Wednesday, April 3, 2013

துருவ நட்சத்திரம் ஷாமிலா முஸ்டீன் (28.03.2013)

http://www.thuruvam.com/2013/03/php_28.html




பெண்ணியம் என்பது முரண்பட்ட கூறுகளுடன் பயணிக்கிறது: ஷாமிலா முஸ்டீன்

Print Friendly and PDF

பல விருதுகள் ஏன் கொடுக்கப்படுகின்றது என கொடுப்பவர்களுக்கும் தெரியாது பெறுபவர்களுக்கும் தெரியாது என்ற தனது தனிப்பட்ட கருத்தோடு துருவம் இணையத்தில் மனம்திறக்கிறார் ஷாமிலா முஸ்டின். கவிஞராக, அறிவிப்பாளராக ஒரு தமிழ் ஆசிரியையாக தன் தனித்திறமைகளினால் சமூகத்தில் அடையளமிட்டுக் காட்டக்கூடிய ஷாமிலா முஸ்டீனை துருவ நட்சத்திரம் பகுதிக்காக சந்தித்தோம். அவர் தன்னுடைய வெளிப்படையான கருத்துக்களோடும் நியாயமான எண்ணங்களோடும் எம்மோடு இணைந்து கொள்கின்றார்.

கேள்வி: இளம் படைப்பாளியாக பலதுறைகளில் வலம்வரும் உங்களது அறிமுகம் பற்றி எமது வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்?

துருவ நட்சத்திரத்தின் நேர்காணல் ஊடாக வாசகர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இளம் படைப்பாளி என்பதனை விட வளர்ந்து வரும் படைப்பாளி எனலாம். நான் மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனைப் பிரதேச செம்மண்னோடை எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவள். தந்தை ஷெரீப் தாய் ருசூதா, ஆரம்பக் கல்வியை மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலத்திலும் உயர்தரத்தினை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகளிர் கல்லூரியிலும் பயின்றேன்.

பின்னர், தர்காநகர் தேசிய கல்வியல் கல்லூரியில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவினைத் தமிழ்மொழி பாடத்தில் பயின்றேன் பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமானிப் பட்டத்தினைப் பெற்றேன். தற்போது கொழும்பு ஹமீத் அல் ஹூஸைனி கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றி வருகிறேன். அதேநேரம் திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவினைப் பயின்று கொண்டிருக்கிறேன்.

கேள்வி: நீங்கள் ஈடுபட்டுவரும் துறைகளையும் அதிக விருப்பத்துக்குரிய துறை எது?

பதில்: நான் அறிவிப்பாளராக 2006 - 2006 இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குத் தெரிவானேன். அறிவிப்பு என்னைக் கவர்ந்த துறை. அதேநேரம் பத்திரிகைத் துறையும் மிகவும் கவர்ந்தது. இரண்டிலுமே ஈடுபாடு காட்டிய போதிலும் நான் ஒர் ஆசிரியையாக இருப்பதனாலும் உயர் கல்வியைத் தொடர்வதனாலும் முழுமையாக அறிவிப்புத் துறையிலும் பத்திரிகைத் துறையிலும் தடம்பதிக்க முடியாது போனது வேதனைக்குரியதாகும்.

இருந்தபோதிலும் பாடசாலை நேரம் தவிர்ந்த நேரங்களில் அறிவிப்பில் ஈடுபாடு காட்டி வருகிறேன். ஆசிரியத் தொழிலினை நான் விரும்பி ஏற்றுக் கொள்ளவில்லை. சட்டபீடத்திற்கான வெட்டுப்புள்ளி போதாமையே நான் கல்வியியல் கல்லூரி செல்ல வேண்டிய தேவையினை ஏற்படுத்தியது. ஆனாலும் சளைக்காமல் இரண்டு முறை சட்டக்கல்லூரி நுழைவுப் பரீ்ட்சையினை எழுதியிருக்கிறேன். விரும்பியது கிடைக்காவிட்டாலும் கிடைத்ததை விரும்பி மிக நேர்த்தியாகச் செய்கிறேன். அதனால்தான் அதிக வருமானத்தை ஈட்டித்தரும் பல சந்தர்ப்பங்களை இழந்துமிருக்கிறேன். 

பாடசாலை நேரம் என்பது எனக்கு மிகவும் முக்கியமானது. ஆயினும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சுயாதீன ஊடகவிலாளராகவும் அறிவிப்பாளராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன். கற்கும் காலத்திலிருந்தே கவிதை, கட்டுரை சிறுகதை விவாதம் போன்ற துறைகளில் ஈடுபாடு காட்டி வந்தேன், இப்போது வானொலி நாடங்களில் விருப்பத்துடன் நடித்து வருகின்றேன். இஸ்லாமியக் கலாசார உடையில் தொலைக்காட்சி செய்தியளிக்க வேண்டுமென்பது எனது அவா.

கேள்வி: பல திறமைகளையும், ஆற்றல்களையும் தன்னகத்தே கொண்டுள்ள பெண்சமூகம் திருமணத்தின் பின்னர், அத்துறைகளில் இருந்து ஒதுங்கிக்கொள்கின்றார்கள். இதற்கான காரணம் என்ன?

பதில்: இந்த விடயம் என்னைப் பாதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். திருமணம் என்பது வேறு, திறமைகள் ஆற்றல்கள் என்பது வேறு. திருமணத்திற்கு முன்னராயினும் சரி, பின்னராயினும் சரி பெண் பெண்ணாகவே இருக்கிறாள். அவளின் வகிபங்குதான் மாறுகின்றது. தன்னுடைய திறமைகளையும் எதிர்காலத்தையும் கருத்திற்கொண்டு தன் துணையினை அமைத்துக்கொள்கின்ற போது இத்தகைய கேள்விகளுக்கு இடமிருக்காது.

ஆக பெண்ணானவள் தனது திறமைகளுக்கும் ஆற்றல்களுக்கும் திருமணத்தினை முட்டுக்கட்டையாகக் கருதுகிறாள், அடுத்தது வேலைப்பலு குடும்பச் சுமை குழந்தைகளைப் பராமரிக்க வேண்டிய தேவைகள் அதிகரிக்கின்றபோது அவள் ஒதுங்கிக் கொள்வதையே தெரிவு செய்கிறாள். திருமணத்தின் பின்னர் இலக்கியச் செயற்பாடுகள் தேவைதானா என்று கேட்கும் சமுதாயத்தில் அவள் சிறைப்படுகின்ற போதும் ஒதுங்கிக் கொள்கின்றாள். இவை எல்லாவற்றையும் தாண்டித்தான் மற்ற பெண்கள் தம்மை சவாலுடன் சமுதாயத்தில் அடையாளப்படுத்துகின்றார்கள்.

கேள்வி: ஆசிரியையான நீங்கள் மாணவர்களின் உளப்பாங்ககை நன்கு அறிந்து வைத்திருப்பீர்கள். தற்கால கல்வி நடவடிக்கைகள் மாணவர்களுக்கு சுமையாக இருப்பதாக பெற்றோர் சார்பில் அதிருப்தி தெரிவிக்கப்படுகிறது. இது எந்தளவு தூரம் உண்மை?

பதில்: நான் இடை நிலை வகுப்பு ஆசிரியையாக இருப்பதால் ஆரம்ப வகுப்பு மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் பெற்றோரின் குறைபாடுகள் பற்றி அனுபவரீதியாகக் கூற முடியாது. பொதுவாகப் பார்க்குமிடத்து இன்றைய கல்வி முறைமையின் கற்றல் கற்பித்தலில் ஆசிரியரின் வகிபங்கு உருமாற்றப் பங்களிப்பு ஆகும். ஆக ஆசிரியர் கற்பதற்கும் கற்பதைத் தூண்டுவதற்குமான வழிகாட்டியாக உள்ளார். மாணவர்கள் தேடிக்கற்க வேண்டிய கட்டாயச் சூழ்நிலையினை புதிய கல்விச் சீர்திருத்தம் ஏற்படுத்தியுள்ளது. இதைனையே பெற்றோர் சுமையெனக் குறை கூறுகின்றனர். தேடிக் கற்பதன் மூலமே தலைசிறந்த மாணர்கள் உருவாக முடியும்.

ஆகவே பயிற்சிகளையும் செயற்றிட்டங்களயும் சுமையாகக் கருதாது மாணவர்கள் ஈடுபடுவதுடன் பெற்றோரும் அதற்குத் துணை செய்ய வேண்டும். அத்துடன் ஆசிரியர்கள் மாணவர்களுடன் கழிக்கும் நேரம் மிகவும் சொற்பமானது, ஒரு நாளில் கிட்டத்தட்ட 7 மணித்தியாலங்களேயாகும். அந்தக் குறித்த நேரத்திற்குள் ஆசிரியர் வழிகாட்டியாகவும் மாணவர் தேடிக் கற்பவராகவுமே செயற்பட வேண்டும்.ஆனால் இங்கு மாணவர்கள் அனைத்தையும் ஆசிரியரிடமிருந்தே எதிர்பார்ப்பதும் அது நிறைவேறாது விடுமிடத்து சுமையாகவும் அவர்கள் கருதிக்கொள்கின்றார்கள்.

கேள்வி: நீங்கள் தடம்பதித்தமைக்காக பெற்றுக்கொண்ட விருதுகள் மற்றும் சாதனைகளை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்?

பதில்: கொழும்பு பல்கலைக்கழத்தில் 2006ஆம் ஆண்டு இதழியல் டிப்ளோமாவினைப் பயின்ற நான் திறமைச்சித்தி பெற்றதுடன் ஊடகத்தில் ஆக்க எழுத்து எனும் பாடத்திற்கு பேராசிரியர் ஹிடியோ சுமிசி நம்பிக்கை நிதியவிருதினையும் வென்றேன்.

தேசிய கவிஞர்கள் சம்மேளனம் “காவ்யஸ்ரீ“ என்ற கௌரவ நாமத்தினை வழங்கிக் கௌரவித்துள்ளது. இந்தியாவில் ஷர்மா நகர்வியாசர்பாடியில் நடைபெற்ற இலக்கியக் கூட்டத்தில் அறிவிப்புத் திறனைப் பாராட்டி தமிழ்நாட்டு இலக்கியவாதிகளால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டேன். பல விருதுகள் ஏன் கொடுக்கப்படுகின்றது என கொடுப்பவர்களுக்கும் தெரியாது பெறுபவர்களுக்கும் தெரியாது அதனால் பல விருதுகளை மறுதலிக்க வேண்டியேற்பட்டது. விருது பெறுமளவிற்கு இன்னும் நான் சாதிக்கவில்லை என்று கருதுகிறேன், சாதிப்பதற்கு இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. கலாநிதிப்பட்டப்படிப்பை புர்த்தி செய்வதுதான் எனக்கான உயரிய பெறுமானமாகக் கருதுகின்றேன். 

கேள்வி :ஊடகத்துறையில் பெண்களின் ஆர்வமும் ஆதிக்கமும் எவ்வாறு காணப்படுகின்றது?

பதில்: என்னைக் கவர்ந்த துறைகளில் ஊடகத்துறையும் ஒன்று. ஆங்கிலத் திரைப்படங்களில் புலனாய்து ஊடகவியலாளர் பாத்திரங்களைப் பார்க்கின்றபோது என்னை நான் அப்பாத்திரமாகக் கற்பனை செய்துகொள்வேன். அவ்வாறு வரவேண்டும் என்ற அவா என்னுள் சுடர்விட்டுக் கொண்டிருந்தாலும் இங்குள்ள சூழலில் ஒரு சிறுபான்மையினப் பெண் அதில் சாதித்தல் என்பது குதிரைக் கொம்புதான்.

ஊடகத்துறையில் தற்காலத்தில் பெண்களின் ஆதிக்கமும் ஆர்வமும் அதிகரித்திருக்கின்றதென்றே சொல்லலாம். ஊடக உயர்கற்கைகளுக்கான வாயில்கள் நம் நாட்டில் திறக்கப்படாதிருப்பதும் அதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்படாதிருப்பதும் துரதிஸ்டமானது. இருக்கும் வளங்களைக் கொண்டு இலத்திரணியல் மற்றும் அச்சு ஊடகங்களில் பெண்கள் மிளிர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கல்வித் தகைமையும், வாசிப்பும் தேடலும் ஆய்வும் இல்லாமலும் கூட இங்கு பல பெண்கள் சாதித்திருக்கிறார்கள் என்பதும் கூர்ந்து கவனிக்க வேண்டியுள்ளது.

கேள்வி: பெண்ணியம் என்ற கோட்பாட்டை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்? ஆண்களுக்கு நிகராக தமது திறமைகளை வெளிக்கொணரவும் சாதித்திடவும் பெண்களால் முடிகின்றதா?

பதில்: பெண்ணியம் என்ற கோட்பாடு மிகச் சமீபத்தில் தோற்றம் பெற்றது, இப்படிப்பட்ட கோசங்கள் தோற்றம்பெற மனிதர்களின் செயற்பாடுகளே காரணம். பெண்ணியம் என்ற கோட்பாட்டைப் பேச எனக்கு எந்த தேவையுமில்லை. அனைத்தும் எனக்கு சமமாகக் கிடைக்கின்றன. ஒரு முஸ்லிம் பெண் என்ற அடிப்படையில் கருத்து தெரிவிக்கின்ற போது பெண்ணுக்கு இயல்பாகக் கிடைக்கப்பெற்ற குணாம்சங்களோடு இஸ்லாமிய வரையறைக்குள் நான் மிகவும் பாதுகாப்பாகவும் தெளிவாகவும் சுதந்திரமாகவும் இருக்கிறேன்.

ஆண்களுக்கு நிகராக என்னாலும் செயற்படவும் திறமைகளை வெளிக்காட்டவும் முடிகின்றது. இஸ்லாம் அதில் எந்தத் தடங்களையும் ஏற்படுத்தவில்லை. அதனால் பெரிதாக இங்கு எந்தத் தடங்களையும் எதிர்நோக்கவில்லை. இருப்பினும் திறமைகளை வெளிக்கொணரும் போது காழ்புணர்ச்சியின் காரணமாக வீழ்த்த முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள் அது பெண்கள் ஆண்கள் என்ற வேறுபாடு இல்லையே. இங்கு எந்த ஆதிக்க கோட்பாட்டை முன்னிறுத்துவது?

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தில் “பெண்ணுலகம்” நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய காலங்களில் பலநூறு பெண்களைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது பெற்றுக் கொண்ட அனுபவங்களில் இருந்து ஒன்றைச் சொல்ல முடியும். இப்போது பெண்ணியம் பேசுகின்றவர்களின் அனுபவங்களல்ல அவர்கள் எதிர்கொண்டது. அவர்கள் சவால்ளை எதிர்கொள்ளத் தெரிந்தவா்களாய் இருந்தார்கள். ஆனால் தன்னைத் தனித்துவ அடையாளச் சின்னமாகக் காட்டப்போய் எல்லை கடந்து சிந்திக்கிறார்கள். சமய வரையறைகளைத் தகர்த்தெறிந்துவிட்டுச் செல்ல முயல்கின்றனர். அத்துடன் பெண்ணியம் என்பது பல முரண்பட்ட கூறுகளுடன் பயணிப்பதையும் அவதானிக்கிறேன். முரண்பாடு இருக்குமிடத்தில் பிரச்சினை எழுவதும் எதிர்கொள்ள நேர்வதும் இயல்பானது. இருப்பினும் பெண் சாதிக்க முயலும் போது ஆண்களின் தலையீடும் முறையற்ற விமர்சனங்களும் பெண்ணியம் பேசுவதற்கு வாய்ப்பாக அமைகின்றது.

கேள்வி: எழுத்தாளரான நீங்கள் எவ்வகையான நோக்கங்களோடும் எத்தளங்களில் நின்றுகொண்டும் உங்கள் படைப்புக்களை சமூகத்திடம் எடுத்துச் செல்கின்றீர்கள்?

பதில்: படைப்புத்திறன் அனுபவங்களால் ஆளப்படுவது. அனுபத்தின் திரட்சியும் வீச்சும் படைப்புக்களில் எதிரொலிக்கும். ஒருவரின் படைப்பாற்றலும் படைப்பின் கனதியும் அனுபவத்தின் கனதியைக் கொண்டே வெளிப்படும். அது வெளிப்படுத்தப்படும் தளங்கள் பல்வேறு தரப்பினரால் தமக்கேற்ற தளங்களுக்குள் வகைப்படுத்தப்படும். என்னைப் பொறுத்தவரைக்கும் நான் இஸ்லாமிய வரையறைகளுக்குள் நின்று சுதந்திரமாகப் படைப்புத் தளத்தினைத் தீர்மானித்துக் கொள்ள முடியும்.

வாசிக்க கூசும் படைப்புலகத்திலிருந்து விடுபட்டு சமுதாய மாற்றத்தினை நோக்காக் கொண்டு எனது படைப்புக்களை நிறுவ முயல்கிறேன். எனது படைப்புக்கள் சமூகத்தில் சிறிதாய் ஒரு சீர்திருத்தத்தினை ஏற்படுத்தினாலும் போதும். அந்த அடிப்படையிலேயே நிலவின் கீறல்கள் எனும் கவிதைத் தெகுதியையும் அதன் ஒலிப்புத்தகத்தையும் வெளியிட்டேன்,

கேள்வி: மேலைத்தேய கலாசாரத்தின் ஊடறுப்பினால் எமது கலை, கலாசார பண்பாட்டுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

பதில்: மேலைத்தேய கலாசாரம் முற்றுமுழுதாகக் கீழைத்தேய கலாசாரத்துடன் மாறுபடுகின்றது, கீழைத்தேயக் கலாசாரம் சமயக் கோட்பாடுகளாலும் கூறுகளாலும் கட்டியாளப்படுகின்றது, இதன் காரணமாக சிதைவுகளை அவ்வளவு எளிதில் மேலைத்தேயக் கலாசாரத்தால் ஏற்படுத்த முடியாது. மேலைத்தேயக் கலாசாரத்தை நவீன நாகரீகமாகக் கருதுகின்ற போக்கு துரதிஸ்டமானது. உலகமயாக்கலின் நேரடிவிளைவுகள்தாம் அவை.

ஆடைக்குறைப்பு மேற்கின் மேம்பட்ட அம்சமாகக் கருதப்படுகிறது. நமக்கு அது ஒவ்வாது. அங்கு நிர்வாணமாகத் திரிதலும் யாரும் யாரோடும் எத்தனை முறையும் எப்படியும் எங்கும் இருக்கலாம் என்பது மேற்கிற்கு சர்வசாதாரணமானது. இங்கு அது தரம்கெட்ட சமாச்சாரம் கற்பு சார்ந்தது. வாழ்க்கைக்கென்றுள்ள ஒழுங்குகளை மேற்கு மறுதலிக்கிறது. ஆனால், கிழக்கு அந்தக் ஒழுங்கினுள் தன்னைப் பத்திரப்படுத்திக் கொள்கின்றது.

சமய மறுப்பும் கூட தம்மை நவீனவாதிகளாகப் பலர் அடையாளப்படுத்தப் பயன்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டது. புதிய உலக ஒழுங்கினுள் மொழிகளை நோக்கிய ஆங்கிலத்தின் பாய்ச்சல் அபரிமிதமானது, சுகர் போடவா? பாத் பண்ணிங்களா? ரைஸ் சாப்பிட்டிங்களா? சிலீப் பண்ணுங்க, அவுட் போகனும் இப்படி ஆங்கிலத்தின் அரிப்பு நமக்குள்ளும் தொற்றிக் கொண்டுள்ளது, அதன் விளைவு சில விடயங்களை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரியும் என்ற நிலையும் தோற்றம் பெற்றுவிட்டது, ஆங்கிலம் மொழி என்பதிலிருந்து நவீனநாகரிகத்தின் தவிர்க்கமுடியாத கூறாகிவிட்டது. 

அத்துடன் கலையினுள் மேற்கின் வடிவங்களை வைத்தே நமது கலைக்கூறுகளை மட்டிடும் அபாயம் தோன்றிப் பல காலமாகிறது. மேற்கின் கலைவடிவங்களை, அது எத்தகைய குப்பையாக இருப்பினும் நவீனமாகப் பார்க்கும் நமது ஆய்வாளர்களிற் பலர் நமக்குள்ளிலிருந்து வெளிப்படும் புதுமைகளை மறுதலிக்கும் போக்கினைக் கொண்டுள்ளனர், மேற்கில் கிடைக்கும் அங்கீகாரம் உலக அங்கீகாரம் என்ற நிலைக்குப் போய்விட்டது, இது காத்திரமானதல்ல அபாயமிக்கது நம்மையெல்லாம் புச்சியத்தில் நிறுத்தி மேற்கிடம் எதிர்பார்த்து நிற்கும் பொம்மைகளாக்கும் போக்காகும். எனவே, விழித்துக் கொள்வது அவசியம் இப்போதுள்ள உலக யுத்தம் கலாசாரங்களுக்கிடையேயானது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

கேள்வி: மேடையில் அறிவிப்பாளக இருந்த அனுபவங்கள் பற்றி?

பதில்: மேடை அனுபவங்கள் சுவாரஷ்யமிக்கவை. பாடசாலைக் காலத்திலிருந்தே நான் மேடைகளுக்குப் பரிட்சயமாகிவிட்டேன். கல்லூரிப் படிப்பின்போது அதில் இன்னும் செம்மைப்பட முடிந்தது. அத்துடன் வானொலி அறிவிப்பாளரான பின்னர் பல புதிய அனுபவங்களால் புடம்போடப்பட்டேன். பல்வேறுபட்ட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கிறேன். அதிலும் விருது வழங்கும் மேடைகளில் அறிவிப்புச் செய்வது தனிக்கலை. சகோதர மொழியும் தமிழும் கலந்த விழாக்களே நகைச்சுவைமிகுந்தவை.

எந்தவிதத் தயார்படுத்தலும் முன்னேற்பாடுகளுமின்றி அந்த இடத்திலேயே நம்மைத் தயார்படுத்திக் கொண்டு தொகுத்து வழங்க வேண்டும்.அது சவாலானதும் கூட. அதே நேரம் பல முரண்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். விழா ஏற்பாட்டுக்குழு விடுகின்ற எல்லாத் தவறுகளையும் அறிவிப்பாளர்களே சுமக்கவேண்டியும் ஏற்படும். இவ்வாறான பொழுதுகளில் பார்வையாளர்கள் குற்றம்குறைகளை அறிவிப்பாளர்கள் மீதே சுமத்திச் செல்வர் அது ரொம்பக் கஷ்டமானது. எவ்வளவு பெரிய அனுபசாலியையும் அது கொஞ்சம் ஆட்டிப்போட்டு விடும்.

பல சந்தர்ப்பங்களில் அவசர அவசரமாகவே அறிப்பாளர் தேடுவர். அங்குதான் தயார்படுத்தல் புரணமாகியிருக்காது, சிலர் மிக நேர்த்தியாகத் தி்டடமிட்டு அறிவிப்புச் செய்ய வேண்டியதை தட்டச்சு செய்து தருவர் இது நிகழ்வைத் தொய்வின்றிக் கொண்டு செல்ல பெரிதும் துணைபுரியும். 

கேள்வி: உங்களது வளர்ச்சியில் குடும்பத்தின் ஆதரவு பற்றி...?

பதில்: இதனைத் திருமணத்திற்கு முன் திருமணத்திற்குப்பின் எனப் பிரித்துப் பார்க்கவேண்டும். எனது மூத்த சகோதரிதான்என்னைப் பாடசாலைக் காலங்களில் கட்டியாண்டவர். அவர் சகல துறைகளிலும் என்னை புடம்போட்டார். ஊக்கப்படுத்தும் பொறுப்பைத் தாயும் நெறிப்படுத்தும் பொறுப்பை மூத்த சகோதரியும் சுமந்திருந்தனர்.

திருமணத்தின் பின்னர் கணவர் முஸ்டீன் என்னை புடம்போட்டவர். நீ முன்னேற வேண்டும் கல்வியில் இலக்கியத்தில் எந்த உச்சம்வரைச் செல்ல முடியுமோ அதுவரைச் செல்ல வேண்டுமென்பார். அவரது உபதேசங்கள் என்னை நிலைகுலைந்து போகாமல் நிலைநிறுத்தின.

கவிதாயினி ஷாமிலா அவர்களின் அண்மைய கவிதைகளில் ஒன்று துருவம் வாசகர்களுக்காக‌

தலைப்பிடப்படாதது..
உன் வாய்ப்பட்ட சேதியெல்லாம் 
தாவம் போற் பரவிற்று 
இளிவரல் பட்டு உன் 
இழுக்கம் மிக்கதான செயல் 
இன்னும் தான் உனக்குப்புரியவில்லைபோ 

குளநெல் போல் தலைப்படும் திறன் 
இறையளித்த கொடையாய் நிலைப்பட்டது 
குழகுதற் பாங்கும் குறுநகையும் 
குலிலி போலொலித்திடும் 
கருமை படிந்த உள நஞ்சு ஆகாதடா 

சரண் புத்தி ஒவ்வா நிலைக்கிட 
சரணம் ஒரு வழி தான் 
பதங்கள் ஒளி பட்ட பனித்துளி போல 
பண்டம் குறிக்கும் ஆறில் ஐந்தழியும்
பதனமில்லா நாவுக்கு நீயே பொறுப்பு

(நேர்காணல்: ராஜ் சுகா)

No comments: