Saturday, September 24, 2011

உன் எதிர்காலத்துக்காய்

அழகென்று தானுனை யணைத்தேனென் ஆருயிராக‌
அடியெடுத்து வைத்திடுமெவ் வேளையிலும் அடியேனாக‌
அன்பினாலே நாள்தோறும் ஆண்டே னன்னையாக‌
ஆகாதென்றே தள்ளிவிட்டாய் நானும் பாவியாக...

புவிமீதின் பூவையரை பூவாய் நினைந்தேன்
புரியாவுன் பார்வையினில் தீயா யணைந்தேன்
விழிதேடிய வழியினில் நீயே ஒளியானாய்
விடைதந்த வாழ்வையேன் பிடுங்கியெறிந்தாய்...

காதலென்ன வெறும் காசென்றா யெண்ணினாய்
கானலெண்ணத்தினால் கடல் கடப்பதென்றா யெண்ணினாய்
உயிரை உயிராலுணர்ந்து உணர்வினை உள்வாங்கி
உடல்வேகுமத் தருணம்வரை உருகிடுதலே...

வேற்றுநாட்டு சொந்தத்தால் வேண்டாத வனானேனோ
வேலையொன் றில்லாததால் தீண்டாதவ னானேனோ
ஆண்பிள்ளையுன் அன்பினா லழிந்ததை யறிவாயா
வீண்பிள்ளையா னதுன் பழியாலதை புரிவாயா...

காட்டுக் கத்தலினா லென்காதல் உணர்த்தியிருப்பேன்
காவிச்சென்ற இதயமதை கூவி யழைத்திருப்பேன்
காதலர்நம் கடந்தகால முழுதும் சொல்லியிருப்பேன்
கன்னியுன் னெதிர்காலம் நினைந்து மெளன‌மாய் விம்மியிருந்தேன்

No comments: