Friday, January 8, 2016

கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் (08.01.2016) ஓவியரும் கவிஞருமான ராஜன் ராஜ்

பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது. 

இதன் தொடரில் இன்று 08.01. 2016ம் திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 22வது இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் இலங்கையின் வளர்ந்து வரும் இளம் படைப்பாளியான ஓவியரும் கவிஞருமான ராஜன் ராஜ் அவர்கள். கிழக்கு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவரான இவர் “ஓவித்தின் வரலாறு அதன் வளர்ச்சி ஓவியத்தின் பகுப்புக்கள் கொள்கைகளை அறிய அதையே படநெறியாக மேற்கொண்டு வருவது சிறந்த வழியாகும். அத்தோடு, ஓவியத்துறைக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்திருப்பதும் வேலைவாய்ப்பை இலகுவாகப் பெறக்கூடியதாக இருப்பதும் காரணமாக அமைந்தன” என தனது ஓவியத்துறையின் ஈடுபாட்டுக்கான காரணத்தைக் கூறுவதோடு, ஓர் ஆர்வமிக்க கலைஞராக தன்னை வெளிப்படுத்தத்துடிக்கும் இவ்விளையவரின் முயற்சிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவரின் நேர்காணலிலும் இணைந்து கொள்வோம்.







த.ராஜ் சுகா: உங்களைப்பற்றி எமது வாசகர்களுக்காக? 

ராஜன் ராஜ்: மட்டக்களப்பின் களுவாஞ்சிக்குடிப் பிரதேச சபைக்குட்பட்ட மகிழூர் கிராமத்தில் 1990.8.3 திகதி சின்னத்துரை சந்திரகலா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தேன். குடும்பத்தில் நான், அம்மா, அப்பா, அக்கா, தம்பி மொத்தம் ஏழு பேர். இன்று வரை குடும்பத்தின் அரவணைப்பில் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். தரம் 1 தொடக்கம் தரம் 9 வரை கண்ணகிபுரம் விநாயகர் வித்தியாலத்தில் படித்தேன். பின்பு மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலத்தில் உயர் தரம் வரை படித்து சித்தி பெற்றேன்.

 த.ராஜ் சுகா: தற்போது என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? 


ராஜன் ராஜ்: தற்போது நுண்கலைப்பிரிவில் இளமானிப் பட்டப்படிப்பிற்காக கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் இறுதியாண்டில் கட்புலனும் தொழிநுட்பக்கலையும் என்னும் பாடநெறியைப் படித்து வருகிறேன். த.ராஜ் சுகா: படிப்பு தவிர்ந்து நீங்கள் ஈடுபடும் ஏனைய துறைகள்? ராஜன் ராஜ்: ஓவியத்துறையிலும் கவிதையிலும் அதிக ஈடுபாடிருக்கிறது. தவிர, புகைப்படத்துறையில் விருப்பமுண்டு. படிப்பை முடித்ததும் புகைப்படத்துறையில் ஈடுபடும் எண்ணமுள்ளது. 

த.ராஜ் சுகா: ஓவியத்தில் எவ்வாறு நாட்டம் ஏற்பட்டது? 


ராஜன் ராஜ்: சிறு வயதிலிருந்தே ஈடுபாடிருந்தது. இதற்குப் பின்னணியாக குடும்பத்தில் அம்மா, அக்கா வரையும் சித்திரங்கள் அமைந்தன. பின்னர் ஓவியத்திலிருந்த விருப்பின் காரணமாக தொடர்ந்து வரையத் தொடங்கினேன்.


 த.ராஜ் சுகா: ஏன் ஓவியத்தை ஒரு பாடமாக உயர் வகுப்பில் தொடர வேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டது? 


ராஜன் ராஜ்: பல காரணங்களுண்டு. முதலாவதாக ஓவியனாக வேண்டும் என்னும் சிறு வயது ஆசை நிறைவேற்ற வேண்டுமாயின், ஓவியத்துறை எடுக்க வேண்டும் நிலையில் எடுத்தேன். தவிர, ஓவியத்தின் வரலாறு அதன் வளர்ச்சி ஓவியத்தின் பகுப்புக்கள் கொள்கைகளை அறிய அதையே படநெறியாக எடுப்பது சிறந்த வழியாகும். அத்தோடு ஓவியத்துறைக்கு சமூகத்தில் நல்ல அந்தஸ்திருப்பதும் வேலைவாய்ப்பை இலகுவாகப் பெறக்கூடியதாக இருப்பதும் காரணமாக அமைந்தன. தவிர, சுய தொழிலில் ஈடுபடலாம் என்பதனாலும் இத்துறையைத் தெரிவு செய்தேன். 


த.ராஜ் சுகா: ஓவியத்திற்கான வரவேற்பு, வாய்ப்புக்கள் இலங்கையை பொறுத்த வரையில் எவ்வாறு காணப்படுகின்றது? 


ராஜன் ராஜ்: ஓவியத்திற்கான வரவேற்பு இலங்கையில் மிகக்குறைவாகவே காணப்படுகிறது. விரும்பிப் பார்ப்பாருண்டு விலை கொடுத்து வாங்குவாரில்லை என்றே சொல்ல வேண்டும். தெற்கில் சிங்கள மக்களிடம் நல்ல வரவேற்பிருக்கிறது. வடக்கு கிழக்கில் ஓவியம் தொடர்பான புரிதலும் குறைவாகயுள்ளது. நவீன ஓவியங்களை ஏற்கும் மக்கள் இலங்கையில் மிகக்குறைவினரே. கட்டணம் வாங்கி ஓவியம் கற்பிக்கும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிரெண்டு உள்ளன. பல்கலைக்கழங்களில் ஓவியம் கற்க வாய்ப்புக்கள் உண்டு. அதுவும் மூன்று பல்கலைகழகங்களிலே ஓவியக்கண்காட்சிகளை நாடத்தக் கூடிய பிரத்தியேக ஓவியக்கூடங்களும் மிகக் குறைவாகவேயுள்ளது.

 த.ராஜ் சுகா: தொழில் ரீதியாக இதனை முன்னெடுக்க முடியுமென நினைக்கின்றீர்களா? 


ராஜன் ராஜ்: இன்றைய காலத்தில் பிரதான தொழிலாகச் செய்ய முடியாது. ரசிக்கும் மக்கள் ஓவியத்தை பொருந்தொகை கொடுத்து வாங்குவதென்பது கேள்விக்குறியே. ஆனால், நகரங்களில் வரவேற்பும் வாங்கு மக்களும் உண்டு.


 த.ராஜ் சுகா: ஓவியத்தில் உங்களது முன்னோடியாக வழிகாட்டியாக நீங்கள் கருதுவது? 


ராஜன் ராஜ்: பல ஓவியர்கள் இருப்பின், தனியான ஈர்ப்பு பிற்பட்ட மனப்பதிவாத ஓவியரான வின்சென்ட் வான்கோ மீது தான். அவரது வேகமான லாவகரமான தூரிகை வீச்சு எனக்குப் பிடிக்கும். அவர் மீது மரியாதையும் கொண்டுள்ளேன். வழிகாட்டி என்று பெரிதாக ஒருவருமில்லை. கற்றுத்தரும் விரிவுரையாளர் நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். தவறுகளைத் திருத்தவும் உதவுவார்கள். ஆலோசனைகளையும் பகிர்வார்கள். 


த.ராஜ் சுகா: வரைவதற்காக எந்தெந்த விடயங்களை உள்வாங்கிக்கொள்கின்றீர்கள்?


 ராஜன் ராஜ்: வகுப்பில் வரைவதை தவிர, நான் எனக்காக வரையும் ஓவியங்கள் அநேகமானவை. நிலத்தோற்றக் காட்சிகளாக அமைகின்றன. அதில் சமூகத்தின் இருப்பிடங்களையும், காலநிலைகளையும் தற்கலாத்தில் எவ்வாறுள்ளது என்பதை வெளிப்படுத்த விரும்புகிறேன்.


 த.ராஜ் சுகா: ஓவியத்தினால் ஒரு விடயத்தினை அப்படியே சொல்ல முடியுமென்று நினைக்கின்றீர்களா? எவ்வாறு? 


ராஜன் ராஜ்: ஆம். அப்படியே காட்சிப்படுத்த முடியும். இயற்பண்புக் கொண்டதாகவும், தெளிவாகவும், தெளிவின்றியும், யாதார்த்தமாகவும், விடயத்தை உடைத்தும், சிதைத்தும், நேரடியாக புரியாமலும், மனப்பதிவாகவும், குறியீடுகளாகவும் காட்சிப்படுத்த இயலும். அந்த வகையில், ஓவியம் மிகவும் சக்தி வாய்ந்தது.





 த.ராஜ் சுகா: உங்களுக்கு கவிதை எழுதுவதிலும் ஆர்வம் உண்டென்று சொன்னீர்கள். எவ்வகையான கவிதைகளை எழுதுகின்றீர்கள்? 



ராஜன் ராஜ்: சிறு வயதிலிருந்தே கவிதைகளை எழுதி வருகிறேன். தற்போது ஹைக்கூ கவிதை, புதுக்கவிதைகளையே அதிகம் விரும்பி எழுதுகிறேன். அத்துடன், நவீன கவிதைகளும் எழுதுகிறேன்.


 த.ராஜ் சுகா: ஓவியம், கவிதை என்ற உங்களது படைப்புக்களை ஆவணப்படுத்தும் எண்ணம் பற்றி? 


ராஜன் ராஜ்: படிப்பை முடித்து விட்டு ஓவியக்கண்காட்சியை நடாத்தும் எண்ணமுள்ளது. அத்துடன், ஓவியங்களையும், கவிதையையும் நூல் வடிவமாக வெளியிட எண்ணியுள்ளேன். 


த.ராஜ் சுகா: உங்களது ஓவியங்கள், கவிதைகளுக்கு கிடைத்த விமர்சனங்கள், பாராட்டுக்கள் பற்றி? 


ராஜன் ராஜ்: எனது ஓவியங்கள், கவிதைகளை பலர் பாராட்டியிருக்கின்றனர். சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் நேரடியாகவும் பாராட்டுகின்றனர். அத்துடன், பல ஓவியப்போட்டிகளிலும் பங்குபற்றி வெற்றி பெற்று பரிசில்கள் பெற்றிருக்கிறேன். அதே நேரம், சில நண்பர்கள் கிண்டல் செய்யவும் செய்கின்றனர். அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.  


த.ராஜ் சுகா: எதிர்காலத்திட்டம்? 


ராஜன் ராஜ்: இரண்டாவது பட்டப்படிப்பைத் தொடர வேண்டுமென்பது இப்போது வரைக்கும் உள்ளது.


 த.ராஜ் சுகா: ஓவியம் என்பது எல்லோராலும் வரைந்து விட முடியாத வரம். அது உங்களுக்கு மிக லாவகமாக அமைந்துள்ளது. இவ்வரிய வாய்ப்பினை ஏனையவர்களுக்கு எவ்வாறு வழங்கிட நினைக்கின்றீர்கள்? 


ராஜன் ராஜ்: ஓவியத்தில் ஆர்வமிக்கவர்களை ஊக்குவிக்கவும், அவர்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் சாத்தியப்படுத்தலாம். கற்க விருப்பமில்லாது இருப்பரிடம் ஓவியத்தை திணிக்க முடியாது. 


த.ராஜ் சுகா: நீங்கள் இணைய வாசகர்களுக்கும் பொதுவாக எல்லாருக்கும் கூற விரும்பும் உங்கள் மனவெளிப்பாட்டை பகிர்ந்து கொள்ளலாமே? 


ராஜன் ராஜ்: ஆண்டவன் படைப்பில் எல்லோரிடமும் திறமையுள்ளது. அதை நீங்களே தேடிக்கண்டுபிடியுங்கள். அதில் உச்சமடைய முயற்சியுங்கள். சமூக வலைத்தளங்கள் இணையங்கள் இதற்கு பெரிதும் உதவுகின்றது. இவற்றைத் தவறாகப் பயன்படுத்தாது, உங்கள் திறமையை முன்னேற்ற பாருங்கள். உங்கள் அனைவரின்  வெற்றிக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். 



ஓவியர் ராஜன் ராஜ் அவர்களின் ஓவியங்களில் சில….கல்குடா நேசன் வாசகர்களுக்காக‌…
















http://kalkudahnation.com/

No comments: