Saturday, September 3, 2011

எனது பார்வையும் கவிஞ‌ரின் பதிலும் (கவிஞர் பி.அமல்ராஜ் அவர்களின் "கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" கவிதைத்தொகுப்பு)


எனது 'கிறுக்கல்கள் சித்திரமாகின்றன' பற்றி மனம் திறக்கும் ஓர் இலங்கை இளம் பெண் எழுத்தாளர் த.எலிசபெத்...


வணக்கம், இறுதியான பல சர்ச்சைகளை உருவாக்கிய அந்த இலக்கியப் பதிவைத் தொடர்ந்து இப்பொழுது எனது மனம் பூரிக்கும் ஒரு சுகமான பதிவை கொண்டுவருகிறேன். எனது கவிதைப் படைப்பான 'கிறுக்கல்கள் சித்திரமாகின்றன' என்கின்ற நூலை ரசித்து வாசித்த வளர்ந்துவரும் இளம் பெண் எழுத்தாளர்களில் ஒருவரான ராஜ் சுகா (த.எலிசபெத்) எனக்கு மின்னஞ்சலிட்ட தனது ரசனைக் குறிப்பு இது. பல உண்மைகளை அப்படியே சொல்லியிருக்கிறார். பெண் என்கின்ற தளத்திலிருந்து பார்த்தபடியால் பல ஆண் வரிகள் அவருக்கு தெளிவாகவே தெரிந்திருக்கிறது. ஆனால் எதையும் தவாறாக சொல்லவில்லை. (என்று நினைக்கிறேன்). சரி அவருடைய அந்த மடலைப் படியுங்கள்.

உங்கள் கருத்திற்கும், ரசனைக்கும் மிக்க நன்றிகள் சுகா.. உங்கள் எழுத்துப் பயணமும் வெற்றிகராமனதாக தொடர வாழ்த்துக்கிறேன்.


கவிஞர் பி.அமல்ராஜ் அவர்களுக்கு வணக்கம்!


தங்களின் எழுத்துக்களை முதன்முதலில் முகப்புத்தகத்தின் வாயிலாகவே தரிசிக்க எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.புதுக்கவிதைகளிலும் யதார்த்தபூர்வமான நகைச்சுவையுண‌ர்வுடன் கூடிய உங்களது எழுத்துக்களே என்னை ரசிக்கத்தூண்டியது.உண்மையில் இன்றைய இலக்கிய உலகில் மரபுக்கவிதையை தவிர்த்து புதுக்கவிதைகளுக்குள் ஓர் புரட்சியே நடந்துகொண்டிருக்கின்றது.எத்தனையோ மூத்த இலக்கியவாதிகளின் கடுப்புக்களுடனும் கண்டிப்புக்களுடனும் வளர்ந்துவரும் இப்புதுக்கவிதை சாம்ராஜ்யத்தில் உங்களுடைய கவிதைகளுக்கும் சிறந்த களம் உண்டு என்பதனை தொகுப்பை வாசிக்கும்போதே உண்ர்ந்துகொண்டேன்.
"கிறுக்கல்கள் சித்திரமாகின்றன" என்ற தொகுப்பின் கவிதைகள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பினும் அதன் எதிரலைகள் எண்ணற்ற எண்ணங்களை உருவாகிவிடும் சிறந்த கருத்துக்களமாக காணப்படுகின்றது வாழ்த்துக்கள்.
"தியாகம் அவள் பெயர்" என்ற தாய்மைக் கவியூடே ஆரம்பித்து சிறப்பித்திருப்பது வ‌ரவேற்புக்குரியது.அதில்,


" ஊர் உறங்கியும்
உறங்காத‌
உன் தாலாட்டும்
இன்னும் என்
காதுகளில் கேட்கும்
ரகுமானின் 'ஜெய் கோ'தான்"...

என்று தாலாட்டையும் இளைஞர்களின் இரவுநேர இசை மயக்கத்தையும் வர்ணித்துள்ளவிதம் ரசனை.அதிகமாக காதல் கருக்களை சுமந்துவந்த கவிதைகள், பலவிதமாக காதலை நோக்கியிருக்கின்றது."நீதான் அவள்" கவிதையில் காதலை ஏக்கத்தோடு பார்க்கின்ற வரிகளாகவும் "நீ நட்பு காதல்" தலைப்பில்,புரியும்போது விளங்காத காதல் பிரியும்போது உணர்கையில், காதலுக்கேயுரிய தடுமாற்றங்களின் வரிகளாகவும்,"கல்லறைக்கனவு" கவிதையில் ஒருதலைக்காதலின் ஓரங்க வலிகளை உண‌ர்த்தும் விதமாகவும்,"ஒரு ரயில் பயணம்" "ஒரு காதல் காவியம்" "அடங்காத காதல்" "மொட்டை மாடிக்காதலும் முடிந்துபோன கற்பனையும்" "கடற்கரை காதல்" என பல்வேறு கோணங்களில் கவிஞரின் பார்வை இளையவர்களின் மனதை வருடும் என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை.

சின்ன சின்ன வரிகளோடு சித்திரம்போல் வரையப்பட்டுள்ள இத்தொகுப்பு பார்வைக்கும் வாசிப்புக்கும் புரிதலோடு நயந்துகொள்கின்றது.ஒவ்வொரு கவிதையும் சமூகத்தை வித்தியாசமான சிந்தனைகொண்டு தொட்டிருப்பதும் நிஜங்களின் பிரதியாக வெளிப்பட்டிருப்பதும் கவிதைகளுக்கு மேலும் கனத்தை சேர்த்திருக்கின்றது.இன்னும் கவிதையின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியிருக்கலாம் என தோன்றுகின்றது.

"முதிர்க்கன்னி" என்ற கவிதையில் ஒரு பெண்ணின் உள்ளக்குமுறலை அணுகியிருப்பது கவிஞரை பாராட்டச்செய்கின்றது.இங்கு கவிஞர் இனியவன் இஸாருதீன் அவர்களுடைய கவிதையொன்று நினைவுக்கு வருகின்றது,


"கிழவனாக சிந்தித்து
குழந்தையாக வாழும்
வாலிப மனிதன்"

என அவர் குறிப்பிட்டது இங்கு நிஜமாகியிருப்பதில் மகிழ்ச்சியளிக்கின்றது.

அத்தோடு தேசத்தின் கடந்த கால வடுக்களின் வலிகளை கண்முன் காட்டியிருப்பது கண்ணீரை வரவழைக்கும் உருக்கமான வரிகள்."செத்தா போய்விட்டேன்" கவிதையில்,


" ஒற்றைக்காலும்
ஒற்றைக்கையும்
ஒற்றையாய் நிற்க என்
இதயம் மட்டும்
இரட்டையாய் அடிக்கிறது
இறந்துவிடுவதா
இல்லை மறந்து
வாழ்ந்து விடுவதா?"

என்ற வினாக்களுக்கு இதயம் ஓர் கணம் நின்றியங்குகின்றது.அதே உணர்வை "முள்ளிவாய்க்கால் முடிவுரை" "பயணங்கள் முடிவதில்லை" ஆகிய கவிதைகளிலும் உணர முடிந்தது.

பொதுவாக பெண்களை குறைகூறாத ஆண்கள் மிக அரிது கவிஞர் மட்டுமென்ன விதிவிலக்கா? தனது "புதுமை பெண்ணும் தோற்றுப்போன ஆணும்" என்ற கவிதையில் இவ்வாறு வெளிப்படுத்தியிருக்கின்றார்,


"மானத்திற்கும்
ஆடைக்கும்
சம்பந்தமேயில்லை இவள்
அகராதியில்
பாவம்,
வெளியில் தெரிபவை
அவள் அங்கங்கள் மட்டுமல்ல‌
வெளிறிப்போன நம் கலாச்சாரமும்தான்!"

என கலாச்சாரத்துக்காய் கவலைப்பட்டுள்ள கவிஞர், "நீதான் அவள்" என்ற கவிதையில்,


" என்
இளமையின் தாகம்
உன்னுடைய தேகம்
தீருமா என் சோகம்
இதுவா காதல் வேகம்?

என்பதனையும் அவரே உணர்த்தியிருக்கின்றார்.இதே விடயத்தினை " மொட்டை மாடிக்காதலும் முடிந்துபோன கற்பனையும்" கவிதையிலும் காணலாம்.இதிலிருந்து புரிந்துகொள்ள முடிவது என்னவென்றால்,எதிர்பார்ப்பதும் நீங்களே எதிர்ப்பதும் நீங்களே தான்.எதை வெறுப்பதாய், கண்டிப்பதாய் வெளியில் சொல்லுகின்றீர்களோ அதையே உள்வாங்கிக்கொள்ள முனைவது இந்த ஆண்களின் இயற்கையான இயல்பு என்பதை அழகாக கவிவரிகளில் தந்துள்ளார் வாழ்த்துக்கள்.

எவ்வளவுதான் நம்முடைய வளர்ச்சி உயரத்திலிருந்தாலும் எமது பழைய நினைவுகளை மீட்டிப்பார்ப்பதும் பழைய வாழ்வின் நிழல்களில் ஒதுங்கிப்பார்ப்பதும் மனதுக்கு இனிமையான ஒன்றே அவ்வுணர்வுகளை கவித்துவத்துடன் காணும்போது இரட்டிப்பு சந்தோஷத்தில் மனம் குதுகலிக்கின்றது.அந்த இதத்தினை " எனது ஆட்டோகிராப்" "ஊர்ப்பக்கம்" ஆகிய கவிதைகளில் காணலாம்.

உடைத்து வைக்கப்பட்ட மாதுளம்பழத்தினைப்போல கவிதைகள் அனைத்தும் கண்களையும் கருத்தினையும் கவர்ந்துள்ளது.ஓர் நல்ல புத்தகத்தினை வாசித்த திருப்தியும் பெறுமதியான சிந்தனை வெளிப்பாட்டினை ரசித்த நிறைவும் இத்தொகுப்பில் அடங்கியிருக்கின்றது.எத்தனை ஆர்வத்துடன் முதற்பக்கம் ஈர்த்ததோ அதே ஆவலோடு கடைசி ஏடுவரை தொடர்ந்தது இத்தொகுப்பினதும் கவிஞரினதும் வெற்றி எனலாம்.


இன்னும் பல்வேறு தளங்களுடன் சிறந்த களம் காணவும் இப்பெரிய இலக்கிய உலகில் உங்களுக்கென ஓர் சிறப்பான இடத்தினை தக்கவைத்துக்கொள்ளவும் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.


நன்றி
த.எலிசபெத்

No comments: