Saturday, January 28, 2012

மழை நதி கடல் கவிதை தொகுப்பு மீதான எனது ரசனைப்பார்வை





 "மழை நதி கடல்" எனும் இயற்கையின் நாமம் சூட்டி இயற்கையை மொழிபெயர்த்திருக்கும் மிக இயற்கையான மொழிநடையில் வாழ்வின் அங்கங்களை வடித்த ஓர் அழகிய கவிதைத்தொகுப்பு, அட்டாளைச்சேனை கவிஞர் இனியவன் இஸாறுதீன் அவர்களுக்கு சொந்தமானது. இந்த அற்புத கவிதைகளை வாசித்துமுடித்த போது மனம் ஆனந்தக்கூத்தாடியது. அத்த‌னை அற்புதம் அத்தனை அதிசயம்.
    "நான் புறப்பட்ட இடம் நீ
    உன்னிடமே வந்து
   சேரப்போகின்றேன் நீ
   எங்கிருக்கின்றாய் இறைவா? என்ற வினாவோடு தனது ஆரம்ப கவியான 'இறைவா உன்னிடம்' என்ற தலைப்பில் வினவியிருந்தாலும் கவிஞர்,
      "மழையில்
      உன் அருளைக்காண்கின்றேன்
      மின்னலில்
      உன் கையெழுத்தைக்
     காண்கின்றேன்" என இயற்கையின் ஒவ்வொரு அசைவுகளிலும் இறைவனை காணும் விதத்தினை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். இயற்கையை மாத்திரம் இவரது கவிவிரல்கள் தொட்டுக்காட்டவில்லை ஒவ்வொரு உறவுகளையும் பாசப்பிணைப்புக்களையும் இந்த தேசத்தில் யுத்தம் செய்த கொடூரங்களையும் தமிழரின் அவல நிலமைகளையும் கவிஞர் பேசும்போது உணர்வுகள் கொந்தளித்துப்போகின்றது. இதனை தனது தொன்னூற்றொரு தலைப்பின் கீழும் வெளிப்படுத்தியிருக்கும் விவேகம் வியக்கவைக்கின்றது.
தாய்மையை சொல்லும் போதும் தாரத்தினை சொல்லும்போதும் கவிஞரின் கவிதைகள் எந்தளவிற்கு பெண்மையை மதிக்கின்றது போற்றுகின்றது என்பது அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கின்றது.
    " தாய்தான் எல்லாம்
     அவள்தான்
     இரக்கத்தின் சிகரம்
    பாசத்தின் சமூத்திரம்
    மானுடத்தின் நதிமூலம்" என்று தாய்மையினை உச்சத்தில் வைத்து போற்றும் அவர், 'தாய்','தந்தை' எனும் தலைப்பில் இருவரையும் பாடியிருக்கும் அதேவேளை 'தமிழாசிரியருக்கு' என்ற கவிதை வரிகள் எம்மையெல்லாம் நம் பாடசாலைக்காலத்திற்கே சுமந்து செல்கின்றது.

பொதுவாக கவிஞர்களின் வரிகளில் காதல் தோல்விக்கு பெண்களே காரணமென்று அவர்களை குற்றஞ்சொல்லும் அல்லது பழிக்கும் விதமாகவே கவிதை புனைதிருப்பர்கள். ஆனால் இக்கவிஞரின் கவிதைகளில் எந்த இடத்திலும் பெண்மையை பழிக்கும் வரிகளை பார்க்கவேயில்லை. இங்குதான் கவிஞரின் தாயுள்ளம் பிரகாசித்து நிற்கின்றது.இதற்கு அடையாளமாக 'மணமங்கைக்கு', 'தாரம்' போன்ற கவிதைகளை சுட்டிக்காட்டலாம்.
   "நான்
   குறிஞ்சிப்பூவை மட்டும்
   கொள்ளை கொள்பவன்
  ஏனெனில் அது
  மலைஜாதி மலர் என்பதற்காக மட்டுமல்ல‌
  மலர்களில் அபூர்வமலர் என்பதற்காகவும்தான்" என்றும்
      " என் பிரியமானவளே
      என் பிராணவாயுவே
      உன் கவிதை தன்னை
      என் கரங்களால் வரைந்தாலும்
      உன் மகத்துவம் சொல்ல‌
      என் கவித்துவம் போதாது" என்றும் பெண்மையை அலங்கரித்த கவிஞரை வாழ்த்துவதில் தவறேதுமில்லை.
இந்த தேசத்தை கூறுபோட்டு சிதைத்த யுத்தத்தின் காயங்களை 'மரணித்துக்கொண்டிருப்பவனா? மரணத்துள் வாழ்பவனா?' 'ஒரு கைதியின் பாடல்','சுதந்திரம்' போன்ற தலைப்புக்களில் ஆதங்கப்பட்டிருக்கின்றார்.
    "உள்ளே இருக்கவிடாமலும்
    வெளியே போகவிடாமலும்
    என்னைத்தடுக்கின்றது
   மரண பயம்" என்று ஒட்டுமொத்த அவலத்தினையும் நான்கு வரிகளுக்குள் அடக்கிவிட்டிருக்கின்றார்.கனத்துப்போன இதயத்துடன் வாசித்துக்கொண்டிருக்கையில் விழி நீர் கோர்த்துக்கொள்கின்றது. இவ்வாறு வேதனையின் விம்பங்கள் கவிதையில் தெளிக்கப்பட்டிருந்தாலும் சமத்துவத்தினையும் உரிமையினையும் சுதந்திரத்தையும் வலியுறுத்தி 'சுதந்திரம் வேண்டும்' என்ற கவிதையில் உக்கிரமக்க போரிட்டிருக்கின்றார்.
கவிஞரின் இந்த மனஆதங்கங்கள் நிறைவேறவேண்டுமென்று ம‌னம் பிரார்த்தித்துக்கொள்கின்றது.

எமது சமூகத்தில் காணப்படும் பல்வேறு களைகளுள் முக்கியமாக காணப்படுவது சீதனப்பிரச்சனையே.இதனை விபச்சாரம் என்று கண்டித்திருப்பது
    "ஆடையணிந்து கொண்டு
    ஆபாசம் விற்கின்றோம்
    சீதனம் வாங்கியே
   விப‌ச்சாரம் செய்கின்றோம்" என்ற வரிகள் உள்வாங்கமுடிகின்றது. பெண்களை வெறும் போகப்பொருளாகவும் தேவைக்கு உபயோகிக்கும் சாதனமாகவுமே பார்க்கும் இச்சமூகத்தில் ஆண் பெண் சமத்துவத்தினை விதைத்திட மிகவும் முயற்சிசெய்கின்றார் கவிஞர்.'எயிட்ஸ்', 'கற்பு என்பது' எனும் தலைப்பினூடாக காதலின் உன்னதத்தினையும் காமத்துன் அருவருப்புக்களையும் அருமையாக படம் பிடித்துக்காட்டி பெண்மையை போற்றியிருக்கின்றார் கவிஞரின் வரிகளினூடாக சமுகம் தன்னை அவதானித்தல் சிறந்த ஓர் ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப உதவிசெய்யும்.
ஆறறிவு பெற்ற மனிதனே படைப்புக்களில் உயர்ந்த படைப்பென்று நாம் நினைத்துக்கொண்டிருக்கையில் 'நெற்கதிகளே' 'மண்புழுக்களே' 'சுமைதாங்கி' 'எறும்புகளின் ராச்சியம்''மரம்' பூக்கள்' எனும் தலைப்புக்களில் அந்த எண்ணத்தினை தவிடுபொடியாக்கி விட்டிருக்கின்றார்.விலங்குகளிடமும் இயற்கையிடமும் இருக்கும் மனிதப்பண்புகள் மனிதனிடம் இல்லாததை அத்த்னை வலிமையாக வெளிப்படுத்தியிருக்கின்றார்.அதிலும் 'சிலந்தியுடன் ஒரு செவ்வி'என்ற கவிதையில் மனிதனுக்கு அருமையான போதனை சொல்லப்பட்டிருக்கின்றது.
   " விடாமுயற்சிதான்
   திருவினையாக்கும் என்பது
  எங்கள் நம்பிக்கை" என சிலந்தி சொல்லுவதாய் ஒரு ஆய்வினை செய்துகாட்டி மனிதனை தவிர மற்ற எல்லாவற்றிற்கும் மனிதப்பண்புகள் இருப்பதை எடுத்துக்கட்டியுள்ளார்.
கவிஞர்களால் மட்டும்தான் கவிதை எழுத முடியுமா உன்னாலும் கவிதை எழுத முடியும் என 'உனக்கும் கவிதை வரும்'என்ற கவிதையில்
"உள்ளத்தின் பாதிப்பில்
உணர்ச்சிகளின் பூரிப்பில்
உயிர்ப்புற்ற கருப்பொருளின் பாலிப்பில்
சிந்தித்துப்பார்
உனக்கும் கவிதை வரும்" என்று அனைவரையும் கவிதை எழுத அன்போடு அழைக்கின்றார். அடடா நம்மாலும் கவிதை எழுதமுடிந்துவிடுமா என வாசகனையும்கூட கவிஞனாக்கிப்பார்க்க ஆசைப்படுகின்றார். அதிலும் மனிதனின் பருவங்கள் மூன்றிலும் கவிஞனை காணும் விதம் அடடா என ஆச்சரியப்பட வைக்கின்றது.
 " கிழவனைப்போல சிந்தித்து
 குழந்தையாய் வாழும்
வாலிப மனிதன்" என்று அதனை வரிகளாக்கி எம்மையும் அதிசயப்பட செய்துவிட்டார்.
இவ்வாறு இயற்கையோடு ஒன்றிப்போன கவிஞரின் தொகுப்பின் இருதி கவிதைகள் மீண்டும் இலங்கையின் கோரமான காயங்களை தொட்டுப்பார்த்திருக்கின்றது.
" பூமி காத்திருந்தது
 பூப்பறிக்கும் விதைகளுக்காக‌
விழுந்ததென்னவோ
இரத்தத்துளிகள்" என்ரு வேதனையை வரிகளாக்கிய கவிஞர்,
 " எத்தனை துயர் வந்தாலும்
புன்னகையில்
முகம் கழுவிப்பார்
புதுப்பொழிவு உன்னில்வரும்" என நம்பிக்கையூட்டி எம்மை உற்சாகப்படுத்திவிட்டிருக்கின்றார்.புத்தகத்தின் கடைசி ஏட்டில் விரல்படும் வரையில் விரயமில்லாத ஓர் உயரிய அநுபவத்தினை தந்திருக்கும் இத்தொகுப்பின் கவிதைகள் தனித்துவத்துடன் வேறுபட்டு நிற்கின்றது.

கண்களாலே தரிசிக்கமுடியாத கரடுமுரடான வார்த்தைகளை கொண்டு புனையும் எத்தனையோ கவிதைத்தன்மையினை உடைத்துக்கொண்டு அதனை விடுவித்து, கருத்தை கவர்ந்திழுக்கும் எளியநடையில் எல்லாரும் அறியக்கூடிய வகையில் இருக்கும் மொழிநடை, வாசகனை பரவசப்படுத்துகின்றது.கவிதைகளை வாசித்து முடித்ததும் அமைதியான மன இயல்பும், திருப்தியையும் உணரக்கூடிய ஓர் அருமையான கவிதைத்தொகுப்பு இவ்வியற்கை கவிஞரின் அற்புதமான படைப்பு.

எளிமையிலே இயற்கையையும் அதனூடாக இதயத்தினையும் தொட்ட கவிஞருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

நன்றி
த.எலிசபெத்

No comments: