Friday, March 28, 2014

பிரச்சனை நமக்குத்தான்!

வாழ்க்கையை விளையாட்டாக எடுத்தாலும்- அவர்கள்
விளையாட்டை வாழ்க்கையாக எடுத்தாலும் 
பிரச்சனை நமக்குத்தான்!

தீவிரமாய்க் கொளுத்துங்கள்!

தீயினை இன்னும்
தீவிரமாய்க் கொளுத்துங்கள்
தீய்ந்தழிந்திட மாட்டேன் -நாளை
தங்கமாய் ஜொலிப்பேன்!!



Tuesday, March 25, 2014

இதுதான் ‪உலகம்‬

இழப்புக்கள் நமக்கு வரும்போது கண்ணீர்
பக்கத்தில் நடந்தால் அதுவெறும் காட்சி!!

ஊடறு இணைய இதழில்.... (29.03.2014) சாதிக்கட்டும் கண்ணீரும்!

வெளிச்சத்தில் திரைவிழ‌
வேதனை ஒளிபரப்ப‌
வெறுமை சூழ்ந்துவிட்டது -நீ
வெறுத்தொதுக்கி விலகியதால்

கொஞ்சம் திரும்பிப்பார்
நீ காணத்தவறியது
அன்பென்பதின் அடையாளங்களை
ஏழை இதயத்தின்
வெண்மைகளை

இனியிங்கே
புற்கள் முளைப்பதில்லை
பூக்கள் மட்டுந்தான்
வெற்றிகளுக்கு
கொக்கரிக்கமுடியுமென்றால்
தோல்விகளுக்கு
சாதுவாய் சாதிக்கவும் முடியும்

இனி தோல்விகள்
கண்ணீர் வடிப்பதில்லை
துணிந்து எழுந்திடும்

இனி வேதனைகள்
வியாதியாய் நெருக்குவதில்லை
விதிகளோடு விளையாடும்

இனி துரோகத்தின் வலிகள்
துவண்டு வீழ்வதில்லை
தூக்கி நிமிர்த்திடும் உலகை
வாங்கி ஜெயித்திடும்

சாதிக்கட்டும் கண்ணீரும்
சாதிக்கட்டும்

எத்தனை காலத்துக்கு
கண்களுக்கு வெறும்
கண்ணீரையே அறிமுகப்படுத்துவது காணாக்
காட்சிகளையும் அடையாளப்படுத்துவோம்
வையம் பெரிதென்பதையும்
சாட்சியாக்குவோம்

















எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்புகளும் ஆசைகளும் குறையக்குறைய வாழ்க்கையின் அர்த்தங்களும் அதன் ஆனந்தங்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.




Monday, March 24, 2014

காதலும் ஒன்றல்லவோ

மணித்தியாலங்களோ
இருபத்துநான்கு -உனை
மனதுக்குள் நினைப்பதோ
நொடிகளின் எண்ணைக்கை


வேறு சிந்தைகள் கடந்தாலும்
மாறாக எதனைச் செய்தாலும்
ஆறாக ஓடுவதென்னவோ
மாறாத உன் ஞாபகந்தான்


அன்றாடங்களின் கடக்கும்
ஆயிரம் அதிசயங்கள் இருக்க‌
வென்று கொண்டிருப்பதென்னவோ
நினதான நினைவுகளே


எதிர்ப்புக்கள் எனக்கெதிராய்
எழும்பிவந்த போதெல்லாம்
எடுத்தெறிந்து விடத்தானெத்தனித்தேன்
எல்லாவற்றையும் துடைத்தெறிந்ததென்னவோ
எமக்குளுண்டான நேசம்மட்டுமே

அது என்னவோ
இங்குமட்டுந்தான்
விலக நினைக்கும்போதெல்லாம்
விடாமல் ஒட்டிக்கொள்வதும் நினைவுகளில்
விடாப்பிடியாய் கட்டிக்கொள்வதும்...

ஒன்றே தெய்வமென்றால்
காதலும் ஒன்றல்லவோ
ஒருவனே தேவனென்றால்
ஒருவருக்கு ஒருவரன்றோ
காத(லி)லன்
காதலுக்கு சாட்சியாய்
காத்துக்கிடக்கின்றது -நம்
காதல் 
நாளைய‌
சரித்திரத்தை நிரப்பிவிட‌
காதல் ஆழமானதென்று!!






நீ மறந்திருக்கலா மானால்

நினைக்கவும்
நேசிக்கவும்
நீ மறந்திருக்கலா மானால்
சுமக்கவு முனை
சுவாசிக்கவும் -நான்
மறக்கவில்லை!!


வார்ப்பு இணைய இதழில்.. (23.03.2014)

http://www.vaarppu.com/view/2778/


ஏமாற்றுக்காரி!!.. அந்தக்காலந்தான் வந்திடுமா 
01. 
ஏமாற்றுக்காரி!! 
------------------------- 

அன்பை கொண்டுவந்தேன் 
ஆஸ்தியைத் தேடினாய் 

பாசத்தோ டோடிவந்தேன் 
ப‌ணமா வென்று பார்த்தாய் 

பரிவுடன் பக்கத்திலிருந்தேன் 
பதவியெங்கே யென்றாய் 

பிரியத்தோடு நெருங்குகையில் 
பட்டத்தினையும் பெற்றுக்கொள்ளென்றாய் 

காதலோடு வந்தபோதெல்லாம் 
குடும்பத்தை தாண்டமாட்டேனென்றாய் 

ஏழைக்காதலியாய் 
ஓடிவரும்போதெல்லாம் 
ஏளனமா யொதுங்கிப்போனாய் 

சமூகக்கேள்விக்கு 
சர்வாங்கப்பலியாகாமல் 
சம்சாரமாகிவிட்ட எனைபார்த்திப்போ 
என்ன சொல்லப்போகின்றாய் 
ஏமாற்றுக்காரியென்பதைத் தவிர???? 


02. அந்தக்காலந்தான் வந்திடுமா... 
------------------------------------ 


ஒருசுண்டு கஞ்சி காய்ச்சி 
உறவெல்லாம் கூடியிருந்து 
வயிறார உண்டுகளித்த‌ 
வசந்த மினி வந்திடுமா... 

அம்மம்மா கதை சொல்ல‌ 
அப்பப்பா நடைபழக்க‌ 
அத்தைசோறு ஊட்டிவிட்ட‌ 
அந்தக்காலந்தான் வந்திடுமா... 

அம்மாகை ஓங்கிவர‌ 
அப்பம்மா அதைத்தடுக்க‌ 
தேம்பியழும் எந்தனுக்கு -கிடைத்த‌ 
தேறுதலினி கூடிடுமா... 

ப‌ள்ளிசென்று வந்தவுடன் 
களைநீக்கும் அப்பம்மா 
துள்ளிவிளையாடிவிட 
சொல்லித்தரும் அம்மப்பா... 

தலைவலி காய்ச்சலுக்கு 
தைலங்க ளேதுமின்றி 
பாட்டிசெய்த‌ வைத்தியத்தில் 
கிடைத்த சுகந்தான் கிட்டிடுமா.. 

கூட்டாக கதைபேசி 
குடும்ப பலம் வலுத்திட்ட‌ 
கூடிக்களித்த காலமினி 
கோடிகொடுப்பினும் மீண்டிடுமா...

Sunday, March 23, 2014

மூச்சுக்காற்று -நீ !!

என் அழகிய கவிதை
என் ஆழமான சுவாசம்
நான் மறந்தும் மறந்துவிடாத‌
மூச்சுக்காற்று -நீ !!



காதலோடு உன்னை...

கருவில்தான் உன்னை
சுமக்கவில்லை
காதலோடு உன்னை
மட்டுந்தான் சுமக்கமுடிகின்றது!!


Friday, March 21, 2014

ஊடறு இணைய இதழில் எனது கவிதை 18.03.2014




கட‌ந்த காலங்கள் ஒரு
காவியக்காலந்தான் -அதில்
நட‌ந்த பாதையிலே சில‌
நாவிழந்த மொழிகள்தான்
விழுத்திய தருணங்கள்
கொளுத்திய அனல்களில்
அழிந்துபோன அன்றாடங்கள்
மீண்டும் ஒரு பொற்காலம்
மீண்டு வருமென்றோரெண்ணம்
ஆண்டுகொண்டிருக்கின்றது -என்னை
ஆளவைத்துக்கொண்டிருக்கிறது
என்னைமட்டுமல்ல தோழர்களே
உங்களையும் தான்
நிமிர்ந்து பாருங்கள் நாளை
நாமும் ஜெயிப்போம்!!


Wednesday, March 19, 2014

யாசித்து இறப்பேனே

சுவாசிக்க மறப்பேனோ -உனை
வாசிக்க மறுப்பேனோ
யாசித்து இறப்பேனே -உயிர்
நேசித்து துறப்பேனே!!


Tuesday, March 18, 2014

மருந்தில்லாக்காயம்

மனமொவ்வா
மணமெல்லாம்
மருந்தில்லாக்காயம் -அது
தினந்தோரும் தரும்வலியோ
திரைமூடாக் கோரம்!!


Monday, March 17, 2014

நமக்குள் மோதலென்று!!

ஊருக்கெல்லாம் தெரியும்
நாம் காதலரென்று
உனக்கு மெனக்கும்தான் புரியும்
நமக்குள் மோதலென்று!!



மலர்கின்றேன்!!

இறந்தும்
இருக்கின்றேன் -உன்
நினைவுகளால்
மறைந்தும்
மலர்கின்றேன் -உன்
கனவுகளால்!!



Sunday, March 16, 2014

நிஜமா நிஜமா??

வானும் மண்ணும்
வாழ்க்கைப்பட்டால்
நானும் நீயும்
இணைக்கப்படுவது சாத்தியமே!!



Saturday, March 15, 2014

பிரித்துப்போட்டது

உன்னையும் என்னையும்
பிரித்துப்போட்டது
காலத்தின் சதியல்ல‌
காதலின் விதியுமல்ல‌
காத்திரமில்லா மதி!!
 

என்னைமட்டுமல்ல தோழர்களே

கட‌ந்த காலங்கள் ஒரு
காவியக்காலந்தான் -அதில்
நட‌ந்த பாதையிலே சில‌
நாவிழந்த மொழிகள்தான்

விழுத்திய தருணங்கள்

விழுந்துமழ முடியாமல்
விக்கித்துநின்ற கணங்கள்

அழுத்திய முட்களில்
அழுகிப்போன அழகுகள்

கொளுத்திய அனல்களில்
அழிந்துபோன அன்றாடங்கள்

மீண்டும் ஒரு பொற்காலம்
மீண்டு வருமென்றோரெண்ணம்
ஆண்டுகொண்டிருக்கின்றது -என்னை
ஆளவைத்துக்கொண்டிருக்கிறது

என்னைமட்டுமல்ல தோழர்களே
உங்களையும் தான்
நிமிர்ந்து பாருங்கள் நாளை
நாமும் ஜெயிப்போம்!!



அநுபவத்திலிருந்து . . . . . . . . . .அல்ல அறிந்ததிலிருந்து

கைகளை கோர்த்துக்கொண்டு நடந்தால் அவர்கள் காதலர்கள்
முன்னும் பின்னுமாக நடந்தால் அவர்கள் கல்யாணமானவர்கள் 



Friday, March 14, 2014

மெளக்கத்தியால்

கோபம்வந்தால்
முறைத்துவிடு 
தப்பென் றறிந்தால் 
அடித்துவிடு -இப்படி
மெளக்கத்தியால் 
காயப்படுத்தாதே!!

Tuesday, March 11, 2014

வரமா? சாபமா?

தீர்ப்புக்கள் வரமாகிடும்போது
எதிர்ப்புக்கள் சாபமாய் வந்துவிழுகின்றது!!

பாசங்களை திரும்பிப்பாருங்கள்..

பொங்கியெழுகிறது
பொறுக்காத எனதுள்ளம்
தங்கிவாழ்ந்ததாய் இன்று
தப்பட்டமடிக்கிறாய்

ஒன்றே உலகஜெயமென்றால்
அதுவே அன்பென்கின்றேன்
உன்னிடமதுவன்றேல்
உனதுயிரெதற்கு உனக்கிந்த‌
ஊணெதற்கு??

இட‌துகையறியா தருமம்
வரங்களில் பெரிதென்பர்
இடமறியாத தையறிவித்து
இழிநிலையடைந்தாய் பேதயே

கூடப்பிறந்தவனானவன் உனதுதிரம்
கூசாமல் சோறுபோட்டதை போட்டுடைக்கிறாய்
கேடுகெட்ட உள்ளங்கள் இப்படித்தான்
கேவலமாய் உலவுகின்றதோ...

ஒன்றை உணர்ந்தேன் உலகில்
செய்ந‌ன்றி மறப்பது அபத்தமோ
செய்தலை நினைத்தலும் அதுவே
பாசங்களை திரும்பிப்பாருங்கள்
பணத்துக்குப் பின்னே ஓடுவதைவிட்டு...!!










வரங்களாய் மாறட்டும்

கரங்கள் சேர்க்காதீர்
தரங்கள் பார்த்து  -அவை
வரங்களாய் மாறட்டும்
கோரங்கள் எதிர்த்து!!



Monday, March 10, 2014

நல்லவேளை

இதயம்
இறந்திருக்கும் நல்லவேளை
இறைவனருள்
இடைப்பட்டுவிட்டது!!



Saturday, March 8, 2014

ஏனோதெரியவில்லை

காணுமிடமெல்லாம்
காதல் 
ஏனோதெரியவில்லை -இத்தனை
விவாதங்களும் 
விவாகரத்துகளும்!!