Thursday, April 28, 2016

கல்குடா நேசன் 34வது படைப்பாளியாக கவிஞர் MU.அப்துல் பாஸித் அல் அர்ஷத் அவர்கள்

http://kalkudahnation.com/#!/tcmbck




கல்குடா நேசன் இணையத்தினூடாக வாராவாரம் கலைஞர்கள் படைப்பாளிகளைச் சந்தித்து, அவர்களுடனான கலந்துரையாடலை நேர்காணலாக தந்து கொண்டிருக்கின்றோம். பலரது ஆதரவையும் எதிர்பார்ப்பையும் சுமந்த இப்பகுதியானது வாசகர்கள் அனைவரினது ஆசியோடு வெற்றிநடை போடுகின்றது. இலைமறை காய்களாக இருக்கும் படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதிலும், வளர்ந்த கலைஞர்களின் கருத்துக்களை, திறமைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதினாலும் மகிழ்ச்சியடைகின்றோம். 

இதன் தொடரில் 22.04.2016ம் திகதி வெள்ளிக்கிழமை இன்று 34வது படைப்பாளியாக எம்மோடு இணைகின்றார் மருதமுனையைப் பிறப்பிடமாக கொண்ட இளைய, வளர்ந்து வரும் கவிஞர் MU.அப்துல் பாஸித் அல் அர்ஷத் அவர்கள். “சக கலைஞர்களின் படைப்புக்களை நோக்குவதன் மூலமும், போட்டிகளில் பங்கு கொள்வதனாலும் எமது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள முடியும்” என்று இன்றைய இளம் படைப்பாளிகளின் தேவைக்கேற்ப கருத்துரைக்கும் இவரின் விறுவிறுப்பான பதில்களுடன் இதோ முழுமையான நேர்காணல்








01. தங்களைப்பற்றிய அறிமுகத்தோடு இணையலாமா?

M.U.அப்துல் பாஸித் அல் அர்ஷத் ஆகிய நான் மருதமுனையை பிறப்பிடமாக கொண்டவன். உயர்தரம் வரை மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் கற்று பின்னர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் BSc in Management and Information Technology என்ற பட்டப்படிப்பை 2012ல் பூர்த்தி செய்தேன். தற்போது கல்முனை பிரதேச செயலகத்தில் பணி புரிகின்றேன். கட்டாரிலும் சுமார் மூன்று வருடங்கள் பணியாற்றியிருக்கின்றேன். 'பாஸித் மருதான்' எனும் புனைப் பெயரில் கவிதைகள் புனைந்து வருகிறேன்.



02. கவிதை எழுதுவதில் எவ்வாறு நாட்டம் ஏற்பட்டது?


என்றன் அன்பு தந்தை M.M.M.உவைஸ் அவர்கள் அல்ஹஸனாத் போன்ற மாதந்த சஞ்சிகைளுக்கு கடந்த காலங்களில் கவிதைகள் எழுதி சிறு பரிசுகளும் பெற்றிருக்கின்றார். அப்போதிருந்தே என்றன் மனதிலும் கவியெழுத வேண்டும் என்ற அவா இருந்தது. அந்த வகையில் என் தந்தைதான் என்னுடைய இந்த கவிப்பயணத்திற்கு வித்திட்டவர்.
ஆயினும் நான் கட்டாரில் சுமார் மூன்று வருடங்கள் தொழில் நிமிர்த்தம் இருந்த காலகட்டங்களில் தனிமை என்னை அதிகம் கவியெழுதத் தூண்டியது....



03. எவ்வகையில் உங்களது படைப்புக்களை வெளியிடுகின்றீர்கள்?


என்னுடைய கவிதைகளை சோனகர், சிறீலங்கா முஸ்லிம்ஸ், மருதமுனை ஒன்லைன், மேகம் நியூஸ், கற்பிட்டியின் குரல், ஜப்னா முஸ்லிம்ஸ் என பல வலைத்தளங்களுக்கும் மற்றும் பத்திரிகைகள் சஞ்சிகைகளுக்கும் அனுப்பி வருகிறேன். முகநூலிலும் "கவித்தூறல்கள்" என்ற எனது பக்கத்தில் (Public Profile ல்) பதிவேற்றம் செய்து வருகிறேன்.




04. உங்களைத் தட்டிக்கொடுத்து வளர்த்துவிடுவதில் பங்களிப்பு செய்பவர்கள்?



என்னுடைய மனைவியும் கவியெழுதுவதில் ஆர்வமுள்ளவர், அதே போன்று சில சமயங்களில் குறிப்பிட்ட தலைப்புக்களில் கவியெழுதுமாறு என்னை ஊக்கப்படுத்துவார். அத்தோடு தடாகம் கலை இலக்கிய வட்டம் மாதா மாதம் நடாத்துகின்ற சர்வதேச ரீதியிலான கவிதைப் போட்டிகளும் கவிப பயணத்தை ஊக்குவித்து வளர்த்து விடுவதில் முக்கிய பங்களிப்புச் செய்கின்றது.



05. நீங்கள் விரும்பி வாசிக்கும் நூல்கள் பற்றியும் உங்களது வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்துகொள்ள முடியுமா?


என்னைப் பொறுத்தவரை நூல்கள் எதனையும் முழுவதுமாக வாசித்தது கிடையாது. இப்போது அனைவரும் தங்களது முகநூல் பக்கங்களில் தமது ஆக்கங்களை பதிவிடுவதனால், முகநூலிலேயே அதிகமாக கவிதைகள் மற்றும் ஏனைய ஆக்கங்களை வாசிக்கக் கிடைக்கின்றது.



06.  நூல்களை வாசிக்காமையும் எமது பெருங்குறையே இதனை ஏற்றுக்கொள்கின்றீர்களா?


'வாசிப்பு ஒரு மனிதனைப் பூரணமாக்கும்' என்பதற்கமைய வாசிப்பு எமது திறமைகளை வளர்க்கப் பெரிதுமுதவும். நூல்களை வாசிக்காமை ஒரு குறையே. ஆயினும் அதனைப் பெரும் குறை என்று சொல்ல முடியாது. ஏனெனில் பத்திரிகை, சஞ்சிகைகள், இணையங்கள், சமூக வலைத்தளங்களென இன்றையவுலகில் வாசிப்பதற்கான தளங்கள் விரிந்து கொண்டு செல்வதைக் காணலாம்.
நூலொன்றை செல்லுமிடங்களுக்கெல்லாம் எடுத்துச் செல்வது என்பது சிரமமே. ஆனால் இன்றைய நவீன உலகில் அனைவருமே ஸ்மார்ட் மொபைல்களின் மூலம் செல்லுமிடமெல்லாம் கிடைக்கின்ற இடைவெளிகளில் இன்டநெட் வசதியினூடாக இணைய முகவரிகளிலும் சமூக வலைத்தளங்களிலும் வாசிப்பதனைக் காண முடியும்.




07. இன்றைய சமூக வலைத்தளங்களின் பயனால் சிரமமில்லாது படைப்பாளிகள் தங்களை வெளிப்படுத்திக்கொள்கின்றார்கள். இந்த வசதி பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

உண்மையிலேயே சமூக வலைத்தளங்கள் இன்றைய நவீன உலகில் ஏனைய ஊடகங்களிலும் பார்க்க விரைவாகவும் இலகுவாகவும் செய்திகளைக் கொண்டு செல்வதில் பாரிய பங்களிப்புச் செய்கின்றது. அதிலும் குறிப்பாக பேஸ்புக்கின் பங்களிப்பு இன்றியமையாதது.
இன்று ஒவ்வொருவரும் தங்கள் சொந்தப் படைப்புக்களை பத்திரிகை சஞ்சிகைகளில் வெளியிடுவதிலும் பார்க்க முகநூலில் பதிவிடுவதனையே அதிகம் விரும்புகின்றனர். அத்தோடு பத்திரிகையில் வந்த படைப்பையும் கூட முகநூலிலே பகிர்வதைக் காண முடிகின்றது. ஏனெனில் அதில் கிடைக்கப் பெறுகின்ற லைக்குகளும் பின்னூட்டங்களும் படைப்பாளிகளை ஊக்குவிப்பதோடு, படைப்பாளிகள் தாங்கள் விடும் தவறுகளை உடனுக்குடன் கழைந்து தங்களை வளர்த்துக் கொள்ளவும் ஏதுவாக அமைகின்றது.
நானும் கூட எனது கவிதைகளை முழுவதுமாக  முகநூலில் "கவித்தூறல்கள்" என்ற எனது பக்கத்தில் (Public Profile ல்) பதிவேற்றம் செய்து வருகிறேன்.

08.நீங்கள் கூறியதுபோல முகநூலில் உடனுக்குடன் கருத்துக்கள் பரிமாறப்படுவது உண்மைதான் ஆனால் அவை ஒரு படைப்பாளியை வளர்த்துவிடுகின்றதா அல்லது வெறுமனே போலியான பகட்டாக காணாப்படுகின்றதா?


ஆம். முகநூலைப் பொறுத்தவரை உதாரணமாக எடுத்துக் கொண்டால் சில பிரபல்யங்களுக்கும் பெண் அடையாளத்துடன் காணப்படுவர்களுக்கும் அதிகமான விருப்புக்குகளும் பின்னூட்டங்களும் இடப்படுவதைக் காணலாம். உண்மையிலே இவ்வாறு இடப்படும் கருத்துக்களில் பெரும்பாலானவை போலியாக இருக்கலாம். ஆயினும் ஒரு படைப்பாளியைப் பொறுத்தமட்டில் அவை போலிகளல்ல. அவரது படைப்புக்களை வளர்த்துவிடும் ஒன்றாகவே காணப்படுகிறது. 



09.சமூக வலைத்தளங்களில் பெண்களின் தலைகாட்டல் இன்றுகளில் அதிகமாகவே இருக்கின்றது இதனை சிலர் குறையாக பார்க்கின்றார்கள். இதில் உங்கள் கருத்து?

சமூக வலைத்தளங்களை சிறந்த (நன்மையான) விடயங்களுக்கும் அதே போன்று தீய விடயங்களுக்கும் பயன்படுத்த முடியும்.  அது பாவனையாளர்களின் கைகளிலேயே தங்கியிருக்கின்றது. 
என்னைப் பொறுத்தவரை அநேகமாக தற்போது பெண்களும் சமூக வலைத்தளங்களைப் பாவிப்பதென்பது அவர்களின் சமத்துவத் தன்மையையே எடுத்துக் காட்டுகின்றது. சமூக வலைத்தளங்களைப் பாவிக்கின்ற ஒரு சில பெண்கள் செய்கின்ற தவறுகளை வைத்து ஏனையவர்களையும் தப்பாக நாம் எடை போடுவது தவறு.
ஆயினும் பெண்கள் போலி ஐடிகளை நண்பர்கள் பட்டியலில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்தல்,  தப்பான அல்லது குழப்பம் விளைவிக்கக் கூடிய பதிவுகளை தவிர்த்தல், தங்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதையும் தவிர்த்துக் கொள்ளல் சிறந்தது, ஏனெனில் அதனை தப்பான வழிமுறையில் அடுத்தவர்கள் பாவனைக்குட்படுத்த முடியும். எனவே பெண்கள் தத்தமது மத விழுமியங்களை மீறாதவாறும் தங்களுக்கென ஒரு கட்டுக் கோப்புடனும், ஒழுங்குமுறையில் தங்களது பாவனைகளை அமைத்துக் கொள்வதும் சாலச்சிறந்தது. 

10 .பெண்களின் சுதந்திரம் எதுவரை இருக்கவேண்டும், அவர்களின் திறமைகள் எவ்வாறு வெளிப்படுத்தப்பட வேண்டும் என நினைக்கின்றீர்கள்?

பெண்கள் சுதந்திரமென்பது அவர்களின் உரிமை. ஆகவேதான் ஆண்களைப் போன்றே பெண்களுக்கும் சம அந்தஸ்த்து வழங்கப்பட வேண்டும். ஆயினும் ஒருவரது உரிமை அடுத்தவரின் உரிமைக்கு இடையூறு விளைவிப்பதாய் அமையக்கூடாது. 
எனவே பெண்கள்அவர்களது திறமைகளை உரிய முறையில் அடுத்தவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு வெளிப்படுத்த சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்.


11. நீங்களும் வெளிநாட்டில் தொழில் புரிந்தவர் என்ற வகையில், தொழில் நிமித்தம் அங்குள்ள எம்மவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி?

குடும்ப உறவுகளைப் பிரிந்து, சுக துக்கங்களில் பங்கு பற்றவும் முடியாமல் தங்கள் மனக் கவலைகளை வெளிக்காட்டிக் கொள்ளவும் முடியாமல் பணத்துக்காய் பாசாங்கு செய்கின்ற (மாரடிக்கின்ற) ஒரு வாழ்க்கையே வெளிநாட்டு வாழ்க்கை.
உண்மையில் வெளிநாட்டில் தொழில் புரிகின்ற அனைவருக்குமே சந்தோசங்களைவிடக் கவலைகள்தான் அதிகமென்றே கூற வேண்டும். நான் கட்டாரில் பணி புரிந்த காலகட்டங்களில் கல்பு லைபு (Gulf Life) எனும் கவித் தொடரில் எம்மவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி அதிகம் எழுதியிருக்கின்றேன்.


12. தொழில் கிடைக்காத இளைஞர்களுக்கு நீங்கள் தரும் நம்பிக்கை அல்லது ஆலோசனைகளை கூற முடியுமா?

ஒவ்வொருவரும் தாம் விரும்பும் (தனது திறமைக்கும் தகமைக்கும் ஏற்ற) தொழிலைச் செய்வதற்கு எதிர்பார்த்து காத்திருக்கின்ற தருணமே 'தொழிலின்மை' ஆகும். தனது திறமைக்கேற்ற அல்லது தனக்குப் பிடித்த தொழில் கிடைக்கும் வரை தன்னால் முடியுமான வேறு ஏதேனுமொரு தொழிலினை செய்து சிறு வருமானத்தையேனும் ஈட்டுவாராயின் தொழிலின்மை என்ற பிரம்மையினை ஒழிக்க முடியும். அத்தோடு கையேந்துதல்களின்றி தனது சிறு தேவைகளையேனும் தானே பூர்த்தி செய்து கொள்ளக் கூடிய நிலையும் ஏற்படும்.
தண்டச்சோறாய் இருந்துகொண்டு தனது திறமைக்கேற்ற தொழிலை தேடுவதிலும் பார்க்க சுயதேவைப் பூர்த்திக்காவேனும் சிறு தொழிலைச் செய்து கொண்டு, முன்னேற்றத்துக்கான அடுத்த இலக்கை தேடுவதே சிறந்தது. ஆகவே என்னைப் பொறுத்தமட்டில் தான் செய்வதற்கு எந்த தொழிலும் இல்லையென யாரும் கூற முடியாது.


13. எவ்வகையான கவிதைகளை படைக்க விரும்புகின்றீர்கள்?

சமூகக் கவிதைகளை எழுதுவதிலேயே எனக்கு அதீத ஈடுபாடு இருக்கின்றது. ஏனெனில் அவை சமூகத்திற்கு ஒரு செய்தியை எடுத்துச் சொல்வதாகவும் கருத்தாழமிக்கதாகவும் அமைந்துவிடுகின்றது.



14. உங்கள் கவிதைகள் பாராட்டுப்பெற்ற சந்தர்ப்பம்? அப்போது உங்களுடைய மனநிலை?


என்னுடைய கவிதைகளில் ஆழமான கருத்தும் படிப்பினையும் இருப்பதாக என்னுடைய கவிதைகளை படித்தவர்களில் பெரும்பாலானோர் என்னிடம் நேரடியாகவும் முகநூலிலும் கூறியிருக்கின்றார்கள். அந்த வகையில் நான் இறைவனுக்கு நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன். அடுத்தவர்களின் வாழ்த்துக்களும் பின்னூட்டங்களும் எப்போதுமே மனதை மகிழ்வித்து ஊக்கப்படுத்தும் தருணங்கள்தான்.


15. நீங்கள் ஆத்திரப்பட்ட, வேதனைப்பட்ட ஏதேனும் ஓர் சமூக அவலம் உள்ளதா? அதைப்பற்றிய எழுதிய அநுபவம்?


இன வெறியர்களால் பர்மாவிலும் அதே போன்று நம் நாட்டிலும் அநியாயமாக அப்பாவிகள் கொல்லப்பட்ட, சித்திரவதைப்படுத்தப்பட்ட தருணங்களில் நான் எழுதிய கவிதைகளின் இணையத்தள முகவரிகளிவை...
http://www.sonakar.com/?p=54054
http://srilankamuslims.lk/இலங்கையர்-என்ற-நாமம்-கொள-2/



16. கவிதை நூலினை வெளியிடும் உத்தேசம் உள்ளதா?

இன்ஷா அல்லாஹ் விரைவில் நூல் ஒன்றை வெளியிடுவதற்காக என்னுடைய கவிதைகளை தொகுத்துக் கொண்டிருக்கின்றேன். தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் அனுசரணையில் 'சிந்தையில் சிக்கிய சுவடுகள்' எனும் கவித் தொகுப்பை வெளியிடலாமென உத்தேசித்திருக்கிறேன்.

17. நீங்கள் பங்கெடுத்துள்ள இலக்கிய நிகழ்வுகள் பற்றி?


இலக்கிய நிகழ்வுகளில் பங்கு கொள்வதற்கான விருப்பமும் சந்தர்ப்பங்களும் இருந்த போதும், என்னுடைய தனிப்பட்ட வேலைகள் காரணமாக பங்குபற்ற முடியாமல் போனது. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் கலை இலக்கிய நிகழ்வுகளில் தவறாமல் பங்கு கொள்ள எண்ணியிருக்கின்றேன்.
18. வலைத்தளங்களில் உலவும் கவிதைகள், அத்தளங்களின் போட்டிகளில் வெற்றிபெறும் கவிதைகளின் தரம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?


என்னைப் பொறுத்த வரையில் வலைத்தளங்களில் சில பிரபல்யமான அமைப்புக்கள் போட்டிகளை நடத்தி முறையான தெரிவுகளை மேற்கொண்டு பரிசில்களையும் சான்றிதழ்களையும் வழங்குவது வரவேற்கத்தக்கது.  
ஆயினும் அதே போன்று தனிப்பட்டவர்கள் பலர் தானும் போட்டி நடத்த வேண்டுமென எண்ணி போட்டிகளை நடத்துவது, கவிதைப் போட்டியின் மகத்துவத்தை குறைப்பதொன்றாகவே அமைகின்றது.

19. இலங்கை படைப்பாளிகள், இந்திய படைப்பாளிகள் உங்களின் பார்வையில்?

இந்தியப் படைப்பாளிகளுக்கு சமமான, அவர்களுக்கு எந்த வகையிலும் குறையாத படைப்பாளிகள் இலங்கையிலும் இருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கான தளங்கள் கிடைக்கப் பெறாமையினால் அவர்களது திறமைகளும் படைப்புக்களும் மேடையேறாத இலைமறை காய்களாகவே இன்னும் பலர் இருக்கின்றனர்.
இந்தியப் படைப்பாளிகளுக்கான தளங்கள் தாராளமென்பதால் அவர்களின் திறமைகளும் படைப்புக்களும் வெகு சீக்கிரமாக வெளிக்கொணரப் படுகின்றது.
எனவே இலங்கை இந்தியப் படைப்பாளிகள் இரண்டறக் கலக்கும் இலக்கிய விழாக்களை நடத்தும் சர்வதேச அமைப்புக்கள் இது குறித்து  அதிக கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் படைப்பாளிகள் தங்களது படைப்புக்களை பகிர்ந்து கொள்ளவும் ஆற்றல்களை வளர்த்துக் கொள்ளவும் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படும் என்பதே எனது எதிர்பார்ப்பு.
20. இலக்கியம் தவிர்ந்த உங்களது ஏனைய திறமைகள்?

சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளை எழுதிவிட்டு விடுமுறையில் இருந்த காலகட்டங்களில் அதிகமாக ஓவியம் வரைவதை பொழுது போக்காக கொண்டிருந்தேன். அத்தோடு சில சந்தர்ப்ப சூழ்நிலைகளில் கவிதையினால் எடுத்துச் சொல்ல முடியாத செய்திகளை கட்டுரை செய்தியாகவும் இணையத்தளங்களுக்கு அனுப்புகிறேன்.


21. வளரும் கலைஞர்களோடு பகிர்ந்துகொள்ள நினைப்பதும், இணைய வாசகர்களோடு மனம் திறக்க நினைப்பது?

உலகில் பிறந்த யாவருமே அறிந்தும் அறியாமலும் ஒவ்வொரு துறையிலும் திறமைசாலிகளே. திறமைகள் இறைவனின் அருட்கொடைகளென்றே சொல்ல வேண்டும். சக கலைஞர்களோடு எமது படைப்புக்களை பகிர்ந்து கொள்வதன் மூலமும் சக கலைஞர்களின் படைப்புக்களையும் நாம் நோக்குவதன் மூலமும் மற்றும் போட்டிகளில் பங்குகொள்வதனாலும் எமது திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள முடியுமென்பதில் ஐயமில்லை.



No comments: