Thursday, March 31, 2016

"ஆதங்கத்தின் அரங்கம்" நேர்காணலுக்கான அறிமுகம்.




        தடாகம் கலை இலக்கிய வட்டத்தின் "ஆதங்கத்தின் அரங்கம்" என்ற பகுதியில் இடம்பெற இருக்கும் எனது நேர்காணலுக்கான அறிமுகம்.



அல்லியை சின்ன மல்லியை
கிள்ளி விட்டேன் இந்தக் கன்னியை
சுகந்தம் பரப்பப் போகின்றதோ
இல்லை வசந்தம் கொடுக்கப் போகின்றதோ 
அட போட்டு வாட்டி எடுக்கப்போகின்றதோ
வேகமாக. ஆட்டிப் படைக்கப் போகின்றதோ
பொறுத்திருந்து பார்ப்போம்
வார இறுதியிலே ..........////
ஆம் இந்த வாரம் ஆதங்கத்தின்
அரங்கம் நேர்காணல் மூலம்
உங்களை சந்திக்க வருகின்றார்
இலங்கையை சேர்ந்த சகோதரி
கல்குடா நேசன் வலைத்தளம் மூலம்
பல கவிஞர்களை நேர்காணல் கண்டு
முகநூலில் பலருக்கு அறிமுகமானவர்
ஆசிரிகையும் கவிஞருமான. சகோதரி
ராஜ் சுகா( Raj Suga ) அவர்களின் ஆதங்கத்தை
கொஞ்சம் உசுப்பி விட்டேன் படித்து
கருத்தோடு வாழ்த்தும் உரைக்க மறவாதீர்கள்
நட்பூக்களே ......////
வாழ்த்துக்கள் ராஜ்சுகா .


smile emoticon
இ. சாந்தா (ஆர்.எஸ்.கலா)

Wednesday, March 30, 2016

வேஷத்தை கலைத்து நீயும் நிற்பதென்ன‌



கனவுக்குள் தொலைந்த நீ
நினைவில் வந்தொ துங்கியதென்ன‌
நிஜமாக நீங்கிய நீ
நித்தமெனை வதைப்பதென்ன....


பூங்காட்டில் தள்ளி நீயும் சிரிப்பதென்ன‌
புயலலையில் வீசியெனை புதைப்பதென்ன‌
காற்றாறு போல வந்து அடித்துவிட்டு
காணாதவனாய் நீ நடிப்பதென்ன.....

தேன்கூடாய் நெஞ்சத்தை கலைத்ததென்ன‌
தேனியாய் வந்து வந்து கடிப்பதென்ன‌
பால்மனதை வண்ணமாய் மாற்றியதென்ன‌
பாலைவனத்தில் தீ மூட்டியதென்ன....


வஞ்சத்தை மறைத்துக்கொண்டு மலர்ந்ததென்ன‌
வரண்டுபோன அன்பதனை காட்டியதென்ன‌
நெஞ்சத்தின் ஈரமெலாம் காய்ந்ததென்ன‌
நெருஞ்சியாய் நீ தெரிவதென்ன...


நேசத்தை காசாக பார்த்ததென்ன‌
நேரத்துக்கு பச்சோந்தியாய் மாறியதென்ன‌
வேஷத்தை கலைத்து நீயும் நிற்பதென்ன‌
வேதனையரும் புன்னில் மரித்ததென்ன....

Friday, March 25, 2016

“கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” (25.03.2016) கவிதாயினி எச்.எப். ரிஸ்னா



பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாகப் பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது.

 இதன் தொடரில் இன்று 25.03.2016ம் திகதி வெள்ளிக்கிழமை எம்மோடு 30வது படைப்பாளியாக இணைந்து கொள்கின்றார் தியத்தலாவையைச் சேர்ந்த இளம் கவிதாயினி எச்.எப். ரிஸ்னா அவர்கள், கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், சிறுவர் இலக்கியம் ஆகிய தளங்களில் த‌னது இலக்கியப் பணியை மேற்கொண்டுவரும் இவர்,

//இன்று பெண் விளையாட்டுத் துறையில் சாதித்திருக்கின்றாள். பட்டி மன்றங்களில் தூள் கிளப்புகின்றாள். விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றாள்... எனவே அவை காலமாற்றத்தால் ஏற்பட்டவை மாத்திரமல்ல, பலரது மன மாற்றத்தாலும் ஏற்பட்ட வெற்றியாகும்//
என பெண்கள் பற்றி பெருமை பேசும் கவிதாயினி பெண்ணியம் மிக துல்லியமாக ஆழமான கருத்தொன்றையும் முன்வைத்துள்ளார். முதிர்ச்சித்தன்மையோடு வார்த்தைகளால் விளையாடும் இவரது திறமையினை வாய்விட்டு வாழ்த்தாமல் இருக்கமுடியாது எனவே இவரின் எதிர்காலத்துக்கான ஆசிகளோடும் வாழ்த்துக்களோடும் நேர்காணலில் இணைந்துகொள்வோம்.

1. தங்களின் அறிமுகத்தோடு இலக்கியத்தில் கால் பதித்த அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்?

நான் தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா என்ற பெயரில் இலக்கியப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இதழியல் துறைக்கான டிப்ளோமாப் பட்டத்தைப் பெற்றிருக்கிறேன். கவிதை, சிறுகதை, நூல் விமர்சனம், சிறுவர் இலக்கியம் ஆகிய தளங்களில் எனது இலக்கியப் பணி தொடர்கிறது. அதேபோல பாடல் எழுதுவதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றேன். எதிர்காலத்தில் நாவல் வெளியிட உத்தேசித்திருக்கின்றேன். அதற்கான முயற்சிகள் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.


02. எவ்வாறு உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்கின்றீர்கள்?

இந்த இடத்தில் நான் எனது தாயாருக்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவர் தமிழ்ப்பாட ஆசிரியர். தினமுரசு பத்திரிகையில் வரும் பாப்பா முரசு பகுதியை அவர் சேகரித்து வைத்திருந்தார். தரம் மூன்றில் கற்கும் காலத்தில் பாப்பா முரசு பகுதியை எனது தாயார் எனக்கு வாசிக்கத் தந்தார். அவற்றை மிகவும் ஆர்வமாக வாசிப்பேன். குறும்புத் தனங்கள் குடிகொண்டிருந்த அந்த வயதில் வாசிப்பும் என்னை ஈரத்திருந்தது. ஆழமான வாசிப்பு என் சிறுவயது தொடக்கம் என்னை பற்றிப் பிடித்துக்கொண்டிருந்ததால் எழுத்துத் துறையில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் வலுவடைந்தது. அதன் பிறகு பாடசாலை வாசிகசாலையில் நீல பத்மனாபன் கதைகள் என்ற பெரியதொரு புத்தகத்தை இரவல் பெற்று வாசித்தேன். அதைத் தொடர்ந்து பொது நூலகத்திலும் காணப்பட்ட புத்தகங்கள் என் வாசிப்புக்கு  அதிக உதவி புரிந்தது எனலாம். பத்திரிகையில் வரும் கவிதைகளை ஒன்றுவிடாமல் வாசிப்பேன். அவ்வாறு வாசித்தவற்றில் பிடித்தவை இறைவன் உதவியால் என் மனதிலே பதிந்து விடும். இவ்வாறானவற்றால் என் திறமைகள் வெளிப்பட்டிருக்கும் என எண்ணுகின்றேன்.

03. எவ்வகையான இலக்கியங்களை படைக்கின்றீர்கள்?

ஆரம்பத்தில் நான் கவிதைகள் எழுதுவதில்தான் அதிக கவனமெடுத்துக் கொண்டேன். கவிதைகள் பல எழுதியதைத் தொடர்ந்து சிறுகதை எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதைத் தொடர்ந்து சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்டு பின்பு அதில் வெற்றியும் பெற்றேன். 

எழுத்தாளர் ரிம்ஸா முஹம்மத் அவர்கள் சில புத்தகங்களைத் தந்து அதற்கு விமர்சனம் எழுதுமாறு என்னிடம் கூறியபோது சுவாரஷ்யத்துக்காக எழுத நினைத்தேன். அதில் அவ்வளவாக பரிச்சயம் இல்லாதிருந்ததால், திறனாய்வாளர் கே. விஜயன், கே.எஸ். சிவகுமாரன் ஆகியோர் எழுதிய விமர்சனங்களை வாசித்த பின் எனக்குள் புது உற்சாகம் ஏற்பட்டது. சளைக்காமல் பலருடைய புத்தகங்களுக்கான விமர்சனங்களை எழுதினேன். காலப்போக்கில் பூங்காவனம் இதழில் பிரசுரிப்பதற்;காக பல புத்தகங்கள் எம்மை நாடி வந்தன. சிலரின் வேண்டுகோளுக்கிணங்க பத்திரிகையில் சில விமர்சனங்களை பிரசுரிப்பதற்காக அனுப்பினேன். அவை வெளிவந்ததைத் தொடர்ந்து இன்னும் பல எழுத்தாளர்கள் தத்தமது புத்தகங்களை விமர்சனத்துக்காக அனுப்பியதால் விமர்சனம் எழுத வேண்டிய சந்தர்ப்பத்துக்கு ஆளானேன்.

ரூம் டு ரீட் நிறுவனத்தால் நடத்தப்பட்ட கருத்தரங்குகளில் கலந்துகொண்டு சிறுவர் கதை நூல்களையும், தேசிய நூலக ஆவணவாக்கல் சபையினால் சிறுவர் பாடல் நூல்களையும் வெளியிட்டேன். அதன் பிறகு நேத்ரா அலைவரிசையில் ஒலி, ஒளிபரப்புவதற்காக பாடல் எழுதித் தரும்படி தமிழ்த் தென்றல் அலி அக்பர் அவர்கள் என்னிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் பாடல் எழுதிக் கொடுத்தேன். அது நேத்ராவில் ஒலி ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து பாடல் எழுத வேண்டும் என்ற ஆவல் என்னை விடாமல் துரத்தியது. அதனால் சகோதரி ரிம்ஸா முஹம்மதின் வழிகாட்டலின் கீழ் 50 இற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கின்றேன். 

இனி நாவல் எழுத வேண்டும் என்ற ஆவல் முனைப்பு பெற்றிருக்கிறது. எதிர்காலத்தில் வெளியிட முனைவேன்.

04. இதுவரை நீங்கள் வெளியிட்டுள்ள நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

01. இன்னும் உன் குரல் கேட்கிறது (கவிதை)  2012
02. வைகறை (சிறுகதை)  2012
03. காக்காக் குளிப்பு (சிறுவர் கதை) 2012
04. வீட்டிற்குள் வெளிச்சம் (சிறுவர் கதை) 2012
05. இதோ பஞ்சுக் காய்கள் (சிறுவர் கதை) 2012
06. மரத்தில் முள்ளங்கி (சிறுவர் கதை) 2013
07. திறந்த கதவுள் தெரிந்தவை ஒரு பார்வை (விமர்சனம்)  2013
08. நட்சத்திரம் (சிறுவர் பாடல்) 2014
09. மெல்லிசைத் தூறல்கள் (பாடல்) 2016


05. அண்மையில் தாங்கள் வெளியிட்ட 'மெல்லிசை தூறல்கள்' பாடல் நூலினைப் பற்றி?

இதில் 36 பாடல்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. இப்புத்தகத்துக்கான அணிந்துரையை பேராசிரியர் துரை மனோகரன் அவர்களும், வாழ்த்துரையை திருமதி. ரதி தேவசுந்தரம் அவர்களும் நூலின் பின்னட்டைக் குறிப்பை கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் அவர்களும் வழங்கியிருக்கின்றார்கள். ஆன்மீகப் பாடல்கள், சமூகப் பாடல்கள், காதல் பாடல்கள், கானா பாடல்கள் என எல்லா துறைகளிலிருமிருந்து எழுதியிருக்கின்றேன். இந்தப் பாடல் நூல் எனது 09 ஆவது நூல் வெளியீடாகும்.


06. இப்பாடல்களினை இசைசேர்த்து இறுவட்டாக வெளியிடும் எண்ணங்கள் உண்டா? அதற்கான முயற்சிகள் காணப்படுகின்றதா?

எனது புத்தகத்தில் உள்ள இரு பாடல்கள் திரு. டோனி ஹஸன் அவர்களாலும், திரு. கலைக்கமால் அவர்களாலும் இசையமைத்து பாடப்பட்டுள்ளன. டோனி ஹஸன் அவர்கள் இசையமைத்துப் பாடிய 'இன்பங்கள் பொங்கும்' என்ற பாடல் நேத்ரா அலைவரிசையில் ஒலி, ஒளிபரப்பப்பட்டுள்ளது. கலைக்கமால் அவர்கள் இசையமைத்துப் பாடிய 'மக்காவில் பிறந்த மாணிக்கமே' என்ற பாடல் அவர் வெளியிட்ட மண்வாசனையில் மகரந்தப் பூக்கள் என்ற இறுவட்டில் இணைக்கப்பட்டிருக்கின்றது.

அதுதவிர இன்னும் சில இசையமைப்பாளர்களும் எனது பாடல்களுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அவை முடிவற்றதும் எனது பாடல்களை இசை வடிவில் கேட்கும் வாய்ப்பிருக்கும்.


07. பாடல்கள் எழுத முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்குள் ஏற்பட்டதெவ்வாறு?

நான் சிறு வயதிலேயே பாடல்களை ரசிப்பவள். என் நண்பிகள் எல்லோரும் புதிய பாடல்களைக் கேட்கும் சந்தர்ப்பங்களில் நான் பழைய பாடல்களையும் கேட்டு ரசித்திருக்கின்றேன். அவர்கள் புதிய இசைகளை விரும்புவார்கள். ஆனால் நான் இசையோடு சேர்த்து பாடல் வரிகளுக்குள் லயித்திருப்பேன். பாடல்களைக் கேட்டுக்கொண்டு என் காரியங்களைச் செய்வதில் எனக்கு அலாதி விருப்பமும், பிரியமும் இருந்தது. எந்தளவுக்கென்றால் தரம் ஐந்து புலமைப் பரிசிலுக்காக படிக்கும் சந்தர்ப்பமானாலும் சரி, சா.த பரீட்சை, உயர். தர பரீட்சைக்காக படிக்கும் காலமானாலும் சரி பாடல்களோடு எனக்கிருந்த உறவு அறுந்து போகவில்லை. இதனால் பலரிடம் நான் திட்டு வாங்கியிருக்கின்றேன். படிக்கும் நேரத்தில் பாடல் கேட்க வேண்டாம் என்று பலமுறை அறிவுறுத்தப்பட்டிருக்கின்றேன். எனினும் புலமைப்பரிசிலிலும் சரி, சா.தர, உயர் தர பரீட்சைகளிலும் சரி நான் கோட்டை விடாமல் சித்தியடைந்தேன். என் கலையுணர்வு என் கல்விக்கு தடையாக இருக்கவில்லை. என்னிடம் 'Part II' படித்தாயா? என்று கேட்கும் போது கூட 'பாட்டு' படிச்சேன் என்று சொல்லியிருக்கிறேன்.

'குடை பிடித்து செருப்புமிட்டு புத்தகமும் கொண்டு' என்ற சிறுவர் பாடலை ஆசிரியர் இசையோடு சொல்லித் தந்ததுவும், 'கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று காவல் புரிகின்ற சேவகா' என்ற பாடலை ரசனையோடு பாடியதும் இன்றும் பசுமரத்தாணி போல நெஞ்சில் பதிந்திருக்கின்றது.

அதே போல தரம் ஒன்பதில் நான் கற்கும் போது எனது தாயார்தான் எமக்கு தமிழ்ப்பாட ஆசிரியராக இருந்தார். அந்த புத்தகத்தில் காணப்பட்ட கீழ்வரும் பாடலை சினிமா பாடல் மெடடொன்றுக்கு பாடிக்காட்டும்படி ஆசிரியர் (எனது தாயார்) மாணவர்களுக்குச் சொன்னார். நான் பல பாடல்களின் இசையுடன் பொருத்திப் பார்த்தேன். இறுதியில் 'செம்பருத்திப் பூவே செம்பருத்திப் பூவே உள்ளம் அள்ளிப் போனாய் நினைவில்லையா?' என்ற பாடலின் மெட்டுக்கு இது பொருந்தியது.

போட்டர் மணி அடிக்கப் 
போகட்டும் என்று சொல்லிக்
காட்டர் கொடி எடுத்துக்
காட்டி கணைத்தபடி 
ஓட்டம் தொடங்கிற்று 
உயிர் பெற்று ஒரு வண்டி 
கட்டிடங்கள் கீரை கழனிகளாய்...
நீள் கடல்போல் வெட்ட வெளியாய் வெறும் புல்....

அதே போல பாடசாலையில் நடக்கும் பாடல் போட்டிகள், மத்ரஸாவில் நடக்கும் மீலாத் தின பாடல் போட்டிகளுக்கு எனது தாயார் ஹிந்திப் பாடல்கள், பழைய தமிழ் பாடல்கள் ஆகியவற்றின் மெட்டுக்கு வேறு பாடல்களை எழுதித் தருவார். அவற்றைப் பாடி பல தடவைகள் மாகாண மட்டங்களிலும் முதலிடம் பெற்றிருக்கின்றேன். நான் பாடும்போது சபையில் ஊசி விழுந்தாலும் கேட்கும் ஒரு அமைதி நிலவும். அதை எனது ஆசிரியர்கள் மிகப் பெருமையாகக்கூறி என் தாயாரிடம் என்னைப் பற்றி பாராட்டுவார்கள். 

இவ்வாறு இருந்த என் திறமைகளை நானே மறந்திருந்திருந்தேன். பாடலுக்கும் எனக்கும் தொடர்பே இல்லாமலிருந்த சந்தர்ப்பத்தில்தான் கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் தனியார் அமைப்புக்கள் ஆகியன ஆண்டு தோறும் திறந்த மட்ட பாடல் போட்டிகளை நடத்துவார்கள். அதுகுறித்து பத்திரிகைகளில் பிரசுரமான பாடல் போட்டிக்கான தகவல்களை சகோதரி ரிம்ஸா முஹம்மத் எனக்கு சொல்லித் தருவார். அவர் சொல்லித் தராவிட்டால் அப்போட்டிகளுக்கு நான் எழுதி, அவற்றை அனுப்பி வைத்து, முதல் பரிசும், பாராட்டும் பெற்றிருக்க முடியாது. இந்தப் புத்தகத்தைக்கூட வெளியிட்டிருக்க முடியாது.


08. இவ்விலக்கிய பெரும் பரப்பில் சளைக்காமல் இயங்கும் படைப்பாளியான தங்களின் வெற்றியின் ரகசியம்?

சளைக்காமல் இயங்குவதற்குக் காரணம் சகோதரி ரிம்ஸா முஹம்மத் தான் என்பதை ஆணித்தரமாகக் கூற விரும்புகின்றேன். காரணம் நான் ஊரிலேயே இருந்துகொண்டு எப்போதும் போல் எழுதியிருந்தால் எனது கவிதைகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவருவதோடு நின்று போயிருக்கும். அதைவிடுத்து இலக்கியத்தின் ஏனைய பக்கங்களில் முத்துக்குளிக்க முடியாது போயிருக்கும். 

எனது வெற்றிக்கு என் குடும்பத்தவர்கள் எப்படி ஏணியாக இருக்கிறார்களோ அதே போல எனது ஒவ்வொரு முயற்சிக்கும், வெற்றிக்கும் முழுமுதற் காரணியாக இருப்பவர் ரிம்ஸா முஹம்மத் அவர்கள். எனக்கு கிடைக்கும் ஒவ்வொரு பரிசுக்கும், கை தட்டலுக்கும் சொந்தக்காரி அவர்தான். அவரால்தான் நான் சளைக்காமல் தொடர்ந்தும் எழுதிக்கொண்டிருக்கின்றேன். 

நூறு போலி நண்பர்கள் இருப்பதைவிட ஒரு உண்மையான நண்பர் இருப்பது வரமாகும். அந்த வரம் சகோதரி ரிம்ஸா முஹம்மத் மூலம் எனக்கு வாய்த்திருக்கிறது. இறைவனுக்கே எல்லாப் புகழும்.


09. போட்டிகள் நிறைந்த இச்சாலையில் நீங்கள் சந்தித்த விமர்சனங்கள், வீழ்த்துதல்கள், தட்டிக்கொடுப்புக்கள் பற்றி சொல்லுங்கள்?

இலக்கியத் துறை என்பது இலக்கிய பூதங்கள் நடமாடும் ஒரு பெருவெளியாகும். அதில் சில புன்னகையோடு தலையாட்டும். சில பூக்களை பரிசளிக்கும். ஆனால் உள் மனதுக்குள் பூதத்துக்குரிய எல்லா அம்சங்களும் இருக்கும். 

எமது படைப்புக்களில் குறைகளை மட்டும் காண்பது சிலருக்கு தொற்றிக்கொள்ளும் நோய் போலாகும். எமது செயற்பாடுகளுக்கு எப்போதும் எதிர்மறையான கருத்துக்களைக் கூறி எம்மை, எம் முயற்சியை முடக்கவும் பலர் இருக்கின்றார்கள். அதுபோல நாம் சொல்லாத ஒன்றை இன்னொருவரிடம் நாம் சொன்னதாகச் சொல்லும் பச்சோந்திகள் இருக்கின்றார்கள். நெஞ்சில் குத்த வீரமில்லாமல் முதுகில் குத்துபவர்கள் இருக்கின்றார்கள். 

நாம் தெரிவுக்காக அனுப்பும் புத்தகங்களை காரணமில்லாமல் வெட்டி வீழ்த்தியவர்களும் ஆதாரத்தோடு அம்பலமான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. புத்தகம் கிடைக்கவில்லை என்ற காரணம் எமக்கு கூறப்பட்டது. ஆனால் எதேச்சையாக எனக்கு இன்னொரு கோப்பு காட்டப்பட்டபோது அதில் குறித்த நபர் எமது படைப்புக்களை நிராகரித்திருப்பது புரிந்தது. சுய இலாபங்களுக்காகவும், இவை மேற்கொள்ளப்படுகின்றன. சில துவேசத்துக்காகவும் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுதவிர பல அரச திணைக்களங்கள், அரச நிறுவனங்கள் ஆகியவை எமது நூல்களை தரம் கண்டு கொள்வனவு செய்து ஊக்குவித்திருப்பதும் மறுக்க முடியாது. 

சில இடங்களில் போட்டிகளுக்கு அழைக்கப்பட்டு இறுதிச் சுற்றிலும் தெரிவான பிறகு இதற்கு முதல்  பரிசெடுத்தவர்கள் கண்டுகொள்ளப்பட மாட்டார்கள் என்று சொல்லப்பட்ட தருணங்களும் உண்டு. 'முதல் பரிசை ஏற்கனவே பெற்றவர்கள் மீண்டும் போட்டிகளில் கலந்துகொள்ள முடியாது' என்ற நிபந்தனை விதிக்கப்படாமல் இறுதியில் இவ்வாறு சொல்வதெல்லாம் வரலாற்றில் பதியப்பட வேண்டிய துரோகங்களாகும்.

இவர்களிடமிருந்தெல்லாம் ஒதுங்கி, விலகி ஒரு கத்தியில் நடப்பது போன்றுதான் இலக்கியத்தில் நிலைத்து நிற்க முடிகின்றது.

அதே சந்தர்ப்பத்தில் எமது அனைத்து முயற்சிகளுக்கும் கைகொடுத்தும், உதவி செய்து வரும் பல நல்ல உள்ளங்களும் எம்மோடு இருக்கின்றார்கள். அவர்களது வழிகாட்டலிலும், ஆலோசனையிலும் எமது முயற்சிகளை நாம் முன்னெடுத்துச் செல்கின்றோம். ஒரு சிலரால் எமது முயற்சிகளை ஜீரணித்து ஏப்பமிட முடியாமல் போனாலம் கூட பலர் எம்மை தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்துகின்றனர் என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று.


10. பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனைகளாக நீங்கள் காண்பதும் அதற்காக நீங்கள் தரும் ஆலோசனைகளும்?

திருமணத்துக்குப் பின் பெண்கள் எழுதுவதில்லை என்பதுதான் காலங் காலமாக சொல்லப்பட்டு வந்த பிரச்சினை. அது அவரவர்களின் வேலைப்பளுவுக்கு மத்தியில் நிர்ணயிக்கப்படுவது. அதைவிடுத்து இலக்கிய முயற்சிகளில் செயற்பட்டுக்கொண்டிருக்கும்போதே பல இடர்களை சந்திக்க வேண்டி வருகின்றது. உதாரணமாக சில ஆண் எழுத்தாளர்கள் இரட்டை அர்த்தங்களில் பேசும் பழக்கம் கொண்டவர்கள். அப்படிப்பட்ட அருவருப்புக்களில் இருந்து விலகியிருக்க வேண்டியிருக்கின்றது. அதற்காக அவர்களை பகைத்துக் கொள்ளவும் முடியாது என்ற சந்தர்ப்பத்தில் பொய்யைக் கூறிவிட்டு அவர்களிடமிருந்து கழற வேண்டியுள்ளது.

அதுபோல ஆண் எழுத்தாளர்களின் எழுத்துக்கு கிடைக்கும் பாராட்டு பெண்களில் எழுத்துக்கு அவ்வளவாக கிடைப்பதில்லை. என்னதான் ஆணாதிக்கம் அழிந்தது என்று சொல்லப்பட்டாலும் பெண்களுக்குரிய அங்கீகாரத்தை முற்றுமுழுதாக ஒருசில ஆண்களால் வழங்க முடியாதிருக்கின்றது.

அதுபோல புத்தக வெளியீடுகளை செய்யும்போது ஆண்களைப் போல பெண்களுக்கு அந்தச் சுமையை தாங்கிக்கொள்வதில் சிக்கல்கள் இருக்கின்றது. சிலநேரம் அது நகைகளை அடகுக் கடையில் வைக்கத் தூண்டுகின்றது. இவ்வாறான பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு குறிப்பிட்டவர்கள் நடந்துகொள்ளும் முறையிலேயே தங்கியிருக்கின்றது.


11. கலையுலகில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துவரும் நிலையில் அவர்களுக்கான வரவேற்பு எவ்வாறு காணப்படுகின்றது?

பெண்களை மனதார வரவேற்றம் பலர் இருக்கின்றார்கள். பெண்களை மதித்து, அவர்களின் எழுத்தை மதித்து அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் ஆண்கள் நிறையவே நம் மத்தியில் உள்ளனர். ஒரு சில கறுப்பு ஆடுகள்தான் பெண்களை இன்னும் அடிமையாகவே பார்க்கும் மனப்பாங்கில் இருக்கின்றன.
உலகலாவிய ரீதியில் நோக்கினாலும் எல்லா மட்டங்களிலும் பெண்களின் ஈடுபாடு அதிகரித்து வருகின்றது என்று கூற வேண்டும். சம உரிமை, பெண் உரிமை என்பவற்றுக்கான அர்த்தத்தை பெண்கள் வென்றிருக்கின்றார்கள் என்பது கண்கூடு. இதற்கு முன்னைய தலைமுறை சார் பெண்கள் இவ்வளவு சுதந்திரம் கொடுக்கப்ட்டவர்களாக அதாவது தமக்குள்ளிருக்கும் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டவர்களாக இருக்கவில்லை. பெண் நடந்தால் பூமிக்கு வலிக்கக் கூடாது. பெண் பேசினால் வெளியில் கேட்கக் கூடாது போன்ற அடக்குமுறைகளுக்குள் அகப்பட்டிருந்தார்கள். இன்று பெண் விளையாட்டுத் துறையில் சாதித்திருக்கின்றாள். பட்டி மன்றங்களில் தூள் கிளப்புகின்றாள். விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றாள்... எனவே அவை காலமாற்றத்தால் ஏற்பட்டவை மாத்திரமல்ல, பலரது மன மாற்றத்தாலும் ஏற்பட்ட வெற்றியாகும்.


12. 'பெண்ணியம்' தங்களின் பார்வையில்?

பெண்ணியம் என்றால் கண்ணியமாக இருக்க வேண்டும் என்பது பொருளாகும். சுதந்திரம் இல்லை.. விடுதலை இல்லை என்றெல்லாம் போராட்டம் நடத்தி குறிப்பிட்டளவு வியத்தகு வெற்றி கிடைத்த பின்பு பெண்ணியம் என்ற போர்வையில் சாத்தான் ஆடும் ஆட்டத்தை அரங்கேற்றக் கூடாது. 

திறமைகளை வெளிப்படுத்துவது முயற்சியாக கருதப்படும். ஆனால் உடலை வெளிப்படுத்துவது கவர்ச்சியாகத்தான் நோக்கப்படும். இரவில் நடமாடுவதற்கு பெண்ணுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டால் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அவள் வன்முறைக்குட்படுத்தப்பட ஆண்களுக்கு சுதந்திரம் வழங்கிவிட்டதைப் போலாகும். பெண் என்பவள் பாதுகாப்பாகவும், கண்ணியமாகவும், சிறந்த ஒழுக்கங்களைப் பேணுபவளாகவும் இருக்க வேண்டும். அதற்காக மூளையை மறைக்க வேண்டும் என்று அர்த்தமாகிவிடாது. திறமைகளை வெளிக்காட்ட கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதனால் ஏனைய பெண்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அதுதான் பெண்ணியம்.


13. உங்கள் படைப்புக்களுக்கு கிடைத்த பாராட்டுகள், பரிசுகள், விருதுகள் பற்றி?

பரிசுகள்
• 2011 ஆம் ஆண்டில் ஜனசங்சதய என்ற இலக்கிய அமைப்பின் மூலம் தேசிய ரீதியாக நடைபெற்ற திறந்த சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும், புத்தகப் பரிசும் 

• 2011 ஆம் ஆண்டில் யாழ் முஸ்லிம் வலைத்தளம், இருக்கிறம் சஞ்சிகையுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் நடாத்திய திறந்த கவிதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும், பணப்பரிசும் 

• 2011 ஆம் ஆண்டில் மலை நாட்டு எழுத்தாளர் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பாராட்டுப் பத்திரமும், பணப்பரிசும்

• 2012 ஆம் ஆண்டில் யாஃதொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகா வித்தியாலயம் மற்றும் கனடா நற்பணிச் சங்கம் இணைந்து நடத்திய தேசியமட்ட திறந்த சிறுகதைப் போட்டியில் பாராட்டும் பத்திரமும், பணப்பரிசும், பதக்கமும் 

• 2014 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட கம்பன் கழக கவிதைப்போட்டியில் இரண்டாம் இடம் பெற்றமைக்கான சான்றிதழும் வெள்ளிப் பதக்கம்

• 2015 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியாக தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட கம்பன் கழக கவிதைப்போட்டியில் முதலாம் இடம் பெற்றமைக்கான சான்றிதழும் தங்கப் பதக்கமும்

விருதுகள்
சிறந்த பாடலாசிரியர்
சிறந்த சிறுகதை எழுத்தாளர்
காவிய பிரதீப
எழுசுடர்

14. பல நூல்களை வெளியிட்டுள்ள நீங்கள் நூல் வெளியீட்டின் மூலமாக எத்தகைய அனுபவத்தினை பெற்றுள்ளீர்கள்?

நூல் வெளியீடுகள் ஒரு எழுத்தாளனின் வெற்றியை தீர்மானிப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. நூலை அச்சிட்டு, விழாவுக்கான ஆயத்தங்களை மேற்கொண்டு, அழைப்பிதழ் அடித்து, மண்டபத்துக்கு முற்பணம் செலுத்தி, எழுத்தாளர்கள் பார்வையாளர்களாக வந்து, மண்டபம் நிறைந்து, இதயம் படபடக்கும் அந்த ஆனந்த அவஸ்தையான நிமிடம்தான்... ஒரு எழுத்தாளனின் மகிழ்ச்சிக்குரிய தருணம்! அவனது எழுத்துக்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம். நூல் வெளியீடுகளின் போது பண ரீதியான இடையூறுகள் ஏற்படலாம். அல்லது நண்பர்கள் வருகை தராமை மனக் கவலையை ஏற்படுத்தலாம். இதைத் தவிர்த்துப் பார்த்தால் நூல் வெளியிடும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் புதிதாக நூல் வெளியிடும் அனுபவத்தையே தந்திருகின்றன.


15. நீங்கள் வியக்கும் இலங்கை படைப்பாளிகள்?

பொதுவாக பாகுபாடின்றி அனைவரது எழுத்துக்களையும் நான் ஆர்வமாக வாசிப்பேன். சிலரது கற்பனைகள் அபாரமானவை. இலகுவில் சிந்தையில் சிக்காதவற்றையெல்லாம் வார்த்தைகளில் சிறைபிடித்திருப்பார்கள். அவற்றை வாசிக்கும்போது பிரம்மிப்பாக இருக்கும். இளந்தலைமுறை எழுத்தாளர்கள், மூத்த எழுத்தாளர்கள் என்ற பேதமின்றி அனைவரது எழுத்துக்களும் என் இதயத்தை ஆக்கிரமிப்பதுண்டு. அதில் சில குறைகளைக் காணும்போது உரியவருடன் தொடர்பிருந்தால் அது பற்றி அவரிடமே கருத்துரைப்பேன். நிறைகளை இரசனைக் குறிப்புக்களாக எழுதிவிடுவேன்.


16. திறமையானவர்களுக்கு சரியான களம் கிடைக்கப்படுகின்றதா? 

திறமையான இளம் படைப்பாளிகளுக்கான களம் இன்னும் சரியாக கிடைக்கவில்லை என்றே கூற  வேண்டியிருக்கின்றது. இளையவர்கள் முதன்முதலாக எழுதும் படைப்புக்கள் தரத்தில் சற்று குறைவாக இருக்கும். ஆனால் அதில் வீச்சு இருக்கும். அதைப் பார்த்து அவர்களை வளர்த்து விடுவதை விட, அவர்களுக்கு குழிவெட்டி அதில் தள்ளிவிடும் வாய்ப்புக்கள் மிக அதிகம். குறிப்பிட்ட சில பத்திரிகைகள் தங்களுக்கு அறிமுகமானவர்களின் கவிதைகளை மாத்திரமே பிரசுரிக்கின்றன. ஒருசில பத்திரிகைகளே புதியவர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கின்றன.

17. முகநூல் போட்டிகள், விருதுகள் பற்றிய தங்களின் கருத்துக்கள்?

முகநூல் போட்டிகளும் விருதுகளும் இளம் படைப்பாளிகளுக்கு நல்லதொரு தளமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேற்கூறியதைப் போன்று களமில்லாமல் தவிப்பவர்கள் தமது எழுத்துக்களைப் பதிவேற்றி ஏனையவர்களின் கருத்துக்களை முகநூல் மூலம் இலகுவாகப் பெற்றுக்கொள்கின்றனர். முகநூலில் நன்றாக எழுதுகின்றவர்கள் பலருக்கு இதுவொரு சிறந்த வாய்ப்பாக இருக்கின்றது. வாசிப்பு அருகி தொழில் நுட்பம் பெருகி வரும் இக்காலத்தில் இலக்கியத்தை இணையம் மூலமாக வளர்க்கும் இச்செயற்பாடு பாராட்டத்தக்கது. ஆனால் முகநூலில் மட்டும் தாங்களது முயற்சிகளை முடக்கிக்கொள்ளாமல் சகல ஊடகங்களையும் அவர்கள் பயன்படுத்தினாலே வெற்றிபெறமுடியும் என்பதைக் கருத்தில் கொள்வது அவசியம்.


18. இலக்கிய நட்புக்கள், உறவுகள் பற்றி?

நட்பில் இன்று குடும்ப நட்பு, இலக்கிய நட்பு, முகநூல் நட்பு என்று பல வகையறாக்கள் காணப்படுகின்றன. குடும்ப நட்புக்கள் இதயத்துக்கு ஒத்தடமாக இருக்கின்றன. இலக்கிய நட்புக்கள் எம் திறமைகளை வளர்த்துக்கொள்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. முகநூல் நட்புக்கள் எம்மைப் பற்றி அறிந்திராவிட்டாலும் முகம்காணாமல் நேசிக்கக் கற்றுத் தருகின்றன. இதில் மிக முக்கியமானது என்னவென்றால் எல்லா நட்புக்களிலும் சில விஷ முட்களும் இருக்கின்றன. அவற்றை நாம்தான் சரியாகப் புரிந்து கையாள வேண்டும். முள் என்று தெரிந்தவுடன் ஒன்று ஒதுங்கி விடவேண்டும். அல்லது ஒதுக்கி விடவேண்டும்.

19. எதிர்காலத்தில் நீங்கள் வெளியிட இருக்கும் நூல்கள் பற்றிக் குறிப்பிடுங்கள்?

01. மழையில் நனையும் மனசு (கவிதை) 
02. என்னை வாசிக்கும் புல்லாங்குழல் (கவிதை)
03. மான்குட்டி (சிறுவர் பாடல்)


20. எம் வாசர்களோடு பகிர்ந்துகொள்ள நினைப்பது?

கல்குடா நேசன் என்ற வலைத்தளத்தில் என் நேர்காணலை இடம்பெறச் செய்த கவிதாயினி ராஜ்சுகா உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நீங்கள் இந்த அதிதிப் பக்கத்தை செவ்வனே செய்து வருவது பாராட்டுக்குரியது. அதற்காக சந்தர்ப்பமளித்துத் தரும் கல்குடா நேசன் வலைத்தளத்துக்கு என் நன்றிகள். மின்னிதழ்கள், வலைத்தளங்கள் மூலம் இன்று பல தகவல்களை பெற்றுக்கொள்ள முடிகிறது. எனவே வாசிப்பை அதிகரித்துக்கொள்ள வேண்டும் வாசிப்பின் மூலம் எம்மை வளர்த்துக்கொள்ள வேண்டும்.