Saturday, September 17, 2016

கல்குடா நேசனின் 47வது படைப்பாளி சஹாப்தீன் முகம்மது சப்றீன்

http://kalkudahnation.com/51353

வாரா வாரம் கல்குடாநேசன் இணைய நேர்காணலுடன் பல படைப்பாளிகள், கலைஞர்கள், கவிஞர்களைச் சந்தித்து வருகின்றோம். அவர்களின் திறமை, ஆளுமையினை வெளிக்கொணர்வதோடு, படைப்பாளிகளின் பல்வேறுபட்ட கருத்துக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றோம். 

அந்த‌ வகையில், இவ்வாரமும் ஒரு இளம் படைப்பாளியைச் சந்திப்பதில் பெருமிதமடைகின்றோம். கல்குடா நேசனின் 47வது படைப்பாளியாக இணைகிறார் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை  மாவட்ட  அட்டாளைச்சேனையூரைச்சேர்ந்த  கவிஞரும் பாடலாசிரியருமான  வளர்ந்துவரும் இளம் படைப்பாளி சஹாப்தீன் முகம்மது சப்றீன்   அவர்கள்.

மிக இளவயதில் தனக்கான  இடத்தினை தக்கவைத்துக்கொள்ள போராடும் ஓர்  துடிப்புள்ள இளைஞனை   இவ்வார  நேர்காணலுக்காக சந்தித்தோம்  அவரது  முழுமையான  கருத்துக்கள் இதோ







01.தங்களைப்பற்றி? 

எனது பெயர் சஹாப்தீன் முகம்மது சப்றீன்
இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாரை மாவட்ட கரையோரப் பகுதியின்  அட்டாளைச்சேனையூரில் பிறந்தேன்.   அட்டாளைச்சேனை முஸ்ஸிம் மத்திய மகா வித்தியாலையத்தில்சாதாரண தரம் வரை படித்தி விட்டு அக்கரைப்பற்று நெனசலா அறிவகத்தில் உடல் நலம் மற்றும் பாதுகாப்பு பொரியிலாளர்  டிப்ளோமாவை முடித்து விட்டு தற்போது மத்திய கிழக்கில் பணி புரிகின்றேன்.


02. கலைத்துறையில் ஈடுபாடு எப்படி ஏற்பட்டது? 

சிறிய வயதிலிருந்தே. முடிவெட்டும் சலூன் கடைகளுக்கு போனால்
பத்திரிகையில் வெளிவரும் கவிதைகள் கட்டுரைகள் மற்றும் கதைகளை வாசிப்பதுண்டு 

பருவ வயது வந்ததும் 
பத்திடிச்சு காதல் குச்சி
காயம் நூறு கண்டதும்
முத்திடிச்சு  கவிதை உச்சி

எனக்குள்ளே பல சோகங்கள்
அதுக்குள்ளே சில ஏமாற்றங்கள்
இவைகளை உடைத்தேன்
இலக்கியத் துறையால்
என் பயணத்தைத் தொடர்ந்தேன்.



03. நீங்கள் ஈடுபடும் இலக்கியத்துறைகள் பற்றி?

ஆரம்பத்தில் இருந்தே கவிதைகளை முகநூல் வாயிலாகத்தான் எழுதிவந்தேன்
பலராலும் பார்வையிட்டு பல வாழ்த்துக்களும் ஊக்குவிப்புகளும் குவிந்தன பத்திரிகையிலும் இணையத்தளத்திலும் எனது படைப்புகளை வெளியிட்டு எனது முகநூல் உள்பெட்டிக்கு  அனுப்பியும் வைப்பார்கள் எனக்கு ஆர்வம் அதிகமாக வந்தது 
இளம் கவிஞர் என அழைத்தார்கள் இசையமைப்பாளர்கள் கவி வரிகளை பார்த்து விட்டு அவர்களது இசையில் பாடல் எழுதும் வாய்ப்புகளையும் வழங்கினார்கள் அதனை சரியாக பயன்ப‌டுத்தினேன் நான் எழுதிய பாடலுக்கு வரவேற்பு ரொம்பவே கிடைத்தது இளம் பாடலாசிரியர் என அழைத்தார்கள் தற்போது இவை இரண்டுக்கும் அதிகம் ஈடுபாடாக இருக்கிறேன்.





 04. கவிஞர் பாடலாசிரியர் இந்த இரு முகங்களுக்கும் எவ்வாறான ஒற்றுமை வேற்றுமை காணப்படுகின்றது? 


கவிதைகள் பாடல்கள் இரண்டுமே ஒரு கருவை வைத்துதான் அமையும் அதனாலே  அதில் ஒற்றுமை காணப்படுகிறது
ஒரு கருவை வைத்து எழுதி விட்டு அதனை பந்தியாக அமைத்தால் கவிதையாக இனம் காணப்படும் ஆனால் பாடல் எழுதும் போது அதற்கு அதிகம் விதி முறைகள் உள்ளன பல்லவி அனுபல்லவி சரணம் போன்றவை வார்த்தையில் சந்தம் அதிகம் இருக்க வேண்டும் இசைக்கு எதிராக அமைய வேண்டும் இதில் வேற்றுமை உள்ளது.


05. உங்கள் முயற்சியில் உருவான பாடல்கள் பற்றி?

தனது ஊரிலே தேசிய மட்டத்தில் 
பல சாதனைகள் படைத்த சோபர் என்று அழைக்கப்படும் ஒரு விளையாட்டுக் கழகம் உள்ளது சமூகத்துக்கு உதவி செய்வதில் அதிகம் ஈடுபாடாக இருப்பதுடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கள் வழங்க அதிகம் சந்தர்பங்களையும் வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுப்பார்கள் அந்த விளையாட்டுக் கழகத்துக்கே எனது சொந்த முயற்சியில் நடையில் வீரம் பயிற்சியின் தேகம் என்று ஆரம்பிக்கும் துள்ளலான பாடலை எழுதி முகநூல் வாயிலாக வெளியிட்டேன் அதிகமான ரசிகர்களின் பார்வைக்கு எட்டியது
அதன் பிறகு தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர் திரு. கபிலேஷ்வரின் இசையில் காதல் பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது அதனையும் வெற்றிகரமாக எழுதினேன் பலதரப்பட்ட தமிழ் வானொலிகளில் அந்த பாடலை வெளியிட்டு நல்லதொரு வரவேற்பு கிடைத்தது அந்த பாடலுக்கு மிக விரைவில் ஒரு  அங்கிகாரம் கிடைக்க போவதாக ஒரு விருது வழங்கும் தரப்பினர் பேசிக் கொண்டார்கள் சந்தோஷப்பட்டேன் இப்படி இன்னும் மூன்று பாடல்கள் வெளிவர இருக்குது காதல் மற்றும் கிராமத்து காதல் பாடல்கள் அடுத்தடுத்து வெளியிட இருக்கிறோம்.



06. உங்களது கலைத்துறை பயணத்திற்கு உந்துசக்தியாக இருப்பவர்கள்?

மிகவும் முக்கியமானதொரு கேள்விக்கு வந்திருக்கிங்க சகோதரி  எனது முகநூல் தான் எனது இலக்கியத் துறைக்கு முதல் படி அதற்காக முகநூல் நிறுவனர் மார்க்குக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன்.

எனது கவிதைகளை விரும்பி படிக்கும் முதல் ரசிகன் எனக்குள்  இருக்கும் திறமைகளை  வெளிக்கொண்டு வருவதற்கு பல ஆதரவுகளை வழங்கும் எனது உடன் பிறந்த சகோதரர் ஆசிரியர் ஜெஸீல் சகோதருக்கும் நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறேன் இத்தருணத்தில். அத்தோடு மிகவும் முக்கியனது இது என்னை இந்த உலகத்துக்கு அறிமுகப்படுத்தி வைத்த எனது இலக்கிய ஆசான்
தற்போது தென்னிந்திய திரைப்படங்களில் சூப்பர் ஹிட் பாடல்கள் எழுதி  கலக்கிக் கொண்டு இருக்கும் ஈழத்து கவிஞர் பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மின்தான் எனக்கு பல சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் வழங்கி என்னையும் இந்த உலகில் மின்ன வைத்தார் அவர் மூலம்தான் பல தென்னிந்திய  இசையமைப்பாளர்கள் பாடகர்கள் இயக்குனர்கள் போன்ற பல கலைஞர்களுடன் அறிமுகம் ஆனேன் அவருக்கு நன்றிகள் ஈடாகாது ஆனாலும் காலத்தை நம்புகிறேன் அவருக்கு ஈடுகொடுப்பதை எண்ணி தேடுகிறேன் எதயோ ஆனாலும் இத்தருணத்தில் நன்றிகள் கோடி என் ஆசானுக்கு.




 07.உங்களது பாடல்களுக்கு எவ்வாறான அங்கிகாரம் கிடைத்தது? 


தற்போது மத்திய கிழக்கில் பணி புரிவதால் அங்கிகாரத்துக்கான சந்தர்ப்பத்தை நான் தேட வில்லை ஆனாலும் பல போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு போட்டியிட்டு பல பரிசுகள் எனது வீட்டுக்கதவை தட்டியதுண்டு அதில் அதிகமான பரிசுகள் இந்தியாவில் இருந்து வந்ததுண்டு. ஆனால் ஒரு பாடல் எழுதி அதனை இலக்கிய சொந்தங்களுடன் பகிர்ந்து கொள்வதால் வாய்ப்புகளை பெற்று கொண்டு வருகிறேன் ஒரு நிலையான அங்கிகாரம் மிகவிரைவில் வரும் என நம்புகினேன்.

08.நீங்கள் எதிர்கொண்ட விமர்சனங்கள் பற்றி?

ஆரம்பத்தில் கவிதைகளை எழுதி முகநூலில் வெளியிட்டேன் 
அதனை பார்த்துவிட்டு எனது நண்பர்கள் எங்கு திருடிய கவிதையிது என கேட்டார்கள் சிலர் வைரமுத்து பாவம்டா ஏன்டா அவர்ர கவிதையெல்லாம் கொப்பி பண்றாய் என்று சொன்னவருக்கெல்லாம் நான் சொன்னேன் நான் எதுவும் சொல்ல மாட்டேன் அதிகம் இயற்க்கையோடு பேசிக் கொள்கிறேன் உங்களுக்கு
காலம் பதில் சொல்லும் என்றேன்நான் சொன்னது போன்று காலம் பதில் சொல்லிவிட்டது சொல்லிக் கொண்டே இருக்குது. புரிந்தவர்கள் மன்னிப்போடு வாழ்த்து சொன்னார்கள்.


09-தங்களது கவிதை நூல் வெளியீடு பற்றி? 

எனது கவிதைகள் அடங்கிய எனக்குள் நான் என்ற பெயரில் 
நான் தாயம் சென்றதும் தனது சொந்த ஊரிலே எனது முதலாவது நூல் வெளியிட இருக்கின்றேன் 
ஆதரவுக்கு பஞ்சம் இல்லை என நினைக்கிறேன் வெற்றிகமாக நூலை வெளியிடலாம் என நம்புகிறேன்.


10.உங்களது கவித்திறமை மொழியாளுமையை வளர்த்துக்கொள்ள நீங்கள் எவ்வகையான முயற்சிகளை மேற்கொள்கின்றீர்கள்?

எனது திறமைகளை வளர்ப்பதற்க்கு நான் அதிகம் புத்தகங்களை வாசிப்பேன் ஒரு கலைஞர் மேல் உயர்ந்து போவதற்க்கு அடிப்படையாக அவர்கள் வாசிப்பை நேசிக்க வேண்டும் அந்த வாசிப்புதான் நாளை அவர்களை வாசிக்கும்.
எனது தேடலில் அதிகம் வாசிப்புதான் அந்த வாசிப்புதான் என்னை மேல் உயர்த்தும்.


11.எவ்வகையான நூல்களை வாசிக்கின்றீர்கள்? உங்களைக்கவர்ந்த எழுத்தாளர்?

நான் அதிகம் கவிஞர்  பொத்துவில் அஸ்மின் அவர்களது
நூல்களை விரும்பி வாசிப்பேன் புதுமையான வரிகளை கொண்டு அருமையன கருவை உருவாக்கி
படைப்பார் எவ்வகையான தரப்பினர் என்றாலும்  அவர்கள் இளகுவாக வாசித்து புரிந்து கொள்வார்கள் மரபுக்கவிதையில்
மறைந்து இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கவிஞர் பொத்துவில் அஸ்மினின் நூல்களை வாசித்தால் புரியும்.
கவிஞர் வைரமுத்து, மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார்,இவர்களின் படைப்புகளை விரும்பி வாசிப்பேன். நான் வாசிப்பில் நூல் வகைப்படுத்துவது இல்லை கிடைக்கும் நூலை எனக்குள் வாசித்து அடக்குவேன்.



12.மிக இலகுவாக இணையவழி போட்டிகளில் பரிசுகள் விருதுகள் கிடைக்கின்றது இது எத்தனை காத்திரம் என நினைக்கின்றீர்கள்?

முழுமையாக சொல்லப்போனால் இவ்வாறான போட்டிகளுக்கு நான் அதிகம் போட்டியிடுவதில்லை எனக்கு நேரம் கிடைத்தால் அந்த நேரத்தில் வாய்ப்புகள் இருந்தால் போட்டி விதிமுறைகளை அறிந்து கொண்டு நான் போட்டியிடுவேன் ஆனாலும் சிலர் நன்றாக செயற்படுகிறார்கள்  கவியுலகப் பூஞ்சோலை,ஒரு கவிஞனின் கனவு போன்ற சில அமைப்புகள் நன்றாக செயற்படுகிறார்கள் சிலர் ஒரு குழுவாக இருந்து கொண்டு அவர்கள் இவ்வாறான போட்டிகள் நடாத்தி கலைஞர்களுக்கு அழைப்பு விடுத்து அந்த கலைஞர்களை போட்டியிட வைத்து ஏற்பாட்டு குழுமத்தில் உள்ளவர்களுக்கே அதிகம் பரிசு வழங்குவதை என்னால் காணக்கூடுது இவர்கள் ஏன் இவ்வாறு செயற்படுகிறார்கள் என்றால் அவர்களது வளர்ச்சியை பட்டை தீட்டவே இந்த முயற்சி என கூறலாம்.





13.காதல் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க காரணம் என்ன?

இன்றைய தலைமுறைக்கு காதல் பாடல்கள்தான் அதிகம் பிடிப்பதுண்டு
எந்த தலைமுறையென்றாலும் காதலை ஓரம் கட்ட முடியாது நான் காதலின் வலிகளை நன்கு உணர்ந்தவன் என்னைப் போல் பலர் காதலின் வலிகளை சுமந்து கொண்டுதான் இருக்கின்றனர்
என்னை எழுத வைத்ததும் காதல்தான் காதலுக்கு பெற்றோர்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது ஏன்  காதல் ஏமாற்றம் எதனால் ஏற்படுகின்றன இவ்வாறான விடயங்களை பாடல் மூலம் காதலர்களுக்கும் பெற்றோர்களும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்பதே எனது முயற்சி அதனாலே அதிகம் காதல் பாடல்கள் எழுதுகிறேன் நான் பாடல் எழுதும் போது எவ்வாறான கதை வருகின்றதோ அந்த கதையினை பாடலுக்குள் கொண்டு வருவதுதான் எனது முயற்சியும் காரணமும்.

14.பெரும்பாலும் எம்நாட்டு பாடலாசிரியர்கள் தென்னிந்திய திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதையே பெரிதும் விரும்புகின்றார்கள் இது ஏன்? 

எமது நாட்டில் எந்த துறைகளை எடுத்தாலும் அதற்க்குள் அரசியல் நுளைந்து திறமைகளை சீரழித்து விட்டு படைப்பாளிகளை படுக்கவைப்பதும் பழிவாங்குவதுமாகவே இருக்குது
இலங்கையில் எந்த ஆட்சி வந்தாலும் இந்த செயல் நிறுத்தப்போவதில்லை  இப்படியான செயல்களால்தான் இலங்கையில் உள்ள திறமைசாளிகள் அவர்களது திறமைகளை பறைசாற்ற வெளிநாட்டை நாடுவது இலங்கையில் உள்ள கலைஞர்கள் தென்னிந்திய திரைப்படம் போன்று எடுப்பதற்கு அதிகமான இயற்க்கை வழங்களை வைத்திருந்தும்  போதிய பொருளாதார வசதி இல்லாததால் அவர்கள் தென்னிந்தியாவில் அவர்களின் திறமைகளை பறைசாற்றி அங்கீகாரம் பெறுகிறார்கள்.
இதனால்த்தான் தென்னிந்தியாவை நாடுவதும்
தென்னிந்திய சினிமாவில் பாடல் எழுதுவதும்.


15. தொழிலுக்கு மத்தியில் கவிதைத்துறையில் எப்படி உங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றீர்கள்?

எப்படித்தான் தொழில் செய்தாலும் ஒரு நாளில் இரண்டு மணித்தியாலம் போதும் ஒரு நிலையான கவிஞன் மூன்று சிறந்த கவிதை படைக்கவே அவ்வாறுதான் நான் நேரத்தை சரியாகவைத்து இயங்கி வருகிறேன் அப்பப்போ தூக்கத்தில் உள்ள நேரத்தில் ஒரு மணித்தியாலத்தை  களவாடுவதுண்டு இப்படித்தான் எனது கலைப் பயணம் பயணிக்கிறது.



16. இன்று பல படைப்பாளிகளின் ஆரம்பம் முகநூலாக காணப்படுகின்றது, இதில் அனைவரின் எழுத்துக்களும் தரமானது எனக்கொள்ளலாமா?


முகநூல் மூலம் கவிதைகளை வாசிப்பவர்கள் அதிகம் ஆசைப்படுவார்கள் நாம் எதாச்சும் எழுதி போடலாமென நினைத்து எழுதுவார்கள் அவர்கள் படித்த கவிதையில் உள்ள சிறிய கருவை வைத்து சொற்களை மாற்றி  இரண்டு மூன்று வரிகளை அந்தகருவில் உள்ள ஒரே காத்திரத்தை வேறு சொற்க்களில் கொண்டு வருவார்கள் 

சிலர் யாரோ ஒருவர் எழுதிய முழுக் கவிதையில் இடையில் உள்ள பந்திகளை கொப்பி செய்து அவர்களின் முகநூலில் பகிர்ந்து கொள்வார்கள் இப்படி பல கோலத்தில் இருக்கின்றனர் எனது வரிகளை சுட்டவர்களை இனம் கண்டு  நான் எச்சரிக்கை செய்த அனுபவமும் உண்டு. 

17. இன்றைய இளைஞர்கள் எல்லா விடயங்களிலும் மிகவும் அவசரமாகவே செயற்படுகின்றார்கள் இது ஆரோக்கியமானதா? அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்? 


அவசரமாக செயற்படுதல்  என்றால் இரண்டு வகையில் பார்க்க வேண்டும்  ஒன்று நிதானமாக போ இரண்டாவது நிற்க்காமல் ஓடு
சில விடயங்களிடம் நெருங்கும் போது நிதானமாகத்தான் நெருங்க வேண்டும் சில விடயங்களை நிற்காமல் ஓடித்தான் அடைய வேண்டும் இன்றைய தொழிநுட்ப‌ வளர்ச்சி அதிகம் அந்த வளர்ச்சி போல நாமும் செயற்பட வேண்டும் எந்தவொரு விடையத்தையும் தொடரும் போது நாம் தொடர்ந்த அந்த விடயம் யாருக்காவது இடைஞ்சலாக இருக்குதா அல்லது அந்த விடயம் வெற்றிகரமாக முடியுமா என நன்கு ஆராய்ந்து செயற்பட வேண்டும் கிடைக்கும் வாய்ப்பை பயன் படுத்து அதில் கிடைப்பது எதுவென்றாலும் உனது அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு அடித்தள அனுபவமாக இருக்கும் தோல்விகளை அதிகமாக தனிமையில் கொண்டாடு  தோல்விக்கு பிறகுதான் வெற்றிக்கு அங்கீகாரம் கிடைப்பது
உனது வெற்றிக்கு நீ பாடுபடுவதைவிட உன்னோடு போட்டியிடும் அந்த தரப்பினரின் தோல்விக்கு நீ பாடுபடு உன்னைத்தேடி தானாக  வெற்றி வரும்  இதுவே எனது வெற்றியின் ஆயுதம். இவ்வாறு இன்றைய இளைஞர்கள் செயற்பட்டால் நியாயமான அங்கீகாரத்தை அடைய முடியும்.



18. சமூகத்தின் எவ் அவலங்களைக்கண்டு தங்கள் படைப்புக்களில் கொதித்தெழும்புகின்றீர்கள்?

அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் அவர்களின் செயற்பாட்டை நடு நிலையாக சிந்தித்து எனது பேனா சீறும் 
இப்படி செய்தால் என்னை ஓரம் கட்டும் அந்த அரசியல் என்று நன்கு அறிந்த விடயம்தான் ஆனால்  எந்த ஓரத்தில் என்னை  ஒதுக்கினாலும் நான் எனது எழுத்துக்கு ஓய்வு கொடுக்கப் போவதில்லை எனது வாயை உடைத்தாலும் எனது விரல்கள் பேசும் விரல்களை வெட்டினாலும்
உயிரைக் கொன்றாலும் எனது நூல்கள் பேசிக் கொண்டே இருக்கும்.


 19.உங்களுக்கான வாய்ப்புக்களில் இலங்கை ஊடகங்களின் பங்களிப்பு?

ஊடகங்கள் சிலர் பணத்துக்காக செயற்படுகிறார்கள் சில ஊடகங்கள் இனத்துக்காக செயற்படுகிறார்கள் இலக்கியத்தை நேசிக்கும் ஊடகம் தான் என்னை வாசிக்கிறார்கள் காலம் கடந்து போகும் என்னில் மாற்றம் வரும் ஊடகமெல்லாம் என்னை நாடி வரும் தேடி வரும் 
தற்போது இப்படித்தான் நடக்குது இன்னும் இருக்குது சில ஊடகங்கள் 
என்னை நாடுவதற்கு. மிக விரைவில் என்னை நாடுவார்கள் அதற்கான‌ முயற்சியில் பயணிக்கிறேன். 

20.எதிர்கால திட்டங்கள் பற்றி?

அதிகமான நூல்கள் பாடல்கள் வெளியிட திட்டம் போட்டுயிருக்கிறேன்
தென்னிந்திய சினிமாவை என் பக்கம் திரும்ப வைத்து அந்த இடத்தை நாடுவதற்கு செயற்பட்டு வருகிறேன் அதற்கான பயிற்சியில் இருந்து விடை பெறும் நாள் நெருங்கிக் கொண்டே இருக்குது புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஒருவரால் தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாக காத்திருக்கிறேன் காத்திருப்பு ஒரு அழகு கற்பனை வளர்ச்சிக்கு பெறும் பங்களிப்பு காத்திருப்பதுதான்.

21.கல்குடாநேசன் இணைய வாசகர்களோடு பகிர்ந்துகொள்ள நினைப்பது?


கல்குடா நேசன்
போன்று இணையத்தளங்களை
வாசகர்கள் அதிகம் வாசிக்க வேண்டும் வாசிப்பதோடு நிறுத்திவிடாமல் ஏனைய உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும்  சிறந்த நோக்கத்தோடும் சீரான திட்டமிடலோடும் முற்றிலும் சமூகத்துக்காகவே செயற்பட்டு வருகிறார்கள்  இன்றைய இளம் படைப்பாளிகளுக்கு கல்குடா நேசன் ஒரு வரமென கூறலாம்
படைப்பாளிகளை இனம் கண்டு அவர்களை இந்த உலகத்துக்கு அடையாள‌ப்படுத்தி அறிமுகம் செய்து வருவதை கண்டு மகிழ்ந்தேன் எனக்கும் வாய்ப்பினை தந்து காத்திரமான கேள்விகளை சுமந்து வந்த கவிமெட்டு ராஜ் சுகா சகோதரிக்கும்  கல்குடா இணையத்தள செயற்பாட்டாளர்கள் வாசகர்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வ நன்றிகள். மேலும் கல்குடா நேசன் பல வளர்ச்சிகளை எட்ட 
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.





No comments: