Saturday, July 23, 2016

05.07.2016 அன்று ஞாயிறு தினக்குரலில்


30.10.2015 12வது படைப்பாளி மலேசிய எழுத்தாளரும், தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சில் சிறப்பதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் கே.எஸ்.செண்பக வள்ளி

http://kalkudahnation.com/26657






பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணையதளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக சர்வதேச இரீதியாகவுள்ள எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. இதன் தொடரின் இன்று 30.10.2015 திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில்” பன்னீராவது வார கலைஞராக இணைந்து கொள்கிறார் மலேசிய எழுத்தாளரும், தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சில் சிறப்பதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் கே.எஸ்.செண்பக வள்ளி அவர்கள்.

 கேள்வி: மலேசியாவில் வசித்து வரும் நீங்கள், உங்களைப் பற்றிய அறிமுகத்தை உலக தமிழர்களுக்காகவும் சர்வதேசமெங்கும் பரந்து வாழும் கல்குடா நேசன் வாசகர்களுக்காகவும் பகிர்ந்து கொள்ள முடியுமா?


பதில்: நான் மலேசியாவில் ‘சுங்கை சிப்புட்’ என்னும் இடத்தில் பிறந்து வளர்ந்தேன். என்னுடன் பிறந்தவர் எண்மர். தந்தை மறைந்து விட்டார். தாயார் என்னோடு வசிக்கின்றார். உடன் பிறந்த அனைவரும் நல்ல துறைகளில் பணியாற்றி வருகின்றோம். தற்சமயம் பணி நிமித்தமாக மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் வசித்து வருகிறேன்.


 கேள்வி: இலக்கியத்துறையில் உங்களுக்கான ஈடுபாடு எவ்வாறு ஏற்பட்டது? அதன் பிரவேசம் பற்றியும் இதுவரை நீங்கள் படைத்த எழுத்தாக்கங்கள் பற்றியும் கூறுங்களேன்?


பதில்: கடந்த 25 வருடங்களாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வருகிறேன். சிறிய வயதாக இருக்கும் போதே இலக்கிய ஆர்வம் என்னுள் வேரூன்றியது. காரணம் என் குடும்பத்தில் நிலவிய தமிழ்ச்சூழல். என் தந்தை தான் எனது ஆசான். பள்ளியில் தடம் பதிக்கும் முன்னே திருக்குறள், ஆத்திச்சூடிச் சொல்லித்தந்தவர். என்னுள் தமிழ்த் தாகத்தை ஏற்படுத்தியவர். அதன் வெளிப்பாடு தான் இன்று உங்கள் முன்னிலையில் நான் அறிமுகப்படுத்திக்கொள்ள பாலமாக அமைந்தது. எழுத்துத்துறைப் பிரவேசத்திற்குக் காரணம் என் தமக்கை. நான் சிறிய வயதாக இருக்கும் போது, மாணவர்களுக்காக சிறுவர் கதை, மர்மக்கதை எழுதி வந்தார். அதைப் படிக்கும் போது ஏற்பட்ட ஆர்வம் என்னையும் எழுதத் தூண்டியது. எனது 13ஆவது வயதில் ‘மரம்’ என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதினேன். எங்கள் நாட்டில் வெளியாகிக் கொண்டிருக்கும் மூத்தப் பத்திரிகையான தமிழ்நேசன் நாளிதழில் அது வெளியானது. எனது முதலாவது சிறுகதை 17ஆவது வயதில் “கல்வியின் நிறம் என்ன?” என்ற தலைப்பில் அதே தமிழ்நேசன் நாளிதழின் 70ஆம் ஆண்டு மலரில் வெளியானது. எனது முதலாவது ஆய்வுக்கட்டுரை 2004ஆம் ஆண்டு ‘அரசியல் பயணத்தில் டத்தோஸ்ரீ சாமிவேலு’ என்ற தலைப்பில் எழுதி பரிசும் பெற்றேன். இம்மூன்று முதல் பதிவுகளும் எனது முத்திரைப் பதிவுகளாகும். நாட்டின் தேசத்தலைவர்கள், முக்கியமான நாட்களைக் குறித்து இதுவரை 60 ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். தேசிய நில, நிதிக்கூட்டுறவுச் சங்கம், கிள்ளான் வாசகர் இலக்கியச்சோலை, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தமிழ்நேசன், மன்னன் மாத இதழ், சூரியன் மாத இதழ், மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக்காப்பகம், பொது இயக்கங்கள் போன்ற அமைப்புகள் வாயிலாக நடத்திய இலக்கியப் போட்டிகளில் பங்கு கொண்டு சிறுகதை, கவிதை, கட்டுரை என அனைத்திலும் பல பரிசுகள் பெற்றுள்ளேன். தற்சமயம் நம்நாடு, தினக்குரல், மக்கள் ஓசை, தமிழ்நேசன், மலேசிய நண்பன், அன்பு இதயம், தமிழ் ஓவியம் போன்ற நாளிதழ் மற்றும் வார மாத இதழ்களில் சிறுகதை, கவிதை, கட்டுரைகளைப் எழுதி வருகிறேன். மலேசியத் தமிழ் எழுத்துலகம், தங்கமீன், திண்ணை ஆகிய இணையத்தளங்களிலும் படைப்புகளை எழுதியுள்ளேன். இதில் ‘அன்பு இதயம்’ என்னும் மாத இதழில் இரு ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வருகின்றேன். என் பதிவுகளுக்கு நல்ல தளம் அமைத்து பேராதரவு வழங்கி வருகின்றனர். எழுத்துறை வாயிலாக உலக ரீதியில் எனது படைப்புகள் கவனிக்கப்படுகின்றன. 2012ஆம் ஆண்டு மலேசியத் தொலைக்காட்சியில் “வசந்தம்” என்னும் நிகழ்ச்சியில் எனது பணி தொடர்பான ஒரு மணி நேர நேர்க்காணல், மலேசிய வானொலியான மின்னல் பண்பலையில் ஒரு மணி நேர நேர்க்காணல், மீண்டும் இவ்வருடம் உலக மகளிர் தினத்தையொட்டி “வசந்தம்” நிகழ்ச்சியில் ஒரு மணி நேர நேர்காணல், கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலண்டன் தமிழ் வானொலியில் ஒரு மணி நேர நேர்க்காணல், கடந்த பெப்ரவரி 14-15ஆம் திகதிகளில் சென்னையில் நடைபெற்ற உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் தேசியக் கருத்தரங்கில் “அயல் நாட்டு தமிழ் இலக்கியங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில் முனைவர் பா.த கிங்ஸ்டன் எனது கவிதைகளை ஆய்வுச் செய்து “புலம்பெயர் இலக்கியங்கள் பார்வையில் மலேசியக்கவிஞர் கே.எஸ்.செண்பகவள்ளி” என்ற தலைப்பினில் கட்டுரை சமர்ப்பித்துள்ளார். இவையனைத்தும் எனக்குக் கிடைத்த சமூக அங்கீகாரமாகவே கருதுகிறேன்.


கேள்வி: நீங்கள் கலந்து சிறப்பித்த இலக்கிய மாநாடுகள் தொடர்பாகவும் வெளிநாட்டு அனுபவங்களையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?



பதில்: மலேசியாவில் பல இலக்கிய மாநாடுகளில் கலந்துள்ளேன். நான் கலந்து கொண்ட முதல் வெளிநாட்டு மாநாடு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்துடன் 2010ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு. என் வாழ்க்கையில் மறக்க முடியாத மாநாடு. காரணம் அம்மாநாட்டின் போது, உலகளாவிய நிலையில் அறிஞர்கள், இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் எனப்பலரை நேரடியாகச் சந்திக்க முடிந்தது. அடுத்து மலேசியாவில் நடந்த உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு. இங்கும் பல நட்புள்ளங்களைச் சந்திக்க முடிந்தது. குறிப்பாக, கவிக்கோ அப்துல் ரஹ்மான், ஐயா சாகுல் அமீது, கவிஞர் நஜ்முல், கவிஞர் அஸ்மின், சிங்கப்பூர் அறிஞர் ஹிமானா சயிட் இவ்வாறாகப் பலரை நேரில் கண்டேன். தொடர்ந்து மாநாடு என்றில்லாமல் கருத்தரங்கில் பங்குக் கொள்ளும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தது மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம். அவ்வகையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதன் முதலாக கொல்கத்தா தமிழ் மன்றத்தில் “மலேசியத் தேசியப் பழஞ்சுவடிக் காப்பகம் ஒரு வரலாற்றுக் களஞ்சியம்” என்ற தலைப்பில் என் முதல் கட்டுரைப் படைத்தேன். அதனையடுத்து, கடந்த நவம்பர் மாதம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் “மலேசியப் பெண் படைப்பாளர்களின் வளர்ச்சி ஒரு பார்வை” என்ற தலைப்பிலும் கட்டுரைப் படைத்துள்ளேன். இதைத் தவிர பல இலக்கிய கருத்தரங்குகளிலும் பங்குப் பெற்றுள்ளேன். இந்தியாவின் பல முக்கிய இடங்களுக்கு 2004ஆம் ஆண்டு தொடங்கி 2012ஆம் ஆண்டு வரை பயணம் மேற்கொண்டு வருகிறேன். நான் சென்ற ஒவ்வொரு இடமும் எனக்கு புதிய அனுபவமும், செய்திகளும், பாடங்களும் கிடைத்துள்ளன.


 கேள்வி: மலேசியாவில் இலக்கியத்துறையில் பெண்களின் பங்களிப்பும், ஆர்வமும் எவ்வாறு காணப்படுகின்றது? அவர்களை ஊக்கப்படுத்தும் களமாக விளங்கிக்கொண்டிருப்பது?


பதில்: இக்காலக்கட்டத்தில் மலேசியப் பெண் படைப்பாளர்கள் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருகின்றனர். காரணம் இன்று பெண்களுக்கு உயர் கல்வி பெறும் வாய்ப்பும் வளமும் பெருமளவில் வழங்கப்பட்டு வருகின்றன. ஆய்வுகளுக்காக எழுதத் தொடங்கியவர்கள், அத்துடன் நிறுத்தாமல் தொடர்ந்து பல படைப்புகளைப் படைப்பதில் முனைந்து ஆர்வங்காட்டி வருகின்றனர். ‘இலக்கியம்’ என்பது தனி மனித அகவெழுச்சியாகும். அவ்வகையில், பெண் படைப்பாளர்கள் பெரும்பாலும் தங்கள் அனுபவங்களைத்தானே கற்பனையுடன் கலந்து கலை நயத்துடன் வெளிப்படுத்துகின்றனர். தங்களின் அனுபவங்களை எழுத்துக்களின் வழி படைப்புகளாகக் கொண்டு வருகின்றனர். பெண்களின் புனைவுகளில் யதார்த்தமும், நேர்மையும் பண்பாட்டுக் கூறுகளும் மொழித் தூய்மையும் சிறப்பாகவே வெளிப்படுகின்றன. தங்களின் மனவுணர்வுகளை எழுத்தில் வடிக்கின்றனர். மலேசியப் பெண் படைப்பாளர்கள் சிறந்த முறையில் இலக்கியத்துறைக்கு வித்தாக அமைந்து வருகின்றனர் என்பதற்கு ஆதாரமாக மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், தேசிய நில நிதிக்கூட்டுறவுச்சங்கம், இன்னும் பிற சமூக அமைப்புக்களும், மன்றங்களும் பெண் படைப்பாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்து, பொற்பதக்கம், கேடயம் ஆகியவைகளை வழங்கி சிறப்பித்து வருகின்றன.



 கேள்வி: உங்களுடைய குடும்பமும் கலைத்துறை சார்ந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். அது பற்றிக் கூற முடியுமா?


பதில்: நான் சிறிய வயதிலிருந்தே என் தந்தையின் கப்பீரமான குரல், தோற்றங்கண்டு பிரமித்து வளர்ந்தேன். அவர் முத்தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கியவர். நாடகத்துறையின் வாயிலாக கலைத்துறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். “முத்துக்குமரன் நாடகம் மன்றம்” அமைத்து சரித்திரம், இலக்கியம், சமூக நாடகங்களைப் பல மேடைகளில் அரங்கேற்றியவர் அவர். உடன் பிறந்த நாங்கள் எண்மரும் நாடகத்துறையில் பணியாற்றியுள்ளோம். நான் எனது 12ஆவது வயதில் பெருந்தலைச் சாத்தனாராக நடித்தேன். பிறகு செண்பகப் பாண்டியனாகவும் நடித்துள்ளேன். எனது சகோதர்களும் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளனர். அனைவருமே தமிழ் ஆர்வலர்கள். தந்தை மறைந்த காலத்தின் சுழற்சியின் காரணமாகவும், பணி நிமித்தமாகவும் எல்லோரும் ஒவ்வொரு திசையில் இருக்கிறோம். தந்தை வழி இலக்கியப் பணியை நான் மட்டும் தான் தொடர்ந்து வருகிறேன்.


கேள்வி: இலங்கையுடன் மலேசிய தமிழ்ச்சங்கம் தொடர்பினைக் கொண்டுள்ளதா?


இங்கு நடைபெறும் மாநாடுகள், கருத்தரங்குகள் போன்வற்றில் அதன் பங்கிருக்கின்றதா? பதில்: மலேசியத் தமிழ்ச்சங்கங்கள், அரச சார்பற்ற பொது இயக்கங்கள் தனிப்பட்ட முறையில் இலங்கை தமிழ் அமைப்புடன் தொடர்பு கொண்டிருக்கின்றார்கள். ஆனால், அங்கு நடைபெறும் மாநாடுகளிலோ, கருத்தரங்குகளிலோ கலந்து கொள்வதில் விருப்பம் காட்டுவதில்லை. காரணம் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகள். இதனால், இலங்கையுடனான தொடர்பினை தள்ளியே நிற்கின்றோம்.


 கேள்வி: உங்களது செயற்பாடுகளுக்குக் கிடைத்த விருதுகள் மற்றும் பட்டங்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?


பதில்: இலக்கியப் படைப்புகள் வாயிலாக பல பரிசுகள் பெற்றுள்ளேன். அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க விருதுகளாக 2005ஆம் ஆண்டு பெற்ற வாசகர் நற்பணி விருது, 2007ஆம் ஆண்டு பெற்ற சிறந்த சேவையாளர் விருது, 2012ஆம் ஆண்டின் இளைய தலைமுறை சிறந்த கட்டுரையாளருக்கான ‘டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் விருது’ என்பவற்றைக் குறிப்பிடலாம்.



கேள்வி: சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் உங்களது செயற்பாடுகளின் இரகசியம் என்ன? இப்பெண்களுக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனைகள் என்ன?


பதில்: எனது வெற்றியின் இரகசியம் எனது தன்னம்பிக்கை தான். என் மனதுக்கு சரி என்று பட்டதைச் செய்வேன். சொல்வேன். என் குடும்பம், நெருங்கிய நண்பர்கள் ஆதரவு தவிர்த்து நான் நம்புவது என் தன்னம்பிக்கையை தான். உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும் ஓது பற்பல நூல்வகை கற்கவும் இலகு சீருடை நாற்றிசை நாடுகள் யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே..! என பாரதி கண்ட புதுமைப்பெண்களாய் என்றும் தன்னம்பிக்கையோடு செயற்பட்டால் பெண்கள் தங்களுக்கான ஓர் அடையாளத்தை வளர்த்துக் கொள்ளலாம். இவ்வேளையில், கல்குடா நேசன் இணையத்தில் இந்த வாய்ப்பை வழங்கிய ஆசிரியருக்கும் கல்குடா நேசன் குடும்பத்தினருக்கும் சகோதரி ராஜ் சுகாவுக்கும் மற்றும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துக்களையும், நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

(23.10.2015 11வது படைப்பாளி குறும்பட நடிகரும் பாடகருமான ஜெறாட் நிரோஷன்.

http://kalkudahnation.com/26301#!/tcmbck





கல்குடா நேசனுக்காக நேர்காணல்:கவிதாயினி த.எலிசபெத் பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. 

இதன் தொடரின் இன்றைய (23.10.2015 திகதி வெள்ளிக்கிழமை) எமது “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் குறும்பட நடிகரும் பாடகருமான ஜெறாட் நிரோஷன். படைப்பாளிகளின் புரட்சியாக அண்மையில் திரையிடப்பட்ட ‘1023 வருடங்கள்’ குறுந்திரைப்படம் அனைவராலும் பேசப்பட்டது. முற்றிலும் வித்தியாசமான இலங்கையின் திரைப்படச்சூழலை வெளிப்படுத்தி இந்திய சினிமாவுக்கு இணையாக‌ தத்ரூப அமசங்கள் அத்த‌னையும் கொண்டு திரையிலே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த பரபரப்பான திரைப்படத்தின் கதாநாயகனை கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலினூடாகச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

கலைத்துறையில் துடிப்புள்ள இளைஞராக வலம் வரும் உங்களைப்பற்றி?


யாழ்ப்பாணத்தை சேர்ந்த நான் ஜெறாட் நிரோஷன். அம்மா அப்பா இரண்டு தம்பிமார் இரண்டு தங்கைமார் கொண்ட அழகிய கலகலப்பான எனது குடும்பத்தில் நானே மூத்தபிள்ளை. நான் கடந்த 10 வருட காலத்திற்கும் மேலாக யாழ். தூய மரியன்னை பேராலய பாடகர் குழாமில் பாடி வருகின்றேன். இரு இறுவெட்டுகளிலும் பாடியுள்ளேன். அதைவிட வானொலி ஒன்றுக்கும் நானும் நண்பன் தர்சனும் பாடியள்ளோம். இப்பயணத்தில் பல இடர்களைத் தாண்டித்தான் இன்று ஒரு பாடகராக சமூகத்தின் மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளேன். எனது நடிப்பும் அப்படித்தான். அதைவிட நான் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி கற்கை நெறியினைக் கற்று வருகின்றேன். பட்டதாரி ஆக வேண்டும் என்பது அம்மாவின் கனவும் கூட. என்னுடைய கனவு எல்லாம் சிறந்த நடிகனாகவும் நல்ல பாடகனாகவும் வரவேண்டும் என்பதே.

உங்களுக்கு கலையுலகப் பிரவேசம் எவ்வாறு ஏற்பட்டது?


எந்தவொரு மனிதனுடைய வாழ்க்கையைப் பார்த்தாலும் அவனுடைய வாழ்க்கைக்கு முன் எப்படியும் பல கஸ்டங்களை எதிர்கொண்டே அவன் வளர்ந்திருப்பான். அது போலவே, என்னுடைய வாழ்க்கையில் அதைவிட கூடுதல் என்றே கூற வேண்டும். அவ்வளவு தூரம் நான் கஸ்டப்பட்டே இன்று ஒரு நடிகனும் பாடகனும் ஆகியுள்ளேன். சில நேரங்களில் என்னோடு கூட இருந்து நெருங்கிப் பழகிய நண்பர்கள் கூட என்னை வீழ்த்தினார்கள். சிலர் என்னை விட்டும் விலகி விட்டனர். அதற்காக மனம் வருந்தவுமில்லை. அத்தோடு பொருளாதாரம் கூட என்ன எமனாக இருந்தது.  ஆனாலும், நான் மனம் சோர்ந்து போகவில்லை. அந்நேரம் எனக்குள் இருந்த ஆர்வம் விடாமுயற்சி, வெறி, இறை நம்பிக்கை எல்லாம் ஒன்று சேர்ந்து தான் என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த 3, 4 வருடங்களுக்கள் 3 குறும்படங்கள், 2 முழு நீளத்திரைப்படங்கள், 2 விளம்பரங்கள் மற்றும் நேத்ரா தொலைக்காட்சியின் சித்திரம் நாடகத் தொடரிலும் நடித்துள்ளேன். மேலும் 2 இறுவெட்டுக்களிலும் பாடியுள்ளேன். சுவிஸ் இணையத்தளம் ஒன்றிற்காகவும் பாடலொன்றையும் பாடியுள்ளேன். இதளை விட Dan TV, Shakthi TV, TCNL TV, Vetti TV போன்ற தொலைக்காட்சிகளிலும் பாடியுள்ளேன். தற்போது 2 பாடல்கள் மற்றும் 2 குறும்படங்களில் நடிக்கவும் தொலைக்காட்சியொன்றுக்கு நடனம் வழங்குவதற்கும் என்னை ஒப்பந்தம் செய்துள்ளனர். நீங்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் துறைகள் பற்றியும் அதில் சாதிக்கத்துடிக்கும் துறை பற்றியும் கூறுங்கள்? துறைகள் என்கின்ற போது பாடல் ஆடல் நடிப்பு என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்த மூன்றையுமே நான் அதிகமாக நேசிக்கின்றேன். இதில் பாடலும் நடிப்பும் சிறப்பானவை இந்த இரண்டும் என்னுடைய இரண்டு கண்களைப் போன்றவை. நான் சாதிக்கத் துடிப்பது நல்லதோர் பாடகனாகவும் நடிகனாகவும் வர வேண்டும் என்பதே. இவை தான் என்னுடைய ஆசை, விருப்பம், கனவு எல்லாமே. இத்தனை வருடங்களாக யாழ். மண்ணிலே யுத்தம் இடம்பெற்றதன் காரணத்தால் என்னால் எதுவுமே செய்ய முடியாத நிலை காணப்பட்டது. ஆனால், தற்போது யுத்தம் முடிவுறற்றதன் பின் 2010ஆம் ஆண்டுகளின் பின்பு தான் என்னுடைய நடிப்பும் ஆரம்பமானது. அது வரைக்கும் மேடை நாடகங்களிலேயே நடித்து வந்தேன். யாழ்ப்பாணத்திலே முதன்முதலாக செய்யப்பட்ட திருமண மடல் விளம்பரம் தான் என்னுடைய நடிப்பின் தன்மையை எனக்கும் வெளியுலகிற்கும் காட்டியது. இந்த விளம்பரம் யாழ். மண்ணிலே மிகப்பெரிய பாராட்டுக்களையும் வெகுமதிகளையும் பெற்றுக் கொடுத்து என் வாழ்வில் பாரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன் பிறகு தொலைக்காட்சிகளில் நடிக்க வேண்டுமெ ன்ற எண்ணம் எனக்குள் அதிகம் அதிகமாய் எழத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து திரைப்பட, குறுந்திரைப்பட விளம்பர வாய்ப்புக்கள் தேடி வந்தன. இப்படித்தான் மெது மெதுவாக வளர்ச்சியடைந்தேன். இன்று என்னுடைய முழுக் கவனத்தையும் இந்தக் கலைத்திறன்களிலேயே செலவழித்தும் வருகின்றேன்.


உங்களுடைய முயற்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள் மற்றும் உங்களது திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் பற்றியும் கூற முடியுமா?


பலர் என்னுடைய முயற்சிக்கு உறுதுனையாக இருந்திருக்கின்றனர். இருக்கின்றார்கள். அதில் சிறப்பான முதன்மையான இடம் என்னைப் பெற்றெடுத்த அன்பு தெய்வங்களையே சேரும். பெற்றோர்கள் இருவருமே நன்றாகப் பாடவும் ஆடவும் கூடியவர்கள். அவர்கள் வறுமையின் பிடியில் வளர்ந்ததால் தான் தங்களுக்கு மேடை அரங்கேற்றம் செய்வதற்கு சந்தர்ப்பமில்லாது போனதாகவும், ஆனால், அவர்களுக்கு கிடைக்காத சந்தர்ப்பங்கள் எனக்கு கிடைத்ததாகவும் அடிக்கடி என்னுடன் பகிர்ந்து கொள்வார்கள். நான் பாடுவதற்கு எனது அண்ணாவும் ஆசிரியருமான டீ.து.நிரேஷனும் ஒரு காரணம். அவர் மட்டும் இல்லையென்றால் எனக்கு பாடல் என்றால் என்னவென்று தெரிந்திருக்காது. அத்துடன் அதற்கான களமும் சரியாக அமைந்திருக்காது. அடுத்ததாக, 2008ஆம் ஆண்டு இசை இளவரசன் விருதை வென்றெடுத்த இசையமைப்பாளர் ஊ. சுதர்சன் அண்ணாவுக்கும்  நான் நன்றி கூற வேண்டும். “மன்னியும்” என்ற கிறீஸ்தவ பாடல் இறுவெட்டிலே தென்னிந்திய பாடகர்களுடன் (கிருஸ்ணராஜ், சத்தியபிரகாஸ், பூஜா) சேர்ந்து பாடுவதற்குரிய  சந்தர்ப்பத்தையும்  எனக்கு ஏற்படுத்தித் தந்தார். அத்தோடு, இந்த இறுவெட்டைத் தயாரித்த அருட்தந்தை ஜெயபாலன் அவர்களுக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். “இளப்பினும் சக்தியுண்டு” இறுவெட்டை தயாரித்து அதிலே 2 பாடல்களை பாடுவதற்கு பிரியன், பிரசாத் இருவருக்கும் சந்தர்ப்பம் அமைத்து தந்தார்கள். நடிப்பதற்கு நாடகக்கலை ஊடாக களமமைத்துத் தந்தார் யாழ். திருமறைக் கலாமன்றம் இயக்குநர் அருட்தந்தை நீ.சே.மரியசேவியர் அடிகளார். அதன் பிரதி இயக்குநர்களான ஜோன்சன் ராஜ்குமார், விஜயன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள். யாழ். மாவட்டத்திலே முதன் முதலாக உருவான விளம்பரத்தில் முதன்முதலாக நடித்த போது, கொஞ்சம் பயமாகவும் பதட்டமாகவும் இருந்தது. பல தேர்வுகளின் மத்தியிலேயே நான் தெரிவு செய்யப்பட்டேன். அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனம் இயக்கிய “பனைமரக்காடு” திரைப்படத்தில் கதாநாயகனின் நெருங்கிய நண்பனாக நடிக்கும் சந்தர்ப்பமும் கிடைத்தது. இந்தத்திரைப்பட விளம்பர வரிசையிலே நண்பன் சமித்தனின் அறிமுகம் எனக்கு எற்பட்டது. இதனைத் தொடர்தே “1023 வருடங்கள்” திரைப்படத்திலும் நடிக்கும் சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தது. இந்தத் திரைப்படம் என்னுடைய வாழ்விலே ஒரு மைல்கல் என்றே கூற வேண்டும். அதனைத் தொடர்ந்து நெல்லி சோடா கம்பனியின் விளம்பரமொன்றிலும் நடித்திருக்கின்றேன். அடுத்ததாக நாடகம், நடிப்பு இதில் எனக்கு ஏதேனும் சந்தேகங்கள் வந்தால் அதனை தீர்த்து வைப்பவர் தர்மா அண்ணா. அவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எனக்கு ஏற்படும் தடங்கல்கள் கஸ்டங்களிலும் நான் தொலைபேசி எடுக்கும் நேரங்களில் அன்பான பேச்சினால் சரியான ஆலோசனைகளை வழங்கி வழி நடாத்தி வரும் உடன் பிறவாத சகோதரன் அண்ணா ஜானூஸ் மற்றும் என்னை தற்போது செவ்வி காணும் அன்பு அக்கா ராஜ் சுகாவுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

பாடகராக, ஒரு நடனக் கலைஞராக வெளிப்பட்ட சந்தர்ப்பங்கள் பற்றி கூறுங்கள்?


 2003ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை யாழ். தூய மரியன்னை பேராலயத்தில் பாடகராக இருக்கின்றேன். 2007ஆம் ஆண்டு ஒரு பாடல் போட்டியிலே எங்களுடைய பாடகர் குழாம் போட்டியிட்டு 1ஆம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது. அதிலே எல்லோருக்கும் விருது கிடைத்தது. அது தான் என்னுடைய வளர்ச்சியும் ஆரம்பமும். அதனைத் தொடர்ந்து, வடக்கில் அரசாங்கத்தினால் நடைபெற்ற “வடக்கின் நட்சத்திரம்” பாடல் போட்டியில் பங்குபற்றி இறுதி 5 சுற்று மட்டும் வந்தமை ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து இசைக்குழுக்களில் பாடும் வாய்ப்பும் அதிகரித்தது. முதலில் இணைந்த இசைக்குழு “ஜங்கரன்” இசைக்குழு. அங்கு என்னை அறிமுகப்படுத்தியவர் தருமராஜ் அண்ணா. அவர்களே அவருக்கும் அதன் இருக்குநர்களான இந்திரன் சஞ்சய் அவர்களுக்கும் எனது நன்றிகள். நான் தற்போது ஜங்கரன் இசைக்குழு, ஜேம்ஸ் இசைக்குழு, து.சுசுகுமார் இசைக்குழு, கண்ணன் இசைக்குழு, றெய்ன்போ இசைக்குழு, விடியல் இசைக்குழு (கத்தோலிக்க இசைக்குழு) போன்றவற்றில் பாடி வருகிறேன். அது மட்டுமல்லாது, ஆலய வழிபாடுகள், திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் போன்றவற்றிலும் பாடி வருகின்றேன். நாடக்கலைஞராக என்றால், ஆரம்பம் திருமறைக்கலா மன்றமூடாகக் கிடைத்தது. பின் நண்பன் து.வாகீசனின் “மூன்று நட்சத்திரம் நடனக்குழு” ஊடாகவே பல மேடைகளில் மேலைத்தேய கீழைத்தேய நடனம் என்று தொடர்கின்றது. 2010ஆம் ஆண்டு (பனைமரக்காடு) படத்தின் ஓடியோ வெளியீடு வீரசிங்கம் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. அதிலே 3 நடனங்களை மேடையேற்றினோம். அதில் நான் எனது சகோதரியுடன் தனியாக நடனமாடினேன். அது எனக்கு பலரின் பாராட்டுக்களை பெற்றுக் கொடுத்தது. என்னுடைய சகோதரியும் என்னைப் போலவே எந்தக் கலைகளையும் விட்டு வைக்கவில்லை. அவள் ஒரு சகலாகலா வல்லி. அதனைத் தொடர்ந்து, 2012ஆம் ஆண்டு கத்தோலிக்க தொலைக்காட்சியான ரீ.சீ.என்.எல். தொலைக்காட்சிக்கு என்னை ஒரு நடனம் உடனடியாக தரும்படி கேட்டனர். நான் அதனை இரு நாட்களில் செய்து கொடுத்திருந்தேன். இதனை வெளிநாட்டில் பார்த்த பலர் எமது குழுவை வாழ்த்தினர். இன்னும் எனக்குத் தெரிந்தவற்றைக் கொண்டு பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் வெளியிடங்களிலும் பழக்கியும் வருகின்றேன்.


இலங்கையில் நீங்கள் நடித்த குறும்படங்கள் மற்றும் உங்களது கதாபாத்திரங்களின் முக்கியத்துவம் பற்றியும் கூறுங்கள்?


கெட்டவன் (குறும்படம்), தேடல் ஆரம்பம் (குறும்படம்), என்னுள் என்ன மாற்றமோ (முழு நீளத்திரைப்படம்), 1023 வருடங்கள் (குறும்படம்), பனைமரக்காடு (முழு நீளத்திரைப்படம்), சித்திரம் – நேத்ரா ரி.வி (நெடுந்தொடர் நாடகம்) போன்றவற்றில் இதுவரை நடித்துள்ளேன். கெட்டவன் குறும்படத்திலே 5 கதாநாயகர்கள். அதிலே நான் பிரதான கதாநாயகனாக நடித்திருக்கின்றேன். அது இன்னும் வெளிவரவில்லை. அடுத்து தேடல் ஆரம்பம். இதிலே எனக்கும் நண்பர்களுக்கிடையே ஏற்படும் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் கதாபாத்திரம். இந்தத் திரைப்படமும் இந்த வருடம் வெளிவரவிருக்கின்றது. என்னுள் என்ன மாற்றமோ முழு நீளத்திரைப்படத்தில் நாயகனின் நெருங்கிய நண்பனாக நடித்துள்ளேன். இதுவும் இந்த வருடம் வெளி வரும். பனைமரக்காடு முழு நீளத்திரைப்படம் தென்னிந்திய இயக்குநர் க.செவ்வேளின் தயாரிப்பில் நாயகனின் நெருங்கிய நண்பனாக நடித்துள்ளேன். இந்த திரைப்பட விளம்பரங்களின் வரிசையிலே தான் 1023 வருடங்கள் குறும்படத்துக்கு கிடைத்தது. இந்தத் திரைப்படம் என்னுடைய வாழ்க்கையிலே ஒரு மைல்கல். இது தான் நான் கதாநாயகனாக அறிமுகமாகின்ற முதல் குறும்படம். தற்போது பாரிய வரவேற்பைப் பெற்று திரையரங்கில் ஓடியது.


இலங்கையில் திரைப்படத்திற்கான வாய்ப்புக்கள் எவ்வாறு கிடைத்தது?


இலங்கையைப் பொறுத்த வரையில் திரைப்பட வாய்ப்புகள் தென் பகுதியிலேயே மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது. வட பகுதிகளில் அது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. இப்படியிருக்கையில், 2009ஆம் ஆண்டின் இறுதிக்காலப்பகுதியில் AAA Movies International திரைப்பட நிறுவனம் நடிக்க ஆர்வமுள்ளவர்ளுள் தேவையென்று விளம்பரப்படுத்தி இருந்தது. சாதிக்க வேண்டுமென்ற எனது வெறி நண்பன் திலீபனூடாகவே என்னை அங்கு சேர்த்தது. 350க்கும் மேற்பட்டோருடனான நேர்முகத் தேர்வில் எனக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. முதன்முதலாக தொலைக்காட்சியில் என்னை வெளியுலகிற்கு அடையாளங்காட்டியது ANDRA Weeding Card விளம்பரம். தொடர்ந்து நெல்லி சோடா விளம்பரத்தில் நடித்தேன்.



 1023 வருடங்கள் குறும்படத்தின் சிறப்புகள் பற்றி கூறுங்கள்?



1023 வருடங்கள் திரைப்படத்திலே பலர் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதியில் நான் தெரிவு செய்யப்பட்டேன். இது எனக்கு மறக்க முடியாத ஒரு திரைப்படம். பல குறும்படங்களில் நடித்திருந்தாலும் பார்வையாளர்களிடமிருந்து அதிகளவான பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது இக்குறும்படமே. இந்த திரைப்படத்திலே இடம்பெற்ற ஒரு காட்சியை எப்போதும் மறக்கவே முடியாது. இக்காட்சியினால் தான் படம் வெற்றி பெற்றது. அது ஒரு விபத்துக்காட்சி. வீதியால் சென்றவருடன் வேகமாகச்சென்ற வாகனம் மோதியதில் அவர் இறந்து விடுகிறார். காட்சி நகர்ந்த கொண்டிருக்கும் போது தூர இடத்தில் கமெரா இருப்பதனை யாரும் அவதானிக்கவில்லை. அப்போது வழியில் சென்ற பேரூந்தும் அவ்விடத்தில் நின்று விட்டது. பலர் ஏங்கி அழத்தொடங்கி விட்டனர். பெரும்பாலானோர் எமது வாகன ஓட்டுனரைப் பார்த்து கண்டபடி திட்டித் தீர்த்தனர். நாங்கள் படம் தான் எடுக்கிறோம் என்பதை அவர்கள் நம்பவில்லை. அப்படி எடுக்கப்பட்ட ஒரு காட்சி மிகப் பிரமாண்டமாக வந்துள்ளது. அரை மணி நேரமாவதற்குள் மன்னார் முழவதும் சூடு பிடித்து விட்டது. இந்த விபத்து பிறகு பொலிஸார் எங்களை கூட்டிச் சென்றனர். அன்றைய நாள் படப்பிடிப்பு அந்த விபத்துடனேயே முடிந்தது. அந்த நிமிடம் நாங்கள் எல்லோரும் படத்தின் வெற்றியை உணர்ந்தோம். படம் எடுக்கவில்லையே என்று குழம்பியிருந்தாலும் மறுபுறம் மகிழ்ச்சி தாண்டவமாடியது.



 இப்படத்துக்கான வரவேற்பும், ஆதரவும் எவ்வாறுள்ளது?


இப்படத் தயாரிப்பில் பல பிரச்சினைகளையும் கஸ்டங்களையும் எதிர்கொண்டோம். இருப்பினும், எங்களது விடா முயற்சியினால் இப்படம் மக்களிடையே பாரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பேஸ்புக் மற்றும் தொலைபேசி மூலமாக முகம் தெரிந்த, தெரியாத பல நண்பர்கள் உள்நாட்டிலிந்தும் வெளிநாட்டிலிருந்தும் வாழ்த்துக்கூறி ஆதரவளித்தினர். அத்துடன். 1023 வருடங்கள் திரைப்படம் மன்னார் அயன் திரையரங்கிலே வெளியிடப்பட்ட போது, நாங்கள் யாருமே எதிர்பார்க்காதளவிற்கு முதல் 3 காட்சிக்கும் அதிகளவான மக்கள் திரண்டு வந்தனர். பெரும்பாலானவர்கள் படம் சூப்ரா பண்ணியிருக்காங்க என்று என் காது குளிரும்படி சொல்லிக் கொண்டே போனார்கள். அந்த தருணங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. வீதியால் செல்லும் போது எப்போ படம் ரிலீஸ் என்று கேட்டவங்க எல்லாம் படத்தைப் பார்த்து விட்டு மெய்ச்சிலிர்த்து நின்றதையும் கண்ணுற்றேன். இப்போது கூட நண்பர்கள் காணும் இடங்களில் வாழ்த்துகின்றனர்.



திறமைமிக்க நம்நாட்டு கலைஞர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் என்று எதை கருதுகிறீகள்?


இந்தியக் கலைஞர்களுக்கு நிகராக நம்மவர்களும் இலங்கையில் இருக்கின்றனர். ஆனால், அவர்களுக்குரிய சந்தர்ப்பங்களும் வழிகாட்டல்கள் மற்றும் ஒத்துழைப்புக்கள் முழுமையாகக் கிடைப்பதில்லை. இவர்கள் மனங்களில் இந்திய சினிமா தான் அதிக செல்வாக்குச் செலுத்துகின்றது. இந்திய சினிமாக்களை மட்டும் பார்ப்பதை விட்டு விட்டு, நம்மவர் படைப்புகளையும் பார்க்கும் மனப்பாங்கு எல்லோரிடத்திலுள் வர வேண்டும். எமது படைப்புக்கள் வெளிநாடுகளுக்கும் போக வேண்டும். அப்போது தான் திறமைமிக்க கலைஞர்கள் தடைகளின்றி வளர்ச்சி பெற முடியும்.


உங்களை அடையாளப்படுத்திய ஊடகங்கள் பற்றி குறிப்பிட முடியுமா?


என்னை அடையாளப்படுத்திய ஊடகங்களாக TCNL TV, துருவம் இணையத்தளம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். அதை விட, சக்தி ரீ.வி, டான் ரீ.வி, வெற்றி ரீ.வி. ஆகியவற்றையும் குறிப்பிட்டாக வேண்டும்.


உங்களது எதிர்காலத்திட்டங்கள் என்ன?


எனது எதிர்காலத்திட்டம், கனவு எல்லாமே சிறந்த பாடகனாகவும் நடிகனாகவும் வர வேண்டும் என்பதே. அதற்காகவே என்னை அர்ப்பணித்தும் வாழ்கின்றேன். பாடலும் நடிப்பும் என்னுடைய இரு கண்களைப் போன்றதே. இனி வருங்காலங்களில் இரு இறுவெட்டுகளை என்னுடைய சொந்தத்தயாரிப்பிலே வெளியிடுவதற்கு எண்ணியுள்ளேன். அதிலே ஒன்று “அழைப்பின் குரல்” என்ற கிறிஸ்தவப்பாடல். மற்றது “நினைவே நீயடி” என்ற பாடல் தொகுப்பு. இதற்கான வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.


 உங்களைப் போன்ற இளம் கலைஞர்களுக்கு கூற விரும்புவது என்ன?


முதலில் நாங்கள் எந்த கலைத்துறையில் இருந்தாலும் அத்துறையிலே சாதிக்க வேண்டுமென்ற எண்ணமும் விடா முயற்சியும் இருக்க வேண்டும். அடுத்தது, எம்மை அதற்கென அர்ப்பணிக்க வேண்டும். அப்போது தான் அந்தத்துறையிலே மிளிர முடியும். அத்தோடு, எமக்கு மற்றவர்கள் செய்த மிகச்சிறிய உதவிகளில் கூட நாங்கள் நன்றியுள்ளவராய் இருக்க வேண்டும். பலர் அதை மறந்தே விடுகின்றோம். இவற்றோடு சேர்த்து கடவுள் நம்பிக்கையும் கட்டாயம் வேண்டும். இறைவன் இல்லையென்றால் எதுவுமில்லை. இந்த விடயங்கள் எம்மிடம் காணப்படுமாயின், மனம் நோகாமல் ஏதெனுமொரு ஏணிப்படியிலே ஏறிச் செல்லலாம்.

14 வது படைப்பாளி இலக்கிய,சமூக சிந்தனைவாதி திருமதி மணிமேகலை கைலைவாசன்

http://kalkudahnation.com/27493#!/tcmbck




பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. 
இதன் தொடரின் இன்று 13.11.2015ம் திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 14 வது இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் இலங்கையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட இலக்கிய,சமூக சிந்தனைவாதி திருமதி மணிமேகலை கைலைவாசன் அவர்கள். வாழ்கின்ற காலம் கொஞ்சம். வாழ்ந்து தான் பார்ப்போமே…இனம், மதம், மொழி வேறுபாடற்ற ஓர் இனிய உலகத்தில் அன்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வாழ்வது சிறப்பு என்பதை வலியுறுத்த விரும்புகிறேன்” என்ற மனிதத்துடன் கூடிய சிந்தனைகளோடு கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணலில் இணைந்துகொள்கின்றார். இலங்கையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி மணிமேகலை கைலைவாசன் அவர்கள். இலக்கியவாதியாக அறியப்பட்ட இவர், சிறந்த சமூக சிந்தனைகளையும் மற்றவர்களுக்கு உதவுவதில் அதிகமான ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவராக நம்மத்தியில் பெருமை பெறுகின்றார். அண்மையில் இலங்கைக்கு வந்த அவரை அணுகிய போது பகிர்ந்து கொண்ட விடயங்கள் வாசகர்களுக்காக‌….


தங்களின் இலங்கைக்கான திடீர் விஜயம் குறித்து? 

அன்னை மண்ணுக்கு வணக்கம். அன்புத்தமிழுக்கு வணக்கம். என்னை நேர்காணல் செய்யும் தங்களுக்கும் வாசகர்களுக்கும் அன்பு வணக்கம். என்னுடைய   கவிதைத்தொகுப்புக்களான  தாயுமானவன், சிந்தனைத்தொகுப்பு, இந்த நாள் இனிய நாள் வெளியீடு சம்பந்தமாகவும் சில இலக்கிய ஆர்வலர்களைச் சந்திக்கும் நோக்கமாகவும் சில சமூக நோக்கங்களுக்காகவும் எனது பிரயாணம் அமைந்தது. 


 வெளிநாட்டு வாழ்க்கை அநுபவங்கள் பற்றி? 


 காலை மாலை வேலை என்று இயந்திரம் போல இயங்குகின்ற வாழ்க்கை. சுகபோகம் என்று சொல்வதற்கில்லை. குளிர் நாடு என்பதனால் அதற்கான பாதுகாப்புகளுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை. போர்ச்சூழலிலிருந்து எம்மைப் பாதுகாத்த நாடு என்ற படியால், எனது தாழ்மையான வணக்கங்களும் நன்றியும் கனடாவுக்கு நான் எப்போதும் வழங்குவேன். இங்கு எனது கணவர் மகாராஜா, 3 பிள்ளைகள், அம்மாவுடன் வசித்து வருகிறேன். இங்கே ஒரு தபால் திணைக்களத்தில் [clerk ] இலிகிதராக இருக்கிறேன்.முதியோர் பராமரிப்பிலும் பட்டம் எடுத்துள்ளேன்.




 நீங்கள் வாழ்ந்த காலத்து இலங்கைக்கும் தற்போதுள்ள இலங்கைக்குமிடையில் எவ்வாறான‌ மாற்றங்களை அவதானித்தீர்கள்? 


போர்ச்சூழலில் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. போக்குவரத்துகள், தொலைத்தொடர்புகள், கடிதப்போக்குவரத்துக்கள், கல்வி வசதிகள் சீரற்றிருந்தன. இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது. பாரிய மாற்றங்களைக் காண்கிறேன். போக்குவரத்துகள் இலகுவாகவுள்ளன. வீதிப்பரிசோதனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. பாடசாலைகளில் கல்விக்கான தரம் சிறப்பாக இருக்கிறது. பாராட்டப்படக்கூடிய விடயம் இலக்கிய வெளியீடுகளும் சிறப்பாகவுள்ளன. 

 இலக்கியப்பிரவேசம் அதன் ஆர்வம் என்பன பற்றிக்கூற முடியுமா?


 சிறுவயதிலிருந்தே  கலைகளில் ஆர்வமிருந்தது. என்னுடைய பேரன் எ.மார்க்கண்டு கலைமாமணிப் பட்டம் பெற்ற நாடக நடிகர் எ.எ.வைரமுத்துவின் நெருங்கிய நண்பர். என்னை 8 வயதிலேயே எழுத வைத்தவர். என் சிறிய தந்தையார் எ.அ.குகராஜா எழுத்தாளர். நான் பாடசாலை விழாக்களில் எழுதியிருக்கிறேன். கதைகள், கட்டுரைகள் எழுதிப்பரிசுகள் பெற்றிருக்கிறேன். கவிதைகள் எனக்கு மிகவும் பிடித்தவை. தற்போது முகப்புத்தகத்தில் நிறையவே எழுதுகிறேன். நல்ல சிந்தனைகளையும் எழுதுகிறேன். தமிழ் மொழி மீது தீராக்காதல் எனக்கு எப்போதுமுண்டு. அதன் இலக்கியப் பணிக்காக நான் என்னையே அர்ப்பணிப்பேன்.



 ஈழத்து இலக்கியங்களின் மீதான ஆர்வம் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் மத்தியில் எவ்வாறு காணப்படுகின்றது?


 தமிழன் எங்கு சென்றாலும் தன் கலாச்சாரம், பண்பாடு, மொழி என்பவற்றையும் காவியே செல்வான். அதே போல இலக்கிய ஆர்வமும் அவனுடனே நிறைந்திருக்கும். கனடாவிலும் ஏராளமான கல்விக்கூடங்கள் உள்ளன. கலை நிகழ்ச்சிகள், பரீட்சைகள், பரிசுகள், விருதுகள் என்று ஏராளம். பல வானொலி, தொலைக்காட்சிகள் 24 மணி நேரமும் இங்கே இயங்குகின்றன. சேவை செய்கின்றன. தமிழ் மாநாடுகளும் இங்கே இடம்பெற்றன. தமிழைத் தெளிவாகப் பேசுகின்ற குழந்தைகள் கனடாவில் அதிகம் என்பேன் நான். ஆசிரியர்களின் பங்களிப்பும் புலம்பெயர் நாடுகளில் பாராட்டத்தக்கது. 


 கனடாவில் தங்களுடைய இலக்கியப் பங்களிப்புக்கள், செயற்பாடுகள் குறித்து? திருமதி மணிமேகலை கைலைவாசன் வீட்டிலேயே பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக்கொடுப்பதிலிருந்து, வானொலி, தொலைக்காட்சி நிகழ்சிகளில் கலந்து கொள்வது வரை சொல்லலாம். பல நூல் வெளியீடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். இன்று உலகம் முழுவதும் என்னைத் தெரிகிறதென்றால், அது முகப்புத்தகம் ஊடாகத் தான். அதிகமான இலக்கியப் பங்களிப்பு முகப்புத்தக மூலம் தான் செய்கிறேன். தொடர்ந்தும் எழுதுகிறேன். 



 இலக்கியம் தவிர்ந்த உங்களுடைய ஏனைய ஆர்வங்கள், திட்டங்கள் பற்றி? திருமதி மணிமேகலை கைலைவாசன் இயற்கையை அதிகம் ரசிப்பேன். இசையை  நிறையவே கேட்பேன். சமூகத்திற்காக ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் எனக்கு நீண்ட காலமாகவே உள்ளது. தாய், தந்தையை இழந்த குழந்தைகளின் கல்விக்கும் அவர்கள் மீது அன்பு காட்டவும் எனக்கு கொள்ளை ஆசை. பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களையும் பராமரிக்க  ‘தாயுமானவன் கருணை இல்லம்’ என்ற பெயரில் அமைத்திட எண்ணியுள்ளேன். பொருளாதாரம் சரியான முறையில் அமைந்தால் நிச்சயம் என் எண்ணங்கள் நிறைவேறும். எனது முதல் புத்தக வெளியீட்டில் வரும் நன்கொடைகள் அனைத்தையும் இவர்களுக்காகச் செலவிட எண்ணியுள்ளேன் இறைவன் ஆசியுடன்.



 உங்களது ஊரிலும் இலக்கிய நண்பர்கள் மற்றும் ஏனையவர்களிடம் உங்களுடைய‌ வருகையின் போதான‌ வரவேற்பு பற்றிய அநுபவத்தினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்? 


 இம்முறை நான் ஊர் வந்த போது, என் முகப்புத்தக அன்பு நெஞ்சங்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. சிலரது கலைப்படைப்புகளை நேரடியாகப் பார்க்கக் கூடியதாக இருந்தது. எனது தயாரிப்பில் தோட்டி எனும் குறும்படம் முகிலனின் படைப்பாக வெளிவந்தது. இலங்கையிலும் சிறந்த கலைஞர்கள் இருக்கிறார்கள். தட்டிக்கொடுத்தால் தமிழ்க்கலைகளும் வளர்ச்சி பெறும் என்ற நம்பிக்கை வருகிறது. தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகள் எனக்கு நல்ல வரவேற்பைத் தந்தன. 



பெண்களுக்கெதிரான வன்முறைகள், மேலைத்தேய நாடுகளில் மட்டுமன்றி வளர்ந்து வருகின்ற நாடுகளிலும் அதிகளவாகக் காணப்படுகின்றது. அதற்கான காரணம் என்னவென்று நினைக்கின்றீர்கள்? 


 புரிதல் என்ற சொல் மறக்கப்பட்டமையே காரணம். பெண் என்பவளும் ஓர் உயர்திணை உயிரினம் என்பதை மறந்து விடுகிறார்கள். அவளுக்கும் சில தனிப்பட்ட ஆசைகள், கொள்கைகள் இருப்பதை மறுக்கிறார்கள். பெண்களும் தம் தன்னம்பிக்கையை  இழந்து போவது அதிகமாகவுள்ளது. வரும் தடைகளை உடைத்தெறியும் வல்லமை வேண்டும். தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் தைரியம் வேண்டும். மேலை நாடுகளை விட வளர்முக நாடுகளில் தான் பெண்களுக்கான வன்முறைகள் அதிகமாகவுள்ளன. பெண்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் என்பது என் கருத்து. 




 பெண்ணியம் என்பதில் எவ்வாறான விடயங்கள் வளர்க்கப்பட அல்லது தீவிரப்படுத்தப்பட வேண்டுமென நினைக்கிறீகள்? 


 ஆணுக்குப் பெண் எந்த வகையிலும் சளைத்தவளல்ல. சகல திறமைகளும் உள்ளவள். சமையலறையிலிருந்து சட்டசபை வரை ஆள்கிறாள். பயம் என்பது தேவையற்றது. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற நினைப்பை விடுத்து, நான் என்ன நினைக்கிறேன் என்பதை முதலில் தெளிவு படுத்த வேண்டும். சாதிப்பேன் என்ற தன்னம்பிக்கையும், நல்ல சிந்தனைகளும் பெண்களையும், பெண்ணியத்தையும் உயர் நிலையில் வைக்கும் என்பது என் கருத்து. 



 வெளிநாட்டில் வசிக்கும் நீங்கள், தற்போது இலங்கையுடன் எவ்வாறான தொடர்புகளைக் கொண்டுள்ளீர்கள்? இவ்விஜயத்தின் பின்னர் எதிர்காலத்தில் எவ்வகையிலான தொடர்புகளைப் பேண வேண்டுமென நினைக்கிறீர்கள்? 


 இலங்கையில் எனது சகோதர, சகோதரிகள்  உள்ளனர். ஏராளமான நட்புள்ளங்கள் உள்ளனர். கலை, இலக்கிய ஆர்வமுள்ளவர்களும் உள்ளனர். முகப்புத்தக  உறவுகளும், ஊடகங்களும்  எனக்கு நல்ல உதவியும் பங்களிப்பும் தருகிறார்கள். சில சமூக சேவைகளும் செய்ய எண்ணியுள்ளேன் இறைவன் ஆசி கொண்டு. சில நூல் வெளியீடுகளை யாழ் மண்ணில் தான் செய்ய வேண்டுமென ஆசைப்படுகிறேன். 




 இலங்கை தமிழர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது? 



வாழ்கின்ற காலம் கொஞ்சம் வாழ்ந்து தான் பார்ப்போமே…இனம், மதம், மொழி வேறுபாடற்ற ஓர் இனிய உலகத்தில் அன்பை மட்டும் அடிப்படையாகக் கொண்டு வாழ்வது சிறப்பு என்பதை வலியுறுத்த விரும்புகிறேன். அனாதைகள் என்ற சொல்லும் வேண்டாம் அகதி என்ற நிலைமையும் வேண்டாம் ஆன்மீகத்துடன் அன்பும் கலந்து வாழவும் தமிழின் பெருமையும் புகழும் வளரவும் வாழ்த்துக்கள். என்னையும் ஒரு பொருட்டாக மதித்து நேர்காணல் நிகழ்த்திய கல்குடா நேசன் இணைய தளத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

17.01.2017 23வது படைப்பாளி வைத்தியரும் எழுத்தாளருமான திரு. ஆரிஃப் அவர்கள்




http://kalkudahnation.com/31137#!/tcmbck




பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. இதன் தொடரில் இன்று 15.01. 2016ம் திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 23வது இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் இலங்கை சாய்ந்தமருதைச்சேர்ந்த வைத்தியரும் எழுத்தாளருமான திரு. ஆரிஃப் அவர்கள். சிறந்த மருத்துவராக தன்னை தொழிலுடன் மட்டும் மட்டுப்படுத்திக்கொள்ளாமல், சமூகத்தின்பால் இருக்கின்ற அக்கறை, தேடல், சேவை மனப்பான்மை காரணமாக எழுத்துத்துறையிலும் தன்னை ஆழமாக ஈடுபடுத்தி வருகின்றார் இந்த வைத்தியக்கவிஞரான ஆரிப் அவர்கள். “எனக்கு பிழை என்று படுகின்ற விடயங்களை அது எந்த விடயமாக இருப்பினும் எழுத்துருவில் சுட்டிக்காட்டி விட வேண்டுமென்று துடித்து விடுவேன்” என தனது எழுத்தின் மீதான ஆர்வத்தினை மிக உற்சாகத்துடனும் இந்த நேர்காணலில் பல சுவாரஸ்யமான அநுபவங்களோடும் அவர் நம்மோடு இணைந்து கொள்கின்றார். வாருங்கள் அவருடன் நாமும் இணைந்து கொள்வோம். 





01. தங்களைப் பற்றிய அறிமுகம்?


    நான் இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணத்திலே அம்பாறை மாவட்டத்தின் எழில் கொஞ்சும் கரையோரப் பிரதேசங்களில் ஒன்றான சாய்ந்தமருதுவைப் பிறப்பிடமாகக் கொண்டவன். நாகூர் மேனேஜர் என்றழைக்கப்படும் காலஞ்சென்ற ஆ. நாகூர் மற்றும் அ. லெ. கதீஜா பீவி என்பவருக்கும் கிடைக்கப்பெற்ற அரை டசின் செல்வங்களில் நான் நான்காமவன். சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த எங்களின் குடும்பத்தில் அல்லாஹ்வின் உதவியால் ஆரம்பம் தொட்டே கல்வியின் பால் ஒரு ஊக்குவிப்பு இருந்ததன் காரணமாக என்னாலும் ஒரு நல்ல நிலையை அடைய முடிந்தது.
    சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் எனது ஆரம்பக் கல்வியை வித்திட்டு, இரண்டாம் னியாளிக் கல்வியை கல்முனை சாஹிராக் கல்லூரியில் தொடர்ந்து, அங்கிருந்து பல்கலைக் கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு, காலி கராப்பிட்டியவில் அமைந்துள்ள ருகுணு பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தில் மருத்துவத் துறைக்கான கற்கை நெறியைத் தொடர்ந்தேன். எதிர்காலத்தில் ஒரு வைத்தியராக வரவேண்டுமென்று ஆசைப்பட்ட என் கனவு 1997 ஆம் ஆண்டு நிறைவேறியது.தோற்றத்தில் சிறிது கடுப்பான முகபாவம் இருந்தாலும், மென்மையான இதயம் கொண்டவன் என்பதை என்னோடு பழகியவர்கள் தெரிந்திருப்பார்கள்.


02. உங்கள் தொழிற்துறை பற்றி?


    அதன் ஆரம்பம் அவ்வளவு எளிதானதாகவோ, இனிமையானதாகவோ இருக்கவில்லை. கடினமானதாக இருந்தாலும் நான் சோர்ந்து விடவில்லை.
மருத்துவப் படிப்பை முடித்துக் கொண்ட நான், எனது முதல் நியமனத்தை அன்றைய மூதூர் மாவட்ட வைத்தியசாலையில் ( தற்போது தள வைத்தியசாலை ) வைத்திய அதிகாரியாக கடமை ஏற்ற  காலப்பகுதி மிகவும் சுமையான சுகமானது.மூன்று தசாப்தங்களாக எமது நாட்டை உலுக்கிக் கொண்டிருந்த பயங்கரவாதத்தின் உக்கிர செயற்பாடுகள் இடம்பெற்ற காலப்பகுதி அது. சாய்ந்தமருதில் இருந்து மூதூருக்கு தற்பொழுது மூன்று மணித்தியாலங்களில் பயணித்து இன்புறும் நாங்கள் அன்று இரண்டு நாட்கள் பயணித்தோம். மூதூர் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலும், அதன் எல்லைக் கிராமமான சம்பூர் எல். ரீ. ரீ. ஈ. இனரின் கட்டுப்பாட்டிலும் இருந்தது. நாங்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து சுமார் ஒரு மைல் தான் சம்பூர். இனி என்ன, கேட்கவும் வேண்டுமா? இரவானால் செல் முழக்கங்களும், பூட்ஸ் காலடிச் சத்தமும் எங்களுக்குப் பழகிப் போயிருந்தது.இத்தனை பயங்கரமான சூழ்நிலையில், பிறந்து ஆறு மாதங்கள் மட்டுமே கடந்து, தவழும் பருவத்தில் எனது மூத்த மகனாருடன் என் மனைவி என்னோடிருந்ததனால் தான் அக்காலப் பகுதியை சுமையான சுகம் என்று ஆரம்பத்தில் சொல்லியிருந்தேன்.
பிறகு அங்கிருந்து கேகாலை மாவட்டத்தில் பெலிகல வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியாக இடமாற்றம் பெற்று கடமையாற்றிய அந்த மூன்று வருடங்களும் என் வாழ்வில் மறக்க முடியாத காலம். பெரும்பான்மையான பெரும்பான்மைச் சமூகத்துடன் தோட்டப்புறத் தமிழ்ச் சகோதரர்களும் ஒன்றாக வாழ்ந்த அந்த பிரதேச மக்களும், பௌத்த மதகுருமாரும் எனக்கு சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார்கள். எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் சந்தோசமாக இருக்கையில் யார் கண் பட்டதோ தெரியவில்லை. எதிர்பாராத விதமாக இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டில் நிகழ்ந்த வாகன விபத்தினால் தடுமாறிப் போனாலும், நாங்கள் உயிர் தப்பியது அல்லாஹ் எங்களைக் கை விடவில்லை என்பதை உணர்த்தியது.
அதன்பிறகு, கொழும்பு தேசிய வைத்தியசாலை, சவூதி அரேபியாவில் தனியார் வைத்தியசாலை என்று நகர்ந்து, மீண்டும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடமை செய்து தற்சமயம் கடந்த மூன்று வருடங்களாக என் தாய் மண்ணில் கடமை கலந்த பொதுப்பணி செய்து கொண்டிருக்கிறேன்.



03. வைத்தியத்துறை தவிர்ந்த உங்களது ஏனைய செயற்பாடுகள்?



தற்பொழுது குறிப்பாக தாய் மண்ணிற்கு வந்ததன் பிற்பாடு, எழுத்துத் துறையிலும், சமூக சேவையிலும் முடிந்தவரையில் என் உத்தியோகபூர்வ கடமைக்கு அப்பாலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். அதாவது, மருத்துவத் துறையோடு மட்டும் என்னை மட்டுப்படுத்திக் கொள்ளாமல் என் பார்வையை சிறிது பரவலாக்கியிருக்கின்றேன். தொழில் சார்ந்தவர்களில் அநேகமானவர்கள் தங்களைத் தொழிலோடு மட்டுப்படுத்திக்கொண்ட கலாச்சாரம் மேலோங்கியிருப்பதன் காரணமாக சிலவேளைகளில் சில விமர்சனங்களுக்கு ஆளாக வேண்டியிருந்தாலும் நான் சளைத்து விடவில்லை.


04. எப்படி உங்களுக்கு எழுத்திலும் ஆர்வம் ஏற்பட்டது?


    சிறுவயது முதல் இலக்கியத்துறையிலும், செய்தி வாசிப்பதிலும் ஆர்வம் இருந்தாலும், அன்றைய காலப்பகுதி அதற்கு சாதகமாக அமையவில்லை. கடந்த மூன்று வருடங்களாக எழுத்துத் துறையில் என்னை ஈடுபடுத்தி வருகின்றேன். கவிதை, தொழில்சார் கட்டுரைகள், சமூகக் கட்டுரைகள், விமர்சனக் கட்டுரைகள் மற்றும் செய்திகளையும் அவ்வப்போது எழுதி வருகின்றேன். அவைகள் பத்திரிகைகளிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் வெளிவருகின்றன. ஊடகத்துறையில் எனக்குள் இருக்கும் ஆர்வத்தின் காரணமாக அதனை முறையாக பயின்று வருகின்றேன்.



05. உங்கள் எழுத்துக்களில் எந்தெந்த விடயங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றீர்கள்?


    தொழில்சார் விடயங்கள், சமூகம் சார்ந்த விடயங்கள், பொதுவான் பிரச்சினைகள், சுருக்கமாக சொல்வதாயின் எனக்கு பிழை என்று படுகின்ற விடயங்களை அது எந்த விடயமாக இருப்பினும் எழுத்துருவில் சுட்டிக்காட்டி விடவேண்டும் என்று துடித்து விடுவேன்.



06. உங்களது எண்ணங்களை இலகுவாக வெளிப்படுத்த எந்த எழுத்து வடிவத்தை தெரிந்தெடுத்துள்ளீர்கள்?


    எண்ணங்களை எந்த எழுத்து வடிவத்திலும் வெளிப்படுத்தலாம். எந்த வடிவத்தில் வெளிப்படுத்தினாலும் அது சேர வேண்டியவர்களை சேருவதைப் பொறுத்துத் தான் எமது செயற்பாட்டின் வெற்றி தங்கியுள்ளது. அந்த வகையில் நான் எனது எண்ணங்களை கட்டுரை வடிவில் அதிகமாகவும், கவிதை வடிவில் சில நேரங்களிலும் வெளிப்படுத்துகிறேன். எண்ணம் எவ்வகையானது என்பதைப் பொறுத்தே  அதை கட்டுரை வடிவிலா அல்லது கவிதை வடிவிலா வெளிப்படுத்துவது என்பதைத் தீர்மானிப்பேன். பொதுவான பிரச்சினை எனும் பொது அதிகமாக கட்டுரை வடிவிலேயே என் எண்ணங்களை வெளிப்படுத்துவேன். ஏனெனில், அப்போது தான் அது அதிகமானவர்களை  சென்றடையும்.



07. ஒரு வைத்தியராக வேண்டுமென்ற எண்ணத்திலா படித்தீர்கள்? உங்களது பள்ளிக்கால, இளமைக்கால அநுபவங்களை எங்களோடும் பகிர்ந்துகொள்ள முடியுமா?


    
ஆமாம் நிச்சயமாக.
ஒரு வைத்தியராக வேண்டும் என்பது தான் என் இலட்சியமாக இருந்தது. அதனை மனதில் முன்னிலைப்படுத்திக் கொண்டே கல்வியைத் தொடர்ந்த எனக்கு என் ஆசான்கள் நல்ல வழிகாட்டிகளாக இருந்தார்கள். ஆசான்கள் மத்தியில் நல்ல பெயரோடு கல்வி கற்ற மாணவர்களில் நானும் ஒருவன் என்பதைச் சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமை தான். பள்ளிப்பருவத்தில் பல பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளேன். பல வகுப்புக்களில் வகுப்புத்தலைவனாகவும், உயர்தர வகுப்பில் மாணவத் தலைவனாகவும்  செயற்பட்டு, அந்நாட்களிலேயே தலைமைத்துவ அனுபவத்தைப் பெற்றுள்ளேன்.
    இளமைக்காலம்....அது மறக்க முடியாத பசுமை நினைவுகள் நிறைந்த காலம். நண்பர்களோடு சேர்ந்து மாலைப் பொழுதுகளைக் கழித்த சுவடுகளை மீட்டிப்பார்க்கும் போதெல்லாம் மனதில் ஒரு பரவசம் இழையோடும். இளமைக்கால விளையாட்டுக்கு நான் மட்டும் விதிவிலக்காகிட முடியுமா என்ன? எனக்கும் வந்தது. ம்ம்...அது தான் காதல். நானும் காதலித்தேன். அவளும் என்னைக் காதலித்திருக்கிறாள். ஆனால் சோகம் என்னவெனில், எங்களுக்கிடையில் பார்வை தவிர்ந்த எந்தவிதமான தொடர்பும் இருக்கவில்லை. ஏழு வருடங்களுக்குப் பிறகு, பல்கலைக்கழகப் படிப்பு முடிந்த கையோடு, அவளைத்தான் கரம் பிடித்தேன் என்பது ஆச்சரியமான உண்மை. அவள் தான் என் மனைவி. எங்களின் திருமணம் காதல் திருமணமா அல்லது பேசி முடிக்கப்பட்ட திருமணமா என்பது பலருக்கு இன்றும் விடை தெரியாத வினா. அண்மைய எனது கவிதை ஒன்றில்..


    நான் அழகில் கம்மி தான் 
இருந்தும் என்னைக் 
கல்லூரி நாட்களிலேயே 
அழகாய்க் காதலித்தவள்
அவள்...

கடிதங்களில்லை
பேச்சுக்களில்லை
தொடர்புகளேயில்லை
ஆனால்...
மனசார நேசித்தாள்
என்னை மட்டும்...

என்று எழுதியிருந்தேன்.    



08. இலங்கையின் மருத்துவத்துறை வளர்ச்சி பற்றி?


    சிறப்பாக இருக்கிறது. வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் நோயெதிர்ப்பு நடவடிக்கை தொட்டு சிகிச்சைக்குரிய எல்லா விடயங்களிலும் நமது நாட்டு மருத்துவத்துறை அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளது என்பது கண்கூடு. அதனை சிசு மரண வீதம், கர்ப்பிணித்தாய்மாரின் மரண வீதம் என்பவற்றில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி சான்றாகும்.



09. ஏனைய வளர்முக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்நாட்டின் வைத்திய வசதிகள் பற்றி?



    ஏனைய வளர்முக நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாடு நிச்சயமாக நல்லதொரு நிலையில் தான் உள்ளது. சொல்லப்போனால் அபிவிருத்தியடைந்த நாடுகளில் உள்ள வசதிகளின் அளவுக்கு இல்லாவிட்டாலும், அதற்கு அண்மித்த அளவுக்கு வசதிகள் இருக்கிறது. எனினும், வளர்முக நாடுகளில் எமது நாடு முன்னணியில் இருக்கிறது.



10. அரசாங்க வைத்தியசாலைகளில் ஒரு சில வைத்திய அதிகாரிகளினால் பொதுமக்கள் அசெளகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றார்களே இது பற்றி?


    இந்த விடயமானது சாதரணமான ஒரு விடயமோ அல்லது ஓரிரு வார்த்தையில் பேசி விடக்கூடிய ஒரு விடயமோ அல்ல. இது பல தரப்பினர் அதாவது வைத்தியர்கள், நோயாளர்கள், ஏனைய சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், திணைக்களங்கள், அரசு என்று பலர் சம்பந்தப்படுகின்றனர். 
எனினும், ஒரு சில விரல்விட்டு எண்ணக்கூடிய வைத்திய அதிகாரிகளினால் நீங்கள் சொல்கின்ற விடயம் நடக்காமலில்லை. ஆனால், அதற்காக ஒட்டுமொத்த வைத்தியர்களையும் அப்படிச் சொல்ல  முடியாது. அவ்வாறு ஏதாவது நடக்கின்ற போது, அதனை சம்பந்தப்பட்டவரின் பிரச்சினையாகத் தான் பார்க்க வேண்டுமே தவிர அதனை ஒரு பொதுவான பிரச்சினையாகப் பார்க்கக்கூடாது.

11. பாதிக்கப்படும் பொதுமக்களுக்கான தீர்வாக இருக்கும் வழிமுறைகள் பற்றி?


    எந்த விதத்திலும் வைத்தியசாலைகளில் பொது மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், வைத்தியசாலைகள் இருப்பது நோயாளிகளான பொது மக்களுக்கு. எந்த நேரத்தில் அவர்கள் வைத்தியசாலைக்குப் போனாலும் அவர்களுக்குரிய சிகிச்சை இடம்பெற வேண்டும். அதேநேரம், வைத்தியசாலைகளின் நடைமுறைகளைப் பற்றியும் பொது மக்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை இடம்பெறாத நேரங்களில் சென்று, வெளி நோயாளர் பிரிவுச் சிகிச்சையை எதிர்பார்ப்பது பிரச்சினைகள் ஏற்படுவதற்கு  வழிகோலுவதாகவே அமையும். ஒரு வைத்தியசாலையில் திருப்தியான சேவை கிடைக்கவில்லை என்றால் அதனை உரிய முறையில்  உரிய இடத்துக்குத் தெரியப்படுத்தி கலந்துரையாட வேண்டும். அதன் மூலமாக சரியான தீர்வு கிடைப்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் தவறுகள் நடக்காமலோ அல்லது அதனை விட சிறப்பாக செயற்படுவதற்கோ அது உதவியாக இருக்கும்.


12. தனியார் வைத்தியசாலைகள் மீது மக்கள் அதீத நம்பிக்கை கொண்டுள்ளனரே இதற்கான காரணம்?


    தற்காலத்தில் நோயாளர்கள் தனியார் வைத்தியசாலைகளில் நம்பிக்கை வைத்திருப்பது என்பது உண்மை தான் என்றாலும் அதற்கான காரணம் என்ன என்பது என்னைப் பொறுத்தளவில் காத்திருக்கும் நேரம் தான். அதாவது, அரசாங்க வைத்தியசாலைகளில் வசதிகள் இருந்தாலும், சனத்தொகைக்கேற்ப ஈடுகொடுக்க முடியாத ஒரு நிலை காணப்படுகிறது. அதன் காரணமாக பதிவு செய்து அவசரமாக செய்யப்பட வேண்டியவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் நடைமுறைப்படுத்துகின்ற போது காத்திருக்க வேண்டி வருகிறது. பொதுவாக மக்கள் நோய் ஏற்பட்டவுடன் அதன் தாக்கம், தீவிரம் என்பவற்றை அறியாதவர்களாக உடனடித் தீர்வு வேண்டும் என்று  பயந்தவர்களாக வசதி குறைந்தவர்களாக இருந்தாலும் தனியார் வைத்தியசாலைகளை நாட முற்படுகிறார்கள். 
தனியார் வைத்தியசாலைகள் இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மக்களை முடிந்தவரையில் கவரும் வழிமுறைகளைக் கையாள்கிறார்கள். இதற்கு மற்றுமொரு காரணம், அரச வைத்தியசாலைகளின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப சில வசதிகளை மக்கள் பெற முடியாமை. உதாரணமாக, நினைத்த நேரம் செல்வதற்கும், தங்கியிருப்பதற்கும் உள்ள நடைமுறைகள். 
அதேநேரம், அரச சுகாதார ஊழியர்களுக்கு கிடைக்கின்ற கொடுப்பனவு தனியார் ஊழியர்களுக்கு கிடைப்பதை விடக் கம்மி என்கின்ற விடயமும் கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.



13. இத்துறையில் காணப்படும் குறைபாடுகளென நீங்கள் காண்பது?


    அரச ஊழியர்களுக்கும் தனியார் ஊழியர்களுக்கும் கிடைக்கின்ற கொடுப்பனவில் உள்ள வேறுபாடு, ஏனைய துறைகளைப் போன்று இங்கேயும் எல்லாப் பிரதேச மக்களுக்கும் சகல வசதிகளையும் வழங்க முடியாத நிலைமை போன்றவற்றைக் குறிப்பிடலாம்.


14. வைத்தியத்துறைக்குள் வரும் எம் இளைஞர்களின் விகிதம் எவ்வாறு இருக்கின்றது?


    இப்பொழுதுள்ள பொதுவான அபிப்பிராயம் ஆண்களை விட பெண்களே கூடுதலாக படிப்பில் அக்கறை எடுக்கிறார்கள் என்பதாகும். வெளிவருகின்ற பரீட்சை முடிவுகளும் அவ்வாறுதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் முன்னரை விட கணிதப்பிரிவில் கல்வி கற்கின்ற வீதம் அதிகரித்து இன்று பெண்களும் அதிகமாக பொறியியல் துறைக்குத் தெரிவு செய்யப்படுகிறார்கள்.
ஏனைய துறைகளிலும் ஆண்களை விட பெண்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது என்பதை தரவுகளும் உறுதிப்படுத்துகின்றன.
என் பார்வையில் இதற்கு முக்கியமான காரணமாக, ஆண்கள் இப்பொழுது பல்கலைக் கழகம் சென்று பயின்று தொழிலுக்கு வருவதை விட, தொழில் சார் கல்வியில் அதிகம் நாட்டம் கொண்டு, கூடிய விரைவாக தொழிலுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்று சொல்லலாம். அத்தோடு இளம் வயதிலேயே குடும்ப வாழ்க்கைக்குள் நுளைவதிலும் அதிகம் ஆர்வம் காட்டுவதையும் குறிப்பிடலாம்.



15. உங்களது வேலைப்பளுவுக்கு மத்தியில் எழுதுவதற்கு எவ்வாறு நேரத்தை ஒதுக்கிக்கொள்கின்றீர்கள்?


    இது பலரும் இன்று என்னிடம் நேரடியாகவும், முகநூல் வாயிலாகவும் எழுப்புகின்ற கேள்வி தான். தனிப்பட்ட தேவைப்பாடுகள், குடும்பம், தொழில்( எந்நேரமும் ஒரு பதற்றமும், மன அழுத்தத்துடனான தொழில் ), சமூக மற்றும் பிரதேசம் சார்ந்த பொதுப்பணிகள் என்று என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். பெரும்பாலானவர்கள் தமது தொழிலோடு குடும்பத்தைக் கவனிப்பதே கஷ்டமாக இருக்கிறது என்று புலம்புகிறார்களே, உங்களால் இத்தனையும் போதாதென்று எழுதுவதற்கும் நேரம் எப்படிக் கிடைக்கிறது, எப்படி முடிகிறது என்று கேட்பார்கள். 
அந்த விடயத்தில் முதலில், அப்படியான ஒரு சக்தியைத் தந்த சர்வ வல்லமையுடைய அல்லாஹ்வுக்கும், எனக்கு ஒத்தாசையாக என்பதை விடவும் பொறுமையாக  இருக்கும் என் மனைவி, பிள்ளைகள், குடும்பம்  மற்றும் நண்பர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
எது எப்படி இருந்த போதிலும், என் தொழில் விடயத்தில் அதன் கடமை விடயங்களில் நான் எனக்குத் தெரிந்து எந்தக் குறைவும் வைப்பதில்லை. என்னை விமர்சிக்க வேண்டும் என்று துடிக்கும் ஓரிரு நண்பர்களும் என் செயற்பாட்டைப் பூரணமாகத் தெரிந்து கொள்ளாமல், நான் என் கடமையைச் செய்யாமல் வேறு வேலையில் நேரம் கழிக்கிறேன் என்று ஆதாரமில்லாமல்  மொட்டையாகச் சொல்வார்கள்.


16. உங்கள் குடும்பம் பற்றி?


    அல்ஹம்துலில்லாஹ்! அது அளவான அழஹான குடும்பம். எனக்காக தன் பல்கலைக்கழக படிப்பையே கைவிட்டு, என்னையே உயிராக இன்னும் காதலிக்கும் என் மனைவி, இரண்டு ஆண் சிங்கங்களுக்கிடையில் ஒரு மகள். அல்லாஹ்வின் உதவியால் சந்தோசமாகப் போய்க்கொண்டிருக்கிறது.

எனக்காக அவள்
செய்த தியாகங்கள்
பற்பல...
பல்கலைக்கல்விக்கு வைத்த 
முற்றுப்புள்ளி அன்று
பெரிதானது எனக்கு
ஆனால் இன்று 
உணர்கிறேன் அது
என் பலவீனமென்று.

வசதியான வாழ்க்கை
வாழ முடியுமாயினும்
மாறினாள் எனக்காக
எளிமையாக வாழ
என் கரம் பிடித்ததால் தான் 
கஷ்டம் என்பது என்னவென்று
அனுபவித்தாலும் மனநிறைவாய்
தாங்கிக் கொண்டவள் அவள்.


17. வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி?


        பல பிரச்சினைகள் இருந்தாலும் மக்களும் ஒரு யதார்த்தமான உண்மையை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். வைத்தியர்களும் சாதாரண மனிதர்கள், அவர்களுக்கும் எல்லோரையும் போன்று அவசரங்கள், தேவைகள் இருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனைய குடும்பங்களைப் போன்றே அவர்களுடைய குடும்பங்களுக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கும். சுகாதார சேவை அத்தியாவசிய சேவை என்பதை விட அது ஒரு தார்மீகப் பொறுப்பு என்பதால் எல்லோரையும் போன்று அவர்களால் பல சந்தர்ப்பங்களில் இருக்க முடிவதில்லை. குடும்ப நிகழ்வுகள், சமய நிகழ்வுகள், பெருநாள் போன்ற நிகழ்வுகளைத் தவிர்க்கின்ற சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. அப்படியான நேரங்களில் வைத்தியர்களை விட, அவர்களின் குடும்பத்தினர் தியாகம் செய்கிறார்கள். இந்த யதார்த்தமான உண்மையை விளங்கிக் கொண்டவர்கள் ஒரு சிலர் தான். ஏனெனில், வைத்தியர்களை உழைக்கும் யந்திரமாகவே அதிகம் பேர் பார்க்கிறார்கள்.



18.உங்கள் பார்வையில் ஒரு வைத்தியனுக்கு இருக்கவேண்டிய அடிப்படைத்தகைமைகள்?


        திறமை, பொறுமை, சகிப்புத் தன்மை, விட்டுக்கொடுப்பு, இரக்கம், உதவி செய்யும் மனப்பான்மை.


19. எதிர்கால வைத்தியர்களுக்கும், எமது இணைய வாசகர்களுக்கும் கூற நினைப்பது?



    . புத்தகக் கல்வியை மட்டும் கற்காமல் மனித நேயத்தையும் சேர்த்துக் கற்க வேண்டும். தானும், தன் தொழிலும் என்றில்லாமல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்றும் பார்க்க வேண்டும். எல்லோரையும் சமமாக மதித்து சஹஜமாகப் பழக வேண்டும். மனங்களை இறுக்கமில்லாமல் தளர்வாக வைத்திருக்க வேண்டும். தவறுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். முக்கியமாக மனிதத்தோடு வாழ வேண்டும்.  இவை எல்லோருக்கும் பொதுவானவை.

27 வது படைப்பாளியாக கவிதாயினி வெலிகம ரிம்ஸா முகம்மது


http://kalkudahnation.com/33659#!/tcmbck




பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாகப் பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது. 

இதன் தொடரில் இவ்வாரம் எதிர்வரும் 19.02.2016ம் திகதி வெள்ளிக்கிழமை எம்மோடு 27 வது படைப்பாளியாக இணைந்து கொள்கின்றார் இலங்கையில் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய காத்திரமான  பெண் படைப்பாளைகளில் ஒருவரான‌, படைப்பாளி கவிதாயினி வெலிகம ரிம்ஸா முகம்மது அவர்கள். கணக்காளராக தொழில் செய்யும் இவர், சிறுவர் இலக்கியம், கவிதை, சிறுகதை மற்றுமன்றி விமர்சகராகவும் எழுத்துலகில் பரிணமித்துள்ளார். முக்கியமாக  பூங்காவனம் என்ற காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகப் பணியாற்றும் இவர், இத்தனை திறமைகளையும் தன்னகத்தே கொண்டு பல சவால்களையும் சளைக்காமல் சந்தித்து, இந்த பெரிய பரப்பில் தனக்கென தனியிடத்தைத் தக்க வைத்திருக்கும் இக்கவிதாயினியை பாராட்டாமல் இருக்க முடியாது. ஊடகம் எல்லோருக்கும் பொதுவானது. அதை தனது சுயநலத்துக்காகப் பயன்படுத்தும் போது, அந்த ஊடகத்துக்கே மதிப்பில்லாமல் போகிறது. ஒரு ஊடகவியலாளன் தன் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கப்பால் நின்று நடுநிலைமையாகச் செயற்பட வேண்டும். ஆனால் தனிப்பட்ட பகையை மனதில் இருத்தி அநாகரிகமாக செயற்படுபவர்கள் ஊடகவியலாளராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள் எனக்குமுறும்  ரிம்ஸா முஹம்மதின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடைய வேண்டுமென்ற பிரார்த்தைனையோடு, கவிதாயினி ரிம்ஸா முகம்மது அவர்களின் காத்திரமான பதில்களோடு நேர்காணலோடு இணைந்து கொள்வோம்.




01. உங்களைப் பற்றி?

நான் வெலிகம ரிம்ஸா முஹம்மத் என்ற பெயரில் எழுதி வருகின்றேன். சுமார் 12 வருடங்களுக்கு மேலாக இலக்கியத் துறையில் ஈடுபட்டு வருகின்றேன். கவிதை, விமர்சனம், சிறுவர் இலக்கியம், சிறுகதை, பாடல் போன்ற தளங்களில் என் பணி தொடர்கின்றது. எனது துறை கணக்கீடு என்ற போதிலும் வாசிப்பில் ஏற்பட்ட நேசிப்பால் இலக்கியம் மீதான ஆர்வம் அதிகரித்தது. இதுவரை 12 நூல்களை வெளியிட்டிருக்கின்றேன். அதில் மூன்று கணக்கீடு சார்ந்தது. ஏனையவை இலக்கியம் சார்ந்தது.


02. இலக்கிய பிரவேசம் எப்போது தொடங்கியது?

1998 காலப்பகுதியில் சக்தி, சூரியன் அலைவரிசைகளில் எனது கவிதைகள் ஒலிபரப்பாகின. ஆனாலும் 2004 ஆம் ஆண்டு தினமுரசு பத்திரிகையில் நிர்மூலம் என்ற கவிதையை எழுதியதையடுத்தே இலக்கியத் துறையில் முனைப்புடன் செயற்படக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.

2004 – 2005 காலப்பகுதியில் இலங்கை வானொலி முஸ்லிம் சேவை மாதர் மஜ்லிஸ் நிகழ்ச்சியில் பிரதிகளை தயாரித்து நேரடியாக குரல் கொடுத்தும் வந்துள்ளேன்.


03. இப்படைப்புலகில் தனித்துவமாக சளைக்காமல் பயணிக்கும் தங்களின் வெற்றியின் ரகசியம் என்ன?

ஒரு கலைஞன், அல்லது கவிஞன் முதலில் மனிதனாக இருக்க வேண்டும். ஓவ்வொரு கலைஞனும் மனிதனை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மனிதாபிமானத்தோடு செயற்பட வேண்டும். நாம் உலகத்தில் பல செல்வங்களைச் சேமித்தாலும் மனிதர்களின் அன்பை, மதிப்பை சேமிக்காவிட்டால் நாம் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்காது. எனவே நான் நேசிக்கும் மக்களின் வாழ்வியல் பிரச்சினைகளை என் எழுத்துக்களினூடாக பிரதிபலிக்கின்றபோது அது அவர்களுக்கு ஆறுதலாகவும் மற்றவர்களுக்கு பாடமாகவும் அமைந்து விடுகின்றது. 
நாம் எழுதும் படைப்புக்கள் நூலுருவாக்கம் பெற்றால்தான் அது காலத்தால் நிலைத்திருக்கும். ஆதனால் நான் எழுதும் படைப்புக்களை நூல்களாக வெளியிடுவதில் க‌ரிசனை காட்டி வருகின்றேன். அவ்வாறு நூல்களை வெளியீடு செய்யும் போது அதனை வாசிப்பவர்கள் என்னை தொலைபேசியூடாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் என்னை வாழ்த்துகின்றார்கள். 
அதையும் தாண்டி எனது நூல்களை வெளியீடு செய்யும் போதும், பூங்காவனம் சஞ்சிகையை உரிய நேரத்தில் வெளியிடும் போதும் ஏற்படுகின்ற பல சிக்கல்களையும் சவால்களையும் சமாளித்து அவற்றை சிரமமாக நினைக்காமல் பொறுத்துக்கொண்டு தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்றேன்.

அதே போன்று எனது நூல் வெளியீடுகளின் போது என்னையும், என் எழுத்துக்களையும் நேசிக்கும் நல்ல உள்ளங்கள் சிரமம் பாராமல் வருகை தந்து எனக்கு உதவிக் கரம் நீட்டுகிறார்கள். தவிர்க்க முடியாத காரணத்தால் என் புத்தக வெளியீட்டு நிகழ்வுளுக்கு வருகைதர முடியாதவர்கள் கூட பிரிதொரு தினத்தில் என் நூல்களை வாங்கி உதவி செய்கின்றார்கள். 

பத்திரிகைகள், சஞ்சிகைகள், வலைத்தளங்கள், தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எனது படைப்புக்களுக்கு களம் தந்து என்னை ஊக்குவிக்கின்றார்கள்.
இவ்வாறான விடயங்கள்தான் எனது வெற்றிக்கான தூண்களாகும். 


04. நீங்கள் முன்னெடுக்கும் இலக்கிய செயற்பாடுகள்?

எனது படைப்புக்களில் பெரும்பாலானவை மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பேசுகின்றன. போரின் அவலம், இயற்கை அனர்த்தம், மலையக மக்களின் பிரச்சினைகள், சீதனக் கொடுமை போன்ற இன்னோரன்ன விடயங்களை பேனாவினூடாக உலகத்துக்கு எத்தி வைக்கின்றேன்.

அதுபோல 2010 ஆம் ஆண்டிலிருந்து பூங்காவனம் என்ற காலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியராக இருந்து அதனை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றேன். அதில் சாதனைப் பெண்களின் புகைப்படத்தை அட்டைப் படத்தில் போட்டு அவர்களது நேர்காணலையும் பிரசுரித்து வருகின்றேன். ஆத்துடன், வளரிளம் படைப்பாளிகளுக்கு ஒரு களமாகவும் பூங்காவனத்தின் வாசல்களைத் திறந்து வைத்திருக்கின்றேன். பூங்காவனத்தின் மூலம் பல புதிய படைப்பாளிகளை இலக்கிய உலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளேன் என்பதில் ஆத்ம திருப்தி எனக்கு.


05. இலங்கையில் பெண் படைப்பாளர்களின் வளர்ச்சி பற்றி கூற முடியுமா?

இன்று விரல் விட்டு எண்ணக் கூடியவர்களாக பெண்கள் இல்லை. அவர்களின் வளர்ச்சி ஒப்பீட்டளவில் அதிகரித்துக் காணப்படுகின்றது. முன்னைய காலத்தில் போலல்லாது பெண்கள் எல்லாத் துறைகளிலும் நிதானமாகவும், பொறுப்புடனும், தெளிவுடனும் தமக்கான பணிகளைச் செய்து கொண்டிருக்கின்றனர். கவிதை, நாவல், சிறுகதை போன்ற துறைகளில் பெண்களின் பங்கு அதிகமாகக் காணப்படுகின்றது. ஆகவே இன்று பெண்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது என்றே கூற வேண்டும்.


06. பெண்ணியம் பற்றி ஆண்கள்கூட அதிகமாக பேசுகின்றார்கள். சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் அந்தஸ்து, தனித்துவம் எப்படி இருக்கின்றது?

ஒரு காலத்தில் பெண்கள் வீட்டு வேலைகளுக்காக மாத்திரமே உரியவர்கள் என்ற கருத்துக் கணிப்பு இருந்து வந்துள்ளது. இன்று கல்வி அறிவின் வளர்ச்சியினால் இந்நிலைமை மாற்றமடைந்து பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் கணிசமாக பெண்களுக்கு ஆண்களும் உதவுகின்றனர். தற்காலத்திலும் சிறுவர்கள், பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைககளுக்கு எதிராக பல ஆண்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். பெண்களுக்காக அவர்கள் குரல் கொடுக்கின்றனர். பெண்களின் வளர்ச்சிகளில் பங்கெடுத்துக் கொள்கின்றனர். 

ஒரு தந்தையாக, சகோதரனாக, கணவனாக பல பரிணாமங்களில் ஆண்களின் உதவி கிடைக்கின்றமை பெண்கள் தமது திறமையை வெளிப்படுத்தி தனித்துவமாக செயற்படுவதற்கு இன்றியமையாத காரணமாக இருக்கின்றது எனலாம்.


07. நீங்கள் இத்துறையில் சந்தித்த சவால்கள் பற்றி கூறமுடியுமா?

ஆம். காய்த்த மரம் கல்லடி படும் என்பதற்கொப்ப எனது இலக்கியச் செயற்பாடுகளை நான் முன்னெடுத்துச் செல்லும்போது எனக்கும் பல இடர்கள் தோன்றின. உதாரணமாக ஒன்றைக் கூறுகின்றேன். குறித்த ஒரு கவிஞரும் நானும் ஆரம்ப காலத்தில் நட்பாக இருந்தோம். அவரின் வளர்ச்சியில் கணிசமான பங்கு என்னுடையாதாக இருந்தது. இலங்கை வானொலியில் முதன் முதலாக அவரது குரல் கவிதை நிகழ்ச்சியில் ஒலிப்பதற்கு காரணமாக இருந்தது நான்தான். பிறகு அவரது நேர்மையற்ற செயட்பாட்டின் காரணமாக ஏற்பட்ட மனக்கசப்புக்களால் அந்த நபருக்கும் எனக்குமான இலக்கிய உறவு அறுந்தது. அதில் எனக்கு எவ்வித வருத்தமோ நஷ்டமோ இல்லை. 
இலக்கியவாதிகளை நேர்காணல் செய்யும் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் முகாமையாளர் என்னை நேர்காணலுக்காக அழைப்பதாக சொல்லியிருந்தார். ஆனால் எனக்கு உரிய திகதி அறிவிக்கப்படவில்லை. அதற்குக் காரணம் அதில் பணிபுரியும் நான் முன்பு குறிப்பிட்ட நபர் என்னை அந்த நிகழ்ச்சியில் பங்குபற்ற விடாமல் தடுத்ததாக முகாமையாளர் சொல்லி பிறகு அறிந்தேன். இவ்வாறான புறக்கணிப்புக்கள் நேர்மையானவர்களுக்கு ஏற்படுவது சகஜம்தானே. 

ஊடகம் எல்லோருக்கும் பொதுவானது. அதை தனது சுயநலத்துக்காக பயன்படுத்தும் போது அந்த ஊடகத்துக்கே மதிப்பில்லாமல் போகிறது. ஒரு ஊடகவியலாளன் தன் சொந்த விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் நின்று நடுநிலைமையாக செயற்பட வேண்டும். ஆனால் தனிப்பட்ட பகையை மனதில் இருத்தி (தானே நேர்மையற்ற விதத்தில் நடந்துவிட்டு) இவ்வாறு அநாகரிகமாக செயல்படுபவர்கள் ஊடகவியலாளராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள். மனிதநேயம் உள்ளவர்களைக் காண்பது அரிதாகப் போய்விட்ட இந்தக் காலத்தில் இவ்வான நிகழ்வுகள் வியப்புக்குரியதல்ல. 

ஆனால் ஒருவரது வளர்ச்சியை இன்னொருவரால் தடுக்க முடியாது. ஏனெனில் இறைவன் நீதியானவன். அநீதி செய்தவர்களுக்கு நேர்வழி காட்ட மாட்டான். இவற்றையெல்லாம் தாண்டி இலக்கியத்துறையில் பரிணமிப்பதற்கு ஏனைய ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் என்னைச் சார்ந்தவர்களுமே காரணம் என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 


08. உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள், உங்கள் திறமைக்கு கிடைத்த விருதுகள் என நீங்கள் கருதுவது?

• 2007 இல் அகில இன நல்லுறவு ஒன்றியம் இவருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி ஷசாமஸ்ரீ கலாபதி|| என்ற பட்டத்தை தந்து கௌரவித்துள்ளது.

• 2008 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக மூதூர் கலை இலக்கிய ஒன்றியத்தினால் நடைபெற்ற கவிதைப் போட்டியில் இரண்டாம் இடம்;;.

• 2011 இல் அல்ஹஸனாத் சஞ்சிகை நாடளாவிய ரீதியில் நடாத்திய பேனாக்கள் பேசட்டும் என்ற கவிதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரம்.

• 2012 இல் கொழுந்து சஞ்சிகையினால் சர்வதேச மகளிர் தின விழாவில் இதழியல் துறையில் ஆற்றிவரும் பணிக்காக பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் தந்து ஷசாதனைக்குரிய மகளிர் விருது| பட்டத்தைத் தந்து கௌரவித்துள்ளது.

• 2013 அரச கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு மாவட்ட செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த கவிதைப் போட்டியில் முதலாம் இடம்.

• 2013 கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் தெஹிவலைப் பிரதேச செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த கவிதைப் போட்டியில் மூன்றாம் இடம்.

• தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் ஷஷவியர்வையின் ஓவியம்'' உழைக்கும் மக்கள் கலைவிழா 2013 தேசிய ரீதியில் நடத்திய இலக்கியப் போட்டிகளில் பாடல் இயற்றும் போட்டியில் ஷஷவெயில் நிறத்து தோல் கொண்டு' என்ற பாடலுக்காக மூன்றாம் இடம்.

• 2013 இன ஒற்றுமைக்கான அகில இலங்கை தேசிய கவிஞர்களின் சம்மேளனம் ஷஷகாவிய பிரதீப|| பட்டத்தைத் தந்து கௌரவித்துள்ளது.

• ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை வருடாந்தம் நடாத்தும் 2013 அமரர் செம்பியன் செல்வன் (ஆ. இராஜகோபால்) ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் ஷபணம் பந்தியிலே| என்ற சிறுகதைக்காக பரிசுச் சான்றிதழ்.

• 2014 அரச கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பு மாவட்ட செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த கவிதை (எல்லாம் மாறிப் போச்சு), பாடல் ஆக்கப் போட்டிகளில் முதலாம் இடமும், சிறுகதை (பிஞ்சு மனம்), சிறுவர் கதை (எல்லோரும் மனிதர்கள்தான்) போட்டிகளில் இரண்டாம் இடமும் கிடைத்துள்ளன.

• 2015 கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இரத்மலானை பிரதேச செயலகம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த திறந்த இலக்கிய விமர்சனப் போட்டியில் (வீடு நாவல் பற்றிய இரசனைக் குறிப்பு) முதலாம் இடம் கிடைத்துள்ளது.


09. இந்தப்பணியில் உங்கள் குடும்பத்தின் ஆதரவு எவ்வாறு காணப்படுகின்றது?

எனது மாமாவான திக்குவல்லை ஹம்ஸா அவர்கள் என் இலக்கிய வளர்ச்சியின் மிக முக்கியமான முன்னோடி என்று கூறலாம். நான் தரம் எட்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில் அவரது சிறுகதைகள் வெளிவந்த பத்திரிகைகளைக் காட்டி இத்துறையில் எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது அவர்தான். என் நெஞ்சத்தில் இலக்கிய விதையை முதலில் தூவிய பேராதனை பல்கலைக் கழக பட்டதாரியான என் மாமா, தேசிய கல்வி நிறுவகத்தில் செயற்றிட்ட அதிகாரியாக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


10. சக படைப்பாளிகள் மூத்த படைப்பாளிகளிடமிருந்து நீங்கள் எவ்வகையான ஊக்குவிப்புக்களை பெற்றுக்கொள்கின்றீர்கள்? அவர்களுடனான உறவு குறித்து?

எனது படைப்புக்களை முதலில் பார்த்து விமர்சிப்பவர் படைப்பாளி தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா. அவரது ஊக்குவிப்பு என் படைப்புக்கள் சிறப்பாக வெளிவருவதற்கு காரணமாக அமைகின்றது. அதன் பின்னர் சிலவேளைகளில் அவை பத்திரிகைகளில் செம்மைபடுத்தப்பட்டு வெளிவரும்போது குறித்த அப் பத்திரிகையாசிரியர் என் படைப்புக்களை திருத்துவதினூடாக என்னை ஊக்கப்படுத்துகின்றார். இணைத்தளங்களின் ஆசிரியர்களும் எனது படைப்புக்களை பிரசுரிப்பதினூடாக என்னை வளப்படுத்தி பலப்படுத்துகின்றார்கள். இன்று பத்திரிகை போலவே இணையமும், இணைய சஞ்சிகைகளும் தற்கால மானிட வாழ்வில் அதிகமாக ஒன்றிணைந்துள்ளன. அவ்வாறான நவீன தொடர்பாடல்கள் மூலமாக பல இலக்கிய நண்பர்கள் அறிமுகமாகியிருக்கின்றார்கள். அவர்களது கருத்துக்கள், பதிவுகள் போன்றவையும் என்னை ஊக்கப்படுத்துவதாக உள்ளன.

திரு நீர்வை பொன்னையன், திரு சிறிசுமன கொடகே, திரு இரா உதயணன் போன்றவர்கள் என் இலக்கிய முயற்சிகளுக்கு கைகொடுத்தவர்கள். அதே போல இதுவரை நடைபெற்ற புத்தக வெளியீடுகளில் இடம்பெறாத ஒரு நிகழ்வு எனது புத்தக வெளியீட்டின் போது நிகழ்ந்தது. அதாவது திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுஸைன் அவர்கள் எனக்கு தங்க மோதிரம் ஒன்றை பரிசளித்து என்னை கௌரவப்படுத்தினார். இதுவும் என்னை உட்சாகப்படுத்திய என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நிகழ்வாகும்.


11. இலக்கியத் துறையில் உங்களது நோக்கம் என்ன?

என் வாழ்வில் நான் கண்ட முதல் சோகம் எனது தாயார் இறையடி சேர்ந்ததுதான். அதிலிருந்துதான் எனது இதயத்தின் ஓசைகளை பாஷைகளாக நான் மொழிபெயர்த்தேன். கவி வடித்தேன். அவ்வாறு எழுதும்போது எனது நோக்கம் என் துயரத்தை காகிதத்துக்கும் சுமக்கக் கொடுப்பதுதான். ஆனால் காலவோட்டத்தினால் கவிதையின், இலக்கியத்தின் போக்கு என் மனதில் ஒரு ஆறுதலையும் தேறுதலையும் தந்ததுண்மை. அந்த மாறுதலினால் என் சிந்தனை இலக்கியத்தில் சிக்கிக் கொண்டது. இதன் பின்னர் நான் கடந்து வந்த காலத்தில் பல சம்பவங்கள் எனக்கு படிப்பினையாக அமைந்தன. 

சிலரது வாழ்க்கை எனக்கு பாடமாக அமைந்தது. அவற்றையெல்லாம் அவதானித்து அந்த பிரச்சினைகளில் மற்றவர்கள் சிக்கிவிடக்கூடாது என்ற நோக்கத்திலும், யாரும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கத்திலும் பேனா என்ற ஆயுதத்தை ஏந்தினேன். சமூகத்துக்கு எதிராக செயற்படும் விடயங்களுக்காக அந்தப் பேனாவை வாளாக மாற்றினேன். எனது நோக்கம் ஒரு படைப்பாளனின் எழுத்துக்கள் வாசிப்பவரின் இதயத்தைத் தொட வேண்டுமென்பதே தவிர சுட வேண்டும் என்பதல்ல.


12. பெண்களுக்கு நீங்கள் வழங்கும் ஆலோசனை என்ன?

பொதுவாக பெண்கள் என்று நோக்குமிடத்து தமது கலாசாரத்தை சீரழித்துக் கொண்டு யாரும் எழுத முன்வரக் கூடாது. ஏனெனில் நமது வாழ்க்கை பூஞ்சோலையில் ரோஜாக்கள் கா(பூ)த்துக் கொண்டிருக்கும்போது நாம் நம் எழுத்துக்களினூடாக முட்களைத் தேடிக் கொள்ளக் கூடாது. வரம்பு அல்லது வரைமுறை என்பதெல்லாம் பெண்களை முடக்கிப் போடுபவை என்ற சிந்தனையிலிருந்து விடுபடுங்கள். உண்மையில் அந்த வரைமுறைகள் எமக்கு முன்னோர்கள் போட்டுவிட்ட முள்வேலி. முள்வேலியைப் பயிர்கள் கடந்தால் அவை காளைகளின் பசிக்கு இரையாக நேரிடும். எனவே எமக்கென்றொரு பாதையை நாம் போட்டுக்கொள்வதில் தவறில்லை. அதில் தனித்துவம் இருக்க வேண்டுமே தவிர ஒழுக்க வரைமுறைகளைத் தவறிவிடக் கூடாது.


13. மலையகத்தை பொறுத்தவரையில் எழுத்தாளர்களின் பங்களிப்பு, வளர்ச்சி, அவர்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்கள் பற்றி கூறமுடியுமா?

மலையகத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் கொடி கட்டிப் பறக்கின்றார்கள். அவர்களின் ஆத்திரமெல்லாம் இன்று முன்னேற்றங்களாக மாறி வருவது ஆரோக்கியமானது. தலைநகரில் வீட்டு வேலைகளுக்காக ஒது(டு)க்கப்ட்டவர்கள் இன்று பல உயர் பதவிகளை வகிக்கின்றார்கள். மலையக எழுத்தாளர்களின் வளர்ச்சிக்காக பல மலையக அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன. அவை மலையக எழுத்தாளர்களுக்காக போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்கின்றன.


14. நீங்கள் இதுவரை வெளியிட்ட நூல்கள்? 

கணக்கீட்டுத் துறையில் வங்கி கணக்கிணக்கக் கூற்று (2004), கணக்கீட்டுச் சுருக்கம் (2008), கணக்கீட்டின் தெளிவு (2009) ஆகிய 03 நூல்களை வெளியிட்டுள்ளேன். அவை மாணவர்களுக்கு பயனளிக்கும் நூற்களாகும். அத்துடன் இலக்கியத் துறையில் தென்றலின் வேகம் என்ற கவிதை நூலொன்றை 2010 இல் வெளியிட்டிருக்கிறேன். 2012 ஆம் ஆண்டு ரூம் டு ரீட் நிறுவனத்தின் மூலம் ஆடம்பரக் கூடு, என்ன கொடுப்போம்?, பாடல் கேட்ட குமார், இதுதான் சரியான வழி ஆகிய 04 சிறுவர் கதை நூல்களை வெளியிட்டுள்ளேன். கவிதைகளுடனான கைகுலுக்கல் ஒரு பார்வை என்ற விமர்சனங்கள் அடங்கிய தொகுதியை 2013 இல் வெளியிட்டுள்ளேன். இதுதவிர 2014 இல் வண்ணாத்திப் பூச்சி என்ற சிறுவர் பாடல் நூலையும் 2015 இல் அறுவடைகள் விமர்சன நூலையும் வெளியிட்டுள்ளேன். எரிந்த சிறகுகள் என்ற இன்னொரு கவிதைத் தொகுதியையும் 2015 டிசம்பர் மாதம் அச்சிட்டிருக்கிறேன். அதற்கான வெளியீட்டு விழாவை இவ்வருடம் தான் வைக்க வேண்டும். எரிந்த சிறகுகள் எனது 12 ஆவது நூலாகும். 
இது தவிர பிஞ்சு மனம் என்ற சிறுகதைத் தொகுதியையும், பச்சைக்கிளி என்ற சிறுவர் பாடல் தொகுதியையும், பதிவுகள் என்ற விமர்சனத் தொகுதியையும் எதிர்காலத்தில் வெளியிட காத்திருக்கிறேன்.


15. 'நூல் வெளியீடு' என்ற விடயத்தில் ஓரு படைப்பாளி சந்திக்கும் சவால்கள்?

நூல்களை வெளியிடுவது என்பது ஒரு எழுத்தாளன் தன் எதிர்காலத்தை அடகு வைப்பதற்கு ஒப்பானது. சுமார் 500 பிரதிகளை அச்சிடுவது என்றாலே ஐம்பதாயிரம் ரூபாவுக்கு மேல் செலவு காத்திருக்கின்றது. அதையும் தாண்டி நூல் வெளியீட்டுக்காகவும், அழைப்பிதழ் இத்தியாதிகளுக்காகவும் ஒரு தொகை செலவு காத்திருக்கின்றது. காசு என்ற விடயத்தை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் விழாவுக்கு வருகை தருவோர் பற்றிய எண்ணம் பயத்தில் ஆழ்த்தி விடுகின்றது. இதுவும் அல்லாமல் அழைப்பிதழ்கள் இயற்கை அனர்த்தங்களில் அகப்பட்டு விழாவுக்கு பின்னர் கிடைக்கக் கூடிய துரதிஷ்டவசமான சூழ்நிலைகள் காணப்படுகின்றது. அத்துடன் அழைப்பிதழில் பெயர் குறிப்பிடப்படுபவர்களின் பட்டம் பதவிகள் குறிப்பிடப்படாத பட்சத்தில் குறிப்பிட்ட சிலர் விழாவுக்கே வருகை தரமாட்டார்கள். வேறு சிலர் அழைப்பிதழில் தனது பெயர் குறிப்பிடப்படவில்லை என்று வருகை தர மாட்டார்கள். தனக்கு பிடிக்காதவர்களின் பெயர் அழைப்பிதழில் இருந்தால் இன்னும் ஒரு வகையினர் நிகழ்வுக்கு வருகை தரமாட்டார்கள். இவ்வகையான சவால்களையெல்லாம் தாண்டி ஒரு நூல் வெளியீடு சிறப்பாக இடம்பெற்றால் அது அந்த எழுத்தாளனுக்கு கிடைக்கும் மிகப் பெரிய அங்கீகாரமாகும். 


16. தங்களது எதிர்கால திட்டம் மற்றும் வளரும் இளம் சமூகத்திற்கு கூற நினைக்கும் கருத்து?

ஒவ்வொரு படைப்பாளனும் தனது படைப்புக்களை நூலுருவாக்கம் செய்வதில் கவனம் எடுக்க வேண்டும். காலத்தின் பிடியில் கைதியாகி எழுத்தாளன் மறைந்தால் கூட அவனது எழுத்துக்கள் நிலைத்திருக்க வேண்டும். இந்த அடிப்படையில் எனது படைப்புக்கள் சகலதையும் நூலுருவாக்கம் செய்வதுடன் பூங்காவனம் சஞ்சிகையையும் தொடர்ந்து வெளியிடுவது என் திட்டமாகும். 

வளரிளம் எழுத்தாளர்கள் பல்துறை சார்ந்த காத்திரமான புத்தகங்களை நிறையவே வாசிக்க வேண்டும். தங்களது எழுத்தாற்றலை ஊடகங்கள் வாயிலாக வெளியிட முயற்சிக்க வேண்டும். தனக்கென்று ஒரு காத்திரமான பாணியை உருவாக்கி அதில் நிலைத்திருக்க எத்தனிப்பதுடன் வன்மம், ஒழுக்கயீனம் என்பவற்றை புறக்கணித்து நல்ல முறையில் சமூகத்துக்கு பயன்படும் வகையில் தமது படைப்புக்கள் அமைய முனைப்புடன் செயற்பட வேண்டும்.

37வது படைப்பாளியாக தயானி விஜயகுமார்

http://kalkudahnation.com/41062#!/tcmbck






கல்குடா நேசன் இணையத்தினூடாக வாராவாரம் கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து அவர்களுடனான கலந்துரையாடலை நேர்காணலாகத் தந்து கொண்டிருக்கின்றோம். பலரது ஆதரவையும் எதிர்பார்ப்பையும் சுமந்த இப்பகுதியானது வாசகர்கள் அனைவரினது ஆசியோடு வெற்றிநடை போடுகின்றது. 

இலைமறை காய்களாக இருக்கும் படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதிலும், வளர்ந்த கலைஞர்களின் கருத்துக்களை, திறமைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதினாலும் மகிழ்ச்சியடைகின்றோம். இதன் தொடரில் இன்று 13.05.2016ம் திகதி வெள்ளிக்கிழமை 37வது படைப்பாளியாக எம்மோடு இணைந்து கொள்கிறார் நுவரெலியாவைச்  சேர்ந்த‌ தயானி  விஜயகுமார் அவர்கள்.  இவர‌ பேராதனைப் பல்கலைக்கழகத்தில்  முதுமாணி பட்டப்படிப்பினை  தொடர்வதோடு  இலக்கியத்திலும்  எழுத்துத்துறையிலும்  ஆர்வத்துடன்  செயற்படும்  வளரும்  இளம்  படைப்பாளி  ஆவார்.

//தாழ்வு மனப்பாங்கை தகர்த்தெறிய வேண்டும். எப்போதும் கோபுரத்தை போல் யோசிக்க வேண்டும்.  எங்கள் எண்ணங்களுக்கு சக்தியுண்டு. முயற்சிக்க வேண்டும். தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். தனக்கான துறையினை அடையாளம் காணவேண்டும். அதற்கான வழிமுறைகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்//  என  கூறும்  அவர்  இன்றைய  இளம்  சமூகத்துக்கு  உதாரணமாக திகழ்கின்றார்.  அரசியல்  சமூகம்  பெண்ணியம்  கல்வி  என  அனைத்து   விடயங்களையும்  மிக  அழகாக  எம்மோடு பகிர்ந்துகொள்ளும்  இப்படைப்பாளி தயானி  அவர்களின்   முழுமையான  கருத்துக்களோடு  இணைந்துகொள்ளலாம்.



கேள்வி: தங்களை வாசகர்களோடு அறிமுகப்படுத்திக்கொள்ள முடியுமா?


பதில்: நிச்சயமாக, இந்நேர்காணலுக்கு என்னை அழைத்தமைக்கு முதலில் உங்களுக்கு எனது வணக்கத்தினையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நான் நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட இராகலை நகருக்கு  அண்மித்துள்ள புறூக்சைட் எனும் தோட்டத்தினை வசிப்பிடமாக கொண்டவள். என் பெற்றோருக்கு மூன்றாவது பிள்ளை. இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் என் பாடசாலை கல்வியை மேற்கொண்டேன். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தினை சிறப்புக்கற்கையாக மேற்கொண்டு இளங்கலைமாணி பட்டப்படிப்பினை பூர்த்திசெய்துவிட்டு தற்போது முதுமாணி பட்டப்படிப்பினை அதே பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகின்றேன். மென்மேலும் கற்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றது. அத்துடன் வளர்ந்து வரும் ஒரு எழுத்தாளராக இருக்கின்றேன்.


கேள்வி: கல்வி தவிர‌ நீங்கள் ஈடுபடும் ஏனைய துறைகள்?


பதில்: வெறுமனே ஏட்டுக்கல்வியோடு என்னை முடக்கிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. எனது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காணப்படுகின்றது. அத்துடன் சமூகத்தின் நலன் கருதி, குறிப்பாக மலையக சமூகத்தின் நலன்கருதி ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்றேன். 
சமகாலத்தில் உயர்தர, வெளிவாரி பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கற்பித்தல், கருத்தரங்குகள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்கு அரசியல், சமூகம் சார் கட்டுரைகளை எழுதி வருகின்றேன். 
மேலும் கவிதை, சிறுகதை, பகுப்பாய்வு, புகைப்படக்கலை, இசை, பேச்சாற்றல் என்பவற்றில் ஆர்வம் கொண்டுள்ளதுடன் என் அறிவுக்கு எட்டிய வகையில் அவற்றினை படைக்கவும் முயல்கின்றேன்.


கேள்வி: எவ்வாறு எழுத்துத்துறையில் ஈடுபாடு வந்தது?


பதில்: பாடசாலை காலங்களில் தமிழ்மொழித்தின போட்டிகள் உட்பட ஏனைய போட்டிகளில் கட்டுரை, கவிதை போட்டிகளுக்கு என்னை ஆசிரியர்கள் தெரிவுசெய்வர். அந்நேரத்தில் என்னை ஏன் தெரிவுசெய்தார்கள் என்ற கேள்விக்கு என்னிடம் விடை இருக்காது. என்னையும் நம்பி தெரிவுசெய்து விட்டார்களே என்ற எண்ணம் மனதை குடைவதால் தெரிவுசெய்த ஆசிரியரின் மனதை குளிரவைக்கவாவது  நான் சான்றிதழ் பெற வேண்டும் என்று எண்ணினேன். அதுவே எழுத்துத்துறையின் முதல் படி. 
இவ்வாறான போட்டிகளுக்கு தெரிவுசெய்தமையால் நாமும் எழுத வேண்டுமானால் பிற படைப்புக்களை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் பிஞ்சு வயதிலே என் நெஞ்சில் பதிந்தது. அதனால் சிறுபராயத்திலிருந்து கட்டுரைகள், கவிதைகள், பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளை வாசிக்கத்தொடங்கினேன். வாசிப்பதோடு நின்றுவிடாமல் எழுதவும் முற்பட்டேன். குறிப்பாக தரம் மூன்று படிக்கும் போதே கவிதை எழுதத் தொடங்கி விட்டேன். என் முதல் கவிதை மனதில் இன்றும் நினைவில் இருக்கிறது.
'கலக்கமற்ற
உன் இதயத்தை 
கயவன்
ஏன் இந்த கருமை 
நிறத்தால் தீட்டியான்'-கரும்பலகை
அத்துடன் ஏதாவது ஒரு கவிதையையோ, கட்டுரையையோ வாசித்தால் நாமும் ஏன் இதனை போல் எழுத முயற்சிக்க கூடாது என்ற எண்ணம் எனக்குள் வந்ததால் இயல்பாகவே எழுத தொடங்கிவிட்டேன். இருப்பினும் எழுத்துலகத்தில் நான் இன்னும் தவழும் குழந்தையாகத்தான் இருக்கிறேன்.


 
கேள்வி: எவ்வகையான எழுத்துக்களில் உங்களுக்கு அதிக ஈடுபாடு காணப்படுகின்றது?


பதில்: என்னைபொறுத்தவரையில் மொழி, பிரதேசம், நாடு கடந்து தரமான இலக்கியங்களை தேடிப்படிப்பதில் ஆர்வம் இருக்கின்றது. அரசியல், சமூகம் சார் படைப்புக்களில் மாக்சிய இலக்கியங்களை படிப்பதில் ஆர்வம் அதிகம். மேலும் ஆங்கில, தமிழ் ஆய்வுக்கட்டுரைகளை வாசிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. 
தமிழ்த்துறையில் கவிதை, நாவல், சிறுகதை, என்பவற்றினை அதிகமாக வாசிப்பேன். வைரமுத்து, அப்துல்ரகுமான் போன்றோரின் படைப்புக்களில் அதிக ஆர்வம் உண்டு. ரமணிச்சந்திரனின் நாவலுக்கு அடிமை என்று கூறலாம். கவிதை, விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதிலே மிகுந்த ஆர்வம் காணப்படுகின்றது.



கேள்வி: நீங்கள் இயங்கும் இத்துறையில் எவ்வாறான நோக்கங்களை கொண்டுள்ளீர்கள்?


பதில்: கவிதைகளை எழுதும் போது சமூகத்திற்கு ஏதாவது கவிதைமூலமாக சொல்ல வேண்டும் என்ற விதையை மனதில் விதைத்த பின்பே எழுதத்தொடங்குவேன். இயற்கை, காதல் என்பதற்கும் மேலாக சமூகத்தில் காணப்படும் அவலங்களுக்கு வரி வடிவம் கொடுக்கவே என் கவிதைகள் துடிக்கும். பெண்கள், சிறுவர்கள் உட்பட பாதிக்கப்பட்டதரப்பினர் அனுபவிக்கும் கொடுமைகள், அநீதிகள் என்பவற்றினை ஆராய்ந்து கவிதைகளாக எழுதுவதோடு மலையகத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கான புரட்சிக் கவிதைகளை எழுதுவதிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளேன். 

கட்டுரைகளை எடுத்துக்கொண்டால் மலையக மக்கள் படும் துன்பங்களை கட்டுரைகளாக எழுதுவதுடன் நடைமுறையில் காணப்படும் அரசியலை பகுப்பாய்வு செய்து விமர்சனம் செய்து எழுதுவதிலும் ஆர்வம் உள்ளது.
இனிவரும் காலங்களில் கவிதை, ஆய்வுக்கட்டுரைகள் என்பவற்றினை நூல் வடிவில் கொடுக்க வேண்டும் என்பதே என் பிரதான நோக்கம். அத்தோடு அடிமட்ட மக்களின் கைகளுக்கு செல்லும் வகையில் என் படைப்புக்கள் அமைய வேண்டும் என்று எண்ணுகிறேன்.


கேள்வி: மலையகத்தில் கல்வி சார்ந்த குறைபாடுகளாக நீங்கள் காண்பது?


மலையகத்தில் கல்விசார் குறைபாட்டை மூன்று வகையில் நோக்க முடியும்.
1. வீட்டுச்சூழல்: வீட்டுச்சூழலானது பிள்ளைகள் கல்வியை முன்னெடுத்துச் செல்வதற்கான களத்தினை உருவாக்கிக்கொடுக்காத போக்கு மலையகத்தில் அதிகளவு காணப்படுகின்றது. வறுமை முக்கியமான பிரச்சினையாக காணப்பட்டபோதிலும், போதைப்பொருள் பாவணை, படிப்பதற்கான களத்தினை வீட்டுச்சூழல் அமைத்துக்கொடுக்காமை, பொருளாதார பின்னடைவால் பிள்ளைகள் தொழிலுக்கு செல்ல எத்தனிக்கையில் கல்வியினை இடைநிறுத்த பெற்றோரே காரணமாக இருத்தல் உட்பட பல காரணங்கள் காணப்படுகின்றன.
2. பாடசாலைச்சூழல்: பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறை, பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டும் ஆசிரியர்கள், அர்ப்பணிப்பற்ற ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விரும்பிய பாடங்களை கற்கக்கூடிய விருப்பத்தெரிவுகள் காணப்படாமை, முறையான வழிகாட்டல்களும் ஆலோசணைகளும் காணப்படாமை, முறையற்ற ஆசிரியர் நியமனங்கள் போன்ற காரணங்கள் காணப்படுகின்றன.

3. சமூகச்சூழல்: நாகரிக மோகம், நடத்தை பிறழ்வு, நண்பர்களின் வலுகட்டாயத்தால் தொழிலுக்கு செல்லுதல், வறிய பிள்ளைகளுக்கு ஒதுக்கப்படும் பணம் பதுக்கப்படுதல் போன்ற பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன.
கேள்வி: இளைய தலைமுறையினரிடம் எவ்வகையான அக்கறை ஏற்பட வேண்டும் என நீங்கள் எண்ணுகிறீர்கள்?
பதில்: இளைய தலைமுறையினர் கல்வியில் அக்கறை காட்டவேண்டும். முட்டிமோதிக்கொண்டு வரும் விதையினை போல் மாணவர்கள் இருக்க வேண்டும். பொருளாதார, சமூக மட்டத்தில் மலையகத்தவர்கள் ஏனைய சமூகத்தை விட பின் வரிசையில் இருக்கின்றனர். இதனை இளந்தலைமுறையினர் உணர வேண்டும். யாரையும் குறை கூறுவதை நிறுத்திவிட்டு தானாக தன்னம்பிக்கையுடம் கல்வியில் அக்கறை காட்ட வேண்டும். அரச, தனியார், சர்வதேச தொழிற்துறைகளில் தடம்பதிக்க வேண்டும். இலக்கியம், சினிமா, அரசியல், பொருளாதாரம், சமூக மட்டத்தில் முன்னேற வேண்டும்.


கேள்வி: மலையகத்திலிருந்து குறைந்தளவான மாணவர்களே பல்கலைக்கழக அனுமதி பெறுவதாக கூறப்படுகின்றது இதற்கான காரணம் என்ன? உயர்படிப்பிற்கான ஆர்வம் மாணவர்களிடம் எவ்வாறு காணப்படவேண்டும்.



பதில்: மலையகத்தில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவானது என்பது வெளிப்படையான உண்மையாகும். விஞ்ஞான, கணித, தொழில்நுட்ப துறைகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகின்றது. இது முக்கிய காரணம்.
கலைத்துறையில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துச் செல்லும் போக்கு காணப்பட்டாலும் மாணவர்களில் பல்கலைக்கழகம் செல்லக்கூடிய வெட்டுப்புள்ளிகளை பெற்றாலும் கல்வியற்கல்லூரிகளை நோக்கி செல்லக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் பல்கலைக்கழகம் சென்றால் இலகுவாக தொழில் பெறமுடியாத நிலை காணப்படுவதுடன், செலவு அதிகமாக ஏற்படுவதுமாகும்.
உயர்படிப்பிற்கான ஆர்வம் என்று நோக்கும் போது மலையகத்தில் குறைவாகவே காணப்படுகின்றது. குறிப்பாக மாணவர்களின் ஆர்வம், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு குறைவாக காணப்படுகின்றன. விரல்விட்டு எண்ணக்கூடிய ஆசிரியர்களே அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். மாணவர்களுக்கான ஆலோசணைகளும் வழிகாட்டல்களும் மலையகத்தில் மிகக்குறைவாக காணப்படுகின்றது என்பதே எனது கருத்து.


கேள்வி: பாரிய வளம் இல்லாத போதிலும் பல துறைகளில் சாதனைபுரியும் மலையக இளையவர்களின் திறமைகளுக்கு சரியான களம் கிடைக்கின்றதா? 


பதில்: களம் கிடைக்கிறதா என்பதை விட களத்தினை உருவாக்கிக் கொள்வதே உண்மையான திறமை. சாதனை புரிபவர்கள் நிச்சயமாக கௌரவிக்கப்படுவார்கள். குறிப்பாக அண்மையில் சென்லெனான்ஸ் பாடசாலை மாணவன் குளிரூட்டப்பட்ட தலைகவசத்தினை கண்டுபிடித்தார். அவரின் திறமைக்களான கௌரவம் பல மட்டத்தில் கிடைத்ததுடன் அவரின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த அரசியல் தரப்பிலும் சிவில் சமூக மட்டத்திலும் வரவேற்பு கிடைக்கப்பெற்றது. 
இருப்பினும் சிலர் திறமை இருந்தும் அதனை வளர்த்துக்கொள்வதற்கான களம் அமையாததால் இலைமறைக்காயாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதையும் ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.


கேள்வி: அரசியல் துறையை பொறுத்த வரையில் எவ்வாறான விழிப்புணர்வை பெறவேண்டியுள்ளது?  


பதில்: அரசியல் என்பதின் விழிப்புணர்வு மக்களின் கைகளில் தான் இருக்கிறது. காரணம் ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் பொறுப்பு மக்களிடம் தான் இருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் எதிர்நோக்குகின்ற முக்கியமான பிரச்சினை ஜனநாயக அறிவு கொண்ட மக்கள் குறைவாக காணப்படுகின்றனர். இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. அரசியல் வாதிகளை குறைகூறுவதே வழமையாக உள்ளது. அவர்களை தாங்கள் தான் தெரிவு செய்தோம் என்பதை மறந்துவிடுகின்றனர். சமூக அக்கறை கொண்டவர்களை அரசியலுக்குள் உள்வாங்க வேண்டும். அடிமட்ட மக்கள், பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்.


கேள்வி: உங்களது கல்வி, எழுத்து மற்றும் இதர திறமைகளை எவ்வாறு வளர்த்துக்கொள்கின்றீர்கள்? உங்களை ஊக்குவித்தவர்களைப் பற்றி?


பதில்: தட்டிக்கொடுப்பவர்களாலும் தட்டிவிடுபவர்களாலுமே என் எழுத்து உட்பட கல்வி பயணம் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
கல்வி, எழுத்து உட்பட திறமைகளை வளர்ப்பதில் என் குடும்பம், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை, பல்கலைக்கழக நண்பர்கள் மற்றும் முகப்புத்த நண்பர்களின் பங்கு மிகமுக்கியமானது.
இருப்பினும் இருவேறுபட்ட டொக்டர்கள் தான் என் எழுத்து பயணத்திற்கு அதிகளவு தூண்டிலானவர்கள். ஒருவர் கலாநிதி எஸ்.பாஸ்கரன், இரண்டாவது கால்நடைவைத்தியர் எஸ்.கிருபாநந்தகுமாரன். என்னை அதிகம் உற்சாகப்படுத்தவதில் இவர்களின் பங்கு மிகமுக்கியமானது. குறிப்பாக பத்திரிகையில் என் எழுத்துக்கள் வெளிவர இவர்களின் பங்களிப்பு மிகமுக்கியமான காரணமாகும்.


கேள்வி: மலையகத்தில் படித்த தகைமையுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி? 


பதில்: வேலையில்லா பிரச்சினைதான் மிகமுக்கியமான பிரச்சினை. திறமையும் தகைமையும் இருந்து வேலையில்லாமல் திண்டாடுவது மிகமுக்கிய பிரச்சினை. தகைமையற்றவர்களுக்கு கொடுக்கும் ஆசிரியர் நியமனங்களை தகைமையான பட்டதாரிகளுக்கு  கொடுக்க மறுக்கின்றது மலையக அரசியல் தலைமைகள்.


கேள்வி: பெண்களின் திறமையை வெளிப்படுத்த இருக்கும் இறுக்கங்கள், தடைகள் பற்றி?


பதில்: பெண்களின் திறமைகளை வெளிப்படுத்த சில இடங்களில் தடைகள் காணப்பட்டாலும் சில பெண்கள் தாங்களாக தனக்கு வேலி போட்டுக்கொள்கின்றனர். இது கவலைக்குரிய விடயமாகும். பெற்றோருடன் இருக்கும் போது சுதந்திரமாக இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பின் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுகின்றனர். ஆணாதிக்க சமூகம் இன்றும் காணப்படுகின்றது என்பது என் கருத்து. எத்தனையோ திறமைமிக்க பெண்களை திருமணத்திற்கு பின்னரான வாழ்க்கை முடங்கிவிட்டதை நடைமுறையில் காணலாம். 

கேள்வி: பெண்களின் வளர்ச்சி படியினை எவ்வாறு காண்கின்றீர்கள்?


பதில்: பெண்களின் வளர்ச்சி என்பது ஆமைவளர்ச்சி வேகத்திலே செல்கின்றது. இதற்கு முக்கிய காரணம் கலாசார, சமூக மட்டத்தில் காணப்படும் கட்டுப்பாடுகள். கனிசமானளவு பெண்களே சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயற்படுகின்றனர். அரசியல் மட்டத்தில் பெண்களின் வகிபங்கு மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. இது பாரிய குறைபாடாகும். இன்று இலக்கிய மட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை காணலாம். இது வரவேற்கத்தக்க விடயமாகும். 
இருப்பினும் பெண்கள் முட்டிமோதி வெளிவந்து சாதிக்க நினைத்தாலும் அவர்ளை வேறுபட்ட கண்ணோட்டத்தில் அலட்சியமாக பார்கின்றவர்கள் இல்லாமலில்லை.


கேள்வி: 'பெண்ணியம்' என்பதில் எவ்வகையான விடயங்கள் பேசப்படவேண்டும் என நினைக்கிறீர்கள்?


பதில்: பெண்களின் பாலியல் துன்புறுத்தல் உட்பட ஏனைய துன்புறுத்தல்கள் ஒழிப்பு, திருமணத்திற்கு பின்னரான அடக்கு முறை ஒழிப்பு, சிறுமியரை வேலைக்கு அனுப்புவது தொடர்பான இறுக்கமாக சட்டஅமுலாக்கம், பிரயாணங்களின் போது பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டம், கலாசார ரீதியில் பெண்களை அடக்கும் மரபுகளுக்கு எதிரான சட்டம் உட்பட மறுக்கப்பட்ட பெண்ணுரிமைகள் தொடர்பாக பெண்ணியம் பேசப்பட வேண்டும்.


கேள்வி: சமூக வலைத்தளங்களின் பயன்பாடு ஆரோக்கியமானதாக இருக்கின்றதா, சமூகம் அதனை சரியாக பயன்படுத்துகின்றதா, இவை உங்கள் பார்வையில்?

பதில்: சமூக வலைத்தளங்களின் பயன்பாடும், பாதிப்பும் பயன்படுத்துபவர்களின் கைகளில் தான் உள்ளது. இருப்பினும் பெண்கள் சமூக வலைத்தளங்களில் கருத்திடுவதையும், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதையும் சில மத அமைப்புக்கள், தனிப்பட்ட நபர்கள் வேறுபட்ட, அல்லது அநாகரிகமான ஒன்றாக பார்க்கக்கூடிய நிலை காணப்படுகின்றது. இதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை. கலாசார, சமூக சீரழிவுக்கு சமூக வலைத்தளங்கள் அதிகளவான பங்களிப்பினை செலுத்துகின்றன.
தணிக்கையிடாமல் செய்திகளை வெளியிடல், உறுதியற்ற செய்திகளை உடனே தெரிவித்து பொதுமக்களை குழப்புதல், ஆபாச இணைப்புக்கள் போன்றன விமர்சிக்கப்படுகின்றன.இருப்பினும் அளவாக பயன்படுத்துவதோடு பிரயோசனமான முறையில் சமூக வலைத்தளங்களை வடிவமைத்துக்கொண்டு செயற்படுவதும் பயன்படுத்துபவர்களின் கரங்களில் தான் உள்ளது.


கேள்வி: பல்கலைக்கழகமே ஓர் ஆரோக்கியமான, அறிவுசார் சமூகம் உருவாகும் கூடமாக காணப்படுகின்றது. இங்கு பகிடிவதை, போராட்டம்,கைகலப்பு போன்றன முரணான காட்டுமிராண்டித்தனமான சில விடயங்களும் நடந்தேறுகின்றன. இதுபற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?


பதில்:  பல்கலைக்கழகம் என்பது பல கலைகளை கற்கக்கூடிய களம் என்று கூறலாம். அறிவுசார் சமூகம் உருவாகும் இடம் என்று நீங்களே கூறியுள்ளீர்கள். அறிவுசார் சமூகம் என்பதுக்கும் மேல் பல அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் களமாகவும் பல்கலைக்கழகம் காணப்படுகின்றது. பகிடிவதை என்பதில் எதிர்விளைவுகளை மட்டும் வைத்து நீங்கள் வினாதொடுத்துள்ளீர்கள். 
பகிடிக்காக நடக்கும் அன்பு சித்திரவதைகளின் சுவாரஸ்யங்கள் இல்லாமலில்லை. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தரப்பினர் ஒன்றாக பழகக்கூடிய உறவுப்பாலத்தினை பகிடிவதைகள் தான் ஏற்படுத்திக்கொடுக்கின்றன. காக்கைச்சோறுண்ணும் பழக்கத்தை கற்று தந்ததும் பகிடிவதைதான், ஏழை, பணக்காரன் வித்தியாசத்தை தகர்ததெறிவதும் பகிடிவதைதான். பகிடிக்காகவே வதைகள் செய்வது நன்று. இருப்பினும் அடித்தல், துன்புறுத்தல் கொடுமைதான்.
நியாயமான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறுவதால் உரிமைகள் வென்றெடுக்கப்படுகின்றன. அவ்வாறான விடயங்களை பல்கலைக்கழக சமூகம் மேற்கொள்கின்றது. வன்முறைகளை கையிலெடுக்காது அகிம்சை அடிப்படையில் எடுக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் வரவேற்கத்தக்கது. 
இன்று பாராளுமன்றத்திலே கைகலப்புக்கள் நடைபெறும் போது பல்கலைக்கழகத்தில் நடைபெறுவது சகஜம் தான். இருப்பினும் கல்வி கற்ற சமூகத்தின் ஒழுக்கம் மிக முக்கியமானது. நாளைய தலைவர்கள், நாளை நாட்டை ஆளப்போகின்றவர்கள் என்ற வகையில் பல்கலைக்கழகத்திலே நன்நடத்தைகளை பழகிக்கொள்ள வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றேன்.


கேள்வி: இளம் சமூகத்திற்கு உங்களின் வாழ்க்கை அனுபவங்கனினூடாக நீங்கள் கூறும் ஆலோசணைகள்?


பதில்: நீங்கள் கேட்கும் கேள்விக்கு ஏற்ற வகையில் நான் வளர்ந்துவிட வில்லை இன்னும். இருப்பினும் சில விடயங்களை பகிர்ந்துக்கொள்கின்றேன். என்னை பொறுத்தவரையில் வறுமையின் கோரப்பிடியிலிருந்து முட்டிமோதி வெளிவந்தவள். என் பாடசாலை கல்வி காலத்தில் மின்சார வசதி உட்பட இதர அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு கற்றேன். மண்ணெண்னெய் கூட இல்லாமல் படிக்க கஸ்டப்பட்டிருக்கிறேன். என்னால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இன்னும் சாதிக்க வேண்டும் என்ற மனோபலம் இருந்தது, இருக்கின்றது. 
வறுமையை காரணம் காட்டி தோல்வியினை தழுவுவது மடத்தனம். வறுமையே நம் முன்னேறுவதற்கான சரியான களம். துணிவு,அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை என்பவற்றினை ஆயுதமாக கொண்டு முன்னேற வேண்டும். தாழ்வு மனப்பாங்கை தகர்த்தெறிய வேண்டும். எப்போதும் கோபுரத்தை போல் யோசிக்க வேண்டும்.  எங்கள் எண்ணங்களுக்கு சக்தியுண்டு. முயற்சிக்க வேண்டும். தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். தனக்கான துறையினை அடையாளம் காணவேண்டும். அதற்கான வழிமுறைகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
நான் துவண்டுவிடும் போது எனக்கு துணிவுகொடுக்கும் ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

தேடிச்சோறு நிதம் தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி- மனம்
வாடித்துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பல செயல்கள் செய்து-நரைக்
கூடிக் கிழப்பருவ மெய்தி-கொடுங்
கூற்றுக்கிரையெனப்பின் மாயும் பல 
வேடிக்கை மனிதரைப்போலே- நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ? –பாரதியார்

கேள்வி: வாசகர்களிடம் எத்திவைக்க எண்ணுவது?


பதில்: உங்களை யாரும் அவமானப்படுத்தினால், அசிங்கப்படுத்தினால் நீங்கள் கொடுக்கும் பதிலடி சாதித்துக்காட்டுவதாக இருக்கவேண்டும். எதிர்த்து நின்றுபோராட வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்காகவே என்பதை மனதில் கொள்ள வேண்டும். 
ஒவ்வொருவரும் தனக்கேற்ற இலட்சியப்பாதை ஒன்றை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். இன்று பெரும்பாலானவர்கள் தொழில் பெறுவதை இலக்காக எண்ணுகின்றனர். தொழிலுடன் வாழ்வு முடிந்து போவதில்லை. எமக்கான அடையாளத்தினை நிலைநாட்டுவதற்கு தொடர்ந்து போராட வேண்டும்.