Saturday, May 18, 2013

தவிக்கவிட்டுப் போகின்றது...





என் நிஜத்திலிருந்து
நிழல் மட்டுமென்னை -தனியே
தவிக்கவிட்டுப் போகின்றது...

உயிரை இயக்கிய சுவாசமின்று
தனியே பிரிந்து செல்கின்றது...

தன் குழந்தையை தெருவில்
கதறக்கதற தவிக்கவிட்ட தாயைப்போல‌
என் ஜீவன் எனைக்கடந்து போகின்றது...

உரிமை கொண்டாடிய‌
அத்தனை நிஜங்களும்
கல்லறை வாசலைதிறந்து விட்டு
கலைந்து போகின்றது...

கானங்கள் பாடிய குயிலின்று நான்
குயிலில்லை காகமென்று
கரைந்துகொண்டு பறக்கின்றது...

தேவதை வேடத்து அரக்கி
முகமூடி கலைந்த அச்சத்தில்
முரட்டுத்தனமாக பல்லிளித்துக்காட்டுகின்றாள்...


நான் வாழ்ந்த பசுமைகள் இளமையை
நார்நாராய்க் கிழித்து
நடுவீதியில் இயல்பாய் வீசி
எனைக் கடந்துபோகின்றது...

மீண்டும் என் ஜீவன்
சுவாசத்தை உயிர்ப்பித்திடாதா
மீள எனதன்புக்குள்ளது
மூழ்கிடாதா...

இந்த இளமைக்குள் உனைத்தவிர‌
இனியொரு இன்பங்களில்லை
இந்த இதயத்துக்குள் உனைத்தவிர‌
இன்னொரு உறவுக்கு உரிமையில்லை...

இந்த உயிர் சுவாசிக்கவேண்டுமாயின்
உன் மூச்சுக்காற்று வேண்டும்
இல்லையெனில்
மண்ணுக்கு உணவாகுமேயன்றி
மனிதருக்கு உறவாகுவதில்லை
நீயிதை உணரமாட்டாய் தெரியுமெனக்கு
நிச்சயம் உணர்ந்தழுவாய் என்
கல்லறை வாசலுக்குமுன் அப்போது
உன் கண்ணீர்ச்சொட்டு
என் உயிர்க்காதலை உணர்ந்து உருகும்!!!






No comments: