Sunday, June 12, 2016

"துளிர்" கவிதை நூல்




இலக்கியப்பரப்பில் இடைவெளியில்லாது தொடரும் நூல் வெளியீடுகளில் மலையக மைந்தரொருவரின் கன்னி வெளியீடும் இணைந்துகொள்கின்றதுபொகவந்தலாவையை சேர்ந்தவரும் அவுஸ்திரேலியா வாழ் KG என அறியப்பட்ட கனகேஸ்வரன் அவர்களின் "துளிர்என்ற கவிதை நூல் வெளியீடு 09.04.2016 அன்று வெளியிடப்பட்டது.


முற்றுமுழுதாக வர்ணத்தாள்களில் பதிக்கப்பட்டு பிரசுரமான இந்நூலுக்கு ஆசியுரையினை டென்மார்க் ரதிமோகன் அவர்களும் அணிந்துரையினை எழுத்தாளர் வவுனியூர் இரா.உதயணன் அவர்களும் வாழ்த்துரைகளினை லோஜினி அவர்களும் மித்திரன் வாரமலர் ஆசிரியர் பொன்மலர் சுமன் அவர்களும்   கவிஞர் வே.முல்லைத்தீபன் அவர்களும் வழங்கியுள்ளதோடு இந்நூலினை சிறப்பாக வடிவமைத்துள்ள விஜய் அச்சுப்பதிப்பகத்தின் என்.விஜய் அவர்கள் பதிப்புரையினையும் வழங்கியுள்ளார்பின்னட்டைக்குறிப்பினை செல்லமுத்து வெளியீட்டக இயக்குநர் யோ.புரட்சி அவர்கள் தந்திருக்கின்றார்.


இக்கவிதை நூலினை கையிலெடுத்ததும் வாசிக்கும் ஆர்வத்தினை அதிகப்படுத்துவதே இந்நூலின் வடிவமைப்புதான் பசுமை போர்த்தப்பட்ட அட்டைப்பட வர்ணம்கவிதைகளுக்கு ஏற்றாற்போல  கருத்தாழம் கொண்ட படங்களுமே.
நறுக்கென்று நான்கைந்து வரிகள் ஆழமான கருத்துக்களை கொண்டுள்ள கவிதைகள் அனைத்தும் மிக அருமைகூறவந்த விடயத்தை சுற்றிவளைக்காமல் தந்திருப்பதே இந்நூலுக்கு அதிக கனதியை தந்துள்ளது.

'மலையகத்தில்
பல பெண்கள்
குடும்பச்சுமை
பாரம் அழுத்தியே
சீக்கிரம்
பூப்பெய்திவிடுகின்றனர்..”

கவிஞர், தனது வரிகளில் கற்பனைக்கு அதிக இடங்கொடாமல் யதார்த்தமாக சமூக அவலங்களை படம்பிடித்திருப்பதை சிறப்பாக கூறலாம். ஏழ்மை, பசி துரோகங்கள், மூடநம்பிக்கை என பல்வேறு விடயங்களை தொட்டுக்காட்டியுள்ளார்.

சாதாரணமாக நாம்பார்க்கும் கோணத்தைவிட கவிஞர்கள், கலைஞர்கள் ஒரு விடயத்தை பார்க்கும் கோணம் வேறாக வித்தியாசமானதாக இருக்கும் அந்த அநுபவத்தை கவிஞர் கனகேஸ்வரன் அவர்களின் எல்லாக்கவிதைகளிலுமே காணலாம்.

"நிழலைப்பார்த்து
குரைக்கிறது நாய்
ஏன் நாய்க்கு
பேயை பட்டும் தான்
அடையாளம் தெரியுமா அது
கடவுளைக்கூட கண்டிருக்கலாம்"


தொட்டுக்காட்டிட கவிதைகள் முட்டிமோதிக்கொண்டு முன்னால் வருகின்றது எனினும் வாசகர்களின் பொறுப்பில் ஏனையவற்றை விட்டுவிடுகின்றேன். வாசிப்பார்வம் கொண்ட சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் வாசித்து மகிழக்கூடிய எளிமையான சொல்லாடலுடன் மிக அழகான நூல்.

அட்டைப்படம் முதல் அனைத்தும் ஓர் வித்தியாசத்தை நோக்கி புறப்பட்டுள்ளது. கவிஞரின் முதல் படைப்பு என்பதால் சிறு சிறு குறைகளை தவிர்த்து காத்திரமான ஆலோசனைகளாலும் கருத்துக்களாலும் அவரை ஊக்கப்படுத்த வேண்டும்.


ஈழத்து இலக்கிய வரலாற்றிற்கு புதுவரவான "துளிர்" கவிதைத்தொகுப்பை தந்த கவிஞர் இன்னும் பல நல்ல படைப்புக்களை தரவேண்டும் என வாசகர்கள் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

நூல் வகை: கவிதைத்தொகுப்பு
நூலின் பெயர்:  துளிர்
நூலாசிரியர்: ப.கனகேஸ்வரன் (K G)
விலை : 250/

No comments: