Sunday, December 27, 2015

கல்குடா நேசனில் (25.12.2015) கவிஞர் அல்சாத் உசனார்.



http://kalkudahnation.com/

“கல்குடா நேசனின் 20வ‌து இலக்கிய நேர்காணலில்” இணைகிறார் வளர்ந்து வரும் இளங்கவிஞர் ஓட்டமாவடி அல்சாத்-நேர்காணல் உள்ளே…. inShare ஓட்டமாவடி றியாஸ் நேர்காணல்-ராஜ் சுகா பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. 

இதன் தொடரில் இன்று 25.12.2015ம் திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 20வது இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார். இலங்கையின் வளர்ந்து வரும் இளம் படைப்பாளியான ஓட்டமாவடியைச் சேர்ந்த‌ கவிஞர் அல்சாத் உசனார்.

 “கவிஞர்களை கேலியாகப் பார்க்கும் நிலையும் எம் சமூகத்தின் மத்தியில் காணக்கூடியதாகவுள்ளது. இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். இன்று ஒவ்வொரு ஊரிலும் அனைத்து துறைசார்ந்தவர்களும் போதியளவு இருக்கும் நிலையில், எழுத்தாளர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவது சமூகம் இலக்கியத்தின் மீது வைத்துள்ள அவநம்பிக்கையையே காட்டுகிறது. எழுத்தாளர்களூடாகவே எம் வரலாறு நாளைய சந்ததிக்கு போய்ச்சேர வேண்டிய தேவை இருப்பதையும் மறந்து விடக் கூடாது” 

என்று இளையவராக இருந்து கொண்டு சமூகத்தின் மீதான முதிர்ச்சிப்பார்வையினூடாக நம்மை சந்திக்க வ‌ருகின்றார் இவ்விளைய கவிஞர். கிழக்குப் பல்கலைகழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தில் தாதியியல் பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவனான இவரின் எல்லா முயற்சிகளும் வெற்றியடைய வேண்டுமென்ற வாழ்த்துதல்களோடு நேர்காணலில் இணைந்து கொள்வோம். 






ராஜ் சுகா : உங்களை பற்றிய அடையாளத்தோடு இணையத்துடன் இணைந்து கொள்ளலாமா.? 

அல்சாத் உசனார் மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி எனும் அழகிய கிராமத்தில் 1990-09-28ம் திகதி அன்று உசனார் – அவ்வா உம்மா தம்பதியினரின் புதல்வனாக பிறந்தேன். எழுவரைக் கொண்ட எனது குடும்பத்தில் அம்மா, அப்பா, அண்ணா, அக்கா, தங்கை, தம்பி என்ற அனைத்து உறவுகளின் பரிவும் பாசத்துடனும் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். நான் ஆரம்பக்கல்வி தொடக்கம் உயர் தரத்தில் உயிரியல் பிரிவு வரை மட்/ஓட்டமாவடி தேசிய பாடசாலையிலேயே கல்வித்தாகம் தீர்த்தேன். உயர் தரப்பரீட்சையின் பின்னர் தாதியியல் பட்டப்படிப்புக்காக கிழக்குப் பல்கலைகழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்திற்குத் தெரிவாகி இன்று இறுதி வருடத்தின் இறுதி தேர்வை எழுதிக் கொண்டிருக்கிறேன். 

ராஜ் சுகா நீங்கள் கவிதையுலகில் பிரவேசித்த அனுபவம் பற்றி.? 

அல்சாத் உசனார் நான் தரம் 9இல் கல்வி கற்கும் சமயம் எதேச்சையாக எனது அண்ணாவின் கவிதைகளைப் படிக்க நேர்ந்தது. படிக்கும் போதே அதில் ஓர் இனம் புரியா ஈர்ப்பின் காரணமாக எனக்கும் கவிதை எழுத வேண்டுமென்ற ஆர்வம் எழுந்தது. விளைவாக எனது முதல் கவிதை தாய்மையைப் பற்றியதாக அமைந்தது. அக்கவிதையை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். தாய்மை பத்துத் திங்களாய் ருசி பார்த்த ஆயிரமாயிரம் வலிகளும் மழலை முகம் பார்த்து உதிர்த்திடும் ஓர் புன்னகையில் உதிர்ந்திடும் அதிசயம் அதுவே தாய்மையின் ரகசியம்.!!!                  எனக்கு மிகவும் பிடித்த கவிதையும் கூட… 


ராஜ் சுகா எவ்வகையான கவிதைகளை எழுத வேண்டுமென நினைக்கின்றீர்கள்.? 


அல்சாத் உசனார் இன்றைய சமூகத்தில் காணப்படும் பல சமூக அவலங்களையும் மற்றும் எனது அனுபவங்களையும் எனது பேனா பேசுகிறது. மட்டுமல்லாது காதல், தாய்மை போன்ற உணர்வுகளையும் பேசத்தவறவில்லை. 

ராஜ் சுகா நீங்கள் வாசித்து வியந்த கவிஞர்கள் பற்றி.? 

அல்சாத் உசனார் உண்மையில் வாசிப்பு என்பது ஓர் மனினை முழு மனிதனாக்குகிறது. இன்றைய எமது அவசரகால வாழ்வில் வாசிப்பு என்பது மிக அரிதாகப் போய் விட்டது என்பது மறுப்பதற்கில்லை. அந்த வகையில், நானும் அதற்கு விதி விலக்கல்ல. இருந்தும் என்னைக் கவர்ந்த கவிஞர்களின் பட்டியல் மிக நீண்டது. அவர்களில் முக்கியமான கவிப் பேரரசுகளாக சுப்பிரமணிய பாரதியார், உருத்திரமூர்த்தி, வாலி, வைரமுத்து, கவிக்கோ அப்துல் றகுமான் மற்றும் புதுமைப்பித்தன் போன்றோரைக் கூறலாம். அத்தோடு முகநூலில் எழுதி வரும் பல இளம் கவிஞர்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்லர் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். 

ராஜ் சுகா உங்கள் படைப்புக்கள் வெளியான ஊடகங்கள்.? 

அல்சாத் உசனார் இன்று வரை நான் கவிதை எழுத தூண்டிக் கொண்டிருப்பவை பத்திரிகைகள் என்றால் மிகையாகாது. அந்த வகையில் எனது கவியாற்றலை வளர்த்து விட்டமையில் முதல் பங்கு மித்திரன் வாரமலருக்கே உரித்தாகும். இன்று வரை எனது ஆக்கங்களுக்கு இடமளிக்கும் மித்திரனுக்கு நன்றிகள். அத்தோடு மெட்ரோ நிவ்ஸ், தினமுரசு வாரமலர், உதய சூரியன், சுடர் ஒளி வாரமலர், விடிவெள்ளி, வண்ண வானவில் போன்ற பத்திரிகைகளிலும் எழுதியிருக்கிறேன். மற்றும் முகநூலிலும், கல்குடா நேசன் இணையத்திலும் எழுதி வருகிறேன். அத்தோடு “அல்சாத் கவி வரிகள்” எனும் எனது பக்கத்திலும் கவிதைகளைப் பதிந்து வருகிறேன்.

 ராஜ் சுகா கவிதை தவிர்ந்த உங்களது ஏனைய திறமைகள்.? 

அல்சாத் உசனார் கவிதைகள் தவிர சிறுகதை, குறுங்கதை, விமர்சனக் கட்டுரைகளும் எழுதியிருக்கிறேன். அத்தோடு எனது வைத்தியசாலை பயிற்சியின் போது நோயாளர்களோடு நான் பெற்றுக் கொண்ட அனுபவங்களையும் பத்திரிகையூடாகவும் முகநூலினூடாகவும் எழுதி வருகிறேன். 

ராஜ் சுகா ஓர் நூலினை வெளியிடாமைக்கு என்ன காரணம்?  ஓர் படைப்பாளியாக உங்களுக்கான அங்கீகாரம் எவ்வாறு காணப்படுகிறது.? 

அல்சாத் உசனார் உண்மையில் ஓர் கவிஞன் அல்லது எழுத்தாளன் ஒரு நூலினூடாகவே சமூகத்தில் அடையாளப்படுத்தப்படுகின்றான். நூலினூடாக தம்மை ஆவணப்படுத்தி இலக்கியத்தில் இரண்டறக் கலக்கிறான். அந்த வகையில் நானுமோர் தரமான படைப்பை சமூகத்திற்கு வழங்க வேண்டுமென்ற முனைப்போடு நீண்ட காலமாக முயற்சிக்கிறேன். ஆனாலும், குடும்ப, பொருளாதார நிலை அதனை பிற்போட்டுக் கொண்டே வருவது மிகவும் சங்கடத்திற்குரியதே. இதனூடாக ஓர் படைப்பாளி தனது படைப்பை வெளிக்கொணர எந்தளவு கஷ்டத்தை சந்தித்திருப்பான் என்பதை உணரக் கூடியதாகவுள்ளது. நிச்சயமாக எனது படைப்பை விரைவில் வெளியிடுவேன் என்ற நம்பிக்கையோடு…. எனது இலக்கியப் பயணத்தில் பல ஊடகங்களும் எனது ஆக்கங்களைப் பிரசுரித்து என்னை ஊக்கப்படுத்துவதோடு வாசகர்களின் வாழ்த்துக்களும் கடிதங்களும் மற்றும் எனது ஊர் கலை, கலாசார விழாக்களுக்கு என்னையும் அழைத்து கருத்துக்களை கேட்பதும் என்னை ஓர் படைப்பாளியாக அடையாளப்படுத்துகின்றது என்பதை உணர்கிறேன். 

ராஜ் சுகா நீங்கள் பங்குபற்றிய போட்டிகள், பாராட்டுக்கள் பற்றி? 

அல்சாத் உசனார் பாடசாலை காலத்திலிருந்தே பலவிதமான கவிதை, கட்டுரைப் போட்டிகளில் பங்குபற்றி மாவட்ட மட்டம் வரை சென்று பரிசில்கள் பெற்றிருக்கிறேன். மற்றும் பல கலை, கலாசார விழாக்களிலும் பங்குபற்றி வெற்றி பெற்றுள்ளேன்.

 ராஜ் சுகா இளைய படைப்பாளிகளின் வெற்றிக்காக அல்லது ஜெயித்திடும் வழிகளாக நீங்கள் வைத்திருக்கும் ஆலோசனைகள்.?

 அல்சாத் உசனார் போட்டியிடுங்கள், பொறாமை கொள்ளாதீர்கள். பிறரின் கேலிப்பேச்சுக்கள் கண்டு துவண்டு விடாதீர்கள். பிறர் கேலியாகப் பேசுகின்றார்கள் என்றால் உங்கள் திறமை கண்டு அவர்கள் பொறாமை கொள்கின்றார்கள் என்றே அர்த்தமாகும். ஆகவே, அதிலிருந்தும் நாம் வேகமாக முன்னேற வேண்டும். அதிகளவான புத்தகங்களை வாசியுங்கள். ஊரின் மூத்த எழுத்தாளர்களைச் சந்தித்து அவர்களது ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் பெற்றுக்கொண்டு எழுத்தை தொடருங்கள். வெற்றி நிச்சயம். 

ராஜ் சுகா உங்கள் படைப்புகளுக்கு வந்த விமர்சனங்கள்? 

அல்சாத் உசனார் உண்மையில் எனது படைப்பின் முதல் ரசிகர்கள் எனது தம்பியும் தங்கையும், அவர்களது ஊக்கமும் மற்றும் எனது தாயின் பிரார்த்தனைகளுமே நானடைந்த முதல் மகிழ்ச்சியாகும். மேலும் பல முகமறியா வாசகர்களிடமிருந்தும் பல வாழ்த்து கடிதங்களும், முகநூல் நட்புகளிடமிருந்து வாழ்த்துக்களும் வந்த வண்ணமே இருப்பது மன நிறைவைத்தரும் அதே வேளை, எனது ஊர் மூத்த எழுத்தாளர்களும் எனது ஆக்கங்களுக்கு ஊக்கமும் அறிவுரையும் வழங்குவது பெரு மகிழ்ச்சியாகும்.

 ராஜ் சுகா இந்த இலக்கிய முயற்சியில் நீங்கள் சோர்வடைந்த சந்தர்ப்பங்களையும், அதிகமாக சந்தோஷப்பட்ட நிமிடங்களையும் நினைவு கூற முடியுமா.? 

அல்சாத் உசனார் க.பொ.த.சா.தரம் படிக்கும் போது நான் எழுதி தினமுரசு வாரமலரில் வெளிவந்த “அவள் நினைவுகள் ” எனும் சிறுகதையைப் பார்த்து எனது தமிழ்ப்பாட ஆசிரியர் என்னைப் பாராட்டிய சமயம் என் நண்பர்கள் என்னை வெகுவாகக் கேலி செய்து என் மனதைச் சங்கடப்படுத்திய அந்த நிமிடங்கள் என் மனதிலிருந்து அகலா நினைவுகள். அன்றிலிருந்து நான் பல்கலைக்கழகம் நுழையும் வரை எந்தச்சிறுகதையும் எழுதவில்லை என்பது மன வேதனைக்குரியதாகும். அத்தோடு, இன்று வரை எனது சில நண்பர்களும் இலக்கியம் சார் விடயங்களில் கேலி செய்வதை சகிக்க முடியவில்லை.. வாசகர்களிடமிருந்து வரும் வாழ்த்துக் கடிதங்களை விடவும் நான் வைத்தியசாலையில் கண்ட நோயாளர்களை பற்றிய அனுபவங்களை முகநூலில் எழுதிய போது பலரும் முன்வந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய தருணங்கள் நான் பெற்ற உயரிய விருதுகளாக நினைக்கிறேன்.

 ராஜ் சுகா நீங்கள் படைக்கும் படைப்புக்கள் எவ்வாறான ஆலோசனைகள், அறிவுரைகளுக்கு கீழ் எழுதப்படுகிறது.? யாரிடமாவது உங்கள் படைப்புக்கள் பற்றி கலந்தாலோசிப்பீர்களா.? 

அல்சாத் உசனார் நான் எனது அனுபவங்களையும், கண்ட காட்சிகளையுமே எழுத்து வடிவில் பேசுகிறேன். என் மனச்சாட்சிக்கு சரியாகப்பட்டதை எழுதுகிறேன். நிச்சயமாக, எனது ஆக்கங்கள் பற்றி எனது ஊர் மூத்த எழுத்தாளர்களிடம் அறிவுரை கேட்டு அவர்களது விமர்சனங்களையும் ஏற்று ஆக்கங்கள் படைத்துக் கொண்டிருக்கிறேன்.

 ராஜ் சுகா எதிர்காலத் திட்டம் பற்றி.?

 அல்சாத் உசனார் என் சமூகத்தின் மத்தியில் இலக்கியத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு பல திறமைசார் மாணவர்களையும் இலக்கிய துறைக்குள் உள்வாங்குதல். கவிதையோடு சிறுகதை, குறுங்கதை மற்றும் ஆக்கபூர்வமான விமர்சனக் கட்டுரைகளையும் எழுதி வரும் நான் எனது அடுத்த இலக்கான நாவலையும் எழுதத்தொடங்கவுள்ளேன். கவிதைப் புத்தகங்களை மாத்திரம் வெளியிடாது பல சிறுகதை, கட்டுரை, நாவல்களையும் படைக்க வேண்டுமென்பதே எனது இலட்சியமாகும். 

ராஜ் சுகா வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைப்பது.? 

அல்சாத் உசனார் உண்மையிலேயே இன்றைய எம் சமூகத்தில் ஏட்டுக் கல்விக்கு கொடுக்கும் முன்னுரிமை இலக்கியத்துக்கு கொடுப்பது மிகவும் குறைவாகவே காணப்படுகின்றமை மன வேதனைக்குரியது. கவிஞர்களைக் கேலியாகப் பார்க்கும் நிலையும் எம் சமூகத்தின் மத்தியில் காணக் கூடியதாகவுள்ளது. இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும். இன்று ஒவ்வொரு ஊரிலும் அனைத்து துறைசார்ந்தவர்களும் போதியளவு இருக்கும் நிலையில் எழுத்தாளர்கள் மிகவும் அரிதாகவே காணப்படுவது சமூகம் இலக்கியத்தின் மீது வைத்துள்ள அவநம்பிக்கையையே காட்டுகிறது. எழுத்தாளர்களூடாகவே எம் வரலாறு நாளைய சந்ததிக்கு போய்ச்சேர வேண்டிய தேவையிருப்பதையும் மறந்து விடக்கூடாது. ஆகவே, கவிஞர்கள், எழுத்தாளர்கள் மதிக்கப்பட வேண்டும். அதற்கு எம் சமூக மாணவர்களிடம் இலக்கியம்சார் திறன் விருத்தி செய்யப்பட வேண்டும். அதற்கு ஒவ்வொரு பெற்றோரும் ஆர்வமுள்ள தங்களது பிள்ளைகளை ஊக்கப்படுத்தி அதற்கான வாய்ப்புக்களை முன்னின்று  வழங்க வேண்டும் என்ற வேண்டுகோளை தயவாய் முன் வைக்கிறேன்.








-நேர்காணல் :ராஜ்சுகா-

No comments: