Thursday, December 31, 2015

இனிய புதுவருடம் 2016

இதயவெளியில்
இறுகிப்போனை
இயலாமைகளெல்லாம்
தூரத்தே எரிவோம்....

காலை வாரிவிட்ட‌
கவலைகள்
கண்டுகொள்ளாமல் விட்ட
கனவுகள் என எதையும்
கருத்தில் சுமக்காதிருப்போம்...

புதிய சிந்தனை
புதுப்புது எண்ணங்கள்

நல்ல திட்டங்கள்
நலிந்திடாத முயற்சிகள்

திடமான வேகங்கள்
திக்திடாத வெற்றிகளென‌

வரிசையாய் வந்துநிற்க‌
வசந்தங்கள் கூடிநிற்க‌

மனதினை இளமையாக்குவோம்
மனிதமுடன் வளத்தை நாடுவோம்!!




Tuesday, December 29, 2015

விருது வழங்கும் விழாவில் (15.12.2015)






15.12.2015ம் திகதியன்று மாலை 4.30 மணிக்கு திருகோணமலை சன்ஷைன் (Sun Shine) மண்டபத்தில் தடாகம் கலை இலக்கிய வட்டம் மற்றும் கனடா படைப்பாளிகள் உலகம் இணைந்து நடாத்திய விருது வழங்கும் விழாவில் மலேசிய நாட்டு எழுத்தாளர்கள் 36 பேர் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.





இவ்விழாவில் இலங்கை மலேசிய படைப்பாளிகள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள்.



                                                                           

நிகழ்ச்சி நிரல்

பிரதம அதிதிகள்
கௌரவ .சி. தண்டாயுதபாணி அவர்கள்
( கிழக்கு மாகாண சபை கல்வி, கலாசார, விளையாட்டு , புனர்வாழ்வு , இளைஞர் விவகாரம் மற்றும் மீள் குடியேற்ற அமைச்சர்.)
கௌரவ. கி.துரைராஜா சிங்கம் ( கவிஞர் அண்ணாதாசன் )
கிழக்கு மாகாண சபை விவசாயம் , கால்நடை வளர்ப்பு , மீன்பிடி , நீர்ப்பாசனம், கூட்டுறவு மற்றும் உணவு வழங்கலும்
விநியோகமும் அமைச்சர்
தலைமை-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி (அமைப்பாளர் தடாகம்)
வரவேற்பு -கவிஞர் வி.மைக்கல் கொலின் (மகுடம் ஆசிரியர்)
தடாகமும் விழாவும் -
கவிதாயினி கல்முனை சுல்பிகா சரீப் -(ஊடகவியலார் தடாகம்)
வாழ்த்துக் கவிதை -சந்தக்கவி அமீர் அலி
வார்த்தைகளின் மூன்று துளிகள்
கௌரவ .சி. தண்டாயுதபாணி அமைச்சர்
கௌரவ. கி.துரைராஜா சிங்கம் அமைச்சர்
பெருமால்.இராஜேந்திரன் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்
திரு பன்னீர் செல்வம் (ஆசிரியர் )ஆசிரியர் கல்லூரி விரிவுரையாளர் மலேசியா
கவிஞர் ஐங்கரன் கதிர்காமநாதன் நிறுவனர் படைப்பாளிகள் உலகம்
தடாகம் கௌரவ நிகழ்ச்சி
நன்றித் தூறல்கள் -கவிதாயினி சிவரமணி
நிகழ்ச்சி நெறியாள்கை
கவிஞர் -வன்னியூர் செந்தூரன்
கவிதாயினி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி




விருது பெற்றவர்கள்
***********************



1பன்னீர் செல்வம்" -மலேசியா >ஆசிரியர் திலகம்
2.தனலெட்சுமி சிவனடியான்.->மலேசியா ஆசிரியர் திலகம்
3.ஜமுனா பொன்னையா.மலேசியா >ஆசிரியர் திலகம்
4.சுடர்மதி.-மலேசியா >தன்னம்பிக்கைச் சுடர்
5.தமிழ்ச்செல்வி-.மலேசியா >ஆசிரியர் திலகம்
6.வரதராஜு சந்திரா குப்பன்.-மலேசியா >தமிழ்த் தேனீ
7.ப.பார்த்தசாரதி.மலேசியா >ஊடக வித்தகர்
8.திருமதி.சுந்தரி.பொன்னையா-மலேசியா >இலக்கியத் தென்றல்
9.கவிஞர்.த.ரூபன்.-மலேசியா >கலைமணி
10-இ.சாந்தகலா -மலேசியா >கலைமணி
11.கவிஞர்.தாஸீம் அஹமட்-கொழும்பு >கவிமணி
12.கவிஞர் புரட்சி யோ. -யாழ்ப்பாணம் >கவியருவி
13.அல் ஹாஜ் .ஜௌபர்.ஏ .மஜீத்-அம்பாறை மாவட்டம் >வாழ்நாள் சாதைனையாளர்
14.டீ .எல்.ஜௌபர் கான்-மட்டக்களப்பு மாவட்டம் >கவியருவி
15.த.சிவ சுப்ரமணியம்(தம்பு சிவா -)கொழும்புமாவட்டம் >தமிழ்மணி
16.கலைவாதி கலீல்-கொழும்புமாவட்டம் >தமிழ்மணி
17.ஓட்டமாவடி ரியாஸ்-மட்டக்களப்பு மாவட்டம் >கலைமணி
18.வே.தங்கராசா>கலைத்தீபம்
19.காசி.ஜீவலிங்கம்>கலைத்தீபம்
20.ரோஷான் ஏ.ஜிப்ரி-அம்பாறை மாவட்டம் >கலைமணி
21.எம் சி. நஸ்லின் ரிப்ஹா-அம்பாறை மாவட்டம் >கல்விச்சுடர்
22 கவிஞர் ஐங்கரன் கதிர்காம நாதன் கனடா >வாழ்நாள் சாதனையாளர்
23.சிவரமணி-திருகோணாமலைமாவட்டம் >கவியருவி
24-மைத்திலி தயாபரன்-யாழ்மாவட்டம் .>தமிழ் தீபம
25-வேத நாயகம் தபேந்திரன்-யாழ்மாவட்டம் .>கலைமணி
26-கந்தப்புஜெயந்தன்.-யாழ்மாவட்டம் >இசைமணி
.27-முல்லை மணி.வே.சுப்பிர மணியம்-யாழ்மாவட்டம்> -
28-வன்னீயூர் செந்தூரன் -யாழ்மாவட்டம் >பாவரசு
29-.திரு.JAY.OSSMAN.-திருகோண மலைமாவட்டம் >கவியருவி
30-.திரு.சி நவரெட்ணம் .-திருகோண மலைமாவட்டம் >கவியருவி
31-.கேணிப்பித்தன்.-திருகோண மலைமாவட்டம் >கவியருவி
32-.திரு.தனபாலன்-திருகோண மலைமாவட்டம் >கவியருவி
33-.கலாபூஷணம்-திரு.வே.தங்கராசா திருகோண மலைமாவட்டம் >தமிழ் தீபம
34-காசி.ஜீவலிங்கம்- திருகோண மலைமாவட்டம் >தமிழ் தீபம்
35தம்பிலெவ்வை இஸ்மாயில் அம்பாறை மாவட்டம்> கவியருவி
36 எஸ எல் மன்ஸூர்- அம்பாறை மாவட்டம்> கவியருவி
37நாகூர் ஆரிப்-அம்பாறை மாவட்டம்>வைத்தியஜோதி
38- இசட் சுஹைப்-அம்பாறை மாவட்டம்>வைத்தியஜோதி
39-மைக்கல் கொலின்-மட்டக்களப்பு மாவட்டம்> தமிழ்மணி
40- நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் -புத்தளம்மாவட்டம் >இளங்கவி
41-ப .மதிபாலசிங்கம்-திருகோண மலைமாவட்டம்>தமிழ் மணி
42- ஜெஸ்மி எம்.மூஸா -மருதமுனை >அம்பாறை மாவட்டம் >சிறந்த இளம் இலக்கிய விமர்சகர்
43-ஜுட் நிக்சன் ஈழபாரதி யாழ்மாவட்டம் >கவியருவி
44-ராஜ் சுகா (த .எலிசபத் )மலையகம் கவியருவி
45-கவிஞர் ப .மதிபாலசிங்கம் -திருகோணாமலை மாவட்டம் >கலைமணி
-






























ஈழத்தின் மூத்த படைப்பாளிகள் தொடக்கம் இளம் படைப்பாளிகள் வரை நாற்பது பேர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.






இவ்விழாவில் எனக்கும் "கவியருவி" பட்டம் வழங்கி சான்றிதழ் அளிக்கப்பட்டது 









நன்றி தடாகம் கலை இலக்கிய வட்டம் மற்றும் கனடா படைப்பாளிகள் உலகம்




கவியோ

அழும் விழிகளுக்கு
ஆறுதல் நீயோ
விழும் துளிகளுக்கு
விடையும் கவியோ!!




Monday, December 28, 2015

கவித்துளிகள்

விழியோரம் கவித்துளிகள்
விடியும்வரை எழுதுகின்றது
தலையணையில் இமைகள்!!





மதம்

மதத்தை
மனிதத்தோடும் சேர்த்துவிடுங்கள்
தனித்துவிட்டால் -அது வெறும்
மதம் என்றாகிவிடும்!!



உன் நினைவுகள்!!

எல்லைக்கோட்டை தாண்டி
என் அனுமதியின்றியே வந்துவிடுகின்றது
உன் நினைவுகள்!!



தமிழ் ஓதர்ஸ் இணையத்தில் (டிசம்பர் 2015) [ ஏற்றிவிட நீதான் ஏணி ]

http://www.tamilauthors.com/03/647.html




அறம் செயத் துணி -அது
மனம் காக்கும் துணி
தரம் பார்த்து அணி -உடை
தந்திடும் முதலா மணி....


பெறுமை தீயதோர் பிணி
கொன்றால் நீயுமோர் மணி
பொறுமையை நித்தமும் திணி
புகழுவார் உன்னையு மினி....



கைக்கு பலந்தான் பணி
வாழ்வுக் கதுதான் கனி
'தை'க்கு அழகுதான் பனி
தகாததை சீக்கிரம் தணி....


ஏழைக்கும் வேண்டுமோர் காணி
ஏற்றிவிட நீதான் ஏணி
வாழையை பார்த்துனை பேணி
வாழ்வினை அமைத்திட வாநீ....!!

Sunday, December 27, 2015

தன்மானம்

தூக்கியெறியப்பட்ட துரும்பு கூட
ஊக்கியாக விளையுது -த(எ)ன்மா(ம)னம்
தாக்கி வீசியடிக்கப்பட்டால் கூட‌
தாங்கியாக எழுந்திடுது!!

தமிழ் மிரர் பத்திரிகையில் (18.12.2015)








கல்குடா நேசனில் (25.12.2015) கவிஞர் அல்சாத் உசனார்.



http://kalkudahnation.com/

“கல்குடா நேசனின் 20வ‌து இலக்கிய நேர்காணலில்” இணைகிறார் வளர்ந்து வரும் இளங்கவிஞர் ஓட்டமாவடி அல்சாத்-நேர்காணல் உள்ளே…. inShare ஓட்டமாவடி றியாஸ் நேர்காணல்-ராஜ் சுகா பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. 

இதன் தொடரில் இன்று 25.12.2015ம் திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 20வது இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார். இலங்கையின் வளர்ந்து வரும் இளம் படைப்பாளியான ஓட்டமாவடியைச் சேர்ந்த‌ கவிஞர் அல்சாத் உசனார்.

 “கவிஞர்களை கேலியாகப் பார்க்கும் நிலையும் எம் சமூகத்தின் மத்தியில் காணக்கூடியதாகவுள்ளது. இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். இன்று ஒவ்வொரு ஊரிலும் அனைத்து துறைசார்ந்தவர்களும் போதியளவு இருக்கும் நிலையில், எழுத்தாளர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவது சமூகம் இலக்கியத்தின் மீது வைத்துள்ள அவநம்பிக்கையையே காட்டுகிறது. எழுத்தாளர்களூடாகவே எம் வரலாறு நாளைய சந்ததிக்கு போய்ச்சேர வேண்டிய தேவை இருப்பதையும் மறந்து விடக் கூடாது” 

என்று இளையவராக இருந்து கொண்டு சமூகத்தின் மீதான முதிர்ச்சிப்பார்வையினூடாக நம்மை சந்திக்க வ‌ருகின்றார் இவ்விளைய கவிஞர். கிழக்குப் பல்கலைகழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் தாதியியல் பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவனான இவரின் எல்லா முயற்சிகளும் வெற்றியடைய வேண்டுமென்ற வாழ்த்துதல்களோடு நேர்காணலில் இணைந்து கொள்வோம். 






ராஜ் சுகா : உங்களை பற்றிய அடையாளத்தோடு இணையத்துடன் இணைந்து கொள்ளலாமா.? 

அல்சாத் உசனார் மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி எனும் அழகிய கிராமத்தில் 1990-09-28ம் திகதி அன்று உசனார் – அவ்வா உம்மா தம்பதியினரின் புதல்வனாக பிறந்தேன். எழுவரைக் கொண்ட எனது குடும்பத்தில் அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தங்கை, தம்பி என்ற அனைத்து உறவுகளின் பரிவும் பாசத்துடனும் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். நான் ஆரம்பக்கல்வி தொடக்கம் உயர் தரத்தில் உயிரியல் பிரிவு வரை மட்/ஓட்டமாவடி தேசிய பாடசாலையிலேயே கல்வித்தாகம் தீர்த்தேன். உயர் தரப்பரீட்சையின் பின்னர் தாதியியல் பட்டப்படிப்புக்காக கிழக்குப் பல்கலைகழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்திற்குத் தெரிவாகி இன்று இறுதி வருடத்தின் இறுதி தேர்வை எழுதிக் கொண்டிருக்கிறேன். 

ராஜ் சுகா நீங்கள் கவிதையுலகில் பிரவேசித்த அனுபவம் பற்றி.? 

அல்சாத் உசனார் நான் தரம் 9இல் கல்வி கற்கும் சமயம் எதேச்சையாக எனது அண்ணாவின் கவிதைகளைப் படிக்க நேர்ந்தது. படிக்கும் போதே அதில் ஓர் இனம் புரியா ஈர்ப்பின் காரணமாக எனக்கும் கவிதை எழுத வேண்டுமென்ற ஆர்வம் எழுந்தது. விளைவாக எனது முதல் கவிதை தாய்மையைப் பற்றியதாக அமைந்தது. அக்கவிதையை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். தாய்மை பத்துத் திங்களாய் ருசி பார்த்த ஆயிரமாயிரம் வலிகளும் மழலை முகம் பார்த்து உதிர்த்திடும் ஓர் புன்னகையில் உதிர்ந்திடும் அதிசயம் அதுவே தாய்மையின் ரகசியம்.!!!                  எனக்கு மிகவும் பிடித்த கவிதையும் கூட… 


ராஜ் சுகா எவ்வகையான கவிதைகளை எழுத வேண்டுமென நினைக்கின்றீர்கள்.? 


அல்சாத் உசனார் இன்றைய சமூகத்தில் காணப்படும் பல சமூக அவலங்களையும் மற்றும் எனது அனுபவங்களையும் எனது பேனா பேசுகிறது. மட்டுமல்லாது காதல், தாய்மை போன்ற உணர்வுகளையும் பேசத்தவறவில்லை. 

ராஜ் சுகா நீங்கள் வாசித்து வியந்த கவிஞர்கள் பற்றி.? 

அல்சாத் உசனார் உண்மையில் வாசிப்பு என்பது ஓர் மனினை முழு மனிதனாக்குகிறது. இன்றைய எமது அவசரகால வாழ்வில் வாசிப்பு என்பது மிக அரிதாகப் போய் விட்டது என்பது மறுப்பதற்கில்லை. அந்த வகையில், நானும் அதற்கு விதி விலக்கல்ல. இருந்தும் என்னைக் கவர்ந்த கவிஞர்களின் பட்டியல் மிக நீண்டது. அவர்களில் முக்கியமான கவிப் பேரரசுகளாக சுப்பிரமணிய பாரதியார், உருத்திரமூர்த்தி, வாலி, வைரமுத்து, கவிக்கோ அப்துல் றகுமான் மற்றும் புதுமைப்பித்தன் போன்றோரைக் கூறலாம். அத்தோடு முகநூலில் எழுதி வரும் பல இளம் கவிஞர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்லர் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 

ராஜ் சுகா உங்கள் படைப்புக்கள் வெளியான ஊடகங்கள்.? 

அல்சாத் உசனார் இன்று வரை நான் கவிதை எழுத தூண்டிக் கொண்டிருப்பவை பத்திரிகைகள் என்றால் மிகையாகாது. அந்த வகையில் எனது கவியாற்றலை வளர்த்து விட்டமையில் முதல் பங்கு மித்திரன் வாரமலருக்கே உரித்தாகும். இன்று வரை எனது ஆக்கங்களுக்கு இடமளிக்கும் மித்திரனுக்கு நன்றிகள். அத்தோடு மெட்ரோ நிவ்ஸ், தினமுரசு வாரமலர், உதய சூரியன், சுடர் ஒளி வாரமலர், விடிவெள்ளி, வண்ண வானவில் போன்ற பத்திரிகைகளிலும் எழுதியிருக்கிறேன். மற்றும் முகநூலிலும், கல்குடா நேசன் இணையத்திலும் எழுதி வருகிறேன். அத்தோடு “அல்சாத் கவி வரிகள்” எனும் எனது பக்கத்திலும் கவிதைகளைப் பதிந்து வருகிறேன்.

 ராஜ் சுகா கவிதை தவிர்ந்த உங்களது ஏனைய திறமைகள்.? 

அல்சாத் உசனார் கவிதைகள் தவிர சிறுகதை, குறுங்கதை, விமர்சனக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். அத்தோடு எனது வைத்தியசாலை பயிற்சியின் போது நோயாளர்களோடு நான் பெற்றுக் கொண்ட அனுபவங்களையும் பத்திரிகையூடாகவும் முகநூலினூடாகவும் எழுதி வருகிறேன். 

ராஜ் சுகா ஓர் நூலினை வெளியிடாமைக்கு என்ன காரணம்?  ஓர் படைப்பாளியாக உங்களுக்கான அங்கீகாரம் எவ்வாறு காணப்படுகிறது.? 

அல்சாத் உசனார் உண்மையில் ஓர் கவிஞன் அல்லது எழுத்தாளன் ஒரு நூலினூடாகவே சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுகின்றான். நூலினூடாக தம்மை ஆவணப்படுத்தி இலக்கியத்தில் இரண்டறக் கலக்கிறான். அந்த வகையில் நானுமோர் தரமான படைப்பை சமூகத்திற்கு வழங்க வேண்டுமென்ற முனைப்போடு நீண்ட காலமாக முயற்சிக்கிறேன். ஆனாலும், குடும்ப, பொருளாதார நிலை அதனை பிற்போட்டுக் கொண்டே வருவது மிகவும் சங்கடத்திற்குரியதே. இதனூடாக ஓர் படைப்பாளி தனது படைப்பை வெளிக்கொணர எந்தளவு கஷ்டத்தை சந்தித்திருப்பான் என்பதை உணரக் கூடியதாகவுள்ளது. நிச்சயமாக எனது படைப்பை விரைவில் வெளியிடுவேன் என்ற நம்பிக்கையோடு…. எனது இலக்கியப் பயணத்தில் பல ஊடகங்களும் எனது ஆக்கங்களைப் பிரசுரித்து என்னை ஊக்கப்படுத்துவதோடு வாசகர்களின் வாழ்த்துக்களும் கடிதங்களும் மற்றும் எனது ஊர் கலை, கலாசார விழாக்களுக்கு என்னையும் அழைத்து கருத்துக்களை கேட்பதும் என்னை ஓர் படைப்பாளியாக அடையாளப்படுத்துகின்றது என்பதை உணர்கிறேன். 

ராஜ் சுகா நீங்கள் பங்குபற்றிய போட்டிகள், பாராட்டுக்கள் பற்றி? 

அல்சாத் உசனார் பாடசாலை காலத்திலிருந்தே பலவிதமான கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்குபற்றி மாவட்ட மட்டம் வரை சென்று பரிசில்கள் பெற்றிருக்கிறேன். மற்றும் பல கலை, கலாசார விழாக்களிலும் பங்குபற்றி வெற்றி பெற்றுள்ளேன்.

 ராஜ் சுகா இளைய படைப்பாளிகளின் வெற்றிக்காக அல்லது ஜெயித்திடும் வழிகளாக நீங்கள் வைத்திருக்கும் ஆலோசனைகள்.?

 அல்சாத் உசனார் போட்டியிடுங்கள், பொறாமை கொள்ளாதீர்கள். பிறரின் கேலிப்பேச்சுக்கள் கண்டு துவண்டு விடாதீர்கள். பிறர் கேலியாகப் பேசுகின்றார்கள் என்றால் உங்கள் திறமை கண்டு அவர்கள் பொறாமை கொள்கின்றார்கள் என்றே அர்த்தமாகும். ஆகவே, அதிலிருந்தும் நாம் வேகமாக முன்னேற வேண்டும். அதிகளவான புத்தகங்களை வாசியுங்கள். ஊரின் மூத்த எழுத்தாளர்களைச் சந்தித்து அவர்களது ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் பெற்றுக்கொண்டு எழுத்தை தொடருங்கள். வெற்றி நிச்சயம். 

ராஜ் சுகா உங்கள் படைப்புகளுக்கு வந்த விமர்சனங்கள்? 

அல்சாத் உசனார் உண்மையில் எனது படைப்பின் முதல் ரசிகர்கள் எனது தம்பியும் தங்கையும், அவர்களது ஊக்கமும் மற்றும் எனது தாயின் பிரார்த்தனைகளுமே நானடைந்த முதல் மகிழ்ச்சியாகும். மேலும் பல முகமறியா வாசகர்களிடமிருந்தும் பல வாழ்த்து கடிதங்களும், முகநூல் நட்புகளிடமிருந்து வாழ்த்துக்களும் வந்த வண்ணமே இருப்பது மன நிறைவைத்தரும் அதே வேளை, எனது ஊர் மூத்த எழுத்தாளர்களும் எனது ஆக்கங்களுக்கு ஊக்கமும் அறிவுரையும் வழங்குவது பெரு மகிழ்ச்சியாகும்.

 ராஜ் சுகா இந்த இலக்கிய முயற்சியில் நீங்கள் சோர்வடைந்த சந்தர்ப்பங்களையும், அதிகமாக சந்தோஷப்பட்ட நிமிடங்களையும் நினைவு கூற முடியுமா.? 

அல்சாத் உசனார் க.பொ.த.சா.தரம் படிக்கும் போது நான் எழுதி தினமுரசு வாரமலரில் வெளிவந்த “அவள் நினைவுகள் ” எனும் சிறுகதையைப் பார்த்து எனது தமிழ்ப்பாட ஆசிரியர் என்னைப் பாராட்டிய சமயம் என் நண்பர்கள் என்னை வெகுவாகக் கேலி செய்து என் மனதைச் சங்கடப்படுத்திய அந்த நிமிடங்கள் என் மனதிலிருந்து அகலா நினைவுகள். அன்றிலிருந்து நான் பல்கலைக்கழகம் நுழையும் வரை எந்தச்சிறுகதையும் எழுதவில்லை என்பது மன வேதனைக்குரியதாகும். அத்தோடு, இன்று வரை எனது சில நண்பர்களும் இலக்கியம் சார் விடயங்களில் கேலி செய்வதை சகிக்க முடியவில்லை.. வாசகர்களிடமிருந்து வரும் வாழ்த்துக் கடிதங்களை விடவும் நான் வைத்தியசாலையில் கண்ட நோயாளர்களை பற்றிய அனுபவங்களை முகநூலில் எழுதிய போது பலரும் முன்வந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தருணங்கள் நான் பெற்ற உயரிய விருதுகளாக நினைக்கிறேன்.

 ராஜ் சுகா நீங்கள் படைக்கும் படைப்புக்கள் எவ்வாறான ஆலோசனைகள், அறிவுரைகளுக்கு கீழ் எழுதப்படுகிறது.? யாரிடமாவது உங்கள் படைப்புக்கள் பற்றி கலந்தாலோசிப்பீர்களா.? 

அல்சாத் உசனார் நான் எனது அனுபவங்களையும், கண்ட காட்சிகளையுமே எழுத்து வடிவில் பேசுகிறேன். என் மனச்சாட்சிக்கு சரியாகப்பட்டதை எழுதுகிறேன். நிச்சயமாக, எனது ஆக்கங்கள் பற்றி எனது ஊர் மூத்த எழுத்தாளர்களிடம் அறிவுரை கேட்டு அவர்களது விமர்சனங்களையும் ஏற்று ஆக்கங்கள் படைத்துக் கொண்டிருக்கிறேன்.

 ராஜ் சுகா எதிர்காலத் திட்டம் பற்றி.?

 அல்சாத் உசனார் என் சமூகத்தின் மத்தியில் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு பல திறமைசார் மாணவர்களையும் இலக்கிய துறைக்குள் உள்வாங்குதல். கவிதையோடு சிறுகதை, குறுங்கதை மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனக் கட்டுரைகளையும் எழுதி வரும் நான் எனது அடுத்த இலக்கான நாவலையும் எழுதத்தொடங்கவுள்ளேன். கவிதைப் புத்தகங்களை மாத்திரம் வெளியிடாது பல சிறுகதை, கட்டுரை, நாவல்களையும் படைக்க வேண்டுமென்பதே எனது இலட்சியமாகும். 

ராஜ் சுகா வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைப்பது.? 

அல்சாத் உசனார் உண்மையிலேயே இன்றைய எம் சமூகத்தில் ஏட்டுக் கல்விக்கு கொடுக்கும் முன்னுரிமை இலக்கியத்துக்கு கொடுப்பது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றமை மன வேதனைக்குரியது. கவிஞர்களைக் கேலியாகப் பார்க்கும் நிலையும் எம் சமூகத்தின் மத்தியில் காணக் கூடியதாகவுள்ளது. இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். இன்று ஒவ்வொரு ஊரிலும் அனைத்து துறைசார்ந்தவர்களும் போதியளவு இருக்கும் நிலையில் எழுத்தாளர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவது சமூகம் இலக்கியத்தின் மீது வைத்துள்ள அவநம்பிக்கையையே காட்டுகிறது. எழுத்தாளர்களூடாகவே எம் வரலாறு நாளைய சந்ததிக்கு போய்ச்சேர வேண்டிய தேவையிருப்பதையும் மறந்து விடக்கூடாது. ஆகவே, கவிஞர்கள், எழுத்தாளர்கள் மதிக்கப்பட வேண்டும். அதற்கு எம் சமூக மாணவர்களிடம் இலக்கியம்சார் திறன் விருத்தி செய்யப்பட வேண்டும். அதற்கு ஒவ்வொரு பெற்றோரும் ஆர்வமுள்ள தங்களது பிள்ளைகளை ஊக்கப்படுத்தி அதற்கான வாய்ப்புக்களை முன்னின்று  வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை தயவாய் முன் வைக்கிறேன்.








-நேர்காணல் :ராஜ்சுகா-

Monday, December 21, 2015

புரிதல்கள்

புரிதல்கள் பிழைக்கும்போது
பிரிதல்கள் தளைக்கும்

ஒட்டவைப்பவன்

நான் உடையும் போதெல்லாம்
ஒட்டவைப்பவன் நீ.

எல்லா உடைவுகளிலும்
உனது விம்பம் மட்டும்
முழுமையாக‌!!


கல்குடா நேசனின் விருது பற்றிய வாழ்த்துரை (21.12.2015)

http://kalkudahnation.com/




தடாகத்தின் விருது பெற்ற கல்குடா நேசனின் இணையக்குழுவின் ஓட்டமாவடி றியாஸ், கவிதாயினி ராஜ் சுகா ஆகியோருக்கு வாழ்த்துக்கள்-கல்குடா நேசன் iகடந்த 15.12.2015ம் திகதியன்று மாலை 4.30 மணிக்கு திருகோணமலை சன்ஷைன் (Sun Shine) மண்டபத்தில் தடாகம் கலை இலக்கிய வட்டம் மற்றும் கனடா படைப்பாளிகள் உலகம் இணைந்து நடாத்திய விருது வழங்கும் விழாவில் கலைமணி விருது பெற்ற கல்குடா நேசனின் இலக்கியத்துறை சர்வதேசத் தொடர்பாளர் கவிஞர் ஓட்டமாவடி றியாஸ் அவர்களுக்கும், கவியருவி விருது பெற்ற கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் பகுதிப் பொறுப்பாளர் கவிதாயினி த.ராஜ் சுகா (த. எலிசபத்) அவர்களுக்கும் கல்குடா நேசன் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. 

அத்துடன், கலை இலக்கியப் பயணத்தில் தொடர்ந்தும் பயணித்து இலக்கியத்துறைக்கு பங்காற்ற வேண்டுமென்றும் பல வெற்றிகளையும், விருதுகளையும் பெற வேண்டும் என்ற பிரார்த்தனைகளுடன், கல்குடா நேசனின் வெற்றியிலும் வளர்ச்சியிலும் பங்கெடுத்துள்ள அவர்கள் இருவரையும் வாழ்த்துவதில் கல்குடா நேசன் மகிழ்ச்சியடைகின்றது.  







http://kalkudahnation.com/


எனது நன்றியுரையினை பிரசுரித்த கல்குடா நேசன் இணையத்திற்கு மனம் நிறைந்த நன்றிகள்
*****************************************************************************


வளர்ந்து வரும் இளையவர்களை ஊக்கப்படுத்துமுகமாக எனக்கு வழங்கப்பட்ட விருதுக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்-கவிதாயினி த.ராஜ் சுகா கடந்த 15.12.2015ம் திகதியன்று மாலை 4.30 மணிக்கு திருகோணமலை சன்ஷைன் (Sun Shine) மண்டபத்தில் தடாகம் கலை இலக்கிய வட்டம் மற்றும் கனடா படைப்பாளிகள் உலகம் இணைந்து நடாத்திய விருது வழங்கும் விழாவில் மலேசிய நாட்டு எழுத்தாளர்கள் 36 பேர் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும். இவ்விழாவில் இலங்கை மலேசிய படைப்பாளிகள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள். அந்த வரிசையில் எனது பெயரும் இடம்பெற்றது ஆச்சரியமாக இருந்தது. வளர்ந்து வரும் இளையவர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும் அவர்களுக்கு கைகொடுத்து வளர்த்து விடும் உயரிய சிந்தனையாலும், தெரிவானவர்களில் எனக்கும் இவ்விருது கிடைக்கப்பெற்றது. உண்மையில் விருது பெருமளவுக்கு நான் எதனையும் செய்து விடவில்லை என நான் சொல்லத்தேவையில்லை. நீங்கள் யாவரும் அறிவீர்கள். எனது எழுத்துக்களையும், நான் முன்னெடுக்கும் சில இலக்கிய முயற்சிகளையும் ஊக்கப்படுத்துமுகமாக தந்த இவ்விருதிற்காக எனது மனப்பூர்வமான நன்றியினை தடாகம் கலை இலக்கிய வட்டத்திற்கும் அதன் அமைப்பாளர் உட்பட அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன். விருது பெற்று விட்டாதால் நான் பெரிய இலக்கியவாதியுமல்ல. இதனால் நான் என்னை பெரியவளாகக் காட்டிக்கொள்ளவும் விரும்பவில்லை. வாசகர்களிடமிருந்து வரும் விமர்சனங்களையே ஒரு படைப்பாளிக்கான சிறந்த அங்கீகாரம் என்பது எனது தனிப்பட்ட கொள்கை. மாணவனை ஆசிரியர் பாராட்டும் போது கிடைக்கும் பூரிப்பையும் இன்னும் படிக்க வேண்டுமென்று அவனுக்குள் உருவாகும் புதுத்தெளிவையும் வேகத்தையும் தந்து விடும் அநுபவமாக இவ்விருதினை மகிழ்வோடு பெற்றுக்கொண்டேன். இவ்விருதுக்கு தகுதியானவளாக இன்னும் என்னை வளர்த்துக்கொள்ள முயற்சித்தவளாக என் மனப்பூர்வமான நன்றிப்பூக்களை இக்குழுவுக்கு தெரிவிப்பதில் பெறுமைப்படுகின்றேன்.




மேல்!!

இரந்து வாழ்வதைவிட‌
இறந்து விடுதல்மேல்!!




Thursday, December 17, 2015

கடல் தேடும் நதி கவிதை நூலுக்கான ரசனைக்குறிப்பு







இளையவர்களின் படைப்புக்கள் போட்டிபோட்டுக்கொண்டு வெளிவரும் இச்சமகாலத்தில் ஒரு ஆழமான  இருத்தலின் இலட்சணங்களோடு புறப்பட்டிருப்பவர் புத்தளத்தைச் சேர்ந்த இளங்கவிஞர் கவித்தீபம் நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ் அவர்கள்.

குறுகிய காலத்துக்குள் இலக்கிய பெருவெளிக்குள் காலடிவைத்து தனது ஆழமான கவிதைகளினால் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதில் வெற்றியும் கண்டுள்ளார். அண்மையில் இவரது கன்னித்தொகுப்பு கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.


தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் வெளியீடு செய்யப்பட்ட "கடல் தேடும் நதிகவிதை நூல் கண்ணுக்கு குளிர்ச்சியான அட்டைப்படத்தோடு வெளிவந்துள்ளது. கடலைத்தேடுகின்றேன் எனும் தலைப்பில் தனதுரையை வழங்கியுள்ளார் கவிஞர் நுஸ்ரி அவர்கள் அதில், தனக்கு உதவிக்கரம் நீட்டிய அத்தனைபேருக்கும் நன்றியினை ஆத்மார்த்தமாக தெரிவித்துள்ளார்.

"கவிதையானது வெகுஜனப்பட்டு பேசப்படுவதும் வெளியாகும் இடத்திலேயே சுடுண்டு விடுவதும் கவிஞனின் மொழியாளுமையை பொறுத்தது. மொழி வாலாயம் கொண்ட கவிஞனின் தேர்ந்த சொற்களும் கவிதை வெளிப்பாட்டு முறையும்தாம் ஒரு பெரும் பங்கை வகிக்கின்றதுஎன்ற இளையவர்களுக்கான ஆலோசனையாகவும் வழிகாட்டலாகவும், நூலாசிரியருக்கு சிறந்த வாழ்த்துதல்களோடு முன்னுரையினை வழங்கியிருக்கின்றார் ஒலிபரப்பாளரும், இலக்கியவாதியுமான கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் அவர்கள்.

அத்தோடு வெளியீட்டாளரும் தடாகத்தின் அமைப்பாளருமான கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்கள்  வாழ்த்துரையினையும் நூலாசிரியரைப்பற்றிய பின்னட்டைக்குறிப்பை நிறைவோடும் பூரிப்பு மாறாமலும் வழங்கியுள்ளார் ஜேர்மனைச்சேர்ந்த தடாகத்தின் நிருவாக ஆசிரியர் கவிதாயினி லூசியா கூஞ்ஞே அவர்கள்.
அறுபத்தெட்டு தலைப்புக்களில் ஆரவாரமில்லா அழகிய ஆழமான கவிதைகளில் முதல் கவிதையினை அன்னைக்காய் சமர்ப்பித்துள்ளார் கவிஞர். மனிதரின் மூலக்கருவான தாயினை இக்கவிஞரும் பல இடங்களில் வலியுறுத்தி தன் அன்பினை தூய்மையாக வெளிப்படுத்தியுள்ளார்.

"என் நாவின்
முதல் வார்த்தையும்
என் எழுத்தின்
முதல் கவிதையும்
நீதான் தாயே"   என தாய்க்கு பிரியமான மகனாய் வெளிப்பட்டுள்ளார்.

பொதுவாக கவிஞர் நுஸ்ரி அவர்களின் கவிதைகளை வாசிக்கும்போது ஓர் இன்பச்சுவையினை அநுபவிக்கும் சந்தர்ப்பத்தை
தாராளமாய் ஏற்படுத்தித்தந்துள்ளது. கவிதையினை வாசித்து நிமிர்கையில் அதுபற்றிய அடையாளமாக தலைப்புக்கள் காணப்படுவது நன்றாகவே உள்ளது. குறிப்பாக,

"மாலைவரை உங்கள்
உயிர்வாழும் காலமெனினும்
புன்னகைக்காமல் உங்கள்
காலைகள் விடிந்ததில்லை"  என முடிவடையும் கவிதை யார் பற்றியது என பார்த்தால் 'பூக்கள்' என்ற தலைப்பு புன்னகைக்கின்றது. இப்படி பலகவிதைகள் தலைப்புக்களிலேயே முடிவடைகின்றது. இதில் இவருடைய இளமைத்தன்மை வெளிப்பட்டு நிற்கின்றது.


தந்தைக்காய் தந்தையைப்பற்றி கூறும் கவிதை "கோபக்காரர்கள்". பொதுவாக தந்தை பற்றிய அபிப்பிராயத்தை கூறி அதன் உண்மையான நிலையினை இக்கவிதை மூலம் எடுத்தியம்ப விரும்புகின்றார் கவிஞர்.


"பெற்ற தன் பிள்ளையை
கொஞ்சாமலும்
கெஞ்சாமலும்
மிஞ்சாமலும் கழியும்
நேரங்களை கண்ணீரால் கழுவும்
அப்பாக்களே"  என்று  அவர்களுக்காக பரிதவிக்கிறார். 'திரும்பி வாங்கப்பா' எனும் கவிதையிலும் தந்தைக்காய் ஏங்கும் ஓர் பிள்ளையின் குரலாய் கண்ணீர் தருகின்றார்.

"கடல் தேடும் நதி" தொகுப்பானது கவிதைகளை இலகு மொழியில் செதுக்கி இதயங்களுக்கு இதமளிக்கிறது. வாசிக்கும் அத்தனை நெஞ்சங்களையும் சலிக்கவிடாமல் இழுத்துவைத்துவிடுகின்றது.

     "கறுப்பி நீ" எனும் தலைப்பில்
       கருவறை கறுப்பு
       கல்லறை கறுப்பு
       வெறும் தோலில்மட்டும்
       பாகுபட்டுக் கிடக்கும்
       மாந்தரும் நாமும் இனி ஓர்
       பாடமாவோம்."

                     என்ற கவிதை சமகால பெண்களை நம் கண்முன் கொண்டுவருவதோடு ஆக காதல், திருமணம் போன்றவற்றோடு இக்கவிதையை இணைக்கும்போது சிறந்த ஆலோசகராக கொள்ளலாம்.

பொதுவாக இத்தொகுப்பின் கவிதைகளை நோக்கின் சோர்வடைந்து, தோல்வியில் உழன்று, கண்ணீரில் தோய்ந்து கவிதை எழுதாமல் மீளுவதற்காய், உற்சாகப்படுத்துவதாய், தங்களை உணர்ந்து ஓர் உத்வேகத்துள் எழுதாய் அமைந்த கவிதைகளே அதிகம் எனலாம்.
'பட்டது போதும்' 'விழிச்சுக்க' 'தோல்வி' 'நான்' போன்று பல கவிதைகள் அவ்வாறான மனப்பக்குவத்தை வித்திடுகின்றது.

"நினைத்தது முடிந்ததும்
இலக்கை நிறுத்திட எண்ணாதே
எண்ணும் எண்களுக்கு
முடிவில்லை கண்டாய்
நீ அடையவேண்டியது
இன்னும் இருக்கின்றது"  என்ற ரிகளை எடுகோலாக காட்டலாம்.

காதல் பற்றி  காதலர்கள்  பற்றி மிக அருமையாக பேசியிருக்கின்றார் "என்ன காதலிது" எனும் கவிதையில் காதலை வித்தியாசமாக சுவாரஸ்யமாக பார்த்திருக்கின்றார் கவிஞர். ஆண் பெண்ணுக்கிடையிலான உறவே நாம்யாவரும் காதலாக பார்க்கின்றோம் ஆனால் கவிஞர் நுஸ்ரியோ, தாய் கள், தந்தை மனன், அண்ணன் தங்கை போன்ற உறவுகளுக்கிடையிலான அன்பை அன்னியோன்யத்தை மிக உணர்வுபூர்வமாக வரிகளாக்கியுள்ளமை பாராட்டச்செய்கின்றது

காதல் பற்றி இத்தனை அழகாய்ப் பேசும் இளங்கவிஞரான இவர் இன்றைய இளசுகளிடம் காணப்படும் அநாகரிக காதலில் வெறுப்படைந்தவராய் அதனை சாடுபவராய் "மீண்டும்  வேண்டும் என்ற கவியினை வேண்டுகோளாக வடித்துள்ளார்.

அதிகமான கவிதைகள் மனிதத்தை வலியுறுத்தியே புனையப்பட்டுள்ளது. இன்றளவில் தொலைந்துபோய்க்கொண்டிருக்கும் மனிதாபிமானத்தை தட்டியெழுப்பும்படி செய்கின்றது. ஒவ்வொரு வரிகளும் நமக்கென்ன, நாம் மட்டும் வாழ்ந்தால் போதும், நமக்கு மட்டும் கிடைத்தால் சரி என்கின்ற எண்ணத்தை பல கவிகளில் சுட்டிக்காட்டியுள்ளார். 'கண்தானம்' 'இரட்டை' 'மனிதம் இன்னும் வாழ்கிறது' 'தட்டியது யாரோ' போன்ற தலைப்புக்களை இதற்காய் அடையாளமிட்டுக்கொள்ளலாம்.

ஒரே வட்டத்துக்குள் சுற்றிசுற்றி எழுதாமல் பரந்துபட்ட சிந்தனையோடு தனது பார்வையை விசாலப்படுத்தியுள்ளார் கவிஞர். மனிதம் வெற்றி முயற்சி தாய் தந்தை உறவு பெண்ணடிமை சீதனம் யுத்தம் தந்த வலி என பட்டியல் நீள்கிறது. அத்தோடு கிராமத்து வாடை வீசூம் கவிதைகளை கவிஞர் தந்திருப்பது இதயம் மண்வாசனையையும் அநுபவிக்கின்றது.


நாங்கள் மறந்துபோன இளமைகால அநுபவங்கள், நினைக்க மறந்த சுவாரஸ்யங்கள் என அடுக்கிவைத்திருக்கின்றார் இக்கவிஞர். மெல்லிய புன்னகையோடு சுவைத்துசுவைத்து அசைபோடுகின்றது வாசிக்கும் நம் நினைவுகளையும். இளையவராக இருப்பினும் உணர்வுகளை கோர்த்து அதை உயிரோட்டமாக உச்சரித்துக்காட்டுவதில் கவிஞரின் முதிர்ச்சித்தன்மை வெளிப்படையாக புலப்படுகின்றது.

நூலின் கடைசிப்பக்கங்களில் கிட்டத்தட்ட அறுபத்தைந்து கவிதைகள் குறுங்கவிதைகளாக தலைப்பிட்டு எழுதியுள்ளார். பக்கங்கள் நீளாது மொத்தத்தையும் சுருக்கி தந்திருக்கும் அந்த விதமும் கவியார்வத்தை அதிகப்படுத்தி சிந்திக்க வைக்கின்றது எனலாம்.

கிராமத்து வாசனைவீசும் கவிதைகளை சந்தத்துடன் புனைய முயற்சித்திருக்கலாம் என தோன்றுகின்றது. அழகான வரிகள் என்பதால் அப்படித்தோன்றுகின்றது சந்தத்துடன் அவை அமைந்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

இலக்கிய உலகில் அண்மையில் இணைந்துகொண்டாலும் சிறந்த நுட்பங்களுடன், பரந்த சிந்தனையுடன், நகைச்சுவை உணர்வுடன், எழுதுவதால் இந்த பெரிய பரப்பில் ஓர் இடத்தை தக்கவைத்துக்கொள்ளலாம். இன்னும் வாசிப்பனுபவத்தை அதிகப்படுத்துவதன் மூலம் அதனை சாத்தியப்படுத்திக்கொள்ளலாம்.

இந்நூலில் குறிப்பிட்டுச்சொல்லும் தவறு, எழுத்துப் பிழையை சரிசெய்து கொண்டிருந்தால் நிறைவாயிருந்திருக்கும் அச்சுப்பதிவின் போது ஏற்படும் சில குறைகளை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இருப்பினும் எழுத்துப்பிழைகள் பல கருத்துப்பிரழ்வையும் ஏற்படுத்திவிடும் என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளல் வேண்டும்.

தனது முயற்சிகளை நூலாக்கி, இலக்கிய பரப்பில் சாதனை படைக்கவந்திருக்கும் இளைய கவிஞர் கவித்தீபம் "நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ்" அவர்கள் இன்னும் தன் சிந்தனை வட்டத்தின் வெளிப்பாடுகளை சமூகத்தை விழித்தெழச்செய்யும் படியாக, வாசகர்களின் எதிர்ப்பார்ப்பினை நிறைவேற்றும் படைப்புக்களை நூலிருவாக்கவேண்டுமென்ற பிரார்த்தனைகளோடு அவரின் எல்லா முயற்சிகளும் வெற்றியடைய அனைவரின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.


நூல் வகை: கவிதைத்தொகுப்பு
ஆசிரியர்: நுஸ்ரி ரஹ்மத்துல்லாஹ்



-த. ராஜ்சுகா-