Saturday, July 23, 2016

37வது படைப்பாளியாக தயானி விஜயகுமார்

http://kalkudahnation.com/41062#!/tcmbck






கல்குடா நேசன் இணையத்தினூடாக வாராவாரம் கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து அவர்களுடனான கலந்துரையாடலை நேர்காணலாகத் தந்து கொண்டிருக்கின்றோம். பலரது ஆதரவையும் எதிர்பார்ப்பையும் சுமந்த இப்பகுதியானது வாசகர்கள் அனைவரினது ஆசியோடு வெற்றிநடை போடுகின்றது. 

இலைமறை காய்களாக இருக்கும் படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதிலும், வளர்ந்த கலைஞர்களின் கருத்துக்களை, திறமைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதினாலும் மகிழ்ச்சியடைகின்றோம். இதன் தொடரில் இன்று 13.05.2016ம் திகதி வெள்ளிக்கிழமை 37வது படைப்பாளியாக எம்மோடு இணைந்து கொள்கிறார் நுவரெலியாவைச்  சேர்ந்த‌ தயானி  விஜயகுமார் அவர்கள்.  இவர‌ பேராதனைப் பல்கலைக்கழகத்தில்  முதுமாணி பட்டப்படிப்பினை  தொடர்வதோடு  இலக்கியத்திலும்  எழுத்துத்துறையிலும்  ஆர்வத்துடன்  செயற்படும்  வளரும்  இளம்  படைப்பாளி  ஆவார்.

//தாழ்வு மனப்பாங்கை தகர்த்தெறிய வேண்டும். எப்போதும் கோபுரத்தை போல் யோசிக்க வேண்டும்.  எங்கள் எண்ணங்களுக்கு சக்தியுண்டு. முயற்சிக்க வேண்டும். தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். தனக்கான துறையினை அடையாளம் காணவேண்டும். அதற்கான வழிமுறைகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்//  என  கூறும்  அவர்  இன்றைய  இளம்  சமூகத்துக்கு  உதாரணமாக திகழ்கின்றார்.  அரசியல்  சமூகம்  பெண்ணியம்  கல்வி  என  அனைத்து   விடயங்களையும்  மிக  அழகாக  எம்மோடு பகிர்ந்துகொள்ளும்  இப்படைப்பாளி தயானி  அவர்களின்   முழுமையான  கருத்துக்களோடு  இணைந்துகொள்ளலாம்.



கேள்வி: தங்களை வாசகர்களோடு அறிமுகப்படுத்திக்கொள்ள முடியுமா?


பதில்: நிச்சயமாக, இந்நேர்காணலுக்கு என்னை அழைத்தமைக்கு முதலில் உங்களுக்கு எனது வணக்கத்தினையும் நன்றியினையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நான் நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட இராகலை நகருக்கு  அண்மித்துள்ள புறூக்சைட் எனும் தோட்டத்தினை வசிப்பிடமாக கொண்டவள். என் பெற்றோருக்கு மூன்றாவது பிள்ளை. இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் என் பாடசாலை கல்வியை மேற்கொண்டேன். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தினை சிறப்புக்கற்கையாக மேற்கொண்டு இளங்கலைமாணி பட்டப்படிப்பினை பூர்த்திசெய்துவிட்டு தற்போது முதுமாணி பட்டப்படிப்பினை அதே பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகின்றேன். மென்மேலும் கற்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றது. அத்துடன் வளர்ந்து வரும் ஒரு எழுத்தாளராக இருக்கின்றேன்.


கேள்வி: கல்வி தவிர‌ நீங்கள் ஈடுபடும் ஏனைய துறைகள்?


பதில்: வெறுமனே ஏட்டுக்கல்வியோடு என்னை முடக்கிக்கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. எனது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் காணப்படுகின்றது. அத்துடன் சமூகத்தின் நலன் கருதி, குறிப்பாக மலையக சமூகத்தின் நலன்கருதி ஏதாவது செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் செயற்பட்டுக்கொண்டிருக்றேன். 
சமகாலத்தில் உயர்தர, வெளிவாரி பட்டப்படிப்பினை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கற்பித்தல், கருத்தரங்குகள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களுக்கு அரசியல், சமூகம் சார் கட்டுரைகளை எழுதி வருகின்றேன். 
மேலும் கவிதை, சிறுகதை, பகுப்பாய்வு, புகைப்படக்கலை, இசை, பேச்சாற்றல் என்பவற்றில் ஆர்வம் கொண்டுள்ளதுடன் என் அறிவுக்கு எட்டிய வகையில் அவற்றினை படைக்கவும் முயல்கின்றேன்.


கேள்வி: எவ்வாறு எழுத்துத்துறையில் ஈடுபாடு வந்தது?


பதில்: பாடசாலை காலங்களில் தமிழ்மொழித்தின போட்டிகள் உட்பட ஏனைய போட்டிகளில் கட்டுரை, கவிதை போட்டிகளுக்கு என்னை ஆசிரியர்கள் தெரிவுசெய்வர். அந்நேரத்தில் என்னை ஏன் தெரிவுசெய்தார்கள் என்ற கேள்விக்கு என்னிடம் விடை இருக்காது. என்னையும் நம்பி தெரிவுசெய்து விட்டார்களே என்ற எண்ணம் மனதை குடைவதால் தெரிவுசெய்த ஆசிரியரின் மனதை குளிரவைக்கவாவது  நான் சான்றிதழ் பெற வேண்டும் என்று எண்ணினேன். அதுவே எழுத்துத்துறையின் முதல் படி. 
இவ்வாறான போட்டிகளுக்கு தெரிவுசெய்தமையால் நாமும் எழுத வேண்டுமானால் பிற படைப்புக்களை வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் பிஞ்சு வயதிலே என் நெஞ்சில் பதிந்தது. அதனால் சிறுபராயத்திலிருந்து கட்டுரைகள், கவிதைகள், பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளை வாசிக்கத்தொடங்கினேன். வாசிப்பதோடு நின்றுவிடாமல் எழுதவும் முற்பட்டேன். குறிப்பாக தரம் மூன்று படிக்கும் போதே கவிதை எழுதத் தொடங்கி விட்டேன். என் முதல் கவிதை மனதில் இன்றும் நினைவில் இருக்கிறது.
'கலக்கமற்ற
உன் இதயத்தை 
கயவன்
ஏன் இந்த கருமை 
நிறத்தால் தீட்டியான்'-கரும்பலகை
அத்துடன் ஏதாவது ஒரு கவிதையையோ, கட்டுரையையோ வாசித்தால் நாமும் ஏன் இதனை போல் எழுத முயற்சிக்க கூடாது என்ற எண்ணம் எனக்குள் வந்ததால் இயல்பாகவே எழுத தொடங்கிவிட்டேன். இருப்பினும் எழுத்துலகத்தில் நான் இன்னும் தவழும் குழந்தையாகத்தான் இருக்கிறேன்.


 
கேள்வி: எவ்வகையான எழுத்துக்களில் உங்களுக்கு அதிக ஈடுபாடு காணப்படுகின்றது?


பதில்: என்னைபொறுத்தவரையில் மொழி, பிரதேசம், நாடு கடந்து தரமான இலக்கியங்களை தேடிப்படிப்பதில் ஆர்வம் இருக்கின்றது. அரசியல், சமூகம் சார் படைப்புக்களில் மாக்சிய இலக்கியங்களை படிப்பதில் ஆர்வம் அதிகம். மேலும் ஆங்கில, தமிழ் ஆய்வுக்கட்டுரைகளை வாசிப்பதில் அதிக ஆர்வம் உண்டு. 
தமிழ்த்துறையில் கவிதை, நாவல், சிறுகதை, என்பவற்றினை அதிகமாக வாசிப்பேன். வைரமுத்து, அப்துல்ரகுமான் போன்றோரின் படைப்புக்களில் அதிக ஆர்வம் உண்டு. ரமணிச்சந்திரனின் நாவலுக்கு அடிமை என்று கூறலாம். கவிதை, விமர்சனக் கட்டுரைகள் எழுதுவதிலே மிகுந்த ஆர்வம் காணப்படுகின்றது.



கேள்வி: நீங்கள் இயங்கும் இத்துறையில் எவ்வாறான நோக்கங்களை கொண்டுள்ளீர்கள்?


பதில்: கவிதைகளை எழுதும் போது சமூகத்திற்கு ஏதாவது கவிதைமூலமாக சொல்ல வேண்டும் என்ற விதையை மனதில் விதைத்த பின்பே எழுதத்தொடங்குவேன். இயற்கை, காதல் என்பதற்கும் மேலாக சமூகத்தில் காணப்படும் அவலங்களுக்கு வரி வடிவம் கொடுக்கவே என் கவிதைகள் துடிக்கும். பெண்கள், சிறுவர்கள் உட்பட பாதிக்கப்பட்டதரப்பினர் அனுபவிக்கும் கொடுமைகள், அநீதிகள் என்பவற்றினை ஆராய்ந்து கவிதைகளாக எழுதுவதோடு மலையகத்தில் மாற்றம் கொண்டுவருவதற்கான புரட்சிக் கவிதைகளை எழுதுவதிலும் அதிக ஆர்வம் கொண்டுள்ளேன். 

கட்டுரைகளை எடுத்துக்கொண்டால் மலையக மக்கள் படும் துன்பங்களை கட்டுரைகளாக எழுதுவதுடன் நடைமுறையில் காணப்படும் அரசியலை பகுப்பாய்வு செய்து விமர்சனம் செய்து எழுதுவதிலும் ஆர்வம் உள்ளது.
இனிவரும் காலங்களில் கவிதை, ஆய்வுக்கட்டுரைகள் என்பவற்றினை நூல் வடிவில் கொடுக்க வேண்டும் என்பதே என் பிரதான நோக்கம். அத்தோடு அடிமட்ட மக்களின் கைகளுக்கு செல்லும் வகையில் என் படைப்புக்கள் அமைய வேண்டும் என்று எண்ணுகிறேன்.


கேள்வி: மலையகத்தில் கல்வி சார்ந்த குறைபாடுகளாக நீங்கள் காண்பது?


மலையகத்தில் கல்விசார் குறைபாட்டை மூன்று வகையில் நோக்க முடியும்.
1. வீட்டுச்சூழல்: வீட்டுச்சூழலானது பிள்ளைகள் கல்வியை முன்னெடுத்துச் செல்வதற்கான களத்தினை உருவாக்கிக்கொடுக்காத போக்கு மலையகத்தில் அதிகளவு காணப்படுகின்றது. வறுமை முக்கியமான பிரச்சினையாக காணப்பட்டபோதிலும், போதைப்பொருள் பாவணை, படிப்பதற்கான களத்தினை வீட்டுச்சூழல் அமைத்துக்கொடுக்காமை, பொருளாதார பின்னடைவால் பிள்ளைகள் தொழிலுக்கு செல்ல எத்தனிக்கையில் கல்வியினை இடைநிறுத்த பெற்றோரே காரணமாக இருத்தல் உட்பட பல காரணங்கள் காணப்படுகின்றன.
2. பாடசாலைச்சூழல்: பட்டதாரி ஆசிரியர்களின் பற்றாக்குறை, பிள்ளைகளிடம் பாரபட்சம் காட்டும் ஆசிரியர்கள், அர்ப்பணிப்பற்ற ஆசிரியர்கள், மாணவர்களுக்கு விரும்பிய பாடங்களை கற்கக்கூடிய விருப்பத்தெரிவுகள் காணப்படாமை, முறையான வழிகாட்டல்களும் ஆலோசணைகளும் காணப்படாமை, முறையற்ற ஆசிரியர் நியமனங்கள் போன்ற காரணங்கள் காணப்படுகின்றன.

3. சமூகச்சூழல்: நாகரிக மோகம், நடத்தை பிறழ்வு, நண்பர்களின் வலுகட்டாயத்தால் தொழிலுக்கு செல்லுதல், வறிய பிள்ளைகளுக்கு ஒதுக்கப்படும் பணம் பதுக்கப்படுதல் போன்ற பல்வேறு காரணங்கள் காணப்படுகின்றன.
கேள்வி: இளைய தலைமுறையினரிடம் எவ்வகையான அக்கறை ஏற்பட வேண்டும் என நீங்கள் எண்ணுகிறீர்கள்?
பதில்: இளைய தலைமுறையினர் கல்வியில் அக்கறை காட்டவேண்டும். முட்டிமோதிக்கொண்டு வரும் விதையினை போல் மாணவர்கள் இருக்க வேண்டும். பொருளாதார, சமூக மட்டத்தில் மலையகத்தவர்கள் ஏனைய சமூகத்தை விட பின் வரிசையில் இருக்கின்றனர். இதனை இளந்தலைமுறையினர் உணர வேண்டும். யாரையும் குறை கூறுவதை நிறுத்திவிட்டு தானாக தன்னம்பிக்கையுடம் கல்வியில் அக்கறை காட்ட வேண்டும். அரச, தனியார், சர்வதேச தொழிற்துறைகளில் தடம்பதிக்க வேண்டும். இலக்கியம், சினிமா, அரசியல், பொருளாதாரம், சமூக மட்டத்தில் முன்னேற வேண்டும்.


கேள்வி: மலையகத்திலிருந்து குறைந்தளவான மாணவர்களே பல்கலைக்கழக அனுமதி பெறுவதாக கூறப்படுகின்றது இதற்கான காரணம் என்ன? உயர்படிப்பிற்கான ஆர்வம் மாணவர்களிடம் எவ்வாறு காணப்படவேண்டும்.



பதில்: மலையகத்தில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவானது என்பது வெளிப்படையான உண்மையாகும். விஞ்ஞான, கணித, தொழில்நுட்ப துறைகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகின்றது. இது முக்கிய காரணம்.
கலைத்துறையில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துச் செல்லும் போக்கு காணப்பட்டாலும் மாணவர்களில் பல்கலைக்கழகம் செல்லக்கூடிய வெட்டுப்புள்ளிகளை பெற்றாலும் கல்வியற்கல்லூரிகளை நோக்கி செல்லக்கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் பல்கலைக்கழகம் சென்றால் இலகுவாக தொழில் பெறமுடியாத நிலை காணப்படுவதுடன், செலவு அதிகமாக ஏற்படுவதுமாகும்.
உயர்படிப்பிற்கான ஆர்வம் என்று நோக்கும் போது மலையகத்தில் குறைவாகவே காணப்படுகின்றது. குறிப்பாக மாணவர்களின் ஆர்வம், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு குறைவாக காணப்படுகின்றன. விரல்விட்டு எண்ணக்கூடிய ஆசிரியர்களே அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர். மாணவர்களுக்கான ஆலோசணைகளும் வழிகாட்டல்களும் மலையகத்தில் மிகக்குறைவாக காணப்படுகின்றது என்பதே எனது கருத்து.


கேள்வி: பாரிய வளம் இல்லாத போதிலும் பல துறைகளில் சாதனைபுரியும் மலையக இளையவர்களின் திறமைகளுக்கு சரியான களம் கிடைக்கின்றதா? 


பதில்: களம் கிடைக்கிறதா என்பதை விட களத்தினை உருவாக்கிக் கொள்வதே உண்மையான திறமை. சாதனை புரிபவர்கள் நிச்சயமாக கௌரவிக்கப்படுவார்கள். குறிப்பாக அண்மையில் சென்லெனான்ஸ் பாடசாலை மாணவன் குளிரூட்டப்பட்ட தலைகவசத்தினை கண்டுபிடித்தார். அவரின் திறமைக்களான கௌரவம் பல மட்டத்தில் கிடைத்ததுடன் அவரின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்த அரசியல் தரப்பிலும் சிவில் சமூக மட்டத்திலும் வரவேற்பு கிடைக்கப்பெற்றது. 
இருப்பினும் சிலர் திறமை இருந்தும் அதனை வளர்த்துக்கொள்வதற்கான களம் அமையாததால் இலைமறைக்காயாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதையும் ஒத்துக்கொள்ளதான் வேண்டும்.


கேள்வி: அரசியல் துறையை பொறுத்த வரையில் எவ்வாறான விழிப்புணர்வை பெறவேண்டியுள்ளது?  


பதில்: அரசியல் என்பதின் விழிப்புணர்வு மக்களின் கைகளில் தான் இருக்கிறது. காரணம் ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் பொறுப்பு மக்களிடம் தான் இருக்கிறது. மூன்றாம் உலக நாடுகளில் எதிர்நோக்குகின்ற முக்கியமான பிரச்சினை ஜனநாயக அறிவு கொண்ட மக்கள் குறைவாக காணப்படுகின்றனர். இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. அரசியல் வாதிகளை குறைகூறுவதே வழமையாக உள்ளது. அவர்களை தாங்கள் தான் தெரிவு செய்தோம் என்பதை மறந்துவிடுகின்றனர். சமூக அக்கறை கொண்டவர்களை அரசியலுக்குள் உள்வாங்க வேண்டும். அடிமட்ட மக்கள், பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும்.


கேள்வி: உங்களது கல்வி, எழுத்து மற்றும் இதர திறமைகளை எவ்வாறு வளர்த்துக்கொள்கின்றீர்கள்? உங்களை ஊக்குவித்தவர்களைப் பற்றி?


பதில்: தட்டிக்கொடுப்பவர்களாலும் தட்டிவிடுபவர்களாலுமே என் எழுத்து உட்பட கல்வி பயணம் சிறப்பாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.
கல்வி, எழுத்து உட்பட திறமைகளை வளர்ப்பதில் என் குடும்பம், பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை, பல்கலைக்கழக நண்பர்கள் மற்றும் முகப்புத்த நண்பர்களின் பங்கு மிகமுக்கியமானது.
இருப்பினும் இருவேறுபட்ட டொக்டர்கள் தான் என் எழுத்து பயணத்திற்கு அதிகளவு தூண்டிலானவர்கள். ஒருவர் கலாநிதி எஸ்.பாஸ்கரன், இரண்டாவது கால்நடைவைத்தியர் எஸ்.கிருபாநந்தகுமாரன். என்னை அதிகம் உற்சாகப்படுத்தவதில் இவர்களின் பங்கு மிகமுக்கியமானது. குறிப்பாக பத்திரிகையில் என் எழுத்துக்கள் வெளிவர இவர்களின் பங்களிப்பு மிகமுக்கியமான காரணமாகும்.


கேள்வி: மலையகத்தில் படித்த தகைமையுள்ளவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி? 


பதில்: வேலையில்லா பிரச்சினைதான் மிகமுக்கியமான பிரச்சினை. திறமையும் தகைமையும் இருந்து வேலையில்லாமல் திண்டாடுவது மிகமுக்கிய பிரச்சினை. தகைமையற்றவர்களுக்கு கொடுக்கும் ஆசிரியர் நியமனங்களை தகைமையான பட்டதாரிகளுக்கு  கொடுக்க மறுக்கின்றது மலையக அரசியல் தலைமைகள்.


கேள்வி: பெண்களின் திறமையை வெளிப்படுத்த இருக்கும் இறுக்கங்கள், தடைகள் பற்றி?


பதில்: பெண்களின் திறமைகளை வெளிப்படுத்த சில இடங்களில் தடைகள் காணப்பட்டாலும் சில பெண்கள் தாங்களாக தனக்கு வேலி போட்டுக்கொள்கின்றனர். இது கவலைக்குரிய விடயமாகும். பெற்றோருடன் இருக்கும் போது சுதந்திரமாக இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பின் பெட்டிப்பாம்பாக அடங்கி விடுகின்றனர். ஆணாதிக்க சமூகம் இன்றும் காணப்படுகின்றது என்பது என் கருத்து. எத்தனையோ திறமைமிக்க பெண்களை திருமணத்திற்கு பின்னரான வாழ்க்கை முடங்கிவிட்டதை நடைமுறையில் காணலாம். 

கேள்வி: பெண்களின் வளர்ச்சி படியினை எவ்வாறு காண்கின்றீர்கள்?


பதில்: பெண்களின் வளர்ச்சி என்பது ஆமைவளர்ச்சி வேகத்திலே செல்கின்றது. இதற்கு முக்கிய காரணம் கலாசார, சமூக மட்டத்தில் காணப்படும் கட்டுப்பாடுகள். கனிசமானளவு பெண்களே சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயற்படுகின்றனர். அரசியல் மட்டத்தில் பெண்களின் வகிபங்கு மிகக்குறைவாகவே காணப்படுகின்றது. இது பாரிய குறைபாடாகும். இன்று இலக்கிய மட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை காணலாம். இது வரவேற்கத்தக்க விடயமாகும். 
இருப்பினும் பெண்கள் முட்டிமோதி வெளிவந்து சாதிக்க நினைத்தாலும் அவர்ளை வேறுபட்ட கண்ணோட்டத்தில் அலட்சியமாக பார்கின்றவர்கள் இல்லாமலில்லை.


கேள்வி: 'பெண்ணியம்' என்பதில் எவ்வகையான விடயங்கள் பேசப்படவேண்டும் என நினைக்கிறீர்கள்?


பதில்: பெண்களின் பாலியல் துன்புறுத்தல் உட்பட ஏனைய துன்புறுத்தல்கள் ஒழிப்பு, திருமணத்திற்கு பின்னரான அடக்கு முறை ஒழிப்பு, சிறுமியரை வேலைக்கு அனுப்புவது தொடர்பான இறுக்கமாக சட்டஅமுலாக்கம், பிரயாணங்களின் போது பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டம், கலாசார ரீதியில் பெண்களை அடக்கும் மரபுகளுக்கு எதிரான சட்டம் உட்பட மறுக்கப்பட்ட பெண்ணுரிமைகள் தொடர்பாக பெண்ணியம் பேசப்பட வேண்டும்.


கேள்வி: சமூக வலைத்தளங்களின் பயன்பாடு ஆரோக்கியமானதாக இருக்கின்றதா, சமூகம் அதனை சரியாக பயன்படுத்துகின்றதா, இவை உங்கள் பார்வையில்?

பதில்: சமூக வலைத்தளங்களின் பயன்பாடும், பாதிப்பும் பயன்படுத்துபவர்களின் கைகளில் தான் உள்ளது. இருப்பினும் பெண்கள் சமூக வலைத்தளங்களில் கருத்திடுவதையும், சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதையும் சில மத அமைப்புக்கள், தனிப்பட்ட நபர்கள் வேறுபட்ட, அல்லது அநாகரிகமான ஒன்றாக பார்க்கக்கூடிய நிலை காணப்படுகின்றது. இதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை. கலாசார, சமூக சீரழிவுக்கு சமூக வலைத்தளங்கள் அதிகளவான பங்களிப்பினை செலுத்துகின்றன.
தணிக்கையிடாமல் செய்திகளை வெளியிடல், உறுதியற்ற செய்திகளை உடனே தெரிவித்து பொதுமக்களை குழப்புதல், ஆபாச இணைப்புக்கள் போன்றன விமர்சிக்கப்படுகின்றன.இருப்பினும் அளவாக பயன்படுத்துவதோடு பிரயோசனமான முறையில் சமூக வலைத்தளங்களை வடிவமைத்துக்கொண்டு செயற்படுவதும் பயன்படுத்துபவர்களின் கரங்களில் தான் உள்ளது.


கேள்வி: பல்கலைக்கழகமே ஓர் ஆரோக்கியமான, அறிவுசார் சமூகம் உருவாகும் கூடமாக காணப்படுகின்றது. இங்கு பகிடிவதை, போராட்டம்,கைகலப்பு போன்றன முரணான காட்டுமிராண்டித்தனமான சில விடயங்களும் நடந்தேறுகின்றன. இதுபற்றி என்ன கூற விரும்புகின்றீர்கள்?


பதில்:  பல்கலைக்கழகம் என்பது பல கலைகளை கற்கக்கூடிய களம் என்று கூறலாம். அறிவுசார் சமூகம் உருவாகும் இடம் என்று நீங்களே கூறியுள்ளீர்கள். அறிவுசார் சமூகம் என்பதுக்கும் மேல் பல அனுபவங்களை பெற்றுக்கொள்ளும் களமாகவும் பல்கலைக்கழகம் காணப்படுகின்றது. பகிடிவதை என்பதில் எதிர்விளைவுகளை மட்டும் வைத்து நீங்கள் வினாதொடுத்துள்ளீர்கள். 
பகிடிக்காக நடக்கும் அன்பு சித்திரவதைகளின் சுவாரஸ்யங்கள் இல்லாமலில்லை. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் தரப்பினர் ஒன்றாக பழகக்கூடிய உறவுப்பாலத்தினை பகிடிவதைகள் தான் ஏற்படுத்திக்கொடுக்கின்றன. காக்கைச்சோறுண்ணும் பழக்கத்தை கற்று தந்ததும் பகிடிவதைதான், ஏழை, பணக்காரன் வித்தியாசத்தை தகர்ததெறிவதும் பகிடிவதைதான். பகிடிக்காகவே வதைகள் செய்வது நன்று. இருப்பினும் அடித்தல், துன்புறுத்தல் கொடுமைதான்.
நியாயமான ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெறுவதால் உரிமைகள் வென்றெடுக்கப்படுகின்றன. அவ்வாறான விடயங்களை பல்கலைக்கழக சமூகம் மேற்கொள்கின்றது. வன்முறைகளை கையிலெடுக்காது அகிம்சை அடிப்படையில் எடுக்கும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் வரவேற்கத்தக்கது. 
இன்று பாராளுமன்றத்திலே கைகலப்புக்கள் நடைபெறும் போது பல்கலைக்கழகத்தில் நடைபெறுவது சகஜம் தான். இருப்பினும் கல்வி கற்ற சமூகத்தின் ஒழுக்கம் மிக முக்கியமானது. நாளைய தலைவர்கள், நாளை நாட்டை ஆளப்போகின்றவர்கள் என்ற வகையில் பல்கலைக்கழகத்திலே நன்நடத்தைகளை பழகிக்கொள்ள வேண்டும் என்பதையும் ஏற்றுக்கொள்கின்றேன்.


கேள்வி: இளம் சமூகத்திற்கு உங்களின் வாழ்க்கை அனுபவங்கனினூடாக நீங்கள் கூறும் ஆலோசணைகள்?


பதில்: நீங்கள் கேட்கும் கேள்விக்கு ஏற்ற வகையில் நான் வளர்ந்துவிட வில்லை இன்னும். இருப்பினும் சில விடயங்களை பகிர்ந்துக்கொள்கின்றேன். என்னை பொறுத்தவரையில் வறுமையின் கோரப்பிடியிலிருந்து முட்டிமோதி வெளிவந்தவள். என் பாடசாலை கல்வி காலத்தில் மின்சார வசதி உட்பட இதர அடிப்படை வசதிகள் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு கற்றேன். மண்ணெண்னெய் கூட இல்லாமல் படிக்க கஸ்டப்பட்டிருக்கிறேன். என்னால் ஜெயிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. இன்னும் சாதிக்க வேண்டும் என்ற மனோபலம் இருந்தது, இருக்கின்றது. 
வறுமையை காரணம் காட்டி தோல்வியினை தழுவுவது மடத்தனம். வறுமையே நம் முன்னேறுவதற்கான சரியான களம். துணிவு,அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை என்பவற்றினை ஆயுதமாக கொண்டு முன்னேற வேண்டும். தாழ்வு மனப்பாங்கை தகர்த்தெறிய வேண்டும். எப்போதும் கோபுரத்தை போல் யோசிக்க வேண்டும்.  எங்கள் எண்ணங்களுக்கு சக்தியுண்டு. முயற்சிக்க வேண்டும். தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். தனக்கான துறையினை அடையாளம் காணவேண்டும். அதற்கான வழிமுறைகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
நான் துவண்டுவிடும் போது எனக்கு துணிவுகொடுக்கும் ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

தேடிச்சோறு நிதம் தின்று-பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி- மனம்
வாடித்துன்பமிக உழன்று-பிறர்
வாடப் பல செயல்கள் செய்து-நரைக்
கூடிக் கிழப்பருவ மெய்தி-கொடுங்
கூற்றுக்கிரையெனப்பின் மாயும் பல 
வேடிக்கை மனிதரைப்போலே- நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ? –பாரதியார்

கேள்வி: வாசகர்களிடம் எத்திவைக்க எண்ணுவது?


பதில்: உங்களை யாரும் அவமானப்படுத்தினால், அசிங்கப்படுத்தினால் நீங்கள் கொடுக்கும் பதிலடி சாதித்துக்காட்டுவதாக இருக்கவேண்டும். எதிர்த்து நின்றுபோராட வேண்டும். வாழ்க்கை வாழ்வதற்காகவே என்பதை மனதில் கொள்ள வேண்டும். 
ஒவ்வொருவரும் தனக்கேற்ற இலட்சியப்பாதை ஒன்றை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். இன்று பெரும்பாலானவர்கள் தொழில் பெறுவதை இலக்காக எண்ணுகின்றனர். தொழிலுடன் வாழ்வு முடிந்து போவதில்லை. எமக்கான அடையாளத்தினை நிலைநாட்டுவதற்கு தொடர்ந்து போராட வேண்டும். 

No comments: