Tuesday, March 15, 2016

கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் (11.03.2016) கவிதாயினி பாத்திமா சிமாரா





நேர்காணல்-கவிதாயினி த. ராஜ்சுகா 

பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது.

 வெற்றிகரமாகப் பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கின்றது. இதன் தொடரில் இன்று 11.03.2016ம் திகதி வெள்ளிக்கிழமை எம்மோடு 28வது படைப்பாளியாக இணைந்து கொள்கின்றார் இலங்கையின் தலைநகராம் கொழும்பைச்சேர்ந்த வளர்ந்து வரும் கவிதாயினி பாத்திமா சிமாரா அவர்கள்.


 “பெண்ணியம் பேசுவது வெறும் கண் துடைப்பு. மகளிர் தினம் ஒரு விளம்பர  நோக்குடந்தான் இருக்கிறது” என்று தனது ஆதங்கத்தை நியாயமான முறையில் வெளிப்படுத்துகின்றார் கவிதாயினி சிமாரா அவர்கள். தரமான பதில்கள். ஆழமான பார்வை. தடுமாற்றமில்லா நோக்கங்கள் என்பவற்றைக் கொண்ட இவர், வளரும் படைப்பாளிகளுடன் போட்டியிட்டுக்கொண்டு இலக்கிய உலகத்தில் தனக்கான தடயங்களை மெதுவாகவும், அதே வேளை, மிக ஆழமாகவும் எடுத்து வைக்கின்றார். 


பெண்மை பற்றி சில நிஜங்களையும், கோபங்களையும் வெளிப்படுத்தும் இவரின் கருத்துக்கள் பெண்ணியம் பற்றிய நேர்மையான நோக்கங்களைக் கொண்டுள்ளது. கவிதாயினி சிமாரா அவர்களின் எதிர்கால இலக்கியப் பணிகளுக்கும் அவரது ஆளுமை இன்னுமின்னும் வளர்ந்து பிரகாசிக்கவும் கல்குடாநேசன் சார்பில் எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். 






கவிதாயினி த. ராஜ்சுகா : இலக்கியத்தில் நுழைந்த சந்தர்ப்பம்? 

கவிதாயினி பாத்திமா சிமாரா:  13 வயது முதல் எனக்கு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. அந்த ஆர்வத்தினை அறிந்து கொண்டு, சந்தர்ப்பத்தையும் ஊக்கத்தையும் தந்தது வளர்த்து விட்டது திரு.மானா மக்கீன்  அவர்களும் திரு.அஷ்ரப்  ஷிஹாப்தீன் அவர்களும் தான்.


 கவிதாயினி த. ராஜ்சுகா கவிதை மீதான ஆர்வம் எப்படி ஏற்பட்டது? 


கவிதாயினி பாத்திமா சிமாரா ஆரம்ப நாட்களில் இலக்கியம் படிப்பது பிடிக்கும். பின் நானே எழுத முயற்சிக்கும் போது, பார்க்கும் யாதும் ஒரு வித்தியாசமான கோணத்தில்  தெரிய ஆரம்பித்து. பின் கவிதை என் நெருங்கிய தோழியானது.






 கவிதாயினி த. ராஜ்சுகா உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு கிடைக்கும் ஆதரவு எவ்வாறு காணப்படுகின்றது?


 கவிதாயினி பாத்திமா சிமாரா மறுப்பு  இல்லை. ஒரு பெண் ஈடுபடும் துறையில் வரும் அவப்பெயர் காரணமாகவும், அப்பெண்ணின் வேலைகள்  பின்னடிக்கப்படக்கூடும் என்பதாலும், தான் மறுப்பும் எதிர்ப்பும் வெளிப்படுவது. நான் இறைவனின் உதவியையே அதிகம் நாடுவதால் அந்தப்பிரச்சினை எனக்கில்லை. 


கவிதாயினி த. ராஜ்சுகா இதுவரை நீங்கள் பங்குபற்றிய போட்டிகள், கிடைத்த பாராட்டு, விருதுகள் பற்றி? 


கவிதாயினி பாத்திமா சிமாரா பாராட்டும் வெற்றியும்  நிறைவே இருக்கிறது. குறிப்பாக, இணையத்தங்களில் நடாத்தப்படும் போட்டிகளில் பங்குபற்றி ‘தங்க முத்திரை கவிஞர், சந்தக்கவிஞர் போன்ற சான்றுகள் உண்டு. 


கவிதாயினி த. ராஜ்சுகா இவ்விலக்கியப் பரப்பில் பெண்கள் தனித்து, சுதந்திரமாக இயங்கக்கூடிய சூழல் காணப்படுகின்றதா? 







கவிதாயினி பாத்திமா சிமாரா தனித்துச் செயற்படும் போது, சேற்றை வாரி இறைக்கும் சமூகம் இது. நாம் சுதந்திரமாகச் செயற்படலாம். அவை எல்லைகள் மீறாமலிருந்தால் சிறப்பு. 



கவிதாயினி த. ராஜ்சுகா உங்கள் கவிதைகளை எவ்வாறு பட்டைதீட்டிக்கொள்கின்றீர்கள்? 


கவிதாயினி பாத்திமா சிமாரா என் கவிதைகளுக்கு வரும் விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்வேன். மூத்த எழுத்தாள‌ர்களிடம் ஆலோசனை கேட்பேன். 


கவிதாயினி த. ராஜ்சுகா உங்களை இலக்கியத்தில் வளர்த்து விட உதவியாய் இருப்பது யார் என நினைக்கின்றீர்கள்?


 கவிதாயினி பாத்திமா சிமாரா இலக்கியம் மீதான பற்றும், தன்நம்பிக்கையும். 







கவிதாயினி த. ராஜ்சுகா “முகநூல் கவிதைகள்” பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? 


கவிதாயினி பாத்திமா சிமாரா நல்ல கவிதைகள்  படைக்கக் கூடியவர்கள்  இருக்கிறார்கள். ஆனால், காதல் கவிதையைத் தாண்டி வருவதில்லை. சிலர் மிகச்சிறந்த படைப்புகளைத் தருகிறார்கள். இவர்களை முகநூல் கவிஞர்கள் என்று சிலர் சொல்வது வருத்தமே. இதுவும்  ஒரு ஊடகமல்லவா? 



கவிதாயினி த. ராஜ்சுகா உங்கள் நூல் வெளியீடு எப்போது? 


கவிதாயினி பாத்திமா சிமாரா வெகு விரைவில். 


கவிதாயினி த. ராஜ்சுகா எவ்வகையான கருவை உங்கள் கவிதைகளில் உள்ளடக்க வேண்டுமென நினைக்கின்றீர்கள்? 


கவிதாயினி பாத்திமா சிமாரா வாழ்வியல், குழந்தைகள், அடக்குமுறை, பெண்களின் சொல்ல முடியா சில மனநிலைகள் 








கவிதாயினி த. ராஜ்சுகா த‌ங்களின் கவிதைகளுக்கு கிடைத்த விமர்சனங்கள்? 


கவிதாயினி பாத்திமா சிமாரா பல வகையுண்டு. மனம்  உடையும் விதமாகவும் வந்ததுண்டு. ஒரு சிலர் இவை கவிதைகளே இல்லை. வேறு வேலை பார்க்கும் படியும், பெண்ணுக்கு இது தேவையா? என்றும் பகிரங்கமாகக் கூறியிருக்கின்றார்கள். 


கவிதாயினி த. ராஜ்சுகா கவியாளுமையினை வளர்த்துக்கொள்ள நீங்கள் மேற்கொள்ளும் வழி முறைகளைக் கூற முடியுமா? 


கவிதாயினி பாத்திமா சிமாரா நல்ல மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் வாசிப்பது. அகராதியில் சில வார்த்தைகள் எடுத்து அதில்  கவி எழுதுவது போன்ற சாதாரண  விடயங்கள் தான். கவியரங்கம், கவி விவாதங்களில் பங்கேற்று வருகின்றேன்.






 கவிதாயினி த. ராஜ்சுகா “பெண்ணியம்” எனும் விடயத்தில் உங்களது நிலைப்பாடு? இதில் எந்தெந்த விடயங்கள் வலியுறுத்தப்பட வேண்டும்? முன்னேற்றம் வேண்டுமென நினைக்கின்றீர்கள்? 


கவிதாயினி பாத்திமா சிமாரா என்னுடைய நிலைப்பாடு என்றால், ஆடை குறைப்பும் ஆணுடன் நிகராய் நிற்பது மட்டும் என்று தான் எம்மில் பலர் நினைப்பது. இதுவே இன்று  நடக்கும் பல இழி செயலுக்கு  வித்திடுகிறது. பெண்ணியம் என்றால், ந‌மக்கான அங்கீகாரம். நாம் உழைப்புக்கு மட்டுமல்ல. எமக்கான பிரச்சினைகளுக்கும் நியாயம் கிடைக்கப் பேச‌ வேண்டும். இன்று அந்த நியாயம் கிடைக்கிறதா? என்றால் கேள்விக்குறியே? பெண்ணியம் பேசுவதில்  புண்ணியமில்லை. பேச்சில் மட்டுமே. உண்மையில் நடைமுறையில் இல்லை. பெண்ணுடைய உணர்வு, ஆசை, சின்னச்சின்ன தேவைகள் இவையெல்லாம் இன்னும் நம் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. உதாரணமாக, இலக்கியத்துறை, சமூக சேவை இது போன்ற விடயங்களில் பெண்களின் வருகையில் இன்னும் நம் சமூகம் “இவளுக்கு இது தேவையா”என்று தான் சொல்லுகின்றது. பெண்ணியம் பேசுவது வெறும் கண் துடைப்பு. 






கவிதாயினி த. ராஜ்சுகா பகிர்ந்து கொள்ள நினைக்கும் உங்களது கருத்துக்கள் வேண்டுகோள்கள் இருப்பின்….?? 


கவிதாயினி பாத்திமா சிமாரா நாம் எந்நிலையிலிருந்தாலும், நமக்கான வாழ்க்கையில் பிடிப்பு வர எம் இலட்சியத்துக்கு நாம் மதிப்புக் கொடுக்க வேண்டும். வாழ்க்கை வசந்தமாக வாழ்க்கைத்துணைக்கு பூங்காற்றாக வீசுங்கள். நறுமண கமலங்கள் பூத்துக் குலுங்கும். என்னுடைய வேண்டுகோள் பெண் பிள்ளைகளுக்கு இப்போது பாதுகாப்பில்லாத ஒரு நிலை உருவாகியிருக்கின்றது. முதலில்  நாம் சிறுபிள்ளைகளுக்கு  முன்னெச்சரிக்கைகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். யாருடனும் தனிமையில்  இருக்கக்கூடாது. எம்மை யாரும் தொட அனுமதிக்கக்கூடாது. மீறினால், கத்தும்படி இன்னும் எம்மால் முடியுமான வரை சொல்லிக் கொடுக்க வேண்டும்.








 கவிதாயினி த. ராஜ்சுகா மகளிர் தினத்தைக் கொண்டாடுகின்றோம். இதனை முழுமையாகக் கொண்டாடக்கூடிய ‘சூழ்நிலை தற்போது காணப்படுகின்றதா? பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினையாக நீங்கள் காண்பது? 


கவிதாயினி பாத்திமா சிமாரா நிச்சயமாக  இல்லை. மகளிர் தினம் ஒரு விளம்பர நோக்குடந்தான் இருக்கிறது. உண்மையில், இது கொண்டாட வேண்டுமாயின், துஷ்பிரயோகத்துக்குட்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் தான் இன்று  தண்டனை  அனுபவிக்கின்றார்கள். எத்தனை பெண்கள் திருணமாகி சரியான  வாழ்க்கைத்துணை அமையாமல், வெளியே சொல்ல இயலாமல் நரக வேதனையை அனுபவிக்கின்றார்கள். தனிமையிலிருக்கும் நம் பெண்களுக்கு  பாதுகாப்பில்லை. ஏன் பொது இடங்களில் கூட இல்லை. இவையெல்லாம் எப்போது சரியான நிலைக்கு வருமோ அப்போது  தான் மகளிர் தினம்.

No comments: