Thursday, June 30, 2016

எப்போதும் இலக்குகள்

வானத்தை குறிவையுங்கள்
மேகத்தை கடக்கும்
வெற்றியினையாவ தடையலாம்
எப்போதும் இலக்குகள்
உயரமானதாவே இருக்கட்டும்...

துடித்துப்போனேன்!!

வாழ்க்கையை தொலைத்தபோதுகூட - நான்
வாய்விட்டழ வில்லை
ஏழ்மையில் திளைத்தபோதோ
ஏராளமாய் துடித்துப்போனேன்!!

உனக்குள் தீயாய் எரியட்டும்

வாழப்பிறந்தவர்நாம் -தாரகையே
வாழ்வை அட மானம் வைப்பதேனோ
தாழ் விதென்றெண்ணி தரணியில் -உம்புகழ்
தளைக்க வழி தேடாயோ.....

உடம்பை மூலதனமாக்கிய உனக்குள் -உயிரான
நம்பிக்கை வாழ்வதனை மறந்தாயோ
உன்பிள்ளைக்காய் பெண்சமூகத்தை
உலகம் பழிக்க செய்வாயோ.....
மூச்சு நின்றுவிடு முன் வாழ்ந்துவிடு
பேச்சு அடங்குமுன் சாதித்துவிடு.....

கல் உடை
கடைகளுக்கு சமைத்துகொடு
பத்துப்பாத்திரம் தேய்
பலவீடுகளை சுத்தம்செய்...
வாழ்வதற்கு வழிகளுண்டு
கல்வி இல்லையென கலங்காதே
சல்லி இல்லையென சரியாதே
உனக்குள் தீயாய் எரியட்டும்
வாழ்தலின் வழிமுறைகள்....

Tuesday, June 28, 2016

குழிகளில்தானே

நீங்களெனக்கு
வெட்டிய குழிகளில்தானே
நட்டுவைத்தேனென்னை

இப்போ
எட்டிப்பார்த்து
திட்டுவதென்ன..

மாண்டுபோகாது
மலர்ந்துவி்ட்டேனென்றா????

ஒரேநாளில்தான்

மகிழ்ச்சி இறந்ததும் -நான்
மரணித்ததும் ஒரேநாளில்தான்
மலர்ச்சியோடு இருப்பதென்னவோ -அந்த
மனதுக்காகத்தான்....



நினைவுகள்தான்

புத்தகங்களை
கலைத்து அடுக்கும்
சுகத்தினை தந்தது - உன்
நினைவுகள்தான்....

எல்லா புத்தகத்திலும்
ஏதோ ஒருவரியில் -நம்
இறந்தகால சுகங்கள்
இறவாமல் வாழ்ந்துகொண்டிருப்பதால்.....


Thursday, June 23, 2016

Raj Suga Interview On Nethra TV 2016.03.15

https://www.youtube.com/watch?v=mJ_8HqowORI




எப்படி முடிகிறதோ ‍

நினைத்தவுடன்
கண்ணீர்துளி களைத்தர‌
எப்படி முடிகிறதோ ‍-உன்
நினைவுகளுக்கு மட்டும்!!

கல்குடா நேசனின் நேர்காணல் கவிஞர் ஓட்டமாவடி ரியாஸ் 20.06.2016


http://kalkudahnation.com/

வாராவாரம் வெள்ளிக்கிழமையில் கல்குடாநேசன் இணையத்தளம் "கல்குடா நேசனின்  இலக்கிய  நேர்காணல்"  என்ற  பகுதியினூடாக எழுத்தாளர்கள் கலைஞர்கள்  படைப்பாளர்களை சந்தித்துவருகின்றது. வெற்றிகரமாக பலரது  ஆதரவையும் பெற்று வளர்ந்துவரும் இப்பகுதியினூடாக கலைஞர்களின் படைப்புக்கள் திறமைகள் இலட்சியங்கள் ஆகியவை  பற்றி  நேர்காணலூடாக பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது.

இதன்  தொடரில் 38வது  படைப்பாளியாக‌  இவ்வாரம்  எம்மோடு  இணைகின்றார்  கவிஞர்  ஓட்டமாவடி  ரியாஸ்  அவர்கள். கல்குடாநேசன்  இலக்கிய  பகுதியின்  சர்வதேச  செயற்பாட்டாளரும், இலக்கிய  நேர்காணல்  பகுதியை முதன்முதலில்  ஆரம்பித்தவருமான கவிஞர்  அண்மையில்  'முகவரி இழந்த  முச்சந்தி' என்ற  நூலினை  வெளியிட்டு இலக்கியத்தில் தனக்கான முத்திரையினை பதித்துக்கொண்டார். 

சமூகப்பிரச்சனைகளையும் சாதாரணமாய் நாம்பார்க்கும் பலவிடயங்களையும் கவிதையாகப்புனைந்து  வாசகர்கள்  வியக்கும்வகைக்கும்  இவர்  "கவிதை, உணர்வோடு  இருக்கவேண்டும் அது  படிப்பவரை  ஈர்க்கவேண்டும் அரைத்தமாவையே  அரைக்காது புதிதாக எழுதவேண்டும்"  என  ஆணித்தராமாக கூறுகின்றார். இவரின்  பெரும்பாலான கவிதைகளும் உணர்ச்சிக்கவிதைகளே.

தனது இலக்கிய  வாழ்வு  குறித்தும் அனுபவங்கள் குறித்தும் காத்திரமாய்  பேசியுள்ள கவிஞர்  ஓட்டமாவடி ரியாஸ் அவர்களின்  சுவாரஸ்யமான நேர்காணலின்  முழுமையினை வாசித்திடலாம்.




1) த‌ங்களைப் பற்றி ?


 நான் இலங்கையின் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு நகரில் இருந்து 33 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும்  மாவடிச்சேனை என்ற கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவன்
உயர் தரம் வரை ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் கல்வி கற்று பின் தொழில் நிமிர்த்தமாக கத்தார் நாட்டில் வசித்து வருகிறேன். தற்போது வெளிவாரி பட்ட படிப்பை படித்து வருகிறேன்.







2) உங்கள் முதல் நூல் வெளியீடு முயற்சி பற்றி கூறுங்களேன்?


ஆமாம் இது என் முதல் குழந்தை சுகப்பிரசவம் மிகவும் சிறப்பாக 28.02.2016 ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்நிகழ்வில் இந்திய மற்றும் இலங்கைப் படைப்பாளிகள் கலந்து கொண்டனர். கல்குடா தொகுதி இலக்கிய வரலாற்றில் இந்த நூல் வெளியிட்டு விழா சிறப்பாக என்றும் பேசப்படும் என்று நினைக்கிறேன். பெரும் எண்ணிக்கையான தென்னிந்திய கலைஞர்கள் மத்தியிலும் எங்கள் ஊர் மூத்த இலக்கிய வாதிகள் மத்தியிலும்  என் நூல் வெளியிடு மகிழ்வு தருகிறது
இது நான் சுட சுட போட்ட பரோட்டா அல்ல என் பாடசாலை பருவத்தில் இருந்தே  என் மனதில் கட்டிய இலக்கிய  கோட்டை.





3 ) "முகவரி இழந்த முச்சந்தி" என்று தலைப்பிட காரணம் என்ன?



எங்கள் ஊர் ஓட்டமாவடி முச்சந்தியில் ஒரு பழமையான நூற்றாண்டு வரலாற்றினைக் கொண்ட ஒரு வாகை மரம் நின்றது. ஊரில் இந்த மரத்தை தெரியாதவர்கள் யாருமேயில்லை இந்த முச்சந்தியை கடந்து வெளியூர் செல்பவர்கள் கூட சிறிது நின்று இந்த மரத்தின்  கம்பீரத்தையும் அழகையும் ரசித்து செல்வது வழக்கம்
நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது  கறி சாமான் வாங்க சந்தைக்கு வாப்பா சைக்கிளில் ஏற்றி என்னை கூட்டி போகும்போதெல்லாம் நான் இந்தத மரத்தை பார்த்து ரசித்து செல்வதும் வழக்கம். வாப்பா இந்த மரத்தை காட்டி அப்போது  சொன்ன கதைகளெல்லாம் இப்போதும் என்  ஞாபகங்களில் இருக்கிறது. இவ்வாறாக எங்கள் மனங்களில் ஊர் மக்களின் இன்ப துன்பங்களில் இரண்டர கலந்து கிடந்த இந்த மரம் அண்மையில் வீதி அபிவிருத்திக்கா வெட்டப்பட்டது எனக்கு மாத்திரமல்ல ஊர்க்கே பெரும் கவலையாக இருந்தது. அந்த மரத்தில் குடியிருந்த பல்லாயிரக் கணக்கான பறவைகள் தங்க இடமின்றி ஊர் ஊராய் திரியும் போது கண்ணீர் வடித்தவர்களில் நானும் ஒருவன் இது என் மனதை பாதித்தது உண்மைதான் இந்த மரம் வெட்டிய பிறகு கூட அந்த மரம் நிழலாக நின்ற முச்சந்தி கூட வெறுமையாகிப் போனது முகவரி இழந்து சோர்ந்து நின்றது இதுவே என் நூலுக்கும் தலைப்பானது.



4) இந்த தலைப்பு எவ்வாறான அதிர்வை ஏற்படுத்தியது?


இது கவிதை கவிதையை கவிதையாகப் பார்க்க வேண்டும்
இதில் அரசியலுமில்லை உள் குத்தும்மில்லை வெளிக்குத்துமில்லைா
நான் தூர நோக்கு தெரியாதவன் அல்ல விமர்சனம் செய்பவர்கள் முதலில்  கவிதையை   சரியாகப் படித்து  புரிந்து கொள்ள வேண்டும். மரமாக நின்று கவிதை சொன்னேன்
தரமாக நின்று அதன் துயர் சொன்னேன் அவ்வளவுதான்
யார் மனதையும் துன்புறுத்தவோ துயரப்படுத்தவோ ஒரு போதும் நான் நினைத்தது இல்லை.






5) ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும் சொல்லுங்களேன்?


கவிதை உணர்வோடு இருக்க வேண்டும் அது படிப்பவனை ஈர்க்க வேண்டும் கவிதை சுவைக்க வேண்டும் படிப்பவனை அந்த சுக அனுபவத்துக்குள் இணைக்க வேண்டும்
அரைத்த மாவை அரைக்காது புதிதாக சிந்தித்து புதிதாக எழுத வேண்டும் என்று நினைப்பவன் நான் சமூகச் சூழலில் நடக்கும் ஒவ்வொரு சின்ன சின்ன விடயத்தையும் உன்னிப்பாக அவதானித்து அதை மனதில் பொக்கிஷமாக்கிக் கொள்ளும் இயல்பு கொண்டவனாக இருக்க விரும்புகிறேன் அதையே வெளிப்படையாகவும் எழுதவும் விரும்புகிறேன்


6) நல்ல கவிதைகள் என  எவற்றை  வரையறை செய்கின்றீர்கள்?

கவிதைக்கு வயது அதிகம் ஆனால் அது பற்றி பேசும் எனக்கோ வயது மிகக் குறைவு கடவுளை எவ்வாறு வரையறுக்க முடியாதோ அவ்வாறே கவிதைகளையும் வரையறுக்க முடியாது என கவிஞர் முருகையன் கூறுவதையே  உங்கள் கேள்விக்கும் சொல்லி வைக்கிறேன்.



7) உங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் விருதுகள் பற்றி?


விருதுகளை விட பாராட்டுக்கள் எனக்கு நிறையவே கிடைத்து இருக்கிறது நான் அதையே பெரிதும் விரும்புகிறேன்
2015 மார்ச் மாதம் நடந்த சர்வதேச கவிதைப் போட்டியில் எனக்கு முதலாம் இடமும் கவியருவி பட்டம்
2015 ஏப்ரல் அன்று இந்தியாவில் இருந்து வெளிவரும் வல்லமை இதழ் எனக்கு வல்லமையாளர் விருது வழங்கி கெளரவித்தமை
தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் ஆதரவில் கொழும்பு தமிழ் சங்கத்தில் மர்ஹூம் எஸ் எச் எம் ஜெமீல் நினைவாக கலைத்தீபம் பட்டம் வழங்கி பொண்ணாடை போற்றி கெளரவித்தமை
2015 திருகோணமலையில் மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கமும் படைப்பாளி உலகமும் இணைந்து நடாத்திய இலக்கிய சந்திப்பும் விருது வழங்கும் விழாவில் எனது இலக்கிய துறையைப் பாராட்டி கலை மணி விருது வழங்கி கெளரவித்தமை
அக்கரைப்பற்று ஹாஜா தமிழ் மன்றம் நடாத்திய உலகலாவிய கவிதைப் போட்டியில் முதலாம் இடம் பெற்று சான்றிதழு
ம் பணப் பரிசும் கிடைத்து.





8) ஒரு படைப்பாளியின் ஆரம்பத்தை சரியாக அடித்தளமிடுவது ஏதோ ஒரு ஊடகமாகத்தான் இருக்கும் அந்த வகையில் உங்கள் வளர்ச்சியில் ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கிறது ?


ஊடகங்கள் தான் என் கவிதைகளை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியது அந்த வகையில் நான் வெளிநாடுகளில் இருக்கும் காலப்பகுதியில் மத்திய கிழக்கு வெளியிடான தமிழ் டைம்ஸ் பத்திரிகை எனது கவிதை சிறுகதை கட்டுரைகளை வார வாரம் பிரசுரம் செய்து சிறப்பான ஒரு களம் அமைத்து தந்தது என்றே சொல்ல வேண்டும்
அதைபோல் இந்தியாவில் இருந்து வெளிவரும் வல்லமை மின்னிதழ் தடாகம் மின்னிதழ் மற்றும் கல்குடா நேசன் புத்தளத்தில் இருந்து வெளி வரும் புதிய வெளிச்சம் பத்திரிகை
இலங்கையின் பிரதான பத்திரிகைகள் தினகரன் வீரகேசரி மித்திரன் சுடர் ஒளி போன்ற பத்திரிகை இணையதளங்களையும் மற்றும் வசந்தம் தொலைக்காட்சி பிரான்ஸ் ttn தொலைக்காட்சி போன்ற எல்லா ஊடகங்களையும் நன்றியுடன் இவ்விடத்தில் நினைவு கூறுகிறேன்.


9) இந்த இடத்தில் யாருக்கும் நன்றி சொல்வதாக இருந்தால் முதலில்  யாருக்கு சொல்வீரர்கள்?


முதலில் இறைவனுக்கே சொல்வேன் அடுத்ததாக என் பெற்றோர்களுக்கு நன்றியினை கூறிக் கொண்டு கலையுலகில் எனக்கு ஊக்கம் உற்சாகம் தந்து என்னை ஏற்றுவித்த ஏணியாக‌ நான் பார்ப்பது என் அன்புச் சகோதரி கலைமகள் ஹிதாயா அவர்களையே  இந்த இடத்தில் நன்றியுடன் நினைவு கூறுகிறேன்
என்னை சுதந்திர பறவையாக பறக்க விட்ட என் அன்பு மனைவி ஸாஜிதாவுக்கும்  மற்றும்  என்னை நேசிக்கின்ற வாசிக்கின்ற அனைத்து முகநூல்  உறவுகளுக்கும்
மற்றும் எனது நண்பர்களு&க்கும் நண்பிகளுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.



10) நீங்கள் முன்னெடுக்கும் இலக்கிய செயற்பாடுகள் ?


என் கவிதைகள் சமூகவியல் சார்ந்தவையாக இருக்கும்
அடிமட்ட மக்களின் பிரச்சனைகளை சொல்பவைகளாக இருக்கும்
சமூகத்தில் காணப்பட கூடிய ஓட்டை ஒடிசல்கள் மூட நம்பிக்கைகள் சுரண்டல்கள் அநீதிகள் போன்றவற்றை இலக்கியங்கள் பேச வேண்டும் என்று நினைப்பவன் நான்
என் இலக்கிய செயற்பாடு கண்டு தடாகம் கலை இலக்கிய சர்வதேச அமைப்பு அவர்களது மின்னிதழ் சஞ்சிகைக்கு ஆசிரியராக நியமித்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும் ஒரு உத் வேகத்தையும் தருகிறது
தமிழ் வளர்க்கும் ஒரு தாயுடன் நானும் இணைந்து இருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அது போல் கல்குடா நேசன் இணையத்தின் இலக்கிய பகுதியின் சர்வதேச தொடர்பாளராக இருக்கிறேன் இதன் மூலமாக பல இளம் கவிஞர்களை அறிமுகம் செய்து வருகிறேன். கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் பகுதியை முதன் முதலாக தொடங்கியவன் அதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன். மிக‌ விரைவில் கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் நூல் வடிவில் வர முயற்சி செய்து கொண்டும் வருகிறோம்.




11. உங்கள் மலேசிய பயணம் பற்றி சொல்லுங்களேன்?


மலேசியப் பயணம் மிக சிறப்பாக அமைந்தது முதலில் இறைவனுக்கே புகனைத்தும்  தடாகம் கலை இலக்கிய வட்டம் சிறப்பாக ஒழுங்கு செய்து இருந்தது

அதன் அமைப்பாளர் சகோதரி கலைமகள் ஹிதாயா அவர்களுக்கும்  மலேசியாவிலிருந்து கவிஞர் ரூபன் மற்றும் இனிய நந்தவனம் பதிப்பகம் மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் மக்கள் ஓசை ஆசிரியர் ராஜேந்திரன் சகோதரி மல்லிகா கண்ணன் மற்றும் பலர் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்தார்கள் மற்றும் அங்கே நடக்கவிருந்த இலக்கிய  நிகழ்வுகளையும் சரி படுத்தியும் தந்தார்கள்

குறைகளை விட நிறைவுகள்தான் இப்ப பயணத்தில் நிறைந்து இருந்தது



12. இந்த மலேசியப் பயணம் உங்களுக்கு எதைத் தந்தது?

இந்தி இலங்கை மலேசிய பெரும் எழுதிதாளர்கள் மத்தியில் ஒரு உறவுப் பாலத்தை இந்தப் பயணம் அமைத்துத் தந்தது

அவர்களுக்கு மத்தியில் சிறு அடையாளத்தையும் எனக்கு ஏற்படுத்தி தந்தது


13. அங்கே நடந்த உங்கள் முகவரி இழந்த முச்சந்தி கவிதை நூல் அறிமுக விழா பற்றி கூறுங்கள்?


ஆமாம் மலேசியாவில் இரண்டு இடங்களில் எனது நூல் வெளியிட்டு விழா நடந்தது

தலைநகர் கோலாலம்பூரில் இனிய நந்தவனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட எழுத்தாளர் மாநாட்டிலும் மற்றும் மலேசிய தமிழ் சங்க நிகழ்விலும் எனது நூல் அறிமுக விழா சிறப்பாக நடை பெற்றது
அத்தோடு  விருதுகள் பட்டங்கள் தந்து கெளரப்படுத்தினார்கள்




14. உங்கள் பார்வையில் மலேசிய எழுத்தாளர் ...?



ஐயோ அந்த பார்வையெல்லாம் எனக்குத் தெரியாது
ஆனால் இவர்கள் தமிழ் வளர்க்கும் நல்ல ஆசான்கள் நம்ம நாட்டு எழுத்தாளர்கள் இவர்களிடம் இருந்து படித்துக் கொள்ள நிறையவே இருக்கிறது.



காதல்

விழிகளை நனைக்கும் 
உன் நினைவுகளை விட
வழிகளை மறைக்கும் -இக்
காதல் கொடுமை......

நேர்காணல் அறிமுகம் கவிஞர் மன்னார் செந்தூரன் 20.06.2016




http://kalkudahnation.com/






வாராவாரம் வெள்ளிக்கிழமையில் கல்குடாநேசன் இணையத்தளம் “கல்குடா நேசனின்  இலக்கிய  நேர்காணல்”  என்ற  பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளர்களைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது  ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இப்பகுதியினூடாக கலைஞர்களின் படைப்புக்கள் திறமைகள் இலட்சியங்கள் ஆகியவை பற்றி நேர்காணலூடாகப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது. 

இதன்  தொடரில், 39வது  படைப்பாளியாக‌  இவ்வாரம்  எம்மோடு  இணைய இருப்பவர்  பேராதனைப் பல்கலைக்கழக  விஞ்ஞானபீட  இரண்டாம்  வருட  மாணவன், கவிஞர் மன்னார்  செந்தூரன்  அவர்கள். இன்றைய   இளம்  படைப்பாளிகளிடமிருந்து  தனித்துவமான  இடத்தினைத் தக்க வைத்துக்கொள்ள முயற்சிக்கும் துடிப்புள்ள இவ்விளைஞர் தனது கவிதைகளில் சந்தத்திற்கு அதிக  முக்கியத்துவம் கொடுத்து, மரபின் பால் தன்  கவனத்தை திருப்பியுள்ளார்.

 “கவிதையின் பரிணாம வளர்ச்சி எந்தளவிற்கு வியாபித்தாலும் மரபுக்கவிதையின் சொற்சுவைக்கும் பொருட்சுவைக்கும்  எக்கவிதை முறையும் இணையாக முடியாது. அமைப்பு முறை காரணமாக உடனடியாக விளங்கிக்கொள்ள முடியாத நிலையிருக்கலாம். இந்நிலை கூட மரபுக்கவிதைகளின் தரத்திற்கும் தனித்துவத்திற்கும் காரணம் எனலாம்” என  மிகவும் ஆழ்ந்த கருத்துக்களை எம்மோடு பகிர்ந்து கொண்டார். 

பொறுப்பும் கடமையுணர்வும்  நிறைந்த  கவிஞர்  செந்தூரன்  அவர்கள்  தனது காத்திரமான பேச்சின்  மூலம் ஏனைய  இளைஞர்களிலிருந்து  வேறுபட்டு  நிற்கின்றார். காலம் தந்த  காயங்களோடும், அவை கற்பித்த  அநுபவங்களையும் கொண்டு  நல்ல  அத்திவாரமிட்டுக்கொண்ட  கவிஞர்  எல்லா இளையவர்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குகின்றார். கவியரங்கங்களில்  கலக்கிக்கொண்டிருக்கும்  கவிஞரை  கல்குடாநேசனுக்காக அணுகினோம். அவர் பகிர்ந்து கொண்ட  அழகான விடயங்களுக்காக அடுத்த வெள்ளி வரை காத்திருப்போமா…… 


நேர்காணல்-கவிதாயினி ராஜ்சுகா

Tuesday, June 14, 2016

07.06.2016 'யாதுமாகி' கவிதை நூல் வெளியீடும் எனது அநுபவமும்




பேராதனை  பலகலைக்கழக  விஞ்ஞானபீட  மாணவனும்   கவிஞருமான மன்னார் நா.செந்தூரன்  அவர்களின்  'யாதுமாகி' கவிதை  நூல் வெளியீடு  07.06.2016 அன்று செவ்வாய்க்கிழமை  மாலை 3.30 மணியளவில் பேராதனை  பலகலைக்கழக கலைப்பீட கருத்தரங்கு   மண்டபத்தில்  மிக எளிமையாக அழகான  அமைதியான  முறையில் ஆரம்பமானது.


பல்கலைக்கழக  மாணவர்கள்  பேராசிரியர்கள் நண்பர்கள்   கலை ஆர்வலர்கள் சூழ வெளியீட்டு  விழா  மங்கள விளக்கேற்றல்  நிகழ்வுடன்  ஆரம்பமானது.
வெளிச்சம்  அமைப்பின்   அனுசரணையுடன்  பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தினூடாக ஏற்பாடு செய்யப்பட்ட  இவ்விழாவை பேராசிரியரும் தமிழ்த்துறை தலைவருமாகிய வ.மகேஸ்வரன்  அவர்கள் தலைமையேற்று நடாத்தினார்.

தமிழ்த்தாய்  வாழ்த்துடன் நிகழ்வுக்கான வரவேற்புரையை விஞ்ஞானபீட  மாணவன்சு.பிரகலாதன் அவர்கள் வழங்கி அனைவரையும்  விழாவிற்கு அன்புடன் வரவேற்றார்.அதனைத்தொடர்ந்து  தமிழ்மீது  தீராத  பற்றுக்கொண்ட  வண.அருட்திரு தமிழ்நேசன் அடிகளார் ஆசியுரையினை அளித்தார்.




அவர்  தனதுரையில் கவிதை  பற்றிய  விளக்கத்தினை பல கவிதைகளினூடாக விளக்கியதோடு  ஆரம்பகால கவிதைகளின்  போக்கும்  தற்கால கவிதைப்போக்கும் குறித்து  சிலாகித்தார்.  யாப்புக்குள்  செதுக்கப்பட்ட  கவிதைகள்  கட்டுடைந்து புதுக்கவிதை நவீன  கவிதை  என பல  வடிவங்களை பெற்றுவிட்டது.
எப்படித்தான்  புதுவடிவம்  பெற்றாலும்  யாப்பிலக்கணத்துடன்  புனையப்படும்கவிதைகளின்  மகத்துவத்தை  கூறியதோடு  இன்றைய  புதுக்கவிதைகளின்  சில நகைச்சுவைக் கவிதைகளையும்  சொல்லி மண்டபத்தை புன்னகைக்குள் அலங்கரித்தார்.


அவரைத்தொடர்ந்து தமிழ்த்துறைத்தலைவர்  பேராசிரியர்  வ.மகேஸ்வரன்  அவர்கள்தலைமையுரையினை  வழங்கினார்.  ஓர்  ஆசானுக்குரிய  தாய்மையுணர்வில்  அவர் மகிழ்ந்து  பேசியதும் அவருடைய  மாணவன் ஒரு  கவிஞனாக  தன்முன்  நிற்பதையிட்டு அவர் பூரித்தது  எல்லாமே  நெகிழ்ச்சியான  விடயங்கள். எப்போதும் நல்லாசான்களுக்குரிய  தனிப்பண்பும் அதுவே. தோழமைக்குணம் நிறைந்த  அவர்,நா.செந்தூரன்  அவர்களின் வளர்ச்சி பற்றியும் அவருடைய  ஆர்வம்  செயற்பாடுகள்குறித்தும் கூறிமகிழ்ந்தார்.

 அத்துடன்  பல்கலைக்கழக  மாணவர்களிடையே  இதுபோன்ற இலக்கிய  செயற்பாடுகள்  வளரவேண்டும்  எனவும் அதற்கு பல்கலைக்கழக  தமிழ்ச்சங்கம் எப்போதும்  தனது  ஆதரவை  வழங்கும்  என்றும் கூறி, மாணவர்களிடையே  இதுபோன்ற ஆர்வம்  மிகக்குறைவாகவே இருக்கின்றது என்பதனையும்  வெளிப்படுத்தினார்.



அதனைத்தொடர்ந்து  தமிழ் எப்  எம்  வானொலியின்  சிரேஸ்ட  அறிவிப்பாளர்  முகுந்தன்அவர்கள் அறிமுக உரையினை ஆற்றினார். முதலாவதாக, தான் பேராசிரியர் வ.மகேஸ்வரன்  அவர்களின்  மாணவன்  எனவும்  தனது  தமிழறிவுக்கு  வித்திட்டவர்இவரே  என்றும்கூறி பூரிப்படைந்தார்.  பின்பு  கவிஞர் அவர்களின்  கவிதையார்வம் குறித்தும்  அவருடைய   கவிதைகளுக்கு  வானொலி  நேயர்களிடையே  இருக்கும் வரவேற்பு  பற்றியும்  விபரித்ததோடு 'யாதுமாகி'  நூல்  மகுடத்தினை  கவிஞரின் வேண்டுகோளுக்கிணங்க வழங்கிய  சந்தர்ப்பத்தினையும் கூறினார். அத்துடன் ஆர்வமுள்ளஇளைய  தலைமுறைக்கு  தன்னாலான  வாய்ப்புக்களை  வழங்குவதாகவும்சந்தர்ப்பத்தினை  ஏற்படுத்தி   தருவதாகவும் வாக்களித்தார்.


இவ்  உரையினைத்தொடர்ந்து நூல் வெளியீட்டு  நிகழ்வு ஆரம்பமானது பல்கலைக்கழக தமிழ்த்துறைப்பொறுப்பாளர்  வ.மகேஸ்வரன்  அவர்களால்  வண.அருட்திரு தமிழ்நேசன்அடிகளார் முதற்பிரதியினை  பெற்றுக்கொண்டார். பின்னர்  விரிவுரையாளர்கள்  மற்றும்அனைவருக்கும் சிறப்பு  பிரதி  வழங்கப்பட்டது.



தெளிந்த  நீரோடைபோல  சலசலப்பில்லாது  நகர்ந்த வெளியீட்டு விழாவில் நிகழ்வுகள்அடுத்தடுத்து அழகாய்  கோர்க்கப்பட்டிருந்தது நூல்  வழங்கலைத்தொடர்ந்து  பேராதனைபல்கலைக்கழக  தமிழ்ச்சங்கத்தலைவர்  கீர்த்தனன்   வெளியீட்டுரையினை நிகழ்த்தினார்.


இதன்பின்னர்  பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர்  எம்.எம்.ஜெயசீலன்  அவர்கள்விமர்சன  உரையினை காத்திரமாக  வழங்கினார் இத்தொகுப்பில் கவிஞருடையபெரும்பாலான கவிதைகள் கவியரங்கக்கவிதைகளே உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே  கவிஞர் சந்தத்திற்கே முன்னுரிமை  வழங்கியுள்ளார் எனவும் சந்தத்தை மட்டும்கவனிக்கும்போது  வரிகளில் சில வேளை கருத்துக்கள் பிரள்வதாகவும்  விமர்சித்தார்.யாப்பிலக்கண  அறிவின் தேவையை, சிறப்பை கூறிய அவர் செந்தூரன் அவர்கள்இவ்விடயத்தில் கவனம் செலுத்துவாராயின் இன்னும்  அவரது கவிதை வலுப்பெறும்எனக்கூறி  வாழ்த்துதல்களோடு விடைபெற்றார்.


விமர்சன உரையின் பின்னர், இவ்விழாவின்  நாயகனும்  'யாதுமாகி' கவிதைத்தொகுப்பின்பிதாவுமான  கவிஞர்  செந்தூரன்  அவர்கள் தனது  நன்றியுரையுடன்  மேடையேறினார்.இந்நூல் வெளிவர  பலவழிகளிலும் உதவிய அத்தனைபேருக்கும் , விழாவில் கலந்து சிறப்பித்த  அனைவருக்கும்  தனித்தனியாக பெயர்குறிப்பிட்டு  நன்றிப்பூக்களை  தூவிய அவர், தனது  கவிதை பற்றிய  விமர்சனங்களுக்கும் கருத்துக்களுக்கும்  இவ்வாறு மனந்திறந்தார்.


கவிஞ‌ரின் கருத்தின் சுருக்கம்   இவ்வாறு  அமைந்தது  அதாவது, நான்  கா.பொ.த சாதாரன தரம்  வரை  மாத்திரமே  தமிழ்மொழியினை கற்றேன்  அக்காலம்  வரையிலான தமிழறிவினைக்கொண்டே  என்  கவிதை  மீதான  தாகத்துக்கு  உரமிட்டுக்கொண்டேன்.எனது தமிழ்  ஆசிரியர்  ஒருவரின் வழிநடத்தலால் கவிதைகளில்  சந்தத்துக்கு முன்னுரிமை கொடுத்தேன்  அதுவே  இன்றென்னை நூலொன்றினை பிரசவிக்கவழிசெய்த‌து.


 அத்துடன் கவிதைக்கு  யாப்பிலக்கணம்  அவசியம்தான் மறுக்கவில்லை ஆனால் எனது  கவிதைகளுக்கு  கொடுத்திருக்கும்  சந்த  முக்கியத்துவத்தினை மாற்றி அதனை தவிர்த்து  கவிபுனைய  விரும்பவில்லை  என  தன் மனநிலையில்  கொண்ட  உறுதியினை  வெளிப்படுத்தினார்.



உண்மையில் இவரது  பேச்சினை செவிமடுத்துக்கொண்டிருந்த ஆசான்கள்  முதல்  பெரியவர்கள்  அனைவரும்,  கவிஞரின்  கருத்தில் முரண்படவோ  எதிர்கருத்து சொல்லவோ  அல்லது தமது கருத்தை  ஏற்கவில்லையா  என  சந்தேகம் கொண்டு  பார்க்கவோ இல்லை. மாறாக எல்லார்  முகத்திலும், ஒரு  குழந்தை  கதைக்கும்போது  அம்மழலையினை தாயானவள் எவ்வாறு  ரசிப்பாளோ அந்த உணர்வில் கவிஞரை  பெறுமிதத்துடன் பார்த்து  வாழ்த்திக்கொண்டிருந்ததையும், மெய்யாகவே  எதிர்காலத்தில் செந்தூரன்  அவர்கள்  சிறப்பான  ஓரிடத்தை  பிடிப்பார்  என்ற  நம்பிக்கையுடனும்  ஆசீர்வதித்ததை காணக்கூடியதாக இருந்தது.

இந்த  உணர்வின்  எதிரொலியினை நன்றியுரைக்குப்பின்னரான  வாழ்த்துரையில்  காணமுடிந்தது. சிரேஸ்ட  விரிவுரையாளர்  சிறீ பிரசாந்தன் அவர்கள் கவிஞர்  செந்தூரன்  அவர்களை மனப்பூர்வமாக வாழ்த்தியதோடு  தமிழனுக்கே  உரிய  தமிழுக்கே  உரிமையுடைய  மரபின் முக்கியம்பற்றிக் கூறி விடைபெற்றார்.


உண்மையில்  பெருமிதம் கொள்ள்வேண்டிய  விடயம் கவிஞர்  செந்தூரன்  அவர்கள் தனது  ஆசான்கள் முன்னிலையில்  நண்பர்கள்  முன்னிலையில்  மிக இளவயதில்  பல்கலைக்கழக மாணவனாக தன்  கன்னி  வெளியீட்டை  வெளியிட்டது சிறப்பான  விடயம்.

மனத்திடமும்  தெளிவும்  பரந்த  தேடலும்  கொண்ட  இம்மாணவக்கவிஞன்  எதிர்காலத்தில் நல்ல உயர்வுகளை அடைவார்  என்பதில்  ஐயமில்லை. இவரின்  முயற்சியும் வெற்றியின்  மீதான  வெறியும்  நல்ல  தமிழாழத்தினை பெற்றுக்கொள்ள  வழிகோலும் என்பது  திண்ணம்.

கவிஞரின்  அனைத்து  முயற்சிகளுக்கும் வாழ்த்துக்களை தூவிய  வண்ணம்  மனநிறைவான  ஓர்  நூல்வெளியீட்டில் கலந்துகொண்ட  திருப்தியுடன்  பேராதனைப் பல்கலைக்கழக வளாகத்தினைவிட்டு  வெளியேறினேன்.





நன்றி
த.ராஜ்சுகா


Sunday, June 12, 2016

"துளிர்" கவிதை நூல்




இலக்கியப்பரப்பில் இடைவெளியில்லாது தொடரும் நூல் வெளியீடுகளில் மலையக மைந்தரொருவரின் கன்னி வெளியீடும் இணைந்துகொள்கின்றதுபொகவந்தலாவையை சேர்ந்தவரும் அவுஸ்திரேலியா வாழ் KG என அறியப்பட்ட கனகேஸ்வரன் அவர்களின் "துளிர்என்ற கவிதை நூல் வெளியீடு 09.04.2016 அன்று வெளியிடப்பட்டது.


முற்றுமுழுதாக வர்ணத்தாள்களில் பதிக்கப்பட்டு பிரசுரமான இந்நூலுக்கு ஆசியுரையினை டென்மார்க் ரதிமோகன் அவர்களும் அணிந்துரையினை எழுத்தாளர் வவுனியூர் இரா.உதயணன் அவர்களும் வாழ்த்துரைகளினை லோஜினி அவர்களும் மித்திரன் வாரமலர் ஆசிரியர் பொன்மலர் சுமன் அவர்களும்   கவிஞர் வே.முல்லைத்தீபன் அவர்களும் வழங்கியுள்ளதோடு இந்நூலினை சிறப்பாக வடிவமைத்துள்ள விஜய் அச்சுப்பதிப்பகத்தின் என்.விஜய் அவர்கள் பதிப்புரையினையும் வழங்கியுள்ளார்பின்னட்டைக்குறிப்பினை செல்லமுத்து வெளியீட்டக இயக்குநர் யோ.புரட்சி அவர்கள் தந்திருக்கின்றார்.


இக்கவிதை நூலினை கையிலெடுத்ததும் வாசிக்கும் ஆர்வத்தினை அதிகப்படுத்துவதே இந்நூலின் வடிவமைப்புதான் பசுமை போர்த்தப்பட்ட அட்டைப்பட வர்ணம்கவிதைகளுக்கு ஏற்றாற்போல  கருத்தாழம் கொண்ட படங்களுமே.
நறுக்கென்று நான்கைந்து வரிகள் ஆழமான கருத்துக்களை கொண்டுள்ள கவிதைகள் அனைத்தும் மிக அருமைகூறவந்த விடயத்தை சுற்றிவளைக்காமல் தந்திருப்பதே இந்நூலுக்கு அதிக கனதியை தந்துள்ளது.

'மலையகத்தில்
பல பெண்கள்
குடும்பச்சுமை
பாரம் அழுத்தியே
சீக்கிரம்
பூப்பெய்திவிடுகின்றனர்..”

கவிஞர், தனது வரிகளில் கற்பனைக்கு அதிக இடங்கொடாமல் யதார்த்தமாக சமூக அவலங்களை படம்பிடித்திருப்பதை சிறப்பாக கூறலாம். ஏழ்மை, பசி துரோகங்கள், மூடநம்பிக்கை என பல்வேறு விடயங்களை தொட்டுக்காட்டியுள்ளார்.

சாதாரணமாக நாம்பார்க்கும் கோணத்தைவிட கவிஞர்கள், கலைஞர்கள் ஒரு விடயத்தை பார்க்கும் கோணம் வேறாக வித்தியாசமானதாக இருக்கும் அந்த அநுபவத்தை கவிஞர் கனகேஸ்வரன் அவர்களின் எல்லாக்கவிதைகளிலுமே காணலாம்.

"நிழலைப்பார்த்து
குரைக்கிறது நாய்
ஏன் நாய்க்கு
பேயை பட்டும் தான்
அடையாளம் தெரியுமா அது
கடவுளைக்கூட கண்டிருக்கலாம்"


தொட்டுக்காட்டிட கவிதைகள் முட்டிமோதிக்கொண்டு முன்னால் வருகின்றது எனினும் வாசகர்களின் பொறுப்பில் ஏனையவற்றை விட்டுவிடுகின்றேன். வாசிப்பார்வம் கொண்ட சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் வாசித்து மகிழக்கூடிய எளிமையான சொல்லாடலுடன் மிக அழகான நூல்.

அட்டைப்படம் முதல் அனைத்தும் ஓர் வித்தியாசத்தை நோக்கி புறப்பட்டுள்ளது. கவிஞரின் முதல் படைப்பு என்பதால் சிறு சிறு குறைகளை தவிர்த்து காத்திரமான ஆலோசனைகளாலும் கருத்துக்களாலும் அவரை ஊக்கப்படுத்த வேண்டும்.


ஈழத்து இலக்கிய வரலாற்றிற்கு புதுவரவான "துளிர்" கவிதைத்தொகுப்பை தந்த கவிஞர் இன்னும் பல நல்ல படைப்புக்களை தரவேண்டும் என வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நூல் வகை: கவிதைத்தொகுப்பு
நூலின் பெயர்:  துளிர்
நூலாசிரியர்: ப.கனகேஸ்வரன் (K G)
விலை : 250/

H.F ரிஸ்னா அவர்களின் 'மெல்லிசை தூறல்கள்"




இசையில் மயங்காத இதயமுண்டாவென்றால் இல்லையென்று கூறுமளவுக்கு நாம் இசையோடு பின்னிப்பிணைந்து வாழ்தல் பணி செய்கின்றோம். அதிலும் மெல்லிசை கீதங்களில் ஊடுருவி இதயம் மகிழாதார் எவருமிலர்.

எம்மை கவர்ந்த பாடல்களின் வரிகளை நாம் சுவைத்து அசைபோட்டு அநுபவிக்கும் சுகத்தினை பொதுவாக நம்மில் அனைவருமே பெற்றிருப்பதோடு காதல் வரிகள் எல்லா தரப்பினரையும் ஒருகணம் தட்டிப்பார்த்தே செல்லும்.

கவிதை சிறுகதை விமர்சனம் சிறுவர் இலக்கியமென பல தளங்களில் வெற்றிவாகை சூடிய கவிதாயினி H.F ரிஸ்னா அவர்கள் சிறந்த பாடலாசிரியராக வெளிப்பட்டுள்ளமை வியக்கச்செய்கின்றது.
'மெல்லிசை தூறல்கள்" என்ற பாடல் நூல் மூலமாக மேற்கூறிய இதய சுகங்களை எம் சொந்தமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இவ்விளம் படைப்பாளியை முதலில் பாராட்டியே ஆகவேண்டும். ஏலவே எட்டு நூல்களை பிரசவித்த இவர், தனது 9வது நூலை வித்தியாசமான ஓர் திறமையின் மூலத்தை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளார். 

பொதுவாக எந்த ஒரு பாடலாசிரியரும் இசையை உள்வாங்கிய பின்னரே வரிகளமைக்கும் வழக்கத்திற்கு உட்பட்டுள்ளனர். ஆனால் ரிஸ்னா அவர்கள் தன் இதயத்தில் சுழலும் இசை ஞானத்தைக்கொண்டும் கவிப்புலமையினைக் கொண்டும் பாடலாக்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.

சமூகம் காதலென சகல பக்கங்களையும் தொட்டுக்காட்டும் வரிகளில் சுவையமுது வழிந்தோடுகின்றது. 36 பாடல்களில் "பாதைகள் புதிது" எனும் பாடல் இசையமைப்பாளரும் பாடகருமான ஜ‌னாப் டோனி ஹ‌சன் அவர்களால் 2011ல் இசையமைத்து ஹஜ் பெருநாளன்று பாடப்பட்டுள்ளது  . "மக்காவில் பிறந்த மாணிக்கமே" எனும் பாடல் பாடகரும் இசையமைப்பாளருமான கலைக்கமால் அவர்களால் 2014ல் இசையமைத்து பாடப்பட்டது. இதுபோல இவரது அனைத்து பாடல்களும் இசைவடிவம் பெற்று ரசிகர்களை நனைக்க வேண்டுமென்பது எனது பிரார்த்தனை.

'அன்பை அள்ளிப் பொழியும்' என்ற முதல் பாடல் வரிகளில் அல்லாவை வாழ்த்தும் வரிகளாகவும் அதன்பின்னால் அனைத்தையும் அலசும் பாடல்களாகவும் அமைந்திருக்கின்றன. 

"அனைத்தும் பயில மனமிருந்தால்
அகிலம் உனக்கு ஏணிதரும்
அறிவால் வெல்லும் பலமிருந்தால்
அரிவாள் நாணிவிடும்'

இளம் சமூகத்தை நோக்கி அறைகூவல் விடுக்கும் இவரின் பல கவிதைகள் பிரயோசனம் நிறைந்த கருத்துக்களாக, சமூக அக்கறை சமூக நேசன் கொண்ட இவரின் உள்ளக்கிடக்கைகள் சமூகத்துக்கு அதிகம் கடமைப்பட்டதாக வெளிப்படுகின்றது. தன் எழுத்துக்களால் அக்கடமையினை செவ்வனே செய்துமுடித்திருக்கின்றார். 


இந்திய பாடல்களின் மாயைக்குள் மூழ்கிப்போயிருக்கும் இலங்கையின் ரசனைக்கண்கள் சும்மாவேனும் எம் படைப்புக்களை திரும்பிப் பார்க்காதிருப்பது வேதனைதான். இதனை நூலாசிரியரும் தனதுரையில் கூறியுள்ளார். இந்திய பாடல்களுக்கு எவ்வகையிலும் தரத்திலும் சரி கனதியிலும் சரி குறைவுபடாமல் ரசனைப்பார்வைக்கு விருந்தாக அமைந்துள்ள இந்நூலின் பாடல்கள் அனைத்தும் இசையமைத்து பாடப்படுமாயின் இசைப்பிரியர்களுக்கு சிறந்த வரமாக அமையுமென்பதில் எவ்வித ஐயமுமில்லை. இலங்கையின் இசையமைப்பாளர்களே இது உங்கள் கடமைகளிலும் ஒன்றே என்பதனையும் இவ்விடத்தில் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்

இவரின் அனைத்து இலக்கிய பணிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு இன்னும் பல வெற்றிப்படிகளை எட்டவேண்டும் என்ற பிரார்த்தனைகளோடு நிறைவுசெய்கின்றேன். 


நூலின் வகை: பாடல் தொகுப்பு
நூலின் பெயர்: மெல்லிசைத்தூறல்கள்
நூலாசிரியர்: எச்.எப்.ரிஸ்னா
விலை: 300/
தொடர்புகளுக்கு : riznahalal@gmail.com


வெட்டு (VAT)

வெட்டு (VAT) வெட்டுனு வெட்டுறாங்க - நாங்க
திட்டு திட்டுனு திட்டுறம்...

கவியருவி கவிதைப் போட்டியில் இரண்டாமிடம்


நம் கவியருவியில் 23-05-16 முதல் 30-05-16 வரை நடைபெற்ற “மின்னிதழ் வாரம்” கவிதைப் போட்டியில் இரண்டாமிடம் வென்ற இலங்கை த.எலிசபத்/ ராஜ்சுகா அவர்களின் கவிதையும், அவர்களைப் பாராட்டி நாங்கள் வழங்கும் சான்றிதழும் இதோ உங்களின் பார்வைக்கு:

விழுமுன் எழு
****************

உன்னை நீயே உணர்ந்து கொள்
உலகை வெல்ல வழியை கேள்
கண்ணை திறந்து வலிகள் வெல்
கலக்கம் தீர தெளிந்து நில்....

விழுத்தித் தள்ளும் விஷங்கள் அறி
விதியை துடைக்கும் விடயம் படி
அழுத்தி சொல்லும் ஆளுமையில் தெளி
விழுந்து விடாத எழுதல் படி.....

தோல்வி கணடு துடிப்பதை விடு
தோழர் தேர்வில் கவனம் எடு
பாழ்பட்ட நினைவை படிப்பது தடு
பாரில் உனக்கானப்
பாதையை நடு

த.ராஜ்சுகா
இலங்கை.




வெண்பாவை - பெண்பாவை

வெண்பாவை நாடினான் கவிஞன் -அதை
பெண்பாவையில் தே(பா)டினான் காதலன்.....

நன்றி கெட்ட உலகமடா ராமா

நன்றி கெட்ட உலகமடா ராமா
நன்மை செய்து மறந்துவிடு ராமா
என்று மதை நினையாதே ராமா
எவருமிங்கு ஒருவர்தான் ராமா.....

உன் திருமண நாளை

வருடா வருடம் - உன்
திருமண நாளை கொண்டாடுகிறாய்
விமர்சையாக - நம்
காதலை கொன்றுவிட்டு.....