Sunday, May 19, 2013

மனம் பற்றி என்ன அறிவாய்?



நம்பிக்கைதான் வாழ்க்கை இந்த‌
நம்பிக்கையால் வாழ்வை இழந்தால்
அது ஏமாந்துபோதல் என‌
அர்த்தம் சொல்லலாகுமோ

அப்பட்டமாய் செய்யும் துரோகங்கள்
ஆறாத அடிமனக்காயங்கள்
உயிரை வெறுக்கும் வேதனைகள்
உலகை தொலைக்கும் வலிகள்
இத்தனையுந் தந்து இயல்பாயிருக்கும்
நீயொரு அதிசயந்தான்

மனம் பற்றி என்ன அறிவாய்?
அன்பை பற்றி உன்
அகராதி சொல்வதென்ன?
அழகை ருசிக்கும் ஆனந்தமா
அங்கங்கள் ர‌சிக்கும் வேகமா
சொத்துக்களின் தரமறிந்து
சொந்தங்கள் உருவாக்கிடும்
போலித்தனமா
உன் அகராதியில் மனம் என்பதற்கு
பொருள்தான் என்ன?

எத்தனை உறவுகளை உருவாக்கிக்கொண்டாலும்
எல்லா உறவுக்கும் முடிவதில்லை
எதிர்பார்ப்பில்லா அன்பினைதருவதற்கு
சுயநலமில்லா காதலோடு
சூதுகளறியாமல்
சுற்றிசுற்றிவந்த எனக்கு
சூடு வைத்து கண்ணீர்தருகின்றாய்
உனது நியாயங்களின் அர்த்தம்
இன்றுவரை புரியவில்லை



சந்தர்ப்பங்களால் சந்தித்த நம்
சந்திப்புக்கள்
சந்தேகங்களால் உடைவது
சாகத்தூண்டும் கொடுமையடா உன்
சிந்தனைக்கது எட்டாமலிருப்பது ஏன்?

பெண்மையை வெறும்
தேகமாய்ப் பார்க்குமுன் எண்ணங்கள்
உண்மையாயுரும் காதலையுணர்ந்திடாதா?
வாழ்க்கையின் அடித்தளங்கள்
அன்பினால் இடப்படுதலே
வானுயர்ந்த கட்டிடமாய் எழும்பிடும்
என்பதனை எப்போது அறிவாய்?

இறுதியாய் என் உறுதியாய்ச் சொல்லுகின்றேன்
இதயம் நிறம்மாறும் விந்தையல்ல‌
காதல் அற்புதமான பொக்கிஷம்
நம்பிக்கை புனிதமான உணர்வு
அன்பு சகலருக்கும் கிடைக்காத வரம்
தகுதி அந்தஸ்து பணம் பதவி
சொத்து சுகங்கள் தாண்டிய‌
ஓர் உன்னதம் தெரிவதே
உண்மையான காதல்

நான் ஆழமாய் கட்டிய
என் அத்தனை சாம்ராஜ்யத்தையும்
அடியோடு தகர்த்தெறிந்துவிட்டாய்
இரக்கமேயில்லாமல் சாம்பலாக்கிவிட்டாய்
உன்னால் அன்பென்ற நாதத்தை
இனியெப்போதும் ரசித்திடமுடியாது
ஒன்று காம‌மாய்ப் பார்ப்பாய்
இல்லை காசாய்ப் பார்ப்பாய்
இது உனக்கான துரதிஷ்டம்

போராடினேன் அன்பை அறிவிக்க‌
கோபித்தேன் பாசத்தை உணர்த்திட‌
விலகியிருந்தேன் நேசத்தை உருவாக்க‌
இப்போதும் உன் அலட்சியங்கள்
உன்னை குணப்படுத்தியிருக்கவில்லை

உனக்கான என் பிரார்த்தனைகள் தொடரும்
என் நேசம் பொய்த்துப்போவதில்லை


No comments: