Monday, September 21, 2015

நானாக எழுகின்ற கோலானாய்

காலாற‌ நடைபோடும் அலையானாய்
கண்சிமிட்டும் வேளையிலே கனவானாய்
தேனூறும் சுவையருவி நீயானாய் -செல்ல‌
தேனமுது நிறைந்திட்ட கவியானாய்...

வானளவு நேசத்தை யறி முகப்படுத்தினாய்
வாயாறா வாழ்த்தல்களை வரிசைப்படுத்தினாய்
வானமழையாய் அன்பினைப் பொழிந்தாய்
வா வென்பதற்குளே வந்திநிற்கின்றாய்...

சுட்டெரிக்கும் சூரியனை மறைத்துநிற்கின்றாய்
சூழ்ந்துநின்று நிழலாக சுகம்தருகின்றாய்
பட்டதெல்லாம் மறந்துபோகும் மருந்தாகின்றாய்
பகல்கனவெல்லம் நனவாக்கும் விழியாகின்றாய்...


நானாக எழுகின்ற கோலானாய்
நாள்முழுதும் உற்சாக மருந்தானாய் -கவியே
வீணாக போய்விட்ட காலம்மறைத்தாய்
விறுவிறென்றெழுகின்ற விருந்தானாய்




Sunday, September 20, 2015

அப்பாக்களும் வெறும் .....

மகள்களைப்பெற்ற
அப்பாக்களிடம் கேட்டுப்பாருங்கள்
முத்தம்
காமத்துக்குறியதல்ல தென‌
எங்கோ கேட்டிருக்கின்றேன்
பச்சைக்குழந்தைகளையும்
இச்சையோடு பார்க்கும் ஆண்களிடம்
கேட்டுப்பாருங்கள் அதை
பொய்யென்று சொல்வார்கள்!!

அப்பாக்களும் வெறும் ஆண்கள்தானென்று
அடித்துச்சொல்கிறது
அண்மைக்கால அறிக்கைகள்!!

Monday, September 14, 2015

அய்டா 2035, கைப்பேய், யூ ஓன், ஆகிய சிறுகதைகள்

   நீண்டநாட்களுக்குப்பிறகு முகநூலில் சிறந்த‌ சிறுகதைகளினை வாசிக்கக்கிடைத்தது. கவிதைகளைவிட கதைகளையே அதிகம் படிக்கும் எனக்கு இந்த கதைகள் வெகுவாகப்பிடித்தது. ஊடகவியலாளரான விக்கி விக்னேஸ் அவர்கள் எழுதிய கதைகளே அவை.
மூன்று அங்கமாக வந்த "எலிசபெத்" கதை பிடிக்க‌ ஓரு சிறு காரணம் சிறுகதையின் தலைப்பு, பெரிய காரணம் சுவாரஸ்யம் குறையாத அந்த கதை.
வாசகரின் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கவைத்து, முடிவினை வித்தியாசப்படுத்துவதில்தான் எழுத்தாளன் வெற்றியடைகின்றான் அந்தவகையில் விக்கி அவர்களின் படைப்பு மிகப்பிரமாதம். ஆவிகள் பற்றி அசத்தலான காதல் கதைகள் "எலிசபெத்" மற்றது "ட்ரீஷோ எனப்படும் த்ரீவீலர்" இரண்டு கதைகளும் பேய் ஆவியை மையப்படுத்தி வாசகனை பயப்படுத்தாமல் வியக்கவைத்திருக்கின்றார்.
அழகான தமிழ்ச்சொற்களை கையாண்டும், அதிகமாக கதையினை இழுத்துக்கொண்டுப்போய் வாசகனை எரிச்சலூட்டாமலும் படைப்பினை பக்குவமாக கையாண்டிருக்கின்றார்.
நல்ல கருவினை தெரிவுசெய்து சிறப்பான சிறுகதைகளினை வாசிக்கும் சந்தர்ப்பத்தினை தந்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சகோதரர் விக்கி விக்னேஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் இன்னும் நலமானதை
பகிர்ந்துகொளவேண்டுமெனவும் கூறிக்கொள்கின்றேன்.

"எலிசபெத்" கதையிலிருந்து.........

"வரவேற்பரையின் மேல் சுவரில் எலிசபத்தின் பெரிய குடும்ப புகைப்படம் ஒன்று தொங்கவிடப்பட்டிருந்தது…
அதற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மெழுதுவர்த்தி ஏற்றப்பட்டிருந்தது.
எனக்கு அருகில் நின்றிருந்த எலிசபத்தின் அண்ணன் சொன்னார்,
“நடுவில உட்காந்திருக்கது எலிசபத், இடதுபக்கம் அம்மா, வலதுபக்கம் அப்பா, பின்னால நிற்கிறது……. நான்…”
https://vikeywignesh.wordpress.com/…/%E0%AE%8E%E0%AE%B2%E0…/


நான் வாசித்து வியந்த சிறுகதைகள் பற்றி ஏலவே குறிப்பிட்டிருந்தேன் அதன் தொடர்ச்சியே இந்த ரசனைக்குறிப்பும்.

டயரியின் சுயசரிதைபோல ஆரம்பிக்கும் ஒரு அட்டகாசமான சிறுகதை 'அய்டா 2035'ஊடகவியலாளரும் எழுத்தாளருமான விக்கி விக்னேஸ் அவர்களுடையது. சமூக அவலங்கள், காதல், குடும்பபின்னணியுடம் தொடர்புபட்ட கதைகளையே அதிகம் வாசிக்கக்கிடைக்கும் நமக்கு இந்திய எழுத்துக்களுக்கு ஒப்பாக சிறந்ததோர் சிறுகதையினை வாசிக்க கிடைத்தது.

தற்காலத்தை கடந்து எதிர்காலத்தின் ஓர் தினத்தில் வாழ்ந்துவிட்ட உணர்வு, புதுமையான கற்பனைத்துவம் கலந்த இக்கதை நிஜமானதாக இருக்குமோ என எண்ணுமளவிற்கு கதைப்புனைவு நம்மை அதிசய உலகிற்கு அழைத்துச்செல்கின்றது.

கொஞ்சம் நீளமானதாகவே இருப்பினும் சலிப்புத்தன்மையில்லாது விறுவி(ரு)றுப்பாக நகர்ந்துசெல்கின்றது எழுத்தாளர் தன்னையொரு விஞ்ஞானியாக வெளிப்படுத்தி வெற்றியும் கண்டுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.வார்த்தையமைக்குக்கள், விடய‌க்கோர்வைகள் மேலைநாட்டு சம்பவமொன்றை நேரடியாக பார்க்கும் நெகிழ்ச்சியை தருகின்றது.

இப்படி அதிரடியாய் தொடரும் கதை, முடிவடையும் இடத்தில்தான் படைப்பாளருக்கு பெரிய சபாஷ் போடத்தோன்றுகின்றது. பொதுவாகவே சிறுகதை, நாவல்களில் 'முடிவு' என்பது எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் போட்டியாய் அமையும் இடமென்று கூறலாம். சில நேரங்களில் வாசகன் எதிர்பார்த்த முடிவினையே தந்து எழுத்தாளர் தோற்றுப்போகின்றார், பலநேரங்களில் எழுத்தாளனின் எதிர்பாரா முடிவிலே வாசகன் மகிழ்வோடு தோற்றுப்போகின்றான் இடண்டுமே ஆரோக்கியமான நிகழ்வுதான். அதனையே விக்னேஸ் அவர்களும் அழுத்தாமான கதையின் முடிவைத்தந்து வாசகர்கள்மத்தியில் வெற்றி பெறுகின்றார். கதையின் கனமும் இந்த முடிவிலேதான் வலுபெறுகின்றது.

அய்டா 2035, கைப்பேய், யூ ஓன், ஆகிய சிறுகதைகள் தொழினுட்ப புனைவாக வியக்கச்செய்கின்றது சுஜாதா போல ஒரு சிறந்த படைப்பாளி ஈழத்து இலக்கிய வரலாற்றிலும் கால்பதித்திருக்கின்றார் என்பதில் எவ்விதமான ஐயப்பாடுகளுமில்லை.

வாசிக்கத்தொடங்கிய விழிகள் வாசிப்பைமுடித்தும் கதைக்குளேயே நிலைத்திருந்ததை மறுப்பதற்கில்லை அத்தனை தரம் வாய்ந்த படைப்பாக காணப்படுகின்றது. இதற்குமேலும் என் ரசனையினை வெளிப்படுத்த திறமையில்லையெனக்கு. நான் வாசித்த இம்மூன்று கதைகளுமே மூன்று நாவல்களுக்கு சமம் அப‌ரீதமான கற்பனை வளம், மொழியாள்கை, அணுகுமுறை, விறுவிறுப்பான கதை நகர்வு எல்லாமே இப்படைப்பை முழுமையடையச்செய்துள்ளது.

ஊடகவியலாளரான‌ விக்கி விக்னேஸ் அவர்களை நல்ல சகோதரனாக, தோழனாக அறிந்த நான் ஓர் வாசகியாக அவரை வாழ்த்துவதிலேயே பெறுமையடைகின்றேன். மிக விரைவில் அவரது சிறுகதை நூலினை வாசிக்கக்கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நன்றி
ராஜ்சுகா.


Saturday, September 12, 2015

நெஞ்சில் வெறியுண்டு கண்மணியே!!


கண்ணாள், பாரா யித்தாயவள்
கதறல் மறைக்கும் கண்ணீரினை
பெண்ணாய் பிறந்ததை பெறுமையென‌
எண்ணிய என் நிலமையதை...

எண்ணியெண்ணிக் கனவுவளர்த்து
எண்ணற்ற நினைவு சுமந்து
பொன்னாய்ப் போற்றிய -இப்
பெண்னன்பை புறந்தள்ளிய‌
புலம்பலினை பாராய்....

கருவறையி லுனை சுமக்குமட்டும்
காதல்கொண்ட ஓர்கயவன்
உருவம் மறைத்துக்கொண்டு -எனை
உதறிப்போன கதையினை கேளாய்....

காசுபணம் வேண்டாமெனத்தான் என்
கடலளவன் பை பெற்றுக்கொண்டான்
தூசாய் எனைநினைத்து கண்மணியே
தூரப்போனக் கொடுமை பாராய்...

பழிச்சொற்கள் பலவற்றை என்னில்
பலவந்தமாய் திணித்து
ஒழிந்துகொண்ட அக்காதகன் -என்னை
ஒழித்துக்கட்ட நினைக்கின்றான் பாராய்...

பட்டுத்துணிகள் பல்லாயிரம் காசு
பணத்தொகை அள்ளிவந்தவளுக்காய்
விட்டுக்கொடுக்க வேண்டுமாம் -அவனை
விட்டுப்போகவேண்டுமாம்
விலைபேசுகின்றான் காதலை
விடையில்லையே கண்மணியே
விழிமூடிக்கொள்....

விலைபேசும் உலகிது கண்ணாள்
விசித்திரமாம் மனங்களிங்கு
அலைபோல் நிலமை வரினும் -கண்மணியே
அணையாய் காப்பேனுனை

நெஞ்சில் வெறியுண்டு கண்மணியே
நெடுந்தூரம் பயணிப்போம்
அஞ்சியோடும்வரை துன்பத்தை
அடித்தே விரட்டிடுவோம்...

அன்னைத் துன்பமினி உன்னை
அணுகாது காத்திடுவேன்
என்னத் துயர் நேரிடினும்
எழுந்து நின்று ஜெயித்திடுவேன்....





Tuesday, September 8, 2015

கவிஞர் பிரகாசக்கவி அன்வர் அவர்களின் "தடம் தொலைத்த தடயங்கள்" நூலுக்கான ரசனைக் குறிப்பு

   


        கவிதை மொழியென்பது மலர்கள் செழித்த பூந்தோட்டத்தைப் போல வண்ணமும் வாசனையும் இரண்டறக் கலந்து வருவோர் கண்ளையும் கருத்தையும் கவர்ந்து, கவலைகளை மறந்து விடச்செய்திடும். அழகான அனுபவத்தினை இக்கவிதை எழுதுதல், வாசித்தல் என்பன மூலம் பெற்றிடலாம். அந்த உணர்வேடு எழுதப்பட்ட 'தடம் தொலைத்த தடயங்கள்' எனும் கவிதை நூல் வாசிப்போருக்கும் ஒரு பூரணத்தை தநது விடுமென்பதில் ஐயமில்லை. காத்தான்குடியிலிருந்து கவிதையினை சம்மட்டியாகவும் சாமரமாகவும் ஏந்திக்கொன்டு வந்திருக்கும் இளங்கவிஞர் எம்.பீ.அன்வர், தன் முதல் தொகுப்பிலேயே பக்குவப்பட்டவராக தெரிகின்றார். நிலையாமை, மனிதம், விடுதலை போன்றவற்றை வலியுறுத்தி சமூகத்தில் ஒரு மாற்றத்தை , விழிப்பை கட்டாயமாக கொன்டுவர வேண்டும் என்ற வெறியோடும் வேட்கையோடும் வெளிப்பட்டுள்ளார். 

இளையோர் மட்டுமல்லாது மூத்த படைப்பாளிகள் கூட காதலை முதன்மைப்படுத்தி எழுதிக்கொன்டிருக்கையில், இவரின் படைப்பை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அத்தனையும் சமூகத்தின் மீதான அக்கறை, 'விக்கல்' என்ற ஒற்றைத்தலைப்பைத் தவிர. கவிஞர் வதிலை பிரபா (இந்தியா) அவர்களின் ஓவியா பதிப்பகத்தின் வெளியீடான இந்த நூலிற்கு ஆழமான, காத்திரமான அணிந்துரையினை முனைவர். ப. பானுமதி (ஆதிராமுல்லை) (இந்தியா) அவர்களும், வாழ்த்துரையினை கவிஞர் ரியாஸ் குரானாவும், பின்னட்டைக்குறிப்பினை இளையநிலா.எம்.ரீ.எம். யூனுஸ் அவர்களும், வழங்கியுள்ளனர். முனைவர்.ப.பனுமதி அவர்களின் அணிந்துரை நூலுக்கு ஒரு கனதியை வழங்கியுள்ளதென்பதை மறுப்பதற்கில்லை. தமிழ்ப் பேராசிரியர் என்பதானல் பரந்துபட்ட தமிழறிவுடன் கூடிய தரமான ஓர் விமர்சனத்தையே தரிசிக்க முடிகின்றது. 

நீர்க்குமிழி போல நிரந்தரமில்லா மானுட வாழ்வை நிஜமென்று நம்பி அல்லல்படும் மனிதவர்க்கத்தை நினைத்து நொந்தவராக, அவர்களுக்கு உணர்வை ஏற்படுத்த்தும் வகையில் பல கவிதைகளை புனைந்துள்ளார். 'நீயும் மனிதன்' என்ற முதல் கவிதையில், 'கடற்கரையில் கட்டப்பட்ட மணல் வீடு மனிதா – நீ இதை உணர்ந்தால் நீயும் மனிதன்..' என அதனை நினைவூட்டுகிறார். உடலுக்குள் உயிர் உலவுமட்டுமே எம் எல்லோரினதும் அதியுச்ச மனித வாழ்தலின் உத்தரவாதம். அதற்குள் பகை, பொறாமை, போட்டி, பேராசை என நம்மை நாமே நரகப்படுத்திக்கொள்கிறோம். இதனை யாவரும் சிந்திக்க வேண்டும் என்ற அதிக பிரயத்தனத்தோடு பல கவிதைகளை புனைந்துள்ளார். கவிஞர். வாழ்க்கை வட்டத்தில் சுழலப்படாமல் எவரது வாழ்வும் ஒரே நிலையில் இருப்பதில்லை. மேலோர் கீழோராகவும், கீழோர் மேலோராகவும் மதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் ஏதோ ஒரு வகையில் நிகழவே செய்யும் அந்த மெய் நிலையினை உணர்ந்தால் நாமும் மனிதர்தான் . 

'வாழ்க்கை கோலங்கள்' எனும் தலைப்பு அதனை இவ்வாரு சித்திரிக்கின்றது. 'சூப்பி எறியப்பட்ட முருங்கைக் காயாய் வகுப்பறையின் மூலையில் நான்.'.. என தொடர்ந்து, 'மூன்றே வருடத்தில் ஆசானாய் நான். பல்கலைக்கழகம் சென்ற நண்பர்களோ மறியற் போராட்டத்துடன் வீதியில் வேலைக்காய்.'.. போராட்டங்களுடன் அல்லல்படும் நம் சமூகத்தை தூக்கி நிறுத்தும் , சீர்திருத்தும் பொருப்பு, கடமை அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உண்டு. அதனை உணர்ந்து செயற்படுவோர் எவருன்டு என பொங்கி எழுகின்றார் கவிஞர். 'ஆர்பரிக்கும் ஆன்மாக்கள்', 'பேய் தேசமும் சிட்டுக்குருவிகளும்', 'களவு போகும் உரிமைகள்', 'தேர்தல் திருவிழா', போன்ற தலைப்புக்களில் கோபத்தையும், இயலாமைகளையும், எதிர்ப்பையும், எதிர்ப்பார்ப்புக்களையும் வெளிப்படுத்தியுள்ளார். 'தூரத்தே ஓர் அசரீரி நாளையும் இத்தெருவில் யாரோ ஒருவன் யானையை பூனையாய் மாற்றப் போவதாய்;'. எப்பொழுதும் வாக்குறுதிகளை நம்பியே ஏமாந்து போகும் நம் வாக்குரிமை கலாச்சாரம் எப்போது மாறப்போகின்றது என்ற ஏக்கத்தோடும் கோபத்தோடும் நிறைவு பெறுகின்றது கவிதை. நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி எத்தனை பாடுபடுத்துகின்றது என்பதனை 'விலைவாசி' என்ற தலைப்பிலேயே நகைச்சுவை குணத்தோடு சுட்டிகாட்டியுள்ளார். 

'சீரும் பாம்பாய் சீறிப் பாய்கின்றாள் சில அடி தூரம் தள்ளியே படுக்கச் சொல்லி என் அன்பான வீட்டுக்காரி காரணம் கேட்டால் கடுப்போடு சொல்கிறாள் பொட்டிப் பால்மா பொல்லாத விலையாம்'. இதனை விடவும் அதிகம் விளக்கம் தேவையே இல்லையென தோன்றுகின்றது. யானைப்பசியும் சோளப் பொறியும்', 'நிதர்சனம்' என்ற கவிதைகளில் இன்னும் விரிவாகவும், அழகாகவும். பெண்ணியம் பேசும் ஆண்கள் பெண் சமுகத்தின் மத்தியில் அதிகமாகவே வரவேற்கப்படுகின்றனர். உண்மையில் வார்த்தையில் வடிக்கும் இவையெல்லாம் வாழ்க்கையில் வளர்க்கப்படுகின்றதா என்பது பற்றியெல்லாம் எனக்கு தொரியாது. இருந்தாலும் இப்படி சிந்திப்பதும் பெண் பிரச்சினை பற்றி அறிந்திருப்பதும் அதுபற்றி பேசுவதுமே ஓர் மைல்கள் தான். ஆவேசமாக, ஆணித்தரமாக காத்திரமாகவே கவிஞர் அன்வர் அவர்கள் பெண் பிரச்சனை பற்றி பேசுகின்றர். சமூகத்தில் இன்னுமே மாறாமல் கிடக்கின்ற பெண்ணடிமை, சீதனப்பிரச்சினை, முதிர்க்கன்னிகளின் மனநிலை என உண்மையாகவே பல தளங்களை தொட்டிருக்கின்றார். இதற்கு 'எப்போது', 'இயற்றிவிடு', 'மாதவிடாய்', போன்ற கவிதைகளை சுட்டிக்காட்டலாம். திருமண வயதை தாண்டிய ஓர் பெண்ணின் மனவுனர்வு மிக அப்பட்டமாக'இயற்றிவிடு' என்ற தலைப்பிலான கவிதையில் மிக அருமையான வரிகளைக் கையாண்டு கூறியிருக்கின்றார். 

காலத்தின் தேவையாக நிச்சயம் அவை நடைமுறைப்படுத்த வேண்டும். கவிஞரின் கனவு நிஜமானால் வாலாற்றில் இவருக்கென்று ஓர் இடம் ஒதுக்கப்படுவதில் ஐயமில்லை. இலஞ்சம் வேண்டிவிட்டால் தண்டனை வழங்குவது அரசின் சட்டமாச்சு ! சீதனம் வேண்டுகின்ற கலியுக அசுரர்களை தண்டிக்க – அரசு சட்டமியற்ற மறந்து போச்சு ! சுனாமியின் வடுக்கள் பற்றியும், நாட்டில் சமாதான கூக்குரல்கள் ஒலித்துக்கொன்டு இருந்தாலும் அந்த சுதந்திரத்தை அனுபவிக்க முடியாத அவலத்தையும், யுத்தம் சுமத்திச்சென்ற பொல்லாத நினைவுகளையும், பொருளாதார குறைபாடுகளின் நிமித்தம் வெளிநாடு செல்வோரின் அவல நிலைகளையும் கவிஞர் அழகுதமிழில் வடித்திருப்பதுவாசிப்பவரின் இதயத்தை மகிழ்வடையச் செய்துள்ளது. 

ஆங்காங்கே சில கவிதைகளில் நாட்டார் பாடலின் சாயல் வந்துபோகின்றது. இதனை முறையாக செதுக்கியிருப்பின் அக்கவிதைகளின் சுவை இன்னும் மெருகேறியிருக்கும். 'வெட்டி குத்தி சுட்டு அப்படி இப்படி ஒட்டியும் ஒட்டாமலும் என நிறைவு பெருகின்றது நூலின் தலைப்பில் அமைந்த கவிதை. இத்தொகுப்பில் அமைந்த எல்லாக் கவிதைகளுமே மனிதம் பேசுபவையாக கானப்படுகின்றது. குறைத்து மதிப்பிடுமளவு கவிதைகளோ அதன் கருத்துக்களோ அமையவில்லை எனலாம். நடைமுறை வாழ்வியலை கவிதைகளாகக்கொன்டு இந்தநூல் ஆரவாரமில்லாது இலக்கிய உலகத்தில் இடம்பிடித்திடும். கவிதைத் தலைப்புக்கள் கூட சமூகத்திற்கு பரீட்சயமான சொற்களில் அமைந்திருப்பது வாசித்தலில் ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகின்றது. அவ்வாறே 'வேலிபாய்தல்', 'மண்ணாங்கட்டி','வைத்தெரிச்சல்' போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் ரசிக்கும்படி உள்ளது. சாதிக்க வேண்டும், சமூகக் கண்களை திறக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு புறப்பட்டுள்ள 'பிரகாசக்கவி' எம்.பீ.அன்வர் அவர்கள் 'நாங்களெல்லாம் வாழும்போதே வரலாறு படைக்கத் துடிப்பவர்கள் என நம்மத்தியில் வெளிப்படுகின்றார். 

கவிஞரின் முயற்ச்சிகள் யாவும் வெற்றியடைந்து அவரின் கவிதைக் கத்திகள் இச் சமூகத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றபிரார்த்தனையோடு உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்சியடைகின்றேன்.

 நன்றி 
த.ராஜ்சுகா.

(நன்றி மகாகவி இதழ் -2014 நவம்பர் இதழ்)

வெலிகம ரிம்ஸா முகம்மத் அவர்களின் "அறுவடைகள்" விமர்சன நூலுக்கான ரசனைக்குறிப்பு


    
அண்மையில் வெளியீட்டைக்கண்ட "அறுவடைகள்" எனும் விமர்சன நூலினை வாசகர்களுக்காக வழங்கியவர் கவிதாயினியும் எழுத்தாளருமான ரிம்ஸா முகம்மத் அவர்கள். திறனாய்வில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளும் எழுத்தாளர்கள் மிகக்குறைவு அதிலும் பெண் விமர்சகர்கள் குறைவென்றே சொல்லலாம். ஏனைய கவிதை சிறுகதை படைப்பாளிகளுடன் ஒப்பிடும்போது விமர்சகர்கள் எண்ணிக்கையில் குறைவே.

அப்படிப்பட்ட எழுத்தாளர்களிடையே மிளிர்ந்து கொண்டிருக்கும் பெயர் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர் வெலிகமையைச் சேர்ந்த ரிம்ஸா முகம்மத் அவர்கள். கணக்கியல் துறையில் தொழில் புரியுமவர் இலக்கியத்தில் சாதித்துக்கொண்டிருப்பது மிகப்பெருமைக்குரிய விடயமே. தன் இலக்கியப்பணியின் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்காக ஏலவே 10நூல்களை தந்து தற்போது அறுவடைகள் எனும் 11வது நூலுடன் நம்மை சந்திக்கின்றார். கணக்கியல் சார்ந்த மூன்று நூல்களும் கவிதை,சிறுகதை, சிறுவர்கதை,சிறுவர் பாடல், விமர்சனம் சார்ந்த‌ ஏழு நூல்களுமே அவைகளாகும்.

நூலாசிரியரான ரிம்ஸா அவர்கள், பல்துறைசார்ந்த திறமை கொண்டவர். கவிதை, சிறுகதை, சிறுவர் இலக்கியம்,விமர்சனமென ஆழமான எழுத்தாற்றல் மிக்கவர். பரந்துப‌ட்ட வாசிப்புத்திறமை கொண்டவர். நேரமே இல்லையென ஓடிக்கொண்டிருக்கும் நமக்கெல்லாம் பத்திரிகையொன்றை முழுமையாக வாசிப்பதற்கே நேரமில்லாதபோது கிட்டத்தட்ட நாற்பத்து மூன்று நூல்களை படித்துவிட்டு அத்தோடு நின்றுவிடாமல் அதற்கு ஆய்ந்து ஆராய்ந்து தன் மன உணர்வுகளை விமர்சனமாக தந்திருப்பதை பாராட்டாமல் இருக்கமுடியாது. பத்திரிகைகள் வானொலிகள் வலைதளங்களென தன்னுடைய படைப்புக்களை வெளியிட்டுவரும் இவர் 'பூங்காவனம்' எனும் காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராவார். ரிம்ஸா அவர்கள் தன்னுடைய இலக்கிய பணிகளுக்காக பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் வென்றவர்.

'அறுவடைகள்' இது எழுத்தாளர் ரிம்ஸா அவர்களை ஒரு சிறந்த வாசகியாக அடையாளப்படுத்தும் நூலாகும். ஆம் வாசிக்காத ஒருவனால் நல்ல எழுத்தாளனாக முடியாது

நூலுக்கு ஆழப்பொருந்தும் பெயருடனும் அதற்கு  அழகான அட்டைப்படத்துடனும் பிரசவமான இந்நூலுக்கு அணிந்துரையினை சோ.பத்மநாதன் அவர்களும் வாழ்த்துரையினை வவுனியூர் இரா.உதயணன் அவர்களும் பின்னட்டைக்குறிப்பினை இலக்கியவாதி கலைவாதி கலீல் அவர்களும் வழங்கி சிறப்பித்துள்ளனர்.

ஒரு எழுத்தாளனை உருவாக்குவதிலும் அவனின் திறமையை உருக்குலைப்பதிலும் இந்த விமர்சனம் எனும் விடயம் அதிக பங்கு வகிக்கின்றது. தான் படைத்த படைப்பு சமூகத்திடம் எவ்வாறு போய்ச்சேர்ந்துள்ளது என்பதனை படம்பிடித்து காட்டுவதும் இவ்விமர்சனமே. அதனை அழகாக செய்துமுடிப்பதற்கும் ஒரு கலைவேண்டும் அதாவது தெளிவான வாசிப்பு, விடயத்தினை புரிந்துகொள்ளும் பக்குவம், சரிபிழைகளை பகுத்தறியும் தெளிவு, சரியாயின் திறந்த மனதுடன் வாழ்த்திடும் பரந்த மனது, பிழைகளாயின் நாசுக்காக பகிர்ந்தளிக்கும் சமயோசிதம் என்பவையே ஒரு நல்ல விமர்சனத்துக்குரிய பண்புகளாகும். இவ்வத்தனை பண்புகளையும்  இந்நூலினை வாசிக்கும்போது நம்மால் உணர்ந்து கொள்ளமுடிகின்றது.

இவ்வாறான பக்குவம் கொண்ட ரிம்ஸா அவர்கள், கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை மகிழ்வித்து அவர்களின் திறமையை உலகுக்கு வெளிக்காட்டவும், அவர்கள் தங்களை வளர்த்துக்கொள்ளவும் அதிகமாகவே பிரயாசப்பட்டிருக்கின்றார். (அவரது இரு விமர்சன நூல்களையும் சேர்த்து)

நான் கூறியதுபோல வாசிக்கும் பழக்கம் அருகிக்கொண்டுவரும் இக்கால கட்டத்தில் எதற்கெடுத்தாலும் இணையத்தில் உருகிக்கொண்டிருக்கும் நம்மவர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம் எனலாம். இவ்வாறான விமர்சனங்களினூடாக சிறந்த நூல்களினை தெரிவுசெய்து வாசிப்பதற்கும் ஒரே புத்தகத்தில் பல நூல்களை காண்பதற்கும் துணைசெய்வதோடு சேமித்து பாதுகாப்பதற்கு உகந்த பொக்கிஷமாகவும் காணப்படுகின்றது. உண்மையில் "அறுவடைகள்" சேமித்து பாதுகாக்கப்படவேண்டிய பெட்டகமே.
கவிதை நூல்கள், சிறுகதை நூல்கள்,நாவல்,சிறுவர் இலக்கியம், ஏனையவை என பிரித்து விமர்சிக்கப்பட்டுள்ள இந்நூலில் முக்கியமான ஒன்றுதான் நூலாசிரியர்கள் பற்றிய தகவல்கள். வெறுமனே எழுத்துக்களை பற்றி மட்டுமல்லாது எழுத்தாளர்களை பற்றியும் குறிப்பிட்டிருப்பது இலக்கிய தேடல் உள்ளவர்களுக்கு பிரயோச‌னமாக இருக்கும்.அதற்காக ஒன்றை குறிப்பிடுகின்றேன்

'அமைதிப்பூக்கள்' கவிதை தொகுப்பின் ஆசிரியர் மூதூர் எம்.எம்.ஏ.அனஸ் அவர்களை இவ்வாறு அறிமுகப்படுத்துகின்றார். பலருக்கு தெரியாத விடயமும் கூடத்தான்."சீறாப்புராணத்தின் பதுறுப் படலத்திற்கு தெளிவுரை எழுதிய மூதூர் உமர் நெய்னார் புலவரின் மகள் வழிப்புத்திரர்.அவரின் இலக்கியப்பார்வையும் சொற்களை லாவகமாக கையாளும் திறனும் இந்த நூலாசிரியரிடம் வந்திருப்பது வியப்பதற்கான ஒன்றல்ல ஏனென்றால் இலக்கிய பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த இவரிடம் கவிதை உணர்வு வெளிப்படாவிட்டால்தான் அதிசயப்படவேண்டும். ஆகவே கவிதா உணர்வு இவரது பாரம்பரியம். கண்ணியமும் சமூகப்பற்றும் தந்தைவழி வந்தது. இத்தனைக்கும் மேலாக அரசியலில் நன்னோக்குள்ள முனைப்பு இத்தனை குணாம்சங்களையும் வெளிப்படுத்தி நிற்கும் கருத்தியல் வாதத்தை இந்தக்கவிதைத் தொகுதியில் தரிசிக்கமுடிகின்றது" என தொடரும் அவ்விமர்சனத்தினைப்போல இன்னும் பல படைப்பாளர்களைப்பற்றிய தகவல்கள் இந்நூலினில்.

 வாசித்தலில் பெற்றுக்கொண்ட சிறந்த அறுவடைகளை தொகுப்பக்கியுள்ள ரிம்ஸா அவர்களின் பிரதிபலிப்பு இவ்வாறும் அமைகின்றது தான் பெற்றுக்கொண்ட இன்ப உணர்வினை வாசகர்களாகிய எம்மிடமும் புகுத்திவிட எத்தனிக்கின்றார். இன்றைய இளம் தலைமுறையிடம் அருகிக்கொண்டுவரும் வாசிப்புத்திறமை மோலோங்கச்செய்திட, 1970 களுக்கு பின்னர் எழுத்துல‌கிற்கு வந்த கவிஞர் ஷெல்லிதாசன் 2010ம் ஆண்டில்தான் அவரது முதலாவது நூல் பிரசவமாகியுள்ளது அவர்களின் நூலுக்கு எழுதிய விமர்சனத்தின் மூலமே அழைப்பு இந்நூலாசிரியரிடமிருந்து. 'இலங்கையின் மூத்த எழுத்தாளர்கள் வரிசையிலுள்ள கவிஞர் ஷெல்லிதாசனின் கவிதைகள் மனித‌நேயம் சார்ந்த சிந்தனைகளாக வெளிப்பட்டுள்ளது இக்கவிஞரின் நூலினை வாசிப்பதின் மூலம் இளைய எழுத்தாளர்கள் தங்களது இலக்கியப்பாதையில் வெற்றிபெறாலாம்' என ஓர் ஆலோசனையையும் சொல்லிவைக்கின்றார் எழுத்தாளர் ரிம்ஸா அவர்கள்.

ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக எழுதிவரும் நூலாசிரியர், தனதுரையில் இவ்வாறு கூறுகின்றார்,'நாம் வாசிக்கின்றவற்றில் இரசனைக்குரிய அம்சங்கள் பல காணப்படுகின்றன அவற்றை ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்தி குறித்த எழுத்தாளர் பற்றிய அறிமுகத்தினையும் நூல் பற்றிய அறிமுகத்தினையும் செய்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்' என்று தன்னுடைய விமர்சனப்பார்வைக்கு பதிலினை படைக்கின்றார். இலண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகத்தின் வெளியீடான இந்நூலினை எழுத்தாளர் அவர்கள்,'படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு' சமர்ப்பணம் செய்திருப்பதும் நெஞ்சைத்தொடும் நெகிழ்வே.

இவ்வாறு பல்வேறுபட்ட பரந்த வாசிப்பனுபவத்தினையுடைய இவர், திறனாய்வின் முன்னோடியும் விமர்சனத்துக்கு புகழ்பெற்றவருமான இலங்கையின் மூத்த எழுத்தாளர் திரு கே.சிவக்குமாரன் அவர்களுடைய இரு ஆய்வு நூல்களுக்கு விமர்சனம் வரைந்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

அயராது இலக்கிய பணிகளுக்காக தன்னுடைய தொழில் தவிர்ந்த நேரங்களை செலவிடும் ரிம்ஸா முகம்மத் அவர்களின் 'அறுவடைகள்' விமர்சனத்தொகுப்பானது, நூல்கள் பற்றிய, நூலாசிரியர்கள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்வதற்கும் ஊசாத்துணையாக பயன்படுத்திக்கொள்ளவும் படைப்பாளிகள், மாணவர்களுக்கு பயனுடையாதான ஓர் சிறந்த நூலாகும். இந்நூலினை பெற்று பாதுகாப்பது தமிழ் பற்றாளர்களின் கடமையே என்பேன்.

இப்பாரிய பொறுப்பு மிக்க இலக்கியப்பணிகளை, எவ்வித எதிர்பார்ப்புகளும் இன்றி ஆற்றிவரும் பல்துறைசார் திறமை கொண்ட எழுத்தாளர் ரிம்ஸா அவர்கள் இன்னும் இலக்கிய உலகிற்கு ஆற்றவேண்டிய கடமைகள் ஏராளம். மூத்த எழுத்தாளர்களுடைய ஆலோசனைகளுடனும் அவருடைய தனித்தன்மைவாய்ந்த ஆற்றல்களுடனும் பல படைப்புக்களுடன் இலக்கிய சாம்ராஜ்யத்தில் வீறுநடைபோட வாசகர்களாகிய எமது நல்வாழ்த்துக்கள்.

நூல் :அறுவடைகள்
நூலாசிரியர்: வெலிகம ரிம்ஸா முகம்மத்
நூலின் வகை: விமர்சனம்
நூலாசிரியரின் தொடர்புகளுக்கு:0775009222
விலை:600/

நன்றி.
த.ராஜ்சுகா.