Saturday, April 27, 2013

ஆண்களின் இதய அகராதியில் பெண்களின் அர்த்தம் இதுவா?


?????????????????????????????????????????????????????????????????????????????????????????????




இதயத்தில் நீண்ட நாட்களாக கனன்று கொண்டிருந்த ஒரு விடயம். இதனை மூன்று சம்பவங்களினூடாக சந்தித்தேன் அவை எரிந்த சுவாலைக்குள் எண்ணையை வார்த்துவிட்டுக்கொண்டிருந்தாலும் எப்படி ஆரம்பிப்பதென்று வார்த்தைகளை தேடிக்கொண்டிருந்தேன். ஆனால் அதன் அவசியம் இன்றென்னை பலவந்தப்படுத்தியது எப்படியும் இதனை எழுதவே வேண்டுமென்று. விடயத்தை சொல்லி ஒவ்வொன்றையும் என் அறிவுக்கெட்டியவரை விபரிக்கின்றேன் சாதக பாதக, உடன்பாட்டு எதிர்வினைக்கருத்துக்களோடு நீங்களும் இதில் பங்கெடுத்துக்கொள்ளுமாறு வேண்டுகின்றேன்.


சமூகத்தை அலைக்கழித்துக்கொண்டிருக்கும் முக்கியமான பிரச்சனையும் முற்போக்கு சிந்தனையின் உச்சகட்ட வளர்ச்சியினாலும் தொழிநுட்ப நாகரிக வளர்ச்சியின் மிதமிஞ்சிய அபகரிப்பினாலும் தண்டவாளம் விட்டு தாண்டவமாடுகின்ற ஓர் அவலத்தையே இங்கு பதிய விளைகின்றேன்.ஆண் பெண் உறவுமுறையின் அநிச்சையான போக்கு வழிசமைத்துத்தந்த விபரீதத்தை விலாசமிட நினைக்கின்றேன்.

நான் குறிப்பிட நினைக்கும் விடயத்தின் மூலங்கள் மூன்றும் இவைதான்,



01.எனது அலுவலகத்தின் சக பெண் உத்தியோகத்தரின் தோழிக்கு நடந்த சம்பவம்

02. எனது குடியிருப்புக்கு அருகில் தற்காலிகமாக வந்து குடியேறிய ஒரு நிறைமாத கர்ப்பிணிக்கு நடந்த சம்பவம்

03. ஓர் ஆண் பத்திரிகையொன்றுக்கு எழுதியிருந்த கேள்வி

                 இவை மூன்றும்தான் இன்றெந்தன் அவஸ்தையை அதிகப்படுத்தியது.






ஆண் பெண் நட்பு, காதல் போன்ற விடயங்களில் இன்று எத்தனை வீதமான உண்மை இருக்கின்றது என நிச்சயித்துக்கூறமுடியாது ஏனெனில் 90% மான இணைப்புக்கள் வெறுமையான போலிகளை மட்டுமே சுமந்துகொண்டிருக்கின்றன என்பதனை ஆயிரம் உதாரணங்கள் கூறி நிரூபித்திடமுடியும் ஆனால் நானிந்த மூன்று விடயங்களை மாத்திரமே கையிலெடுக்கின்றேன்.

என் சக அலுவலக உத்தியோகத்தர் பானு அவரது பால்ய சிநேகிதிகள் நிலுகா(சகோதர மொழி பேசுபவர்), ரேணு. இவ்விருவரும் ஆடைவிரும்பிகள் இவர்கள் இருவரும் பிரபலமான நகரத்தில் குறிப்பிட்ட அந்தக்கடைக்கு செல்வது வழக்கம். கடை உரிமையாளரோ(தமிழர்) ரேணுவுக்கு தெரிந்த நண்பர் என்பதால் நிலுகாவும் அவனுடன் நட்பானாள் நாளடைவில் அதுவே காதலாக உருமாறியது. முழுமையான அன்புடனும் நம்பிக்கையுடனும் (அப்படி அவள் நினைத்துக்கொண்டாள்)தொடர்ந்த அவர்களது காதல் விவகாரம் ரேணுவுக்கு தெரியாது. நிலுகாவை அவன் மணம் செய்துகொள்வதாகவும் தனக்கு ஒரு வாழ்வென்றால் அது உன்னோடுதான் என்றும் அவளை சந்தித்தது தான் செய்த புண்ணியம் என்றும் பல்வேறு வார்த்தைக்களினூடாக அவளது நம்பிக்கைக்கு பாத்திரமானான். தன்னை உயிராக நேசிக்கும் அவனை தன் உலகென வலம்வந்தாள் எல்லாமே அவன் மட்டும்தான் என்ற முழுமையான நிலையில் அவனிடம் தன்னையே இழக்கநேரிட்டுள்ளது. அந்நிலையில் ஒருநாள் அலுவலகம் வந்தவேளையில்தான் நிலுகாவின் உலகம் அவள்தலைமீதே வந்துவிழுந்தது ஆமாம் ரேணுவின் கையில் அவளது தோழன் அந்த கடை உரிமையாளனது திருமணப்பத்திரிகை. தன்னை சுதாகரிக்கத்தெரியாதவளாய் பானுவை குளியலறைப்பக்கம் அழைத்தாள் விபரமொன்றுமறியாத பானு அவள்பின்னே ஓடினாள்  பானுவிடம் எல்லா விடயங்களையும் சொல்லி கதறியழுத நிலுகாவை தேற்றினாள் அவனுக்கு திருமணமும் நடந்தேறியது. சமூகத்துக்கும் குடும்பத்தின் கெளரவத்துக்கும் பயந்து அவள் தனது கர்ப்பத்தை கலைத்தாள் தன் காதலோடு சேர்த்து ஆனாலும் தன்னால் எதனையும் மறக்கமுடியவில்லையென்று இன்று தன 40வது வயதிலும் தனிமரமாக அதுவும் பட்டமரமாக வாழ்ந்துகொண்டிருக்கின்றாள். இது என் கற்பனையோ அல்லது இவ்விடயத்தை உணர்த்துவதற்காக நான் புனைந்த உருவகக்தையோ அல்ல 100% உண்மைக்கதை.






அடுத்தவிடயம் அந்த கர்ப்பிணிப்பெண். முதல் கதைபோலவே இவளும் அவனது நம்பிக்கை வார்த்தைகாளால் தன் பெண்மையை இழந்தவள் ஆனால் இப்பெண்ணுக்கு பெற்றார் இல்லை உறவினர்களின் பராமரிப்பில் வளர்ந்தவளுக்கு அவனது நட்பு/ காதல் ஆலையில்லா ஊருக்கு இழுப்பம்பூவைப்போல இருந்தது. கர்ப்பத்துக்குப்பின்னர் அவனுக்கு காதல் கசக்க அவளை அநாதரவாக விட்டுவிட்டு ஊரைவிட்டு சென்றுவிட்டான் இந்த விவகாரம் காரணமாக நீதிகிடைப்பதற்காகவே அவள் அவனைதேடி வந்திருக்கின்றாள் (அவளது உறவினர்களும் அவளை ஏற்கமுடியாதென்று கூறிவிட்டனர்) அக்கம்பக்கத்து மக்களின் உதவியுடன் காவற்துறையில் முறையீடு செய்து அவளது குழந்தைக்கு தந்தை அவன் தான் என்று உலகத்துக்கு கூறுவதற்காக மட்டும் அவனுடன் பதிவுத்திருமணம் செய்துகொண்டாள்.









மூன்றாவது விடயம், அண்மையில் ஒரு பத்திரிகையில் பிரசுரமான ஓர் ஆணின் கேள்வி. அது இதுதான், " நான் பெருமைக்காக சொல்லவில்லை எனக்கு பலபெண்களுடன் தொடர்பு இருக்கின்றது ( அடி செருப்பால நாயே இது உனக்கு பெருமையா??? மனதுக்குள் கச‌ந்துகொண்டேன்) ஏன் பெண்கள் மிக இலகுவாக தங்கள் உடலை கொடுக்க முன்வந்துவிடுகின்றார்கள்? " என்பதுதான். இந்த ராமனில் கேள்வியில் பதில் சொன்னவர் ஒரு பெண்ணாயிருந்தால் ஆடிப்போயிருக்கவேண்டும் அவர் நிதானமாக ஒரு பதிலை முன்வைத்திருந்தார் " பெண்களுக்கு முழுமையான நம்பிக்கை கிடைத்தபின் அதற்கு பிரதியுபகாரமாக தன்னிடம் உள்ள மேன்மையானதை கொடுக்கவிரும்புவாள் தன்னைவிட அவளிடன் வேறெதுவும் பெரிதாக தெரிவதில்லை எனவேதான் தன் அன்பை காதலை வெளிப்படுத்த நம்பிக்கையின் உச்சகட்ட வெளிப்பாடாக இவ்வாறு நடந்துவிடுகின்றது" என தனது பதிலை தந்திருந்தார்.




ஆக காதல் (நாம் மிகப்புனிதம் என நினைத்துக்கொண்டிருந்தது) என்பது தனது உடல் தேவையை பூர்த்திசெய்து கொள்ளும் ஓர் வழிமுறையாக கையாளப்படுவதையே இன்றை காதல்விவகாரங்கள் உணர்த்திநிற்கின்றது. ஆனால் நான் காதலைப்பற்றி பேசவரவில்லை உண்மையான காதல்களும் இங்கு இல்லாமலில்லை (பொறுக்கியெடுத்தால் ஒரு 20%).



ஒரு ஆண் தன் காதலியுடன் பழகும்போது எவ்வாறான மனநிலையுடன் நெருங்குகின்றான் பெண்ணை வெறும் உடல்தேவைக்காக மட்டும் பயன்படுத்தும் பொருளாகவே அவனது பார்வையை மதிப்பிடலாமா? இங்கு நான் குறிப்பிட்ட விடயங்களின் மூன்று ஆண்களுமே ஒரேவிதமான மன இயல்பை கொண்டவர்களாகவே என்னால் பார்க்கமுடிகின்றது. உண்மையில் ஒரு பெண் தனக்கு நம்பிக்கையானவன் தன் எதிர்காலத்தில் இவன்தான் என ஒருவனை முழுமையாக நம்புமிடத்து தன்னை எல்லா வகையிலும் அர்ப்பணிக்க தயாராகவே இருக்கின்றாள் இதனாலேயே பல நம்பிக்கை துரோகங்கள் மிக இயல்பாக நடந்தேறிவிடுகின்றது.(இதில் 'நீ என்னை நம்பவில்லையா என்ன இது தொடுவதற்குகூட எனக்கு உரிமையில்லையா?' என்ற பாசாங்கோடு நாடகத்தில் உணர்ச்சிமிக்க வரிகளையும் போட்டுக்கொ(ல்)ள்வார்கள்)  இங்கு அந்த மூன்றாவது சம்பவத்து ராமனின் எண்ணவோட்டத்தைப்பார்த்தால் பெண்கள் எல்லோரும் கொஞ்சம் பழகியவுடன் படுக்கையை பகர்ந்துகொள்வார்கள் என்ற கீழ்த்தரமான சிந்தனையுடனேயே பெண்களை பார்க்கின்றார் அவரது பார்வையில் பெண்கள் வெறும் தீனிப்பொருள் அவ்வளவுதான். ஆனால் அந்தப்பெண் இவ்வாறானதொரு நிலமைக்கு வருவதற்கு தன்னுடைய பிழையினை அவனால் உணர்ந்துகொள்ளமுடியவில்லை. அவனால் எவ்வாறான வார்த்தைகள் வழங்கப்பட்டிருக்கும் அவளின் எதிர்காலத்துக்கான வாக்குறுதிகள் எத்தனை உறுதியாக சொல்லப்பட்டிருக்கும் என உங்களாலும் என்னாலும் புரிந்துகொள்ளமுடியும்  என நினைக்கின்றேன்.











பெண்ணானவள் அவளது காதலைத் தன் வாழ்க்கையாக நினைப்பவள் இவன்தான் தன் எதிர்காலம் என அவளுக்கான நம்பிக்கைவருமிடத்து எதனையும் செய்ய துணிபவளாகவே தன்னை இனங்காட்டுகின்றாள் இதுவே ஆண்களுக்கு இலகுவாகிப்போய்விடுகின்றது. உண்மையில் இங்கு நம்பிக்கை என்பது பிழையா அல்லது காதல் என்பது பிழையா? ஆண்கள் பெண்களை வெறும் படுக்கைக்கு பயன்படுத்தப்படும் பொருளாக அல்லது தேவையாக மட்டுமா பெண்களைப்பார்க்கின்றார்கள்? அவர்களது இதய அகராதியில் பெண்கள் என்பவர்கள் இத்தனை மலிவான அர்த்தத்திலா மதிக்கப்படுகின்றார்கள் என்ற என் வினாக்கள் நீள்கின்றது விடையில்லாமல். இவ்விடயம் படித்த படிக்காத பெரிய உத்தியோகம் கூலித்தொழில் என்பவையான எந்த பாகுபாடுமின்றித்தான் பார்க்கவேண்டும் ஏனெனில் எந்தத்தரத்தில் இருந்தாலும் இவர்களுக்குள் இவ்விடயத்தில் ஒரேவிதமான பார்வை இருப்பதாகத்தான் என்னால் அவதானிக்கமுடிந்தது.


இங்கு காதலிக்கும்போது உடல்ரீதியான தொடர்பு சரியென்று  நான் வாதிடவர‌வில்லை அதற்கு தூண்டுதலாயிருக்கின்ற காரணியை வெளிப்படுத்தியுள்ளேன் அவ்வளவுதான். இந்த நம்பிக்கை துரோகங்களை எப்படி நியாயப்படுத்துகின்றார்கள், பெண்கள் மீதான பலியாக சுமத்தப்படுவதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நம்பிக்கை என்ற ஒரே ஒருவிடயம்தானா ஏமாற்றத்தின் திறவுகோலாக காணப்படுகின்றது?



இதற்கெல்லாம் ஒரே தீர்வாக பெண்கள் மீதான பார்வை மாறவேண்டும் அவர்களை உணர்வுள்ள இதயமுள்ளவர்களாக பார்க்கவேண்டும். தாங்கள் வழங்குகின்ற நம்பிக்கை வார்த்தைகளுக்கு உண்மையாக இருக்கவேண்டுமென்று மனதளவிலாவது நினைக்கவேண்டும். காதல் ஓர் அழகான விடயம் பல நல்ல சமூக மாற்றங்களை நிகழ்த்தக்கூடிய அருமையான விடயம் அதனை இதுபோல கீழ்த்தரமான காரியங்களால் நாம் மாசுபடுத்திவிட்டோம் அத்துடன்  பெண்கள் மிக நிதானமாக கவனமாக ஆண்களுடன் பழகவேண்டும் எடுத்த எடுப்பிலேயே அவர்களின் அத்தனை வார்த்தைகளுக்கும் ஆமாசாமி போடக்கூடாது என்பதுதான் என்னால் இதிலிருந்து உணரமுடிந்தது.





இதெல்லாம் பார்க்கும்போது காதலிக்காமல் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை கட்டிக்கொண்டு செல்வது எல்லாவற்றிற்கும் சிறந்ததுபோல் விளங்கிகின்றது அப்பாகிட்ட உடனே சொல்லனும் நீங்க பார்த்த மாப்பிள்ளைக்கு ஓகே என்று.







No comments: