Saturday, April 13, 2013

துருவ நட்சத்திரம் பாரதிபித்தன் (12.04.2013)


மரபு இலக்கியங்களால்தான் தமிழ்மொழி வாழ்கிறது: தமிழகத்திலிருந்து பாரதிப்பித்தன்


சாதிப்பதற்கு கல்வி ஒரு தடைக்கல்லல்ல. மனத்திடமும் முயற்சியும் எமக்குள் ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பின் நமக்கான இருப்பை சாதனையாக மாற்றிவிடமுடியும். எத்தனையோ சாதனையாளர்கள் அதற்கான சான்றாக நம்மத்தியில் வாழ்ந்திருக்கின்றார்கள் ஏன் இப்போதும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். அவ்வாறு இலைமறை காயாக இருக்கின்ற ஓர் சாதனையாளரை எமக்கு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.


இன்று தமிழை வளமாகக்கொண்ட தேர்ச்சிமிக்க எத்தனையோ படைப்பாளர்கள் புதுக்கவிதையில் காலூன்றி நிற்கையில் தமிழ்மீது கொண்ட தீராத பற்றின் காரணமாகவும் பாரதியின் கவிதைகள்மீது ஏற்பட்ட காதலாலுமே மரபுக் கவிதையினை புனைவதில் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றார். தமிழகம் சிவகாசியைச் சேர்ந்த வளர்ந்துவரும் கவிஞர் பாரதிப்பித்தன். அவரது திறமை தமிழ்ப்புலமையினை அடையாளம்கண்டு துருவ நட்சத்திரத்தினூடாக அவரை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. 

கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகத்துடன் துருவ வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்?

இந்தியாவில் தமிழகத்தில் உள்ள மதுரை மாநகர் எனது சொந்த ஊர். ஆனால், இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே, மதுரைக்கு தெற்கே உள்ள தொழில் நகரமான சிவகாசிக்கு குடிபெயர்ந்து வசித்து வருகிறேன். ஏழாம் வகுப்பு வரை படித்த நான், கனரக சரக்கு வண்டி ஓட்டுநராக பணிபுரிகிறேன். பாண்டிமீனா என்பாள் என் மனைவி. எனக்கு பாரதிக் கண்ணன், பாலபாரதி என்ற இரு மகன்கள் இருக்கின்றார்கள். பாரதியின் மேல் கொண்ட அளவுகடந்த பற்றின் காரணத்தால், பாரதிப்பித்தன் என்ற புனைப்பெயரில் கவிதைகள் புனைந்துவருகின்றேன்.

கேள்வி: கவிதை எழுதுவதில் உங்களுக்கு எவ்வாறு நாட்டம் ஏற்பட்டது?

பதில்: உண்மையைக் கூறவேண்டுமானல் பள்ளிப் படிப்பை கைவிட்ட பிறகுதான் எனக்கு, புத்தக வாசிப்பில் அதிக நாட்டம் ஏற்பட்டது. அப்படி வாசிக்கக் கிடைத்தது திருகுறள். அதன் பொருள் புரியாமல் தவிக்கும்போது என் கையில் கிடைத்தது மணிமேகலை. பிரசுரத்தாரின் "எளிமை தமிழ் இலக்கணம்" என்ற நூல். அதன் எளிமையான இலக்கணப் பாடங்கள் என்னை படிக்கவும் எழுதவும் தூண்டியது.


கேள்வி: எவ்வாறான கவிதைகள்மிது ஆர்வம் காட்டுகிறீர்கள்?

பதில்: மரபு இலக்கியங்களின் மீது தீராத காதல் உண்டு. தமிழர்களின் பண்டைய வாழ்வியல் முறைகளை எடுத்துக்கூறும் இலக்கியங்களான அக, புறப் பாடல்களை வாசிப்பதிலும், அவைகளைப் போன்று கவி சமைப்பதிலும் ஆர்வமுண்டு. இடையிடையே சிந்து நடையிலும் பாடல் இயற்றுகிறேன். ஒருசில் புதுக்கவிதைகளும் உண்டு.

கேள்வி: உங்களுடைய எழுத்துக்களை சமூகத்தின் மத்தியில் எவ்வாறு கொண்டுசெல்லுகின்றீர்கள்?

பதில்: தமிழகத்தில் பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் எழுத்திற்கு சிறப்பானதொரு இடம்கொடுத்தாலும், நான் அதற்கான எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை. இணையத்தில், "முகநூல்" ஒன்றையே என் எழுத்திற்கான தளமாக பயன்படுத்துகிறேன்.

கேள்வி: புதுக்கவிதை, மரபுக்கவிதை பற்றிய உங்களது பார்வையும் இன்றைய அவசர யுகத்திக்கு ஏற்றவாறு வாசகர்களின் கவனமும் ஆர்வமும் எவ்வாறான கவிதைகளில் இருப்பதாக நினைக்கிறீர்களா?

பதில்: இன்றைய காலகட்டத்தில் புதுக்கவிதைகள் எல்லோருடைய மனதையும் ஆக்கிரமித்திருப்பது கண்கூடு. காரணம், எளிமையான அதன் நடையும், அதிக கட்டுபாடற்ற அதன் விதியும். சொல்லாட்சியும், பொருளாட்சியும் கொண்ட புதுக்கவிதைகள் எல்லோர் மனத்தையும் ஈர்த்துவிடுவது உண்மை. இருப்பினும், மரபுக் கவிதைகள் பலமான வேலிக்குட்பட்ட பூந்தோட்டம் போன்றது. தோட்டத்திற்கு பாதுகாப்பும் அழியாத் தன்மையும் கொடுக்கவல்ல அந்த வேலிதான், மரபிலக்கியத்தின் இலக்கணங்கள்.

அவ்விலக்கணங்களுக்கு உட்பட்டு எழுதப்பட்ட இலக்கியங்களாலேதான் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பயணப்பட்டு வந்திருக்கிறது தமிழ். ஆனால், இன்றைய காலகட்டத்தில் வாசகர்களின் ஆர்வமும், இரசனையும் புதுக்கவிதையின் மேலேயே வியாப்பித்திருக்கிறது. காரணம், மரபிலக்கியத்தின் கடுமையும், அதைப் பற்றிய அறியாமையும்தான்.


கேள்வி: மரபின் மீதான ஆர்வம் எவ்வாறு ஏற்பட்டது?

பதில்: பழமையைப் போற்றும் பாங்கு இயல்பிலேயே எனக்குண்டு. அந்த வகையில் பண்டைய இலக்கியங்களின் மேல் தீராப் பற்றாளன் ஆனேன். மரபிலக்கியங்களால்தான் தமிழ்மொழி, பன்நெடுங்காலமாய் வாழ்கிறது என்ற கொள்கையுடையவன் நான்.

கேள்வி: ஒருவரின் தனிப்பட்ட திறமையால் கல்விப் பலத்தையும் தாண்டி ஜெயிக்கமுடியும் என்பதனை பல சாதனையாளர்கள் நிரூபித்துள்ளார்கள். அந்தவரிசையில் வளர்ந்துவரும் உங்களின் எதிர்கால எழுத்துத்துறை சார்ந்த திட்டங்கள் பற்றி?

பதில்: உண்மைதான். படிப்பிற்கும், அறிவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதே என் கருத்து. அந்தவகையில் எனக்கு கிடைத்த இந்த வரத்தால், தமிழ்மொழியின் இறவா வளங்கொண்ட மரபு நடையில் பல கவிதைகளை இயற்ற வேண்டும்.
அதிலும், பாரதியைப் பற்றிய பாடல்கள் நிறைய இயற்ற வேண்டும். அதன் முதல் கட்டமாக, பாரதிக்கு "நான்மணி மாலை" ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் நிறைய எழுதுவேன்.

கேள்வி: சினிமாச்சாயலை அதிகமாக ஊடுருவிக்கொள்ளும் இளம்சமூகத்தில் குறிப்பாக சினிமாக்காரர்களை கடவுளாக அல்லது பக்தியாக கொண்டிருக்கும் மனப்போக்கானது சமூகத்துக்கு ஆரோக்கியமானதொன்றா?

பதில்: சினிமாவில் ஆரோக்கியமான விசயங்கள் பல இருக்கிறது. அதற்காக சினிமாவே ஆரோக்கியமான விடயமென்று கூற முடியாது. இளைஞர்கள், சினிமாவையும் சினிமாச் சாயலையும் பெரிதாக விரும்புவதால் வீணான கவர்ச்சிக்கு ஆட்படுகின்றனர். அது இளமையில், தான் கொண்ட பொறுப்பான பல விடயங்களைச் சிதறடிக்கிறது என்பதே உண்மை!
அதே சமயம், பண்பட்ட இளைஞர்கள் அதை, நற்பணி பொதுச்சேவை போன்ற சமுதாய வளர்ச்சிப் பணிகளுக்காக பயன்படுத்துவது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

கேள்வி: உங்களின் புனைப்பெயருக்கான விசேட காரணங்கள் ஏதேனும் உண்டா?

பதில்: விசேடமான காரணங்கள் என்று எதுவுமில்லை. ஒரு படைப்பாளனுக்கு, முந்தைய படைப்பாளர் எவரேனும் ஒருவரின் தாக்கம் கொஞ்சமேனும் இருக்கும். அப்படித்தான் நானும், பாரதியின் மேல் அளவு கடந்த பற்று கொண்டுள்ளேன். பாரதியின் மலைக்க வைக்கும் கவித்திறன். அவரின் கவிநடை. எதைப் பற்றியும் கவலைப்படாமல் மரபை உடைத்த பாங்கு. இவற்றுக்கெல்லாம் நான் அடிமை. இவையே நான் புனைந்து கொண்ட பெயருக்கான காரணம்.


கேள்வி: உங்களுடைய கவிதைகளை நூலுருவில் கொண்டுவருவதற்கு எடுத்துள்ள முயற்சிகள் பற்றி?

பதில்: இன்னும் ஓராண்டு காலத்திற்குள் சிறப்பான மரபிலக்கிய நூல் ஒன்றைச் செய்யவேண்டும் என்கிற எண்ணம் இருக்கிறது. அதற்காவே எழுதிக் கொண்டிருக்கிறேன். அதில், பாரதியின் புகழ் பாடவேண்டும் என்பதே என் விருப்பம்.
தமிழுலகில் வாசகர்கள் அதிகரிக்க வேண்டும். எக்காலமும் அழியாத இலக்கியங்கள் தற்காலத்தில் உருவாக வேண்டும் என்ற பாரதியின் ஆசையே என் ஆசையும். அதில், நானும் ஒரு துளியெனில், அது தமிழ்த்தாய் எனக்களித்த வரம்.

கேள்வி: இறுதியாக உங்களுடைய கவிதையொன்றை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்?

பதில்: இது ஆனந்தக் களிப்பு என்ற தலைப்பிலான கவிதை.

ஆணுக்குப் பெண்ணேயா தாரம்- அதை
...அறியாத பெண்ணுக்கிங் காண்களே பாரம்
தூணுக்கு மண்ணேயா தாரம்- ஒரு
...துயரெனி லாணுக்குப் பெண்ணேயா தாரம்
பூவையென் றோர்சொல்லைச் சொல்லி- பெண்ணை
...பூசைப் பொருளாக்கி பூட்டியே வைத்தார்
பாவையென் றும்பெண்ணைச் சொல்லி- அந்தப்
...பாவைபோல் தன்னிச்சைக் காட்டவேசெய்தார்
பெண்ணென்றும் பின்னென்ற கொள்கை-கொண்ட
...பேடிகள் வாழ்வதா லென்றென்றுந்தொல்லை
பெண்ணுக்கிங் குண்டென்று கண்டோம்- தம்மைப்
...பேணாத பெண்மையா லஃதுண்டா மென்போம்!
ஆண்டுக் கொருநாளைத் தந்து- உன்னை
...ஆட்டிப் படைத்திடு மாண்களை முந்து
வேண்டுந் தனித்திறங் கொண்டு- அந்த
...வேலியை வெட்ட விடுதலை யுண்டு!
சுற்றும் புவியிதன் மேலே- சிறு
...சுண்டை யளவுடை மானிட ராலே
முற்றுஞ் செயலிசை வாகும்- பெண்ணை
...முடமாய் முடக்கிட அத்திறஞ் சாகும்!
பெண்ணேநீ வாழிய வென்றும்- ஒரு
...பெருமை யதிலுண்டா மாடவர்க் கென்றும்!
மண்மீது மக்குத லின்றி- புவியில்
...மானுடஞ் செழித்திடும் பெண்ணாலே ஒன்றி!


(நேர்காணல்: ராஜ் சுகா)

No comments: