Thursday, May 30, 2013

எனக்குள் நான் நானாக‌

****     ****    ****    ****    ****    *****    ****    *****    ****      ****      ****     ****    ****
****     ****    ****    ****    ****    *****    ****    *****     ****     ****      ****     ****    ****


     இந்த நிமிடங்களில் என் மன அழுத்தங்கள் எனை கொன்றுபோட்டிருக்கவேண்டும் இறைவனின் மாபெரும் இரக்கத்தினால் உயிரை சிறைப்பிடித்து வைத்திருக்கின்றேன் என நினைக்கின்றேன். இதயத்தை திறக்கமுடியாத நிர்ப்பந்தம் எனக்கு, அப்படி மற்றவரிடம் என் உள்ளக்கிடக்கையை உடைத்துக்காட்டினால் சிலநேரங்களில் அது அவர்களுக்கு சலிப்பையோ அல்லது என்மீது வெறும் அநுதாபமோ இல்லை அவர்களுக்கு ஒரு பாரமாகவோ போய்விடும் என்ற ஒரே காரணத்துக்காக என் சுமைகளை நானே சுமக்கவேண்டுமென்ற எண்ணம் எனக்கு அமைதியை தருகின்றது ஆனால் சிலநேரங்களில் அவ்வழுத்தங்களை குறைப்பதற்காகவே என் பேனைகளுக்கு சிரமங்களை கொடுத்துக்கொண்டிருப்பேன் அவை அநேகமாக கவிதையாகவே பதிலையும் தந்துவிடும்.  அந்த ஆறுதலே என்னை இயல்பாக இயங்கவைத்துக் கொண்டிரு க்கின்றன எனலாம்.

   சின்ன சின்ன விடயங்களுக்கும் சோர்ந்துவிடும் இயல்பைக்கொண்டாலும் அதனை அடுத்தடுத்த நிமியங்களுக்குள் மறந்திட முயற்சிப்பேன் ஆனாலும் வாழ்க்கையின் அடித்தளம் ஆனந்தம் என்று நினைக்கும் விடயங்களில் அவ்வாறான மனப்போக்கை ஏற்படுத்திக்கொள்ளமுடியவில்லை. எத்தனையோ அடிகளுக்கூடாக பயணிக்கும் என் வாழ்க்கைப்படகு சிலநேரங்களில் கவிழ்ந்து என்னை கலங்கடித்துவிடும் அச்சந்தர்ப்பங்களில் நான் மீண்டு வருவதற்கு நீண்ட நாட்களை எடுத்துக்கொள்வேன்.ஒரு சிறிய விடயத்திற்கும் என்னில் காணப்படும் அதிகமான எதிர்பார்ப்புதான் காரணமோ என்று தோன்றுகின்றது








அவ்வாறான ஓர் ஆழமான காயத்தை ஏற்படுத்திய விபத்தை அண்மையில் சந்தித்தேன். எதை என் கனவாக, வாழ்வாக இன்பமாக இதயமாக ஜீவனாக இன்னும் உலகத்தில் மிக உயர்ந்த விடயமாக எண்ணியிருந்தேனோ அது என்னை விட்டு  நான் நினைத்திடாத அதிகதூரத்துக்குள் சென்று ஒளிந்துகொண்டது. வெறும் கண்ணீரால் சரிசெய்திட முடியாமல் நான் தவிப்பதும் இதயத்தின் அத்தனை வலுவையும் இழந்து நிர்கதியாக நிற்பதும் மற்றவர்களுக்கு முன்னால் என்னை சாதாரணமாக காட்டிக்கொள்வதும் எனக்கு மிகச்சிரமத்தை ஏற்படுத்தியது அப்போது மரணத்தின் ஏக்கம் மட்டுமே என்னை தாலாட்டிக்கொண்டிருக்கும் ஆனாலும் கோழைத்தனத்தின் வெளிப்பாடாக அதனை நான் அடக்கிக்கொன்றுவிடுவேன்.










  வாழ்க்கை என்றால் என்ன? அதனை எவ்வாறு வாழ்வதனால் சந்தோசமாக இருக்கமுடியும் எதனை தவிர்த்து எவ்வாறான விடயங்களை கடைப்பிடித்து வாழ்ந்தால் எமக்கான நிறைவை எட்டமுடியுமென்ற விடயங்களை நான் இதுவரை சிந்தித்ததே இல்லை ஏனெனில் அதனை சிந்திக்கவேண்டுமென்ற சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அன்பான அழகான ஓர் குடும்பம் என்ற ஒன்றுமட்டுமே என்னை எந்தவித எண்ணங்களுக்கும் இழுத்துச்செல்லவிடாது தடைசெய்துகொண்டிருந்தது ஆம் வெறும் அன்பாலும் பாசத்தாலும் அரவணைப்பினாலும் மட்டுமே நிறைந்திருந்த என் குடும்பத்தாரிடம் அதிகமான பாசமும் நேசமும் கொட்டிக்கிடந்ததை இப்போதுதான் என்னால் முழுமையாக உணரமுடிகின்றது காரணம் இந்த உலகத்துக்குள் கொஞ்சம் தலையைப்போட்டுப் பார்த்ததால்தான். 





உலகம் ரொம்ப பெருசு மட்டுமில்லை ரொம்பவும் ரவுசு மிக்கதுதான் இங்குள்ள எதிர்பார்ப்புக்கள் மிக விசித்திரமாக இருக்கின்றது. ஒன்றை பெறுவதற்கு எதை வேண்டுமென்றாலும் செய்யத்துணியும் மனங்கள், வெறும் பணத்துக்காகவே பழகும் உறவுகள், நட்புகள், பா(வே)சங்கள் என பட்டியலிட்டு வைக்கலாம். இதெல்லாம் எதற்கு? ஏன் இப்படி நடந்துகொள்கின்றார்கள் என நினைக்க மலைப்பாக இருப்பதோடு வேதனையாகவும் இருக்கின்றது உண்மையான அன்பு பாசம் உறவுகளுக்கு இந்த உலகில் பெறுமதியற்றுப்போவதை நினைக்கையில் மனம் வெம்பி வெடிக்கின்றது. ஏன் எல்லா விடயங்களும் "பணம், பதவி, பகட்டுக்களுடனே முடிந்துவிடுகின்றது? அதைத்தாண்டி மனித மனங்களை உணரவும் பெறுமதியான உறவுகளை அணுகவும் முடியாமல் எதனை அடைவதற்காக மனிதம் மாண்டு மற்றவர்களையும் கொன்று வாழ்கின்றது? இந்த வினாக்களுக்கு பதிலற்று இன்றைய நாட்களில் மிகவும் மனம் குழம்பிப்போயுள்ளேன் இதற்கு விரைவில் பதில் கிடைக்குமா?????







   நான் ஏழை. என்னிடம் எந்த பூர்வீக சொத்துக்களோ, வசதிகளோ இல்லையென்பதனை முதன்முறையாக உணர்ந்த சந்தர்ப்பம் இப்போதுதான் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் இதுதான் நிஜம். மூன்று வேளையும் போதுமான போஷாக்கான உணவு, ஆடைமுதல் ஆசைப்பட்ட அனைத்தும் கிடைத்த சந்தர்ப்பங்கள் கல்வி கண்டிப்பு தம்பியின் சண்டை தங்கையின் குறும்பு என் குழப்படிகள் அப்பாவின் பிரம்படிகள் அம்மாவின் அனுசரிப்பு என்று அனைத்தும் அளவாக என எங்கள் மட்டத்தில் ஒரு வசதியான வாழ்க்கை. எதிர்காலத்திற்கென எதனையும் சேமிக்காத குறைகூட இன்றுதான் பெரிதாக அதுவும் பூதாகரமான குற்றம் என தெரியவந்தது. எங்கள் ஒவ்வொருவருக்கும் தகுதிக்கேற்ற தொழில், வரும்படிக்கேற்ற வாழ்வு என அமைதியாக பயணித்த படகுக்குள் தகுதி என்ற பெருஞ்சூறாவளி என் வாலிபத்திலும் மிகவேகமாய் சுழற்றியடித்து என்னை நிலைகுலையச்செய்தது





அன்பு என்றால் என்ன? இன்றைய என் கேள்விக்கு பதிலில்லை மனம் சம்பந்தப்பட்டதாக உறவுகளின் முக்கியத்துவமாக எனதளவில் கருதப்பட்ட இந்த அன்பு ஒன்றுமில்லாததாய் நிற்கின்றது. என் முழுமையான விடயங்களை பகிரவும் வெளிப்படுத்தவும் நான் தெரிந்துகொண்ட விடயத்தில் நான் தவறிவிட்டேனா இல்லை ஏமாந்துவிட்டேனா என்று தெரியவில்லை ஆனால் என் அன்பை உணரவில்லை என்றுமட்டும் தெரிந்துகொண்டேன் அதுவும் உறவுகள் வெறும் பணத்துடனே மட்டுப்படுத்தப்பட்டுவிடுகின்றது என்ற பெரிதான தத்துவார்த்தத்தையும் கற்றுக்கொண்டேன். அதற்காக இந்த உலகமே பணந்தான் வாழ்க்கை அதுசம்பந்தப்பட்டவைகள்தான் சந்தோஷம் என கூக்குரலிட்டாலும் என் எண்ணங்களளவில் அன்பு ஒன்றுதான் உயர்ந்தது என்ற கோட்பாட்டை மீறமாட்டேன் அதற்காக இதனை போதிப்பதற்கும் இறங்கிவிடமாட்டேன் விழலுக்கு நீர் இறைத்து நான் வியாதிப்படவிரும்பவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச்சொல்லிட முடியும் இறுதியில் அன்புதான் ஜெயிக்கும் ஏனெனில் என்னதான் ஒருவன் ஆஸ்தியிலும் ஆடம்ப‌ரத்திலும் வசதியிலும் சலுகைகளிலும் புரண்டாலும் ஒரு நாள் நிச்சயம் இந்த அன்புக்காக ஏங்கிடும் காலம் வரும் இதுதான் இயற்கை இதுதான் இறைவனின் விதி.






  சரி அதுபோகட்டும் காதலுக்கு ஏனுங்க இந்த தகுதி அந்தஸ்தெல்லாம் பார்க்குறீங்க? கல்யாணம் தான் பெரியவர்களால் பார்த்து செய்யப்படுவதால் சம்பிரதாயம் சடங்கு என்று ஆயிரம் காரணங்கள். ஒருவருக்கு ஒருவர் பிடித்து ஒருவருக்கொருவர் ஒத்துப்போகும் தன்மையுடன் இருந்து இவர் நம் வாழ்க்கைக்கு பொருத்தமானவர் என்ற நிச்சயம் வந்தபின் ஏன் திடீரென்று கல்யாணம் நெருங்கும்போது மனம் வெறுத்து பணப்பொருத்தம் பார்க்கின்றீர்கள்? உங்கள் காதல் புதுமைதானுங்கோ. தனக்கு இப்படித்தான் ஒரு வாழ்க்கை அமையவேண்டுமென்று நினைத்தால் அதற்கு ஏற்றபடி ஒருவரை சந்தித்தித்தாலோ அல்லது அமைந்தாலோ இணைவதுதானே நியதி? அதைவிட்டு எல்லாம் முடிந்து காதலும் கசக்கும் தருவாயிலா உங்கள் ஆளுமைகளையும் ஆசைகளையும் அளவெடுத்து அமைத்திட முனைவீர்கள்? வாழ்க்கையின் அடித்தளமே அன்பிலும் அனுசரிப்பிலுமே இருப்பதை நம்மில் பலபேர் உணர்ந்துகொள்ளாமலில்லை ஆனால் உணரப்படுவதற்கு காலதாமதம் ஏற்பட்டுவிடுகின்றது உணர்ந்திடும்போது எல்லாம் காலாவதியாகியும் விடுகின்றது.

எது எப்படியோ அன்பில்லா எல்லாமே அர்த்தமில்லா ஆதாயங்கள்தான். உங்கள் உறவுகளை நிச்சயித்துக்கொள்ளுமுன் சிந்தித்து செயற்படுவது நன்று ஏனெனில் பாதிக்கப்படுபவரின் நிலையோ அதோகதியாகப்போய்விவது மட்டுமல்ல அவரின் வாழ்க்கையே சிலநேர‌ங்களில் கேள்விக்குறியாகிவிடும்


அடடா எங்கேயோ என் பிரச்சனையில் ஆரம்பித்து எதிலோ கொண்டுவந்து முடித்துவிட்டேன் உண்மைதானுங்க எதாவது ஒன்றை பேசத்துவங்கினால் சந்து சாக்கடை என்று வேறுஎதிலோ வ‌ந்துமுடிந்துவிடுவது இயற்கைதானே அதைத்தான் என் பேனாவும் செய்துவிட்டது ஆனால் இதில் இரண்டு நன்மை இருக்கின்றது ஒன்று என் மனது கொஞ்சம் இலேசான திருப்தியை உணர்ந்ததோடு சில பிரச்சனைகளை மேலிடையாக தொட்டுக்காட்டிய இன்பமும் இதயத்தில் ஒட்டிக்கொண்டது.











நன்றி 
மீண்டும் ஒரு பிரச்சனையில் சந்திப்போம்

Tuesday, May 28, 2013

துருவ நட்சத்திரம் ஊடகவியலாளர் விக்கி விக்னேஷ் 28.05.2013

http://www.thuruvam.com/2013/05/php_28.html

சவாலான விடயங்களை சந்திப்போமா என்பதே சவாலாக இருக்கிறது: விக்கி விக்னேஸ்


ஊடகத்துறை என்பது, அம்மா, அப்பா, சகோதரர், மாமா இவ்வாறான உறவு முறைகளுக்கு அப்பால் புதிய பெயரிடப்படாத ஒரு உறவு முறையை எங்களுக்கும், மக்களுக்கும் இடையில் ஏற்படுத்துகிறது. இதனை அனுபவிக்கும் போதுதான் உணரமுடிகிறது என்று கூறுபவர் ஊடகவியலாளர் விக்கி விக்னேஸ்.


ஊடகத்துறையின் மீதான காதலோடும் அதீத ஈடுபாட்டோடும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இவரை துருவ நட்சத்திரத்துக்காக சந்தித்தோம். கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் இவர் பாடகராக கவிஞராக ஊடகவியலாளராக என்று  பலதிறமைகளுடன் வலம்வரும் இவர் ஓர் துடிப்புள்ள இளைஞர். இவரின் கனவுகளும் இலட்சியங்களும் நிறைவேண்டுமென்ற பிரார்த்தனையுடன் நேர்காணலில் இணைந்துகொள்வோம்.

கேள்வி: உங்களைப் பற்றி...?

பதில்: ஆர்.பரமேஸ்வரன் மற்றும் வீ.ஜோதிமலர் ஆகியோரின் முதலாவது மகனாக நான் பதுளையில் பிறந்தேன். சுதாகரன், ரூபன் என இரண்டு சகோதரர்கள். நான் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள். மனைவி பெயர் வித்யா. கல்வியை பொறுத்தவரையில் முதலாம் ஆண்டு முதல் 13ஆம் ஆண்டு (உயர்தரம்) வரையில் ஆறு பாடசாலைகளில் கல்வி கற்றிருக்கிறேன். 

கர்நாடக சங்கீதத்தில் ஆரம்ப பயிற்சிகளை பெற்றுள்ளேன். அத்துடன் (Chamber Orchestration)  செம்பர் ஒர்கஸ்ட்ரேசன் மற்றும் ஜேஸ் ஆகிய இசை வகைகளை கற்றுள்ளதுடன் தொடர்ந்து வேறு இசை வகைகளை கற்று வருகிறேன். சவுண்ட் என்ஜீனீரிங் துறையில் டிப்ளோமா பயிற்சிநெறியை பூர்த்திசெய்துள்ளேன். கடந்த எட்டு வருடங்களாக இசை மற்றும் ஒலி தொடர்பான தேடுதலில் ஈடுபட்டுள்ளேன்.

கேள்வி: உங்களுடைய ஊடகத்துறை பிரவேசம் பற்றி?

பதில்: பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியில் 2003 - 2005ஆம் ஆண்டுகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் கற்றுக் கொண்டிருந்தபோது, இருந்த இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிராந்திய வானொலியான ஊவா சமூக வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராக கடமையாற்றினேன். அதுவே ஊடகத்துறையின் முதல் படி.

கவிதை உள்ளிட்ட எழுத்து விடயங்களில் கொஞ்சம் திறமை இருந்ததால், அதை அறிந்த ஆசியர்கள் என்னை இந்த துறையில் ஊக்கப்படுத்தினர். 2006ஆம் ஆண்டு வரையில் தொடர்ந்து ஊவா வானொலியுடனேயே இருந்தேன். இந்நிலையில் அப்பா திடீரென இறந்துவிட, நிலைமை தடுமாறியது. ஏதேனும் தொழிலுக்கு செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

எனினும் இசையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தால், ஊடகத்துறையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. இதனால் ஊடகத்துறை சார்ந்த தொழிலையே எதிர்பார்த்திருந்தேன். காத்திருந்ததற்கு பயனாக ஊவா வானொலியுடன், அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இணைந்து நடத்திய முழக்கம் என்ற நிகழ்ச்சி குழுவோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு வருடகாலம் பணியாற்றியிருந்த வேளையில், 2008ஆம் ஆண்டு சூரியன் எப்.எம். செய்திப்பிரிவில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.


கேள்வி: ஊடகம் தவிர்ந்த உங்களுடைய ஏனைய செயற்பாடுகள் ஆர்வங்கள் பற்றி?

பதில்: இசையில் சாதிக்க வேண்டும் என்பதற்காவே நான் ஊடகத்துறையை தெரிவு செய்தேன். இதற்கான முயற்சிகளையே தற்போதும் மேற்கொண்டு வருகிறேன். இதுதவிர கவிதை எழுதுவதுண்டு. எழுதிவைத்த சிறுகதைகள் நாடங்கள் என ஏராளமாக வீட்டில் உள்ளன. சில பத்திரிகைகளிலும் வந்துள்ளன.

கேள்வி: செய்தியாசிரியர் எனும்போது சவாலானதும் சுவாரஸ்யமானதும் பொறுப்பானதுனான தொழில். இதில் நீங்கள் சந்தித்த சவாலான விடயம் பற்றி?

பதில்: சவாலான விடயங்களை சந்திக்க கிடைக்குமா என்பதே தற்போதைய சூழ்நிலையில் சவாலான விடயமாக இருக்கிறது. வானொலி செய்தி ஆசிரியராக பணியாற்றுகின்ற நிலையில், செய்திகளுக்கு என்று ஒரு குறிப்பிட்ட கால கட்டுப்பாடு உள்ளது. இந்த வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்குள் செய்தியை கொண்டு செல்ல வேண்டும் என்பது மிகப் பெரிய சவாலான விடயம்.

நான் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்றுக்கும்போது உங்களுடைய இலட்சியம் என்ன என்று என்னுடைய ஆசிரியர் என்னை கேட்டபோது, ஒரு ஊடகவியலாளராக வரவேண்டும் என்று கூறிய நினைவு இருக்கிறது. பின்னர் இந்த இலட்சியம் 11ஆம் தரத்தில் வைத்து மாறிவிட்டது என்பது வேறு கதை. ஆனால் இந்த பதிலை கூறும்போது, உண்மையில் ஊடகத்துறை மீது அதிக நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இருந்தது. மிகுந்த சவாலான துறையாகவே இதனை கருதினேன்.

ஆனால், அந்த எண்ணத்துக்கு தற்போது தீனி கிடைத்ததா? என்றால், பதிலளிக்க தடுமாறுவேன் செய்திகளின் மிக குறைந்த பெறுமதியையே கொண்டுசெல்ல கூடியதாக இருக்கிறது என்ற மனக்குறை இருக்கிறது. ஆனால் கட்டுப்பாடுகளை மீறி, வெளிக்கொணரப்பட்ட பல்வேறு செய்திகளை நான் வெற்றிகரமாக சந்தித்த சவாலாகவே கருதுகிறேன்.


கேள்வி: உங்களுக்கு கிடைத்த விருதுகள் பாராட்டுக்கள் குறித்து கூறுங்கள்?

பதில்: 2004ஆம் ஆண்டு பாடசாலை மட்ட கவிதை போட்டிகளுக்கான ஜனாதிபதி விருது கிடைத்து. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் இந்த விருதினை பெற்றேன். அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு பதுளையில் நடைபெற்ற இளைஞர் சேவைகள் கழகத்தின் 'யௌவன ப்ரதீபா' என்ற விருது, மீண்டும் கவிதைப் போட்டிக்காக வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் பாட்டுப் போட்டியில் இரண்டாம் இடம் கிடைத்திருந்தது. தொடர்ந்து 2009ஆம் ஆண்டு புஸல்லாவையில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் 
ஊடகவியலாளருக்கான கௌரவ விருது வழங்கப்பட்டது. பின்னர் இறுதியாக கடந்த மாதம் மலையக கலை கலாசார மற்றத்தின் இரத்ன தீபம் விருது வழங்கப்பட்டது. 

கேள்வி: ஊடகத்துறையில் செய்திச் சேவைக்கான‌ ஆர்வம் இளையவர்களிடம் எவ்வாறு காணப்படுகின்றது?

பதில்: பொதுவாக ஊடகத்துறை மீதான நாட்டம் இளைஞர் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது என்றே நான்கூறுவேன். ஆனால் அவர்கள் அறிவிப்புத்துறையை அதிகமாக விரும்புகின்றனர். எனினும் செய்தி சார்ந்த ஊடகத்துறை குறித்த ஆர்வமான இளைஞர்களையும் சந்தித்திருக்கிறேன். 

நமது சமுகத்தின் கலை, கலாசார விழுமியங்களுடன், சமூக உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் ரீதியான விடயங்கள் அடுத்த சந்ததிக்கு மாற்றப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனை ஊடகத்துறையின் ஊடாகவே செய்ய முடியும். இதன் பொருட்டே சூரியன் எப்.எம். செய்திப் பிரிவின் முகாமையாளர் எம்.இந்திரஜித்துடன் இணைந்து, நாங்கள், இளைஞர் மத்தியில் செய்தி ஊடகத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்பை ஏற்படுத்தவும், அதில் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கிறோம்

ஊடகத்துறையில் பங்குகொள்ள விரும்பும் இளைஞர்களுக்காக இணையத்தளம் மூலமான கற்கை நெறிகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். இதன்மூலம் இணையத்தளம் மற்றும் கடிதம் மூலம் இளைஞர்கள் ஊடகத்துறை குறித்து கற்றறிந்து கொள்வதுடன், அதற்கான
சான்றிதழ்களை வழங்கி, தொழில்வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.


கேள்வி: மக்கள் பிரச்சினைகளை நேரடியாக சந்தித்த‌ அனுப‌வங்களை சொல்லமுடியுமா?

பதில்: நேரடியாக சென்று மக்களை சந்தித்த அனுபவங்கள் குறைவு. எனினும் மக்களின் பிரச்சினைகளை முதலில் தெரிந்துக்கொள்ளும் தரப்பினராக நாங்கள் இருக்கிறோம். சில சமயங்களில், பிரச்சினைகளுக்கு என்ன செய்வதென்று அறியாது, நெஞ்சம் கனத்த தருணங்களும் உண்டு. ஊடகத்துறை என்பது, அம்மா, அப்பா, சகோதரர், மாமா இவ்வாறான உறவு முறைகளுக்கு அப்பால், புதிய பெயரிட படாத ஒரு உறவு முறையை எங்களுக்கும், மக்களுக்கும் இடையில் ஏற்படுத்துகிறது. இதனை அனுபவிக்கும் போதுதான் உணரமுடிகிறது.

கேள்வி: செய்தியாளர்கள் சந்திக்கின்ற முக்கிய பிரச்சினை எது?

பதில்: குறிப்பாக சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் செயற்படுகின்ற ஊடகங்களில் பணியாற்றும் போது, தமிழ் சார்ந்த செய்திகளை மாத்திரம் கொண்டு செல்வதில் எப்போதுமே சிக்கல் இருக்கும். அனைத்து மேலோரும், தமிழறிந்தவர்களாக இருந்தால் இந்த சிக்கல் இருக்காது.

செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்துக் கொள்வதிலும் சிக்கல் இருக்கிறது. சில அரசியல் நிலைமைகளை கருதி, செய்திகளை உறுதிப்படுத்த வேண்டியதரப்பினர் பின்னிற்கின்ற நிலைமை காணப்படுகிறது.

கேள்வி: சூரியனில் கடமையாற்றும் அனுபவம் பற்றி?

பதில்: சூரியன் எப்.எம்.இல் கடமையாற்றுவேன் என்று நான் நினைத்தும் பார்த்ததில்லை. அறிவிப்பாளராக வரவேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கவில்லை. காரணம் நான் ஊவா வானொலியில் கடமையாற்றிய போதே தெரிந்துவிட்டது, அறிவிப்பு என்பது எனக்கான துறை இல்லை என்று. நான் மிகப்பெரிய வானொலி ரசிகனாகவும் இருக்கவில்லை. ஓய்வு நாட்களில் காலை கட்டிலில் இருந்து எழும் வரையில் சூரிய ராகங்களை கேட்டு, லோசன் அண்ணாவின் கேள்விகளுக்கு பதில் வழங்குவதோடு எனக்கும், சூரியனுக்கும் இடையிலான தொடர்பு முடிந்துவிடும்.

ஆனால், அப்பா இறந்த பின்னர் ஏதேனும் செய்ய வேண்டும், ஆனால் ஊடகத்தைவிட முடியாது என்ற தர்மசங்கடத்துடன் இருந்த காலத்தில், சூரியன் செய்திப்பிரிவில் கடமையாற்றும் வாய்ப்பை தற்போதைய செய்தி முகாமையாளர் இந்திரஜித்தே வழங்கினார். 

தற்போது சூரியனின் செய்திப்பிரிவு, சிரேஷ்ட செய்தி ஆசிரியர் வீ.எஸ்.சிகாமணி, எம்.சதீப்குமார், ஸ்ரீ நாகவாணி ராஜா, எம்.ஜீ.கிரிஷ்ணகுமார் ஆகியோருடனும், முகாமையாளர் இந்திரஜித்தின் கீழும் பணியாற்றுவது சுகமான அனுபவமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இதனை ஒரு தொழில் என்று கூறுவதைவிட, நான் இன்னும் பாடசாலை ஒன்றை கல்வி கற்று வருவதாகவே கருதுகிறேன். சூரியன் எப்.எம். ஆரம்பத்தில் இருந்து இன்று வரையில் கற்பதற்கு சிறந்த இடமாகவே இருக்கிறது.



(நேர்காணல்: ராஜ் சுகா)

Sunday, May 19, 2013

மனம் பற்றி என்ன அறிவாய்?



நம்பிக்கைதான் வாழ்க்கை இந்த‌
நம்பிக்கையால் வாழ்வை இழந்தால்
அது ஏமாந்துபோதல் என‌
அர்த்தம் சொல்லலாகுமோ

அப்பட்டமாய் செய்யும் துரோகங்கள்
ஆறாத அடிமனக்காயங்கள்
உயிரை வெறுக்கும் வேதனைகள்
உலகை தொலைக்கும் வலிகள்
இத்தனையுந் தந்து இயல்பாயிருக்கும்
நீயொரு அதிசயந்தான்

மனம் பற்றி என்ன அறிவாய்?
அன்பை பற்றி உன்
அகராதி சொல்வதென்ன?
அழகை ருசிக்கும் ஆனந்தமா
அங்கங்கள் ர‌சிக்கும் வேகமா
சொத்துக்களின் தரமறிந்து
சொந்தங்கள் உருவாக்கிடும்
போலித்தனமா
உன் அகராதியில் மனம் என்பதற்கு
பொருள்தான் என்ன?

எத்தனை உறவுகளை உருவாக்கிக்கொண்டாலும்
எல்லா உறவுக்கும் முடிவதில்லை
எதிர்பார்ப்பில்லா அன்பினைதருவதற்கு
சுயநலமில்லா காதலோடு
சூதுகளறியாமல்
சுற்றிசுற்றிவந்த எனக்கு
சூடு வைத்து கண்ணீர்தருகின்றாய்
உனது நியாயங்களின் அர்த்தம்
இன்றுவரை புரியவில்லை



சந்தர்ப்பங்களால் சந்தித்த நம்
சந்திப்புக்கள்
சந்தேகங்களால் உடைவது
சாகத்தூண்டும் கொடுமையடா உன்
சிந்தனைக்கது எட்டாமலிருப்பது ஏன்?

பெண்மையை வெறும்
தேகமாய்ப் பார்க்குமுன் எண்ணங்கள்
உண்மையாயுரும் காதலையுணர்ந்திடாதா?
வாழ்க்கையின் அடித்தளங்கள்
அன்பினால் இடப்படுதலே
வானுயர்ந்த கட்டிடமாய் எழும்பிடும்
என்பதனை எப்போது அறிவாய்?

இறுதியாய் என் உறுதியாய்ச் சொல்லுகின்றேன்
இதயம் நிறம்மாறும் விந்தையல்ல‌
காதல் அற்புதமான பொக்கிஷம்
நம்பிக்கை புனிதமான உணர்வு
அன்பு சகலருக்கும் கிடைக்காத வரம்
தகுதி அந்தஸ்து பணம் பதவி
சொத்து சுகங்கள் தாண்டிய‌
ஓர் உன்னதம் தெரிவதே
உண்மையான காதல்

நான் ஆழமாய் கட்டிய
என் அத்தனை சாம்ராஜ்யத்தையும்
அடியோடு தகர்த்தெறிந்துவிட்டாய்
இரக்கமேயில்லாமல் சாம்பலாக்கிவிட்டாய்
உன்னால் அன்பென்ற நாதத்தை
இனியெப்போதும் ரசித்திடமுடியாது
ஒன்று காம‌மாய்ப் பார்ப்பாய்
இல்லை காசாய்ப் பார்ப்பாய்
இது உனக்கான துரதிஷ்டம்

போராடினேன் அன்பை அறிவிக்க‌
கோபித்தேன் பாசத்தை உணர்த்திட‌
விலகியிருந்தேன் நேசத்தை உருவாக்க‌
இப்போதும் உன் அலட்சியங்கள்
உன்னை குணப்படுத்தியிருக்கவில்லை

உனக்கான என் பிரார்த்தனைகள் தொடரும்
என் நேசம் பொய்த்துப்போவதில்லை


Saturday, May 18, 2013

காதலும் அதுபோலத்தான்!!





நம் நாட்கள் அழகானவைகள்
நம் புன்னகைகள் அன்பானவைகள்
நம் பயணங்கள் சுவாரஸ்யமானவைகள்
நம் கோபங்கள் நேசமானவைகள்
நம் காயங்கள்கூட காதலுக்கானவைகள்

பிரிவை கனவில்கூட நான்
விரும்பிடுவதில்லை
அதுதரும் வலியை
அற்பநொடியேனும் உண‌ரவிரும்பவில்லை

என் கோபங்கள் உனை காயப்படுத்தவல்ல‌
என் காதலை வெளிப்படுத்தவே
நம் இடைவெளிகள் இன்னொரு
உறவுக்கான வழிகளல்ல நம்
உறுதிக்கான வழிகளே...

உன்னை விட்டுவிடுவதற்கும்
இன்னொருவருக்கு விட்டுக்கொடுப்பதற்கும்
நான் தியாகியல்ல
உனக்கு தாயானவள்


நம் அந்தரங்கள் நமக்கானவை
நான்குபேர் சொல்வதற்கது
நாடகமேடையல்ல‌
காதல்
இருவருக்கிடையிலான ஆத்மார்த்தம்
மூன்றாம் நபரின் மூக்குநுழைத்தலல்ல அது
முத்தமானாலும் சரி
யுத்தமானாலும் சரி...


நட்பு வேறு
காதல் வேறு
காதலி நண்பியாக இருக்கலாம்
நண்பி காதலிபோல் இருக்கக்கூடாது

இதயம் ஒன்றாக இருப்பதுதான்
இதயத்துக்கும் நல்லது
அதைத்தாங்கும்
உயிருக்கும் நல்லது
காதலும் அதுபோலத்தான்!!










நானெப்படி





என் விழிகளை கேட்டிருந்தால்
ஒன்றைக்கொடுத்திருப்பேன் 
நீயென் ஜீவன் உனை
பகிர்ந்து கொடுத்தால்
நானெப்படி உயிர்ப்பேன்??





தவிக்கவிட்டுப் போகின்றது...





என் நிஜத்திலிருந்து
நிழல் மட்டுமென்னை -தனியே
தவிக்கவிட்டுப் போகின்றது...

உயிரை இயக்கிய சுவாசமின்று
தனியே பிரிந்து செல்கின்றது...

தன் குழந்தையை தெருவில்
கதறக்கதற தவிக்கவிட்ட தாயைப்போல‌
என் ஜீவன் எனைக்கடந்து போகின்றது...

உரிமை கொண்டாடிய‌
அத்தனை நிஜங்களும்
கல்லறை வாசலைதிறந்து விட்டு
கலைந்து போகின்றது...

கானங்கள் பாடிய குயிலின்று நான்
குயிலில்லை காகமென்று
கரைந்துகொண்டு பறக்கின்றது...

தேவதை வேடத்து அரக்கி
முகமூடி கலைந்த அச்சத்தில்
முரட்டுத்தனமாக பல்லிளித்துக்காட்டுகின்றாள்...


நான் வாழ்ந்த பசுமைகள் இளமையை
நார்நாராய்க் கிழித்து
நடுவீதியில் இயல்பாய் வீசி
எனைக் கடந்துபோகின்றது...

மீண்டும் என் ஜீவன்
சுவாசத்தை உயிர்ப்பித்திடாதா
மீள எனதன்புக்குள்ளது
மூழ்கிடாதா...

இந்த இளமைக்குள் உனைத்தவிர‌
இனியொரு இன்பங்களில்லை
இந்த இதயத்துக்குள் உனைத்தவிர‌
இன்னொரு உறவுக்கு உரிமையில்லை...

இந்த உயிர் சுவாசிக்கவேண்டுமாயின்
உன் மூச்சுக்காற்று வேண்டும்
இல்லையெனில்
மண்ணுக்கு உணவாகுமேயன்றி
மனிதருக்கு உறவாகுவதில்லை
நீயிதை உணரமாட்டாய் தெரியுமெனக்கு
நிச்சயம் உணர்ந்தழுவாய் என்
கல்லறை வாசலுக்குமுன் அப்போது
உன் கண்ணீர்ச்சொட்டு
என் உயிர்க்காதலை உணர்ந்து உருகும்!!!






Thursday, May 16, 2013

அ ல் கா




அ ல் கா


கருவாகாமல்
உருவான என்சொந்தம்
உருப்பெறுமுன் சிதைந்து
உருக்குலைந்தது
மீண்டும் அவள் வரமாட்டாள்
கல்லறையாக்கப்பட்ட என்
கருவறைக்குள்!!


Wednesday, May 15, 2013

கானலென்று...





மனித வெடிகுண்டுகளால்
தகர்க்கப்பட்ட இதயமிது...

வலிகளனைத்தையும் தாங்கிய
வைரம் பாய்ந்த இதயமிது...

பாலைவனத்து மழைத்துளியாய் அந்த‌
ஒற்றைப்புன்னகை துளிர்த்தபோதுதான்
வலியாக உணர்த்தப்பட்டது...

அந்த ஒவ்வொரு துளியும்
விஷந்தடவிய கானலென்று!!

ரணங்களே....




வலிகளே எனைச் செதுக்கும்
உளிகளானது
விழிவடிக்கும் துளிகளை நான்
துடைத்தெறிவதில்லை -அவை
சிதறிவிடாமல்
உள்ளத்தில் சேமித்துக்கொள்கின்றேன்
ரணங்களே என் உயிர்ப்பை
உறுதிப்படுத்திக்கொண்டிருப்பதால்...

சாத்தியமில்லை..



****     ****         *****          *****

தீப்பந்தமாய் எரிந்த அன்பின்று
நீரில் வீழ்ந்த தீப்பெட்டியானது..

மீண்டும் எரிவது அத்தனை
சாத்தியமில்லை...

காலத்தின் வேகத்திடமும் -சில‌
காயங்களின் மருந்துகள்
தீர்ந்தே போய்விடுகின்றன‌???

Tuesday, May 14, 2013

யாருக்கு யார்???


வானுக்கு
நிலவு சொந்தமென்று
மேகம் சொல்கின்றது
யாருக்கு யார் சொந்தமிந்த‌
இயற்கையின் படைப்பினிலே...

Sunday, May 12, 2013

தாக்கங்களும் பூக்களாகும்!!





உருண்டுவிழும் ஆலங்கட்டியாய்
திரண்டு உதிர்ந்த அத்துளிகள்
உருண்டை விழிகளை நிறைத்து
உள்ளக்காயத்தை ரணப்படுத்திக்கொண்டிருந்தது


இயலாமைகளை சுட்டிக்காட்ட‌
இமையிதழ்களில் கதறுவதே- இவளின்  
வழமையாகிப் போனதில்
இப்போதெல்லாம் உடன்பாடேயில்லை


வெறும் ஏமாற்றங்களிலும்
வெறுமையான உறவுகளினாலும்
வெளிரிப்போன அவளுணர்வுகளில்
வெளித்தள்ளிக்கொண்டிருந்தது ஒருதுளிர்


அன்பெனும் முகமூடிதரித்த‌
அத்தனை திரைகளும் விலகியபின்
அவளுக்கென்ற ஒற்றைநாதம்
அசரீரியாய் ஒலித்தது 'நம்பிக்கை'யென்று


பயணங்களுக்கு மட்டுமுதவும் பாதணியாய்‍ -அவளை
பயன்படுத்திக்கொண்ட சில பாதைகள்
படிவாசலில் கழற்றிவிட்டு சென்றதைக்கூட‌
பாடங்களுக்கான விளக்கங்களாவே ஏற்றுக்கொண்டாள்


இனியவள் வாசலுக்குள் கோலங்களின் அலங்கரிப்பில்லை
இனியொரு வார்த்தையிலேனும் காயங்களின் பரிசீலிப்பில்லை
தனியொரு சாம்ராஜ்யமுருவாக்கி தரணிக்கெலாம் சொல்லிடுவாள்
தன்னம்பிக்கை உண்டெனில் தாக்கமெல்லாம் பூக்களென்று!!