது  பெண்களின் பிரச்சனைகள் அவற்றுக்கெதிரான குரல்கொடுப்புக்களுக்கு இன்னும் அதிகமாக  முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.வெறுமனே பெண்ணுடல் பற்றியும் கலாச்சார  சீர்கேடுகளுக்கு வித்திடும் விடயங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து அவற்றுக்காக வாதாடுவதைவிடுத்து சமூகத்தில் பெண்களுக்கெதிராக நடைபெறும் வன்முறைகள் கொடுமைகள் அடிமைப்படுத்தல்கள் போன்றவற்றுக்கு எதிரான குரல்கொடுப்பும் விழிப்புணர்வை ஏற்படுத்தலுமே பெண்ணியம் என்ற பதத்திற்கு வலிமை சேர்க்கும் அதன் நோக்கம் நிறைவேறும் என நினைக்கின்றேன்





10. பல்வேறு இலக்கியத் துறைகளில் ஆர்வம் காட்டி வரும் நீங்கள் சவாலான துறையாக எதை நோக்குகிறீர்கள்?


சவாலாக சிறுகதைகளையே கூறலாம் எத்தனையோ பல  நல்ல சமூகம் சார்ந்த பெண்ணியம் சார்ந்த கருக்களை  என்னகத்தே  வைத்திருப்பினும் அவற்றை  கவிதைகளாக வடித்தெடுக்கும் லாவகம் சிறுகதைகளில் புகுத்த  முடியவில்லையென்பதில் சிறு  மனவருத்தம். அதாவது சிறுகதை வடிவத்துக்குரிய  பண்புகளை நான் பெரிதாக பார்க்கின்றேன்.  சொல்லவருகின்ற  விடயம், பாத்திர  அமைப்பு, சம்பவ  நகர்வு என்பவற்றில் சிதைவு ஏற்படுமிடத்து அதன்  தரம் கெட்டு சலிப்புத்தன்மை வந்துவிடும் அதனால் இதனை சவாலாக நினைக்கின்றேன்







11. படைப்புகளுக்கு கிடைக்கும் விமர்சனங்களை, விருதுகளை எப்படிப் பார்க்கின்றீர்கள்?


விமர்சனமில்லா படைப்பு வெறும் கானல்நீரைப் போன்றது. எவ்வித  சுவையோ சுவாரஸ்யமோ  தேவையோ பயனோ இல்லாத  ஒன்றாகிவிடும். நல்லதாகவோ கெட்டதாகவோ ஒரு படைப்பு விமர்சிக்கப்படும்போது அது  வெற்றிபெற்ற  படைப்பாகின்றது படைப்பாளி கவனிக்கப்படுகின்றான்  என்பது எனது  கருத்தாகும்.

அத்துடன்  விருதைக்குறித்து கூறுவதாயின் ஆரம்பகாலங்களில் காத்திரமான படைப்புக்கள் விருதை பெற்றுக்கொண்டன அதற்கு ஒரு மதிப்பும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் காணப்பட்டது ஆனால் இன்றுகளில் யார்  வேண்டுமானாலும் விருது  வழங்கலாம் வாங்கலாம் என்ற நிலமை வந்துள்ளது. ஒட்டுமொத்தமாக விருதினை குறைகூறவில்லை படைப்பாளனை தட்டிக்கொடுப்பதிலும் ஊக்குவிப்பதிலும் அவன் வளர்ச்சியிலும்  விருதும் ஓர் பங்குவகிக்கின்றது.  நல்ல திறமைசாலிகள் விருதுகளால் கெளரவிக்கப்படுவது மகிழ்ச்சியே ஆனால் அவை மலிந்துபோகும்போது அதன் பெறுமதியும் மதிப்பும் குன்றிப்போய்விடுகின்றது





12. இதுவரை உங்களுக்கு கிடைத்த பரிசுகள், விருதுகள் பற்றிக் கூறுங்கள்?


*2012ல்  தேசிய கவிஞர்கள் சம்மேளனம் நடாத்திய விருது  வழங்கலில் 'காவ்ய சிறீ' என்ற நாமத்துடன் சான்றிதழ் வழங்கப்பட்டது

*2013ல் தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் நடத்தப்பட்ட  கவிதைப்போட்டியில் 'கவித்தீபம்' எனும் நாமத்துடன் சான்றிதழ் வழங்கப்பட்டது

*2015ல் தடாகம் கலை இலக்கிய வட்டமும் கனடா படைப்பாளிகள் உலகமும் இணைந்து நடாத்திய  விருது வழங்கள் விழாவில் 'கவி
யருவி' எனும் நாமத்துடன் சான்றிதழ் வழங்கப்பட்டது

*2016ல் புதுமைத்தென்றல் முகநூல் குழும கவிதைப்போட்டியில் 3ம் இடம் கிடைத்தது அத்துடன் அண்மையில் தமிழ்மிரர் பத்திரிகை நடாத்திய கவிதைப்போட்டியில் பணப்பரிசும் கிடைத்தது



13. இலக்கியத் துறையில் உங்கள் எதிர்காலத் திட்டங்கள் எவை?

இலக்கியம் காலத்தின் கண்ணாடி எனப்படுகின்றது. எமது படைப்புக்களை  எதிர்கால சந்ததியினர் புரட்டிப்பார்க்கும்போது உபயோகமாக  எதையாவது நாம் விட்டுச்செல்ல வேண்டும் அப்படி ஒரு படைப்பென்றாலும் காத்திரமாக  வெளியிட்டுவிட வேண்டும் என்பதே திட்டமும் விருப்பமும்.




14.வாசகர்களுக்கு விளங்காத முறையில் எழுதுவது வித்துவத்தனமானது என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இதுபற்றிய உங்கள் கருத்து யாது?



சிலநேரங்களில் எனக்கும் சலித்துவிடும் ஓர்  விடயமிது வார்த்தைகளை ஒடித்தும் நீட்டியும் ஒழுங்கின்மையில் சிதறிக்கிடக்கும்  படைப்பை  வாசிக்கும்போது வாசகனுக்கு எரிச்சலேற்படும். படைப்பின்  புலமை வாசகனாலேயே  தீர்மானிக்கப்படுகின்றது ஓர்  நல்ல வாசகன்  நிராகரிக்குமிடத்து அந்த  படைப்பு  செயலிழ‌ந்துபோகின்றது  என்பதனை பலர்  உணர்வதில்லை அத்துடன்  தவறுகளை சுட்டிக்காட்டுமிடத்து அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் பெருந்தன்மை இல்லாமையே இதற்கான  காரணம் என நினைக்கின்றேன் "விளக்கமில்லா இலக்கியம் விழலுக்கிறைத்த நீர்தான்"





Wednesday, November 9, 2016

நம்பெயர் பதிக்கலாம்

காதலில் கரைகாணலாம் வா  -அழகே
காத்திருந்து இன்பம் சேர்க்கலாம்
மோதலை தூரப்போடலாம் -உயிரே  
மோட்சத்தை நாம் பெறலாம்

கல்லையும் கடலையும் ரசிக்கலாம் -இன்றே
கவிதைபாடி நம்மை ருசிக்கலாம்
இல்லாத மகிழ்வுகளையெல்லாம் தேடலாம்  -நம்முள்
இலகுவாக காதலை வளர்க்கலாம்


ஊரூராய்  போய்  வரலாம் -இருவரும்
ஊர்வாயை விரியச்செய்யலாம் 
பாரெல்லாம் சுற்றித் திரியலாம் -பறவைகளாய்
பார்ப்போரை வியக்கவைக்கலாம்

கண்களுக்குள் கனவுகளை விதைக்கலாம் -வண்ண‌
கவிதைகளாயதை அறுவடை செய்யலாம்
எண்ணங்களில் புன்னகையை பூசலாம்  -எல்லா
இடங்களிலும் நம்பெயர் பதிக்கலாம்

ஈரிதழ்களின் மணத்தை பூக்களுக்கும் சொல்லலாம் -நம்
ஈரிதய  பந்தத்தினை ஒற்றையாயாக்கலாம் 
பேரிரைச்சல் கொண்ட  இவ்வுலகபோக்குகளை -நாம்
பேதமையென உரத்துச்சொல்லலாம்!!



Thursday, November 3, 2016

ஊடறு இணையத்தில் 28.10.2016

http://www.oodaru.com/?p=10334


பூவையர் எழுவது

   

-த.ராஜ்சுகா -இலங்கை
 
பூக்கள் பிறந்தது பெண்ணாக -அப்
பூவையர் எழுவது தீயாக‌
தாக்கிடும் தீங்கினை அம்பாக -அவர்
தாக்கிடுவார் வேங்கையாக
 
கல்விக்கோலினை ஆயுதமாக -கொண்டு
கடந்திடுவார் உலகினை லாவகமாக -குறை
சொல்லிடும் நாவுகளை அலட்சியமாக‌
பொசுக்கிடுவார் செயல்களாலே
 
அடுப்படிச் சாசனத்தை சாம்பலாக -பொசுக்கி
அகிலம் புகழும் விரமாக‌
இடுப்பொடிந்த கதைகளை கந்தலாக -எங்கும்
இல்லாதொழித்திடுவார் புயலாக‌
 
தவறாக நோக்கிடும் கண்களினை -கூரான‌
விழிகளால் துவம்சிப்பர் வீரராக‌
இறவாத லட்சியத்தினை சுமந்து -நல்ல‌
இலட்சியங்கள் படைப்பர் நேர்த்தியாக…