Friday, January 8, 2016

கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல் (11.12.2015- மதி சுதா (சுதாகரன்)






பிரதி வெள்ளி தோறும் கல்குடா நேசன் இணைய தளம் “கல்குடா நேசனின் இலக்கிய நேர்காணல்” என்ற பகுதியினூடாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகளைச் சந்தித்து வருகின்றது. 

வெற்றிகரமாக பலரது ஆதரவையும் பெற்று வளர்ந்து வரும் இந்நிகழ்ச்சியூடாக நாம் சந்திக்கும் எழுத்தாளர்கள், கலைஞர்கள், படைப்பாளிகள் பற்றியும் அவர்களின் படைப்புக்கள், திறமைகள், இலட்சியங்கள் பற்றியும் நேர்காணலினூடாக எமது வாசகர்களுடன் பகிர்ந்து வருவது மகிழ்ச்சியளிக்கின்றது


. இதன் தொடரில் இன்று 11.12.2015ம் திகதி வெள்ளிக்கிழமை எமது “கல்குடா நேசனின் 18வது இலக்கிய நேர்காணலில்” இணைந்து கொள்கிறார் இலங்கையின் “வளர்ந்து வரும் நடிகரும், சிறந்த விளையாட்டு வீரரும், துடிப்பான இளைஞரும் அண்மையில் பிரபலமடைந்த‌ “மிச்சகாசு” குறுந்திரைப்பட இயக்குநருமான மதி சுதா (சுதாகரன்) அவர்கள். சிதறியிருக்கும் கலைஞர்களை ஒன்றிணைக்கும் குழுமம் கூட எம்மிடம் இல்லாமையால் கட்டுப்பாடற்ற தான்தோன்றித்தனமாக ஒவ்வொருவரும் சுயாதீனமாக இயங்கிக் கொண்டிருக்கிறோம் அதனால் ஒரு படைப்பாளிக்கு ஏற்படும் பொதுச் சிக்கலைக் கூட அவன் தனியே நின்று தான் எதிர் கொள்கிறான் என்ற ஆதங்கங்களோடும் பல எதிர்ப்பார்ப்புக்களோடும் தன் திறமைகளை நம்மோடு பகிர்ந்து கொள்கின்றார் இளம் நடிகரான மதிசுதா அவர்கள்.


  
 01. தங்களைப்பற்றிய அறிமுகத்தினை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்? 


மதி சுதா: கல்குடா நேசன் இணையத்தளத்தாருக்கும் என்னைச் செவ்வி காணும் சகோதரிக்கும் விமர்சனங்களாலும் பாராட்டுக்களாலும் என்னை வளர்த்து விடும் என் அன்பு உறவுகளுக்கும் முதலில் வணக்கம்… என்னைப்பற்றி பெரிய அறிமுகம் கொடுக்குமளவுக்கு இன்னும் சாதனைப் பக்கங்களை நான் நிரப்பவில்லை. பிறந்தது யாழ்ப்பாணத்தின் உடுப்பிட்டி. வளர்ந்தது வன்னிப் பெரு நிலப்பரப்பில். 2009 க்கு பிறகே மீண்டும் யாழ் பிரவேசம். இதுவரை 7 பாடசாலைகளில் 8 தரம் கல்வி கற்றிருக்கிறேன். உயர் தரம் முடித்து விட்டு, இங்கிலாந்தின் தனியார் மருத்துவக்கல்லூரியொன்றில் கல்வி கற்று விட்டு இறுதிப்போரில் கல்வி குழம்பிப்போக பின்னர் யாழ் மீண்ட பின் சில போராட்டங்கள். அதே கல்வியைத் தொடர வசதியிருக்கவில்லை. அதன் பின்னான கணக்கியல் தொடர்பான கல்வியைத் தொடர்ந்து இப்போது இந்தியக்கொம்பனியொன்றில் கணக்கியல் மற்றும் சந்தை ஆய்வு வேலை செய்கிறேன். எமக்கான அடையாள சினிமா என்பது என் இலட்சியங்களில் ஒன்று என்று அதைக் கண்டடைகிறேனோ அன்று நான் திசை மாறிப்போகலாம். 

 02. இந்த சினிமாத்துறையில் காலடிவைத்த அநுபவம்? 


மதி சுதா: படிக்கும் காலத்திலிருந்து எழுத்துத்துறையில் தான் ஆர்வமிருந்தது வன்னியால் மீண்ட பின்னர் கூட www.mathisutha.com என்ற பெயரில் சொந்தமாக ஒரு வலைத்தளம் வைத்து எனக்கு மனதில் பட்டதை எழுதிக்கொண்டிருந்தேன். சிறு வயதிலிருந்து சினிமா பார்ப்பதில் ஆர்வமிருந்தாலும், வன்னி வாழ் காலப்பகுதி தணிக்கை போன்ற காரணங்களால் சினிமாவுக்கும் எமக்கும் பெரிய இடைவெளி ஒன்றையே கொடுத்திருந்தது. ஆனால், தாராளமாக கதைகள் வைத்திருந்தேன். அந்த ஆர்வக் கோளாரில் எந்தவித சினிமா அறிவுமில்லாமல் சகோதரன் மதுரனுடன் எடுத்த ”ரொக்கட் ராஜா” என்ற படம் தான் இங்கு வரை என்னைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. எங்களுடைய தாய் வழி தந்தை வழியில் இரண்டு சிறிய தாய் முறையானோர் சங்கீத‌ ஆசிரியையாகவும் ஒரு சித்தப்பா மற்றும் இரண்டு மாமாக்கள் வில்லுப்பாட்டில் பிரபலமாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால் எனக்கு படிக்கும் காலத்தில் நடித்த அனுபவம் கூட மிக மிக அரிது. சில வேளை பரம்பரை இயல்பாகத் தொற்றிக் கொண்டிக்கலாம் என நினைப்பதுண்டு. 



03. உங்கள் நடிப்பில் வெளியானவைகள்? 

மதி சுதா: தழும்பு, மிச்சக்காசு, துலைக்கோ போறியள், கொண்டோடி, ரொக்கட் ராஜா, தாத்தா, கருவறைத் தோழன், பாதுகை, குறுவட்டு, போலி, விட்டில்கள், நிழல் பொம்மை, pursuit, யாசகம் நடித்த பாடல் உயிர்ச்சூறை நடித்து வரும் முழு நீளப்படங்கள் ”மனசுக்குள் ஒரு மழைத்துளி” – இயக்கம் வினோதன் ”யாழ்தேவி” – இயக்கம் லோககாந்தன் தொடர் நாடக நடிப்பு ”காதற்கனவு” – வசந்தம் தொலைக்காட்சி 



 04. திரைப்படங்களோடு ஒப்பிடுகையில் குறுந்திரைப்படங்களுக்கான ஆதரவு எவ்வாறு காணப்படுகின்றது? 


மதி சுதா: இங்கு திரைப்படம், குறுந்திரைப்படம் என எதற்கு ஆதரவு என்று ஒப்பிட முடியாது. எம் படைப்புக்களுக்கு எந்தளவு ஆதரவு என்று தான் ஒப்பிட முடியும். காரணம் திரைப்படம் என்று ஒரு சிலதே வந்திருக்கின்றன (நிகழ்காலத்தில்) இப்போது இரண்டுக்கும் ஆதரவு பெருகி வருகிறது. ஆனால், இந்தியப்படைப்புக்கள் தான் எமக்கு மிகச் சவாலாக இருக்கிறது. தரம் என்பதற்கப்பால் எம் படைப்பை எம்மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு தியெட்டர் கூட எடுக்க முடியாத நிலையே இருக்கிறது. 5 பேர் பார்ப்பதற்காக ஒரு தென்னிந்தியப்படத்தை ஓடத் தயாராக இருக்கும் தியெட்டர்கள் (அதை தீர்மானிப்பது இந்தியாவிலிருந்து விநியோக உரிமை பெற்றவர்கள் தான்) 50 பேர் பார்க்கத் தயாராக நிற்கும் எம் படங்களை திரையிடத் தயாராக இல்லை. 







 05. இலங்கை ரசிகர்களிடம் நம் படைப்புக்களின் மீதான ஆர்வம் எவ்வாறு காணப்படுகின்றது? 


மதி சுதா: ஆதரவு தாராளமாகவே இருக்கிறது. ஆனால், அதைக் கொண்டு சேர்ப்பதில் தான் சிக்கல்கள் உள்ளது. உதாரணத்திற்கு நான் மேலே சொன்ன பதில் மட்டுமல்லாமல் இங்கிருக்கும் இன்னொரு சிக்கலும் இருக்கிறது. அதிகமான மக்கள் பார்வைக்கு நல்ல தயாரிப்பாளருடனும் விளம்பரத்துடனும் செய்யப்பட்ட சில சாதாரண படங்களே போய்ச் சேர்ந்ததால் மக்கள் அதை வைத்தே ஈழ சினிமாவின் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற மாயை ஒன்றும் தோற்றுவிக்கப்பட்ட நிலையில், மக்களை அதிலிருந்து சினிமாவுக்குள் இழுப்பது பெரிய சவாலான நிலையே. கடந்த வருடத்தை விட இந்த வருடங்கள் ஊடகங்களில் நல்ல ஆதரவு கிடைத்திருந்தாலும், கடந்த வருடம் படைப்புகள் செய்த பலர் இவ்வருடம் படைப்புக்கள் செய்யவே இல்லை என்றே கூறலாம். 



 06. என்னென்ன வழிகளில் உங்கள் படைப்புக்களை இலங்கை ரசிகர்களிடம் கொண்டு செல்கின்றீர்கள்? 

மதி சுதா: இந்த விடயத்தில் என் மேல் பெரிய குறையே இருக்கிறது. இதுவரை செய்த 11 குறும்படங்களில் ஒன்றைக்கூட வெளியீட்டு விழாவோ திரையிடலோ செய்யவில்லை. அதற்கு செலவழிக்கும் பணத்திற்கு என்னால் இன்னொரு படம் எடுக்க முடியும் என்ற மனநிலையே என்னுள் இருக்கிறது. எனக்கு கிடைத்தவை முழுக்க இணைய வழிப் பார்வையாளர்களே, அத்துடன், உள்நாட்டுப் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சியில் கிடைத்த ஒளிபரப்பு மூலம் மட்டுமே சென்றடைந்திருக்கிறது. 


 07. முழு நீளத்திரைப்படத்திற்கும் குறுந்திரைப்படத்திற்குமிடையில் காணப்படும் வேறுபாடுகள் என்ன? சொல்ல வருகின்ற விடயத்தை இந்த குறுந்திரைப்படம் முழுமையாக சொல்லி விடுகின்றதா? 


மதி சுதா: இது என் தனிப்பட்ட பதிலாகும். என்னைப் பொறுத்தவரை இரண்டும் காட்சி ஊடகமாக இருந்தாலும், இரண்டுமே வெவ்வேறு. ஒன்றுக்கொன்று இப்படியான ஒப்பிடல்களுக்காக சம்பந்தமே இல்லாத ஒன்று என்று தான் சொல்வேன். இரண்டிலுமே சொல்ல வந்த விடயத்தை நாம் பார்ப்பவனுக்கு கொண்டு செல்லத் தவறுவோமாக இருந்தால், அது தோல்வியடைந்த படைப்பு தான். குறும்படங்கள் என்பது எனக்கு என்னை அளவிட நல்லதொரு பரிட்சார்த்த களமாகவே இருந்தது. அதில் சிலவற்றுக்கு எனக்கு பணம் கூடத் தேவைப்படவில்லை. எனக்கு பட்டதை என் திரை மொழியில் என் சுதந்திரத்தோடு செய்திருக்கிறேன். 


 08. உங்கள் படைப்புக்களுக்கு வெளிநாடுகளில் கிடைத்த ஆதரவுகள் பற்றி? 

மதி சுதா: உள்நாட்டை விட வெளிநாட்டில் தான் எனக்கு பெரிய ஆதரவு கிடைத்தது என்பேன். என் குறும்படங்களில் நான் பாவிக்கும் மொழி நடைக்காகத் தான் விரும்பி பாராட்டுவார்கள். அது தொடர்பாக அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் ஐயா ஒரு தடவை நேரடியாகப் பாராட்டியிருந்தார். பிரான்சில் இடம்பெற்ற போட்டியொன்றுக்கு நடுவராக வந்திருந்த தென்னிந்திய இயக்குனர் மிஸ்கின் அவர்கள் ”பாரதிராஜா சேர் படம் பார்த்தது போலிருக்கிறது” என்று எனது கருவறைத்தோழன் குறும்படத்தைப் பாராட்டியதுடன், சிறந்த நடிகர், துணை நடிகை மற்றும் கலை இயக்குனர் விருதைத் தெரிவு செய்திருந்தார். மிச்சக்காசு என்ற குறும்படத்தைப் பார்த்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குனர் பொன் ராம் பாராட்டியதுடன், தனது அடுத்த படத்தில் வேலை செய்வதற்கான சந்தர்ப்பமொன்றையும் கொடுத்திருந்தார். அதே போல, வேல்ஸ் விருது விழாவுக்கு நடுவராக வந்திருந்த பாலுமகேந்திரா ஐயாவின் முக்கிய சீடர்களில் ஒருவரான இயக்குனர் எத்தன் சுரேஸ் அவர்கள் ”நாங்கள் பாலுமகேந்திரா சேரில் ரசித்த திரை நுணுக்கங்கள் சிலதை தாத்தா என்ற இந்தப்படைப்பில் பார்க்கிறேன்” என்று பகிரங்கமாகவே மேடையில் உரைத்தார். எனக்கு கிடைத்த விருதுகளை விட இவற்றைப் பெரிய அங்கீகாரமாகவே பார்க்கிறேன். 


09. நீங்கள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள்? 

மதி சுதா: இந்த வருட ஆரம்பத்தில் நோர்வே அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஆவணப்படம் தொடர்பான கற்கைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தேன். மற்றையபடி நான் வேலை செய்யும் நிறுவனம் இந்தியாவிலிருப்பதால் வருடத்தில் இரு தடவையேனும் சென்று வருவதுண்டு. 




 10. உங்களிடம் காணப்படும் வேறு திறமைகள்? 


மதி சுதா: எனக்குள் இருக்கும் வெறித்தனத்தைத் தான் திறமையாக நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ தெரியவில்லை. சினிமா என்பது இப்போது தொற்றிக் கொண்டவையே. ஆனால், இதை விட நான் சாதித்தது விளையாட்டில் தான். பாடசாலைக்காலத்திலும் கழக மட்டத்திலும் தடகள வீரராகவே இருந்தேன். 17 வயதுப்பிரிவிற்கான மாகாணங்களுக்கிடையிலான 400 மீட்டர் தடை தாண்டலில் தங்கப்பதக்கம் பெற்றிருக்கிறேன். அதற்கப்பால் கிரிக்கெட்டில் பாடசாலை மற்றும் கழக அணிகளுக்கு தலைவராகவும் கால்பந்தில் கோல் காப்பாளராகவும், கரப்பந்தாட்ட அணியிலும் இருந்திருக்கிறேன். 


 11. பெற்றுக்கொண்ட பாராட்டுக்கள், வரிசையாய் கிடைத்த விருதுகள் பற்றிய சந்தோஷங்களை எங்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்? 


மதி சுதா Final Drop (ministry award – 2015) தழும்பு best actor award to mathisutha @ Canadian film festival, nominated to Norway film festival, nominated to jaffna international film festival) மிச்சக் காசு best screenplay award, 2 time best child artist award துலைக்கோ போறியள் best director @ vels award தொடரி 3rd place award @ adcharam foundation film festival தாத்தா (வெளியாகவில்லை) (best film and best director @vels award best music director award @ vels award special jury award @ London nominated to Canadian film festival கருவறைத் தோழன் (வெளியாகவில்லை) best actor @France festival best supportive actress @France festival best art director @France festival குறுவட்டு (இக்குறும்படம் இயக்குனர் லோகாந்தனுடன் சேர்ந்து இயக்கிய அமெரிக்கா 48 hours சர்வதேச போட்டியொன்றில் best film and best screenplay விருது பெற்றது) போலி best actor award @ therovenor film talkies best actor award @ adcharam foundation festival பாடல் “சுவர் தேடும் சித்திரம்” special jury award @France festival, best singer award @vels award best director award @sudar award ஆவணப்படம் ”கரகம்” nominate @ Norway international film festival 


12. நம்நாட்டு வளரும் கலைஞர்களுக்கு கிடைக்காத, இல்லாத குறையாக எதனைக் கருதுகின்றீர்கள்? 


மதி சுதா: குறையென்று முதலாவதாக குறிப்பிட வேண்டியது சரியான முதலீடு இல்லை என்பது தான். அது மட்டுமல்லாமல் சரியான முதலீடு சரியான ஆட்களைப் போய்ச் சேரவில்லை என்பதும் ஒரு காரணமாக அமைகிறது. இதற்கப்பால் சிதறியிருக்கும் கலைஞர்களை ஒன்றிணைக்கும் குழுமம் கூட எம்மிடம் இல்லாமையால், கட்டுப்பாடற்ற தான்தோன்றித்தனமாக ஒவ்வொருவரும் சுயாதீனமாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். அதனால் ஒரு படைப்பாளிக்கு ஏற்படும் பொதுச் சிக்கலைக் கூட அவன் தனியே நின்று தான் எதிர் கொள்கிறான். 





 13. உங்களை கவர்ந்த நடிகர் அல்லது நடிப்பு பற்றி? 


மதி சுதா: உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் என என்னைக் கவர்ந்த பலர் இருக்கிறார்கள். அதிலும் அதிகமாக கவர்ந்தவர்கள் இனி இவன் திரைப்படத்துக்காக தேசிய விருது பெற்ற தர்சன் அண்ணா, எல்லோராலும் அறியப்பட்ட with you with out you ல் முக்கிய பாத்திரத்தில் நடித்ததுடன், 15 க்கு மேற்பட்ட சிங்கள மொழித் திரைப்படங்களில் நடித்திருந்த மகேஸ்வரி அம்மா இருவருடனும் நடிப்பது என்பது மன்னிக்கவும் நடிக்கவே தேவையில்லை, எந்தக் காட்சியில் தோன்றுகிறோமே அந்தக்காட்சிக்குரிய பாத்திரங்களாகவே மாறி விடுவேன். அப்படி தத்ரூபமாக உள்வாங்க வைக்கும் நடிப்பு இருவருடையதுமாகும். தர்சன் அண்ணாவுடன் ஒரு நாடகத்திலும் மகேஸ்வரி அம்மாவுடன் ஒரு குறும்படத்தில் மகனாகவும் நடித்திருக்கிறேன். மன்னிக்கவும் வாழ்ந்திருக்கிறேன்.


 14. உங்களுக்கு கிடைக்கும் இலங்கை ஊடகங்களின் ஆதரவு பற்றி?

 மதி சுதா: போன வருடத்தை விட இந்த வருடம் நல்ல ஆதரவு கிடைத்திருக்கிறது. சில ஊடகங்கள் தமக்கு நெருக்கமானவரையும் அறிமுகமானவர்களையும் மாத்திரம் அடையாளப்படுத்திக் கொண்டிருந்தாலும், ஒரு படைப்பாளிக்கு படைப்புத்தான் அடையாளம் என்பதால் அப்படைப்பு சேர வேண்டிய தரப்புக்கு ஏதோ ஒரு வகையில் சேர்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஊடகங்கள் எமக்கு ஆதரவு தந்தாலும் அது போதியளவு அமைய‌வில்லையோ என்றும் சில வேளை தோன்றினாலும், இப்போதைக்கு இது கிடைத்திருப்பதே பெரிய வரப்பிரசாதம் போலவே உள்ளது. இனி வருங்காலத்திலும் தென்னிந்திய மாயைக்குள் இருக்கும் மக்களை எம் பக்கம் திருப்ப ஊடங்களால் தான் முடியும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கையாகும். 


 15. எதிர்காலத்தில் சாதிக்க நினைப்பது? 

மதி சுதா: வழமையாக நான் சொல்வது தான் என் தனிப்பட்ட வாழ்க்கை தனிப்பட்ட தொழில் என்பதற்கப்பால் எங்களுக்கு என்றொரு அடையாள சினிமாவுக்கான போராட்டமே இவ்வளவும், அதை நான் அடைவேனா அல்லது என் காலத்தில் கிடைக்குமா என்றெல்லாம் தெரியாது. ஆனால், அப்படிக் கிடைக்கும் போது என் பெயரும் பேசப்படும் என்பது மட்டும் தெரியும். 

 16. நீங்கள் மனந்திறக்க விரும்பும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாமே? 


மதி சுதா நான் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டும் தான் என்னுடன் வைத்திருப்பதாகவும், வேறு புதியவர்களை உள்வாங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு என் மேலிருக்கிறது. உண்மையில் மதுரன் (கமரா, எடிட்டிங்), சன்சிகன் (எடிட்டிங், சவுண்ட், மியூசிக், கமரா) லோககாந்தன் (கமரா, எடிட்டிங்), ஜனகன் (துணை இயக்கம், திரைக்கதை ஆலோசனை, நடிப்பு), துவாரகன் (துணை இயக்கம், திரைக்கதை ஆலோசனை), மதுசா (துணை இயக்கம், திரைக்கதை ஆலோசனை, மேக்கப், நடிப்புப்பயிற்சி) போன்றவர்கள் என்னோடு இருப்பவர்கள். என்னுடைய தொழிலாளிகள் இல்லை அது என் குடும்பம். என் அனைத்துப் படங்களிலும் இவர்கள் பங்கிருக்கும். என்னிடம் ஆரம்பத்திலிருந்து எதையும் எதிர்பார்க்காமல் பயணித்தவர்களை எனக்கு உதவ இன்று பலர் இருக்கிறார்கள் என்பதற்காக எப்படி விட்டு விட்டுப் பயணிக்க முடியும். சில மாற்றங்களுக்காகவே இவர்களின் அனுமதியுடன் வெளியில் வேலைக்கு கொடுப்பதுண்டு. இது மட்டுமே காரணமாகும். ஏனென்றால், எனக்குத் தேவையானவை இவர்களிடமிருந்து கிடைக்கிறது. 


 17. உங்கள் ரசிகர்களிடமும் வாசகர்களிடமும் சொல்ல விரும்புவது? 

மதி சுதா: சொல்ல வேண்டியது எல்லாம் மேலே சொல்லி விட்டேன் என நினைக்கிறேன். இதுவரை வெளியே பகிராத ஒரு தகவலை முதன் முதலாக தங்களுடன் பகிர்கிறேன். என்னுடைய கனவுப்படமான முழு நீளத்திரைப்படம் ”உம்மாண்டி” ஆனது படப்பிடிப்புக்கள் யாவும் முடியும் தறுவாயை எட்டியுள்ளது. தயாரிப்பாளர்கள் எவருமே கிடைக்காத நிலையில், வங்கியில் பெற்ற ஒரு இலட்சம் ரூபாய் லோனுடனும் கதிர் செல்வக்குமார், மீராபாரதி அண்ணாக்களின் உதவியுடனும் தான் படப்பிடிப்பைச் செய்து முடிக்கிறேன். தை மாத இறுதிக்குள் இவற்றை வைத்துக் கொண்டு செய்த முன்னோட்டமொன்றை வெளியிடுகிறேன். இன்று முன்னோட்டத்தை வைத்து படத்தின் கதை, தரம் கணிப்பிடுமளவுக்கு எம் பார்வையாளர்கள் மதிநுட்பமானவர்களாகி விட்டார்கள். அந்த முன்னொட்டத்திற்குரிய படம் பார்க்க விரும்புவோர் படத்துக்கான நுழைவுச்சீட்டை (சாதாரண திரையரங்க கட்டணம் தான்) முற்கூட்டியே வாங்கினால் அதன் மிகுதி வேலைகளுக்குரிய பணம் கிடைத்து விடும். இது எந்தளவுக்கு சாத்தியமோ தெரியவில்லை. ஆனால், என் கதையில் எனக்கு முழு நம்பிக்கையுண்டு. இத்தனை விருது பெற்ற ஒருவருக்கு ஏன் நம்பி யாரும் பணம் போடவில்லை என நீங்கள் நினைக்கலாம். காரணம் எங்கள் வழமையான சினிமாவிலிருந்து கொஞ்சம் மாறுபட்ட படமாகும். அவர்கள் எதிர்பார்த்த காதல் காட்சிகளையோ பாடலையோ என்னால் வைக்க முடியவில்லை. என் கனவுப்படம். நான் ஆசைப்பட்டது போல வர வேண்டும் என்ற ஒரே ஒரு காரணம் தான் வேறேதுமில்லை. என் வளவளவென்ற அலட்டல்கள் மற்றும் சுயபுராணங்களை பொறுமையோடு கேட்ட செவ்வியாளருக்கும் பொறுமையாய்ப்படித்த என் அன்பு உறவுகளுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். நன்றிச் செதுக்கலுடன் அன்புச் சகோதரன் மதி சுதா. 





No comments: