Tuesday, May 28, 2013

துருவ நட்சத்திரம் ஊடகவியலாளர் விக்கி விக்னேஷ் 28.05.2013

http://www.thuruvam.com/2013/05/php_28.html

சவாலான விடயங்களை சந்திப்போமா என்பதே சவாலாக இருக்கிறது: விக்கி விக்னேஸ்


ஊடகத்துறை என்பது, அம்மா, அப்பா, சகோதரர், மாமா இவ்வாறான உறவு முறைகளுக்கு அப்பால் புதிய பெயரிடப்படாத ஒரு உறவு முறையை எங்களுக்கும், மக்களுக்கும் இடையில் ஏற்படுத்துகிறது. இதனை அனுபவிக்கும் போதுதான் உணரமுடிகிறது என்று கூறுபவர் ஊடகவியலாளர் விக்கி விக்னேஸ்.


ஊடகத்துறையின் மீதான காதலோடும் அதீத ஈடுபாட்டோடும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இவரை துருவ நட்சத்திரத்துக்காக சந்தித்தோம். கலைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கும் இவர் பாடகராக கவிஞராக ஊடகவியலாளராக என்று  பலதிறமைகளுடன் வலம்வரும் இவர் ஓர் துடிப்புள்ள இளைஞர். இவரின் கனவுகளும் இலட்சியங்களும் நிறைவேண்டுமென்ற பிரார்த்தனையுடன் நேர்காணலில் இணைந்துகொள்வோம்.

கேள்வி: உங்களைப் பற்றி...?

பதில்: ஆர்.பரமேஸ்வரன் மற்றும் வீ.ஜோதிமலர் ஆகியோரின் முதலாவது மகனாக நான் பதுளையில் பிறந்தேன். சுதாகரன், ரூபன் என இரண்டு சகோதரர்கள். நான் திருமணம் முடிந்து இரண்டு ஆண்டுகள். மனைவி பெயர் வித்யா. கல்வியை பொறுத்தவரையில் முதலாம் ஆண்டு முதல் 13ஆம் ஆண்டு (உயர்தரம்) வரையில் ஆறு பாடசாலைகளில் கல்வி கற்றிருக்கிறேன். 

கர்நாடக சங்கீதத்தில் ஆரம்ப பயிற்சிகளை பெற்றுள்ளேன். அத்துடன் (Chamber Orchestration)  செம்பர் ஒர்கஸ்ட்ரேசன் மற்றும் ஜேஸ் ஆகிய இசை வகைகளை கற்றுள்ளதுடன் தொடர்ந்து வேறு இசை வகைகளை கற்று வருகிறேன். சவுண்ட் என்ஜீனீரிங் துறையில் டிப்ளோமா பயிற்சிநெறியை பூர்த்திசெய்துள்ளேன். கடந்த எட்டு வருடங்களாக இசை மற்றும் ஒலி தொடர்பான தேடுதலில் ஈடுபட்டுள்ளேன்.

கேள்வி: உங்களுடைய ஊடகத்துறை பிரவேசம் பற்றி?

பதில்: பண்டாரவளை தமிழ் மத்திய கல்லூரியில் 2003 - 2005ஆம் ஆண்டுகளில் கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் கற்றுக் கொண்டிருந்தபோது, இருந்த இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் பிராந்திய வானொலியான ஊவா சமூக வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராக கடமையாற்றினேன். அதுவே ஊடகத்துறையின் முதல் படி.

கவிதை உள்ளிட்ட எழுத்து விடயங்களில் கொஞ்சம் திறமை இருந்ததால், அதை அறிந்த ஆசியர்கள் என்னை இந்த துறையில் ஊக்கப்படுத்தினர். 2006ஆம் ஆண்டு வரையில் தொடர்ந்து ஊவா வானொலியுடனேயே இருந்தேன். இந்நிலையில் அப்பா திடீரென இறந்துவிட, நிலைமை தடுமாறியது. ஏதேனும் தொழிலுக்கு செல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

எனினும் இசையில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருந்தால், ஊடகத்துறையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. இதனால் ஊடகத்துறை சார்ந்த தொழிலையே எதிர்பார்த்திருந்தேன். காத்திருந்ததற்கு பயனாக ஊவா வானொலியுடன், அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இணைந்து நடத்திய முழக்கம் என்ற நிகழ்ச்சி குழுவோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு வருடகாலம் பணியாற்றியிருந்த வேளையில், 2008ஆம் ஆண்டு சூரியன் எப்.எம். செய்திப்பிரிவில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.


கேள்வி: ஊடகம் தவிர்ந்த உங்களுடைய ஏனைய செயற்பாடுகள் ஆர்வங்கள் பற்றி?

பதில்: இசையில் சாதிக்க வேண்டும் என்பதற்காவே நான் ஊடகத்துறையை தெரிவு செய்தேன். இதற்கான முயற்சிகளையே தற்போதும் மேற்கொண்டு வருகிறேன். இதுதவிர கவிதை எழுதுவதுண்டு. எழுதிவைத்த சிறுகதைகள் நாடங்கள் என ஏராளமாக வீட்டில் உள்ளன. சில பத்திரிகைகளிலும் வந்துள்ளன.

கேள்வி: செய்தியாசிரியர் எனும்போது சவாலானதும் சுவாரஸ்யமானதும் பொறுப்பானதுனான தொழில். இதில் நீங்கள் சந்தித்த சவாலான விடயம் பற்றி?

பதில்: சவாலான விடயங்களை சந்திக்க கிடைக்குமா என்பதே தற்போதைய சூழ்நிலையில் சவாலான விடயமாக இருக்கிறது. வானொலி செய்தி ஆசிரியராக பணியாற்றுகின்ற நிலையில், செய்திகளுக்கு என்று ஒரு குறிப்பிட்ட கால கட்டுப்பாடு உள்ளது. இந்த வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்குள் செய்தியை கொண்டு செல்ல வேண்டும் என்பது மிகப் பெரிய சவாலான விடயம்.

நான் ஐந்தாம் தரத்தில் கல்வி கற்றுக்கும்போது உங்களுடைய இலட்சியம் என்ன என்று என்னுடைய ஆசிரியர் என்னை கேட்டபோது, ஒரு ஊடகவியலாளராக வரவேண்டும் என்று கூறிய நினைவு இருக்கிறது. பின்னர் இந்த இலட்சியம் 11ஆம் தரத்தில் வைத்து மாறிவிட்டது என்பது வேறு கதை. ஆனால் இந்த பதிலை கூறும்போது, உண்மையில் ஊடகத்துறை மீது அதிக நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் இருந்தது. மிகுந்த சவாலான துறையாகவே இதனை கருதினேன்.

ஆனால், அந்த எண்ணத்துக்கு தற்போது தீனி கிடைத்ததா? என்றால், பதிலளிக்க தடுமாறுவேன் செய்திகளின் மிக குறைந்த பெறுமதியையே கொண்டுசெல்ல கூடியதாக இருக்கிறது என்ற மனக்குறை இருக்கிறது. ஆனால் கட்டுப்பாடுகளை மீறி, வெளிக்கொணரப்பட்ட பல்வேறு செய்திகளை நான் வெற்றிகரமாக சந்தித்த சவாலாகவே கருதுகிறேன்.


கேள்வி: உங்களுக்கு கிடைத்த விருதுகள் பாராட்டுக்கள் குறித்து கூறுங்கள்?

பதில்: 2004ஆம் ஆண்டு பாடசாலை மட்ட கவிதை போட்டிகளுக்கான ஜனாதிபதி விருது கிடைத்து. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் இந்த விருதினை பெற்றேன். அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு பதுளையில் நடைபெற்ற இளைஞர் சேவைகள் கழகத்தின் 'யௌவன ப்ரதீபா' என்ற விருது, மீண்டும் கவிதைப் போட்டிக்காக வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் பாட்டுப் போட்டியில் இரண்டாம் இடம் கிடைத்திருந்தது. தொடர்ந்து 2009ஆம் ஆண்டு புஸல்லாவையில் நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவில் 
ஊடகவியலாளருக்கான கௌரவ விருது வழங்கப்பட்டது. பின்னர் இறுதியாக கடந்த மாதம் மலையக கலை கலாசார மற்றத்தின் இரத்ன தீபம் விருது வழங்கப்பட்டது. 

கேள்வி: ஊடகத்துறையில் செய்திச் சேவைக்கான‌ ஆர்வம் இளையவர்களிடம் எவ்வாறு காணப்படுகின்றது?

பதில்: பொதுவாக ஊடகத்துறை மீதான நாட்டம் இளைஞர் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது என்றே நான்கூறுவேன். ஆனால் அவர்கள் அறிவிப்புத்துறையை அதிகமாக விரும்புகின்றனர். எனினும் செய்தி சார்ந்த ஊடகத்துறை குறித்த ஆர்வமான இளைஞர்களையும் சந்தித்திருக்கிறேன். 

நமது சமுகத்தின் கலை, கலாசார விழுமியங்களுடன், சமூக உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் ரீதியான விடயங்கள் அடுத்த சந்ததிக்கு மாற்றப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனை ஊடகத்துறையின் ஊடாகவே செய்ய முடியும். இதன் பொருட்டே சூரியன் எப்.எம். செய்திப் பிரிவின் முகாமையாளர் எம்.இந்திரஜித்துடன் இணைந்து, நாங்கள், இளைஞர் மத்தியில் செய்தி ஊடகத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்பை ஏற்படுத்தவும், அதில் அவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்கவும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்கிறோம்

ஊடகத்துறையில் பங்குகொள்ள விரும்பும் இளைஞர்களுக்காக இணையத்தளம் மூலமான கற்கை நெறிகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம். இதன்மூலம் இணையத்தளம் மற்றும் கடிதம் மூலம் இளைஞர்கள் ஊடகத்துறை குறித்து கற்றறிந்து கொள்வதுடன், அதற்கான
சான்றிதழ்களை வழங்கி, தொழில்வாய்ப்புகளையும் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.


கேள்வி: மக்கள் பிரச்சினைகளை நேரடியாக சந்தித்த‌ அனுப‌வங்களை சொல்லமுடியுமா?

பதில்: நேரடியாக சென்று மக்களை சந்தித்த அனுபவங்கள் குறைவு. எனினும் மக்களின் பிரச்சினைகளை முதலில் தெரிந்துக்கொள்ளும் தரப்பினராக நாங்கள் இருக்கிறோம். சில சமயங்களில், பிரச்சினைகளுக்கு என்ன செய்வதென்று அறியாது, நெஞ்சம் கனத்த தருணங்களும் உண்டு. ஊடகத்துறை என்பது, அம்மா, அப்பா, சகோதரர், மாமா இவ்வாறான உறவு முறைகளுக்கு அப்பால், புதிய பெயரிட படாத ஒரு உறவு முறையை எங்களுக்கும், மக்களுக்கும் இடையில் ஏற்படுத்துகிறது. இதனை அனுபவிக்கும் போதுதான் உணரமுடிகிறது.

கேள்வி: செய்தியாளர்கள் சந்திக்கின்ற முக்கிய பிரச்சினை எது?

பதில்: குறிப்பாக சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் செயற்படுகின்ற ஊடகங்களில் பணியாற்றும் போது, தமிழ் சார்ந்த செய்திகளை மாத்திரம் கொண்டு செல்வதில் எப்போதுமே சிக்கல் இருக்கும். அனைத்து மேலோரும், தமிழறிந்தவர்களாக இருந்தால் இந்த சிக்கல் இருக்காது.

செய்திகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்துக் கொள்வதிலும் சிக்கல் இருக்கிறது. சில அரசியல் நிலைமைகளை கருதி, செய்திகளை உறுதிப்படுத்த வேண்டியதரப்பினர் பின்னிற்கின்ற நிலைமை காணப்படுகிறது.

கேள்வி: சூரியனில் கடமையாற்றும் அனுபவம் பற்றி?

பதில்: சூரியன் எப்.எம்.இல் கடமையாற்றுவேன் என்று நான் நினைத்தும் பார்த்ததில்லை. அறிவிப்பாளராக வரவேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கவில்லை. காரணம் நான் ஊவா வானொலியில் கடமையாற்றிய போதே தெரிந்துவிட்டது, அறிவிப்பு என்பது எனக்கான துறை இல்லை என்று. நான் மிகப்பெரிய வானொலி ரசிகனாகவும் இருக்கவில்லை. ஓய்வு நாட்களில் காலை கட்டிலில் இருந்து எழும் வரையில் சூரிய ராகங்களை கேட்டு, லோசன் அண்ணாவின் கேள்விகளுக்கு பதில் வழங்குவதோடு எனக்கும், சூரியனுக்கும் இடையிலான தொடர்பு முடிந்துவிடும்.

ஆனால், அப்பா இறந்த பின்னர் ஏதேனும் செய்ய வேண்டும், ஆனால் ஊடகத்தைவிட முடியாது என்ற தர்மசங்கடத்துடன் இருந்த காலத்தில், சூரியன் செய்திப்பிரிவில் கடமையாற்றும் வாய்ப்பை தற்போதைய செய்தி முகாமையாளர் இந்திரஜித்தே வழங்கினார். 

தற்போது சூரியனின் செய்திப்பிரிவு, சிரேஷ்ட செய்தி ஆசிரியர் வீ.எஸ்.சிகாமணி, எம்.சதீப்குமார், ஸ்ரீ நாகவாணி ராஜா, எம்.ஜீ.கிரிஷ்ணகுமார் ஆகியோருடனும், முகாமையாளர் இந்திரஜித்தின் கீழும் பணியாற்றுவது சுகமான அனுபவமாக இருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இதனை ஒரு தொழில் என்று கூறுவதைவிட, நான் இன்னும் பாடசாலை ஒன்றை கல்வி கற்று வருவதாகவே கருதுகிறேன். சூரியன் எப்.எம். ஆரம்பத்தில் இருந்து இன்று வரையில் கற்பதற்கு சிறந்த இடமாகவே இருக்கிறது.



(நேர்காணல்: ராஜ் சுகா)

No comments: